நூலிழை பந்தம்❤️ 5

திருமணத்திற்குப் பதினைந்து நாட்கள் மட்டுமே இருக்க, அன்று எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டு இருந்தது; அந்த நிகழ்வு நடக்கும் வரை…

​கோவிந்தன் ராமனிடம் பேசிக் கொண்டிருந்தவர், “ஒரு மாதிரி உள்ளது” என கூறி கொஞ்ச நேரம் உறங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி அறைக்கு உறங்கச் சென்றார்.

​அரை மணிநேரம் நன்றாகத்தான் சென்றது… அவருக்கு முன்பே நெஞ்சு வலித்துக்கொண்டே இருந்தது; தற்போது உயிரே போகும் அளவிற்கு வலித்தது.

​யாரையும் கத்தி அழைக்கவும் முடியவில்லை. பத்து நிமிடம் கழித்து ஏதோ பொருள் எடுக்க வந்த புவனா, கோவிந்தன் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அனைவரையும் கத்தி அழைத்தார். அவரின் சத்தத்தைக் கேட்டு அனைவரும் ஓடிவர, அங்கு நிலவரத்தைப் பார்த்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

​இதை ஹரிக்குத் தெரியப்படுத்த அழைக்க, அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. புவனா, லட்சுமி, ராமன் என மாற்றி மாற்றி அழைத்து பார்த்தனர் அவன் அழைப்பை ஏற்கவே இல்லை. பவி கூட அவனுக்கு அழைத்தாள். அழைப்பு சென்றதே தவிர்த்து யாரும் ஏற்கவே இல்லை.

​மருத்துவர் வேறு கோவிந்தனைப் பரிசோதித்து பார்த்துவிட்டு, “சிவியர் அட்டாக்” என்று கூறிவிட்டார். அதைக் கேட்டதில் இருந்து யாருக்கும் உயிரே இல்லை. கண்டிப்பாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என கூறிவிட்டார்.

​சர்ஜரி செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக ஐந்தாறு லட்சம் மருத்துவமனை செலவு ஆகிவிடும். இப்பொழுது இருக்கும் கையிருப்பு திருமணத்திற்குத்தான் உள்ளது. அதுவும் நிறைய பேருக்கு முன் பணம் கொடுத்து இருந்தார்.

இப்பொழுது கோவிந்தன் ஒரு மூன்று லட்சம் வைத்து இருந்தார். மீதி என்ன செய்வது என்றே தெரியவில்லை.

​இந்தத் திருமணத்திற்கு என ஹரி பணம் கொடுத்து இருந்தாலும், கோவிந்தனின் கையிருப்பு போட்டாலும் பணம் போதவில்லை. எனவே புவனாவின் நகையை வங்கியில் வைத்து நகை கடன் வாங்கித்தான் பணம் புரட்டி இருந்தார்.

​ராமனும் இரண்டு மாதம் முன்புதான் புது தறிக்குப் பணம் கொடுத்து இருந்தார். பணம் கொடுத்து மூன்று நான்கு மாதங்கள் கழித்துத்தான் தறி தருவர். இன்னும் அதிகமானாலும் ஆகும். எனவே அவரிடமும் பணமில்லை. என்ன செய்வது என்றே தெரியாத நிலை!…

 

 

​இதில் ஹரி வேறு அழைப்பு ஏற்காதது அனைவருக்கும் கஷ்டமாக இருந்தது. விஷயம் கேள்விப்பட்டு ரஞ்சித், ஆதி என நான்கு ஐந்து பேர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆதி பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வான். அதனால் விஷயமறிந்த இவனும் வந்து இருந்தான்.

​ஹரி அழைப்பை ஏற்கவில்லை என்று அவன் மேல் அனைவரும் கோபமாக இருந்தனர்…

புவனாவும் இந்த நிலைமையில் கூட மகன் அழைப்பை ஏற்கவில்லை என மிகவும் மனச்சோர்வை அடைந்தார்.

 

 

​ஆனால் ராமன் மற்றும் பவிக்கு மட்டும் அங்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றியது. உடனே சென்னையில் இருக்கும் மித்ரனுக்கு அழைத்து ஹரியைச் சென்று பார்க்கக் கூறியிருந்தாள்…. அங்கு அவன் தங்கி இருக்கும் அறைக்குச் சென்று கேட்ட போது, அங்கு கூறிய செய்தியில் அதிர்ந்துதான் போனான்.

 

 

​உடனே பவிக்கு இங்கு நடக்கும் விஷயத்தைக் கூறி இருந்தான். பவி மொத்தமாக உடைந்துவிட்டாள். ராமன், ரஞ்சித், ஆதியிடம் மித்ரன் கூறியதைச் கூறியதும் அவர்களும் அதிர்ந்துதான் போனார்கள்….

 

 

​பவி ராமனிடம், “அப்பா, நான் ஆதி கூட சென்னை போறேன்…. இங்க ரஞ்சித் மாமா கூட பாத்துக்கோங்க…. பணத்துக்கு என் கிட்ட ஒரு லட்சம் பக்கம் சேவிங்ஸ் இருக்கு…. அது உங்களுக்கு அனுப்பி விடுறேன். அம்மா நகை, என் நகை எல்லாத்தையும் பேங்க்ல வச்சு லோன் வாங்குங்க…  இப்போ மாமா கைல வச்சு இருக்க அமௌன்ட் கட்டி சர்ஜரி பண்ண சொல்லுங்க. இங்க பாத்துக்கோங்க பா… அங்க எத்தனை நாள் என்னனு தெளிவா தெரியல… அங்க எவ்வளோ ஆகும் தெரியல… எதுவா இருந்தாலும் நான் கால் பண்றேன். ஆதி, எனக்காக ஒரு டூ டேஸ் மட்டும் லீவு எக்ஸ்டெண்ட் பண்றியா?” என்று கேட்டாள். அவனும் சரி என்று கூறிவிட்டான்.

​வீட்டிற்குச் சென்று இரண்டு செட் உடை மட்டும் எடுத்துக்கொண்டு, ராமனுக்கு ஒரு லட்சம் அனுப்பி இருந்தாள்.

அதற்குள் தங்கள் வீட்டில் விஷயத்தைக் கூறி மித்ரன் வீட்டில் கார் இருக்கும், அதை எடுத்துக்கொண்டு ஆதி பவி வீட்டிற்கு வந்திருந்தான். ஐவர் மட்டும் நட்புகள் இல்லை; ஐவரின் குடும்பமும் மிகவும் நெருக்கம். எனவே தன் வீட்டில் சொன்னால் பிரச்சனை இல்லை என எண்ணி ஆதி கூறிவிட்டான். விஷயம் அறிந்து ஆதி, மித்ரன், ஹேமா, திவ்யா குடும்பமும் மருத்துவமனை கிளம்பி இருந்தனர், அங்கு இருப்பவர்களுக்குத் துணையாக…

​மருத்துவமனை சென்று ராமன் மற்றும் ரஞ்சித்திடம் கூறி சென்னை கிளம்பி இருந்தனர். புவனா, லட்சுமி மற்றும் மற்ற உறவினர்களிடம் கூற வேண்டாம் எனக் கூறித்தான் கிளம்பி இருந்தாள்.

 

​”ஆதி, ஆயிரத்து எட்டு லிங்கம் கோவில்ல கார் நிறுத்து” என்று கூறினாள். அவனும் நிறுத்தி இருந்தான். இருவரும் சென்று சாமியை தரிசித்துவிட்டு காருக்கு வந்தனர். இருந்தும் பவியின் மனம் ஒரு நிலையில் இல்லை…

​அதை அறிந்த ஆதி அவளிடம், “பவி, மனசுல இருக்கறதை கொட்டிடு. மனசுக்குள்ளேயே வச்சு இருந்தா எதுவும் முடியாது. எல்லாத்தையும் சொல்லிட்டு நார்மலாகி எல்லாத்தையும் பாரு” என்று கூறியவுடன் அவள் தோள் சாய்ந்து கதறிவிட்டாள்.

 

 

 

​”ஆதி, அவனுக்கு எதுவும் ஆகி இருக்காதுல.. எனக்கு பயமா இருக்குடா.. வீட்டுல தெரிஞ்சா தங்கமாட்டாங்கடா… ஐயோ எப்படிடா சமாளிப்பேன்… அவனுக்கு நாங்க எல்லாம் இல்லையாடா… மாமாகிட்ட என்னடா சொல்றது.. அவரே மாசிவ் அட்டாக் வந்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காரு.. இது தெரிஞ்சா மனுஷன் தாங்க மாட்டாருடா… எங்க குடும்பத்துக்கு மட்டும் ஏன்டா இப்படி.. ஒருத்தி இப்படி தான் பாதியிலேயே போயிட்டா.. அதுல இருந்து வெளிய வரவே நாங்க எவ்வளோ கஷ்டப்பட்டோம்.. இவனுக்கு மட்டும் எதோ ஆகி இருந்தா நினைச்சு கூட பாக்க முடியலடா” என்று கூறி கத்தி அழுது இருந்தாள்.

 

​பவி ‘அவள்’ என்று கூறிய நொடி, அந்த ‘அவளை’ நினைத்து ஆதியின் மனதும் கலங்கிவிட்டது. அந்த ‘அவள்’ அவனின் உயிராகிற்றே….

இன்றளவும் அவளை நினைத்து மனசுக்குள் அழுது கொண்டு இருக்கிறானே… இந்த வருடத்தோடு அவள் இவ்வுலகை விட்டுச் சென்று இரண்டு வருடமாகிறதே.. அதற்கு ஒரு வகையில் ஹரி காரணம் என்று எண்ணி தான் கோவிந்தன் அவனிடம் பேசாமல் உள்ளார். அதேபோல் பவியும் அதனால்தானே பேசாமல் இருக்கிறாள்..

 

 

​இருந்தும் தன்னைத் திடப்படுத்திய ஆதி, “பவி, இங்க பாரேன்… ஆதி அண்ணனுக்கு எதுவும் ஆகி இருக்காது… மித்ரன் அங்கதானே இருக்கான்.. எதுவா இருந்தாலும் அவன் சொல்லுவான்… நீ கவலைப்படாம இரு… நாம நைட் சென்னை ரீச் ஆகிடலாம்” என்று கூறி காரை சென்னை நோக்கி பறக்கவிட்டு இருந்தான்.

 

​மதியம் இரண்டு மணிக்கு இளம்பிள்ளையிலிருந்து கார் எடுத்து இரப்பு எட்டரை மணிக்கு மேல் தான் சென்னை போய் சேர்ந்தனர். அங்கிருக்கும் ட்ராபிக்கில் மெல்ல மெல்ல ஹரி இருக்கும் இடம் செல்ல ஒன்பத்தரை ஆகியிருந்தது. ஆதி சென்னைக்கு முன்பே பவியை மிரட்டி உண்ண வைத்து இருந்தான். எப்படியும் ஹரியைப் பார்த்தால் அவள் கண்டிப்பாக உண்ண மாட்டாள் என எண்ணி உண்ண வைத்து இருந்தான்…

 

 

​நடுவில் டீ குடிக்க இறங்கிய ஆதி பவிக்குத் தெரியாமல் மித்ரனுக்கு அழைத்து நிலைமை என்னவென்று விசாரித்து இருந்தான். அங்கு ஹரியின் நிலை கொஞ்சம் மோசம் என அறிந்துதான் அவளை உண்ண வைத்து இருந்தான்…

 

மருத்துவமனை உள்ளே செல்லச் செல்ல அவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.. கண்டிப்பாக அவளைச் சமாடிக்க முடியாது என எண்ணி திவ்யாவையும் மித்ரன் அழைத்து வந்திருந்தான்..

 

​ஹரி இருக்கும் அறைக்கு முன்பு ஹரியின் அலுவலகத் தோழர்கள் மூவர் இருக்க, மித்ரனும் திவ்யாவும் இருந்தனர். நேராக மித்ரனிடம் சென்றவள், “மித்து, அவனுக்கு ஒன்னுமில்லை அப்படித்தானே சொன்ன… ஆனா ஐசியூ முன்னாடி நிக்குறீங்க.. அவனுக்கு ஒன்னுமில்ல தானே… சின்ன ஆக்சிடென்ட் தானே சொன்ன.. என்ன ஆச்சுனு சொல்லுடா” குரல் நடுங்கக் கேட்டாள்…

 

​”அண்ணன் கம்பெனில நிறைய பேரை லே-ஆஃப் பண்ணி இருக்காங்க.. அதுல அண்ணாவும் ஒன்னு… அவங்க பியான்சி அங்க தானே ஒர்க் பண்றாங்க.. இதத் தெரிஞ்சவங்க அண்ணா கிட்ட ஒழுங்கா பேசலையாம்… அதைப் பத்தி கூட அண்ணா கவலைப்படல…. அண்ணா செஞ்ச ஒர்க்குக்கு இவங்க கிரெடிட் வாங்கி ப்ரோமோஷன் வாங்கி இருக்காங்க… அதுலதான் கோவப்பட்டு சண்டை போட்டுக்கிட்டு கிளம்பி இருக்காரு..

​அண்ணா கோவமா போனாலும் கரெக்ட்டாதான் போய் இருக்காரு. பட், வேகமா வந்த கார் அண்ணா வண்டில மோதி இருக்கு… அண்ணா அதுல பைக்ல இருந்து பறந்து போய் விழுந்து இருக்காரு.. அண்ணா கோவமா போறாங்கனு அண்ணாவோட கொலீக் பின்னாடியே வந்து இருக்காரு… அவரையும் லே-ஆஃப் பண்ணிட்டாங்க… அவர் தான் அண்ணாவை அட்மிட் பண்ணி இருக்காரு. அவர் மட்டும் கரெக்ட் டைமுக்கு அட்மிட் பண்ணலனா அண்ணா உயிரோடவே இருந்து இருக்க மாட்டாரு” என்று மூவரில் ஒருவரைக் காட்டி கூறினான்…

 

 

​பவி அவரைப் பார்த்து கண்ணீருடன் கை எடுத்துக் கும்பிட்டிருந்தாள். அந்த நபர், “ஐயோ சிஸ்டர், என்ன பண்றீங்க.. முதல்ல கையை கீழ இறக்குங்க.. அவன் எனக்கும் ஃப்ரெண்ட் தான்…. அவன் எங்களுக்கு நிறைய ஹெல்ப் பண்ணி இருக்கான்… அவனோட ஒர்க் கிரெடிட்ஸ் எல்லாம் அந்த கரிஷ்மா வாங்கிட்டா… இப்போ கூட ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்னு சொன்னதுக்கு எதுவுமே ரியாக்ட் பண்ணல… இந்த மேரேஜை கால் ஆப் பண்ணிடுங்க சிஸ்டர்… அவ கண்டிப்பா உங்க ஃபேமிலிக்கு சரிப்பட்டு வர மாட்டா…” என்று கூறினார்..

 

 

​அங்கிருந்த மற்றொருவரோ, “சிஸ்டர், கண்டிப்பா அவ நாளைக்கு ஹரியைப் பார்க்க வருவா… பாசமா வாரான்னு மட்டும் நினைக்காதீங்க… இப்போ முடிஞ்ச ப்ராஜெக்ட் வச்சுதான் லே-ஆஃப் பண்ணாங்க… இவன்” என்று முன்பு பேசிய நபர் காட்டி, “ஓன்(own) பிசினெஸ் பண்ணப் போறான். சோ அவன் பெருசா இதைக் கண்டுக்கல.. ஆனா ஹரி அவனோட ஃபுல் எஃபோர்ட் போட்டான்.. கடைசில பை கரிஷ்மானு அவ நேம் போட்டுக்கிட்டா.. நாளைக்கு மீட்டிங் இதைப்பத்தி அவளுக்கு ஒன்னும் தெரியாது.. ஹரி கிட்ட கேட்க வருவா, அவளை உள்ள விடாதீங்க.. ஆபிசில நானும் இவனும் பாத்துக்குறோம்” என்று இன்னொருவரைக் காட்டி கூறி, “எந்தப் பிரச்சனையா இருந்தாலும் எங்களுக்கு கால் பண்ணி சொல்லுங்க சிஸ்டர்” என்று கூறி ஆதி, மித்ரனிடம் மூவரும் தங்கள் அலைபேசி எண்களைக் கொடுத்துவிட்டுச் சென்றனர்…

 

 

​மூவரும் சென்றபின் ‘இது வேறா?’ என்று உடைந்து போய் அமர்ந்துவிட்டாள் பவி.. மித்ரன் சின்ன ஆக்சிடென்ட் என்று மட்டும் கூறித்தான் இங்கு வரக் கூறி இருந்தான். இந்த அளவு பிரச்சனை என்று கூறவில்லை…

Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.
Scroll to Top