இரண்டு நாட்கள் ஓய்வுக்குப் பிறகு, கமலியும் உடல்நலம் தேறி ஓரளவுக்குப் பழைய நிலைமைக்கு வந்திருக்க, அந்த வீடும் மீண்டும் பழையபடி கலகலப்பாக மாறியது.
நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்கள் மிக வேகமாக உருண்டோடி விட்டன.
ஆனால், இந்த இரண்டு மாத காலத்தில் ஒருமுறை கூட ஆதவனும் கமலியும் நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை. ஏன், அட்லீஸ்ட் போனில் கூட ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை!
நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு ஜோடிக்கு இடையே இருக்க வேண்டிய எந்தவொரு தொடர்பும் இல்லாமல், இரு துருவங்களாகவே நகர்ந்து கொண்டிருந்தனர்.
அன்று சுதாகர் கடலுக்குச் செல்ல வேண்டிய நாள். காலையிலேயே கிளம்பும் பரபரப்பில் இருந்தவர், வலைகளில் சில இடங்களில் பிளவுகள் இருந்ததால் அதைச் சரிசெய்யும் வேலையில் ஈடுபட்டார். அதனால், “மதிய சாப்பாட்டை சமைச்சு எடுத்துட்டு வந்துடுங்க” என்று வீட்டில் சொல்லிவிட்டு கடற்கரைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
வீட்டில் கலையும் மதிய உணவைச் சமைத்து முடித்துத் தயார் நிலையில் வைக்க, “அம்மா, அப்பாவுக்கு நான் சாப்பாடு கொண்டு போய்க் கொடுக்குறேன்மா” என்றாள் கமலி.
சரி என்றவர் சுடச்சுடச் சமைத்த சாதத்தையும் மணமணக்கும் குழம்பையும் தனித்தனி வாளியில் கலை போட்டு மூடி கொடுக்க, அதைத் தூக்கியபடி கடற்கரையை நோக்கிச் சென்றாள்.
கடற்கரையோரம் அடர்ந்து படர்ந்திருந்த சவுக்குத் தோப்பின் நிழலில், மறைவாக இருந்த குடிலின் கீழே உட்கார்ந்து சுதாகர் தீவிரமாக வலையைச் சரி பண்ணிக் கொண்டிருப்பது அவளது கண்ணில் பட்டது. அவரோடு சேர்ந்து மற்ற மீனவ நண்பர்களும் வேலையில் மூழ்கியிருந்தனர்.
கமலி அருகே வருவதைப் பார்த்ததும், அங்கு இருந்தவர்கள் சிரித்தபடியே நலம் விசாரிக்க, அவளும் புன்னகையோடு சுதாகரிடம் வந்தாள்.
“என்னத்தா… அம்மா இன்னைக்கு என்ன குழம்பு வச்சிருக்கா?” என்று சுதாகர் ஆசையோடு கேட்க, “அம்மா இன்னைக்குக் கருவாட்டுக் குழம்பு வச்சிருக்காங்கப்பா…” என்றாள் கமலி.
“அப்படி போடு! கருவாட்டுக் குழம்பா… சூப்பரூ!” என்று சுதாகர் சிரிக்க, உடனே பக்கத்தில் இருந்த வேலு, “இந்தா கமலி, உன் அத்தை இன்னைக்கு கோழிக்கறி சமைச்சுக் கொடுத்தனுப்பியிருக்கா… நீ கொஞ்சம் எடுத்துட்டு போறியா?” என்று அன்போடு கேட்டார்.
அவரது அக்கறையைக் கண்டு நெகிழ்ந்தவள், “ஐயோ இருக்கட்டும் மாமா… வீட்ல குழம்பு இருக்கு, நீங்க சாப்பிடுங்க” என்று அழகாகச் சிரித்தபடியே மறுத்தாள். சவுக்குத் தோப்பின் குளிர்ந்த காற்றில் அவளது சிரிப்பும், அந்த மனிதர்களின் அன்பான பேச்சும் அந்த மதியப் பொழுதை மேலும் அழகாக மாற்றியது.
வலையையெல்லாம் ஒவ்வொன்றாகச் சரிபார்த்து முடித்த பிறகு, சுதாகரும் அவரது தோழர்களும் கடலுக்குள் இறங்கத் தயாரானார்கள்.
அவர்கள் கிளம்புவதைப் பார்த்த கமலி, “அப்பா, நான் கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்து காற்றாட வேடிக்கை பார்த்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறேன்பா” என்றாள்.
பொதுவாகக் கடற்கரையில் அடிக்கடி ஆட்களின் நடமாட்டம் இருந்தாலும், அது அவர்களின் சொந்த ஏரியா என்பதால் சுதாகருக்கும் பயமேதும் தோன்றவில்லை.
“சரிம்மா… பத்திரமா இருந்துட்டு கொஞ்ச நேரத்துல வீட்டுக்குப் போயிடு” என்று சொல்லிவிட்டு, சுதாகர் தனது நண்பர் வேலு மற்றவர்களோடு படகில் ஏறி அலையைக் கிழித்துக் கொண்டு ஆழ்கடலை நோக்கிச் சென்றனர்.
கடலின் நீலப் பரப்பில் தனது அப்பாவின் படகு பயணித்து, கண்ணுக்குத் எட்டிய தூரம் வரை சென்று மெல்ல மறைந்து போகும் வரை கமலி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
படகு முற்றிலும் மறைந்த பிறகு, கடற்கரையோரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்தப் பழைய வலை மேட்டின் மீது போய் அமர்ந்து கொண்டாள். சவுக்குத் தோப்பின் குளிர்ந்த காற்றும், கரையை வந்து முத்தமிட்டுச் செல்லும் அலைகளின் ஓசையும் அவளுக்குள் ஒரு அமைதியைக் கொடுத்தன.
அலைகள் எழும்பி அடங்கும் அழகையும், தூரத்தில் பறக்கும் கடற்பறவைகளையும் வேடிக்கை பார்த்தபடி, கமலி அப்படியே மணல் வெளியில் தனியாக அமர்ந்திருந்தாள்.
நேரமும் தன் போக்கில் கடந்து சென்று கொண்டிருக்க, கமலியோ கடற்கரை வலை மேட்டின் மேல் உட்கார்ந்தபடி, கடலின் அலைகளைத் தவிர வேறு எதிலும் தன் கவனத்தைச் செலுத்தாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
கம்பெனிக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் மீன் தேவைப்பட்டதால், ஒரு வாரத்திற்கு முன்னரே சுதாகரிடம் சொல்லி அனுப்பியிருந்தார் பரமு.
ஆனால், அதற்கான பணத்தை சுதாகரிடம் இன்னும் கொடுக்கவில்லை என்பதை நினைவுபடுத்திய பரமு, “அந்தப் பக்கம் போற வேலையிருக்குல்ல, சுதாகருக்குக் கொடுக்க வேண்டிய மீனுக்கான பணத்தைக் கையோட கொடுத்துட்டு வந்துடுப்பா” என்று மகனிடம் சொல்லி அனுப்பினார்.
பணத்தை எடுத்துக்கொண்டு ஆதவனும் காரில் தனது மாமனார் வீட்டிற்கு வந்தான். வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு கலை எட்டிப் பார்த்தாள். காரில் இருந்து இறங்கி வரும் தனது மருமகனைக் கண்டதும் கலைக்கு முகம் மலர்ந்தது.
“வாங்க மாப்பிள்ளை… நல்லா இருக்கீங்களா?” என்று பாசத்தோடு நலம் விசாரித்தாள் கலை.
“நான் நல்லா இருக்கேன் அத்தை, நீங்க எப்படி இருக்கீங்க?” என்றவன்,
” அப்புறங்கத்தை, என்னை ஆதவன்னே சொல்லுங்கள்”, இப்படி மாப்பிள்ளை மாப்பிள்ளைனு வேண்டாமென சிரித்தபடி ஆதவன் சொல்ல, அச்சோ…!, “நான் தம்பினு வேண்டுமென்றால் சொல்லுறேன்” என்று சிரித்தார்.
“மாமாவுக்கு மீனுக்கான பணம் கொடுக்க வேண்டியிருந்துச்சு, அதை கொடுத்துட்டுப் போலாம்னு வந்தேன்” என்றான்.
“அப்படியாப்பா… மாமா இப்பதான் மீன் பிடிக்கக் கடலுக்குப் போனாரு. வலையில ஏதோ பிஞ்சு போயிருந்ததாம், அதைச் சரி பண்ணிட்டுப் போறேன்னு போனாரு. கமலியும் அவருக்குச் சாப்பாடு எடுத்துட்டு அங்கதான் போயிருக்கா…” என்றாள் கலை.
“அப்படியா…” என்று தலையசைத்த ஆதவன், “சரிங்க அத்தை” என்று சொல்லி, பணத்தைக் கலையிடம் நீட்டினான். ஆனால் கலையோ, “நீ மாமாகிட்டயே நேரடியா கொடுத்திடுப்பா…” என்று அன்புடன் மறுத்துவிட்டாள்.
“சரி அத்தை, நான் கடற்கரை பக்கமா போயி மாமாவைப் பார்த்துப் பணத்தைக் கொடுத்துட்டு அப்படியே கிளம்புறேன்” என்று கூறிய ஆதவன், காரைத் திருப்பிக் கொண்டு கடற்கரைக்குச் செல்லும் பாதைக்கு வந்தான். காரை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு, இறங்கி கடலை நோக்கி இருக்கும் பாதையில் நடந்தான்.
வலது பக்கமாக இருந்த அந்தப் பழைய மர வீட்டை நோக்கி அவன் நடந்தபோது, சற்று தொலைவில் ஒரு ஓவியம் போல கமலி தனியாக உட்கார்ந்திருப்பதை அவன் கண்கள் கண்டன.
கடலிலிருந்து வீசிய பலத்த காற்றில் அவளது தாவணி விலகிப் பறக்க, இடது பக்கம் வெறுமையாக இருந்த அவளது இடையின் அங்க வளைவுகள் அவன் கண்ணில் பட்டன.
எதிர்பாராத அந்த அழகிய காட்சியைக் கண்டதும் ஆதவன் ஒரு நொடி நிலைதடுமாறிப் போனான். நெஞ்சில் லேசான தவிப்பு எழ, உடனடியாகத் தன் பார்வையை கமலியிடமிருந்து விலக்கி, ஆர்ப்பரிக்கும் கடல் பக்கம் திருப்பிக் கொண்டான்.
பார்வையை உடனே கடல் பக்கம் திருப்பிக் கொண்டாலும், அவனது மனதிற்குள் ஏதோ ஒரு புதுவித அதிர்வு ஊடுருவியது. இதுவரை வெறும் “நோஞ்சான் பெண்” என்றும், தன் பெற்றோரின் விருப்பத்திற்காக நிச்சயக்கப்பட்டவள் என்றும் நினைத்திருந்த கமலி, இப்போது அவனுக்கு முற்றிலும் வேறு ஒருத்தியாகத் தெரிந்தாள்.
கடலலைகளின் சத்தத்தையும் மீறி, அவனது நெஞ்சின் படபடப்பு அவனுக்கே தெளிவாகக் கேட்டது. தன்னைச் சுதாரித்துக் கொண்டு, தன் முக பாவத்தை இயல்பாக்கிக் கொண்ட ஆதவன், மெதுவான எட்டுகளை எடுத்து வைத்து அவளை நோக்கி நடந்தான்.
மணலில் அவனது காலடிகள் பதியும் சத்தம் கேட்கவே, கமலி மெல்லத் தலையைத் திருப்பிப் பார்த்தாள்.
அங்கே,. வெள்ளைச் சட்டையும் ஜீன்ஸ் பேண்டில் கம்பீரமான தோற்றமுமாக நின்று கொண்டிருந்த ஆதவனைக் கண்டதும் அவளுக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது!
இரண்டு மாதங்களாகப் பேசாமல், நேரில் கூடப் பார்க்காமல் இருந்தவன் திடீரெனத் தன் முன்னால் வந்து நிற்பான் என்று அவள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அதிர்ச்சியிலும் படபடப்பிலும் உடனே வலை மேட்டிலிருந்து பளிச்சென்று எழுந்து நின்றவள், காற்றில் பறந்த தன் தாவணியைப் பதற்றத்தோடு இழுத்துப் போர்த்திச் சரிசெய்து கொண்டாள்.
அவளது முகத்தில் நாணமும், லேசான பயமும் கலந்து பிரகாசித்தது.
ஆதவன் அவளருகே நெருங்கி வந்து நின்றான். சில நொடிகள் இருவருக்குமே என்ன பேசுவது என்று தெரியவில்லை. அந்த இடத்தையே அமைதி சூழ்ந்தது. கடலின் காற்றும் அலைகளின் ஓசையும் மட்டுமே அவர்கள் இடையே சாட்சியாக இருந்தன.
அந்த மௌனத்தை உடைக்க விரும்பிய ஆதவன், குரலைச் செருமிக் கொண்டு, “மாமா கடலுக்குப் போயிட்டாரா?” என்று மிக இயல்பாகக் கேட்க முயன்றான்.
கமலியோ தன் விரல்களை நெருக்கியபடி, தரையைப் பார்த்தவாறே, “ஆமாம்… இப்பதான் ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடி போனாங்க…” என்று மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
அவளது குரலில் இருந்த அந்த வெட்கமும் நடுக்கமும் ஆதவனுக்குத் தெளிவாகவே புரிந்தது.
“அப்படியா… கம்பெனியில இருந்து கொடுக்க வேண்டிய பாக்கிப் பணம். அத்தை கிட்ட கொடுத்தேன், மாமாகிட்டயே கொடுக்கச் சொல்லிட்டாங்க… அதான் தேடி வந்தேன்” என்று தன் கையிலிருந்த பணக்கவரைக் காட்டினான்.
“ஓ… சரிங்க. அவங்க வர சாயங்காலம் இல்லனா நாளைக்குக் காலையில ஆகும்…” என்று தலை நிமிராமல் சொன்னவள், மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
இருவரின் பார்வைகளும் நேரடியாக மோதிக் கொண்டன!
அவளது அந்த அப்பாவித்தனமான, காந்தக் கண்களைக் கண்ட நொடியில் ஆதவனின் மனதில் ஓடிக் கொண்டிருந்த அந்த மர்மக் கனவுப் பெண்ணின் நினைவு ஒரு கணம் மறைந்து போயிருந்தது.
அதேபோல, கமலியின் மனதிலும் ‘இவ்வளவு நாள் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூடப் பேசலையே’ என்ற ஏக்கம் மறைந்து, அவன் எதிரில் நிற்பதே ஒரு புதுக் கிளுகிளுப்பைக் கொடுத்தது.
“உனக்கு உடம்பு சரியில்லைனு அப்பா சொன்னாரு… இப்போ பரவாயில்லையா?” என்று ஆதவன் சற்றுத் தயக்கத்தோடு, ஆனால் அக்கறையோடு கேட்க, கமலியின் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
தேடல் தொடரும்…
