அந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் வீடு வழக்கத்தைவிட அமைதியாக இருந்தது.
சிவகாமியும் கருப்பையாவும் அருகிலிருந்த ஊரில் ஒரு உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் சென்றிருந்தார்கள். பாட்டி மாலை கோவிலுக்குச் செல்வதற்காக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். கவிதா மதுரையில் இருந்தாள். முத்து, மோட்டாரில் ஏற்பட்ட பழுதைப் பார்க்க மாணிக்கம் சித்தப்பாவுடன் வயலுக்குச் சென்றிருந்தான்.
தாரணி மட்டும் வீட்டில் இருந்தாள்.
காலையிலிருந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, துவைத்த துணிகளை மடிப்பதற்காகப் பின்வாசலில் இருந்த கொடியருகே அமர்ந்திருந்தாள். முத்துவுடன் ஏற்பட்ட மனக்கசப்பு ஓரளவு குறைந்திருந்தாலும், இருவருக்கும் இடையே முன்பிருந்த இயல்பு இன்னும் முழுமையாகத் திரும்பவில்லை.
அப்போது வாசலில் பேச்சுக்குரல் கேட்டது.
“வீட்டுல யாருமே இல்லையா?”
வேலுச்சாமி மாமாவின் குரல் அது.
“சிவகாமி அம்மா வெளியே போயிருக்காங்க மாமா. நீங்க உட்காருங்க. தண்ணி கொண்டு வர்றேன்,” என்று உள்ளிருந்தபடியே பதிலளித்தாள் தாரணி.
“பரவாயில்லம்மா. நாங்களே உட்கார்ந்துக்கிறோம். நீ உன் வேலையைப் பாரு.”
வேலுச்சாமியுடன் பாக்கியம் அத்தையும், ராஜாவும், முருகேசன் தாத்தாவும் வந்திருந்தார்கள். அனைவரும் திண்ணையில் அமர்ந்துகொண்டார்கள்.
தாரணி துணிகளை மடிக்கத் தொடங்கினாள். திண்ணைக்கும் பின்வாசலுக்கும் இடையே ஒரு சுவர் மட்டுமே இருந்ததால் அவர்களின் பேச்சு தெளிவாகக் கேட்டது.
“அப்புறம் மாமா, அந்தப் பணம் கிடைச்சுடுச்சா?” என்று கேட்டான் ராஜா.
“கிடைச்சிடுச்சு. நாப்பதாயிரம்! கேட்ட உடனே எடுத்துக் கொடுத்துட்டான் நம்ம முத்து. ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசல பாரு!”
வேலுச்சாமியின் சிரிப்பு தாரணியின் காதில் விழுந்தது.
““அவன் எப்பவுமே அப்படித்தான். மாமான்னு பாசமா ஒரு வார்த்தை சொல்லிட்டா போதும். நாம கேட்கிறதை மறுக்கவே மாட்டான்,” என்றாள் பாக்கியம்.
“அதுக்குத்தான் அவனை எப்படிக் கேட்கணும்னு தெரிஞ்சிருக்கணும்,” என்று சிரித்தான் ராஜா.
துணியை மடித்துக்கொண்டிருந்த தாரணியின் கைகள் அப்படியே நின்றன.
“அவனுக்குக் குடும்பம்தான் முக்கியம். அந்தப் பாசத்தைப் பயன்படுத்திக்கிட்டா நமக்கு என்ன கஷ்டம்?” என்று வேலுச்சாமி அலட்சியமாகச் சொன்னார்.
“அவன் படிச்சது பத்தாவதுதானே! வேற என்ன வேலைக்குப் போயிடப் போறான்? விவசாயத்தைப் பார்த்துக்கிட்டு இங்கேயே இருக்க வேண்டியதுதான். அதனாலதான் குடும்பத்துக்காக உழைக்கிறான்,” என்றான் ராஜா.
“அப்படிச் சொல்லாதப்பா. அவன் இந்தக் குடும்பத்துக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான்னு நமக்குத்தான் தெரியுமே!” என்று முருகேசன் தாத்தா இடையில் சொன்னார்.
“அதை நாங்க இல்லன்னு சொல்லலையே!” என்று உடனே மறுத்த வேலுச்சாமி, “அவனை நாங்க நல்லாத்தானே பார்த்துக்கிறோம். அவனுக்கு என்ன குறை வச்சிருக்கோம்? குடும்பத்துல எல்லாரும் அவனை மதிக்கிறோம். அதுவே அவனுக்குப் போதாதா?” என்றார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட தாரணியின் மனம் வலித்தது.
“ஆனா, அந்தப் பொண்ணைப் பார்த்தால்தான் எனக்குக் கவலையா இருக்கு. நல்லா படிச்சிருக்கா. அரசாங்க வேலை வேற. முத்துவைப் புரிஞ்சுக்கிட்டு வாழ்றாளான்னு தெரியல.”
“அதுதான் எனக்கும் தோணுது. அவ அடிக்கடி அவனை ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காளாமே!” என்று பாக்கியம் அத்தை பேச்சில் சேர்ந்துகொண்டாள்.
தாரணியின் விரல்கள் துணிக்குள் இறுகின.
தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதற்காக அவளுக்குக் கோபம் வரவில்லை. ஆனால், முத்துவைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அவன் கொஞ்சம் படிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இருந்தாலும் நாம அவனைப் பார்த்துக்கிறோமே! அதுவே அவனுக்குப் பெரிய விஷயம்தான்,” என்றார் வேலுச்சாமி.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தாரணியின் கண்கள் கலங்கின.
அவனைப் பார்த்துக்கொள்கிறார்களா?
பதின்மூன்று வருடங்களாக இந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு தேவையையும் பார்த்துக்கொண்டிருப்பது அவன்தானே! யாருக்குப் பணம் தேவைப்பட்டாலும் முதலில் நினைவுக்கு வருவது அவன்தானே! தன்னுடைய ஆசைகளையும் தேவைகளையும் ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் அவனைப் பற்றிப் பேச இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது?
அவளால் இனியும் அங்கே அமைதியாக இருக்க முடியவில்லை.
எழுந்து திண்ணைக்குச் சென்று ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அடுத்த நொடியே பாட்டியின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
அவசரப்படாதே. மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்து.
இப்போது அவள் கோபப்பட்டால், முத்துதான் நடுவில் சிக்கிக்கொள்வான். அவனுடைய குடும்பத்தினருக்கும் அவளுக்கும் இடையே இன்னொரு பிரச்சனை உருவாகிவிடும்.
தன்னை அடக்கிக்கொண்டு துணிக்கூடையை எடுத்தாள். பின்வாசல் வழியாக வெளியேறியவள், வயலை நோக்கி வேகமாக நடந்தாள்.
—
வயலின் ஓரத்தில் மோட்டார் அருகே முத்து குனிந்து வேலை செய்துகொண்டிருந்தான். மாணிக்கம் சித்தப்பா அவனுக்குத் தேவையான கருவிகளை எடுத்துக் கொடுத்தார்.
வெயிலில் நனைந்திருந்த அவனுடைய சட்டை முதுகில் ஒட்டியிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் பழுதைச் சரிசெய்வதில் கவனமாக இருந்தான்.
தாரணி சற்று தொலைவில் நின்று அவனைப் பார்த்தாள்.
தன்னைப் பற்றியும், தன் படிப்பைப் பற்றியும், தன் வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். ஆனால், இத்தனை வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்த மனிதனைப் பற்றிப் பேச அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அவள் கண்கள் நிறைந்தன.
அருகிலிருந்த மரத்தடியில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டாள். சில நிமிடங்கள் அழுதுவிட்டு, தன்னைச் சமாளிக்க முயன்றாள்.
“தாரணி!”
முத்துவின் குரல் கேட்டதும் அவசரமாகக் கண்ணீரைத் துடைத்தாள்.
அவன் கையில் சேறு படிந்த துணியுடன் அவளருகே வந்தான்.
“என்ன ஆச்சு? ஏன் இங்க உட்கார்ந்திருக்கே? உடம்பு ஏதாவது சரியில்லையா?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல. கொஞ்சம் தலைவலி. வீட்டுக்குள்ள இருக்கப் பிடிக்கல. அதான் காத்து வாங்கலாம்னு வந்தேன்.”
அவளைச் சில நொடிகள் பார்த்தவன், மேலும் எதுவும் கேட்காமல் அருகில் அமர்ந்தான்.
“தண்ணி குடிக்கிறியா?”
தன் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டினான்.
அந்தச் சிறிய அக்கறை அவளுடைய மனதை இன்னும் கனக்கச் செய்தது.
தண்ணீரைக் குடித்துவிட்டு அவனிடம் நீட்டினாள்.
“வேலை முடிஞ்சிடுச்சா?”
“இன்னும் கொஞ்சம் இருக்கு. சித்தப்பா பார்த்துக்கிட்டு இருக்காரு.”
சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், “உங்களுக்கு இந்தக் குடும்பத்தைப் பத்தி என்ன தோணுது?” என்று கேட்டாள்.
“என்ன திடீர்னு இப்படிக் கேக்குற?”
“சும்மாதான் கேட்டேன்.”
முத்து லேசாகச் சிரித்தான்.
“ நல்ல குடும்பம்தான். எல்லாருக்கும் என் மேல அன்பு இருக்கு. சில நேரம் ஏதாவது அவசரத்துல பேசிடுவாங்க. ஆனா, அதையெல்லாம் மனசுல வெச்சுக்க முடியுமா? அவங்க என்னை நல்லாத்தான் பார்த்துக்கிறாங்க,” என்றான் முத்து, இயல்பான புன்னகையுடன்.
அவன் அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது முகத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அந்த நம்பிக்கையைப் பார்த்த தாரணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான எண்ணங்களை அவன் அறியாமல் இருக்கிறானா? இல்லை, தெரிந்தும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கப் பழகிவிட்டானா?
“சரி, நீங்க வேலையைப் பாருங்க. நான் வீட்டுக்குப் போறேன்,” என்றாள்.
“தனியா போயிடுவியா?”
“போயிடுவேன்.”
அவன் எழுந்து மீண்டும் மோட்டார் அருகே சென்றான். தாரணி மட்டும் ஒருமுறை திரும்பி அவனைப் பார்த்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
—
வீட்டிற்கு வந்ததும் துணிகளை மடிக்கத் தொடங்கினாள். ஆனால் அவளுடைய எண்ணங்கள் மட்டும் திண்ணையிலேயே நின்றிருந்தன.
சிறிது நேரத்தில் உறவினர்கள் பேசும் சத்தம் குறைந்தது. அவர்கள் புறப்படத் தயாரானார்கள்.
“தாரணி கண்ணு, ஒரு டம்ளர் தண்ணி கொடு மா,” என்று சமையலறை வாசலில் வந்து நின்றாள் பாக்கியம் அத்தை.
தாரணி எதுவும் பேசாமல் தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.
“நீ ரொம்ப நல்ல பொண்ணு. எங்க முத்து கொடுத்து வெச்சவன்,” என்று புன்னகைத்தாள் பாக்கியம்.
அவளுடைய முகத்தைப் பார்த்த தாரணிக்கு, சற்று முன்பு பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.
“நன்றி அத்தை,” என்று மட்டும் சொல்லிவிட்டாள்.
அந்தச் சிரிப்புக்குப் பின்னால் தன் மனதில் எழுந்த கேள்விகளையும் கோபத்தையும் அவள் மறைத்துக்கொண்டாள்.
அனைவரும் புறப்பட்டுச் சென்ற பிறகு முருகேசன் தாத்தா மட்டும் வாசலில் தயங்கி நின்றார்.
“மகளே, கொஞ்சம் பேசணும். இங்கே வாம்மா,” என்று அழைத்தார் முருகேசன் தாத்தா.
தாரணி அவரருகே வந்து நின்றாள்.
“நீ அவங்க பேசினதைக் கேட்டிருப்பேன்னு நினைக்கிறேன். அதையெல்லாம் கேட்டுட்டு உன் மனசு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும்னு எனக்குப் புரியுது. முத்து அப்படிப்பட்ட பையன் இல்லம்மா. யாருக்கும் எந்தக் குறையும் வைக்கக் கூடாதுன்னு நினைச்சு வாழுறவன். அவன் செய்யறதை எல்லாரும் அவனோட கடமையா எடுத்துக்கிறாங்களே தவிர, அவனுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்குன்னு யோசிக்கிறதில்லை.”
தாரணி எதுவும் பேசாமல் அவரைப் பார்த்தாள்.
“நீ அவனுக்காகக் கவலைப்படுறது எனக்குப் புரியுது. ஆனா, எதையும் அவசரப்பட்டுச் செய்யாதே. அவன் மனசு கஷ்டப்படுற மாதிரி எதுவும் நடந்துடக் கூடாது. அதே நேரம், அவனுக்காக நீ நினைக்கிறதை விட்டுடவும் வேண்டாம். பொறுமையா இரு. எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மாறும்.”
அவருடைய அக்கறையான பேச்சில் தாரணியின் கண்கள் கலங்கின.
“சரிங்க தாத்தா,” என்று மெதுவாகத் தலையசைத்தாள்.
“சரி மா. நான் கிளம்புறேன்,” என்று சொல்லிவிட்டு அவள் தலையை அன்பாகத் தடவிக்கொடுத்தார் முருகேசன்.
அவர் கிளம்பிச் செல்வதைப் பார்த்தபடி நின்ற தாரணியின் மனதில், முத்துவைப் பற்றிய கவலைக்கு நடுவே சிறு ஆறுதல் பிறந்தது.
கிளம்பினார்.
—
அன்று இரவு முத்து வீடு திரும்பியதும் வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு உணவருந்தினான். தாரணி அவனிடம் எதையும் கேட்கவில்லை. அவனும் அவளுடைய மனநிலையை அறியாமல் இயல்பாகவே இருந்தான்.
அவன் உறங்கச் சென்ற பிறகு தாரணி தன் குறிப்பேட்டை எடுத்தாள்.
சில நொடிகள் பேனாவைப் பிடித்தபடி யோசித்தவள், மெதுவாக எழுதினாள்.
“இன்று அவர் இல்லாத திண்ணையில் அவரைப் பற்றிப் பேசினார்கள். அவர் முன்னால் அன்பைக் காட்டுபவர்கள், அவர் இல்லாதபோது அவருடைய உழைப்பையும் அமைதியையும் பலவீனமாகப் பார்க்கிறார்கள்.
இத்தனை நாளும் அவர் எல்லோருக்காகவும் நின்றிருக்கிறார். இனிமேல் அவர் தனியாக நிற்க நான் விடக்கூடாது.
ஆனால், அவருக்காக நான் பேசுவது மட்டும் போதாது. ஒருநாள் அவரும் தனக்காகப் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.”
எழுதி முடித்தவள் குறிப்பேட்டை மூடினாள்.
அந்த இரவு அவளுக்குள் ஒரு புதிய தீர்மானம் பிறந்திருந்தது.
முத்துவைச் சுற்றியிருக்கும் உறவுகளை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆனால், அவனுடைய உழைப்பைத் தங்களுக்கான உரிமையாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள், அவனும் உணர்வுகளும் ஆசைகளும் கொண்ட ஒரு மனிதன் என்பதை ஒருநாள் புரிந்துகொள்ள வேண்டும்.
அதற்காக அவள் காத்திருக்கத் தயாராக இருந்தாள்.
ஆனால், இனிமேல் அவனுடைய அமைதியை மட்டும் நம்பி எதையும் விட்டுவிடப் போவதில்லை.
அவன் சுமந்த உறவுகளுக்கு நடுவே, அவனுக்காகவும் ஒரு உறவு இருக்கிறது என்பதை அவள் உணர்த்தப் போகிறாள்.
தொடரும்…
