அத்தியாயம் 01

அத்தியாயம் 01

 

அன்று காலை அந்த கிராமத்தில் விடியல் சற்று ஆரவாரத்துடன் தான் ஆரம்பித்தது.

 

“ம்ம்ஹும்… யுவி திஸ் இஸ் டூ மச். இன்னும் விடியவே இல்லை அதுக்குள்ள என்னை டிஸ்டர்ப் பண்ணுற நீ… அப்பாகிட்ட உன்ன போட்டு கொடுக்கப் போறேன் பாரு” என்றவள் மீண்டும் போர்வைக்குள் சுருண்டுகொள்ளப் பார்க்க, அவள் தாயோ விட்டால் தானே!

 

“நோ, நவி இப்போ நீ எழுந்துக்கல, உனக்கு பிரேக்ஃபர்ஸ்ட் கிடையாது” என்றவள், அவளை எழ வைத்து குளியலறை அனுப்பி விட்டே வெளியேறியிருந்தாள்.

 

வெளியே வந்தவள் கண்டது, தொலைக்காட்சியில் அவசர செய்தி பார்த்துக் கொண்டிருந்த கணவனைத் தான்.

 

“பாலா, காஃபி தரட்டுமா?” என்று கேட்டபடி சமையலறைக்குள் நுழைந்து கொள்ள,

 

“என்ன யுவி உள்ள சத்தம். உன் மக என்ன சொல்லுறா, இன்னைக்கும்  கட் அடிக்கப் போறாளாமா? விடேன் இன்னைக்கு ஒரு நாள் தான” என்று சொன்ன பாலமுருகன், மகளின் அறைப்பக்கம் பார்வையை வைத்திருந்தான்.

 

அதற்கு  “உங்க மகள் தான, அப்பா போலவே மகளும்…  உங்களுக்கு வேலைக்குப் போற ஐடியா இருக்கா? இல்ல நீங்களும் அப்படியே இருக்கப் போறீங்களா?” என்று கேட்டபடி அவன் கையில் குழம்பியை வைத்த யுவியைப் பார்த்தவன்,

 

“அம்மா தாயே ஆள விடு, காலைலயே நான் தான் கிடைச்சேனா, நீயாச்சு உன் மகளாச்சும் என்னமோ பண்ணுங்க” என்றவன் எழுந்து உள்ளே சென்று விட்டான்.

 

அவளோ போகும் அவனை புன்னகை முகமாகப் பார்த்தவள், மீண்டும் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

அவள் யுவராணி, இப்போது அந்த வீட்டின் ராணி.  கணவன் பாலமுருகனும், குழந்தை நவ்யாவும்  தான் அவளுக்கான உலகம்,  அவர்களுக்கும் அப்படியே!

 

எங்கிருந்தோ  கடல் நீரில் அடித்து வரப்பட்ட சருகு போல, அந்த கரையில் ஒதுங்கிய அவளுக்கு வாழ்க்கை கொடுத்தது அந்த கிராமமும் அங்குள்ள மக்களும் தான்.

 

சென்னையிலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், வங்காள விரிகுடாவின் நீல அலைகளையும் பசுமை போர்த்திய தென்னந்தோப்புகளையும் தன்னகத்தே கொண்ட அழகிய கடற்கரைக் கிராமம் தான் நீலவிழி கிராமம்!

 

ஒருபுறம் தலைமுறை தலைமுறையாகக் கடலை நம்பி வாழும் மீனவக் குடும்பங்கள்; மறுபுறம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஆடம்பரமான கடற்கரை விடுதிகளும் உணவகங்களும்! மாலை நேரத்தில் கடற்கரையில் தவழும் தென்றலும், வண்ணம் தீட்டிய வானமும், அலைகளின் சங்கீதமும் அந்த ஊரையே ஓர் அழகிய ஓவியமாக மாற்றியிருக்கும். இயற்கையின் அழகையும் நவீனத்தின் வசதியையும் ஒருசேரக் கொண்ட நீலவிழி, பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளையடிக்கும் சொர்க்கபுரி!

 

அங்கே அவளை அரவணைத்துக் கொண்ட சொந்தங்களுடன் ஒரு அமைதியான வாழ்க்கை அவளுக்கு…

 

அவள் எதிர்பார்த்தது எல்லாம் இருக்கிறது தான் ஆனால் அவன்???

 

அந்தக் கேள்வி ஒன்று இப்போதும் அவளுள்ளே ஓடும் ஒன்று தானே!

 

எங்கே இருக்கிறான் என்று தெரிந்தும் தானாக அவனைத் தேடி செல்லவும் அவளுக்கு மனம் இல்லை…

 

ஏனோ ஒரு தயக்கம், ‘ஏமாற்றி விட்டோமே? அவனை நம்பாமல் போனோமே? அவன் சொன்னதை கேட்டிருக்கலாமே!’ என்று எத்தனையோ கேள்விகள் அவளுள்ளே இன்னும் நர்த்தனம் ஆடிக் கொண்டே தானே இருக்கின்றது…

 

அவளை நம்பியவன், அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டவன் அப்படிப்பட்டவனிடன் சென்றால் தான் என்ன?  என எப்போதும் ஒரு இதயம் அடித்துக் கொண்டாலும் இன்னொரு மனம் அதற்கு இடம் தர மறுக்கிறது…

 

அதற்கான காரணமும் அவளிடம் இருக்கின்றது தானே!!

 

மௌனமாய் கண்ணீர் வடிப்பவளுக்கு, அதனைத் தவிர்த்து வேறு எந்தக் குறையும் இல்லையே!

 

அப்படியே யோசனைகளின் மத்தியில் வெளியே தெரிந்த கடலை வெறித்துக் கொண்டிருக்க, அந்த நேரம் சரியாய் பின்னிருந்து அவள் கழுத்தில் கையிட்டு அணைத்துக்கொண்ட அந்த கரத்தின் சொந்தக்காரியை உணர்ந்தவளின் இதழ்கள் தானாய் புன்னகை பூத்தது…

 

“என்னடா ரெடியாகிட்டியா? அம்மா சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று  எழப்பார்க்க, தாயைத் தடுத்தவள் “முதல்ல உக்காருமா, என்ன யோசனை?” என்று கேட்க,

 

அமர்ந்திருந்தபடியே மகளின் கன்னத்தை வருடியவள், “ஒண்ணுமில்லையே, என் நவிக்குட்டி தூங்குமூஞ்சி பாத்ரூம்லயும் தூங்குறாளான்னு தான் யோசிச்சுட்டு இருந்தேன்” என்க, அதனை நம்பாத மகளோ தாயை குறுகுறுவெனப் பார்த்து வைத்தாள்.

 

அந்தப் பார்வையில் புன்னகைத்த யுவராணி, “என்னடா அப்படி பார்க்குற அம்மா இன்னைக்கு அவ்வளவு அழகாவா இருக்கேன்” என்க,

 

“அதெல்லாம் என் அம்மா எப்பவும் அழகு தான். மூஞ்சில ஏதோ  சோகம் தெரியுதே அதான் என்னனு பார்த்தேன். இங்க பாரு பொட்டுக் கூட இன்னைக்கு சரியா வைக்கல நீ” என்று தன் கரத்தால் தாயின் புருவங்களின் மத்தியில் சரியாய் வைத்து விட்டாள் நவ்யா..

 

யுவராணி எப்போதும் தன்னை அத்தனை நேர்த்தியாக வைத்துக்கொள்பவள் என்று தான் மகளுக்குத் தெரியுமே!

 

தாயின் அழகில் அவளுக்கு கர்வம் தான். தன்னுடன் படிக்கும் நண்பிகள் கூட, அம்மாவிடம் அழகு குறிப்பு கேட்டு வரச் சொல்லி தொல்லை செய்பவர்கள் தானே!

 

அப்படி இருக்கையில் இன்று பொட்டைக் கூட சரியாக வைக்கவில்லை என்றால் கேட்க தானே செய்வாள்.

 

அப்போது பாலாவும் வேலைக்கு தயாராகி, “கண்ணான்னா இதோ அங்க தான் வந்துட்டு இருக்கேன். நாளைக்கு சீசன் தொடங்குது தானே! புக்கிங் அதிகமா இருக்கும். கொஞ்சம் பார்த்து ரூம்ஸ் கொடுங்க, அப்பறம் பிரச்சனை ஆகிடப் போகுது” என்று பேசியபடியே இவர்களிடம் வந்திருந்தான்.

 

“அம்மாவும் மகளும் கொஞ்சல் முடிச்சிடீங்கன்னா  நான் என் வயித்த கொஞ்சம் கவனிக்கலாம்” என்றவனின் குரல் அருகில் கேட்டு, பெண்கள் இருவரும் அவன் பக்கம் திரும்ப, அங்கே பாவமாய் வயிற்றில் கை வைத்தபடி நின்றிருந்தான் பால முருகன்…

 

மகளுக்கும் நேரமாவதை உணர்ந்த யுவராணி, “நவி நீயும் அப்பா கூட உக்காருடா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்றவள் சமையலறைக்குள் நுழைந்திருந்தாள்…

 

அடுத்த அரைமணி நேரத்தில் அப்பாவும் மகளும் சாப்பிட்டு முடித்து, அங்கிருந்த பூஜை அறையில் கண் மூடி நின்றிருந்தனர்.

 

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, அந்த அறையில் கடவுளையும் கடவுளாய் வீற்றிருக்கும் நயனாவையும் வணங்குவது அங்கே வழமை தான்.

 

பாலமுருகன் பார்வை அவனது காதல் மனைவியில் படிய, கண்களில் ஒரு கனிவு…

 

நயனா அவன் வாழ்க்கையில் இருந்து சென்ற இத்தனை வருடங்களில் அவள் இல்லை என்ற எந்த உணர்வும் அவனிடம் இல்லை…

 

அதற்கு ஒரு வகையில்  அவன் முன்னே இருக்கும் அவனது இப்போதைய மனைவி யுவராணியும் ஒரு காரணம் என்றால் மிகையில்லை…

 

“ஓகே யுவா, பத்திரமா இருந்துக்கோ, துணைக்கு கோகிலா ஆண்ட்டிய கூப்பிட்டுக்கோ, இன்னைக்கு ரிசார்ட்ல வேலை அதிகமா இருக்கும். நைட் லேட்டா தான் வருவேன்” என்றான்.

 

அங்கே அந்த சுற்றுலா தளத்தில் இந்த மாதம் சற்று பயணிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் இந்த ஒரு வாரமாக அவன் மிகவும் சோர்ந்து போய் தான் தெரிகிறான். அதுவும் அவளுக்குத் தெரியும் தானே!

 

“நவிய நானே ஈவினிங் பிக்கப் பண்ணிக்கிறேனேங்க, எதுக்கு இடைல வந்து விட்டுட்டு போகணும். எனக்கு சமையல் ஆச்சுன்னா அப்புறம் ஃபிரீ தான். அதோட உங்களுக்கும் அலைச்சல் தானே!” என்றாள் அவன் களைப்பு உணர்ந்து…

 

“இதுல என்னடா இருக்கு, வேலை இருக்கும் தான். அதுக்குன்னு உங்க ரெண்டு பேரையும் விட்டுடுவேனா என்ன? இடைல வந்து ரெண்டு பேரையும் பார்த்துட்டு போனா ஒரு நிம்மதி.  அதுக்காகத் தான் வர்றேன். எல்லாம் என் சுயநலம் தான் மா” என்றவன் செல்லமாய் அவள் தலையை வருடியபடி செல்ல,

 

அவளும்  எப்போதும் போல் அவன் அன்பில் புன்னகையுடன் தலை அசைத்தாள்…

 

___________________

 

 

அங்கே சென்னையில், அந்தக் காவல் நிலையம் சற்று கலவரமாய்த்தான் இருந்தது.

 

கடமையில் கலவரம் என்று எண்ணினால் அதுதான் தவறு! நம் நாயகியின் ஆர்வக்கோளாறால் நடந்த கலவரம் அது!

 

 

“மாலா மேடம்… ப்ளீஸ் மேடம்! ஒரே ஒரு கேஸ்தான். ஒரே ஒரு கேஸ் தான் சும்மா விசாரிக்கிறேனே!” என்று தான் கடந்த ஒரு வாரமாய் இன்ஸ்பெக்டர் மாலாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறாள் அனலி.

 

“ஏன்டி, காலையிலிருந்து என் உயிரை வாங்கிட்டு இருக்க? உனக்கு என்னதான் வேணும்?” என்று அவரே சலித்துக் கொள்ளும்படி தான் இருந்தது அவருக்கும்…

 

இந்த வயதில் குடும்ப சுமையை சுமக்கும் பெண் என்ற ரீதியில் அவள் மீது அவருக்கு கரிசனம் இருந்தது…

 

கூடவே இறந்த அவளது தந்தை மீதிருந்த நல்ல எண்ணமும் ஒரு காரணம்…

 

அவளோ “மேடம், எனக்கு எல்லாம் ஒரு ஆசை இருக்காக் கூடாதா?” என்று கெத்தாய் கேட்டு வைக்க,

 

அவரோ “என்ன ஆசை? போலீஸ் வேலையை ஒழுங்காக் கத்துக்கணும்னு ஆசையா?” என்று ஏதோ ஒரு கோப்பினைத் தேடியபடி கேட்டார்.

 

அனலியிடம் ஒரு நொடி அமைதி, ஏதோ யோசித்தவளாக, “அதெல்லாம் இரண்டாவது ஆசையா வேணும்னா வெச்சிக்கலாம் மேடம்!” என்க,

 

இன்ஸ்பெக்ட்டர் மாலாவோ நிமிர்ந்து அவளைப் பார்த்து “என்னது வெச்சிக்கலாமா? சரியா போச்சு போ” என்று தேடிய கோப்பினை எடுத்து பிரட்டியபடி “அப்போ உன் முதல் ஆசை என்ன?” என்று கேட்டார் சுவாரஷ்யமாய்…

 

அவள் ஏதோ கிறுக்குத்தனமாய் சொல்லப்போகிறாள் என்று தான் தெரியுமே!

 

“ஒரு பெரிய கேஸைக் கண்டுபிடிச்சு, என் பெயர் நியூஸ் பேப்பர்ல வரணும் மேடம்!” என்ற அனலியின் கண்களில் அத்தனை பிரகாசம்!

 

மாலா சிரிப்பை அடக்கிக்கொண்டு

“ஓஹோ! அப்போ நீ பெரிய போலீஸ் அதிகாரியாகப் போற அப்படி தான?” என்று கேட்க,

 

“அதெல்லாம் தெரியாது மேடம். ஆனா, நாளைக்கு நியூஸ் பேப்பரைத் திறந்ததும், ‘இளம் கான்ஸ்டபிளின் அதிரடி! பெரும் குற்றம் அம்பலம்!’ அப்படின்னு என் போட்டோவோட வரணும்!” என்று அவள் கைகளால் செய்தித்தாளைப் பிடிப்பதுபோல பாவனை செய்தாள்.

 

“அடடா! அப்படி போகுதா கதை. செம இன்டெரெஸ்ட்டிங்கா இருக்கே அப்பறம் என்ன?” என்று கதை கேட்கும் பாவனை தான் மாலாவிடம்…

 

அன்று இன்ஸ்பெக்டர் பரத், டிஎஸ்பி அர்ஜுன் தாஸுடன் ஒரு வழக்கு விடயமாக வெளியே சென்றிருக்க, பெரிதாக வேறு எந்த வழக்கும் இருக்கவில்லை…

 

ஒரு திருடனை விசாரிக்கும் வேலை மட்டுமே இருந்தது. அதனாலே அவரும் அவளது உளறல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

 

அங்கிருந்து மற்ற அதிகாரிகள் கூட இவள் பேச்சுக்கு காது கொடுத்து சிரித்துக்கொண்டே தான் இருந்தனர்.

 

“அப்புறம் என்ன மேடம்? எங்க வீட்டுல எல்லாரும் அதைப் பார்த்து ஆச்சரியப்படணும். என்னைக் கேலி பண்ணினவங்க எல்லாரும் வாயடைச்சுப் போகணும்!” என்றாள் கனவுடன்…

 

அப்போதே ஜனாதிபதி கையால் மாலை வாங்குவது போலவும் அதனை தொலைக்காட்சியில் அவள் சித்தி தேவகி பார்த்து ஆனந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்வதும் என காட்சிகள் விரியத் தொடங்க,

 

அங்கே ஜனாதிபதியின் முன்னே அவளருகில் வந்த மாலா “உனக்கு ஒரு கேஸ் கொடுத்த எனக்கு ஒரு சீனும் இல்லல? இதுக்காகத்தான் போலீஸ் வேலைக்கே வந்தியா?” என்று கேட்டு உளுக்கியதில் உலகுக்கு வந்தவளுக்கு…

 

அப்போது தான் “அதுக்காகத்தான் போலீஸ் வேலைக்கே வந்தியா?” என்று மீண்டும் மாலா கேட்ட கேள்வி மூளையில் உரைத்தது.

 

அவளிடமோ பெருமூச்சு அது தானே, ‘அவள் சித்தி ஆனந்த கண்ணீர் விடுவதாமா??? அப்படியென்றால் அது உண்மையில் கனவே தான்’ என்ற முடிவுக்கு வந்தவள், முகத்தைச் சுளித்தாள்.

 

“ஐயோ மேடம், எனக்கு ஃபேஷன் டிசைனிங் படிச்சு, பெரிய டிசைனர் ஆகணும்னுதான் ஆசை. அப்போ என்ன இந்த உலகமே பாராட்டும் நடிகை நடிகர்கள் எல்லாம் என்ன புக் பண்ணுவாங்க” என்றவள்,

 

“சினி பீல்ட்டுக்கு கிடைக்க வேண்டிய ஒரு டிசைனர இந்த விதி இந்தக் காக்கி உடைக்குள்ள மாட்டி விட்டுடிச்சு! சரி அதுதான் போயிடிச்சு இந்த டிபார்ட்மென்ட்டுக்காவது ஒரு பெஸ்ட் கான்ஸ்டபிளக் கொடுக்கலாம்னு பார்த்தா முடிய மாட்டேங்குதே!” என்று சோகம் போல் சொல்லி முடிக்க, மாலா சிரித்துவிட்டார்.

 

“சரி, சரி! உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். திருடன் ஒருத்தன விசாரிக்கணும் பண்ணுறியா?” என்றது தான் தாமதம் அனலி கிட்டத்தட்ட குதிக்காத குறையாகத் தான் நின்றாள்.

 

“நிஜமாவா மேடம்?!” என்று கண்கள் மின்ன அவள் கேட்க,

 

“எஸ், திருட்டு வழக்குல ஒருத்தனைப் பிடிச்சு வச்சிருக்கோம். அவர்கிட்ட சில கேள்விகள் கேட்டு, சம்பவத்தைப் பத்தி டீடெயில்ஸ் எடு. நான் வாட்ச் பண்ணுறேன்” என்றதும் அனலியின் முகம் மலர்ந்து விட்டது.

 

“தேங்க்யூ மேடம்! தேங்க்யூ சோ மச்!” என்றாள் அவ்வளவு உட்சாகமாய்…

 

 

 

அடுத்த அரைமணி நேரத்தில், விசாரணை அறையில், ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அனலி. அவளருகே மாலா…

 

அவளுக்கு எதிரே, திருட்டு வழக்கில் பிடிபட்டிருந்த ஒருவன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

 

மாலாவைப் பார்த்த அனலி, அவர் சம்மதமாய் தலை அசைத்ததும், “உங்க பேரு என்ன?” என்று அவளது முதல் கேள்வியை ஆரம்பித்தாள்…

 

அவனோ “கதிர்” என்க,

 

அவளோ “வயசு?” என்ற அடுத்த கேள்விக்குத் தாவி இருந்தாள்.

 

அவன் ஊர் வயது அனைத்தையும் கேட்டு அவன் சொன்ன பதிலையும் குறித்துக் கொண்டாள்…

 

அவன் சொன்ன ஊருக்கும் திருடிய இடத்துக்கும் தூரம் அதிகம் இருப்பதால் “சரி, சென்னைக்கு எதுக்கு வந்தீங்க? திருடுன நோக்கம் என்ன? எத்தனை நாளா பிளான் பண்ணி திருடுனீங்க? உங்க கூட வேற யாரவது இருக்காங்களா?” என்று அடுத்தடுத்து கேள்விகள் வர, மாலாவின் பார்வையில் சிறு மெச்சுதல்,

 

ஆனால் அடுத்த சில நொடிகள் அது காணாமல் போகப்போகிறது என்று அவருக்கு யார் சொல்வது???

 

அவனோ “வேலை தேடி வந்தேன், மேடம். ஆனா வேலைக்குப் போகப் பிடிக்கல. பிடிக்காத வேலைய எப்படி மேடம் பண்றது, அதான் திருடினேன்” என்றதும்,

 

எழுதிக்கொண்டிருந்த பேனாவை கீழே வைத்தவள், “அச்சோ அண்ணா, பிடிக்காத வேலையா, அப்போ கஷடம் தான்…” என்று ஆரம்பித்தவள், அவளது பேஷன் டிசைனர் கதையை ஆரம்பித்து விட, மாலா தலையில் அடித்துக் கொள்ளாத குறைதான்…

 

அதிலும் “என்ன அண்ணா பண்றது, பிடிக்காத வேலையா இருந்தாலும் அதுல பெஸ்ட்ட கொடுக்கணும். அதுக்காக இப்படி திருட போனா நல்லாவா இருக்கு சொல்லுங்க… அடுத்த தடவ உங்கள நான் பார்க்கும் போது, எங்க போலீஸ் ஸ்டேஷன் வந்த கதிர் அண்ணா இப்போ இப்படி இருக்காருன்னு நாங்க பெருமையா சொல்லுற போல பெரிய இடத்துல இருக்கணும்” என்று அவனுக்கு அறிவுரை வேறு வழங்கி வைக்க,

 

‘இவன் செஞ்ச வேலைக்கு இவனுக்கு மோட்டிவேஷன் வேற, கொடுமை’ என்ற எண்ணம் தான் மாலாவினுள்…

 

கைதியோ குழப்பமாகத் தான் அவளைப் பார்த்து வைத்தான். அவனோ இதுவரை வேலை என்று ஒன்றுக்குச் சென்றதே இல்லை, திருடுவதை மட்டுமே தொழிலாக செய்பவன் வாயில் வந்ததை அடித்து விட்டிருக்க, இவளோ அவனை முன்னேற சொல்லுகிறாளே!

 

“மேடம், நான் என்ன சொல்றேன்னா…” என்று அவன் ஆரம்பிக்க,

 

“நீங்க ஒன்னும் சொல்ல வேணா, இப்போ திருடுனதுக்கு ஒரு மன்னிப்பு கேட்டுட்டு இனிமேல் திருடாம பிடிச்ச வேலைய செய்யணும் சரியா?” என்று அவனிடம் சொன்னவள் மாலாவைப் பார்க்க, அவரோ இவளை முறைத்துக் கொண்டிருந்தார்.

 

 

அந்தப் பார்வையில் அனலி ஒரு நொடி அமைதியானவள் ‘ஐயோ அனலி, நீ விசாரிக்க வந்திருக்கடி’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள், அடுத்த நொடியே தன்னுடைய தலையில் தானே தட்டிக்கொண்டாள்.

 

“ஐயோ! நான் எதுக்கு இவருக்கு ஆதரவா பேசிட்டு இருக்கேன்?” என்று மனதில் நினைப்பதாய் எண்ணி வெளியே கேட்டுவிட,

 

“அதான் மேடம், எனக்கும் புரியல!” என்ற கைதிக்கு இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை…

 

அனலி அவனை முறைத்தவள் “சிரிக்காதீங்க! நான் விசாரணை நடத்திட்டு இருக்கேன்” என்க,

 

மாலா அவளை அங்கிருந்து வெளியே அழைத்து வந்தவர் ஏதோ சொல்லப்போக, அப்போது சரியாய் இன்ஸ்பெக்டர் பரத் உள்ளே நுழைந்தான்.

 

அவன் வந்ததும் அந்த காவல் நிலையமே சற்று அமைதியாகிதான் போனது.

 

அவன் முகத்தில் எதுவோ சரியாய் இல்லை என்பதை உணர்ந்த மாலாவும் அவன் பின்னே அவனது அறைக்குள் அனுமதி கேட்டு நுழைந்தவர், “என்னாச்சு சார், ஏதாச்சும் விபரம் தெரிஞ்சிதா?” என்று கேட்க,

 

“அதுக்கு விசாரிக்க நேரம் கொடுக்கணுமே மாலா! அந்த மினிஸ்டர் நாம பேசுறத எல்லாம் கேக்குற நிலைமைல இல்ல, வீட்டுக்கு ஒரே மகன். அவரோட அரசியல் வாரிசு வேற… அதனால நம்ம தலையை உருட்டுறாங்க” என்றவன்,

 

“விஷயம் வெளிய தெரியாம விசாரிக்கணுமாம். அப்போ டைம் ஆகும் தானே! அவன் கடத்தப்பட்ட இந்த மூனு நாள்ல நமக்கு நிம்மதி இல்ல” என்றான் கோபமாய்…

 

அந்த அளவுக்கு மினிஸ்டரின் தலையீடு இருந்தது அந்த வழக்கில்…

 

“வன் வீக்ல விசாரிச்சு சொல்லிடலாம் சார்” என்க,

 

‘நோ யூஸ் மாலா, மினிஸ்டர் தனீஸ்வரன் அவரோட பவர யூஸ் பண்ணி ஹைதராபாத்ல ஒர்க் பண்ற ஏசிபி ஆதவ் மதிமாறன இங்க வரவழைக்கப் போறதா பேச்சு, அர்ஜுன் சார் ரொம்ப டென்ஷன் ஆகிட்டார். இங்க இருக்கவங்களால முடியாது எங்குற மாதிரி இருக்கு இது, இதுக்கு ஐஜி வேற சப்போர்ட்” என்றான் கோபமாய்…

 

மாலாவினால் இதற்கு என்ன சொல்லவிட முடியும்?

 

ஆதவ் மதிமாறனை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாள் தான்.

 

அவனைப் பற்றி செய்தித்தாள்களில் அநேக தகவல்கள் வந்து கொண்டே இருக்குமே!

 

 

அவன் திறமையானவன் தான். அதற்கென்று எங்கே இருப்பவர்கள் திறமையற்றவர்கள் என்றாகி விடாதே!

 

இத்தனைக்கும் இந்த வழக்கில் சில தடையங்களும் கிடைத்து தான் இருந்தது. ஆனால் மூன்றே நாட்களில் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் சற்று சிரமம் தானே!

 

அவகாசமே கொடுக்காமல் இப்படி நெருக்குவதும் சரி இல்லை தான்.

 

இங்கே பரத்தை போல அங்கே அர்ஜுன் கொதித்துக் கொண்டுதான் இருந்தேன்.

 

அங்கே வருவதற்கு முதலே அங்கிருக்கும் அத்தனை அதிகாரிகளின் வெறுப்புக்கும் உள்ளாகி இருப்பவனோ அங்கே அவனது உயர் அதிகாரியின் முன்னே ‘முடியாது’ என்று தீர்க்கமாய் சொல்லி விட்டு கிளம்பி இருந்தான்.

 

 

_________________

 

 

அடர்ந்த காட்டின் நடுவே, அந்த உருவம் இதழ்களில் இகழ்ச்சியான புன்னகையுடன் தன் முன்னே கதறிக்கொண்டிருந்தவனை ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தது.

 

“என்…னை விட்…டுடு… வலி…க்கிது…” என்று அலறியவனின் கெஞ்சல், அந்த உருவத்தின் செவிகளை எட்டியும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

 

மாறாக, அவனது வேதனையை ரசிப்பதைப் போலத் தலையைச் சாய்த்த அந்த உருவமோ, “வலிக்குதா?” என்று ஏளனமாய் கேட்க,

 

அவனது விழிகளில் உயிர் பிழைத்துவிட வேண்டும் என்ற தவிப்பு. உடல் முழுவதும் நடுக்கம். தப்பிச் செல்ல முயன்ற ஒவ்வொரு முறையும், அவனது முயற்சிகள் வீணாகிக் கொண்டிருந்தன.

 

“ப்ளீஸ்… என்னை விட்டுடு…” என்று எத்தனை அலறியும் பதில் பூச்சியம் தான்…

 

“விடணுமா?” என்று இடைமறித்த அந்த உருவம்,

 

மெல்லிய சிரிப்புடன் அவனை நெருங்கி “உனக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுக்க நான் என்ன கடவுளா?” என்ற அடுத்த நொடி, அவனது அலறல் காட்டையே அதிரச் செய்தது. அவனது கை விரல் ஒவ்வொன்றும் நெருப்பினால் பொசுக்கப் பட்டிருந்தது…

 

வலி தாங்க முடியாமல் துடித்தவனின் குரல் மெல்ல மெல்லத் தளர்ந்தது. அவனது விழிகள் ஏதோ ஒன்றைப் பற்றிக்கொள்ள முயல்வதைப் போல வெறித்தன. அது உயிரின் இறுதி நிமிட துடிப்புகள்…

 

இந்த மூன்று நாளாய் அவனுக்கு நரகம் தானே!

 

அந்த உருவமோ, அவனது முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அவனது அலறல் எதுவும் போதவே இல்லை, “கவுண்டவுட் ஸ்டார்ட்” என்று சீற்றத்துடன் ஒலித்த அந்தக் குரலைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு கொடூரமான தாக்குதல்.

 

அவனது உடல் துடித்தது. உதடுகள் ஏதோ சொல்லத் துடித்தன. ஆனால், வெளிவந்ததெல்லாம் தெளிவற்ற முனகல் மட்டுமே.

 

சில நிமிடங்களில்…

 

அவனது அசைவுகள் குறைந்து மூச்சுக்காகப் போராடிய மார்பு மெல்ல அடங்கி, திறந்திருந்த விழிகளில் உயிர் மங்கியது.

 

ஆம் அவன் இறந்துவிட்டான்…

 

அந்த உருவம் அவனது உயிரற்ற உடலைச் சில நொடிகள் வெறித்துப் பார்த்து பின்னர் அதனருகே குனிந்து “லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம்” என்ற அடுத்த நொடி, அங்கிருந்து சென்றிருந்தது.

 

அந்த அடர்ந்த காட்டில், உயிரற்ற உடலும் உதிர்ந்த இரத்தமும் மட்டுமே எஞ்சியிருந்தன.

 

 

கூடவே அங்கே உயிரற்றுக் கிடந்தவனின் நெற்றியில், கருகிய சிவப்புத் தடங்களுடன் தெளிவாகப் பதிந்திருந்தது அந்த வார்த்தை.

 

 

‘குற்றம் 9’

 

 

அது வெறும் வார்த்தையல்ல…

யாரோ வழங்கிய தண்டனையின் மிச்சம்!

 

 

அந்த குற்றம் 9 என்பது என்ன?

அந்தக் கொலையாளி யார்?

 

விடை தெரியாமல், இருள் அந்த ரகசியத்தைத் தன்னுள் மறைத்துக் கொண்டது.

 

 

 

மறைந்திருக்கும் ரகசியத்தைக் கண்டறிவானா நம் நாயகன்????

 

 

 

குற்றம் தொடரும்… 

 

 

 

 

 

error: Content is protected !!
Scroll to Top