நெஞ்சோடு காதல் சேர 23

அத்தியாயம் 23

விக்னேஷிற்கு அழைத்து பார்த்த வருண், அவனின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வரவும் அமைதியாக விட்டுவிட்டான்.

ஆனால் உள்ளிருப்பதை யாரிடமாவது கூறினால் மனம் கொஞ்சம் அமைதிப்படும் என நினைத்தவன், விக்னேஷைத்தேடி காவல் நிலையத்திற்கே சென்றான்.

வருணை பார்த்ததும் அந்த காவல் நிலையத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிதாக வந்த கான்ஸ்டபிள் வம்சிதானோ என்று விறைப்பாக சல்யூட் வைத்தான்.

“நான் இப்போ வேலையில் இல்லையே! நீங்க வேலைக்கு புதிதா” என அந்த கான்ஸ்டபிள் பார்த்து வினவினான்.

“சும்மா விளையாடாதீங்க சார். மதியம் தானே யூனிஃபார்மில் வந்து டூயூட்டியில் ஜாயின் பண்ணீங்க. அதுக்குள்ள இப்போ ஈவ்னிங் வந்து வேலையில் இல்லைன்னு சொன்னால் நான் நம்பிடுவேனா” என்று  கான்ஸ்டபிள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராணி மேடம் வருணிடம் வந்தார்.

“வாங்க சார் எப்படி இருக்கீங்க?”

ராணி கேட்ட கேள்விக்கு வருண் பதில் சொல்லாது, கான்ஸ்டபிள் சொல்லிய வார்த்தைகளை மனதிற்குள் அசைபோட்டான். ஏதோ புரிவது போலிருந்தது.

“வம்சி வந்திருக்கானா?”

“சார்…” ராணி பதில் சொல்லாது கைகளை பிசைந்தார்.

வம்சி கோர்டிற்கு செல்வதற்கு முன், தான் இங்கு முன்பு வேலை பார்த்த சமயம் இங்கிருந்தவர்களை அழைத்து,

“நான் இங்கு வந்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது… என் குடும்பத்தில் இருந்து வந்தாலும் சொல்லக்கூடாது” என்று எச்சரித்திருந்தான்.

அதனால் ராணி வருணிற்கு பதில் சொல்லாது இருக்க,

“ஓகே ஃபைன்” என்ற வருண், “விக்கி இருக்கானா?” எனக் கேட்டான்.

“அவர் கோர்ட்டுக்கு போயிருக்கிறார் சார்.” ராணி குறைந்திட்ட குரலில் கூறினார்.

“உங்க சார் வந்தால் சொல்லுங்க நான் வந்து போனேன்னு…” ராணி தலையாட்ட, “உங்க விக்கி சார் இல்லை. தி கிரேட் டிசி சார் கிட்ட” என்றவன் வேகமாக சென்றுவிட்டான்.

வருணுக்கு இருந்த மன அழுத்தத்தில் வம்சியின் மீது கோபம் கோபமாக வந்தது.

‘எனக்கிருக்கும் தவிப்பு அவனுக்கில்லையா? அவனுக்கு என்னை பார்க்க வேண்டுமென்று கூட தோணவில்லையா?’ காதலின் அழுத்தத்தில் இருந்தவன் சகோதர பாசத்தில் கட்டுக்கடங்காது பொங்கும் கோபத்தில் வெடித்தான்.

சாலையோரம் காரினை நிறுத்திவிட்டு… தலையை பிடித்துக்கொண்டு கத்தியவன் “வம்சி ஏன்டா இப்படி பண்ணுற” என்று அருகில் இல்லாதவனிடம் கேட்டவன் “இனி நீயா வராது உன்னை நான் தேடி வரமாட்டேன்” என சொல்லிக்கொண்டான்.

அப்படி சொல்லியவனே நாளை அவன் முன் சென்று நிற்கவிருக்கின்றான்.

****

என்ன தான் தேவிகா தன் அக்காவிற்காக மனதில் அரும்பிய காதலை இல்லையென்று சொல்லிக் கொண்டாலும் அவளால் வருணை நினையாது இருக்க முடியவில்லை.

வருணின் நினைவு வரும் போதெல்லாம், அவன் அவளைத் தாங்கி பிடித்ததும் சேர்ந்தே நினைவிற்கு வந்தது. அவன் தொட்ட இடையில் இப்போதும் குறுகுறுப்பை உணர்ந்தாள். அவளுக்கு தெரிந்துதான் இருந்தது வருணை எளிதில் மறக்க முடியாதென. ஆனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவள் அழ மட்டுமே முடிந்தது.

“கடவுளே என் மனதை எப்படியாவது மாற்றுங்களேன்” என இறைவனிடம் கேட்டுக் கொண்டவள்… குலுங்கி குலுங்கி அழுது கரைந்தாள்.

நேற்றெடுத்த திடமெல்லாம் இன்று எங்கோ செல்வதைப்போல் இருந்தது.

அப்போது அவள் அறைக்குள் எதையோ எடுக்க வந்த மென்னிலா பதறி என்னவென்று கேட்க தேவிகா சொல்ல மறுத்துவிட்டாள்.

தேவிகாவிற்கு நன்கு தெரியும், தன் காதல் தெரிந்தால் நிச்சயம் அவளின் பிடித்தத்தை மாற்றிக் கொள்வாளென்று அதற்காகவே நிர்தாட்சண்யமாக வாயினை இறுக பூட்டிக் கொண்டாள்.

மென்னிலாவும் விடுவதாக இல்லை.

அதனால் அவளை சமாளிப்பதற்காக ஏதேதோ காரணங்கள் சொல்ல… தங்கையின் வார்த்தைகளை மென்னிலா நம்பவில்லை என்பது அவளின் முகத்திலேயே தெரிந்தது.

“உனக்கு எதாவது பிரச்சினை இருந்தால் என்னிடம் சொல்லும்மா?” தாயின் பரிவுடன் கேட்டும்,

“எனக்கும் சொல்லத் தோன்றும் போது சொல்கிறேன் அக்கா” என்று தேவிகா முடித்துக்கொண்டாள்.

அந்நேரம் அறைக்கு வெளியில் சத்தம் கேட்டு இருவரும் எழுந்து சென்றனர்.

அங்கே ரேணுகா ராஜராஜனிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

“அப்படியெல்லாம் போய் கேட்க முடியாது ரேணு… புரிஞ்சிக்கோ!”

“ஏன்? ஏன் கேட்க முடியாது? அவங்க மட்டும் வந்து பொண்ணு கேட்கலாம் நாம் அவங்ககிட்ட பையன் கேட்கக்கூடாதா?”

இதென்ன பிடிவாதமென்று ராஜராஜனுக்கு ஆயாசமாக வந்தது. தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.

“இப்போ அவங்ககிட்ட பேச முடியுமா? முடியாதா?”

“என்னால் முடியாது?” பட்டென்று மொழிந்திருந்தார் ராஜராஜன்.

“அப்போ சரி, நானே பேசுறேன் அவங்ககிட்ட.”

“ஏன் ரேணு புரிஞ்சிக்காமல் பேசுற… தேவிகாவுக்கு இந்த வருடம் படிப்பு இருக்கே!”

“அதான் முடியப்போகுதே!”

“விடுடா… நாம் என்ன சொன்னாலும் அவள் புரிந்து கொள்ளமாட்டாள்.” இருவருக்கும் வாதம் மேலும் தொடர்வதை விரும்பாத ராஜன் மகனை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் அதுதான் அங்கு வினையாகிப் போனது.

“என்ன நான் புரிந்து கொள்ளமாட்டேன்…”என்று ஆங்காரமாகக் கேட்ட ரேணுகா, “இப்போதான் எனக்கு நல்லா புரியுது… உங்க பொண்ணுக்கு மட்டும் நல்ல பெரிய இடமாகப் பார்த்து கட்டிக்கொடுத்து நல்ல சந்தோஷமா இருக்கணும். என் பொண்ணுக்கு அப்படியொரு வாழ்க்கை கிடைத்திடக் கூடாதென்று என் மேல் இருக்கும் கோபத்தையெல்லாம் என் பொண்ணோட வாழ்க்கையில் காட்ட நினைக்கிறீங்க அதானே” என்று கத்தினார்.

“அச்சோ ரேணு அப்படியில்லை… இவர்கள் பெரும் செல்வந்தர்கள் என்றெல்லாம் அறிந்து இந்த வரனை அப்பா அழைத்து வரவில்லை. அவர்கள் வீட்டிற்கு வந்து அவர்களைப்பற்றி சொல்லிய பின்பு தான் அவர்களின் வளமே எங்களுக்குத் தெரியும்.”

ரேணுகாவின் முறையற்ற குற்றச்சாட்டுக்கு ராஜராஜன் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

“இதைவிட பெரிய இடமாக பார்த்துக்கூட தேவிகாவுக்கு மணம் முடிப்போம்.” தன்மையாகவேக் கூறினார்.

“இங்கையும் தான் பணம் கொட்டி கிடக்கு ஆனால் அதையெல்லாம் அந்த மகராசி தானே ஆளுறாள்” என்று மென்னிலாவை பார்த்து பேசிய ரேணுகா, “என் பொண்ணு அந்த வீட்டிற்குத்தான் வாழப்போக வேண்டும்” என்று முடிவாகக் கூறினார்.

அவர்களின் வாக்குவாதம் புரியாது இரு இளம் பெண்களும் குழப்பத்தில் நின்றிருக்க,

“சரி ரேணுகா தேவிகா அந்த வீட்டிற்கே வாழ போவாள் போதுமா” என்ற ராஜன்,

“மாப்பிள்ளைக்கு ஒரு தம்பி இருப்பதாக சொன்னார்களே அவரை நம் தேவிகாவுக்கு கேட்டு பார்ப்போம். அக்கா தங்கை ஒரே வீட்டில் இருந்தால் நமக்கும் அலைச்சல் மிச்சம் தானே!” என மகனிடம் தனக்குத் தோன்றிய தீர்வை கூறி சென்று விட்டார்.

ராஜராஜனும் இதற்கு மேல் தான் கூற என்னயிருக்கிறது என்பதுபோல் மௌனமாகிவிட்டார்.

ரேணுகாவிற்கு தன் திட்டம் நிறைவேறியதில் மட்டற்ற மகிழ்ச்சி.

நிச்சயத்திற்கு ஒரு வாரமே இருந்ததால், அதோடு வருணும் தேவையற்றதை பிதற்றிக் கொண்டிருப்பதால், ஈஸ்வர் அனைத்தும் துரித கதியில் நடத்திக் கொண்டிருந்தார்.

அதன்படி மென்னிலாவுக்கு நிச்சயத்திற்கு தாங்கள் செய்ய வேண்டிய நகைகள் துணிகள் ஆகியவற்றை தன்னுடைய ஆட்கள் மூலம் கொடுத்து அனுப்பியிருந்தார்.

“இதெல்லாம் சபையில் வைத்து கொடுப்பதுதானே முறை” என்று ராஜன் கேட்டதற்கு, “புடவைக்கு மேல்ச்சட்டை தைக்கணுமே… அதோடு நகைகளும் மென்னிலாவுக்குத்தானே அதான் கொடுத்து அனுப்பினேன். பிடிச்சிருக்கா பாருங்க இல்லையென்றால் முன்னாடியே மாற்றிக் கொள்ளலாம்.

சபையில் வேண்டுமென்றாலும் வேறு செய்துவிடலாம்” என்று கூறினார் ஈஸ்வர்.

இங்கு ராஜனுக்கு ஈஸ்வரின் பேச்சில் மனது நிலைத்துவிட்டது.

புடவையின் விலையே லட்சத்தில் இருக்க, ரேணுகாவிற்கு வயிறு எரிந்தது.

‘இவர்களின் வளமை முன்பே தெரிந்திருந்தால் மென்னிலாவின் ஜாதகத்தில் குறை அப்படி இப்படின்னு ஏதாவது சொல்லி தேவிகாவுக்கு முடித்திருக்கலாம்’ என்று பொறுமியவருக்கு வருணுக்கு தம்பி இருக்கும் நினைவு வந்ததும் மனதில் திட்டமும் உடன் வந்தது.

திட்டத்தின் படி “வருணை தேவிகாவுக்கு பேசுங்க… இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு… உங்க பொண்ணுக்கு நீங்க வேறு இடம் பாருங்க” என்று ரேணுகா ஆரம்பித்து வைக்க… வாதம் நீடித்து, இறுதியில் அவருக்கு சாதகமான பதிலை ராஜனின் வாயினாலேயே சொல்ல வைத்துவிட்டார்.

தன் திட்டம் நிறைவேறினால் போதுமென்ற நிலையிலிருந்த ரேணுகா அங்கு அதிர்ந்து நின்றிருந்த தன் மகளைக்கூட ஏறிடாது நகர்ந்தார்.

ரேணுகாவின் பேச்சுக்கள் மென்னிலாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும், தன் தங்கையும் தன்னுடனே வரப்போகிறாள் என்பதில் உண்மையான சந்தோஷம் கொண்டாள்.

“தாத்தாவின் விண்ணப்பத்திற்கு அவர்கள் சம்மதித்தால் நீ என்னோடே இருக்கலாம்” என்று தங்கையை கட்டிக்கொண்ட மென்னிலா உற்சாகமாக துள்ளினாள்.

ஆனால் தேவிகாவுக்கு அந்த நினைவே கசந்து வந்தது.

‘அவரை தினமும் நேரில் பார்த்துக்கொண்டே இன்னொருவருடன் நான் வாழ முடியுமா?’ மனதோடு கேட்டவளுக்கு பதிலே எழுதப்படவில்லை.

மறுக்கத் தோன்றியது. இப்பேச்சினை நிறுத்துங்கள் என்று கத்த வேண்டும் போலிருந்தது.

ஆனால்?

“தான் இப்போது வேண்டாமென்றால் தன் அன்னை மென்னிலாவின் திருமணத்தையும் நிறுத்திடக் கூடும்” என்று சிந்தித்தவள் “நடப்பது நடக்கட்டும், அவரின் தம்பியிடமே சமயம் பார்த்து பேசிவிடலாம்” என்று தீர்மானித்த தேவிகா நடப்பதை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.

***

வருணும் வம்சியும் எப்போதும் ஒன்றாக அமர்ந்து பேசும் இரவின் கருமையில் மொட்டைமாடி சுவற்றில் இப்போது வருண் மட்டும் அமர்ந்திருந்தான்.

அவன் வம்சியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

“தன் தம்பியின் செயல்களுக்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் காரணமிருக்கும்” என்று அறிந்தவனால் அவனின் விலகளை ஏற்க முடியவில்லை.

அவனின் காதலைவிட வம்சியின் மீதான பாசம் தான் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

வருண் வம்சியின் மீதான எண்ணத்தில் உழன்று கொண்டிருக்க, அவனின் அலைபேசி நீண்ட நேரமாகவே ஒலித்துக் கொண்டிருப்பதாக அவனின் அலைபேசியை கொண்டு வந்தார் வசந்தி.

“சீக்கிரம் பேசிட்டு வந்து தூங்கு வருண். எல்லாம் சரியாகிவிடும்” எனக்கூறிச் சென்றார்.

அவருக்கு வேறென்ன சொல்லவென்றும் தெரியவில்லை.

மகனின் வாடிய முகத்தை பார்த்துக்கொண்டே சென்றுவிட்டார்.

மீண்டும் அலைபேசி சிணுங்க புது எண்ணாக இருக்கவும் கடுப்புடனே எடுத்து காதில் வைத்தான்.

“ஹலோ யாருங்க?” எரிச்சலாகத்தான் வெளிவந்தது அவனின் வார்த்தை.

“நான் தான்?”

“நான் தான்னா… பேரில்லையா?” யாருடா அது இந்த நேரத்தில் இப்படி விளையாடுவதென்று ஆத்திரம் கூட எழுந்தது. பெண்ணின் குரல் என்பதால் தன்மையாகவே பேச முயற்சித்தான்.

“மென்னிலா.” அவனின் குரல் பேதத்தில் மேற்கொண்டு விளையாடாது தன்னுடைய பெயரை கூறினாள்.

சட்டென்று தன்னை சரி செய்தவன், “சாரிங்க வொர்க் டென்ஸன்” என்று தன்னிலை குறித்து கூறினான்.

“புரியுதுங்க… நீங்க இப்போ ஃபிரியா இருப்பீங்கன்னு சொன்னாங்க அதான் கால் செய்தேன்.” மென்னிலாவின் குரலே மென்மையாகத்தான் ஒலித்தது.

தானே மென்னிலாவை அழைத்து பேச நினைத்திருக்க அவளே அழைத்தது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.

அதன் பின்னர் இருவருக்கிடையிலும் அமைதி.

“போலீஸ் வேலைன்னாலே இப்படித்தான் எப்பவும் டென்ஷனா இருக்குமா?” அமைதியை உடைக்க வேண்டுமேயென்று எதையோ கேட்டு வைத்தாள்.

“அய்யோ இப்போ நான் போலீஸ் இல்லைங்க.” சாதாரணமாக பேசத் துவங்கினால்தான் மனதிலிருப்பதை வெளிப்படையாக சொல்ல வருமென்று அவள் கேட்டதற்கு பதில் அளித்தான்.

“பொய் சொல்லாதீங்க, நான்கு நாட்களுக்கு முன்பு கூட உங்களை போலீஸ் ட்ரெஸ்ஸில் பார்த்ததா என் பிரண்ட் சொன்னாளே! ஏன் நீங்களும் அவளிடம் போனில் பேசுனீங்களே! அவளும் உங்களை நாங்க தேடியதை…”

வருண் தன்னிடம் விளையாடுகிறான் என்று நினைத்த மென்னிலா அவன் போலீஸ் தான் என்பதை நிரூபிக்க வைஷூ சந்தித்ததை சொல்லியவள் ஒரு ஃபுலோவில் அவளின் காதலைப் பற்றியும் வார்த்தைகள் வந்துவிட உடனே சுதாரித்து நிறுத்திக் கொண்டாள்.

ஆனால் அவள் முடிக்காது விட்ட வாக்கியம் சரியாக வருணின் செவிகளை அடைந்திருந்தது. அது அவனை யோசிக்கவும் வைத்ததும்.

error: Content is protected !!
Scroll to Top