என் ஆயுள் நீயே 22

என் ஆயுள் நீயே 22

மருதன் சென்றிட வீடே ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது.

“இந்த வயசிலும் கொஞ்சம் கூட கூறு இல்லையே இவனுக்கு. அவன் மகள் மனசை மட்டும் பாக்குறான். ஒண்ணு சேரும் மனசுலையும் விருப்பமிருக்கணும் தெரிய வேணாம்.”

மருதனை எண்ணி ஜெயலட்சுமி ஆற்றமாட்டாமல் புலம்பிட…

“முடிஞ்சிப்போச்சு விடுங்கம்மா” என்ற இளங்கோவன், “திரும்ப எதும் வந்தாக்கா பார்த்துக்கலாம்” என்றார்.

ஒருவித மனச்சோர்வோடு குமரியை ஏறிட்ட உதயன் இன்றே இதற்கும் ஒரு முடிவை கொண்டு வர வேண்டுமென நினைத்து இருக்கையில் அமைதியாக அமர்ந்தான்.

குமரிக்கே உதயனின் முகத்தில் தெரிந்த வாட்டம் என்னவோ செய்ய,

“நீங்க வேலையிருந்தா பாருங்க. நாளைக்குக்கூட பேசிக்கலாம்” என்றார் குமரி.

குமரி எப்பவும் அடாவடி தான். பாசத்தைக் கூட அதிகாரமாகத்தான் காட்டுவார். அப்படிப்பட்டவர் தன் முகம் பார்த்து, கொண்ட புரிதல், உதயனுக்கு உதட்டில் முறுவலைத் தோற்றுவித்தது.

தற்போது அவனது சோர்விற்கு காரணமே வேறு. என்ன தான் புகுந்த வீடு, சொந்த வீடாக இருப்பினும் ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டு உறவு காலத்திற்கும் நிலைத்து நிற்பது வரமாயிற்றே. அத்தகைய வரம் தன் அன்னைக்கு முப்பது வருடங்களாக கிட்டவில்லை… என்னளவிளாவது சேர்த்து வைத்துவிட வேண்டுமென்று மருதனின் ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுக்காது விட்டுக் கொடுத்தவன், இன்று தன்னாலே அதற்கு மொத்தமாக முடிவு வந்துவிட்டதாக எண்ணி வருந்தினான்.

அவனது மனதின் கசங்கல் முகத்தில் தெள்ளெனத் தெரிய தன் அன்னையை ஏறிட்டுப் பார்ததான்.

மகனின் எண்ணம் தாய் அறியாததா?

“உன்னைவிட வெறொன்னும் எனக்கு பெரிசில்ல தம்பி” என்றார் கங்கா.

கங்காவுக்கும் தெரியும்… மருதன் எத்தனையோ இடைஞ்சல்கள் தொழிலில் கொடுக்கும் போதெல்லாம் உதயன் தாய்மாமா என்று ஒதுங்கி சென்றதற்கு காரணம் தானென்று. அதற்காக மகனின் வாழ்வை அடமானம் வைத்திட முடியாதே! ஆயிரம் தவறிழைக்கும் பிள்ளைக்கே அன்னை என்பவள் துணையாக நின்றிடும் போது, அனைவருக்குமென்று பார்த்து குணத்தால் பண்புள்ளவனாக இருக்கும் மகனுக்காக தன்னுடைய ஆசையை விட்டுக்கொடுத்திட மாட்டாரா என்ன?

“அம்மா…” சட்டென்று கலங்கி ஒலித்த உதயனின் தழுதழுப்பான குரலில் மொத்த குடும்பமும் அவனை சூழ்ந்து விட்டது.

உதயனுக்கு அன்னையின் ஆசை, தாய் வீட்டு ஏக்கம் தெரியுமே. மகனாக நிறைவேற்ற முடியவில்லை எனும் வருத்தம். அதைவிட தனக்காக பார்க்கும் அன்னையின் மனம். திடமான அவனை சட்டென்று அசைத்து பார்த்துவிட்டது. அன்னையின் அன்புக்கு நெகிழாதோர் புவிதனில் உண்டோ?

“ஒண்ணுமில்லை.” பதறி அருகில் வந்த வீட்டாரின் பாசத்தில் மீண்ட உதயன், தன்னை சமாளித்து நிமிர்ந்தான்.

கஜமுகன் கரம் உதயனின் தோளில் படிந்திருக்க… மெல்ல தட்டிக் கொடுத்தார்.

“என்னப்பா சட்டுன்னு கலங்கி உசுரை உருவிட்டியே!” கஜேந்திரன் கேட்டிட, இளங்கோவன் தவித்துப் பார்த்தார் மகனை.

இனி மருதனின் உறவு கூடிட வாய்ப்பில்லை. தன்னுடைய அன்னையின் ஆசை தன்னால் முடிவுக்கு வந்துவிட்டதென்ற தளும்பல் அவனின் மனம் உடைதலுக்கு காரணமென்று உதயன் சொல்லாமலே அனைவருக்கும் புரிந்தது.

இந்த புரிதல் தானே அவர்களின் அன்பில் விளைந்த ஒற்றுமைக்கு காரணம்.

“கொஞ்சம் இருங்க வரேன்” என்று எழுந்து கீழே இருக்கும் ஒரு அறைக்குள் நுழைந்த உதயன், இங்குமங்கும் நடந்தான். இரு நிமிடங்களில் இடைக்குற்றி நின்றவன், தலையை உலுக்கி தன்னை சமன் செய்தான்.

இதுவரை தன்னுடைய உணர்வுகளை இப்படி குடும்பத்தாரின் முன்னிலையில் அவன் காட்டியதே இல்லை. அதற்கு முக்கிய காரணம், தன் முகம் பார்த்து நடக்கும் அவர்களுக்கு, எப்போதும் தன்னால் சிறு வருத்தமும் கொண்டுவிடக் கூடாது என்பதற்காக.

மனம் ஒருவித அலைப்புறுதலில் நிலைகொள்ள முடியாமல் அசைந்தாடியது.

சற்றும் தயங்காது அலைபேசியை எடுத்து தன்னவளுக்கு அழைத்துவிட்டான்.

இருவருக்கும் ஐந்தாரு வருடங்களாக ஒருவரையொருவர் தெரியும். அதிலும் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவளின் அலைபேசி எண் அவனிடம் உள்ளது. ஒருநாளும் அழைத்து பேசியதில்லை. காரணமின்றி புலனம் தகவல் கூட அனுப்பியதில்லை. எண்ணி ஏழெட்டு முறை புலனத்தில் எழுத்து வடிவில் பேசியிருக்கிறான். பேசிய செய்திகளை எண்ணினால் இருபதுக்கு மேலிருக்காது. அதிலும் இருமுறை மட்டுமே இவனாக குறுஞ்செய்தி அனுப்பியது. இன்று நொடி நேர யோசனை எதுவுமின்றி காரணமுமின்றி, புலனம் அல்லாது குரல் அழைப்பு விடுத்திட்டான்.

ஏனென்று அவனுக்கேத் தெரியவில்லை.

இதுநாள் வரை அவள் மட்டுமே தன் மீது நேசம் வைத்து விருப்பம் கொண்டுள்ளாள் என்று அவன் நினைத்திருக்க, அவனுடைய சிறு செயல்… அவனின் மனதையே அவனுக்குக் காட்டிக் கொடுத்திட்டது.

இதயத்தின் செய்தியில் கண்கள் விரிய, தனக்கு முன்னிருந்த கண்ணாடியை பார்த்தவனின் இதழ்கள் நீண்டு விரிந்தது. அவனது கண்களில் அவனே காணாத ஓர் உணர்வு தெரிய,

அந்தப்பக்கம் அழைப்பு எடுக்கப்பட்டு, “ஹலோ” என யாழின் இசையாய் ஒலித்தது அவன் மனதை கொய்துக் கொண்டிருப்பவளின் மெல்லியக்குரல்.

முதல் முறை நெஞ்சம் உணரும் புதுவித உணர்வை, கண்ணாடியில் தெரியும் தன் கண்ணுக்குள் தேடி பிடித்த உதயன், மீசை நுனி திருகி, அதரங்கள் மடித்து விடுத்தான்.

“உதய் இருக்கீங்களா?” இருமுறைக்கு மேல் ஹலோ என்றவள் பதிலின்றிப் போகவே, அவனது பெயர் சொல்லி அழைத்தாள்.

எல்லோரும் அழைக்கும் பெயர் தான். இன்று அதன் சுவை உணர்ந்தான்.

சட்டென்று தொண்டையை செறுமி,

“உன் வீட்டில் இப்போ சொல்லிடு. நான் இங்க தாத்தா எல்லார்கிட்டவும் சொல்லப்போறேன்” என்றான்.

ஒருபக்கம் மருதன், ஒருபக்கம் குமரி என இருவரையும் ஒன்றாக பார்த்ததும் உதயன் எடுத்த முடிவு தான் இது.

அவனளவில் அந்நேரம் அவள் மீது தனக்கு காதலில்லை என்ற எண்ணம் இருப்பினும், தனக்காக தன் மனதிற்காக எட்ட நிற்கும் அவளின் காதலுக்கும், தன்னுடைய தங்கையின் மீதான அவள் கொண்டிருக்கும் அக்கறைக்காகவும் மதிப்புக் கொடுக்கவே அவளை திருமணம் செய்யும் எண்ணத்தில் முடிவெடுத்திருந்தான். இன்பா, தனு விஷயம் சொல்லும்போது, தான் பெரியவன் எனும் சொல் அவர்களின் திருமணத்திற்கு தடையாக நின்றிடக் கூடாதென நினைத்து அவளை மணம் முடிக்க விருப்பமிருப்பதாக சொல்லிவிட இருந்தான்.

அந்த எண்ணமே அவள் மீது தன்னுடைய மனம் நேசம் கொண்டிருந்ததே காரணமென்று இந்நொடி விளங்கிட, கொஞ்சமும் தடுமாற்றமோ, சிறு யோசனையோ அவனிடமில்லை பட்டென்று அவளிடம் சொல்லிவிட்டான்.

ஆனால் அவன் சொல்லியது அவளுக்குத்தான் விளங்கவில்லை.

“நான் என்ன சொல்லணும்? நீங்க என்ன சொல்லப்போறீங்க?” மெலிதாக ஒலித்த போதும் வார்த்தையில் பிசிறில்லை. சிறு தடுமாற்றம். ஒவ்வொரு வார்த்தையாகக் கோர்த்துக் கேட்டிருந்தாள்.

“நிஜமா தெரியலையா?” கண்ணாடியில் தன் புது பரிமாணத்தை ரசித்தவனாக, அங்கு அவளின் தடுமாற்றத்தை அவதானித்துக் கொண்டு வினவினான்.

“இல்லை தெரியல. என்ன சொல்றீங்க புரியல” என்றாள்.

அழைக்காதவன் அழைத்து சொல்லென்றால் அவளும் என்னவென்று சொல்லுவாள். அதீத படபடப்பு. கையெல்லாம் சில்லிட்டுப் போயிருந்தது.

“நான் என்ன சொல்லப் போறேன்னா?” என்று நிறுத்திய உதயன்,

“பிளீஸ் சொல்லுங்க” என்ற அவளின் தவிப்பை கண்களை மூடி உள்வாங்கி இமைகள் திறந்தான்.

அவன் என்ன சொல்லப் போகிறானென அவளும், எப்படி சொல்வதென்று அவனும் அமைதி காக்க, இருவரின் மூச்சுக் காற்றின் ஓசையும் தவிப்புகளைக் கூட்டியது.

நிமிடம் கரைய,

“உதய்…” என்றாள்.

“உதயனுக்கு அஷ்மிதாவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம். அஷ்மிதாவுக்கு உதயனை கல்யாணம் பண்ணிக்க விருப்பம்ன்னா வீட்டுல இப்போ சொல்லலாம்” என்றான்.

“உதய்…” அவளின் இதயம் அணு அணுவாகத் துடிக்க, ஒற்றை ஓசையில் தன்னுடைய மொத்த உணர்வையும் அவனிடம் இடம் பெயர்த்தாள்.

“ஓகேவா?”

“ம்ம்…” அவளுக்கு குரல் கமறியது.

“அழறியா?”

“இல்லை.”

“வேறென்ன?”

“ஃபீல் பண்றேன்.”

“என்னது?”

“உங்களை… நீங்க சொன்னதை!”

“நான் என்ன சொன்னேன்?”

“உதய்…”

மனதில் காதல் இருந்ததாலோ அல்லது தன்னவன் தன்னவள் என்கிற எண்ணம் மனதில் வேர் பிடித்திருந்ததாலோ தயக்கங்களோ தடுமாற்றங்களோ இன்றி பேச்சுக்கள் இயல்பாக வந்தது.

இருப்பினும் அவனிடம் அவளுக்கு எப்போதும் மெல்லிய படபடப்பு தான்.

“ஓகே… ஃபீல் பண்ணி முடிச்சிட்டு. வீட்டுல பேசு. இப்போ எனக்காக எல்லாரும் வெயிட்டிங்” என்று அழைப்பைத் துண்டித்தான்.

கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். முன்னிருந்த மேசையில் கைகள் பதித்து உடல் தாழ்ந்து விழி உயர்த்தி தன் முகம் கண்டவன்,

“நீயா உதய் இது?” எனக் கேட்டான்.

மனம் காதலை உணர்ந்ததற்கு பின்னர், முகம் தனியொரு பொலிவாக காட்சியளிப்பதுப் போலிருந்தது.

“இதுவும் நல்லாதான் இருக்கு” என்று மீசை நுனி திருகியவன், நிமிர்ந்து நின்று சட்டையை இழுத்து விட்டவனாக, வழக்கமான நடையில் வெளியில் சென்றான்.

மூடிய கதவினையே பதற்றத்தோடு பார்த்திருந்தனர் அனைவரும்.

உதயனின் தெளிந்த முகம் கண்ட பின்னரே அனைவரும் நிம்மதியாக மூச்சு விட்டனர்.

இன்பா மட்டும் தன்னுடைய அண்ணனின் முகத்தில் புதிதாக தெரியும் அந்த ஒன்றை கூர்ந்து தேடிக் கொண்டிருந்தான்.

அந்நேரம் அஷ்மிதாவிடமிருந்து “மச்சி” என்று பல சந்தோஷ எமோஜிகளோடு இன்பாவுக்கு தகவல் வந்தது.

சத்தம் வரவே அலைபேசியை எடுத்துப் பார்த்த இன்பா, வேகமாக தன் அண்ணனை ஏறிட்டான்.

ஒற்றை கண்ணடித்த உதயன், இன்பா உணரும் முன்பு,

“நனி இன்னும் வரல கால் பண்ணிப்பாரு” என்றான்.

“ஹான்…” அஷ்மிதா அனுப்பிய தகவலையே நம்ப முடியாது பார்த்த இன்பாவுக்கு உதயன் இப்படி குறும்பாகக் கண்ணடித்தது ஆச்சரியமாக இருந்தது.

“அண்ணா!”

“சொன்னதை செய்டா.” முயன்று அதட்டினான்.

“ஆங்” என்று எட்ட வந்த இன்பா, தங்கைக்கு அழைக்காது, அஷ்மிதாவுக்கு அழைத்தான்.

அஷ்மிதா அழைப்பு ஏற்று ஹலோ சொல்வதற்கு முன்பு,

“ஹேய் நீ சொன்னது நிஜமா? என்னால் நம்பவே முடியல” என்று படபடத்தான் இன்பா.

“சொன்னேன்ல” என்ற இன்பா, “வந்தனா…” என்று நிறுத்தி, “இப்போ தான் அந்தப் பஞ்சாயத்து முடிஞ்சுது. அடுத்து குமரி அத்தை, என் லவ் பஞ்சாயத்து இருக்கு. அதுக்குள்ள… என்னால நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. ஆனா அண்ணா முகமே நீ சொல்றது உண்மைன்னு சொல்லுது” என்றாள்.

“என்னாலையும் தான். அவங்க கால் வரவும் செம ஷாக் பிளஸ் சர்ப்ரைஸ்…” என்று அஷ்மிதா சொல்ல,

“ஃபீல் பண்ணி முடிச்சாச்சுப் போலவே. அப்போ அங்க பேசு. இவன்கிட்ட வெட்டிக்கதை பேசிட்டு இருக்க” என்ற உதயனின் குரலில் அடித்துப்பிடித்து வேகமாக அழைப்பை முறித்தாள்.

இன்பா தள்ளிச் செல்லவுமே உதயன் தம்பியை அறிந்தவனாக பின் வந்திருந்தான். இன்பா பேசிக் கொண்டிருக்க, அவனே அறியாது அலைபேசியை பறித்து பேசியிருந்தான்.

“அண்ணா…”

“நனி இப்போ தான் மெசேஜ் பண்ணா. வா உன் பஞ்சாயத்தை முடிச்சு வைப்போம்.” இன்பாவைப் போலவே பேசி, உள்ளழைத்துச் சென்றான் உதயன்.

error: Content is protected !!
Scroll to Top