என் ஆயுள் நீயே 36

என் ஆயுள் நீயே 36

அந்த காலை வேளையிலும் உதயனின் இல்லம் பரபரப்பாக இயங்கியது.

திருச்செந்தூர் செல்ல அனைவரும் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.

“வேனிலே போயிடலாமா அண்ணா? காருன்னா மூணு, நாலு வண்டியை கிளப்பணும்” என்று இளங்கோவனிடம் ஆலோசனைக் கேட்டார் கஜேந்திரன்.

“நேத்து நைட்டே நம்ம டிராவல்ஸ்க்கு கால் பண்ணிட்டேன் கஜா. வேன் வந்திடும். டிரைவர் வேண்டாம் இன்பாவை ஓட்டச் சொல்லிடுவோம்” என்றார் இளங்கோவன்.

“சரிங்க” என்ற கஜேந்திரன், “குமரி இன்னும் வரலையே” என்றார்.

“அதெல்லாம் மாப்பிள்ளை கூட்டி வந்திடுவார்” என்று இளங்கோ சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ஜெயந்தன் தன் குடும்பத்தோடு வந்தார்.

குமரியின் முகம் இறுக்கமாக இருக்க,

“அங்க வந்து எதும் பேசி வச்சிடப் போறாண்ணா” என்றார் கஜேந்திரன்.

“மாப்பிள்ளை பார்த்துப்பார். கவலைப்படாத. நம்ம சாமியோட முதல் நிகழ்வு. சந்தோஷமா செய்வோம்” என்று பதில் வழங்கினார் கஜமுகன்.

அடுத்தடுத்து ஒவ்வொருவராக கிளம்பி கூடம் வர, அனைவரும் உதயனுக்கு காத்திருந்தனர்.

வேகமாக கீழே வந்த உதயன்,

“போயிட்டு கால் பண்ணுங்க தாத்தா” என்றான்.

“நீங்க வரலையா?” கங்கா கேட்க, “அரை மணியில சரக்கு கப்பல் கரை வருது. நான் இருக்கணும்” என்றான்.

“நீங்கயில்லாம எப்படி அப்பு?” காமாட்சியைத் தொடர்ந்து,

“நான் ஹார்பர் போறேங்க… நீங்க அங்க போறது முக்கியமாச்சே” என்றான் இன்பா.

“நேவி ஆபிசர்ஸ் கஸ்டம்ஸ் ரிப்போர்ட்டில் நான் சைன் பண்ணனும் டா. நீங்க கிளம்புங்க. நான் வந்திடுவேன். கொஞ்சம் பின்ன ஆகும்” என்றான்.

“சரிங்க” என்ற கஜமுகன் நகர,

“அதெப்படி வர வேண்டிய ஆளு வராம நாங்க மட்டும் போறது. உங்களுக்குத்தான் அவங்களை நல்லாத் தெரியும்” என்று நல்லா என்ற வார்த்தையை அதீத அழுத்தத்தோடு கூறினார் குமரி.

ஜெயந்தன் மனைவியை கண்டனப் பார்வை பார்க்க,

தன் வீட்டு ஆட்களாகவே இருந்தாலும் திரும்பத் திரும்ப குமரியை கடிந்துகொள்ள யாருக்கும் மனம் வரவில்லை.

உறவென்று பார்த்து விட்டு வைப்பதுதான் தவறென்று அவர்கள் அறியும் நேரமும் உண்டு.

“கிளம்பும் நேரத்தில் எதுக்கு தேவையில்லாத பேச்சு. அதுதான் வந்துடுவேன் சொல்றாங்களே! நாம நல்ல நேரத்தில் போய் சேருவோம்” என்று அனைவரையும் விரட்டினார் ஜெயலட்சுமி.

“வந்திடுவீங்க தானே அண்ணா?” கேட்ட நனியிடம், “கண்டிப்பாடா” என்றான் உதயன்.

எழில் மட்டும் இருக்கையில் உம்மென்று அமர்ந்திருக்க,

“என்னாச்சு?” எனக் கேட்டான், சிறியவளை காட்டி, பெரிய தங்கையிடம்.

“அவள் காலேஜ் போகட்டுமாம்” என்றாள் நனி.

“யார் சொன்னாங்க?”

“அத்தைதான். அவள் வயசுப்பொண்ணாம். அங்க எதுக்கு, பொண்ணு வீட்டுல ரெண்டு வயசு பசங்க இருக்காங்களாம்” என்று குமரி வந்ததும் கிளம்பி நின்ற எழிலைப் பார்த்து சொல்லியதை வார்த்தை மாறாது கூறிவிட்டாள் நனியிதழ்.

“ஹோ” என்ற உதயன், ‘தனு வயசுப் பொண்ணில்லையாமா?’ என கேட்க நினைத்ததை இதென்ன தானும் அவரைப்போல பின்தங்கி யோசிப்பது என்று மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான்.

“தனு, நனியெல்லாம் மட்டும் அப்போ வரலாமா அப்படின்னு சித்தி கேட்டதுக்கு… அவங்களுக்கெல்லாம் முடிவாகிப்போச்சேன்னு சொல்றாங்க” என்று அவன் கேட்காததையும் உணர்ந்தது போல பதில் வழங்கியிருந்தாள்.

நனிக்கு தனுவுடன் சேர்த்து தனக்கும் முடிவானதாக குமரி சொல்லிய பொருள் விளங்கியது. அந்நொடி எப்படியும் தனக்கென பார்த்திருக்கும் பையனிடம் அண்ணா வருவதற்குள் பேசிட வேண்டும் என்று நினைத்தாள்.

உதயன் குமரி சொல்லியதில் கோபத்தில் இருப்பதால் தனக்கு முடிவாகியிருப்பதை உணரவில்லை என்று எண்ணிக் கொண்டாள். உதயனுக்கா தெரியாது? அனைத்தும் அவன் கண் பார்த்தல்லவா நடந்து கொண்டிருக்கிறது.

உதயனும் அவள் போக்கிலேயே அதனை கவனியாது போல் காட்டிக்கொண்டான்.

“நம்ம பிள்ளையை நாம எப்படி பார்ப்போம் அப்படிங்கிறதுலதான் மத்தவங்க பார்வை இருக்கு” என்று குமரிக்கு கேட்கும்படி சற்று உரக்கச் சொல்லிய உதயன், “நீ கிளம்புடா” என்றான் எழிலிடம்.

எழில், குமரி திரும்ப வேறெதுவும் மனம் போகும்படி சொல்லி விடுவாரோ என்று அவரை பார்க்க…

“உனக்கு உன் அண்ணியை பார்க்கும் ஆசையில்லையா?” என்று உதயன் குமரியை பார்த்துக்கொண்டே அடர்த்தியாகக் கேட்க, அனைவருக்கும் முன்பு ஓடிச்சென்று வண்டியில் ஏறியிருந்தாள் எழில்.

“பொண்ணு முடிவானதுக்கே மொத்தமா சாஞ்சாச்சுப் போல” என்று மற்றவர்களுக்கு கேட்கும்படி முணுமுணுத்துக் கொண்டு நகர்ந்தார் குமரி.

“எதோ ஆதங்கம். ஆத்தமாட்டாம பேசுறாள் கண்ணு. மனசுல வச்சிக்காதீங்க.” கங்கா மகனின் கன்னம் பற்றிக் கூற, “புரியுதும்மா. அவங்க தூக்கி வளர்த்த பிள்ளை. சட்டுன்னு விட்டுடமாட்டேன்” என்றான்.

“குடும்ப ஒத்துமையை நினைச்சு அமைதியாவே போவனும் அவசியம் இல்லை தம்பி. கொடுக்க வேண்டிய பதிலை சரியா கொடுக்கணும். இல்லைன்னா நம்ம தலைதான் உருளும். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. ஆதங்கம் பழியா மாறிடக் கூடாதுப் பாருங்க. நாளைக்கு வாழ வர புள்ளை சுணங்கி நிற்கக்கூடாது. பார்த்துக்கோங்க” என்று தாயாக அவனுக்கு அறிவுரை சொல்லிச் சென்றார் காமாட்சி.

“இவ ஒருத்தி போதும் கண்ணு உங்களுக்கு” என்று தன் மகனை அவளின் பிள்ளைக்கு முதலாய் நினைக்கும் ஓரகத்தியின் அன்பில் நெகிழ்ந்தார் கங்கா.

“சரிடா பார்த்துக்கோ” என்று நனியுடன் வெளியில் வந்த உதயன், அனைவரும் ஏறியதும் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த இன்பாவின் பக்கம் வந்து…

“பத்திரம் டா” என்றான்.

“ஆமா இன்பா. மெல்ல போனாலும் பரவாயில்லை” என்றார் கஜமுகன்.

மொத்த குடும்பமும் பிறர் கண் நிறைய ஒன்றாக செல்வது மகிழ்வோடு சிறு அச்சத்தையும் கொடுத்தது. நல்ல மாதிரி சென்று திரும்ப வேண்டுமென்று.

“அண்ணா வந்துடுங்க.” இன்பா சொல்ல, “உன் ஃப்ரண்ட் பார்க்கப்போறியா இல்லை உன் அண்ணனுக்கு பார்த்திருக்கும் பொண்ணை பார்க்கப்போறியா?” எனக் கேட்டான் உதயன்.

என்ன பதில் சொல்வதென்று தெரியாது இன்பா திருதிருக்க…

“போடா போ… ஸ்டார்ட் பண்ணு” என்று சிரித்தான் உதயன்.

இருவரும் என்ன பேசி சிரித்துக் கொண்டனரென்று மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்றாலும், அவர்களின் ஆணி வேராய் திகழும் உதயனின் புன்னகையில் மன நிறைவோடு புறப்பட்டனர்.

உதயன் தங்களுடன் வராதது குறையாக இருந்தாலும், குடும்பமாய் ஒன்றாக செல்வதை ரசிக்கவே செய்தனர்.

அனைவரும் கலகலத்து பேசி சிரித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

ஊர் எல்லையை தாண்டும் நேரம் சட்டென்று இன்பா அடித்த பிரேக்கில் எல்லோரும் வேகமாக முன் இடித்து பின்னால் சரிந்தனர்.

“இன்பா” என்று அதட்டலாக அவன் பக்கம் வந்த கஜேந்திரன், “பார்த்து ஓட்டுடா. மொத்த குடும்பமும் இருக்கு” என்றார்.

“என்னப்பா சூதானமா ஓட்டுய்யா” என்று இளங்கோவும் வர,

“நான் மெதுவாதான் பெரியப்பா ஓட்டினேன். ஆனா” என்று வெளியில் பார்த்தான்.

யாரென்று வண்டியின் முன் கண்ணாடி வழி பெரியவர்கள் இருவரும் எட்டிப் பார்க்க வந்தனா நின்றிருந்தாள்.

“இந்தப் பொண்ணு ஏன் இங்க நிக்குதுங்க” என்ற கஜேந்திரன் கீழே இறங்க முற்பட, “எதும் கோபமா பேசிப்புடாத இந்திரா” என்று தானும் தம்பியின் பின் இறங்கினார் இளங்கோ.

சன்னல் வழி யாரென்று எட்டிப் பார்த்த எழில், “இவங்களுக்கு பேச வேற இடமே கிடைக்காதா? எப்போ பாரு வழியை மரிச்சு நின்னுட்டு” என்றாள். தன் பக்கம் அமர்ந்திருந்த நனியிதழிடம்.

“யாரு எழிலு?”

“அந்த வந்தனா தான்க்கா” என்று எழில் சொல்லியதும், “கல்யாணம் அத்தனை சுலுவா நடக்காது போலயே” என்று குமரி. அவரின் பேச்சில் கேலி இருந்ததோ?

லட்சுமியின் பார்வையில் மேவாயை தோளில் வெட்டிக் கொண்டு திரும்பிக் கொண்டார் குமரி.

“என் பொண்ணால குடும்பத்துக்குள்ள பிரச்சினைன்னு ஒன்ன உருவாக்கிடாத பகவதி தாயே” என்று மேலோக்கி வணங்கிய லட்சுமி, “போற வழி பகவதி கோவில் கிட்ட நிறுத்து இன்பா” என்றார்.

(கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தியப்பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று.)

“இப்போ கோவிலுக்குள்ள நுழைஞ்சு சீக்கிரம் வெளியில் வர முடியாது அத்தை” என்றார் காமாட்சி.

“ஆமா அத்தை டூரிஸ்ட்டர் கூட்டமே நிறைய இருக்குமே” என்றார் கங்கா.

“என் வீட்டு குலசாமிக்கு நல்ல விஷயம் பேசப் போறோம். மனசுல சடைச்சிக்கிட்டே வராளே. கொடி மரத்துகிட்ட நின்னாவது கும்பிட்டு கிளம்புவோம்” என்றார் லட்சுமி.

“என்னம்மா இது. இப்படித்தான் ஓடுற வண்டி முன்ன வந்து குறுக்க நிப்பாங்களா?” என்று இளங்கோ கேட்க, “அவன் சட்டுன்னு பிரேக் போடாம… ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா யாரு பதில் சொல்றது?” என்று காட்டமாகப் பேசினார் கஜேந்திரன்.

“நீ கொஞ்சம் சும்மா இரு இந்திரா” என்று தம்பியின் கையை பிடித்துக் கொண்ட இளங்கோ,

“எதுக்கு வண்டியை நிறுத்தின?” எனக் கேட்டார்.

“ஏன் உங்களுக்குத் தெரியாதா?” வந்தனாவின் தோற்றத்தில் பேச்சில் ஒருவித திமிர்.

கஜேந்திரன் பல்லைக் கடிக்க, அவரை பார்வையால் அடக்கினார் இளங்கோ.

“சொன்னாதான் தெரியும்” என்றார் இளங்கோ.

“எங்கப் போறீங்க எல்லாரும்?” மிதப்பாகக் கேட்டாள்.

“ஹேய் என்ன? பெரியவங்க மரியாதை இல்லாம” என்று இறங்கி வந்த இன்பா அவளை அடித்து விடும் பாவனையில் எகிற…

“அடேய் நீயுமாடா. கொஞ்சம் பொறுமையா நில்லுடா” என்று மகனை அதட்டினார் இளங்கோ. அவரால் முறுக்கிக் கொண்டு சீறும் இருவரை சமாளிக்க முடியவில்லை.

“என் பேச்சுக்கு மரியாதைன்னா அமைதியா நில்லுங்க” என்று இளங்கோ சொல்லிய பின்னர் இருவரும் முகத்தை உர்ரென்று வைத்து தள்ளி நின்றனர்.

“ம்க்கும்… இன்னைக்கு போய் பொண்ணு பார்த்த மாதிரிதான்” என்ற குமரி, “வாடி தனு நாம இறங்கி வீடு போவோம்” என்றார்.

அதுவரை கஜமுகன் அருகில் அவருக்கு ஆதரவாக அமர்ந்திருந்த ஜெயந்தன்,

“என்னை அடிக்க வச்சிடாத குமரி” என்று விறைத்துக் கொண்டு குரல் கொடுக்கவும், அமைதியாக முகம் திருப்பிக் கொண்டார் குமரி.

“இளங்கோ பொறுமையும் கொஞ்ச நேரம் தான் ஜெயந்தா… நீயும் போ என்னன்னு பாரு” என்று கஜமுகன் சொல்ல, ஜெயந்தன் வண்டியை விட்டு இறங்க, உதயனின் கருநிற தார் வந்து நின்றது.

முன்னால் வேன் நிற்பதால் இறங்கி வந்த உதயன், அப்போது தான் வண்டியை விட்டு இறங்கிய ஜெயந்தனிடம்,

“என்ன மாமா வண்டியை நிறுத்திட்டீங்க?” என்று முன்னால் எட்டிப் பார்க்க விடயம் புரிந்தது.

ஒற்றை கையை இடை குற்றிஆயாசமாக உதயன் மற்ற கையால் நெற்றி வருட,

“மருதன் பொண்ணை கண்டிக்கவே மாட்டானா?” என்று புலம்பினார் ஜெயந்தன்.

அங்கு அவளிடம் இளங்கோ என்ன பேசிக் கொண்டிருந்தாரோ… அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர் சட்டென்று வந்தனாவை அடிக்க கை ஓங்கியிருந்தார்.

ஆண்கள் நால்வரும் பதறி அவரின் அருகில் செல்ல…

“சின்னப் பொண்ணுன்னு எல்லாம் பார்த்திட்டு இருக்கமாட்டேன். புரியாம பண்றேன்னு பார்த்தாக்க… இதென்னப் பேச்சு” என்று கொதித்த இளங்கோ, “இவள் நின்னா நிக்கட்டும். வண்டியை மேலவே ஏத்துடா” என்று வண்டியில் ஏற நகர்ந்தவரின் அடி மகனை கண்டு விட்டு நின்றது.

“ஒண்ணுமில்லைங்க. நீங்க வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் வாங்க” என்று ஏறினார்.

மற்ற ஆண்கள் முறைத்துக் கொண்டிருந்த வந்தனாவை அழுத்தமாகப் பார்த்தபடி நின்றிருக்க, அவளின் முகம் கூட காணவில்லை உதயன்.

வந்தனா நின்றிருந்த பக்கம் வண்டியை சரித்து சீராக்கி இரு வண்டியும் சென்றிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top