ஆதவனின் கேலியைக் கேட்டதும், வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த கத்தியைக் கையில் வைத்துக்கொண்டே மகனை முறைத்து பார்த்த பரமு, “இங்க பாரு ஆது… உன் அம்மாவுக்கு நான் பயப்படலை. குடும்பத்துல ஒரு கூட்டுப் பொறுப்பு வேணும்னுதான் நான் இறங்கி வந்து காய்கறி நறுக்கிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்!” என்று கம்பீரமாகத் தன் மீசையை முறுக்கியபடிச் சமாளித்தார் பரமு.
சமையலறையிலிருந்து கரண்டியோடு வெளியே வந்த சீதா, “ஆமா ஆமா… பெரிய கூட்டுப் பொறுப்பு! காலையில கறிக்கடையில போய் பாய் கிட்ட வம்பு வளர்த்துட்டு வந்திருக்கீங்க. அப்புறம் நான் சொன்னா மட்டும் ரோஷம் பொத்துக்கிட்டு வந்துரும்!” என்று தன் புருஷனைக் வாரினாள்.
“ஏண்டி… உன் அண்ணன் மகன்கிட்ட தான் நான் தோத்துப்போறேன்னு பார்த்தா, நீயும் என் மானத்தை வாங்குறியா?” என்று பரமு புலம்ப, தந்தையின் நிலையைப் பார்த்த ஆதவனுக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மதிய உணவு நேரம் வந்தது. சமையலறையிலிருந்து கமகமவென ஆட்டுக்கறி குழம்பின் மணமும், மிளகு ரசத்தின் மணமும் வீடெல்லாம் தூக்கியது.
நீளமான டைனிங் டேபிளின் முன்பு பரமு, ஆதவன் இருவரையும் உட்கார வைத்து, சுடச்சுடச் சோற்றைப் போட்டுத் தாராளமாகக் கறிக்குழம்பை ஊற்றினாள் சீதா. மணக்க மணக்கச் சமைத்திருந்த ஆட்டுக்கறி குழம்பை ஒரு பிடி பிடித்தான் ஆதவன்.
“அப்பாடா… ஹாஸ்டல்ல அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்துச்சும்மா. உன் கை பக்குவமே தனி தான்!” என்று ஆதவன் பாராட்டியதும், சீதாவின் முகத்தில் அப்படியொரு பூரிப்பு!
இதைப் பார்த்த பரமு, உடனே தன் தட்டில் இருந்த நல்ல பெரிய தொடை எலும்பை எடுத்து மகன் தட்டில் போட்டவர், “இந்தா கண்ணு… இதைக் கடிச்சுச் சாப்பிடு. கறிக்கடையில பாய் கிட்ட சண்டை போட்டுப் பார்த்து பார்த்து வெட்டிட்டு வந்த எலும்பு இது!” என்றார் பெருமையாக.
“ஆமாம்… பாய் எக்ஸ்ட்ராவா போட்டுக் கொடுத்தாருன்னு சொல்ல வேண்டியதுதானே?” என்று சீதா சமையலறையிலிருந்து வந்தபடி குரல் கொடுக்க, ஆதவனோ சிரிப்பை அடக்க முடியாமல் தன் தந்தையைப் பார்த்தான்.
பரமு கடுப்பாகி, “ஏண்டி சீதா… உனக்கு என்னைப் பேசலன்னா சாப்பாடு தொண்டையில இறங்காதோ? அவன்தான் பெங்களூர்ல இருந்து வந்திருக்கான், அவன்கிட்ட என் கெத்தைக் கொஞ்சம் காட்டிக்க விட மாட்டியே!” என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டவர், ஏன் சீதா அருணுக்கு போன் போட்டியா?
புள்ள ஆட்டுகறினா விரும்பி சாப்பிடுவான் என்றார்.
கணவர் சொன்னதைக் கேட்ட சீதா, அப்பவே பண்ணிட்டேங்க, வரேன்னு சொன்னான். மருமவன் மேல இம்புட்டு பாசம் இருக்குது, ஆனால் என் அண்ணன் மவனை நேரில் பார்த்தா எலியும் பூனையும் போல நிக்குறீங்களே என்க, ஆமா டி. என்னை பார்த்தா உன் குடும்பத்து ஆளுங்களுக்கு சண்டக்காரன் போல தான் தெரியுமென்று பல்லைக் கடித்தார் பரமு.
அப்போது வாசலில் இருந்து, “சீதா… மதியச் சோறு மணக்குதே! எனக்கு ஒரு தட்டுப் போடு,” என்றபடியே அருண் உள்ளே நுழைந்தான்.
“வாங்க சார்! கரெக்ட்டா சாப்பாட்டு நேரத்துக்கு மூக்கை பிடிச்சுக்கிட்டு வந்துடுவியே!” என்று பரமு கலாய்க்க, “மாமா… நீங்க வாங்கிட்டு வந்த கறிதானே? அப்போ நான் சாப்பிடாம எப்படி?” என்றவன் “அத்தை… இந்தா!” என்று அருண் கையோடு கொண்டு வந்திருந்த தூக்குவாளியைச் சீதாவிடம் நீட்டினான்.
“என்னப்பா இது?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் சீதா.
“உன் அண்ணி கைமணக்கச் சமைச்ச நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு அத்தை! வாசனை ஆளைத் தூக்குது… அங்கேயே ஒரு பிடி பிடிச்சுட்டுதான் வர்றேன்,” என்று அத்தையிடம் வாலியைக் கொடுத்தவன், பரமுவை நோக்கிக் கண்ணடித்து, “அந்த மீசைக்குக் கொஞ்சம் குழம்பை ஊத்தி வை அத்தை! கருவாடுன்னு சொன்னதுமே பாரு, ஆளுக்கு வாயில எச்சில் ஊறுது!” என்று சிரித்துக்கொண்டே அங்கிருந்த சோபாவில் போய் படுத்துவிட்டான்.
மருமகன் சொன்னதைக் கேட்டு கடுப்பான பரமு, “ஏண்டி சீதா… உங்க குடும்பத்துக்கே என்னைய இழுத்துப் பேசலன்னா தூக்கமே வராதே! இதுக்குத்தான் சொல்றது… சொந்தக்கார வீட்ல வாக்கப்படக் கூடாதுன்னு!” என்று புலம்பினார்.
சீதா உடனே தன் இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, “ஆமா… இவரைக் கட்டிக்கிறேன்னு நான்தான் கியூவுல நின்னேன் பாரு!” என்று முறுக்கிக் காட்டினாள்.
அப்போது பரமு பெருமூச்சு விட்டுக்கொண்டே, “வேணும்டி… எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!” என்று வழக்கம் போலத் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதைப்பார்த்துச் சிரிப்பை அடக்க முடியாத ஆதவன், “யப்பாடி… ஊர் வாயை மூடினாலும் மூடலாம், ஆனா உங்க ரெண்டு பேர் வாயையும் மூடவே முடியாது போலயே!” என்று அலுத்துக்கொண்டான்.
சோபாவில் படுத்திருந்த அருண் உடனே தலையைத் தூக்கி, “அதை ஏண்டா கேக்குற மாப்பிள்ளை? அப்போ இத்தனை வருஷமா இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டி என் காது என்ன ஆயிருக்கும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருடா!” என்று அங்கிருந்து குரல் கொடுத்தான்.
அருண் சொன்னதைக் கேட்ட பரமுவுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வர, பக்கத்தில் இருந்த கூடையில் கிடந்த ஒரு பெரிய வாழைப்பழத்தை எடுத்து, படுத்திருந்த அருணை நோக்கித் தூக்கி எறிந்தார்.
அருண் அசால்ட்டாக அதை ஒற்றைக் கையில் ‘கேட்ச்’ பிடித்து, “தேங்க்ஸ் மாமா! கருவாட்டு குழம்பை ஒரு வெட்டு வெட்டுனதில் வயிறு கொஞ்சம் செரிமானம் ஆகாம கணமா இருந்துச்சு… நல்லவேளை வாழைப்பழம் கொடுத்தீங்க!” என்றபடி தோலை உரித்து வாயில் போட்டு மென்றான்.
அருணின் அந்தச் சமயோசிதமான குறும்பையும், பரமுவின் திருதிருவென்ற முழிப்பையும் பார்த்த ஆதனுக்கும் சீதாவுக்கும் சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை;
வாழைப்பழத்தை சாப்பிட்டு முடித்தவன் அதான் உன் புருஸ் தூக்கு வாளியவே மோப்பம் புடிச்சிட்டு இருக்காரே, போனா போகட்டும் கொஞ்சம் ஊத்து, பிறகு ஏமாந்து போனதில் காதுல சீழ் வந்துடப் போகுதென்று படுத்தான்.
இதைக் கேட்ட பரமு அட ஆக்கங்கெட்டவனே நான் என்ன மாசமாவா இருக்கேன் ஏமாந்து போக?, அத்தை மவள்னு ஆசைப்பட்டு இவளை கட்டுனேனா இல்லை இந்த அடங்காத பயலை கட்டுனேனானு தெரியலை என்க…
பார்த்தியா சீதா உன் புருஸ்கு யார் கூட கல்யாணம் ஆனதுனு கூட தெரியலை? அந்த லட்சணத்தில் குடும்பம் நடக்குதென்கவும், அட சண்டாளா, சும்மாவே உன் அத்தைக்காரி ஒரு வார்த்தை விட்டுத்தர மாட்டா இப்போது என்ன ஆக போகுதோ என்று வாய் மூடுவதற்குள், அதானே..
அருண் சொல்றது வாஸ்தவமான வார்த்தை.என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரியலைனா என்ன அர்த்தம் என்று ஆரம்பித்து விட்டார்.
அங்கே நடக்கும் கூத்தை பார்த்த ஆதவன் முடியல…சத்தியமா முடியலை. அடேய் நாரதா ஏன் டா இப்படி என்க, நீ கண்டுக்காதடா இது என் அத்தை வாழ்க்கை என்கும் அருணை கொலை வெறியில் பார்த்துக்கொண்டிருந்தார் பரமு.
ஒருவழியாக பெற்றோரை சமாதானம் செய்த ஆதவன் சாப்பிட்டும எழுந்தவன், சோபாவின் இன்னொரு பக்கத்தில் வந்து சாய்ந்து கொண்டான். அருணும் ஆதவனும் கலகலப்பாகப் பேசிக்கொண்டே, டிவியையும் பார்த்துக்கொண்டிருக்க அன்றைய பொழுது இதமாக நகர்ந்தது.
மாலை வேளை வந்தது…சீதா என்று வெளியே இருந்து குரல் கொடுத்தார் பரமு, இதோ வரேங்க என்றபடி வர, புள்ளைங்களுக்கு டீ போட்டுக்கொடு . அஞ்சு மணிக்கெல்லாம் அந்த மாடு குடித்து விடும் என்க, போட்டுட்டு தாங்க இருக்கேன்.
எவ்வளவு நேரம் தான் இந்த கணக்கை பார்ப்பீங்க என்று சீதா செல்லமாக முறைக்க, இல்லைடி எனக்கு எந்த வேலையும் அருணு வைக்கிறதில்லை. அதான் பழைய கணக்க பாக்குறேன் என்றார்.
பின்னர் மூவருக்கும் டீ கொண்டு வந்து கொடுக்க, டீயை குடித்த ஆதவன் பெங்களூரிலிருந்து தனது அம்மாச்சி, தாத்தா, மாமா மற்றும் மாமிக்காகப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்த பரிசுப் பொருட்களை எடுத்துக் கொண்டு அருணோடு கிளம்பினான்.
இரண்டு தெரு தள்ளி இருக்கும் தன் தாயின் பிறந்த வீட்டிற்குள் அவன் நுழைய, பேரனைக் கண்டதும் குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.
அவனது தாத்தா தம்புசாமி, பாட்டி, மாமா, மாமி நால்வரும் அவனை ஆசையோடு வரவேற்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.
தாத்தா தம்புசாமி பேரனின் கன்னத்தைத் தடவியபடி, “இனிமே இங்கதானே இருப்ப கண்ணு? திரும்பவும் அந்த ஊருக்குப் போக மாட்டயே?” என்று ஆசையோடு கேட்க…
“ஆமா தாத்தா! படிப்பு முடிஞ்சிருச்சு. இனிமே அப்பா கூடவே இருந்து நம்ம பிசினஸைப் பார்க்கப்போறேன்,” என்றான் ஆதவன் புன்னகையோடு.
அதைக் கேட்ட தம்புசாமிக்கு அவ்வளவு சந்தோஷம். “ரொம்ப நல்லது கண்ணு! எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து உன் அப்பன் பரமு மாடு மாதிரி உழைச்சுக்கிட்டு இருக்கான். அவனுக்கு ஆதரவா நீ கூட இருக்கிறது ரொம்ப நல்லது,” என்று மருமகனுக்காகப் பரிந்து பேசினார்.
பின்னர், ஆதவன் தன் எதிர்காலத் திட்டத்தைப் பற்றித் தன் மாமா ஆனந்திடம் விரிவாகப் பேசத் தொடங்கினான். தங்கள் கடல்சார் வணிகத்தையும் மீன் ஏற்றுமதியையும் அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது, தொழிலை எவ்வாறு நவீனப்படுத்துவது என்ற தன் எண்ணங்களை அவன் தெளிவுபடுத்தினான்.
தங்கை மகனின் தொலைநோக்குப் பார்வையையும், தொழில்மீதான அவனது அக்கறையையும் கேட்டவருக்கு மெய் சிலிர்த்தது. “உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குடா கண்ணா! யோசிச்ச மாதிரியே எல்லாத்தையும் நல்லபடியா செய்து முடி!” என்று மனதார வாழ்த்தி பாராட்டைத் தெரிவித்தார்.
இரவு சாப்பாட்டை தனது தாத்தா வீட்டிலேயே சாப்பிட்ட ஆதவன், அருணோடு மாடியில் போய் படுத்து விட்டான்.
மறுநாள் விடியலும் வந்தது. காலை டிபனை முடித்த கையோடு, ஆதவனும் அருணும் தங்களின் புதிய லட்சியத்தை நோக்கி வீட்டை விட்டுப் புறப்பட்டனர்.
தங்கள் குடும்ப மீன் பிசினஸை வெறும் உள்ளூர் மற்றும் வெளிமாநில அளவோடு நிறுத்தாமல், நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முதற்கட்ட வேலைகளில் இறங்கினர்.
இதற்காகத் துறைமுகப் பகுதி மற்றும் ஏற்றுமதி தொடர்பான அலுவலகங்களுக்குச் சென்ற இருவரும், கடல் உணவுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யத் தேவையான ‘எக்ஸ்போர்ட் லைசென்ஸ்’, தரக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள், மற்றும் சுங்கத் துறை சார்ந்த நடைமுறைகள் அனைத்தையும் அங்கிருந்த அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.
ஆதவனின் தெளிவான கேள்விகளும், அருணின் தொழில் அனுபவமும் சேர்ந்து ஏற்றுமதி பிசினஸிற்கான முதல் அடியை மிக வலுவாக எடுத்து வைக்க உதவியது.
அதிகாலை நான்கு மணி இருக்கும்… கடலில் ஆழமான அமைதி நிலவிய அந்த வேளையில், சுதாகரும் அவரது நண்பர்களும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினர்.
எல்லோரும் ஒரே மூச்சாகத் தங்கள் முழு பலத்தையும் திரட்டி, கடலுக்குள் வீசியிருந்த பிரம்மாண்டமான வலையை மெல்ல மெல்லப் படகை நோக்கி இழுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே வலை கணமாக இருந்தது! அலைகளின் போராட்டத்திற்கு நடுவே, வெள்ளிப் மீன்கள் பளபளக்க வலையைத் தூக்கிப் படகிற்குள் கொட்டினர்.
வகை வகையான மீன்கள் படகின் தளம் முழுக்க நிறைந்து நகர, ஐவரின் முகத்தில் உழைப்பிற்கான மகிழ்ச்சியும் திருப்தியும் அலைமோதியது.
உடனே படகைத் திருப்பி, கரையை நோக்கிச் செலுத்தினர். படகு அலையைக் கிழித்துக் கொண்டு பூம்பாறை கரையை வந்து அடையும் அதே நேரத்தில், கிழக்கே வானம் செவ்வானமாக மாற, தங்கத் தட்டெனச் சூரியன் கம்பீரமாக உதிக்கத் தொடங்கியது.
அந்த அதிகாலைச் சூரியனின் வெளிச்சத்தில், அவர்களின் உழைப்பும் கரையில் காத்திருந்தவர்களின் நம்பிக்கையும் பிரகாசமாகப் ஜொலித்தன.
கரையை அடைந்ததும், ஐவரும் சேர்ந்து படகில் இருந்த மீன்களை வரிசையாக இறக்கி வைத்தனர். அதில் தங்களின் குடும்பத் தேவைக்காகக் கொழுத்த மீன்களைத் தனியாக எடுத்துப் பைகளில் போட்டுக்கொண்டு, மீதமிருந்த மீன்களை அங்கே அதிகாலைக் வியாபாரத்திற்குக் காத்துக்கொண்டிருந்த மொத்த வியாபாரிகளிடம் நல்ல விலைக்கு விற்று முடித்தார்கள்.
தேடல் தொடரும்…
