நெஞ்சோடு காதல் சேர 27

அத்தியாயம் 27

விக்னேஷ் தன் இருசக்கர வாகனத்தை செலுத்திக் கொண்டிருக்க அவனுக்கு பின்னால் வம்சி அமர்ந்திருந்தான்.

அலைபேசியில் தகவல் வந்திருப்பதற்கான ஒலி எழும்ப அதனை எடுத்து பார்த்தவன்,

“இந்த வருணுக்கு பொறுமையே கிடையாது” என்றான்.

வருண் வந்து சென்றதாக ஸ்டேஷன் சென்ற போது ராணி மேடம் சொல்லியதுமே, வருண்  தன்னை பார்க்க நாளை நிச்சயம் வருவானென்று இருந்த வம்சி, இப்போதே இந்த இரவே வருவானென்று நினைக்கவில்லை.

“அதனால் தான் உன்னை காண அன்று ரயில் நிலையத்திற்கு ஓடி வந்தான் பாரு. களைத்து சோர்ந்து அவன் வந்த தோற்றத்தைக் கண்டு எனக்கே உள்ளுக்குள் என்னவோ மாதிரி ஆகிடுச்சு!” விக்னேஷ் அன்றைய நினைவில் கூறினான்.

“தெரியும்.”

“எப்படி” என்ற விக்கி, “அப்போ வருண் வந்த பிறகு அவனை பார்த்துட்டுதான் நீ போயிருக்க இல்லையா?”

வம்சியிடம் தலையாட்டாலே பதிலாக.

“என்ன பதிலே காணும்?”

“தலையாட்டினேன்.”

பதிலுக்கு விக்கியால் வம்சியை திரும்பி முறைக்கக்கூட முடியவில்லை.

“கடுப்பை கிளப்பாதே வம்சி” என்ற விக்கி அடுத்து எதுவும் பேசாது அமைதியாகிவிட வம்சியும் சுற்றுப்புறத்தில் கவனமாகி விட்டான்.

சில நொடிகளில் அலைபேசியை எடுத்த வம்சி, வருணுக்கு கால் செய்யும் துணிவின்றி புலனம் வழி தகவல் அனுப்பினான்.

“கீ (key) கேட் பாக்சில் உள்ளது.”

அப்போதுதான் வருண் வம்சியின் குவார்ட்டர்ஸை அடைந்திருந்தான். வீடு பூட்டியிருக்கவும் “இன்னும் வரவில்லையா” என்றவன் வண்டியில் சாய்ந்து நின்றான்.

எவ்வளவு நேரம் அப்படியே இருப்பதென்று அலைபேசியை எடுக்க… அதில் புது எண்ணிலிருந்து தகவல் வந்திருக்க, பார்த்ததும் யாரென்று கண்டு கொண்டான்.

‘அப்போ சார் எங்களையெல்லாம் வாட்ச் பண்ணிட்டே தான் இருக்காரு’ என நினைத்தவன் வம்சி சொல்லிய இடத்தில் சாவியை தேடி எடுத்து வீட்டை திறந்தான்.

வரவேற்பறையில் வம்சி ஹைதராபாத்தில்  இருந்து கொண்டு வந்த அவனின் துணிகள் நிறைந்த ட்ராலி கேஸ் ஒன்றும், அவன் விரும்பி படிக்கும் புத்தகங்கள் அடங்கிய அட்டை பெட்டி ஒன்றும் இன்னும் பிரிக்கப்படாமல் டீபாயின் மீது வீற்றிருந்தது.

“அப்போ சாப்பாடெல்லாம் வெளியில் தானா?” வாய்விட்டுக் கேட்டுக்கொண்ட வருணுக்கு வம்சி விரும்பி சாப்பிடும் தேங்காய் பால் சாதமும், சிக்கன் குருமாவும் கண் முன் தோன்றியது.

“யாருக்காக இந்த வனவாசம்” என்ற வருணுக்கு தெரிந்துதான் இருந்தது தங்களுக்காக என்று, ‘ரத்தினம் தன் மீது கை வைக்காமல் இருந்திருந்தால் இன்று வம்சி தனித்திருக்கும் நிலை வந்திருக்காது. அன்று தான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்.’ இதோடு பலமுறை தன்னையே நினைத்து நிந்தித்துக்கொண்ட வார்த்தைகள் தான். இருப்பினும் வம்சியை பற்றிய எண்ணம் எழும்போதெல்லாம் தன்னுடைய கவனக்குறைவு தான் காரணமென்று வருணால் நினையாது இருக்க முடியவில்லை.

“சாரிடா?”

நிச்சயம் வம்சி மன்னிப்பு கேட்க விடமாட்டான். அதனாலேயே மனதில் நினைவு வரும் போதெல்லாம் தம்பியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறான்.

விக்னேஷிற்கு பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த வம்சிக்கு நெஞ்சமெல்லாம் படப்படப்பாக இருந்தது.

காதலன் காதலியை காண தவிக்கும் நிலையில் அவன் மனம். ஆனால் வம்சியின் தவிப்பு தன் காதலிக்காக அல்ல, தன் ரத்தத்தில் கலந்திருக்கும் உடன் பிறப்பிற்காக.

“விக்கி ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்குடா!” வம்சி அவ்வாறு சொல்லியதும் விக்னேஷ் வண்டியை பிரேக் அடித்திருந்தான். கண்ணாடி வழியாக வம்சியின் முகம் நோக்கினான்.

வம்சியின் முகம் குற்றவுணர்வில் தகித்துக் கொண்டிருந்தது.

“வம்சி இது நீயில்லைடா! எங்க வம்சிக்கு எதையும் எதிர்த்து நின்னு பார்க்கத்தான் தெரியும். இப்படி முதல் முறையா உன்னை பார்க்க எனக்கே முடியலடா” என்றான்.

“வருணை நேருக்கு நேர் பார்க்க முடியுமா? அவனை எவ்வளவு தூரம் கஷ்டப்படுத்திட்டேன்” என்று குற்றவுணர்வா இருக்குடா விக்கி.”

“நீ ஒன்றை கண்டு அஞ்சுவதா, எனக்கு ஆச்சரியமா இருக்கு வம்சி. வருண் யாருடா உன் அண்ணன். அவனுக்கும் சரி உனக்கும் சரி எல்லாமே நீங்கதான்.

நீ அவனை கஷ்டப்படுத்திட்டேன்னு கில்ட்டியா ஃபீல் பண்ற, அவனும் அதே மாதிரி தான் அன்று கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் நீ சென்றிருக்க மாட்டாய், அவனால் தான் உனக்கு இந்த தனிமைன்னு கில்ட்டியா நினைக்குறான்.

இவ்வளவு பாசம் இருக்கும் போது நடுவில் இந்த குற்றவுணர்வெல்லாம் எதுக்குடா? அவன் உன் வருண் அந்த நினைப்போடு அவனை பார்” என்ற விக்கி வண்டியை இயக்கியிருந்தான்.

விக்கி சொல்லியதில் வம்சி சற்று தெளிந்திருந்தான்.

குற்றவுணர்வு ஆட்சி செய்த இடத்தில் இப்போது தனக்கென்று எந்த நிலைக்கும் செல்லும் உறவை காணப்போகிறேன் என்ற மகிழ்வு சூழ்ந்தது.

வருணை பார்க்க வேண்டுமென்கிற ஆவல் ஊற்றெடுக்க,

“இன்னும் ஸ்பீடா போடா… என்னடா வண்டி ஓட்டுற” என விக்கியை சீண்டினான்.

“சோ, தி டெவில் இஸ் பேக்” என்ற விக்கிக்கும் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

எவ்வளவு நேரம் தான் ஒன்றுமில்லாத வீட்டில் உட்கார்ந்து மட்டுமே இருக்க முடியும். வருண் மெல்ல வீட்டை சுற்றி நடந்தான். படுக்கை அறைக்கு அந்தப்பக்கம் சிறிய அளவிலான பால்கனி ஒன்று இருக்க தோட்டத்தை பார்த்தவாறு அங்கேயே நின்று கொண்டான்.

வீட்டை அடைந்ததும் வம்சியை இறக்கி விட்டுவிட்டு விக்னேஷ் அப்படியே கிளம்ப,

“உள்ளே வந்துட்டு போடா” என்றான் வம்சி.

“வேண்டாம்டா இப்போ நான் வந்தால், நீ வந்ததை ஏன் சொல்லலைன்னு உன் மேலிருக்கும் கோபமெல்லாம் என் பக்கம் திரும்பிடும்” என்றவன் கிளம்பிவிட்டான்.

விக்னேஷ் தெருமுனையை தாண்டும் வரையில் நின்று பார்திருந்த வம்சி ஆழ்ந்து மூச்சினை உள்ளிழுத்து வெளியேற்றி வருணை காணும் திடத்தை மனதில் நிறுத்தி கேட்டினைத் திறந்தான்.

நான்கடி வாசலை மெல்ல கடந்து வந்தவனின் கண்களில் தன்னுடன் பிறந்தவனின் காலணி இருக்க வம்சியிடம் ஒரு ஏக்கம்.

வம்சி எப்போதும் அவனுக்கென்று வாங்கியவற்றை அதிகம் உபயோகப்படுத்ததியதே இல்லை. வருண் ஒருமுறை உபயோகித்ததை பயன்படுத்துவதில் அவனுக்குள் அப்படியொரு இன்பம்.

கதவில் கை வைக்க தாளிடப்படாத கதவு தானாக திறந்து கொண்டது.

உள்ளே செல்லாது தலையை மட்டும் நீட்டி வருண் இருக்கின்றானா என்று பார்த்தவனுக்கு அவனின் உருவம் கண்ணில் படவில்லை.

“செப்பல் இருக்கே! அப்போ வருண் எங்க?” தன்னிடமே கேட்டுக்கொண்டு உள் நுழைய ஒரு அறையின் கதவு திறந்திருக்க அதனுள் சென்றான் வம்சி.

அவ்வறையின் பால்கனியில் கண்ணாடி தடுப்பிற்கு பின்னால் கால்களை அகட்டி வைத்து மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு திரும்பி நின்றிருந்த வருணின் தோற்றத்தில் வம்சியின் கண்கள் கலங்குவதைப் போலிருந்தது.

அன்று தூரத்தில் பார்க்கும் போது எழாத உணர்வுகள் இன்று அருகில், இரண்டடி தூரத்தில் மேலெழும்பின.

அன்னையை கண்டதும் தொலைந்துப்போன மழலையாய் தாவிச்சென்று கட்டிக்கொள்ளும் எண்ணம் அவனுள். ஆனால் அவனின் கால்கள் உறைந்திருந்தன. வேக எட்டுக்களில் நடை வைக்கும் அவன் கால்கள் அசைய மறுத்து நின்றன.

“வருண்.”

காற்றிற்கே கேட்காத விளிப்பு.

வருணைத் தீண்டியிருந்தது.

திரும்பிப் பார்த்த வருண், வம்சியின் உருவத்தை நம்ப மறுத்து கண்களை மூடி திறந்தான்.

நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகு அவன் கண்ணில் காணும் தோற்றத்தில் அவன் உயிரே வைத்திருக்கும் அவனின் வம்சி. அவ்வளவு நேரமும் வம்சியின் மீது கட்டுக்கடங்கா கோபத்தில் இருந்தவனின் மனதை அவன் மீது கொண்ட அன்பும் பாசமும் வியாபிக்க, நொடியும் தாமதியாது இரண்டு எட்டுக்களில் தம்பியை நெருங்கியிருந்தான்.

அந்நேரம் அங்கு சொல்லப்படாத, வார்த்தைகளால் விவரிக்கப்படதா உணர்வு போராட்டம் அரங்கேறியது.

“வருண்.”

பட்டென்று வம்சியின் கன்னத்தில் அறைந்திருந்தான் வருண். அதனை விரும்பியே ஏற்ற வம்சி தன் மறு கன்னத்தையும் காட்ட, தாடை பற்றி அவன் காட்டிய கன்னத்தில் பற்கள் பதிய கடித்த வருணை வம்சி கட்டிக்கொண்டான்.

இருவரும் அன்பின் வலையில் அந்நொடி சிக்கித் தவித்தனர். இருவருக்குமே ஒருவரை மற்றொருவர் விடும் எண்ணம் இல்லை.

“மிஸ் யூ டா.” வருணின் குரல் தழுதழுத்தது.

“நானும்” என்ற வம்சி வருணை தூக்கி சுற்றியிருந்தான்.

“டேய் விடுடா… ஏழு கழுதை வயசாகுது இப்போ போய் சின்னப்பிள்ளை மாதிரி தூக்கி சுத்திட்டு…”

“உனக்கு இன்னும் பயம் போகல இல்லையா” என்ற வம்சி கவனமாக வருணை கீழிறக்கி விட்டான்.

“எப்படிடா இருக்க?”

“பார்த்தால் தெரியலையா” என்ற வருண் அமைதியாக இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அவனருகில் வந்த வம்சி “வருண்” என்றழைக்க,

“சாரி மட்டும் சொல்லிடாத தம்பின்னு கூட பார்க்க மாட்டேன்” என்று மிரட்டினான்.

“உனக்கு நான் சாரி வேற கேட்பேன்னு நினைப்பிருக்கா… நீ சொல்வதை பார்த்தால் உனக்குத்தான் அந்த எண்ணம் இருந்திருக்கும் போலவே” எனக் கேட்டுக்கொண்டே, வருணை நீளிருக்கையின் இறுதியில் தள்ளியவன், அவனின் மடியில் படுத்துக் கொண்டான்.

“எவ்வளவு நாளாச்சு வருண்” என்றவன் இரண்டு நாளாக ஏற்பட்ட அலைச்சலாலும், தனக்குரிய இடத்திற்கு வந்து சேர்ந்திட்ட நிம்மதியாலும் படுத்ததும் உறங்கிவிட்டான்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது.

வருண் தன் மடியிலிருந்த வம்சியின் தலையை தடவிக் கொண்டிருந்தான். எட்டி வம்சியின் காலிலிருந்த ஷூவை எப்போதே கழுட்டியிருந்தான்.

வம்சி கண் திறக்க,

“என்னடா அதற்குள் எழுந்துட்ட?” எனக் கேட்டான் வருண்.

“உன்னை விட்டு பிரிந்த காலத்தில் இந்த இரண்டு மணி நேரத் தூக்கம் கூட முழுதா எனக்கு கிட்டியதில்லை” என்ற வம்சியின் வார்த்தையில்… தன்னைவிட வம்சியின் வேதனை அதிகம் என்பதை உணர்ந்து கொண்ட வருணின் கோபம் கூட எங்கோ சென்றது.

“நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரன்டா” என்று வம்சி நகர, அவனின் கை பிடித்து தடுத்த வருண்…

“வாடா வீட்டுக்கு போகலாம்” என அழைத்திருந்தான்.

வம்சி தயங்கி நின்றான்.

“இல்லை வருண் அது சரியா வராது.”

“எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்குடா… நீயில்லாம எப்படி?” வம்சியின் மனதை அறிய வேண்டுமென்றே தன்னுடைய கல்யாண விடயத்தைப் பேசினான்.

வம்சியிடம் சட்டென்று ஒரு தடுமாற்றம்.

வருணின் கண்களுக்கு தப்பவில்லை.

“பெண்ணெல்லாம் பார்த்து ஓகே ஆகிடுச்சுடா” என்ற வருண், “பெண்ணின் பெயர் மென்னிலா” என்றான். அந்த பெயரில் தான் எத்தனை அழுத்தம்.

மென்னிலா என்கிற பெயரைக் கேட்டதும் உடலோடு சேர்ந்து மனதும் அதிர நின்றவனின் கண்கள் உணர்வின் கட்டுப்பாட்டால் சட்டென்று ரத்தமென சிவந்தது.

“என்னால் அங்கு வர முடியாது வருண். ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று கத்திய வம்சி பால்கனியில் சென்று நின்று கொண்டான்.

பால்கனியின் கம்பிகள் வம்சியின் கையில் இறுகியது.

வம்சியின் பின்னால் வந்து நின்ற வருண்,

“அப்பாவே உன்னை அழைத்து வரச் சொன்னாருடா!” என்று உவகையாகக் கூறினான்.

“யார் கூப்பிட்டிருந்தாலும் என்னால் வர முடியாது வருண்.”

“ஏன்?” வருணின் விழிகளில் கூர்மை.

“இதுக்குத்தான் நான் உன்னை பார்ப்பதை தவிர்க்க நினைத்தேன். எல்லாம் அந்த விக்கியால் வந்தது” என்ற வம்சி வருண் எவ்வளவோ அழைத்தும் தன் பிடியில் உறுதியாக இருந்தான்.

“எனக்குத் தெரியும் வம்சி.”

“என்ன தெரியும்?” வம்சியின் குரலில் சிறு நடுக்கம்.

“எனக்காகத்தானே வரமாட்டேன் என்கிறாய்?”

“சும்மா உளறாதே வருண்.”

“அப்போ வீட்டுக்குவா. என்னுடன் வருவதில் உனக்கென்ன தடை.”

“முடியாது?”

“ஏனென்று நான் சொல்லட்டுமா?”

இப்போது வம்சி வருணின் பக்கம் திரும்பிருந்தான்.

வம்சியின் கண்களை தீர்க்கமாக சந்தித்து ஒவ்வொரு எழுத்துக்களையும் தனித்தனியாக பிரித்து உச்சரித்தான் வருண்.

“மெ…ன்…னி…லா…”

error: Content is protected !!
Scroll to Top