என் ஆயுள் நீயே 34

என் ஆயுள் நீயே 34

உதயன் _ பிரணவ்…

இதுவரை பார்த்துக் கொண்டதில்லை. ஒரு வார்த்தை நேரில் பேசிக் கொண்டதில்லை.

இன்று மதியத்திற்கு மேல் தான் உதயன் பிரணவ்வுக்கு அழைத்து முதல் முறை அலைபேசி வழி பேசியதும் கூட.

அதுவும் உதயன், நனியிதழ் மற்றும் பிரணவ் தங்களது காதலை மேலும் சிக்கலாக்கிக் கொண்டால் இணைவது பெரும் கஷ்டமாகிவிடும் என்பதால், தன்னுடைய திருமணத்தை காரணமாக வைத்து இருவரையும் ஒன்றிணைக்க முடிவு செய்தான்.

குமரி தனுவின் திருமணத்திற்கு தாமதமாகிறது என்று சொல்லியதற்காகவும், நடுவில் வந்தனா செய்து வைக்கும் பிரச்சினைக்காகவுமே, இதுநாள் வரை தங்கைக்காக பார்த்திருந்த உதயன் தன்னுடைய திருமணத்திற்கு சம்மதம் வழங்கியிருந்தான்.

தன்னுடைய திருமணம் இரண்டு சிக்கல்களுக்கு தீர்வை வழங்கும் என்று நினைத்தபோதே, தன் மனம் விரும்பும் பெண் அஷ்மிதா என்று கண்டுகொண்டதும், அஷ்மிதா தனது ஆசையாக பிரணவ் தான் தனக்கு எல்லாம் செய்ய வேண்டுமென்றதும், தன்னுடைய திருமணத்தை வைத்து சிறு ஆட்டம் ஆடிட முடிவு செய்தான்.

அதனை முதலில் அஷ்மிதாவிடம் சொல்லவும் செய்தான்.

“பெண்ணெடுத்து பெண் கொடுப்பது.”

“இது அவங்களை கார்னர் பன்ற மாதிரி ஆகாதா?”

உதயன் சொல்லிட அஷ்மிக்கு இப்படித்தான் கேட்கத் தோன்றியது. அதற்கு உதயன் விளக்கம் கொடுத்திடவே அவளுக்கும் இதுவே சரியெனப் பட்டது.

இத்திட்டம் உருவாகும் போது உதயனுக்கு நனியும் பிரணவ்வும் பேசிக்கொண்டது தெரியாது. இன்னமும் அவரவர் பார்வையில் விலகியிருப்பதாகத்தான் அறிந்திருந்தான். அதனால் நாளை பெண் பார்க்க பிரணவ் வீட்டிற்கு சென்றதும், அங்கு வைத்து இதனை சொன்னால், தன்னுடைய மற்றும் அஷ்மியின் காதலுக்காக… விருப்பமில்லை என்றாலும் நனி மற்றும் பிரணவ் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வர், அதன் பின்னரான அவர்களின் வாழ்வை அவர்களது அன்பே சேர்த்து வைக்கும் என்று எண்ணியே இப்படியொரு திட்டம் வகுத்தான்.

இதற்கு உதயனின் குடும்பமும், விமலா மற்றும் ராகவனும் சம்மதம் வழங்கிடவே சற்று நிம்மதி கொண்டான்.

தங்கைக்கு அடுத்துதான் தன்னுடைய வாழ்வென்று இருந்த உதயனுக்கு, நனியின் ஆசையை நிறைவேற்றாது தன்னுடைய திருமணம் நடப்பதில் விருப்பமில்லை. அஷ்மிதாவும் அவனுக்கேற்றார் போல் பிரணவ்வை முன்னிறுத்தி தனக்கு திருமணம் நடக்க வேண்டுமென்று சொல்ல, இருவரின் ஆசையையும் ஒற்றை திட்டத்தில் ஈடேற வைத்திட்டான்.

ஆனால் அவனே எதிர்பாராதது நனி மற்றும் பிரணவ் பேசிக் கொண்டது.

நனியிதழ் தனக்கும் பிரணவ்வுக்கும் இடையேயான உரையாடலை(விவாதம்) சொல்லியதும் உதயனுக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளாலாம் என்றுதான் அக்கணம் தோன்றியது.

இருவரையும் எப்படியாவது சேர்த்திட வேண்டுமென்று அவனும் பலவித பாதைகள் அமைக்க அவற்றையெல்லாம் இருவரும் எளிதாக பாழ் செய்தால் அவனும் என்னதான் செய்வான். மானசீகமாக தன்னையே நொந்துக் கொண்டான்.

இனியும் தங்கையின் மனதை மட்டுமே கருத்தில் கொண்டு அமைதிகாத்தால் யாவும் சீர் பெறாது என்றே அவனின் அறிவு எடுத்துக்கூறியது.

அதனாலே உதயன் தங்கையிடம், “பிரணவ் உன்னை விரும்பியும் அன்னைக்கு உன்னையே வேணாம் சொல்ல வச்சதில் உனக்கு ஈகோ. உன்னோட ஈகோ சாட்டிஸ்ஃபை பண்ண இப்போ பிரணவ்கிட்ட பிளே பன்ற நீ” என்று சொல்லியதோடு, பிரணவ்விடம் மனம் திறந்து பேசுமாறு மறைமுகமாக எடுத்துக் கூறினான்.

ஆனால் நனி அதற்கு பிரணவ்வை சீண்டி விளையாட நினைப்பதாக சொன்னாலும், இருவரும் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு வீரியம் இருக்குமே! அது நிகழ்வின் பாதையை மாற்றி அமைத்துவிட்டால் இருவருக்கும் வலி கூடுமே தவிர குறையாது என்று சரியாக சிந்தித்த உதயன், நனி மற்றும் இன்பாவிடம் பேசிவிட்டு ஹார்பர் செல்வதாக கீழே வந்த சமயம், கஜமுகனிடம்…

“நாளைக்கு அங்க வைத்து சொல்லலாம் இருந்ததை இப்போ பட்டுகிட்ட சொல்லுங்க தாத்தா” என்று சொல்லி வெளியேறியதோடு, விமலாவுக்கும் அழைத்து நனியிடம் இப்போதே சொல்வதாக சொல்லி வைத்திட்டு, அவரிடமே பிரணவ்வின் அலைபேசி எண்ணை வாங்கி அவனுக்கு அழைத்தும் இருந்தான். இருவரையும் நேரில் சந்திக்க வைத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமென எண்ணினான்.

ஒலி முழுதாக முடியும் தருவாயில் அழைப்பை ஏற்றிருந்த பிரணவ், உதயன் தன்னை அறிமுகம் செய்துகொள்ளும் முன்பே,

“சொல்லுங்க மிஸ்டர்.உதயன்” என்றிருந்தான் பிரணவ்.

பிரணவ் அவ்வாறு சொல்லியதும் தன்னை எப்படி அவனுக்குத் தெரியும், தான்தானென்று எப்படி கண்டுபிடித்தான் என்றெல்லாம் உதயன் ஆச்சரியம் அடையவில்லை.

இப்போதிருக்கும் நவீன வளர்ச்சியால் அழைப்பது யாரென்று அவர்களின் எண்ணை மட்டும் வைத்து வரலாற்றையே கண்டறிய முடியுமே. அது உதயனுக்கும் தெரியவே சாதாரணமாகவே எடுத்துக் கொண்டான்.

உதயன் எண்ணியது போல, ட்ரூ காலரில் வந்த உதயச்செல்வன் என்கிற பெயரை வைத்துதான் பிரணவ் உதயனை கண்டுகொண்டிருந்தான்.

“உங்ககிட்ட பேசணும் பிரணவ்” என்ற உதயன், முதலில் தான் அஷ்மிதாவை விரும்புவதாகத்தான் கூறினான்.

பிரணவ் நெற்றி சுருங்கியது இந்த திடீர் காதலின் காரணம் என்னவாக இருக்குமென்று. பிரணவ்வுக்கு உதயனைப்பற்றி எதுவும் தெரியாதே! அவன் தெரிந்தது எல்லாம் கல்லூரி நாட்களில் நனியிதழ் தன்னுடைய செல்வா அண்ணா என்று சொல்லி, தான் கேட்டறிந்த விஷயங்கள் மட்டுமே. அதனை மட்டும் வைத்து குணத்தை அறிந்துகொள்ள முடியாதே. அதனால் வந்த யோசனை இது.

“உங்க தங்கச்சி லவ்வுக்காக பேசுவீங்க நினைச்சேன்” என்ற பிரணவ், “உங்க தங்கச்சி லவ் சேர்த்து வைக்க என் தங்கச்சியை லவ் பண்றேன்னு சொல்றீங்களா?” எனக் கேட்டான்.

உதயன் வாய்விட்டு சத்தமாக சிரித்திட…

“உங்களுக்கு அப்படித் தோணுதா?” எனக்கேட்டு, “இப்படியொரு எண்ணம் இருந்திருந்தா, உங்களை என் வீடு வரை பெண் பார்க்க வரவழைத்திருக்க மாட்டேன்” என்றான்.

அப்போதுதான் முன்னர் நடந்த பெண் பார்க்கும் படலம் உதயனால் ஏற்பாடு செய்யப்பட்டதென்று பிரணவ்வுக்குத் தெரிந்தது.

“சாரி…”

உதயனை தவறாக எண்ணி அவ்வாறு கேட்டது தவறு என்றதும் யோசிக்காது மன்னிப்பைக் கேட்டிருந்தான் பிரணவ்.

“நானும் உங்க இடத்தில் இருந்திருந்தால் இதைக் கேட்டிருப்பேன்…” என்று தன்மையாக அதனை ஒதுக்கிவிட்டான் உதயன்.

அதிலே பிரணவ்வுக்கு உதயனை வெகுவாக பிடித்துவிட்டது.

“மேற்கொண்டு பேசலாமா?” என்ற உதயன், நனி தன்னிடம் அவளின் காதலை சொல்லியது முதல், இதுவரை தங்களது இரு குடும்பமும் சேர்ந்து பேசி எடுத்து வைத்திருக்கும் முடிவு வரை அனைத்தும் சொல்லிவிட்டான்.

அனைத்தும் கேட்ட பிரணவ்வுக்கு உதயன் அத்தனை உயர்ந்து தெரிந்தான்.

தங்கைக்காக, அவள் மீது கொண்ட அன்பிற்காக எத்தனை தூரம் அவன் யோசித்திருக்கிறான் என்று பிரமிப்பாக உணர்ந்தான்.

உதயன், தான் சொல்லியதில் அஷ்மியின் காதலை சொல்லவில்லை. ஆனால் அவள் மூலமாகத்தான் பிரணவ்வின் நடவடிக்கைகளை கவனித்ததை சொல்லியிருந்தான்.

அதனால் பிரணவ்வுக்கு தன்னால் பெண் பார்க்கும் நிகழ்வு வீணானதில் அஷ்மிதா கொண்ட கோபத்திற்கான காரணம் சரியாக விளங்கியது. ஆதலாலே அஷ்மிதா வந்து எல்லாம் சொல்லும் போது பிரணவ்வால் எளிதாக எடுத்துக்கொண்டு அவள் பக்கம் பார்க்க முடிந்தது. அவளை ஆதுரமாக அணைத்துகொள்ளவும் முடிந்தது.

“இப்போ நான் என்ன பண்ணனும்?”

பிரணவ் கேட்க, உதயனிடம் மீண்டும் புன்னகை.

“நனிகிட்ட நீங்க பேசணும்” என்றான்.

“போங்க பாஸ் நீங்க வேற” என்று சலிப்பாக மொழிந்தான் பிரணவ்.

உதயன் இயல்பாக பேசிட பிரணவ்வுக்கு அவனிடம் தானாக ஒரு நெருக்கம் வந்திருந்தது.

“பேசிட்டேன். மேடம் ரொம்ப கோபமா இருக்காங்க போல” என்றான்.

தன்னிடம் நனியிதழ் கூறியதை பகிர்ந்துகொண்ட உதயன், “அவளை இப்போ உன்கிட்ட ஃப்ரீயா பேச வைக்கணும்” என்று தான் நினைத்ததைக் கூறினான்.

“நிச்சயம் உங்களுக்காக யாருன்னு தெரியாத பையனுக்கு அவள் ஓகே சொல்லிடுவாள் மாம்ஸ்” என்றிருந்தான். தன்னைப்போல் உதயன் நீட்டியிருந்த உறவை இறுகப் பற்றியிருந்தான் பிரணவ்.

“அவளுக்கு நான் முக்கியம் தான். ஆனால் நீயும் ரொம்பவே முக்கியம். எப்படியும் ஒரு பதட்டம் வருமே! அதில் உன்கிட்ட பேசணும் நினைப்பாள். வன்ஸ் நேரில் பார்த்துட்டால் ரெண்டு பேருமே ரிலாக்ஸ் ஆகிடுவீங்க” என்றான் உதயன்.

பிரணவ்வே உறவு வைத்து அழைத்திட, உதயனுக்கு உரிமையா ஒருமையில் பேச தடையில்லாமல் போனது. இதுவே பிரணவ் தன்னைவிட பெரியவனாக இருந்திருந்தால், மரியாதை கலந்து உரிமையை காட்டியிருப்பான்.

“நீங்க வேணா பாருங்க… விட்டது தொல்லைன்னு ஓகே சொல்லிடுவாள்” என்றான் பிரணவ்.

இருவரிடமும் காதலிருக்கும் அளவுக்கு புரிதல் இல்லை என்பது உதயன் அறிந்ததுதான். அதனை தற்போது பிரணவ்விடம் சொல்லவும் செய்தான்.

“எனக்கே தெரியும் மாம்ஸ். பட் என்ன பண்றது? பேசினா தானே புரிதல் வரும். அதுக்குதான் அவள் தயாரில்லையே. நான் வேண்டான்னு எங்கிட்டவே அவ்ளோ ஈசியா சொல்றா. எவ்ளோ கோபம் வந்துச்சு தெரியுமா?” என்றான்.

“ஹான்…” என்ற உதயன், “இப்போ அவளே உனக்கு கால் பண்ணுவா. எல்லாம் ஸ்மூத்தா முடியும்” என்ற உதயன், “உன் லவ், உன் பெயின் அப்படின்னு பார்க்காத. அவளோட லவ், அவளோட பெயின் அப்படின்னு பாரு. இப்போ சொன்னியே அவள் வேண்டாம் சொன்னது கோபம் வந்துச்சுன்னு. ஆனால் அப்படி சொல்ல சொன்னது யாரு? நீதான? அப்கோர்ஸ் எனக்கு உன் பக்கமிருந்தும் புரியுது. நீயும் அதை ஈசியா சொல்ல சொல்லியிருக்கமாட்ட… ஒருமுறை எதிரில் இருக்கவங்க பக்கமிருந்து ரெண்டு பேருமே பாருங்க. கூடவே உங்களுக்குள்ள என்னியிருக்கோ வெளிப்படையா பேசுங்க” என்றான்.

“இப்படி எடுத்து சொல்ல ஆளில்லாமதான் நிறைய சொதப்பி வச்சிட்டேன் போல” என்ற பிரணவ், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்குதே மாம்ஸ். மீட் பண்ணலாமா?” எனக் கேட்டான்.

“அடேய்…” என்று சிரித்த உதயன், “இப்போ என்கிட்ட சொன்னதை உன் ஆளுகிட்ட சொல்லுடா” என்றான்.

“என் ஆளு” என்ற பிரணவ், “மீன்ஸ்… உங்க தங்கச்சியா?” என்றான்.

“ஆமா ஆமா என் தங்கச்சிதான்” என்ற உதயனிடம், “இன்னொரு முறை சொல்லுங்க மாம்ஸ். நீங்களே உன் ஆளுன்னு சொல்லும் போது நல்லாயிருக்கு” என்றான்.

“டேய்… அவளுக்கு நான் அண்ணா டா.”

“எனக்கு இப்படியொரு அண்ணா கிடைக்கலையே. கிடைசிருந்தா இந்நேரம் உங்களை மாமா ஆக்கியிருப்பேன்” என்றான்.

“கற்பனை எல்லாம் நல்லாதான் இருக்கு” என்ற உதயன், “அதான் அண்ணாக்கு பதில் தங்கச்சி இருக்காங்களே” என்றான்.

“எஸ்… எனக்காக நிறைய யோசிப்பாள். என்னவும் செய்வாள்” என்றான் பிரணவ்.

அதிலே உதயனுக்கு பிரணவ் அஷ்மிதாவின் மீது வைத்திருக்கும் பாசம் விளங்கிவிட்டது.

அதன் பின்னர் இருவரும் சகஜமாக சில நிமிடங்கள் உரையாடிவிட்டு பேச்சினை முடிக்க, அஷ்மிதா வந்து அனைத்தும் கூறினாள்.

ஏற்கனவே உதயன் வாயிலாக எல்லாம் தெரிந்திருந்ததாலே பிரணவ்வால் அதிகம் அதிர்வோ ஆச்சரியமோ காட்டாது சாதாரணமாக யாவற்றையும் ஏற்க முடிந்தது. அத்தோடு அஷ்மியிடமும் புதிதாக தெரிந்துகொள்வதைபோல் காட்டிக்கொள்ள முடிந்தது.

உதயன் சொல்லியது போலவே நனியிதழ் அழைத்து தன்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லியதோடு அவனை நேரில் அழைக்கவும்,

அஷ்மிதாவிடம் இப்போதுதான் எல்லாம் அறிந்தது போல காட்டிக்கொண்டு தன்னவளை பார்க்க நேரில் சென்றிருந்தான்.

செல்லும் வழியிலே உதயனுக்கு அழைத்து, “எப்படி மாம்ஸ்?” என்றவன், “வீட்டில் வந்து பேசனுமாம்” என்றான்.

உதயனும்… “வந்து பேசுடா. இப்போதான் அவளுக்கு உன்கிட்ட லவ் சொல்லவே தைரியம் வந்திருக்கு போல” என்று வைத்திட்டான்.

அதன் பின்னர் நனியை சந்தித்து நனியிடமும் எதுவும் தெரியாததைப் போன்று அவளின் மனதில் தனக்கு இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு, தன் இதயத்தில் அவளிருக்கும் இடத்தையும் உணர்த்திவிட்டு, தங்கள் காதல் சேர முக்கிய காரணமாக இருந்த உதயனுக்கு நன்றி தெரிவித்திருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top