“டேய்… நில்லுடா அங்கே! கையில் கிடைச்ச உனக்கு இருக்கு இன்னைக்கு!” என்று அவள் ஓடியவேகத்தில், கடற்கரையோரப் பாறைகளுக்கு இடையே இருந்த ஒரு பெரிய மணல் பள்ளத்தை கவனிக்கத் தவறிவிட்டாள்.
திடீரெனக் கால் தடுமாறி, அந்த ஆழமான பள்ளத்திற்குள் சறுக்கி விழுந்தாள்!
“ஐயோ… அக்கா!” என்று பதறிய அந்தச் சிறுவன், பயத்தில் அலறியபடியே திரும்பிப் பார்த்துக் கத்தினான்.
அதே வினாடி… பாறைகளின் நிழலில் நிமிர்ந்து நின்றிருந்த ஒரு பிரம்மாண்டமான குகையின் இருளிலிருந்து, ஒரு வலிமையான, கம்பீரமான கரம் சட்டென்று முன்னோக்கி நீண்டது!
அந்தக் கை, பள்ளத்தில் விழுந்து தவித்தவளைப் பற்றி, ஒரே தூக்காகத் தூக்கி மேலே நிறுத்தியது.
அப்படித் தூக்கிவிடும் அந்தச் சில வினாடிகளில்… அவளது இடுப்பு வரை சரிந்திருந்த புடவை விலக, அவளது காலில் அணிந்திருந்த அந்தப் பழமையான வெள்ளித் தண்டையும், வலது முதுகில் இருந்த மச்சம் மட்டுமே ஆதவனின் கண்களுக்குத் தெளிவாக கனவில் தெரிந்தது! இப்போதும் அவளது முகம் அந்த இருளில் அவனுக்குப் புலப்படவில்லை
“ஏய் முத்து… பார்த்து வர மாட்டியாடி?”
அந்தக் குரலில் இருந்த அதிகாரமும் கம்பீரமும் அவளைச் சுட, “முதல்ல என் கையை விடுங்கள்!” என்று கோபத்துடன் சொன்னாள்.
ஆஹான் என்றவனது இரும்பு போன்ற பிடியிலிருந்து தன் கையைத் திமிறி விடுவித்துக்கொண்டவள், திகைப்போடும் பயத்தோடும் அங்கிருந்து மணலில் வேகமாக ஓடத் தொடங்கினாள்.
அவள் ஓடும் ஒவ்வொரு அடிக்கும், அவளது காலில் இருந்த அந்த வெள்ளித் தண்டையிலிருந்து ‘ஜல்… ஜல்…’ என்ற சத்தம் அந்த இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது.
அந்தச் சத்தத்தைக் கேட்டபடியே அந்த ஆண், மீண்டும் தன் கம்பீரக் குரலில் உரக்கக் கூப்பிட்டான்:
“ஏய்… முத்தழகு!”
அந்தக் கர்ஜனை போன்ற அழைப்பு காற்றில் எதிரொலிக்க… ஆதவனோ உடம்பெல்லாம் வியர்த்து விறுவிறுக்கத் ‘திடுக்கிட்டு’ கட்டிலில் எழுந்து உட்கார்ந்தவன், வேகமாக மூச்சு வாங்கியபடி தன் அறையைச் சுற்றிப் பார்த்தான்.
ஒரு நொடி அவனுக்கு ஒன்னும் புரியவில்லை.பின்னர் கனவு என்பதை உணர்ந்தவன், “முத்தழகு… முத்தழகு… யாரு இவ? ஏன் எனக்குத் திரும்பத் திரும்ப இந்தக் கனவு வருது? அந்த ஆண் குரல்… அது ‘முத்து’ன்னு கூப்பிட்டப்போ என் நெஞ்சே அசைஞ்சு கொடுக்குதே! அந்தத் தண்டைக்கால் சலங்கை, அந்த உருவத்தின் பின் தோற்றம்… திருச்சி வீதியில நான் பார்த்த அவளே தான் இது!” என்ற ஆதவன் தலையைக் கோதியபடி திகைத்துப் போனான்.
தன் கனவில் வரும் அந்த மீனவப் பெண்ணின் பெயர் ‘முத்தழகு’ என்பதும், அவளைக் காப்பாற்றும் அந்த கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரன் ‘யார்?’ என்கிற உணர்வும் அவனது அடிமனதில் மெல்லக் கனலாய எரியத் தொடங்கியது!
நிச்சயதார்த்தத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்ததால், வீடே பரபரப்பானது.
அன்று காலை, பரமு தன் மனைவி சீதாவிடம், “ஏண்டி சீதா… நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் பத்து நாள்தான் இருக்கு. பொண்ணுக்கு முகூர்த்தப் புடவை எடுத்து, அதுக்கு ஏத்த மாதிரி ஜாக்கெட் எல்லாம் தைக்கக் கொடுக்கணும்ல… வர்ற புதன்கிழமை நாம புடவை எடுக்கப் போகலாமா?” என்று கேட்டார்.
“ஆமாங்க… நீங்க சொல்றதும் சரிதான். வாங்க, முதல்ல எங்க அப்பா வீட்டுக்குப் போய் விஷயத்தைச் சொல்லிட்டு வந்துடலாம்,” என்றாள் சீதா.
சீதா அதே ஊரில்தான் வாக்கப்பட்டு வந்திருந்தாள் என்றாலும், நினைத்த நேரமெல்லாம் தன் பிறந்த வீட்டிற்கு ஓடிப் போய்விடும் பழக்கம் அவளுக்குக் கிடையாது. தன் கடமைகளை முடித்துவிட்டு எப்போதாவதுதான் செல்வாள்.
அதனால், மகளும் மாப்பிள்ளையும் எதிர்பாராமல் வீட்டின் வாசலில் வந்து நிற்பதைப் பார்த்ததும் சீதாவின் அம்மா சாலா பாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி!
அவளது தந்தை தம்புசாமி, “வாம்மா சீதா… வாப்பா பரமு!” என்று அன்போடு வரவேற்று உட்கார வைத்தார்.
சீதாவின் அண்ணன் ஆனந்த் வழக்கம்போல அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.
வீட்டில் இருந்த அண்ணி முத்து, “வாமா சீதா, வாங்கண்ணா…” என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு, சூடாகத் டீ போட்டுக் கொண்டுவந்து கொடுத்தார்.
டீ குடித்துக்கொண்டே வந்த விஷயத்திற்கான பேச்சைத் தொடங்கினர் பரமு, “அத்தை… மருமகளுக்குப் பட்டுப்புடவை எடுக்க புதன்கிழமை போகலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்,” என்றார்.
அதைக் கேட்டதும் சாலா பாட்டி கண்கள் பனிக்க, “நம்ம குடும்பத்துல அடுத்த தலைமுறைக்கு நடக்குற முதல் கல்யாணம்… என் அண்ணன் வீட்டு விசேஷம் அந்த ஆத்தா புண்ணியத்தில் நல்லபடியா, நடக்கணும்!” என்று மனமார சொன்னார்.
“சரிங்க அத்தை… உங்க ஆசீர்வாதம் போல எல்லாம் நல்லபடியா நடக்கும்,” என்று பரமுவும் புன்னகையோடு சொன்னார்.
அங்கிருந்தபடியே தன் போனை எடுத்த பரமு, சுதாகருக்கு கால் பண்ணியவர், “யோவ் சுதாகரு… நிச்சயதார்த்தத்துக்கு நாள் கம்மியா இருக்குல்ல. வர்ற புதன்கிழமை ரெண்டு குடும்பமும் சேர்ந்து பட்டுப்புடவை எடுக்கப் போகலாமா?” என்று கேட்க, சுதாகரும், “அட தாராளமா போவோம் பரமு! நாங்களும் தயாரா இருக்கோம்,” என்றார்.
மேலும் சிறுது நிமிடங்கள் மாமனார் வீட்டில் இருந்து விட்டு மனைவியுடன் தங்களது வீட்டிற்கு வந்த பரமு யார் யார் கூப்பிடணும் என்று லிஸ்ட் போடலானார்.
அன்று இரவு மகன் வீட்டிற்கு வந்ததும் விஷயத்தைச் சொன்னபோது, ஆதவன் லேசாகத் தயங்கி, “அப்பா… புதன்கிழமை காலையில எனக்கு பேக்டரியில் ஒரு முக்கியமான வேலை இருக்குப்பா. நீங்க எல்லாரும் போயிட்டு வாங்க,” என்று சொல்லிவிட்டான்.
தன் மனதிற்குள் இருக்கும் குழப்பத்தாலும், கனவின் நினைவுகளாலும் அவனால் அவர்களோடு உடனடியாக வர முடியவில்லை.
புதன்கிழமை அதிகாலை…
பட்டுப்புடவைகளுக்குப் பெயர் பெற்ற திருபுவனத்திற்குச் செல்ல இரு குடும்பத்தாரும் புறப்பட்டனர்!
சுதாகர், கலை, ஆர்கலி, பரமு, சீதா, அருண், அருணின் பெற்றோர் மற்றும் தாத்தா தம்புசாமி, சாலா பாட்டி என இரு வீட்டாரின் மூத்த தலைமுறையும் இளைய தலைமுறையும் இணைந்து ஒரு பெரிய காரில் திருபுவனத்தை நோக்கிப் பயணமாயினர்.
காரில் கமலியின் அருகில் உட்கார்ந்திருந்த அருண், “என்னடா… மாப்பிள்ளை வரலன்னு ஒரே சோகமா?” என்று கலாய்க்க, கமலி வெட்கத்தோடு தலையை குனிந்து கொண்டு மௌனமாக சிரித்தாள்.
அடுத்த சில மணி நேரத்தில் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரம்மாண்டமான விற்பனையகத்திற்குள் அனைவரும் நுழைந்தனர். சுற்றிலும் கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில், தங்க ஜரிகை இழையோடிய பட்டுப்புடவைகள் அடுக்கப்பட்டிருந்தன.
சாலா பாட்டியும் சீதாவும் கமலியை நடுவில் உட்கார வைத்து, ஒவ்வொன்றாகப் புடவைகளை எடுத்துப் பார்க்கத் தொடங்கினர். அடர் சிவப்பு, மாம்பழ மஞ்சள், மயில் கழுத்து நீலம் எனப் பல வண்ணங்களில் புடவைகள் விரிக்கப்பட… பெரியவர்கள் அனைவரும் கமலிக்கு ஏத்த மாதிரி, பாரம்பரியமும் கம்பீரமும் நிறைந்த ஒரு அழகான முகூர்த்தப் பட்டுப்புடவையைத் தேர்வு செய்து அதையே வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தனர்.
இரண்டு குடும்பங்களிலும் நிச்சயதார்த்தத்திற்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ஆனால், இதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாதது போல ஆதவன் தனது வழக்கமான தொழிலிலேயே முழு மூச்சாக பிஸியாக இருந்தான்.
அருணும், “இப்ப சீசன் நேரம்டா… பிசினஸையும் கவனிக்கணும். யாராச்சும் ஒருத்தர் கடையையும் வேலையையும் பார்த்தாதானே சரிப்படும்,” என்று நிலைமையைப் புரிந்துகொண்டு, தன் மாமா பரமுவோடு சேர்ந்து நிச்சயதார்த்த வேலைகளில் களமிறங்கினான்.
சொந்தக்காரர்களை அழைப்பதற்கும், சீர் வரிசைப் பொருட்களை வாங்குவதற்கும் அருணும் பரமுவும் ஊர் ஊராக அலைந்து திரிந்து காரியங்களைச் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தனர்.
இன்னொரு பக்கம், கமலியின் அண்ணன் கதிருக்குத் தன் தங்கையின் நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற பெரும் கவலை. அவனது மனைவி தற்போது ஒன்பது மாதக் கர்ப்பிணியாக இருப்பதால், இந்தச் சூழலில் அவளை விட்டுவிட்டு வர முடியாத சூழ்நிலை.
கதிர் போனில் வருத்தப்பட, சுதாகரும் கலையும் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்: “விடுப்பா… பொண்டாட்டி பிள்ளை ஆரோக்கியம் தான் முக்கியம். நிச்சயதார்த்தத்துக்கு வர முடியலைன்னா என்ன, கல்யாணத்துக்குப் பிரம்மாண்டமா எல்லாரும் ஒண்ணா சேர்ந்துடலாம்!” என்று சமாதானப்படுத்தினர்.
கமலியோ தன் கல்லூரித் தோழிகள் மூவரிடமும், “நிச்சயதார்த்தத்துக்கு இரண்டு நாளுக்கே முன்னாடியே எல்லாரும் கண்டிப்பா வந்துடனும்!” என்று உரிமையோடு அன்புக் கட்டளையிட்டாள்.
அதற்கு அவளது தோழிகள், “அடி போடி! எங்களுக்கு அங்க வர்றதை விட வேற என்னடி வேலை? ஆனா ஒண்ணு… எங்களுக்கு விதவிதமா மீனு, நண்டு, இறால்னு சமைச்சு வைக்கச் சொல்லு! அப்புறம் பார் நாங்க வர்ற அழகை!” என்று போனில் சொல்லிச் சிரிக்க, கமலியும் “நிச்சயமாக… நீங்க கேட்டு இல்லன்னு சொல்வேனா!” என்று சிரித்தபடியே சம்மதித்தாள்.
சொன்னபடியே தோழிகள் மூவரும் தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு, பூம்பாறைக்கு வந்து சேர்ந்தனர். கமலியுடைய பால்ய தோழியான பவானியும் அவர்களுடன் வந்து சேர்ந்துகொள்ள, அந்த வீடோ தோழிகளின் சிரிப்பொலியாலும், கலகலப்பான பேச்சினாலும் ஒரு குட்டித் திருவிழா போலக் குதுகலமாக மாறிக் காட்சியளித்தது!
கமலியின் தோழிகள் மூவரும் அவளைச் சூழ்ந்துகொண்டு, “ஏடி! உன் மாப்பிள்ளையோட போட்டோவைக் காட்டுடி!” என்று அடம்பிடித்தனர்.
கமலியோ வெட்கத்துடன் சிரித்தபடியே, “நிஜமாவே என்கிட்ட இல்லடி… கடந்த பத்து நாளா நான் உங்ககிட்ட என்ன கதை சொன்னேனோ அதுதான் உண்மை. அவரோட போட்டோ என்கிட்ட இல்ல!” என்றாள்.
தோழிகள் அதை நம்ப மறுத்து, “பொய் சொல்லாதடி… காமி உன் போனை! நாங்களே செக் பண்றோம்,” என்று அவளது போனைப் பிடுங்கித் தேடிப் பார்த்தனர். ஆனால், அதில் ஆதவனைப் பற்றிய எந்த ஒரு புகைப்படமோ, விவரமோ இல்லாததைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
பவானியும் கூட, “இவ நிஜமாதான் சொல்றா… ஆனா எனக்கு நம்பவே முடியலடி! ஒருவேளை ரகசியமா ஏதாச்சும் லேடிஸ் பேர் போட்டு மெசேஜ்ல பேசிக்கிறியாடி?” என்று கலாய்க்க, கமலி “அடி பாவிகளா!” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
“இப்ப இருக்குற காலத்து பொண்ணுங்க அதானேடி பண்ணுது!” என்று தோழிகள் அனைவரும் கலகலவெனச் சிரித்தனர்.
நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள் இரவு…
நிலவு பிரகாசமாக வீசிக்கொண்டிருக்க, வீட்டின் திறந்தவெளி முற்றத்தில் கமலி படுத்துக்கொண்டிருந்தாள். அவளது இரு பக்கமும் அமர்ந்து தோழிகள் ஆளுக்கு ஒரு கையில் அழகாக மருதாணியை வைத்துக்கொண்டிருந்தனர். குளிர்ந்த நிலவொளியில், மருதாணி மணக்க, தோழிகளுடன் அரட்டையடித்துப் பேசுவது ஆர்கலிக்கு ஒரு தனி சுகமாக, மனதிற்கு அமைதியைத் தருவதாக இருந்தது.
மறுநாள் விடியலும் வந்தது!
நிச்சயதார்த்த நாளான அன்று, தூரத்துச் சொந்தங்கள் அனைவரும் சுதாகரின் வீட்டிற்கு வந்து சேரத் தொடங்கினர்.விசேஷம் டவுனில் இருக்கும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சமையலுக்கான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் எல்லாம் மண்டபத்திற்குச் சரியாகப் போய் சேர்ந்துவிட்டதா என்பதைச் சுதாகரின் நம்பகமான நண்பர் வேலுவும், அவரோடு சேர்ந்த இன்னும் மூவரும் பொறுப்பெடுத்துப் பார்த்துக் கொண்டனர். இதனால் சுதாகருக்கு எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் பெரிய நிம்மதியாக இருந்தது.
நேரம் கடந்து செல்ல, மதிய வேளையிலேயே கமலியை அழைத்துக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தேடல் தொடரும்…
