ருத்ரனின் பனித்தீ 💖 அத்தியாயம் 1

ருத்ரனின் பனித்தீ 💝

அத்தியாயம் 1

அதிகாலை நேரம் மேற்கில் ஆட்சி செய்து கொண்டிருந்த குழுமையையும் அடர் இருளையும் நெட்டி தள்ளுவதற்காக கிழக்கில் பதுங்கி இருந்த சூரியன் தனது செங்கதிர் படைகளை ஒன்று திரட்டி கொடுங்கோல் ஆட்சி புரிய காத்திருந்த நேரம் அது.

 மணி அதிகாலை 6:00 என்று அலைபேசியின் தொடு திரையில் ஒளிரப்பட்டு, டிங் டிங் டிங் டிங் என்கின்ற சத்தத்தோடு அந்த அலைபேசி அடித்துக் கொண்டிருக்க, தனது கை நீட்டி ஒரு விரல் கொண்டு அதனை அணைத்தவன், இரவு முழுவதும் படுத்து உறங்கியும் கூட, நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பு சிறிதும் அச்சு களையாமல் இருக்க, தனது படுக்கையிலிருந்து மெல்ல எழுந்தமர்ந்து இமை குடைகள் கொண்டு மூடியிருந்த கண்களை மெதுவாகத் திறந்து தனக்கு முன்பிருந்த ஒரு சிறுமியின் அழகிய புகைப்படம் ஒன்றை பார்த்து கொஞ்சமே கொஞ்சம் இதழ் வளைத்து புன்னகைத்தான். 

என்றுமில்லாமல் இன்று அவனின் மனது சற்றே இலகுவாகவும் புத்துணர்வுடனும் இருப்பதாய் உணர்ந்து கொண்டவன்,

பின் படுக்கையிலிருந்து இறங்கி காலை வேலைகளை முடித்துக் கொண்டு சிறிது நேரம் யோகா பயிற்சியையும், அதன் பின் பற்பல ஆசனங்களில் உடற்பயிற்சிகளையும் முறையாக செய்து முடித்தவன் தனது அறையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த ட்ரெட் மில்லை ஆன் செய்து அதில் மெல்ல ஆரம்பித்து பின் புயலென ஓடினான்.

 அதன் பின் மணி 7:00 என்கின்ற அடுத்த அலாரம் ஒலி எழுப்பவும், ட்ரெட் மில்லை அணைத்துவிட்டு ஓடியதன் விளைவால் முகம் மற்றும் உடலில் முத்து முத்தாய் பூத்திருந்த வியர்வை துளிகளை டவல் கொண்டு துடைத்தவாரே குளியலறைக்குள் புகுந்தான்.

 குளித்து முடித்து உள்ளாடைகளை அணிந்து கொண்டு அந்த அறைக்கு வெளியில் இருந்த சிறிய கூடத்தைக் கடந்து நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்த சமையலறை உள்ளே சென்று, அங்கே இருக்கும் குளிர்சாதன பெட்டியை திறந்து நேற்று இரவு சுட்டு சாப்பிட்டது போக மீதமிருந்த மாவை எடுத்து அதனை தோசையாக வார்த்து அதில் பொடியிட்டு கொஞ்சமே கொஞ்சம் நெய் சேர்த்து அதனையும் சேர்த்து குழப்பி எடுத்துக் கொண்டு வந்து கூடத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியை ஒளிர விட்டு சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

 அதில் ஒளிபரப்பப்படும் செய்திகளை கவனித்தபடியே தான் சுட்டு எடுத்து வந்திருந்த இரண்டு தோசைகளையும் சாப்பிட்டவன், சென்று அதனை சுத்தமாக கழுவி வைத்து விட்டு நேற்று இரவே தான் நேர்த்தியாக இஸ்திரி செய்து வைத்திருந்த ஷர்ட்டையும் அதற்கு ஏற்ற பேண்டையும் போட்டுக்கொண்டு பெல்ட் மற்றும் ஐடி கார்டு இரண்டையும் மாட்டிக் கொண்டு அங்கே இருந்த அந்த சிறுமியின் புகைப்படத்தை பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டு அந்த அறையிலிருந்து வெளியில் வரும் பொழுது மணி 8:00 என்கின்ற அடுத்த அலாரம் ஒளிரப்பட்டது.

 சரியாக எட்டு மணிக்குள் தன்னுடைய வேலைகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு கிளம்பி வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்பது அவனுடைய திட்டமிடப்பட்ட காலை வேலை. அதனை எப்பொழுதும் நேரத்திற்குள் நேர்த்தியாக செய்து முடித்து விடுவான். 

 இன்றும் அதுபோல எட்டு மணிக்கான அலாரம் ஒலிக்கவும் அதனை அணைத்துவிட்டு ஃபோனை பேண்ட் பாக்கெட்டில் செருகியவாறு வீட்டை பூட்டி சாவியை பத்திரமாக எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பி தான் பேராசிரியனாக பணிபுரியும் கல்லூரியை நோக்கி பயணம் செய்தான் அவன். 

 ஆறடிக்கு சற்று உயரமும், இரண்டு அடிக்கும் சற்று அகலமான உடல் வாகும், உடற்பயிற்சியின் காரணமாக அகன்று விரிந்த மார்பகங்களையும், இறுகிய புஜங்களையும், ஒட்டி வைத்தார் போல் சிக்ஸ் பேக் கொண்ட வயிற்றுடனும், முகத்தில் நேர்த்தியாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசையும், அவனின் உடல் வாகை தத்தெடுத்தார் போல் எந்நேரமும் முகத்தில் குடிகொண்டுள்ள ஒரு இறுக்கமும், கண்களில் சிறிதும் கனிவில்லாமல் ஒருவித கடுமையும் மட்டுமே குடி கொண்டிருக்கும். 

 அமைதி மற்றும் கடுமைக்கு பேர் போனவன்… அவனை சிடு மூஞ்சி வாத்தி என்று கல்லூரி மாணவர்கள் அனைவரும் செல்லமாக இல்லை இல்லை கடுப்பின் உச்சத்தில் அழைப்பதுண்டு… அவனின் அந்த அமைதியின் காரணமாகவே இதுநாள் வரையிலும் அவனின் ஒற்றை நண்பன் ரித்விக்கை தவிர அவனுடன் பணிபுரியும் வேறு யாரும் அவனிடம் நெருங்கியதும் தேவையற்று பேசியதும் இல்லை. அவனின் அமைதியையும் அதனுள் ஒளிந்திருக்கும் வலி வேதனைகளையும் அவன் மற்றும் அவனுக்கு அடுத்த படியாக ரித்விக் மட்டுமே அறிவான். 

 அவனின் வாயிலிருந்து ஒரு வார்த்தையாவது சாதாரணமாக இலகுவாக வராதா என்று எண்ணி ஏங்கி ஏமாந்து போனவர்கள் தான் இங்கு அதிகம்.

பேச்சினை குறைத்து அமைதியைப் நிலைத்து தனிமையை தன்னுடன் வைத்துக்கொண்டு சுற்றி சுழன்று வருபவனின் வாய் மொழி மட்டுமல்லாது அவனின் இதயமும் கூட பல வருடங்களாக இறுக்கி பூட்டிய நிலையில் தான் இருக்கிறது.

அவனுக்கு அவன் தான் எல்லாம்… தாய் தந்தையர் உடன் பிறந்த உறவுகள் என யாருமில்லா ஒரு தனிக்காட்டு ராஜா தான் அவன்.

 தன்னுடைய வீட்டிலிருந்து அரை மணி நேர தொலைவில் இருக்கும் தான் பணிபுரியும் அந்த கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தது அவனின் இருசக்கர வாகனம். 

 அதுவரையிலும் கல்லூரியின் கேம்பஸில் ஆங்காங்கே நின்று கொண்டு அரட்டையும் லூட்டியும் அடித்துக் கொண்டிருந்த மாணவர்கள் வட்டம் அவனின் வாகனச் சத்தம் கேட்டு அவன் தானா என்பதை ஊர்ச்சிதப் படுத்திக் கொண்டவர்கள், 

“ஏய் சிடுமூஞ்சி வாத்தி வந்துட்டாருடா… கிளம்புங்கடா… இல்லன்னா நாம இங்க நிண்டு பேசுனதுக்கு ஹெவியா பனிஷ்மெண்ட் குடுத்துடுவாருடா…!” என்று நண்பர்கள் தங்களுக்குள்ளாக பேசியவாறு அவனறியா வண்ணம் அங்கிருந்து மெல்ல மெல்ல கலைந்து தங்களின் வகுப்பறை நோக்கி சென்றனர்.

 தன்னுடைய வண்டியை கொண்டு வந்து பணியாளர்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியவன் தனது ஹெல்மெட்டை கழட்டி ஹேண்ட்பாரில் மாட்டி தனது கலைந்த கேசத்தை சரி செய்தவாறே விழிகளை சுற்றி சுழற்றி அந்த கேம்பஸில் யாரேனும் தேவையற்ற நின்று பேசுகிறார்களா ? வேறு ஏதேனும் அரட்டை நிகழ்கிறதா..? என்பதை கவனித்தபடியே தனது வண்டியிலிருந்து இறங்கி தன்னுடைய உடைமைகள் அடங்கிய பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு தன்னுடைய கேபின் நோக்கி சென்றான் அவன் நம் கதையின் அமைதியான அழுத்தமான நாயகன் 

Dr. ருத்ரவர்மன், M.Sc., Ph.D. (Chemistry)  

 அவன் பார்க்கிங்கில் இருந்து தன்னுடைய கேபின் உள்ளே செல்லும் வரையிலும் யாரோ எவரோ என்று ஆங்காங்கே சென்று கொண்டிருந்த நண்பர்கள் அனைவரும் அவன் கேபின் உள்ளே சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் இணைந்து அரட்டை அடிக்க ஆரம்பித்து இருந்தனர்.

இத்தனை நேரம் அமைதியாக இருந்த அந்த காலேஜ் கேம்பஸின் ஓரிடத்தில் சுடிதார் அணிந்த ஒரு பெண் அங்கிருந்த ஒரு கல் பெஞ்சின் மீது ஏறி நின்றவாரே, 

 “இதோ பார் இன்னொரு தடவை என் அக்கா கிட்ட இந்த மாதிரி பேசுறது நக்கலு கிண்டலு கேலின்னு ஏதாவது பண்றது வச்சுக்கிட்ட… மவனே வயசுல பெரியவன் கூட பாக்க மாட்டேன், இந்த காலேஜ்ல ஏதோ ஸ்ட்ரிக்ட்டான சிடுமூஞ்சி வாத்தி ஒன்னு இருக்காமே… அது கிட்ட போட்டு குடுத்து உன் மானம் மரியாதை எல்லாம் கெடுத்து விட்டுடுவேன்… இந்த ஒரு வருஷம் முடியுற வரைக்கும் வால சுருட்டி வச்சுக்கிட்டு ஜாக்கிரதையா இருக்கணும் என்ன…!”

இவள் பெஞ்ச் மேலே நிற்க, கீழே நின்றிருந்த ஒரு ஆடவனின் சட்டை காலரை பிடித்து தனது முகத்தருகே கொண்டு வந்து கண்களே உருட்டி உருட்டி அவனை மிரட்டி கொண்டிருந்தாள் அவள்.

 அதனை கேட்ட அந்த ஆடவனோ சற்று பயந்து சுபாவமாக இருந்திருப்பான் போலும்… “இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காம நான் பார்த்துக்கிறேன்… இனி நான் உன் அக்கா கிட்ட எந்த பேச்சும் வச்சிக்க மாட்டேன்… என்னை மன்னிச்சுடு ப்ளீஸ்… இதை மட்டும் எங்க ப்ரஃபஸ்ஸர் பார்த்தார்ன்னா அப்புறம் நான் நாளைல இருந்து காலேஜுக்கே வர முடியாது… ப்ளீஸ் காலரை விடு…” என்று கூறியவாரே அவளின் கையில் சுருட்டி இருந்த தனது சட்டையை விடுவிக்க போராடினான் அந்த ஆடவன்.

நேற்றைய தினம் கல்லூரி முடித்து அனைவரும் கிளம்பிய நேரம் தன்னுடன் பயின்ற சக மாணவன் ஒருவன் விளையாட்டாக தன்னை கேலி செய்ததன் விளைவாக அழுது கொண்டே வீட்டிற்கு சென்றிருந்தாள் கனிமொழி.

22 வயது அமைதியான பாந்தமான பெண். யாரிடமும் எதிர்த்து ஒரு வார்த்தையும் பேசமாட்டாள். அப்படிப்பட்டவளை சக மாணவர்கள் கிண்டலும் கேலியும் செய்ததில் பொறுக்க முடியாமல் அழுதவாரே தன்னுடைய வீட்டிற்கு சென்று கல்லூரியில் நடந்த விஷயம் குறித்து தன்னுடைய தங்கையிடம் கூறியிருந்தாள்.

அதனை கேட்டு தன் அக்கா அழுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான், காலை எழுந்ததும் காலேஜிற்கு வந்து அந்த ஆடவன் யார் என்பதை கண்டுபிடித்து தன்னுடைய வாய் திறமையை காட்டி அவனை பயமுறுத்தி உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறாள் நம் கதையின் அராத்து நாயகி பனி விழி .

 “இதோ பார்… இவ என் அக்கா.. பேரு கனிமொழி. இந்த காலேஜ்ல தான் ஃபைனல் இயர் படிச்சிட்டு இருக்கா… அவளுக்கு எதனாலும் ஒன்னுன்னா நான் வருவேன்…. அமைதியான பொண்ணு தானே அவகிட்ட உங்க சித்து வேலை எல்லாம் பண்ணலாம்னு என் அக்கா கிட்ட வம்பிழுக்கற வேலை வச்சுக்கிட்டீங்க… அப்புறம் எவனா இருந்தாலும் நாரடிச்சுட்டு போயிடுவேன் ஜாக்கிரதை…”

அவள் கூறியதை கேட்டு சரி என்பதை போல் தலையசைத்த அந்த இளைஞனோ அவளையும் அவள் பிடித்திருந்த தன் சட்டை காலரை பார்த்து “சட்டையை விடுமா…. சட்டை சுருங்கி இருக்கறதை ப்ரஃபஸ்ஸர் பாத்தாருன்னா பனிஷ்மெண்ட் குடுத்தே என்னை வச்சு செஞ்சுடுவாரு…”

அவன் கூறியதை கேட்டு “இதோ பார் இப்போ நான் சொன்னதை எல்லாம் நீ மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டா பத்தாது… இதை அப்பிடியே எடுத்துட்டு போயி உன் கூட்டாளி எல்லார்கிட்டையும் மறக்காம சொல்லிடு…” என்று கூறியவள் தான் பிடித்திருந்த அந்த ஆடவனின் சட்டையிலிருந்து கையை எடுத்த அடுத்த நொடி,

“அம்மா தாயே கனிமொழி தெரியாம உன் பக்கம் வந்துட்டேன்… இனிமே உன் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டேன்…. உனக்கு இப்படி ஒரு தங்கச்சி இருக்கான்னு தெரிஞ்சிருந்தா, நான் நேத்து உன்னை கிண்டல் கூட பண்ணியிருக்க மாட்டேன்…” என்றவன் அவர்கள் இருவரையும் பார்த்து தலைக்கு மேலே கையை உயர்த்தி கும்பிட்டு விட்டு அங்கிருந்து ஓடி இருந்தான். 

 போகும் அந்த ஆடவனை பார்த்தவாறு பெஞ்சிலிருந்து குதித்து கீழே இறங்கிய 

பனி விழியோ, “இவனெல்லாம் ஒரு ஆளு முகரைன்னு இவன் கிண்டல் பண்ணான்னா நேத்து சாயந்திரம் வந்து அவ்வளவு நேரம் அழுதுட்டு இருந்த…! இனி இவன் மட்டும் இல்லை வேற எவனும் உன்னை கிண்டல் கேலி என்ன உன் பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான்…  

அப்படி எவனாவது கேலி கிண்டல் பண்ணாலும் நீ இதே போல அழுதுட்டு இருக்காம எனக்கு ஒரே ஒரு ஃபோன் மட்டும் பண்ணு… எவனா இருந்தாலும் நான் வந்து பேசிக்கிறேன்…” தனது சுடிதார் காலரை தூக்கி விட்டவாரே கெத்தாக கூறினாள் பனிவிழி.

 “நீங்க ரெண்டு பேரும் க்ளாஸ்க்கு போகாம இங்க என்ன பண்றீங்க…?” தடித்து வெளிவந்த அந்த எஃகு குரலில் திடுக்கிட்டு திரும்பினர் கனிமொழி பனிவிழி இருவரும்.

 அங்கு கடுமையான விழிகளோடும் இறுக்கமான முகத்தோடும் கம்பீர தோற்றத்தோடும் நின்றிருந்தான் ருத்ரன். 

 ருத்ரனை பார்த்த நொடி பயந்து போன கனிமொழியோ “சார்…சார்…இதோ.. இதோ கிளம்பிட்டேன் சார்…” என்றவள் அங்கிருந்து ஓடியிருந்தாள்.

 போகும் தன் அக்காவையே பார்த்தவாறு நின்றிருந்தாள் பனிவிழி.

 அவளின் முன்பு இரு விரல் கொண்டு சொடக்கிட்ட ருத்ரனோ “நீ இங்க என்ன பண்ற…? யார் நீ..?” என்று கேட்டான்.

“நா… நான்… நானும் ஸ்டுடெண்ட் தான்… இந்த காலேஜ் தான் படிக்கிறேன்…”

 “இந்த காலேஜ்லயா..?”

 “ஆமா சார்.. இதே காலேஜ் தான்…” 

 அவள் கூறியதை கேட்டு அவள் முகத்தை கூர்ந்து கவனித்த ருத்ரனோ “இதுக்கு முன்னாடி உன்னை நான் இங்க பார்த்தது இல்லையே…!” 

“என்ன சார் நீங்க… இந்த காலேஜ்ல மொத்தம் ஒரு 2000 பேருக்கு மேல இருப்பாங்களா…! அப்படி இருக்கும்போது என்னை மட்டும் எப்படி தனியா பார்த்துருப்பீங்க…? அப்படியே பார்த்திருந்தாலும் எப்படி ஞாபகம் வச்சிருப்பீங்க…?” 

“அப்போ நீ இந்த காலேஜ் தான்.. இல்லையா…?”

 “அட ஆமா சார்…” 

 “சரி அப்போ ஐடி கார்டு எங்க…?”

‘அய்யய்யோ ஏதோ வாய்க்கு வந்ததை அடிச்சு விட்டுட்டு இன்னைக்கு ஒரு நாளைக்கு தப்பிச்சு போயிடலாம்னு பார்த்தா அது முடியாது போலவே…! நம்ம வேற நேத்து தான் வேற காலேஜ்ல இருந்து வந்து இங்க அட்மிஷன் போட்டுருக்கோம்… அம்மா கிட்ட வேற காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு வந்து இன்னைக்கு ஃபுல்லா சென்னைய சுத்தி பாத்துட்டு நாளையில இருந்து காலேஜுக்கு வரலாம்னு ப்ளான் போட்டுருந்தோமே…! இப்ப என்ன சொல்லி சமாளிக்கிறது….? இந்த வாத்தி வேற கஞ்சி போட்டு உடுத்துன காக்கி யூனிஃபார்ம் மாதிரி வெரப்பா நிக்கிறாரே…!’

மனதிற்குள் எண்ணியவாறு திருதிருவென விழித்து தனது விழிகளை அங்கும் இங்கும் உருட்டியவாறு அவனை பார்த்திருந்தாள் பனிவிழி.

 காலேஜ் கேம்பஸின் உள்ளே மாணவர்கள் சுற்றி திரிவதை கூட விரும்பாத அந்த கடுமையான வாத்தியார் ருத்ரவர்மன், அட்மிஷன் போட்டிருந்தும் கூட முதல் நாளே காலேஜ் கட் அடித்து விட்டு தன்னுடைய அக்காவிற்காக பரிந்து சண்டைக்கு வந்திருந்த பனிவிழியை பற்றிய உண்மை அறிவானா…? அப்படி அவளின் உண்மை நிலவரத்தை கண்டறியும் பொழுது அவளுக்கான அவனின் தண்டனை என்னவாக இருக்கும்…? 

தொடர்ந்து பாப்போம்….

(தீ தொடரும் 💝💝💝)

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top