நெஞ்சோடு காதல் சேர 24

அத்தியாயம் 24

‘மென்னிலா எதோ சொல்ல வந்தாங்க.. பிறகு நிறுத்திட்டாங்க, அவங்க பிரண்ட் என்னை பார்த்தங்களா? ஒருவேளை வம்சியா இருக்குமோ? இருக்கலாம்’ மனத்திற்குள்ளே அலசிக் கொண்டிருந்தவனுக்கு மூளையில் ஏதோ புரிந்தும் புரியாத நிலை.

அந்நொடி ஏனோ வம்சி தேடும் பெண்ணின் நினைவு வருணின் நினைவில் வந்து போனது.

‘சரி என்ன சொல்ல வந்தீங்க கேட்டால் நிச்சயம் சொல்ல போவதில்லை. அதனால் அவங்க வழியில் சென்றே கேட்போம்’ என நினைத்தவன் அவளிடம் பேசத் துவங்கினான்.

“சரி உங்க பிரண்ட் என்னை எங்கு பார்த்தாங்க?”

“ஹ்ம்ம் ஹைதராபாத்… நீங்க அங்கு தானே வேலை செய்றீங்க. அப்போ அங்குதானே பார்த்திருக்க முடியும். தெரியாத மாதிரி கேட்கிறீங்க” என்றாள்.

“நான் உங்களை பார்க்க வருவதற்கு முன்பு என்னை எங்காவது பார்த்திருக்கிறீங்களா?”

“தெரியாத மாதிரி கேட்கிறீங்க!”

வருண் தான் சொல்ல வந்து நிருத்தியதை என்னவென்று கேட்காது வேறொன்றை கேட்கவுமே சற்று படபடப்பு நீங்கி அதனை மறைப்பதற்காகவே அவன் கேட்டதற்கு சற்றும் யோசிக்காது பதில் கூறினாள்.

அந்நேரம் வைஷூவே தன்னைப்பற்றி தன் காதலைப்பற்றி வம்சியிடம் சொல்லிவிட்டதை ஏனோ மென்னிலா மறந்துபோனாள்.

‘அப்போ நிச்சயம் வம்சியைத்தான் பார்த்திருக்காங்க… அப்போ வம்சியை நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது நான் மென்னிலாவை பார்ப்பதற்கு முன்பே பார்த்திருக்கிறாங்க என்றால் இவங்களுக்கு ஏற்கனவே வம்சியை தெரிந்திருக்கணுமே எங்கு எப்படி?’ சிந்திக்கத் துவங்கிய மூளையை ஓரம் கட்டிவிட்டு அடுத்து வினவினான்.

“நீங்க சென்னையில் தான் படித்தீங்களா?”

“இல்லை பட் சென்னைக்கு ஒருமுறை காலேஜ் ட்ரிப் வந்திருக்கோம்.”

மென்னிலாவின் இந்த பதிலில் வருணுக்கு அனைத்தும் விளங்கியது.

“ட்ரிப் முடிந்து போகும்போது வம்சியை… ஐ மீன் என்னை முதல்முறை பார்த்தீங்களா?”

“ஏன் என்னை கை நீட்டி அடிச்சவருக்கு என்னை நினைவில் இல்லையோ?” கிண்டலாகவே திருப்பிக் கேட்டாள்.

வருண் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்த மென்னிலா ‘பேசாமல் உண்மையை நாமே சொல்லிவிடலாம் போல்’ என்று நினைத்தாள்.

‘அப்போ வம்சி காதலிக்கும் பெண்… தேடி அலையும் பெண் இந்த மென்னிலா தானா!’ உள்ளுக்குள் ஆச்சரியம் கொண்ட வருண் தான் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் பல இருக்கின்றன என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

‘மென்னிலா தெளிவாகக் கூறினாலே தன்னால் அடுத்து எதுவும் செய்ய முடியும்.’

அன்று தன்னை பார்த்ததும் மென்னிலாவின் விழிகள் காட்டிய ஆச்சரிய பாவனைக்கும், கண்கள் காட்டிய அழுகைக்கும் இன்று வருணுக்கு காரணம் புரிந்தது.

இப்போது அதனை தெளிவு படுத்திக்கொள்ள நேரடியாகவே அவளிடம் கேட்டிருந்தான்.

“ஆர் யூ லவ் வித் மீ?”

மென்னிலாவிடம் ஆழ்ந்த அமைதி. இதற்கு அவள் என்ன பதில் சொல்வதாம்.

“மென்னிலா பேசுங்க.”

காதல் கொண்டவளுக்கு அதனை சொல்லத் தயக்கம். அத்தோடு அன்று பார்த்த அவளின் கிருஷ்ணாவுக்கும் இன்று பார்க்கும் வருணுக்கும் இடையில் ஏதோ நூலிழை வித்தியாசத்தை உணர்கிறாள். அது என்னவென்று அறியுமுன் அவளுக்கு காதலை எளிதில் சொல்ல வரவில்லை.

“வைஷூ உங்களிடம் எல்லாம் சொல்லிவிட்டதாகக் கூறினாளே!”

“என்ன சொன்னாங்க… நான் சரியாக கவனிக்கவில்லையே! நீங்க ஒருமுறை சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையே!” தன்மையாகவேக் கேட்டான்.

அவன் அப்படி கேட்கும்போது அவளால் எப்படி சொல்லாமல் இருக்க முடியுமாம்.

“உங்களுக்கு என்னை உண்மையில் நினைவில்லையா கிருஷ்ணா?” கலங்கி ஒலித்தது.

‘கிருஷ்ணாவா!’ வருண் முன்னதாகக் கேட்ட கேள்விக்கு அவனுக்கு இப்போது பதில் கிடைத்தது.

‘தான் நினைப்பது சரிதான். வம்சி போலவே இப்பெண்ணும் அவனை விரும்புகிறாள். என்னை வம்சியென்று நினைத்திருக்கிறாள். ஆனால் அவளாகக் கூறினாலே தன்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்.’

“நீங்க நடந்ததை எல்லாம் சொல்லுங்களேன். எனக்கு நினைவிற்கு வருகிறதா பார்க்கிறேன்.”

அவ்வளவுதான் அவனும் தன்னைப்போல் தன்னை காதலித்திருப்பான் என்ற எண்ணம் எங்கோ பறந்து சென்றது. அட்லீஸ்ட் தன் நினைவாவது இருக்குமென்ற எதிர்பார்ப்பும் பொய்யாக போக… மனதில் இருப்பதை மொத்தமாகக் கொட்டத் தொடங்கினாள்.

அன்று ரயில் நிலையத்தில் நடந்ததை கூறியவள்… அவனைத் தேடி அலைந்தது முதல்… தங்கள் வீட்டில் அவனை வைத்து பார்த்த வரை எல்லாவற்றையும் அழுகையோடு சொல்லி முடிக்க… வருணுக்கு அப்படியொரு நிம்மதி. இரண்டு நாளாக சுமந்த வலியெல்லாம் பட்டென்று சரியானதைப்போல் மாயம்.

அகமும் புறமும் பாரம் நீங்கிய உணர்வு.

“உங்களை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?” என்று பாவமாக சொல்லியவள், “சோஷியல் மீடியா ஒன்றிலாவது அக்கவுண்ட் வைத்திருக்கீங்களா?” எனக் கேட்டு குறைப்பட்டுக் கொண்டாள்.

அதில் வருணுக்கு கட்டுக்கடங்கா சிரிப்பு உண்டானது.

“அப்படியும் நான் கிடைத்திருக்க மாட்டேன்.” வருணின் பதில் அவளுக்கு விளங்கவில்லை.

ஆனால் மென்னிலா சொல்லியதில் வருணுக்கு ஒன்று தெளிவாக புரிந்தது. அன்று வம்சி போட்டிருந்த அவனது சட்டையே காரணம். வருண் என்கிற பெயரைவைத்துக்கொண்டு வம்சியைத் தேடினால் எப்படி கிடைத்திருப்பான். அத்தோடு மென்னிலா திருமணத்திற்கு ஒப்பு கொண்டதற்கு மிகப்பெரிய காரணம் வருண் கிருஷ்ணா என்கிற பெயர் தான். உருவமும் ஒன்றைப்போலிருக்க, அன்று வம்சியும் வருண் பெயர் பொறிக்கப்பட்ட உடை அணிந்திருக்க… பெண் பார்க்க சென்றயிடத்தில் உருவமும் பெயரும் ஒன்றாக இருந்திடவே மென்னிலா சம்மதம் சொல்லியிருக்கிறாள். அதற்கே அன்று அவளின் பார்வையில் ஏக்கம் அழுகையெல்லாம்.

அப்போதே சுய அலசலில் ஈடுபட்டு அனைத்தையும் தெளிவாக புரிந்துகொண்ட வருண்,

“நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க” எனக்கூறி நடந்த குழப்பத்தை தெளிவாக விளக்கிச் சொன்னான்.

மென்னிலாவுக்கு பேரதிர்ச்சி.

“நீங்க சொல்வது உண்மையா?”

“எஸ் மென்னிலா, நீங்க ரயில் நிலையத்தில் பார்த்தது என்னுடைய ட்வின் வம்சி. அவன் அன்று என்னுடைய ட்ரெஸ் போட்டு வந்ததாலே இந்த பெயர் குழப்பம்” என்று மீண்டும் ஒருமுறை விளக்கினான்.

“என்னால் நம்பவே முடியவில்லை” என்ற மென்னிலா, “நல்லவேலை நான் உங்களிடம் காதலை சொல்லவில்லை. அதுவே இப்போது நிம்மதியாக உள்ளது” என்றாள்.

“உங்களை பார்த்தபோது எனக்கு ஏதோ வித்தியாசம் இருப்பதைப்போல் தோன்றியது. அது என்னவென்று தான் மூளைக்கு எட்டவில்லை” என தன் குழப்பத்தை சொல்ல…

“அது எங்களுடைய கண்களாக இருக்கலாம்” என்றவன், “எனக்கும் வம்சிக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அது மட்டும் தான்” எனக் கூறினான்.

இப்போது மென்னிலாவுக்கு வம்சியின் ஆழ்ந்த பிரவுன் நிற விழிகள் நினைவுக்கு வந்தன.

“ம்… இப்போ புரியுது” என்ற மென்னிலா வைஷூவிடம் வம்சி பேசியதையும், தான் கால் செய்தபோது ராங் நெம்பர் என்று கட் செய்ததையும் சொல்லி, “அவருக்கு என்மீது காதலில்லாத போது நானென்ன செய்ய முடியும்” என்று வருத்தம் கொண்டாள்.

வம்சியின் அந்த செயலுக்கான காரணமும் வருணுக்கு புரிந்தது. தம்பியின் முகம் வைத்தே அனைத்தும் உணர்பவனுக்கா இதற்கான காரணம் தெரியாமல் போகும்.

“அவன் உங்களை தெரியாததைப்போல் நடந்து கொண்டதற்கு காரணம் நான்” என்றான்.

“என்னை விலக்குவதற்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்?”

“உங்களை பெண் பார்க்க நான் வந்து போன பின்னரே உங்க பிரண்ட் வம்சியிடம் பேசியிருக்காங்க. அவங்க பேசும்போது, வம்சிதான் உங்களை பார்க்க வந்து… உங்களின் காதல் கல்யாணத்தில் முடிய போவதாக சொல்லியிருக்கிறார்.

அதுவே போதுமே வம்சிக்கு…

அடுத்து நீங்க பேசும்போது உங்களை மென்னிலாவாக மட்டும் நினைத்திருக்க மாட்டான். அவனின் அண்ணனுக்கு அதாவது எனக்கு பார்த்த பெண்ணாக மட்டும் தான் நினைத்திருப்பான்.

அதனால் தான் உங்களை தெரியாததைப்போல் போனை வைத்துவிட்டான்.”

மென்னிலாவும் முற்றும் முதலாக தன் குழப்பங்கள் நீங்கினாள்.

“ரொம்ப ரொம்ப தேன்க்ஸ்ங்க.”

வருணுக்கு தன் நன்றியைத் தெரிவித்தவள், வம்சிக்கும் தன்மீது காதல் இருந்தால் நன்றாக இருக்குமென்று கூறி வருத்தப்பட,

“உங்களை பார்த்த சில நாட்களிலே சார் ஃபிளாட் ஆகியாச்சு” என்ற வருண், “நாளை வம்சியை உங்களிடம் பேச வைக்கின்றேன்” என சொல்ல மென்னிலா உச்சகட்ட சந்தோஷத்தில் திளைத்தால்.

“சாரிங்க… என்னை பெண் பார்க்க வந்து, தேவையில்லா கஷ்டம் உங்களுக்கு” என்று மென்னிலா சொல்ல,

“நான் என் தேவியை பார்க்கவும், என் தம்பி காதல் நிறைவேறவுமே அந்த கடவுளே என்னை உங்களை பெண் பார்க்க அனுப்பியதாக நினைக்கின்றேன்” என்றான்.

“தேவி…?”

“தேவிகா.”

மென்னிலாவை பார்ப்பதற்கு முன் அவள் வீட்டிற்கு முன்பு தனக்கும் தேவிகாவுக்கும் நடந்த சந்திப்பை வருண் கூற,

“ஒருவேளை அப்படி இருக்குமோ?” என்ற சந்தேகம் இப்போது தேவிகாவின் அழுகையில் வந்தது.

“ஐ திங்க்… அவளும் உங்களை விரும்புறாள்?”

“என்ன சொல்றீங்க?”

“ஆமா” என்ற மென்னிலா மாலை தேவிகாவின் அழுகையையும் அதற்கு காரணம் சொல்ல அவள் மறுத்ததையும் கூறினாள். அதனோடு வீட்டில் நடந்த நிகழ்வையும் அப்படியே கூற வருண் அமைதியாகக் கேட்டுக் கொண்டான்.

“நான் தேவியிடம் பேச முடியுமா?”

மென்னிலா சற்றும் யோசியாது தங்கையின் எண்ணை வருணுக்கு அனுப்பி வைத்தாள்.

அதற்கு காரணம் மேசை மீதிருந்த வருணின் புகைப்படம் காணாமல் போனதும்… வினித் அதனை தேடிக் கொண்டிருப்பதை மென்னிலா கவனித்திருந்தாள். தேவிகாவின் அறைக்கு மென்னிலா சென்ற போது அவள் அழுத அழுகையும்… யாருடைய புகைப்படமோ தேவிகாவின் அறை குப்பை கூடையில் கிழிந்து கிடந்ததுமே!

ஒன்றுக்கு ஒன்று தொடர்புப்படுத்தி பார்த்தவளுக்கு கிடைத்த விடை தேவிகாவும் வருணை நேசிக்கின்றாள். தனக்காக யோசித்து அழுது இருக்கிறாள் என்பதே!

‘எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும்.’ இப்போதைக்கு அவளால் பிரார்த்திக்க மட்டுமே முடிந்தது.

வருண் தேவிகாவிடம் பேசுவதற்கு முன்பு மென்னிலா பேச நினைத்தாள். அதன்படி வருணை சற்று பொறுத்து தேவிகாவிடம் பேச சொல்லி, அவனுடனான இணைப்பைத் துண்டித்துவிட்டு தன் தங்கையை தேடிப்போனாள்.

அப்போதும் தேவிகா கண்களில் வழியும் கண்ணீரை உணராது விட்டத்தை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

மென்னிலாவின் அரவம் அவளை சற்றும் அசைக்கவில்லை. மென்னிலாவும் இரண்டு முறைக்கு மேல் அவளை விளித்திருக்க பதிலில்லை.

இம்முறை தொட்டு உளுக்க தூக்கத்திலிருந்து எழுபவள் போன்று மலங்க மலங்க விழித்தாள்.

அருகிலிருந்த தண்ணீர் நிறைந்த போத்திலை எடுத்து தேவிகாவை அருந்த செய்தவள் அவளுக்கு அருகில் அமர்ந்தாள்.

மனம் பாரம் நீங்க… ஒருவரின் தோள் சாய்ந்து அழுதிட எண்ணியிருந்த தேவிகா மென்னிலா அருகில் உட்கார்ந்ததும் அவளின் தோளில் தலை சாய்த்து, கண்களை மூடிக் கொண்டாள்.

தேவிகாவின் இத்தோற்றம் மென்னிலாவுக்கு வருத்தத்தை அளித்தது. அதனால் கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டு… அவள் மனதை அறிந்து உண்மையை சொல்லி தங்கையின் முகத்தில் மகிழ்வை கண்டிட நினைத்தாள்.

“உனக்கு வருணை பிடித்திருக்கா தேவி?”

மென்னிலா தன்னிடம் இப்படி கேட்கக்கூடுமென்று தேவிகா நினைக்கவில்லை. மென்னிலா கண்டு பிடிக்கும் அளவிற்கு தாம் நடந்து கொண்டோமா என தன்னை நினைத்து வெட்கினாள்.

‘அய்யோ அக்கா என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பாள்.’

மென்னிலா சொல்ல வருவதை முழுமையாகக் கேட்டிடாது… அவள் கேட்ட ஒற்றைக் கேள்வியிலேயே தன் செயல் குறித்து அறுவருத்து மென்னிலாவின் முகம் காண குறுகி… அவளிடமிருந்து விலகி அமர்ந்து தலை தாழ்ந்திருந்தாள்.

error: Content is protected !!
Scroll to Top