நெஞ்சோடு காதல் சேர 28

அத்தியாயம் 28

வருண் மென்னிலாவின் பெயரை உச்சரித்த விதத்திலேயே வருணுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதென்று வம்சிக்கு விளங்கியது.

‘இது… அதாவது வருணுக்கு பார்த்திருக்கும் பெண் மென்னிலா தானென்று தான் ஏற்கனவே அறிந்தது தானே!’

மனதை திடப்படுத்திக்கொள்ள வம்சி ஒருமுறை தனக்குள் சொல்லிக் கொண்டாலும் உயிர் வரை சென்று தாக்கும் வலியை அவனால் தடுக்க முடியவில்லை.

வருணுக்கு தெரியக் கூடாதென்று அவன் நினைத்திருக்க… தெரிந்து கொண்டே அவன் முன் சென்று நின்றால் அதிர்வு இருக்கத்தானே செய்யும்.

அதேபோல் மென்னிலாவின் பெயரை வருண் உச்சரித்த போது வம்சியிடம் சிறு அதிர்வு தோன்றி மறைந்தது.

அதனை கண்டுகொண்ட வருண் வலியோடு சிரித்துக் கொண்டான்.

வம்சியின் தியாகத்தை அவன் எதிர்பார்க்கவில்லை… அவன் காதலிக்கும் பெண் தனக்கு பார்த்தது தெரிந்ததும்… இவள் தான் நான் காதலிக்கும் பெண்னென்று வந்து சொல்லும் உரிமையைத்தான் வருண் வம்சியிடம் எதிர்பார்த்தான்.

“வருண்” என்றவாறு திரும்பிய வம்சியிடம்,

“அம் இன் லவ்” என்றான் வருண்.

அவ்வளவுதான் வம்சியின் இதயம் படபடவென்று வெடித்து சிதற இருந்த நேரம்,

“வித் தேவிகா… மென்னிலா சிஸ்டர்” என்று தன்னுடைய வாக்கியத்தை வருண் நிறைவு செய்தான்.

‘தான் கேட்டது உண்மை தானா?’

காதில் கேட்ட செய்தி மூளைக்கு வந்தடைய வம்சியின் ஒற்றை கண்ணிலிருந்து ஒரு துளி நீர் கன்னத்தின் வழி உருண்டது.

“வருண்” என்று கூவியவன் தாவி அணைத்துக் கொண்டான்.

“லவ் யூ டா… லவ் யூ சோ மச்” என்ற வம்சி வருணின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.

“மென்னிலாகிட்ட செய்ய வேண்டியதெல்லாம் என்கிட்ட செய்ற?” என கிண்டலாக கேட்ட போதும் தம்பியின் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தான். வம்சியின் அணைப்பில் அவனின் வலியை உணர்ந்தான்.

சில நொடிகளில் இருவரும் விலக,

“சார் தியாகமெல்லாம் செய்றீங்க போல.” வருணின் கேள்வியில் அப்படியொரு வலி. இன்னும் தனக்காக என்னவெல்லாம் இழக்கத் துணிவானென்று.

“உனக்காக… அவ்வளவுதான். உன்னைத் தாண்டி எனக்கு எதுவும் பெருசில்லை.”

வம்சியிடம் இப்படியொரு பதிலை வருண் எதிர்பார்க்கவில்லை. வம்சி தன் மீது கொண்ட பாசத்தில் வருண் நெக்குறுகி நின்றான்.

“அப்போ மென்னிலா உனக்கு முக்கியமில்லையா?”

“நீ எனக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு மென்னிலாவும் முக்கியம் தான். இதே உன்னிடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் விட்டுக்கொடுக்கும் முடிவை எடுத்திருக்க மாட்டேன்” என்ற வம்சி…

“அம் மேட்லி லவ் வித் ஹெர் டா… ஒருமுறை அவளை பார்க்க மாட்டோமான்னு இருக்கு” என கண்களை மூடி சொல்லிக் கொண்டிருந்தவன் இமை திறக்க அவன் கண் முன் மென்னிலா.

வருண் வீடியோ காலில் காட்டிக் கொண்டிருந்தான்.

தன் மீதான காதலை வம்சியின் வாயால் கேட்ட மென்னிலா கண்ணீரையும் புன்னகையையும் ஒருங்கே பெற்றாள்.

அவளுக்கு தினமும் காண தேடித் தவித்த முகம். அவனுக்கு மனதிற்குள் கண்டுவிடமாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த முகம்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்தது பார்த்தபடி இருக்க…

“இதுதான் பார்வையாலேயே பேசிக் கொள்வதா?” எனக் கேட்ட வருண் வம்சியின் கையில் அலைபேசியை கொடுத்துவிட்டு அவர்களுக்கு தனிமை அளித்து சற்று தள்ளி வந்து அமர்ந்து கொண்டான்.

வருணுக்கு இப்போது நினைவில் வந்ததெல்லாம் மென்னிலா அவனிடம் கேட்ட கேள்வி தான்.

வருண் வம்சியை காண கிளம்பும் போது மென்னிலா அவனுக்கு அழைத்திருந்தாள்.

அப்போதுதான் மென்னிலாவும் செய்தியில் வம்சியின் பெயரோடு ஒளிர்ந்த செய்தியை கேட்டு அதிர்ந்தவள் வருணுக்கு உடனடியாக கால் செய்தாள்.

“அத்தான் நான் மென்னிலா.”

“உன் நெம்பர் பதிவில் தான் இருக்ககு. சொல்லும்மா” என்றான். உறவுமுறை வலுப்பெற்றதும் ஒருமையும் தானாக வந்தது.

“நியூஸில்… அவங்க தானே?”

“ஆமா… ஆனால் பெயர் மட்டும் தானே சொல்லியிருப்பாங்க?”

“ம்” என்றவள் அந்த ரத்தினம் ரொம்ப பெரிய இடம் போலிருக்கிறதே. அவரால் அவருக்கு(வம்சி) எதுவும் ஆகிவிடாதே?” வம்சியின் மீது கொண்ட அக்கறையில் பயத்தோடு கேட்டிருந்தாள்.

“ஏற்கனவே ரத்தினம் செய்ததற்கு தான் வம்சி திருப்பிக் கொடுத்திருக்கிறான்” என்ற வருண்… ரத்தினத்தின் மகன் முதல் தொடங்கி இப்போது ரத்தினம் சிறைக்குள் சென்றது வரையிலான இடைப்பட்ட நிகழ்வுகள் யாவும் சொல்லி… “இனி ரத்தினத்தால் வெளியில் வரவே முடியாது, அப்படியே வந்தாலும் வம்சி பார்த்துக்கொள்வான்” என்று அவளைத் தேற்றினான்.

“போலீஸ் வேலையில் இவ்வளவு ரிஸ்க் இருக்கா?” என்றவளுக்கு அப்போதும் வம்சியின் நலன் குறித்து பயமே எஞ்சியது.

அவளின் பயம் வருணுக்கு புரிந்த போதும்… ‘வம்சியுடன் வாழும் போது இதெல்லாம் பழகிக்கொள்வாள்’ என அப்படியே விட்டுவிட்டான்.

“உங்ககிட்ட நானொன்று கேட்கவா?” மிகவும் தயங்கித்தான் கேட்டாள்.

வருண் சம்மதிக்கவும்,

“நான் தான் உங்களுக்கு பார்த்த பெண்னென்று தெரிந்த பிறகும் அவர் அமைதியாக இருக்கின்றார் என்றால் அவருக்கு என் மீது காதல் இல்லை தானே” என்றாள்.

வம்சியின் காதலை தெளிவாக எடுத்துச் சொல்லியவன், “அவன் எனக்காக பார்க்கின்றான்” என்க,

“என்னை விட்டுக்கொடுக்க அவரால் முடிகிறதென்றால் நான் அவ்வளவு முக்கியமில்லை என்று தானே அர்த்தமாகும்?” எனக் கேட்டவள் இதற்கு என்ன பதில் சொல்வதென்று வருண் யோசித்துக் கொண்டிருக்கும் போதே வைத்துவிட்டாள்.

அதனாலே மென்னிலா பற்றிய பேச்சு வந்ததும் அவளுக்கு வீடியோ கால் செய்து வம்சியின் முகம் மற்றும் வார்த்தைகள் தெளிவாக அவளுக்கு தெரியும், கேட்கும் வகையில் தன் சட்டை பையில் அலைபேசியை வைத்திருந்தான்.

வருணுக்கு மென்னிலா தேவிகாவின் காதலை அறிய உதவியது போல் வருண் மென்னிலாவுக்கு உதவியிருந்தான்.

இதனை நினைத்த வருணுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் “வம்சி வாழ்வு சிறக்க வேண்டும்.”

வருண் மெல்ல எட்டி பார்க்க… வம்சி எதுவும் பேசாது அலைபேசியை கையில் ஏந்தியபடி நின்றிருந்தான். வருண் வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.

பல குற்றவாளிகளை ஓடவிட்டு விரட்டியடிக்கும் வம்சி இன்று தன் காதல் பெண்ணிடம் பேச தெரியாது மௌனியாகினான்.

மென்னிலாவுக்கு புரிந்தது வம்சி இப்போதைக்கு பேச மாட்டானென்று அதனால் அவளே பேச்சினைத் தொடங்கினாள்.

“நீங்க சொன்னது நிஜமா?”

“எது?”

“வருண் அத்தானிடம் ஏதோ சொன்னீங்களே?”

“என்ன சொன்னேன்.” உல்லாசமான சிரிப்பு அவனிடம்.

“நீங்க வேண்டுமென்றே என்னிடம் விளையாடுறீங்க?” பேதையும் அழகாய் சிணுங்கினாள்.

“எதே நானா?”

“பின்னென்ன நானா… நான் எதை கேட்கிறேன் எனத் தெரிந்தும் வேண்டுமென்றே தெரியாததைப்போல் நடிக்கிறீங்க.” குறைப்பட்டுக் கொண்டாள்.

“நான் நடிகன் இல்லையம்மா… போலீஸ்.” சிரித்துக்கொண்டே கூறினான்.

“தெரியும்!”

“என்ன தெரியும்?”

“உங்களைத் தெரியும்… உங்க காதல் தெரியும்.”

“ஆஹாங்.”

தொடு திரையில் ஒருவருக்கொருவர் பார்த்த போது இருந்த தயக்கம் பேசத் துவங்கியதுமே இருவருக்கும் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது.

உரிமையாக இருவரும் வாய்க்கு வாய் பேசிக்கொள்ள… சட்டென்று அவனையும் அவன் காதலையும் தெரியுமென்றவள் சொல்லிய பிறகே அவனிடம் உரிமையாக வாயாடியதை உணர்ந்து பற்களால் கீழ் உதட்டை கடித்து… தான் சொல்லியதற்கு வெளிப்பட்ட அவனின் விரிந்த புன்னகையில் நாணம் கொண்டு அவனை பார்ப்பதை தவிர்ப்பதற்காக முகத்தை ஒரு பக்கமாகத் திருப்ப…

“நிலா ஃபிரீஸ்… டோன்ட் மூவ்” என சொல்லியிருந்தான்.

“என்னாச்சு” எனக் கேட்டாலும் அவன் சொல்லியது போலவே அசையாது இருந்தாள்.

அவனிடமிருந்து சத்தமே இல்லாமல் இருக்க, கருவிழியை மட்டும் அவன் பக்கமாக சுழற்றிப் பார்க்க… அவளின் கன்னத்தை தீண்டுவது போல் வம்சியின் சுட்டு விரல் நீண்டு வந்தது.

நேரிலேயே அவன் தொட வருவதைப்போல் உணர்ந்தவள் முகத்தை பின்னால் நகர்த்தினாள்.

“ம்ப்ச் நிலா” என்றவன் விரலை கீழிறக்கிக் கொண்டான். வம்சியின் முகம் நொடியில் சுருங்கியது.

அவனின் சுணக்கம் தாங்காதவள் முன்பு அவன் சொல்லியது போலவே கன்னத்தை காண்பித்தவாறு முகத்தை அசையாது காட்ட,

“உன்னை ஃபர்ஸ்ட் பார்த்தப்போ என்னை ரொம்பவே இது இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு” என்று மென்னிலாவின் கன்னம் தொட்ட காதோர மச்சத்தை சுட்டுவிரலால் வட்டமிட்டு காண்பித்தான்.

நாணம் கொண்டவளின் இமை தாழ்ந்தது.

“உன் நினைவு வரும்போதெல்லாம்… உனக்கு முன் இந்த மச்சம் கண்ணுக்குள் வந்து விடும்” என்றவன்,

“என்னை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ற நிலா” என்றதோடு… “சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டிருந்தான்.

அவ்வளவு நேரமும் அவனின் காதலில் லயித்திருந்தவள், அவனின் கல்யாணம் என்ற வார்த்தையில் அதிர்ந்து விழித்தவளாக…

“அத்தான் உங்களிடம் இன்னும் ஒன்றும் சொல்லவில்லையா?” என வினவினாள்.

வம்சி என்னது என்றதுமே இன்னும் வருண் எதுவும் சொல்லவில்லை என்பதை கண்டுகொண்டவள்,

“நீங்க முதலில் வருண் அத்தானிடம் பேசுங்க. நான் அப்புறம் பேசுகிறேன்” என வைத்துவிட்டாள்.

வருணிடம் வந்து அலைபேசியை நீட்டிய வம்சி…

“என்னடா நிலா நான் கல்யாணம் சொன்னதும் உன்னிடம் பேசச்சொல்லி வைத்துவிட்டாள்” என்றான்.

“இப்போதான்டா பாதி கிணறு தாண்டியிருக்கோம்… முழு கிணற்றையும் தாண்ட வேண்டுமென்றால் நம்ம அப்பா ஈஸ்வர் மனது வைக்க வேண்டும்” என்ற வருண் எழுந்த நின்று மலைப்பாய் ஒரு பார்வை பார்த்தான்.

சில நொடிகளுக்கு பிறகு நடந்தவற்றை சொல்லலானான்.

“நீயும் நானும் காதலிக்கின்றோம் தெரிந்தால் அவ்வளவுதான்… ஈஸ்வர் உடுக்கை இல்லாமல் தாண்டவம் ஆடிடுவார்” என்றவன்,

தேவிகா மீதான தன் பிடித்ததை ஈஸ்வரிடம் சொல்லியது… அதற்கு அவர் பேசியது… அதன் பின்னர் மென்னிலா கால் செய்தது தங்களின் உரையாடலில் இருவரும் கண்டறிந்த உண்மை, தேவிகாவிடம் விருப்பத்தை சொல்லியது என்று எல்லாவற்றையும் சொல்லியதோடு,

“இதில்லாமல் இப்போ இன்னொரு சிக்கல் வந்திருக்கு” என்றான்.

“அதையும் சொல்லு.” வம்சிக்கு ஈஸ்வர் மீதான சலிப்பால் சற்று குரல் சோர்ந்தே ஒலித்தது.

“தேவிகாவை உனக்கு பேசியிருக்கிறார் ராஜன் தாத்தா… அதற்கு அப்பாவும் சம்மதம் சொல்லிவிட்டார். இதனை அப்பா இன்னும் யாரிடமும் சொல்லவில்லை. எனக்கே தேவி தான் சொன்னாள்” என்றவன்,

“நிச்சயம் நம் காதலை ஏற்றுக்கொண்டு அப்பா திருமணம் நடத்தி வைப்பார் என்று எனக்கு நம்பிக்கையில்லை” என வருத்தம் மேலோங்கக் கூறினான்.

“அதுவும் உன் காதல் தெரிந்தால் அவ்வளவு தான்.”

“இதில் இப்படியொரு சிக்கல் இருக்கிறதா?” என்ற வம்சி “யோசிப்போம்” என மிகத் தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டான்.

“சரி பிறகு யோசிக்கலாம். இப்போ நீ கிளம்பு வீட்டிற்கு போகலாம்” என்று வம்சியை கிளப்பியவன் வீட்டிற்கு வந்த பிறகே நிம்மதியானான்.

“உண்மையாவே அவர் தான் வரச் சொன்னாரா டா?”

வம்சி சந்தேகமாகக் கேட்டு கேட்டிற்குள் கூட செல்லாது வீட்டின் முன் வைத்துக் கேட்க, வருண் பதில் சொல்வதற்குள்…

வீட்டிற்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்து… “வாப்பா வம்சி” என்று தன் இளைய மகனை அழைத்துச் சென்றார் ஈஸ்வர்.

நடக்கவே நடக்காது என்றிருந்த அதிசயம் நடந்ததில் சிலையாகவே மாறியிருந்தான் வருண்.

error: Content is protected !!
Scroll to Top