என் ஆயுள் நீயே 25

என் ஆயுள் நீயே 25

உதயனுக்கு என்ன பேச வேண்டுமென்கிற தயக்கமோ தடுமாற்றமோ எதுவுமில்லை. பேச வேண்டியதை தெளிவாக மனதில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறான்.

குமரி ஆரம்பிப்பதற்காக மட்டுமே காத்திருக்கிறான்.

முதல் முறை உதயனின் தவிப்பான முகம் பார்த்ததாலோ என்னவோ அனைவரும் அவனின் முகம் பார்த்தே ஆளுக்கொரு இடத்தில் நின்றிருக்க, குமரியும் மௌனமாக இருந்தார்.

அவருக்கே உதயன் சோர்ந்த முகம் என்னவோ போலிருக்க, தானும் பேசி இப்போது அவனது மனதை வருந்தச் செய்திட வேண்டாமென நினைத்தார்.

அவராக பேச்சினை ஆரம்பிக்கப் போவதில்லை என்றறிந்து, தானே துவங்கினான் உதயன்.

தன் தம்பியை ஒரு பார்வைப் பார்த்த உதயன், “என்ன அத்தை பேசணும்?” எனக் கேட்டான்.

தயங்கிய குமரி, “இப்போ பேசுறது சரி வருமா தெரியலங்க” என்றார்.

“இப்போவே எல்லாம் முடிச்சிடலாம் அத்தை. ஒரு முடிவுக்கு வந்துட்டா உங்களுக்கும் நிம்மதிதானே!” என்றான்.

“ம்ம்…” என்ற குமரி, “நீங்க எப்போதான் கல்யாணம் பண்ணலாம் இருக்கீங்க தம்பி?” எனக் கேட்டார்.

உதயன் நீங்க கேட்க வேண்டியதையெல்லாம் கேட்டு முடியுங்கள் எனும் பாவனைக் காட்டிட, குமரி தொடர்ந்தார்.

“தனுக்கு மட்டுமில்ல உங்களுக்கும் வயசாவுதே! அடுத்து இன்பா இருக்கான். முதலில் நனிக்கு பண்ணனும் நினைக்கிறது சரிதான். அதுக்கு தான் அவள் ஒத்துவரமாட்டேங்கிறாளே! அடுத்து என்னன்னு பார்க்கணுமே” என்ற குமரி… உதயனின் விழிகள் காட்டியக் கூர்மையில், “நனிக்கு இதுதான் மாப்பிள்ளைன்னு நீங்க பார்த்து அழுத்தமா சொன்னா அவள் என்ன வேணாம்ன்னா சொல்லப்போறாள். முடிவு பண்ணி நாமளா செய்ய வேண்டியது தான்” என்றார்.

“இப்போ உங்களுக்கு என்ன அவசரம்?”

தெரிந்துகொண்டே கேட்கிறான். கடுப்பாக வந்தது. ஆனால் அவனிடம் காட்டிட முடியாதே!

“இப்படிக் கேட்டா என்ன சொல்ல?” என்ற குமரி, “நனியை பார்த்தா தனு வாழ்க்கை வீணாகுதே! அவளும் இந்த வீட்டுப் பொண்ணுதானே?” என்றார்.

“தனுவும் இந்த வீட்டுப் பொண்ணுதான். யாரும் இல்லைன்னு சொல்லலையே” என்ற உதயன், “தனுவுக்கு கல்யாணம் நடக்கணும். அதுதானே உங்க கவலை?” என்று வினவினான்.

“ஆமாப்பா…”

“ம்ம்… ஏற்பாடு பண்ணிடலாம்” என்று நிறுத்திய உதயன், “மாப்பிள்ளை இன்பா” என்றான்.

“உதயா!” குமரியிடம் அப்படியொரு அதிர்வு.

லட்சுமி பாட்டியை தவிர்த்து மற்ற பெண்கள் இருவருக்கும் இன்பா, தனு விஷயம் தெரியுமென்பதால் நடப்பதை பார்த்தபடி எவ்வித முகபாவனையும் காட்டாது அமைதியாக நின்றனர் என்றால், மூத்த ஆண்கள் மூவரும், உதயனின் இந்த முடிவுக்கு பின்னால் வலுவான காரணமிருக்குமென்று அமைதி காத்தனர். கஜமுகனே உதயன் சொல்லியதற்கு மறுப்பு எதுவும் கூறாதிருக்க, குமரி என்ன ஆட்டம் ஆடப் போகிறாளோ என்று லட்சுமி பாட்டி தான் பயந்து பார்த்தார்.

“என்ன அத்தை, இன்பா உங்களுக்கு ஓகே தானே?” குமரிக்கு அதிர்வில் என்ன பேச வேண்டுமென்றே தெரியவில்லை.

“உதயா?”

“இன்பாவும் உங்க அண்ணன் மகன் தான் அத்தை. நம்ம வீட்டில், தொழிலில் எல்லாம் சம உரிமை அவனுக்கும் இருக்கே” என்றான்.

“ஆனால், நான் உங்களை…” எதுவும் சொல்ல முடியாது நிறுத்தினார் குமரி. எது சொன்னாலும் மற்றொரு அண்ணனான கஜேந்திரனை விட்டுக் கொடுத்ததுப்போல ஆகிவிடுமே.

என்ன தான் உதயன் மருமகனாக வர வேண்டுமென்கிற ஆசை இருந்தாலும், அவரிடமும் அன்பு பாசம் உள்ளதே! தன் உறவுக்குள்ளே அவரால் வேற்றுமை பார்த்திட முடியவில்லை.

மனதில் எழும் ஆதங்கத்தை வெளிக்காட்டிடவும் முடியவில்லை.

“இத்தனை வருஷமா தனுவும் உங்களைத்தானே நினைச்சிட்டு” என்று அவர் முடிக்கும் முன்பு உதயன் கண் காட்டிட, “இத்தனை வருஷம் மாமா கல்யாணம் வேண்டாம் சொன்னதுக்கு நனி மட்டுமே காரணமில்லை. நானும் தான்” என்றாள் தன்யா.

“என்ன சொல்ற நீ?” உதயனிடம் காட்ட முடியாத மொத்த கோபத்தையும் மகளிடம் பார்வையில் காட்டினார் குமரி.

“நான் இன்பா மாமாவை விரும்புறேன்.”

“தனு…” குமரி அடிக்க கையை ஓங்கிட, “ம்மா” என்ற உதயனின் சத்தத்தில், தனுவிற்கு அருகில் நின்றிருந்த கங்கா குறுக்கே வந்து குமரியை தடுத்திருந்தார்.

“இதென்ன பழக்கம் குமரி? பெத்த பொண்ணை கை நீட்டி அடிக்கிறது. உன்னை நானும் உன் அம்மாவும் ஒத்த சொல்லு அதட்டி பேசியிருப்போமா?” என கடிந்தார் கஜமுகன்.

“பின்ன என்னப்பா, காதல்ன்னு எவ்ளோ தைரியமா சொல்றா?” என்று ஆத்திரம் கொண்டார் குமரி.

“அவ யாரோ ஒருத்தனை விரும்புறேன் சொல்லலையே குமரி?” இளங்கோவன் கேட்க, “அவள் இன்பாவை விரும்புறேன் சொன்னது தான் உன் ஆத்திரத்துக்கு காரணமா?” என சரியாக வினவினார்.

அவரின் அக்கேள்வியில், இதே அவள் உதயனை விரும்புகிறேன் என்று சொல்லியிருந்தால் இந்த ஆத்திரமும், கோபமும் வந்திருக்காது தானே என்ற மறை கேள்வி பொதிந்திருந்தது.

“என் பையனும் உங்க இன்னொரு அண்ணன் மகன் தான் அண்ணி. நான் கேட்டால் எனக்கு மருமகளா உங்க பொண்ணை அனுப்பி வைக்க மாட்டீங்களா?” காமாட்சி வார்த்தையால் கிடுக்கிப்பிடி போட்டார்.

குமரியே வாய் பேசிட முடியாது திணறி நின்றார்.

“தனு மட்டுமில்லை எனக்கும் கூட விருப்பம்” என்றான் இன்பா.

இன்பாவும் உடைத்துப் பேசிட, குமரியால் பதில் கொடுக்க முடியவில்லை. உதயாவுக்காக மற்றவர்களை வேறுபடுத்தி பார்க்கவும் அவரின் மனம் இடமளிக்கவில்லை.

அதுவரை அமைதியாக இருந்த கஜேந்திரன்,

“இதுக்கு மேல உன் ஆசை தான் முக்கியமா குமரி? நானும் உனக்கொரு அண்ணன் தான்” என்றார்.

அதில் குமரி பதறிவிட்டார்.

“அச்சோ அண்ணா, உதயன் தான் அவளுக்கு ஜோடின்னு பல வருஷமா கனவு கண்டுட்டேன். அது இல்லைங்கிறப்போ ஏமாத்தமா இருக்கு” என்று வேகமாக சொல்லிய குமரி, “உன்னாலே விட்டுக் கொடுக்க முடியலையே. நேசிக்கிற ரெண்டு மனசை எப்படி விட்டுக் கொடுக்க சொல்ல முடியும்?” எனக் கேட்டார் கஜேந்திரன்.

“இப்போ நான் என்ன பண்ணனும்?” ஒருவித உணர்வற்ற குரலில் கேட்டார் குமரி.

“நிறைஞ்ச மனசோட சந்தோஷமா அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கும் நீங்க சம்மதம் சொல்லுங்க” என்றான் உதயன்.

“அவங்க வரட்டும். பேசிட்டு சொல்றேன்.” இனி தன் விருப்பம் சபை ஏறாது எனத் தெரிந்தும், குமரி ஏமாற்றத்தில் வீம்பு காண்பித்தார். அதற்கு தன் கணவரை காரணம் காட்டினார்.

“நீ அப்படியே உன் புருஷனை கேட்டு தான் எல்லாம் செய்யுற பாரு.” லட்சுமி நொடித்தார்.

“மாமாக்கு முன்னவே தெரியும். சொல்லிட்டேன். நீங்க உங்க முடிவை மட்டும் சொல்லுங்க” என உதயன் கேட்க, “இனி என் ஆசைக்கு என்ன மதிப்பிருக்கு. நான் வேணாம் சொன்னாலும் நடக்கத்தானே போகுது. நானே சரி சொல்லி என் மரியாதையை காப்பாத்திக்கிறேன்” என்றார் குமரி. இருப்பினும் அவரின் ஏமாற்றம் கோபமாக உள்ளுக்குள் உருமாறிதான் இருந்தது.

அவர் எதோ ஆதங்கத்தில் பேசுகிறார் என்று யாரும் அவரின் பேச்சினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

“இப்ப மட்டும் என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்திடுமா என்ன?” என்று நீட்டி முழங்கினார்.

“என்ன சொல்ல வர இப்போ?” லட்சுமி பாட்டி வினவ, “மொத நனி மட்டும் தான் குறுக்க இருந்தாள். இப்போ இன்பாவுக்கு மூத்தவங்களுமில்ல இருக்காங்க” என்றார்.

“அந்த கவலை வேண்டாம் அத்தை” என்ற உதயன், “பொண்ணு பேரு அஷ்மிதா. பட்டுவை பொண்ணு பார்க்க வந்த பிரணவ்வோட தங்கச்சி. பேசுங்க தாத்தா” என்றான். கஜமுகனைப் பார்த்து.

“ஹோ… அப்போ என் பொண்ணுங்கிறதாதான் கல்யாணம் வேணாம் இருந்தீங்களா? நான் கூட தங்கச்சி பாசம் நினைச்சேன்” என்று ஒரு மாதிரி இழுத்து ராகம் போல் குமரி பேச, அவரின் அப்பேச்சு அவனின் பாசத்தையே எடைபோட்டு பார்ப்பது போலிருந்தது.

சட்டென்று கசங்கி சீரானான். தங்கைக்காக திருமணம் வேண்டாமென்று இருந்தாலும், அதில் முக்கிய காரணம் தனுவின் காதலுக்காகவும் தான். யாரையும் குறைத்து வைத்து முடிவுகள் எடுப்பவனில்லையே. அங்கு அவனின் பாசம் கேள்வியாக்கப்பட ஒருவித அழுத்தம் மனதில் சூழ்ந்தது. அனைத்தும் அவனின் உறவுகள். எதோ ஆதங்கத்தில் கேட்கத் தெரியாது கேட்கிறார். அழுத்தத்தில் அவனும் கோபத்தைக் காட்டினால், அங்கு விரிசல் உறவுகளுக்குள் தான். எளிதாக கட்டுக்குள் மனதை அடக்கி வைத்தான்.

“அச்சோ அம்மா. நான் இன்பா மாமாவை விரும்பும் போது மாமா எப்படி எனக்கு ஓகே சொல்லுவாங்க” என்று முன் வந்த தன்யாவை, “நீ பேசாதடி” என்று விரல் நீட்டி அடக்கினார்.

“எது நடக்கணுமோ அதுதான் நடக்கும். நீங்களோ நானோ ஆசைப்படுறோம் அப்படிங்கிறதுக்காக இங்க எல்லாம் நடக்கிறதில்லை” என்ற உதயன், “எனக்கு பிடிச்சிருக்கு. உங்க எல்லாருக்கும் ஓகேன்னா அவங்க வீட்டுல பேசுங்க” என்று மாடியேற அடி வைத்து நகர்ந்தான்.

எனக்கு பிடிச்சிருக்கு என்று உதயன் வெளிப்படையாகக் கேட்பது முதல்முறை. அப்பெண் யாராக இருந்தாலும் அவனுக்கு விருப்பமானது, அவனுடைய கரத்தில் சேர்த்திட வேண்டுமென்று அக்கணம் அனைவரும் ஒன்று போல் ஒருவரின் முகம் பார்த்து மற்றவர் நினைக்க,

“ஒரு நிமிஷம்” என்று குமரி, உதயனை நிறுத்தியிருந்தார்.

“அந்த பொண்ணு உங்க மனசில் இருந்ததால் தான் தனுவை…”

“அத்தை” என்று அழுத்தமாக உச்சரித்த உதயன், “முதல் முறையா இன்னைக்கு தான் அஷ்மிதாகிட்ட அஞ்சு நிமிஷமாவது நான் பேசியிருக்கேன் சொன்னா நம்புவீங்களா நீங்க?” எனக் கேட்டான்.

“அதெப்படிப்பா பார்த்து பேசவே செய்யாத பொண்ணு மேல விருப்பம்?”

“இப்போ உங்களுக்கு என்னத் தெரியணும்?”

“இங்கிருந்து திருச்செந்தூர் எப்படி கைக்கு எட்டுச்சு தெரியணும்” என்றார்.

உதயன் வார்த்தையை விட்டுவிடுவோமோ எனும் விளிம்பில் கை விரல்கள் குவித்து விறைத்து நின்றான்.

“இங்க யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம். நீங்க போங்க” என்று மகனின் முகம் பார்த்து இளங்கோவன் சொல்ல, “என்னண்ணா தப்பிக்க வைக்கிற மாதிரி இருக்கு. இதே தனுவே வெளியிருந்து ஒரு பையனை விரும்புறேன் சொல்லியிருந்தா இப்போ மாதிரி அமைதியா ஏத்துக்கிட்டு இருந்திருப்பீங்களா?” என்றார்.

“வெளி ஆளும், நம் கண் பார்த்து நாம் வளர்த்த நம்ம பிள்ளையும் ஒண்ணாடி?” லட்சுமி மகளின் குமட்டில் இடித்தார்.

“அப்போ சரி… அவங்க தங்கச்சிக்காக அந்தப் பையனை கூட்டிட்டு வந்தாங்களா? இல்லை இவங்களுக்காக, தங்கச்சிக்கு பையன் பார்த்தாங்களா?” என்றார்.

என்ன தான் மகளின் விருப்பத்திற்கு சரியென்றிருந்தாலும், அவரின் ஆசை நிறைவேறாத கோபம் அவரை அப்படியெல்லாம் பேச வைத்தது.

உதயன் நனியின் மீது கொண்டுள்ள பாசத்தை பகடையாக உருட்டினார் குமரி. அங்கு அவனது அன்பை கேள்வியாக்கினார்.

“எனக்காகன்னே வச்சிக்கோங்களேன்.” பட்டென்று சொல்லியிருந்தான்.

அவனின் அழுத்தமும், பொறுமையும் கூட ஓர் எல்லை வரை தான். இதற்கும் மேல் எப்படி அமைதியாக இருக்க முடியும்.

அவனின் நேரடியான அதிரடி பதிலில் குமரி தான் வாயடைத்துப் போனார்.

உதயனின் அலைபேசி ஒலித்தது. அழைத்தது அஷ்மிதா.

error: Content is protected !!
Scroll to Top