அத்தியாயம் 26
“என்னால் முடியாது வம்சி.”
நிர்தாட்சண்யமாக மறுத்துக் கொண்டிருந்தான் விக்னேஷ்.
“ஏன்டா படுத்துற?”
“யாரு நானா?” இதுவரை வம்சியின் விளையாட்டுகளில் பொறுமையாக இருந்ததைப்போல் இதில் அவனால் இருக்க முடியவில்லை.
“விக்கி நான் சொல்வதை கேளுடா!” தான் எது சொன்னாலும் கேட்கும் விக்னேஷ் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன் என்பது வம்சிக்கு கடுப்பாக வந்தது.
“இங்க பாரு வம்சி… ஒருத்தர் செய்த நல்லதுக்கு நான் தான் காரணமென்று சொல்லி… இந்த அரசியல்வாதிகள் போல் என்னால் உரிமையில்லா பெருமையை கர்வமாக ஏற்றுக்கொள்ள முடியாது” என்றான்.
அரசியல்வாதி என சொல்லும்போது விக்னேஷின் பார்வை ரத்தினத்தின் மீது படிந்து மீண்டது.
“அவர் சொல்வதும் நியாயம் தானே மிஸ்டர்.வம்சி. இந்த ஆதாரங்களை எல்லாம் சேகரிக்க உங்களது உழைப்பை எவ்வளவு பயன்படுத்தி இருப்பீர்கள்.” ஐடி அதிகாரி சொல்ல வம்சி சற்று யோசித்தான்.
“விக்கி ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… வருண் முன்னால் என்னால் இப்போது சென்று நிற்க முடியாது.”
“வருணுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்.”
“இந்த வழக்கு சாதாரணம் இல்லை. கோர்டிற்கு சென்றால் நிச்சயம் மீடியாக்கள் கைக்கு சென்றுவிடும். என் பெயர் வெளியில் வரும். அப்போது வருணுக்கு நானிங்கிருப்பது தெரிந்துவிடும்.”
‘தன் காதலியே வருணுக்கு மனைவியாகப் போகும் நிலையில் தன்னால் வருண் முன் எப்படி நிற்க முடியும்.’ சுய பட்சாதாபத்தில் தவித்தான்.
“உனக்கு என்ன பிரச்சனை வம்சி. நீயில்லாமல் வருண் எவ்வளவு வேதனைப்படுறான் தெரியுமா உனக்கு. உனக்கென்றால் எதுவும் செய்வான். உன் மனதில் இருப்பதை அவனிடம் சொல். உனக்கான பதிலை அவன் கொடுப்பான்” என்ற விக்னேஷ் அவ்வளவு தான் என்பது போல் தன் தொப்பியை அணிந்து வம்சியை பார்த்து விறைப்பாக சல்யூட் ஒன்றை வைத்தான்.
அதில் வம்சி காவல்துறை உயர் அதிகாரியாக தன்னை மீட்டு,
“அக்யூஸ்ட்டை வண்டியில் ஏற்றுங்க விக்னேஷ்” எனக்கூறி மிடுக்காய் வண்டியில் ஏறி அமர்ந்தான்.
‘எதையும் சமாளிக்க வேண்டும்.’ மனதில் திடமாக சொல்லிக்கொண்டான்.
வம்சி ஏற்கனவே நீதிபதியை பார்த்து ரத்தினத்தைப் பற்றி அனைத்தையும் விளக்கிக்கூறி அவருக்கு எதிரான அரெஸ்ட் வாரண்ட் வாங்கியதோடு அந்த வழக்கினை இன்று விசாரணைக்கு வரும்படியும் கையெழுத்து வாங்கியிருந்தான்.
அதனால் ரத்தினம் தப்பிக்க வழியின்றி போனது. அதோடு போதைப்பொருள் வழக்கும் அவர் மேல் இருந்ததால் ஜாமீனும் மறுக்கப்பட அன்றே அவர் மீதான அனைத்து குற்றங்களும் விசாரிக்கப்பட… அவருக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருக்க எல்லா குற்றங்களுக்கும் சேர்த்து இரட்டை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு உதவிக்கு சென்று கட்சியின் பெயரை கெடுத்துக்கொள்ள விரும்பாத அவரின் கட்சித் தலைவர் ரத்தினம் எப்போதே தங்களது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாரென்று அறிக்கை விட்டு கட்சியின் பெயரைக் காப்பற்றிக்கொண்டார்.
அனைத்து ஊடகங்களிலும் ரத்தினத்தின் நாச வேலைகள் தான் ஒலிபரப்பப்பட்டன.
நீதிமன்றமே வம்சியின் செயலை தனியாகக் குறிப்பிட்டு பாராட்டியிருக்க… இடையிடையே வம்சியின் பெயரும் ஊடகங்களில் ஒலித்துக் கொண்டிருந்தது.
ஊடகவியலாளர்கள் எவ்வளவோ கேட்டும் வம்சி தன் முகம் காட்டப்படுவதை விரும்பவில்லை. உறுதியாக மறுத்துவிட்டான்.
செய்தி சேனல்களில் ரத்தினத்தின் குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, “இவையெல்லாம் கண்டறிய காரணமாக இருந்த சென்னையின் புதிய டிசி வம்சி கிருஷ்ணாவை நீதிமன்றம் வெகுவாக பாராட்டியது” என்று ஒலிபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வர் வேகமாக எழுந்து அறைக்குள் சென்றுவிட்டார்.
வசந்திக்கு தன் செல்ல மகனை நினைத்து அவ்வளவு பெருமை.
திரிலோகரிடம் தன் பேரனின் செய்கையில் ஒரு கர்வப் புன்னகை.
‘இதுக்குத்தான் பய பதுங்கியிருந்தானா?’ தம்பியை வருண் மனதால் மெட்சிக்கொண்டான்.
“அந்த ரத்தினத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டானே!” வசந்தி சிலாகித்து பேச, அவரின் குரல் அறையிலிருந்த ஈஸ்வரையும் எட்டியது. உண்மையை ஒப்புக்கொண்டாலும் அவரின் வரட்டு பிடிவாதம் தடுப்பாக குறுக்கே வந்து நின்றது.
உள்ளுக்குள் வம்சியை பற்றி பெருமையாக எண்ணினாலும், வெளியே வாய்விட்டு சொல்ல அவருக்கு மனம் வரவில்லை.
“வம்சி சென்னை வந்தது உனக்குத் தெரியுமாடா வருண்?”
வசந்தியின் கேள்விக்கு திரையில் ஒளிர்ந்த வம்சியின் பெயரை பார்த்துக்கொண்டே, ஆமென்று தலையாட்டினான் வருண்.
“ஏன்டா என்கிட்ட சொல்லவில்லை. இவ்வளவு நாள் எங்கிருந்தானாம்?”
“தெரியாது” என்று கோபமாக மொழிந்த வருண் தன்னருகில் அமர்ந்திருந்த திரிலோகரின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.
எல்லோரும் வம்சியின் நினைவில் இருக்க…
வீட்டு தொலைபேசி தன் இருப்பை உணர்த்தியது. வசந்தி சென்று எடுக்க, ராஜன் பேசினார்.
இருபக்க குடும்ப நல விசாரிப்புகளும் முடிந்ததும் ராஜன் ஈஸ்வரிடம் பேச விரும்ப, வசந்தி சென்று ராஜன் அழைத்திருப்பதாகச் சொல்லி ஈஸ்வரை கூட்டி வந்தார்.
“சொல்லுங்க…”
எப்படி ஆரம்பிப்பது என்று தயங்கிய ராஜன், தனனருகில் நின்றுகொண்டு, விட்டால் தானே பேசிவிடுவேன் என்ற முகபாவனையுடன் நின்றிருந்த ரேணுகாவை பார்த்து ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவர்…
“சம்மந்தி இது எங்களோட விருப்பம் தான் கட்டாயம் இல்லை.”
ராஜன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரேணுகாவின் குரல் பின்னால் ஒலித்தது.
“தேவிகாவை ஏத்துகிட்டாதான், மென்னிலாவை கொடுப்போம் அழுத்தமா சொல்லுங்க மாமா.”
அதிலேயே ஈஸ்வருக்கு விடயம் என்னவென்று புரிந்துவிட்டது. இருந்தும் ராஜனே சொல்லட்டுமென்று ஈஸ்வர் அமைதி காத்தார்.
“அது வந்து சம்மந்தி… தேவிகாவுக்கும் கல்யாண குரு வந்துட்டதா எங்க பக்க ஜோதிடர் கூறினார். அது மட்டுமில்ல, இப்போ விட்டால் இன்னும் ஐந்தாறு வருடங்கள் தள்ளிப்போகும் சொல்லுறாரு. அப்போதான் உங்க ரெண்டாவது மகன் நினைவு வந்தது.
எங்க ரெண்டு பொண்ணுங்களும் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்தால் எங்களுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்.
நீங்களும் எங்க ரெண்டாவது பொண்ணை நேரிலே பார்த்திருக்கீங்க… உங்களுக்கு விருப்பம் இருந்தால் மேற்கொண்டு பேசலாம்” என்று தன்மையாக சரியான அணுகுமுறையில் கேட்டிருந்தார்.
ஈஸ்வர் சற்றும் யோசிக்காது “எனக்கு சம்மதம் சம்மந்தி” என்று கூறியிருந்தார்.
தன்னைவிட வயதில் பல ஆண்டுகள் மூத்தவராக இருந்த போதிலும்… அமைதியாக மரியாதையுடன் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்திய ராஜனின் அணுகுமுறைக்காகவே ஈஸ்வர் சட்டென்று சம்மதம் தெரிவித்தார்.
அதன் பின்னர் இரண்டு நிச்சயத்தையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்று ராஜன் பேசுகையில்,
‘வருணுக்கு தேவிகா மீது பிடித்தம் இருக்கும் போது… இப்போது இதனை சொன்னால் நிச்சயம் வீண் வாக்குவாதமும், அதனால் பேச்சுக்கள் தடிக்கவும் நேரிடும். இதனால் குடும்பத்தின் சூழல் மாறும். இந்நிலையில் நிச்சயம் வைப்பது சரியாக இருக்காது’ என்று தனக்குள் பல கணக்குகள் போட்ட ஈஸ்வர்… ‘இதில் அந்த அடங்காதவனை வேறு சம்மதிக்க வைக்க வேண்டுமென’ மலைத்து போனார்.
அதனால், “இரண்டு நிச்சயத்தையும் ஒன்றாக திருமணத்திற்கு ஒரு மணி நேரம் முன்பு மற்ற சடங்குகளுடன் சேர்த்து தாம்பூலம் மாற்றிக்கொண்டு நிச்சய பத்திரிகை வாசிக்க வைத்துவிடலாம். நிச்சயம், திருமணம் அடுத்தடுத்து மண்டபத்திலேயே வைத்துக் கொள்ளலாம்” என்று ஈஸ்வர் சொல்ல…
‘தங்களுக்கும் வேலைகள் மற்றும் அலைச்சல்கள் குறைவு’ என்று கருதிய ராஜனும் அதற்கு சம்மதம் வழங்கினார்.
“அப்படி இவ்வளவு நேரம் என்னடா பேசுறாங்க” வசந்தி வருணிடம் வினவினார்.
திரிலோகர் அர்த்தமாக புன்னகைக்க,
“அவரே வந்து குண்டை வீசுவார்” என்றான் வருண்.
ராஜனிடம் பேசி முடித்து வந்த ஈஸ்வர்… வசந்தியிடம்,
“உன் மகனை வீட்டிற்கு வரச்சொல்” என்றதோடு சென்றுவிட்டார்.
ஏன்? எதற்கு? என்ன? காரணமென்று தெரியாத போதும் வசந்தி மகிழ்ந்தார். இத்தனை நாளும் கணவருக்கு பயந்தல்லவா வம்சியிடம் பேச கூட முயற்சிக்காது இருந்தார். வம்சியின் இருப்பிடம் தெரிந்திருந்தாலும் ஈஸ்வரின் பேச்சை மீறி வசந்தி தன் மகனை காணச் சென்றிருக்க மாட்டார்.
“என்னம்மா யோசனை?”
“வம்சியை உங்கப்பா புரிந்துகொள்ளும் காலம் வந்துட்டதுடா வருண்.” கண்ணில் கசிந்த நீரை தன் சேலை தலைப்பில் ஒற்றிக் கொண்டார்.
“இதை உடனடியாக அழகுகிட்ட சொல்லணும்” என்று சென்று விட்டார்.
“நடக்கப்போவது மற்றும் உன் அப்பனின் இந்த செயலுக்கு பின்னால் இருக்கும் காரணம் தெரியாது உன் அம்மா சந்தோஷப்படுகிறாள்” என்ற திரிலோகரின் முகத்தில் தன் பேரன்களை எண்ணி கவலையின் ரேகை படிந்தது.
“நாளைக்கு நான் வம்சியை பார்க்கலாம் இருக்கேன் தாத்தா?”
“தாராளமாக செல் வருண். இப்போது வம்சியும் உன்னை பார்க்கும் மனநிலையில் தான் இருக்கின்றான்.” தன் கணிப்பை தெரிவித்தார்.
“வம்சி மீண்டும் இங்கு வருவானா தாத்தா?”
“நடக்கப்போவதை முன்பே அறிந்தால் அதிலென்ன சுவாரஸ்யம் இருக்கப்போகுது” என்றவர் தன் மடியிலிருந்த வருணின் தலையை மெல்ல தடவிக் கொடுத்தார்.
“எனக்கு வம்சியை இப்போவே பார்க்கணும் போலிருக்கு தாத்தா” என்ற வருண் அந்நேரத்தில் வம்சி இருக்கும் இடம் செல்ல எழுந்து கொண்டான்.
“இப்போவே போகணுமா வருண்?” நன்கு இருட்டி விட்டிருந்ததை தாத்தா சுட்டிக் காட்டினார்.
“வம்சி இங்கு வந்து கிட்டத்தட்ட முப்பத்தி ஆறு மணி நேரத்திற்கு மேலகிவிட்டது தாத்தா. இன்னும் அவனுக்கு என்னை பார்க்கணும் தோணுல, ஆனால் அவனை மாதிரி எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளே புதைச்சிட்டு என்னால் இறுக்கமா இருக்க முடியாது.
அவனை நாலு அரையாவது விட்டால் தான் என் மனம் சமன்படும்” என்றவன் வசந்தியிடம் சொல்லிவிடுமாறு சொல்லி தன் இருசக்கர வாகனத்தைக் கிளப்பிக்கொண்டு சென்று விட்டான்.
‘இங்கு வந்தும் இன்னும் தன்னை பார்க்க வரவில்லை என்பதற்காகவே இவ்வளவு கோவமா போகிறானே!
வம்சியுடன் தான் தொடர்பில் இருந்தது இவனுக்குத் தெரிந்தால்?’ திரிலோகருக்கு சிரிப்புத்தான் வந்தது.
வம்சி கேரளா சென்ற ஒரு வாரத்திலேயே குடும்பமற்ற சூழல் வெறுமை உணர்த்த, திரிலோகருக்கு அழைத்து விட்டான். திரிலோகரிடமே தன்னைப்பற்றி வருணிடம் கூடம் தெரிவிக்கக் கூடாதென்று பல நிபந்தனைகளுக்கு பிறகு தான் தான் இருக்கும் இடம் பற்றி சொல்லியிருந்தான். அவரின் மூலமே வீட்டின் நிகழ்வுகள் அனைத்தும் தெரிந்து கொண்டான்.
அழகுவிற்கு ரத்தினத்தால் விபத்து நேர்ந்து, அவர் தன் கை, கால்கள் செயலிழந்த நிலையில் வம்சி “வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுகிறேன்” என்பதை திரிலோகர் அனுமதிக்கவில்லை.
“ஒருமுறை நீ சென்றதையே வருண் மற்றும் வசந்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் நீ வந்து சென்று மீண்டும் அவர்களுக்கு தண்டனை கொடுத்துவிடாதே!
நீ எதற்காக ரகசியமாக இருக்கின்றாயோ அதையெல்லாம் முடித்துக்கொண்டு இங்கு வா” என்று கட்டளையாகவே சொல்லிவிட்டார்.
தாத்தாவின் பேச்சினை மீறும் துணிவு அந்த பேரனுக்கு இல்லை.
வருணுக்கு பெண் பார்க்க இருப்பதைக்கூட சொல்லிய திரிலோகர் பெண்ணைப்பற்றிய எந்தவொரு தகவலும் வம்சியிடம் சொல்லவில்லை.
இதுதான் நடக்கப்போகிறது என்பதை விதி தீர்மானித்து வைத்திருக்கும் போது அதனை மாற்ற நாம் யாரென்று அதன்போக்கில் விட்டுவிட்டார்.
‘எப்படியிருந்தாலும் வருண் உன்னை மன்னிச்சிடுவான். என்னை இப்படி கோர்த்து விட்டுட்டியே வம்சி.’ அப்பெரியவருக்கு தன் பேரனை நினைத்து பயம் கூட வந்தது. அனைத்தும் அறிந்தவர், முக்காலமும் உணர்ந்து கொள்பவர் பேரன்களிடம் சிறுப்பிள்ளையென மாறிவிடுகிறார்.
தனது அலைபேசியை எடுத்தவர்….
“உன்னைத் தாக்குவதற்காக பாசம் கொண்ட வேங்கை சீறி வருகிறது. சேதாரம் இல்லாமல் தப்பித்துக்கொள்” என்று குறுஞ்செய்தி ஒன்றை வம்சிக்கு அனுப்பி வைத்தவர், ‘ஈஸ்வர் சொல்லப்போகும் விடயம் இவ்வீட்டில் எத்தகைய நிகழ்வை ஏற்படுத்தும்’ என்று உறக்கத்தை தவிர்த்தவராக தன்னுடைய சிந்தனையில் ஆழ்ந்தார்.