என் ஆயுள் நீயே 31
தங்கையின் காதலின் கோணமே வேறு என்று புரிந்த உதயன் தலையை இருபக்கமும் அசைத்து மென்மையாக சிரித்தான்.
“என்னண்ணா?”
“நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி, இப்போ ரெண்டு நாள் முன்ன கூட, பிரணவ் நினைச்சு அழுத பொண்ணான்னு பார்க்கிறேன்” என்றான்.
“அந்த வலி இருக்கு தான். எப்பவும் அனுபவிச்ச வலி மறையாதே” என்ற நனி, “அந்த வலிக்கெல்லாம் இப்போ கொஞ்சமே கொஞ்சம் மருந்து போட்டுக்கிறேன்” என்று குறும்பாய் கண் சிமிட்டினாள்.
“சரிதான்.”
“உங்க ரெண்டு பேரிடமும், விருப்பத்தை சொல்ல முடியாமப் போனதுக்கான காரணம் அப்படியேதான் இருக்கு. சீக்கிரம் பேசறது நல்லது” என்றான்.
“ஆமால” என்ற நனி, “அவங்களும் என்னை விரும்புறாங்கா அப்படின்னா, அன்னைக்கு அது… நான் தப்பா புரிஞ்சிக்கிட்ட அர்த்தம் தானே?” என்றாள்.
உதயன் ஆமென்க,
“அப்போ பிரணவ்வும் இல்லாத ஒன்னை இருக்குன்னு நம்பியிருக்கணும்… கரெக்ட்?” என்றாள்.
“மே பீ.” உதயன் தோள்களை உயர்த்தி இறக்கினான்.
“காதல் இருக்க அளவுக்கு புரிதல் இல்லையோ?” நனியிதழ் கேட்க, “உட்கார்ந்து பேசினால் புரிதல் தானா வந்துட்டு போகுது. அன்பு போதும். சின்னப் பார்வைக்கான பொருள் கூட புரிஞ்சிடும்” என்றான்.
“லவ் டாபிக்லையும் பின்றீங்க செல்வா.” நனியிதழ் கிண்டல் செய்தவளாக களுக்கிச் சிரித்தாள்.
“அதிகத்துக்கும் பிடிச்சிருக்கு பட்டு. எப்படி இவ்ளோன்னு தெரியல” என்றான். இருவரும் மெத்தையில் அமர்ந்திருக்க, தனக்கு நேரெதிர் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னை பார்த்தவாறு.
“அண்ணா… உங்க முகம் பிளஷ் ஆகுது” என்று நனி ஆர்ப்பரிக்க, “எங்க நானும் பார்க்கிறேன்” என்று உள் வந்தான் இன்பா.
“அடேய்… ஏண்டா?” என்று கீழுதட்டை கடித்து தன் வெட்கத்தையும், புன்னகையையும் மறைத்தான் உதயன். பின்னந்தலையை அழுந்த கோதியவனாக.
“அத்தை, மாமாகிட்ட சொல்லியாச்சா இன்பா?”
“பாட்டியும், பெரியம்மாவும் போனாங்க. இன்னும் வரலண்ணா” என்ற இன்பா, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றான்.
“இருக்குமே! சீக்கிரம் லவ் சக்ஸஸ் ஆச்சுல” என்று கண்ணடித்தாள் நனியிதழ்.
“அதுவும் தான். பட் இந்த சந்தோஷத்துக்கு காரணமே வேற” என்று உதயன் அருகில் அமர்ந்த இன்பா அவனை தோளோடு கட்டிக்கொண்டு முகம் மலர தங்கையை ஏறிட்டான்.
“ரெண்டு பேரும் எதோ மறைக்கிறீங்க…” என்று இடையில் கை வைத்து சொல்லிய நனியிதழ், “எப்படியும் சொல்லுவீங்கதானே. அப்போ பார்த்துக்கிறேன்” என்றாள்.
“ம்ம்…” அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக குறுஞ்சிரிப்போடு பற்கள் தெரிய ஒருவரையொருவர் பார்த்து சிரித்து ஒரு சேர நனியிதழை பார்த்தனர்.
“பெருசா இருக்கும் போலயே” என்ற நனியிதழ், “ரொம்பதான் தம்பிகிட்ட நெருக்கம்…” என்று உதயனிடம் புருவத் தூக்கலோடு வினவினாள்.
“ஜெலஸ்ஸா?” இன்பா கேட்க,
“லைட்டா” என்று கண்கள் சுருக்கி அவள் சொல்லியதில், பொறாமை என்பது வார்த்தையில் மட்டுமே இருந்தது.
“உங்க ஆட்டத்துக்கு நான் வரல” என்று எழுந்துகொண்ட உதயன், “ஹார்பர் வரை போயிட்டு வரேன்” என்று சென்றுவிட்டான்.
“அண்ணாவை இப்படி பார்க்க ரொம்பவே நல்லாயிருக்குல?” இன்பா கேட்டிட…
“என்னாலதான் அண்ணாக்கு நிறைய கஷ்டம்” என்ற நனி, “இனியாவது அண்ணா அவங்களுக்காகன்னு இருக்கணும்” என்றாள்.
“கண்டிப்பா மாட்டாங்க. வர ஆளும் அண்ணாக்கு ஏத்த மாதிரிதான். இங்க அண்ணாக்கு நாமதான் முதலில் அப்படிங்கிற மாதிரி அங்க அவங்களுக்கு அவங்க அண்ணா, தம்பிதான் ஃபர்ஸ்ட்” என்ற இன்பா, ‘இங்க வரதுக்கு முன்னவே உனக்காக அதிகம் யோசிக்கிறவ… வந்துட்டா…’ என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.
இன்பா நினைப்பதைப்போல் அஷ்மிதா தற்போது பிரணவ் மீது கோபமாக இருப்பதுக்கூட, பிரணவ் தன் காதலுக்கு தானே சிக்கலாக இருக்கிறான் என்பதை தாண்டி நனிக்காகவும் தானே!
‘ஜாடிக்கேத்த மூடி.’ மென் புன்னகை இன்பாவிடம். உதயன் என்றும் அவர்களின் நலன் மட்டுமே தன் சந்தோஷம் என்று வாழ்பவனாயிற்றே. இத்தகைய உடன் பிறப்பு அமைவதெல்லாம் வரம். இங்கு இவர்களும் வரம் பெற்றவர்கள் தான்.
________________________
“ஆல் செட்.”
உதயன் தகவல் அனுப்பியதும், அறையை விட்டு வெளியில் வந்தாள் அஷ்மிதா.
கூடத்திலே அமர்ந்திருந்தனர் ராகவன் மற்றும் விமலா. அவளிடம் பேச வேண்டுமென்று இருந்தனர்.
மகளை கண்டதும் விமலா அழைத்திட…
“உங்ககிட்ட பேசுறதுக்கு முன்ன அண்ணாகிட்ட எல்லாம் சொல்லணும் மாம். பிளீஸ்…” என்று நிற்காது வெளியேறிவிட்டாள்.
அஷ்மிக்கு அனைத்தும் பிரணவ் தான். தந்தையுமானவன் அவன். பெற்றோரை இழந்து நின்றவளை, தானும் அந்த வயதில் சிறுவன் என்பதை மறந்து, விமலாவை முந்திக்கொண்டு கைகளில் ஏந்தி நெஞ்சில் சுமந்தவன். அவனிடம் விளையாட்டாய் நடந்து கொண்டாலும், அவனது உறவில் அவளிடம் எப்போதும் அழுத்தம் தான். அவர்களுக்கிடையில் ஆர்யனையே அவள் அனுமத்திடமாட்டாள்.
அஷ்மிதா பிரணவ்விடம் சொல்லாது மறைத்த ஒரே விஷயம் அவளின் காதல் மட்டும் தான். பிரணவ் காதல் வலியில் மௌனித்திருக்க, அவளுக்கு ஏனோ தன்னுடைய காதலை சொல்ல முடியவில்லை.
அகம் நுழைந்த காதல் பார்வையிலும் கரங்களிலும் சேர்ந்திருந்தாலோ அல்லது உதயனிடம் சொல்லிட நினைத்திருந்தாலோ பிரணவ்விடம் தான் முதலில் சொல்ல வேண்டுமென்று சொல்லியிருப்பாள். அவளுக்குத்தான் அப்படியான சூழல்கள் அமையவில்லையே!
வீட்டில் கிளம்பிய வேகம் உணரும் முன் அலுவலகம் வந்து சேர்ந்திருந்தாள்.
எதிர்ப்பட்ட ரீமாவிடம்,
“நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு வந்திடுங்கக்கா. உங்க ஃபிரண்ட் வர்றாங்க” என்று சொல்லிக்கொண்டே, ரீமா புரியாது “யாரு?” என்று கேட்டதற்கு, “சீனியர்” என்று நடந்துகொண்டே சொல்லி பிரணவ்வின் அறைக்குள் அதே வேகத்தில் நுழைந்திருந்தாள்.
பிரணவ் அப்போதுதான் நனியிடம் பேசிவிட்டு, இல்லையில்லை சண்டை போட்டுவிட்டு, ‘செல்வா காலில் விழ வேண்டியது தான்’ என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
கதவு திறந்த சத்தத்தில் நிமிர்ந்த பிரணவ் முகத்தை சட்டென்று மாற்றி உம்மென்று வைத்துக் கொண்டான்.
“வாங்க மேடம். ஆபிஸ் வரமாட்டிங்க நினைச்சேன்” என்றான். கோப்புகளை ஆராய்ந்தபடி.
“அண்ணா” என்று அவள் அழைத்ததும், விலுக்கென நிமிர்ந்து தங்கையை பார்த்த பிரணவ், “மீ?” என்றான். தன்னையே சுட்டி. ஆச்சரியமாக.
“ஆமா… நீ என் அண்ணா தானே?”
“இப்படிலாம் ஷாக் கொடுக்காதம்மா. வழக்கம்போல பாசமா டேய் அப்படின்னே கூப்பிடு” என்றான்.
“உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றாள்.
“இதழ் விஷயமா இருந்தா இப்போ எதுவும் பேச வேணாம் அஷ்மி. நானே அவகிட்ட எல்லாம் ஓபனா பேசிட்டேன். ஜஸ்ட் நௌ” என்று வேகமாக சொல்ல வேண்டியதை எல்லாம் அவளிடம் சொல்லிவிட்டான்.
“இப்போ உன் சீனியர்தான் வீம்பு பண்ணிட்டு இருக்காள். என்கிட்ட பேசவே பயப்படுவாள் தானே? இப்போ எவ்ளோ ஆர்க்யூ பண்றா தெரியுமா?” எனக் கேட்டான்.
“அனுபவிடா… உனக்கு தேவைதான்” என்ற அஷ்மிதா, “உனக்கும் சீனியருக்கும் சீக்கிரம் கல்யாணம் ஆகிடும். நான் கியாரண்டி” என்றாள்.
“ம்க்கும்… அன்னைக்கு நானே பிடிக்கல சொல்ல சொன்ன கோபம் தான் அவளுக்கு இருக்கு நினைக்கிறேன். ஆனால் என்னை வச்சு செஞ்சிடுவாள் போல” என்றான்.
அஷ்மிதா சிரித்துவிட்டாள்.
“நீங்க எதும் பிளான் பண்றீங்களா?” அவளின் வார்த்தைகளை வைத்து யூகித்தவனாக வினவினான்.
“நாங்க இல்லை…”
“அப்போ வேற யாரு?” என்ற பிரணவ், யோசித்தவனாக, “செல்வாவா?” எனக் கேட்டான்.
“டேய் அண்ணா… எப்புட்ரா!” அவளிடம் ஆச்சரியம்.
“பாசமலருக்காக… பொண்ணு பார்க்கும் படலத்தை அரேஞ் பண்ணவர். இப்போ மட்டும் சும்மா இருந்திடுவாங்களா?” என்றான்.
“ம்ம்… தங்கச்சின்னா ரொம்பப்பிடிக்கும்” என்றாள்.
“ஹலோ எங்களுக்கும் தான் தங்கச்சின்னா உசுரு… ஆனால் பாரு அந்த வாலு தான் வேணும்னே சண்டை போடும். கோபமா பேசாமலாம் இருக்கும்” என்று உதடு சுளித்தான்.
“பின்ன, லவ் மேரேஜ் சான்ஸ் இல்லை. எப்படியும் நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள இருக்க காரணத்தை தாண்டி லவ்வை சொல்லிக்கப்போறதே இல்லைன்னு தெரிஞ்சு, எத்தனை நாள் வெயிட் பண்ணி, மாம் உன் கல்யாணத்தை பேச வச்சு, நீ ஓகே சொல்லி அப்படின்னு அந்த நாளை உருவாக்கினா… பொசுக்குண்ணு ஒண்ணுமே இல்லாம ஆக்கிட்ட. அதுவும் உனக்காக அந்த நாளுக்காக வெயிட் பண்ண சீனியரையே நோ சொல்ல வச்சிருக்க நீ… அப்போ கோபம் வரும் தானே?” என்றாள்.
“அப்போ செல்வாவுக்கு கூட்டு நீதானா?” என்றான். விழியுயர்த்தி அமர்த்தலாக.
“ஆமா… உதய் அவங்க தங்கச்சிக்காக பண்ணாங்க. நான் என் அண்ணாக்காக பண்ணேன். ஆனால் நீ கொடுத்தப்பாரு எங்களுக்கு ஒரு டிவிஸ்ட்” என்ற அஷ்மிதா, “செம காண்டாகிடுச்சு” என்றாள்.
“சாரி… நீ என்கிட்ட இதழும் என்னை விரும்புறான்னு இப்போ சொன்னதை அப்போ சொல்லியிருந்தா, இந்நேரம் எங்க கல்யாண வேலை நடந்திருக்கும்” என்றான்.
“அடேய் அண்ணா…” என்று பற்களைக் கடித்த அஷ்மிதா அவனின் கழுத்தை நெறித்து உலுக்கினாள்.
“ஹேய் அஷ்மி…” என்று சிரித்த பிரணவ், “ஓகே ஓகே நான் தான் தப்பு” என்று கத்தினான்.
“அது” என்று இருக்கையை இழுத்து அவனுக்கு பக்கவாட்டில் போட்டு ஒட்டி அமர்ந்தாள்.
“மேடம் எதோ பெரிய விஷயம் சொல்லப்போறீங்க? என்னது?” என்றான் அவள் பக்கமாக இருக்கையோடு நன்றாகத் திரும்பி.
அஷ்மிதா தடுமாற்றம் கொண்டாள்.
“முதல்ல இதை சொல்லு… உனக்கு கோபம் போச்சா?”
“அது இருக்கு தான்” என்ற அஷ்மிதா பிரணவ்வின் கரத்தை மணிக்கட்டில் அழுத்தமாக பற்றிக்கொண்டு, கண்களை இறுக மூடி, “நான் உதய்யை லவ் பண்றேன். இப்போ இல்லை காலேஜ் டைமிலிருந்தே. அவங்ககிட்ட இன்னைக்கு மார்னிங் வரை நானா என் லவ் சொல்லவே இல்லை. அவங்களுக்கே தெரிஞ்சிருக்கு. நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க” என்று படபடவென்று ஒரே மூச்சில் மனதில் உருபோட்டு வைத்ததை சொல்லி முடித்து ஒற்றை கண் மட்டும் பாதி திறந்து பார்த்தாள்.
பிரணவ் எவ்வித உணர்வையும் முகத்தில் காட்டாது பார்த்திருக்க,
“பர்ஸ்ட் டைம் சீனியர் கூட, அவங்க ஷிப்பிங் பார்க்க போனப்போ தான் உதய்யை பார்த்தேன். அப்புறம் எப்போ எப்படி பிடிக்க ஆரம்பிச்சது தெரியாது. திரி இயர்ஸ் பேக் அவங்க தான் கால் பண்ணி உங்களுக்கு வீட்டில் மேரேஜ் டாக் எடுத்தா சொல்ல சொன்னாங்க. ஒரு த்ரீ டைம்ஸ் தான் எனக்கு டெக்ஸ்ட் பண்ணியிருப்பாங்க. இதை தவிர்த்து வேறெதுவும் பேசியதில்லை” என்றாள்.
……..
“அண்ணா பிளீஸ் எதும் பேசுடா.” பிரணவ்வின் அமைதி அவளை கலங்கடித்தது.
“உனக்கு வேண்டான்னா வேண்டாம்… நான் மட்டுமில்ல, உதய்யும் புரிஞ்சிப்பாங்க” என்று முகம் கவிழ்ந்து சொல்லியவளின் துளி நீர், அவள் பற்றியிருந்த பிரணவ்வின் கையில் பட்டுத் தெறித்தது.