என் ஆயுள் நீயே 35

என் ஆயுள் நீயே 35

பிரணவ்விடம் பேசிவிட்டு வீட்டிற்குள் வந்த நனியிதழ் நேராக சென்றது உதயனிடம் தான்.

உதயன் பால்கனியில் நின்றிருக்க, பிரணவ்வின் வாகனம் அவனின் கண்ணைவிட்டு மறைந்தது.

“அண்ணா.”

நனியிதழ் உதயன் அருகில் வர, திரும்பி பால்கனி கம்பியில் சாய்ந்து, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்தான்.

“சொல்லு பட்டு.”

“நான் இப்போ…” அவள் தயங்கிட,

“பிரணவ்வை பார்த்திட்டு வர” என்றான்.

“சாரி செல்வா” என்றவள் வேகமாக அவனது மார்பில் சாய்ந்தாள்.

“சாரி சொல்ல என்ன இருக்கு? என்னோட ஆசையும் இதுதான். நீ… உன்னோட லவ்… உன்னோட விருப்பம் சரியா அமையனும்” என்றான்.

“உன்கிட்ட சொல்லாம போயிட்டன்னு எதும்…”

“நீங்க ரெண்டு பேரும் பேசி எல்லாம் சரியானாலே போதும்” என்ற உதயன், “இப்போ ஓகேவா?” எனக் கேட்டான்.

“நாளைக்கு பொண்ணு பார்க்கப் போறோம்ல… அங்க போனாதான் தெரியும்” என்றாள்.

அவள் எதை நினைத்து சொல்கிறாள் என்பது புரிந்து அமைதியாக இருந்தான். இப்போது சொன்னால் பிரணவ் சொல்லிய சர்ப்ரைஸ் இருக்காதே!

நனியிதழும் இன்னும் பெண் கொடுத்து பெண் எடுப்பதாக, உதயன் விரும்பும் பெண்ணின் வீட்டில் சொல்லியதை உதயனிடம் யாரும் சொல்லவில்லை என்று நினைத்தாள். அவன் வைத்திருக்கும் ஆச்சரியம் தெரியாது, அவனுக்குத் தெரிந்திருந்தால் நிச்சயம் இது குறித்து தன்னிடம் பேசியிருப்பான் என்று நினைத்து, நாளை அங்கு அந்த பையனிடம் பேசிட வேண்டுமென்று தானெடுத்த முடிவில் உறுதி கொண்டாள்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த எழில் உதயனின் விஷயம் தெரிந்து துள்ளி குதித்து அவனை கேலி செய்து நேரத்தை இலகுவாக்கியிருந்தாள்.

நடந்து நிகழ்வுகளில் உதயன் எழில் விஷயத்தையே மறந்திருந்தான். நாளை மறுநாள் அவள் சொல்லிய பையனைப் பற்றி விசாரிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.

பிரணவ் நனியிதழை பார்த்துவிட்டு நேராக சென்றது ஆர்யனை காணத்தான்.

சகோதரனின் வரவை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“ஹாய் ப்ரோ…”

“ஒழுங்கா அண்ணா சொல்லுடா” என்று தம்பியை அணைத்து விடுத்த பிரணவ், “அஷ்மியை பொண்ணு பார்க்க வர்றாங்க. நீயும் இருந்தா நல்லாயிருக்கும். வர முடியுமா?” எனக் கேட்டான்.

“லாஸ்ட் மினிட் சொல்றீங்க. நான் யாரோதானே உங்களுக்கு” என்று ஆர்யன் முகத்தை தூக்கி வைத்திட, “நீ போய் கிளம்பி வாடா. நான் வார்டன் பார்த்து சைன் பண்ணிட்டு வரேன். எல்லாம் போகும் போது சொல்றேன்” என்று ஆர்யனின் முதுகில் கை வைத்து விடுதி கட்டிடத்தினுள் நோக்கித் தள்ளினான்.

பிரணவ் விடுதி காப்பாளரிடம் சொல்லிவிட்டு கையெழுத்திட்டு வர, அஷ்மிதா அழைத்திருந்தாள்.

“எங்கடா இருக்க? சீனியர் பார்த்து பேசிட்டியா? என்ன சொன்னாங்க?” என்று மூச்சு விடாது அடுக்கினாள்.

“ஹேய் ரிலாக்ஸ்” என்ற பிரணவ், “என் சைட் க்ளியர் தான். எல்லாம் நாளைக்கு சரியாகிடும்” என்றான்.

“அப்போ ஓகே… வரும் போது ஆரியை கூட்டிட்டு வந்திடு. அவன் இல்லாம எப்படி?” என்றாள்.

“பாருடா தம்பி ஞாபகம்! அவன்கிட்ட நீ சொல்லலன்னு கோபமா இருக்கான். வீட்டுக்கு வந்ததும் பேசி அடிச்சிக்கோங்க” என்று வைத்திட்டான்.

இருவரும் வீடு வந்து சேர்ந்தபோது நேரம் பத்தை தொட்டிருந்தது.

பிரணவ் தன்னை ஃபிரஷப் செய்து ஆடை மாற்றி கீழே வர, “வீட்டுக்கு போயாச்சா?” என உதயனிடமிருந்து தகவல் வந்தது.

“ஜஸ்ட் நௌ மாம்ஸ்” என்று பதில் அனுப்பிய பிரணவ், “உங்க ஆளு சேட்டை அவதாரம் லைவ் பார்க்குறீங்களா?” என்று கேட்டான்.

உதயனுக்கு பிரணவ் கேட்பது புரியவில்லை…

“வீடியோ கால்?” என்று கேள்வியாக அனுப்பினான்.

“அதே… அதே…” என்று சிரிக்கும் பொம்மைகளுடன் அனுப்பிய பிரணவ், அடுத்த நொடி யாரும் அறியாது வீடியோ கால் செய்து அலைபேசியை உதயன் சரியாக பார்க்கும் கோணத்தில் வைத்துக் கொண்டான்.

வரும் வழியிலேயே பிரணவ் ஆர்யனிடம் அஷ்மிதாவின் காதலை சொல்லியிருக்க, அர்யனுக்கு ஆச்சரியம் என்பதைவிட அவள் தன்னிடம் இதுவரை சொல்லவில்லையே என்று உரிமை கோபம் எட்டிப்பார்க்க, வீட்டிற்கு வந்ததும் அவளிடம் மல்லுக்கட்ட ஆரம்பித்துவிட்டான்.

விஜயன் அலுவலகம் சென்று வந்ததும் விமலா எல்லாம் சொல்லிவிட, மற்றவற்றை பேச பிரணவிற்காக பெரியவர்கள் மூவரும் காத்திருக்க, அதற்கு வாய்ப்புக்கொடுக்காது இளையவர்கள் இருவரும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இருவரின் சண்டையும் சுவாரஸ்யமாக இருந்திட உதயனுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறான் பிரணவ்.

“அதெப்படி என்கிட்ட சொல்லாம பொண்ணு பார்க்க வர வரைக்கும் நீங்க ஏற்பாடு செய்யலாம்?” ஆர்யன் முறுக்கிக் கொண்டு நின்றான்.

“அன் எக்ஸ்பெக்ட்டட்டா தம்பி.” முடிந்த வரை அமைதியாக சொல்லிய அஷ்மிதா அவன் விடுவதாக இல்லையென்றதும் தானும் வாதம் செய்தாள்.

“உங்ககிட்ட எல்லாம் சொல்றேன் தானே! எதாவது மறைச்சு இருக்கேனா?” என்றான். ஆதங்கமாக.

“இது தப்புதானே அஷ்மி. நீ தம்பிக்கிட்ட சொல்லியிருக்கணும்” என்று பேரனுக்கு சப்போர்ட் செய்தார் ராகவன்.

“நல்லா கேளுங்க தாத்தா. என் லவ் கூட உங்கக்கிட்டலாம் சொல்ல முன்னாடியே அக்காகிட்ட சொல்லிட்டேன். அப்போக்கூட இவங்க லவ் பண்றதை என்கிட்ட சொல்லல” என்றான். முகத்தை உம்மென்று வைத்தபடி.

“பாரு புள்ளை ரொம்ப ஃபீல் பண்ணியிருக்கான்.”

“பொய்… பொய்… பொய் சொல்றான் தாத்தா. லாஸ்ட் மந்த் ஃபிரண்ட்ஸ் கூட ரோட் ட்ரிப் போயிருக்கான். இன்ஸ்டா பிக்ஸ் வச்சு தான் எனக்குத் தெரியும். அதுவும் அண்ணா போகக்கூடாது சொல்லியும் இவன் போயிருக்கான். இவன் எல்லாம் என்கிட்ட சொல்றானாமா? சொல்ற மூஞ்சியைப் பாருங்க” என்று அஷ்மி அவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுக்க…

“அப்போ நான் உங்ககிட்ட எதுவுமே சொல்லல சொல்றீங்களா?” என்று அவளின் முன் வந்து நின்றான் ஆர்யன்.

“சொல்றேன்னு சொல்லுவியா நீ?” எனக் கேட்ட அஷ்மி, “இதுதான் ரொம்ப முக்கியமானது. எல்லாரும் கவனமா கேளுங்க. அண்ணா நீயும்” என்றதோடு, “அந்த ஆந்திரா மீல்ஸ்” என்று ஆரம்பிக்க, ஆர்யன் வேகமாக அவளின் கழுத்தை ஒரு கையால் சுற்றி வளைத்து மறு கையால் அவளின் வாயினை மூடியிருந்தான்.

அஷ்மி திமிறி விலக பார்க்க… அவன் விடவில்லை.

“அக்கா பிளீஸ் சொல்லாதீங்க.”

“நான் சொல்லுவேன்… அண்ணா இவன்.” அவனின் கையை விலக்கிவிட்டு அவள் சொல்ல, மீண்டும் வாயினை மூடியிருந்தான்.

இருவரும் மாற்றி மாற்றி மல்லுக்கட்டி ஒரு கட்டத்தில் நீள்விருக்கையில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உருள, ஆர்யனை வயிற்றிலே குத்தி அவன் நிலை குலைந்த சிறு இடைவெளியில் அவனை தனக்கு கீழ் தள்ளி அவன் மீது அமர்ந்து கொண்டாள்.

நடந்த விளையாட்டில் முகம் முழுவதும் முடி வழிந்திருக்க, ஒற்றை கையால் கோதி சரி செய்த அஷ்மிதா,

“இப்போ சொல்றேன் கேளுங்க” என்று ஆரம்பிக்க, “அக்கா வேண்டாம்” என்று அவளை சுழற்றி தள்ளி சடுதியில் அவள் மீது ஆர்யன் அமர்ந்து வாயினை மூடிட முயன்றான்.

“டேய் விடேன்டா. அதான் இப்போ தெரிஞ்சிடுச்சு தானே?” என்று விமலா இருவருக்கும் நடுவில் புகுந்து சிறியவனை அமைதியாக்க முயற்சித்திட அவர் களைத்துப் போனது தான் மிச்சம்.

“உனக்கு கோபமில்லை சொல்லு. நான் சொல்ல மாட்டேன்” என்று அஷ்மிதா டீல் பேசிட, ஆர்யனும் அவளிடம் சமாதானமாகினான்.

சிரித்தபடி இருவரின் சேட்டையையும் பார்த்திருந்த பிரணவ், “அதென்ன ஆந்திரா மீல்ஸ்?” என்று மீண்டும் ஆரம்பிக்க…

“தெய்வமே” என்று ஆர்யன் தன் அண்ணனின் காலிலே விழுந்துவிட்டான்.

“சரி… சரி… நான் எதுவும் கேட்கல. எழுந்திருடா” என்று பிரணவ் சொல்லிய பின்னரே வீடு அமைதியாகியது.

நேராக கிச்சன் சென்று தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திய ஆர்யன், அஷ்மிக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க…

“இப்போதானே ரெண்டும் அப்புடி அடிச்சிகிட்டாங்க… அதுக்குள்ள பாசத்தை பாரு” என்ற விமலா,

“இதுங்க என்னமோ பண்ணட்டும். உனக்கு எல்லாம் மாப்பிள்ளை சொல்லிட்டார் தானே பிரணவ்?” என்றார் பெரிய மகனிடம்.

அவர் அவ்வாறு கேட்டதில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த அஷ்மிக்கு மாப்பிள்ளை என்ற வார்த்தை புரையேற வைத்தது.

“எதே மாப்பிள்ளையா?” என்றவள், “உதய் உன்கிட்ட பேசினாராடா?” எனக் கேட்டாள்.

“ஆமா. பேசினாங்க.”, பிரணவ்.

“மாமா நேம் உதய்யா?” ஆர்யன் இடைப்புகுந்தான்.

“நீ வேற ஏன்டா?” என்ற அஷ்மிதா, “என்ன பேசினாங்க?” என்றாள்.

“அதெல்லாம் சொல்றதுக்கில்லை” என்றான் பிரணவ்.

“ஏன்… ஏன்… ஏன்… சொல்லக்கூடாது.”

“மாமனுக்கும் மச்சானுக்கும் நடுவில் ஆயிரம் இருக்கும்” என்ற பிரணவ் தங்கையின் முகம் போனப்போக்கில் வெடித்து வந்த சிரிப்பை கன்னக்கதுப்பில் ஒளித்தான்.

“ம்க்கும்… ரொம்பத்தான். என்னாலதான் அவங்க உங்களுக்கு மாமாவாக்கும். எனக்கு உன்னைவிட உரிமை அதிகம் பிரணு” என்று அஷ்மி புருவம் உயர்த்திட, “அப்படிங்களா?” என்றவன், “அப்போ அவர்கிட்டவே கேட்டுக்கோ” என்று அலைபேசியை அவளின் கையில் கொடுத்துவிட்டு விமலா பக்கம் திரும்பிக் கொண்டான்.

“டேய் அண்ணா யாருகிட்ட?” என்று பார்த்த அஷ்மிக்கு திரை நிறைத்த உதயன் முகம் கண்டு மூச்சே நின்றது.

“எல்லாம் ஓகே மாம்” என்ற பிரணவ், “நாளைக்கே எல்லாம் ஃபிக்ஸ் பண்ணிடலாம்” என்றான். அதனைத் தொடர்ந்து பெரியவர்களுடன் பிரணவ் அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்து பேசிட, இங்கு அஷ்மியின் நிலை சொல்லவும் வேண்டுமோ?

வெட்கம் பிடுங்க, முகத்தை ஒளிக்க முடியாது திணறிக் கொண்டிருந்தாள்.

“நீங்க அப்படி ஓரமா போய் வெட்கப்படுங்க. நான் மாமாகிட்ட பேசுறேன்” என்று அலைபேசியை பறித்த ஆர்யன், அறிமுகமே இன்றி இயல்பாய் உதயனிடம் பேச ஆரம்பித்துவிட்டான். உதயனும் அவனுக்கு ஏற்றார் போல் பதில் பேசிட, ஆர்யனுக்கும் உதயனை பார்த்ததும் பேசியதும் பிடித்தது.

“பக்கி அண்ணா கோர்த்தா விடுற… எவ்ளோ நேரமாடா பார்த்திட்டு இருக்காங்க?” பிரணவ்வின் தோளில் அடி ஒன்று வைத்தாள்.

“உங்க ஃபைட் ஸ்டார்ட் ஆனதிலிருந்தே.” அலுங்காது அவளின் தலையில் இடியை இறக்கினான்.

அஷ்மிதா, “அப்போவேவா” என்று அதிர, “அக்கா எனக்கு மாமா டபுள் ஓகே. இந்தாங்க” என்று அலைபேசியை அவளின் கையில் வைத்தான்.

“அச்சோ நானில்லை” என்று அஷ்மி பதற, “பேசிட்டு மொபைல் கொண்டுவா” என்று பிரணவ் எழுந்து சென்றிட, பெரியவர்களும் பேச வேண்டியதெல்லாம் பேசி முடித்ததால் நேராமகாவும் தத்தம் அறைக்குச் சென்றனர்.

கூடத்தில் தனியாக நின்ற அஷ்மிதா வேகமாக தன்னுடைய அறைக்குள் நுழைந்து, உதயனை பார்க்க…

“பிடிச்சிருக்கு அஷ்மிதா” என்று இதயம் தேங்கிய ரசனையாய் மொழிந்தான் உதயன்.

“ஹான்…” இமைகள் படபடக்க அவளின் நடுக்கம் கூடியது.

“அமைதியான அஷ்மிதாவை விட, சேட்டைக்கார அஷ்மிதாவை ரொம்ப பிடிச்சிருக்கு… ரொம்ப ரொம்ப” என்றான்.

அஷ்மிதா இமைகள் தழைத்து உதடு மடிக்க…

“பியூச்சரில் என் மேலயும் உட்காரலாம். பெர்மிஷன் கிரான்ட்டட்” என்று உதயன் சிரியாது சொல்ல…

“அச்சோ உதய்” என்று ஒற்றை கையால் முகம் மூடினாள் அஷ்மிதா.

அவளின் இயல்பில் அவளை ரசித்து அகம் சேர்த்தவன், நாளைய முடிவில் அவளை அவளாகவே தனக்குள் சுவீகரித்துக்கொள்ளத் தயாரகினான்.

error: Content is protected !!
Scroll to Top