அந்த வாரம் சனிக்கிழமை அரவிந்தன் வீட்டுக்கு வருகிறான் என்ற செய்தி, வியாழக்கிழமையே வீடு முழுவதும் பரவியிருந்தது. அதிலிருந்து சிவகாமியின் சமையலறையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வெள்ளிக்கிழமை மாலையே அம்மியில் மசாலா அரைத்து, வெங்காயம் நறுக்கி, நாட்டுக்கோழியைச் சுத்தம் செய்யும் வேலையையும் முத்துவிடம் ஒப்படைத்திருந்தாள்.
சனிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கே எழுந்த முத்து, வழக்கம்போல வயலுக்குக் கிளம்பிவிட்டான். அன்று அலுவலகம் இல்லாததால் தாரணி சற்று நேரம் கழித்தே எழுந்தாள். ஏழு மணியளவில் சமையலறைக்குள் சென்றபோது, சிவகாமி ஏற்கனவே மூன்று அடுப்புகளையும் பற்றவைத்து மும்முரமாகச் சமைத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு அடுப்பில் நாட்டுக்கோழிக் குழம்பு, இன்னொன்றில் தக்காளிக் குழம்பு, மற்றொன்றில் கருப்பையாவுக்கான கஞ்சி.
கடந்த சில நாட்களாகத் தாரணி ஒரு விஷயத்தைக் கவனித்திருந்தாள். சில காலைகளில் சீக்கிரம் எழும்போது, முத்து கிணற்றடியில் அமர்ந்து முந்தைய நாள் மீதமான பழைய சோற்றைச் சின்ன வெங்காயமும் பச்சை மிளகாயும் சேர்த்து அவசரமாகச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறாள். அதைச் சாப்பிடும்போது அவன் முகத்தில் ஒரு திருப்தி தெரியும். ஆனால் அது அவனுக்குப் பிடித்த உணவா, இல்லை கிடைத்ததைச் சாப்பிட்டுப் பழகிவிட்டானா என்ற கேள்வி மட்டும் அவளுக்குள் உறுத்திக் கொண்டிருந்தது.
“வாம்மா தாரணி! இந்த வெங்காயத்தை நறுக்கிக் கொடு,” என்று அழைத்தாள் சிவகாமி.
“இதோ வர்றேன்மா,” என்று அருகில் அமர்ந்தாள் தாரணி.
குழம்பைக் கிளறிக்கொண்டே சிவகாமி ஒவ்வொன்றாகச் சொல்லத் தொடங்கினாள்.
“இந்தக் கோழிக் குழம்பு அரவிந்தனுக்காக. அவனுக்கு மிளகு கொஞ்சம் தூக்கலா இருந்தாத்தான் பிடிக்கும். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். இந்தத் தக்காளிக் குழம்பு கவிதாவுக்கு. அவளுக்குப் புளிப்பு இருக்கணும், ஆனா காரம் குறைவா இருக்கணும். இது உங்க மாமாவுக்கு. உப்பு குறைச்சு, சீரகம் போட்டு கஞ்சி வச்சிருக்கேன். மருந்து சாப்பிடுறதால கவனமா இருக்கணும்.”
அவள் ஒவ்வொன்றையும் சொல்லும்போது முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி தெரிந்தது.
தாரணி அவளைக் கவனித்தாள். வீட்டில் ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கும், எப்படிச் சமைத்தால் பிடிக்கும் என்பது சிவகாமிக்கு அத்துப்படி. அவர்களுடைய விருப்பங்களைக் கூட அவள் மனதில் பதிய வைத்திருந்தாள்.
“அம்மா, எல்லாருக்கும் என்ன பிடிக்கும்னு உங்களுக்கு நல்லாத் தெரியுது,” என்று பேச்சைத் தொடங்கியவள், சற்றுத் தயங்கிவிட்டு, “அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமா?” என்றாள்.
“யாருக்கு?”
“முத்துவுக்கு.”
சிவகாமி கரண்டியை ஒரு நொடி நிறுத்தினாள். பிறகு சிரித்தாள்.
“அவனா? அவன் எல்லாத்தையும் சாப்பிடுவானே கண்ணு. அவனுக்குன்னு தனியா எதுவும் கிடையாது.”
“அப்படியில்லம்மா. அவருக்குன்னு ரொம்பப் பிடிச்ச உணவு ஏதாவது இருக்குமே? சின்ன வயசுல அம்மா இதைச் செஞ்சு கொடுங்கன்னு கேட்டிருப்பாரே?”
சிவகாமி யோசித்தாள். ஆனால் அவளால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
“அவன் சின்ன வயசுலயும் இப்படித்தான். என்ன வச்சாலும் சாப்பிடுவான். அரவிந்தன் மாதிரி இது வேணும், அது வேணும்னு அடம் பிடிக்க மாட்டான். கவிதா ஏதாவது கிடைக்கலைன்னா அழுதே வாங்கிடுவா. முத்து அப்படியெல்லாம் இல்ல. அமைதியா இருப்பான்.”
“அப்படியா?” என்று கேட்ட தாரணி, வெங்காயத்தை நறுக்கிக்கொண்டே சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு, “அவர் காலையில சில நேரம் பழைய சோறு சாப்பிடுவாரே… அது அவருக்குப் பிடிக்குமா?” என்று கேட்டாள்.
“ஆமா. அவன் பழைய சோறு சாப்பிடுவான். வீட்டுல மிச்சம் இருந்தா எடுத்துக்குவான்.”
“மிச்சம் இருக்கிறதால எடுத்துச் சாப்பிடுறாரா, இல்ல உண்மையிலேயே அதுதான் அவருக்குப் பிடிச்சிருக்கான்னு யோசிச்சிருக்கீங்களாம்மா?”
அந்தக் கேள்வி சிவகாமியைச் சற்றே தடுமாறச் செய்தது.
“என்ன சொல்ற தாரணி? அவன் சாப்பிடுறானே. அதனாலதான் பிடிக்கும்னு நினைச்சேன்.”
“சும்மாதான் கேட்டேன்மா…” என்றாள் தாரணி.
ஆனால் சிவகாமியின் முகம் மாறியிருந்தது.
“நீ என்னைக் குத்தம் சொல்றியா? நான் என் மூணு பிள்ளைகளையும் சமமாத்தானே பார்த்தேன்? யாரையும் குறை வச்சதில்லையே! முத்து எவ்வளவு கஷ்டப்படுறான்னு எனக்குத் தெரியாதா? இந்த வீட்டையே அவன்தானே தாங்கிக்கிட்டு இருக்கான்? அவன் மேல எனக்குப் பாசம் இல்லாத மாதிரி பேசுறியே!”
சிவகாமியின் குரல் உயர்ந்ததும் தாரணியின் கை அப்படியே நின்றது. அவள் எதிர்பார்த்திராத விதமாகப் பேச்சு வேறு திசைக்குச் சென்றிருந்தது.
“ஐயோ, அப்படியெல்லாம் இல்லம்மா. நான் உங்களைக் குறை சொல்லவே இல்ல. என்னைத் தவறா நினைச்சுக்காதீங்க.”
“அப்புறம் ஏன் இப்படியெல்லாம் கேக்குற? நான் இருபது வருஷமா இந்தக் குடும்பத்துக்காக உழைக்கிறேன். என் பிள்ளைகளுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு எனக்குத் தெரியாதா?”
“அம்மா…” என்று தாரணி ஏதோ சொல்லத் தொடங்கியபோது, சமையலறை வாசலில் பாட்டி வள்ளியம்மாள் நின்றிருந்தார்.
“என்ன சிவகாமி, சமையலறையில இவ்வளவு சத்தம்?”
“ஒண்ணுமில்ல அத்தை. சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.”
“பேச்சுக்கு எதுக்கு கண்ணைக் கசக்கணும்?” என்று கேட்டபடி உள்ளே வந்தவர், ஒரு ஸ்டூலில் அமர்ந்தார்.
பிறகு சிவகாமியைப் பார்த்தார்.
“ஒரு கேள்வி கேக்குறேன். கோபப்படாம யோசிச்சுச் சொல்லு. முத்துவுக்கு சின்ன வயசுல ரொம்பப் பிடிச்ச உணவு என்ன?”
சிவகாமி உடனே பதில் சொல்ல முயன்றாள். ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சில நொடிகள் கழித்து தலைகுனிந்தாள்.
“எனக்குத் தெரியல அத்தை.”
வள்ளியம்மாள் பெருமூச்சு விட்டார்.
“அதுதான் சிவகாமி… நீ கெட்டவ இல்ல. உன் பிள்ளைகள் மேல உனக்குப் பாசம் இருக்கு. ஆனா முத்து எதுவும் கேட்காத பிள்ளையா இருந்ததால, அவனுக்கு என்ன வேணும்னு நீயும் கேட்காம விட்டுட்ட. அவன் தன்னோட ஆசைகளைச் சொல்லாம வாழப் பழகிட்டான். நாமளும் அவனுக்கு என்ன பிடிக்கும்னு யோசிக்காம பழகிட்டோம்.”
அந்த வார்த்தைகள் சிவகாமியின் மனதில் ஆழமாக இறங்கின.
தாரணி அவளருகே சென்று தோளில் கை வைத்தாள்.
“அம்மா, உங்களை வருத்தப்படுத்தணும்னு நான் கேட்கல. நீங்க எல்லாரையும் இவ்வளவு அன்பா கவனிச்சுக்கிறீங்க. அதே மாதிரி அவருக்கும் என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கணும்னுதான் ஆசைப்பட்டேன்.”
சிவகாமி தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
“நீ சொல்றது சரிதான் கண்ணு,” என்றாள். ஆனால் அவளுடைய மனம் அந்த உண்மையை முழுமையாக ஏற்றுக்கொள்ள இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது.
அதற்குப் பிறகு பேச்சு அங்கேயே நின்றுபோனது. சமையல் மட்டும் வழக்கம்போல் தொடர்ந்தது.
சமையல் முடிந்ததும் தாரணி கிணற்றடிக்குச் சென்று அமர்ந்தாள். காலையில் நடந்ததை நினைத்தபோது அவளுக்கே சங்கடமாக இருந்தது. சிவகாமியின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பது அவளுடைய நோக்கமல்ல. ஆனாலும், தான் கேட்ட கேள்வி அவரை எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டாள்.
‘மாற்றம் மெதுவாக வர வேண்டும்’ என்று வள்ளியம்மாள் சொன்னது நினைவுக்கு வந்தது.
மதியத்திற்குள் அரவிந்தன் வந்து சேர்ந்தான். அவன் வந்ததும் வீடு மீண்டும் கலகலப்பானது. அவனுக்காகச் செய்த நாட்டுக்கோழிக் குழம்பு பரிமாறப்பட்டது. கவிதா தக்காளிக் குழம்பைச் சுவைத்துப் பாராட்டினாள். கருப்பையாவும் தனக்கான கஞ்சியைச் சாப்பிட்டார்.
சிறிது நேரம் கழித்து வயலிலிருந்து வந்த முத்துவைப் பார்த்த சிவகாமி, அவனிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தாள். வழக்கம்போல, “சாப்பிடு” என்று சொல்ல வந்தவள், இந்த முறை தன்னைத் தடுத்துக்கொண்டாள்.
“முத்து…”
“என்னம்மா?”
“உனக்கு இன்னிக்கு என்ன சாப்பிட வேணும்?”
அந்தக் கேள்வி முத்துவுக்குச் சற்று வித்தியாசமாக இருந்தது.
“என்னம்மா திடீர்னு இப்படிக் கேக்குற?”
“சும்மாதான் கேக்குறேன். உனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செஞ்சு தரலாம்னு…”
முத்து சிரித்தான்.
“வீட்டுல என்ன இருக்கோ அதுவே போதும்மா. எனக்கென்ன தனியா?”
அவனுடைய பதில் வழக்கமானதுதான். ஆனால் சிவகாமிக்கு மட்டும் அந்த வார்த்தைகள் புதிதாக ஏதோ ஒன்றை உணர்த்தின.
அன்று மாலை தாரணி ஒரு தட்டில் வடைகளை எடுத்துக்கொண்டு சிவகாமியிடம் சென்றாள்.
“அம்மா, காலையில நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். உங்க மனசு கஷ்டப்பட்டிருந்தா மன்னிச்சிடுங்க.”
வடையை வாங்கிக்கொண்ட சிவகாமி அவளுடைய கையைப் பற்றினாள்.
“நீ தப்பா எதுவும் கேட்கல கண்ணு. ஆனா நீ கேட்ட கேள்விதான் இப்போ என் மனசுக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு,” என்றாள் சிவகாமி.
தாரணி அவளுடைய கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டாள். இருவருக்கும் இடையே இருந்த தயக்கம் மெல்ல விலக, அந்தச் சிறிய தருணத்தில் ஒரு புரிதல் உருவானது.
அன்றிரவு வீடு முழுவதும் அமைதியான பிறகு, சிவகாமி மட்டும் சமையலறைக்குள் வந்து அமர்ந்தாள். அடுப்புகள் அணைந்திருந்தன. பாத்திரங்கள் எல்லாம் கழுவி வைக்கப்பட்டிருந்தன.
அவளுடைய நினைவுகள் மட்டும் இருபது வருடங்களுக்கு முன்பு சென்றன.
எட்டு வயது முத்து…
மண்ணில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும் அவன் முகம்… சாப்பாட்டுத் தட்டின் முன்னால் அமைதியாக அமர்ந்து சாப்பிடும் அவன்… தம்பிக்கும் தங்கைக்கும் ஏதாவது வேண்டும் என்றால் விட்டுக்கொடுக்கும் அவன்…
அவள் நினைவில் அரவிந்தனின் அடம்பிடிப்பும், கவிதாவின் அழுகையும் தெளிவாக இருந்தன. ஆனால் முத்து எதற்காகவாவது ஆசைப்பட்டு கேட்ட ஒரு சம்பவத்தைக்கூட அவளால் நினைவுபடுத்த முடியவில்லை.
அவள் நெற்றியைத் தடவிக் கொண்டாள்.
“என்ன கேட்டிருப்பான்? சின்ன வயசுல என் பிள்ளை என்ன கேட்டிருப்பான்?”
அவளுடைய கண்கள் கலங்கின.
தினமும் தன் மகனுக்குச் சாப்பாடு பரிமாறியிருக்கிறாள். அவன் உழைப்பதைப் பார்த்திருக்கிறாள். அவன் குடும்பத்துக்காக ஓடுவதையும் பெருமையாகப் பேசியிருக்கிறாள்.
ஆனால், அவனுக்குப் பிடித்தமான ஒரு உணவைக்கூட அவளால் நினைவுகூர முடியவில்லை.
அந்த இரவு சமையலறையின் இருளில் அமர்ந்திருந்த சிவகாமிக்கு, தன் மகன் சுமந்த பாரத்தைவிட அவன் சொல்லாமல் விட்ட ஆசைகள்தான் அதிகமாக வலித்தன.
தொடரும்…
