என் ஆயுள் நீயே 29

என் ஆயுள் நீயே 29

அஷ்மிதாவை முதல் முறை உதயன் பார்த்த போது அவளின் முகத்தில் அப்படியொரு புன்னகை. அதீத குறும்பு. அவள் நனியிடமும், ரீமாவிடமும் அடித்த கொட்டத்தை ஒரு நாள் முழுவதும் உடனிருந்து பார்த்தவனுக்கு, அவளின் சந்தோஷ முகம் மட்டுமே பரிட்சயம். அதிலும் அவனை காண அவள் வரும் தருணங்களில் எல்லாம், அவனை கண்டதும் அவளின் கண்களில் வெட்டிச் செல்லும் மின்னலில் சுருண்டு மீள்வான்.

இன்று அந்த முகத்திலும், கண்ணிலும் அழுகையை காண்கையில் தான், அவளை தன் மனம் எத்தனை தூரம் நேசிக்கிறது என்பதை ஆழமாக உணர்ந்தான். ஒருநாளில் பல்வேறு உணர்வுகளை அவனுள் கடத்திட்டாள். அனுபவித்திட வைத்திட்டாள்.

“என்னை பாரு அஷ்மிதா.”

அஷ்மிதாவின் தாழ்ந்திருந்த இமையில் கட்டி நின்ற நீர்த்துளியில் தவிப்புகள் கூடிட, கரகரப்பாக மொழிந்தான்.

“இங்கப்பாரு… என்னை பார்க்கணும்” என்ற உதயன், “நீ எதுவும் சொல்ல வேண்டாம். எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். என்னைப்பற்றி எதுவுமே தெரியாமதானே எனக்காக எல்லாம், சோ… எனக்கும் எதுவும் தெரிய வேண்டாம். எல்லாம் தானா தெரியட்டும். இப்போ என் கண்ணு முன்னாடி தெரியிற இந்த அஷ்மிதா மட்டும் எனக்கு போதும்.” என்று அதீத அழுத்தத்தோடு அடர்த்தியாய் கூறிட, வேகமாக இமை விரித்து நேர்கொண்டு பார்த்தவளின் கன்னம் வழிந்தோடியது கண்ணீர்.

“உதய்…” அஷ்மிதாவின் உதடுகள் மெல்லிய நடுக்கம் காட்ட…

“அழாதடா… என்னவா வேணாலும் இருக்கட்டும். இவ்ளோ கஷ்டப்பட்டு நீ எனக்கு சொல்ல வேண்டாம். இன்னும் கொஞ்ச நாளில் என் பக்கத்தில் இங்க சாய்ந்து உட்கார்ந்திருப்ப” என்று தன் தோளில் கை வைத்துச் சுட்டிக்காட்டி, “அப்பவும் உன்னால் திடமா சொல்ல முடியும் அப்படின்னா சொல்லு. நான் தெரிஞ்சிக்கிறேன்” என்றான்.

தன்னைப்போல் தன்னை அறியாது, ஒரு பெண்ணின் மனம் ஆணிடம் எதிர்பார்க்கும் அன்பை இயல்பாய் தன் வார்த்தையில் காட்டிவிட்டான்.

அவளுக்கு அந்நொடியே அவனின் பரந்த கைகளுக்குள் அடங்கிவிடத் தோன்றியது.

கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதக்க, உதட்டில் குவிந்த முறுவல்.

“ஐ லவ் யூ உதய்.” மூறல்கள் வரிசைக்கட்டி பளிச்சிட, நனைந்த நயனங்களோடு அவள் சொல்லியதில் உறைந்து உயிர் மீண்டான்.

சொல்லிக்கொள்ளாமல், காதலுக்குரிய வார்த்தைகள் பகிர்தலின்றி உணர்ந்து அகம் சேர்ந்த காதலின் தித்திப்பை, அவளின் மொழி வழி நெஞ்சம் குளிர இரு மடங்காய் உணர்ந்தான்.

உதயனிடம் முகம் விரிந்த மகிழ்வு. நட்சத்திரமாக ஒளிர்ந்த அவனின் கூர் விழிகள் அவனின் இதயத்தின் நேச தடத்தை அவளுக்குக் காட்டிக் கொடுத்தது.

“மொத்தமா சாய்க்க பார்க்குற” என்று சத்தமின்றி மலர்ந்து சிரித்த உதயன், “தாத்தா” என்று எதோ சொல்ல ஆரம்பிக்க,

“நீங்க சொல்லல?” எனக் கேட்டாள்.

“என்ன சொல்லணும்?”

“தெரியாதா?”

“ம்ஹூம்…” கன்னம் குவிந்த அவனின் சிரிப்பில், அவனது கள்ளத்தனம் கண்டுகொண்டவள், “சொல்லவே வேண்டாம்” என்றாள்.

அதில் உதயன் அட்டகாசமாக சிரிக்க, கூடத்தில் நின்றிருந்த அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்பியது. ராகவனிடம் பேசிக் கொண்டிருந்த கஜமுகன் கூட தன் பேரனை திரும்பிப் பார்த்தார்.

“எனக்கு ஆச்சரியமா இருக்குக்கா!” காமாட்சி கங்காவிடம் சொல்ல, “யாரா இருக்கும்?” என்றார் லட்சுமி.

“அஷ்மிதா” என்ற இன்பாவின் பதிலில், “இவங்க, இந்த சிரிப்புக்கே, அந்தப் பொண்ணை சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கூட்டி வந்திடனும்” என்றார் லட்சுமி.

“ஆமா அத்தை. ஒரு நாளும் இப்படி ஆர்ப்பாட்டமா சிரிச்சது இல்லையே! கண்ணுல ஒளியை பார்த்தீங்களா?” என்று மகனை அதிசயித்துப் பார்த்தார் கங்கா.

“கண்ணுபடும் க்கா” என்ற கங்கா, “வர்றாங்கா” என்க, முகத்தை சாதாரணமாக வைத்தனர்.

அஷ்மிதாவின் முகத்தில் பொய் கோபம் காட்டிட, சிரித்தபடி திரும்பிய உதயன், சுற்றம் உணர்ந்து தன் சிரிப்பை மறைத்தான்.

“உன்னால என் இயல்பை தொலைக்கிறேன் நான்.” கீழ் பற்களால் மேலுதட்டை அழுத்தமாக கவ்வி விடுத்து, பின்னந்தலையை வருடினான்.

அவனது நாணம் மறைக்கும் தடுமாற்றத்தில், அஷ்மிதா தடுமாறிப் பார்த்தாள்.

“என்னவாம்? பார்வை பலமா இருக்கு?”

“எதோ ஆகுது.”

“ஹான்” என்ற உதயன், “எனக்குதான் எதோ ஆகிப்போச்சுண்ணு எல்லாரும் நினைப்பாங்க. இயல்புக்கு மாறா எல்லாம் பண்ணிட்டு இருக்கேன்” என்றான்.

“ஏன்?”

“அஷ்மிதா தான் ரீஸன்” என்றவன், “எனக்கே என்னை புதுசா இருக்கு” என்றான்.

“இல்லையே அப்படியே தான் தெரியுறீங்க” என்று அவன் சொல்லிய பொருள் புரியாது வேகமாக சொல்லியவள், “லாஸ்ட் வீக் பார்த்ததுக்கு இப்போ பெரிய சேன்ஜஸ் எதுவுமில்லை. மீசையை ட்ரீம் பண்ணியிருக்கீங்க… லைட்டா டிப் ஷார்ப். அப்புறம், எப்பவும் பியர்ட் தெரியிற அளவுக்கு விடமாட்டிங்க. இப்போ நாலு நாள் ஷேவ் பண்ணாத லுக். அப்புறம் முன்னுச்சி முடி அலை மாதிரி புருவத்தை ஒட்டியும் ஒட்டாம அசையும். இப்போ ஷார்ட் பண்ணியிருக்கீங்க. அப்புறம்…” என்றவள்,

உதயன் “அப்புறம் அஷ்மிதா” என்றதில் தான் அவனின் கண்கள் கொண்ட மாற்றத்தில், தான் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்பது விளங்க, ஒற்றை கண் சுருக்கி அசடு வழிய அவனைப் பார்த்தாள்.

அவள் சொல்ல சொல்ல, ‘தன்னை இத்தனை கவனிக்கிறாளா?’ எனும் ஆச்சரியம், தன்னவள் தன்னை இத்தனை கவனிக்கின்றாள் எனும் குறுகுறுப்பில் அப்பட்டமான ரசனையை வழியவிட்டன அவனது விழிகள்.

“அப்புறம் அஷ்மிதா…” இதயத்தை சுருட்டும் குரல் கரகரப்பாக ஒலித்திட, திணறிப் பார்த்தாள்.

“அவ்ளோதான்.” திக்கிக் கூறினாள்.

“இன்னும் முடியல போலிருக்கே” என்றவன், அவள் காட்டிய பாவனையில், “மூச்சு முட்டுது” என்றான்.

அவளின் விழிகள் அகல விரிந்தன.

சன்னமாக சிரித்தவன்,

“இப்போ ஓகேவா நீ?” எனக் கேட்டான்.

‘இத்தனை குறும்பும் பேச்சும் தன்னை சகஜமாக்கிடவா?’ என நினைத்தவள், “ம்” என்றாள்.

“ஓகே… தாத்தா உன் தாத்தாகிட்ட பேசிட்டு இருக்காங்க. நீ எதுவும் சொல்ல வேண்டாம். ஆண்ட்டிகிட்ட நான் பேசிக்கிறேன். அவங்களா உன்கிட்ட கேட்கும் போது இப்போ இருக்க தடுமாற்றம் இருக்காது” என்றான்.

அவளுக்காக பார்க்கிறான். அவளின் மன உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கின்றான். இதைவிட வேறென்ன வேண்டுமாம் அவளுக்கு. அவனை இன்னும் இன்னும் பிடித்தது.

“வைச்சிடட்டுமா அஷ்மிதா.”

“ஆங்…”

“ஆண்ட்டிகிட்ட பேசிட்டு சொல்றேன்” என்ற உதயன் தன் வீட்டார் தன்னையே பார்த்திருப்பதில் இணைப்பை வைத்துவிட்டு அவர்கள் பக்கம் சென்றான்.

அப்போது தான் உதயன் வருவதை காமாட்சி சொல்லிட, அனைவரும் முகத்தில் மாற்றம் காட்டினர்.

“என்ன?”

அருகில் வந்த உதயன் கேட்டிட,

“நீங்க சத்தமா சிரிக்கிறது தான் ஹாட் நியூஸ்” என்று கிண்டல் செய்தான் இன்பா.

“சிரிக்கக்கூடாதா?”

“அச்சோ சாமி… உங்களை இப்படி பார்க்க நல்லாயிருக்கு” என்று லட்சுமி பாட்டி பதறி சொல்லிட,

“அப்போ நிறைய சிரிச்சிடலாம் பாட்டி” என்று அவரின் கன்னம் கிள்ளினான்.

அவனிடம் இந்த குறும்பு புதிது.

மேலும் மேலும் அவனிடத்தில் ஆச்சரியம் கொண்டனர்.

கஜா தாத்தா ராகவனிடம் பேசிக்கொண்டே உதயனை பார்க்க, தான் பேசுவதாக விழி அமர்த்தினான். அந்நேரம் தான் ராகவன் விமலாவிடம் அலைபேசியை கொடுத்திருந்தார்.

கஜாவும் விமலாவிடம் பெரியவராக விடயத்தை பகிர்ந்துகொண்டு உதயனிடம் கொடுத்தார்.

“வணக்கம் ஆண்ட்டி” என்ற உதயனின் கம்பீரக் குரலில், அன்று முகவரி கேட்டு பேசிய அதே பிரமிப்பு விமலாவிடம். உதயனின் ஆளுமை அவனை பார்க்காமலே அவருக்கு தெரிந்தது.

“ஃப்ரீயா பேசணும் ஆண்ட்டி” என்றான்.

“சொல்லுங்க தம்பி” என்ற விமலா, அவன் பேச்சினை ஆரம்பித்ததும் சொல்லியதில் வாய் பிளந்தார்.

“தாத்தா எனக்கு அஷ்மிதாவை பிடிச்சு சம்மதம் பேசுறதா சொல்லியிருப்பாங்க… உண்மை தான். பட் அந்த பிடித்தம்” என்றவன், “ஐ லவ் ஹெர்… எனக்கு மறைச்சு சம்மதம் கேட்க விருப்பமில்லை” என்றான்.

காதலை பெற்றவர்களிடம் நிமிர்ந்து நின்று சொல்ல முடியுமா? உதயன் கூறினான். அந்த நிமிர்வு விமலாவை அசரடித்தது.

“அன்ட் ஷீ லவ்ஸ் மீ டூ” என்றான்.

விமலாவுக்கு அஷ்மியா என்றிருந்தது.

மேற்கொண்டு சொல்ல வேண்டியதை தடுமாறாது உதயன் சொல்லிட, அவனின் பண்பானப் பேச்சும் அதே சமயம் அவனிடம் தென்பட்ட நிமிர்வும் விமலாவை அப்போதே சம்மதம் தெரிவிக்க வைத்தது.

உதயன் பேசவுமே விமலா ராகவனும் கேட்கும் வகையில் அலைபேசியை குரல் பெருக்கியில் வைத்திட, ராகவனுக்கும் நிறைவாக இருந்திட சம்மதிக்குமாறு கண்காட்டியிருந்தார்.

விமலா, “எங்களும் பரிபூரணம் தம்பி. நாளைக்கு வாங்க. நேரில் பேசுவோம்” என்றிட, “அப்படியே இன்னொரு விஷயம்” என்றான்.

விமலா “சொல்லுங்க மாப்பிள்ளை” என்றிட, முதலில் தம்பி என்றவர், தற்போது மாப்பிள்ளை என்றதில் உதயனிடம் மென் முறுவல். அந்த முறுவலோடு பிரணவ், நனியின் காதலை தெரிவித்திருந்தான்.

“எங்களுக்கும் நேத்து தான் மாப்பிள்ளை தெரியும்” என்றார் விமலா.

“அப்போ நான் சொல்றதை உங்களால் புரிஞ்சிக்க முடியும் அத்தை” என்று ஆண்ட்டி என்று அழைத்துக் கொண்டிருந்தவன் அத்தை என்ற மாற்றத்தில் மொத்தமாக விமலாவை தன் பக்கம் சாய்த்துவிட்டான்.

விமலாவும் அவனது விளிப்பில் இதழ் விரித்து, ‘வெரி ஸ்மார்ட்’ என மனதில் மெச்சிக் கொண்டார்.

அடுத்து தனது திட்டத்தை உதயன் தெரிவிக்க… விமலாவிடம் மௌனம்.

“என் பக்கம் இதை தவிர்த்து வேறு வழியில்லை அத்தை. உங்களுக்கு எதுமிருந்தால் சொல்லுங்க” என்று அவர் பக்கமே முடிவை திருப்பி விட்டான்.

“அவங்களா சேர வாய்ப்பில்லை. அவ்ளோ ஈகோ இருக்கு. அதே அளவுக்கு அன்பும் இருக்கு. நம்ம கடமையை சரியா செய்வோம். அடுத்து அவங்க கையில்” என்றான்.

“எனக்குமே நனியிதழ் ஒத்துவராது சொன்னதும் அவ்வளவு ஏமாற்றம் மாப்பிள்ளை. ரொம்ப வருத்தப்பட்டேன். ஆனால் அதுக்கு காரணம் பிரணவ் தெரிஞ்சதும் அந்த வருத்தம் இன்னுமே கூடிப்போச்சு. எளிதா முடிய வேண்டியதை சிக்கலாக்கிட்டானேன்னு இருந்துச்சு. உண்மை தெரிஞ்ச பின்னர் அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாம் நினைச்சேன். ஆனால் இப்போ நாமதான் சரி பண்ணனும் தோணுது. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிடலாம் மாப்பிள்ளை” என்றார்.

“தேங்க்ஸ் அத்தை” என்ற உதயன், “அப்பா, சித்தப்பா பேசுவாங்க” என்று அவர்களிடம் அலைபேசியை கொடுத்திட்டான்.

என்ன தான் உதயன் தன் பக்கமிருந்து அனைத்தும் பேசியிருந்தாலும், சில விஷயங்கள் பெரியவர்கள் கலந்தாலோசிக்க வேண்டுமென்று அவர்களுக்கான இடத்தை அளித்தான்.

பெரியவர்களுக்கான அவனின் மரியாதை அவனது சிறு செயலில் தெரிந்திட, விமலாவுக்கு உதயன் மீதான பிடித்தம் மரியாதையையும் சேர்த்து வழங்கியது.

இளங்கோவன், கஜேந்திரன் தங்கள் பங்குக்கு அவ்வீட்டு பெரியவர்களிடம் பேசிட, “அவங்களுக்கு ஓகே” என்று பெண்களிடம் திரும்பிக் கூறினான் உதயன்.

“வாவ் அண்ணா…” என்று அணைத்து விடுத்த இன்பா, “நடுவில் அந்த ரெண்டும் எதும் குழப்பம் செய்யாமல் இருக்கணும்” என்றான்.

“இப்போ பட்டுக்கு கோபமிருந்தாலும், கண்டிப்பா நோ சொல்லமாட்டாள்” என்று நகர்ந்து வந்த உதயன்…

“ஆல் செட்” என்று அஷ்மிதாவுக்கு தகவல் அனுப்பினான்.

error: Content is protected !!
Scroll to Top