அத்தியாயம் 18 :
“நான் தான்.”
முதுகுக்கு பின்னால் ஒலித்த குரலில் இருவரும் திரும்பி பார்க்க, நிச்சயம் அங்கு நானியை இருவருமே எதிர்பார்க்கவில்லையென அவர்களின் அதிர்ந்த தோற்றமே வெளிப்படுத்தியது.
சிவாவை போகுமாறு சைகை செய்தவன்… அவள் சிறு நடுக்கத்துடன் தயங்கி தயங்கி செல்வதையே அவள் மறையும் வரை பார்த்திருந்தான் நானி.
சிவா தனக்கு திருமணம் ஆகிவிட்டது என சொல்லிய பிறகும் நம்ப மறுத்த திலீப்… நானி கூறிய வார்த்தையில் பயத்தில் உடல் வியர்க்க என்ன செய்வதென்று அறியாது திகைத்து விழித்து நின்றிருந்தான்.
அவனருகில் நெருங்கிய நானி திலீப்பின் தோளில் நண்பனைப்போல் கரம் போட்டு… நடத்தி அழைத்துச் செல்ல,
“சாரி சார்… சிவாவிற்கு திருமணம் ஆனது எங்களில் யாருக்குமே தெரியாது.. அதனால் தான், ஏதோ ஈர்ப்பு… அதனை, ஆர்வக்கோளாரில்…” வாயில் வந்தவற்றை தெளிவில்லாமல் திலீப் உலறினான்.
அவனைப் பார்த்து மென்னகை புரிந்த நானி, “இந்த வயதில் லவ் வருவதெல்லாம் சாதாரணம் தான், படிக்கும் வயதில் செய்யாமல் வேறெப்போ செய்யப் போறோம். ஆனால், முதலில் நீ உன்னுடைய உழைப்பில் காலூன்ற வேண்டும். உன்னை நம்பி காத்திருக்கும் உன் பெற்றோருக்கு உன் கடமையை முதலில் செய்து முடிக்க வேண்டும். உனக்கு முன்னால் அல்லது பின்னால் உடன் பிறந்தவர்கள் இருக்கக் கூடும், ஒரு சகோதரனாய் அவர்களுக்கும் நீ செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கலாம், அதை செய்து முடித்து.. நீ உன்னை நிலை நிறுத்திக்கொண்டால், காதல் உன்னைத் தேடி வரும்.. நீ சென்று தேடும் வேலையிருக்காது” என்றவன் “ஆல் தி பெஸ்ட் பார் யூர் ஃபியூட்சர்” எனக் கூறிச் சென்றான்.
தன் மனைவியிடம் காதல் சொல்லியவனின் மீது கோபமிருந்தாலும், அவனை அடிக்கவில்லை, திட்டவில்லை தான் சொல்லியதை ஒரு அறிவுரையாகக் கூட நானி நினைக்கவில்லை.. தன் நண்பனுக்கு நிதர்சனத்தை வார்த்தையால் உணர்த்துவதை போல் உணர்த்திச் சென்றான்.
“காதல் செய்யுன்னு சொல்றாறா இல்லை வேண்டாமென்கிறாறா”, புரியாது குழம்பிய திலீப்பிற்கு ஒன்று மட்டும் புரிந்தது, ‘வாழ்வில் தான் முதலில் உயர வேண்டும், அதற்கு இந்த வயதில் படிப்பு மிக அவசியம்’ என்பது. மனதில் தெளிவான எண்ணம் தோன்றியதும், நானிக்கு மானசீகமாக நன்றி தெரிவித்தான்.
விழா முடியவும் காத்திருந்தவனாக சிவாவிடம் சென்று மன்னிப்பு வேண்டினான் திலீப். அவன் முகத்திலிருந்த மகிழ்ச்சியே நானி அவனை ஒன்றும் சொல்லாது வார்த்தைகளால் தெளிவாக்கியிருக்கின்றான் என்பது புரிய, அவளும் திலீப்பின் மன்னிப்பை சிறு தலையசைப்பில் ஏற்றுக் கொண்டாள்.
தனது பைக் நிறுத்தியிருக்கும் இடம்வரை கல்லூரி முதல்வர் உடன் வந்து வழியனுப்ப.. நாங்கள் செல்கின்றோம் நீங்கள் செல்லுங்களென்று அவரை அனுப்பி வைத்துவிட்டு யாருக்கோ காத்திருந்தான் நானி.
“சார், வந்த வேலை தான் முடிந்துவிட்டதே.. கிளம்பாமல் யாருக்கு காத்திருக்கிறீர்கள்,” ராஜேஷ் கேட்க… “நான் படிக்கும் காலத்தில் சைட் அடித்ததே இல்லை ராஜேஷ், அதான் இப்போது அடித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூலாக பதிலளித்த நானியை ஆச்சரியமாக பார்த்தான் ராஜேஷ்.
“நான் நம்ப மாட்டேன்,” ராஜேஷ் சொல்லிக்கொண்டிருக்கும் போதே… அவர்களை நோக்கி நந்துவும் சிவாவும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
“சார்… வந்த இடத்தில் உங்களுக்கு ஏதோ மாட்டிகிச்சு போல, ரெண்டுமே நல்லாத்தான் இருக்கு.. ஆனால், இதுல எது உங்களுக்கு எது எனக்கு.” வாய் மூடாது கேட்டுக்கொண்டிருந்த ராஜேஷ்,
“அந்த ரெண்டுல ஒன்னு என் தங்கச்சி, இன்னொன்னு என் மனைவி” என்ற வார்த்தையில்…
“நான் பஸ் பிடிச்சி வீட்டுக்கு போய்டுறேன் சார்” எனக் கூறி ஓட்டமும் நடையுமாக அங்கிருந்து சென்றிருந்தான்.
சிவா சற்று தூரத்திலேயே நின்றுவிட, நானியின் அருகில் வந்த நந்துவை… “நீ கிளம்பும்மா, உன் அண்ணியை நான் அழைத்து வர்றேன்” என்றவனாய் தனது வண்டியை ஸ்டார்ட் செய்து சிவாவின் அருகில் வேகமாக சென்று நிறுத்தினான்.
பயத்தில் சிவா ஒரு எட்டு பின்னால் நகர்ந்து நின்று நந்துவை பார்க்க, அவள் கேட்டினைத் தாண்டி தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள்.
சிவா வண்டியில் ஏறாமல் நின்றிருக்க, வண்டியின் ஆக்சலேட்டரை அவன் முடுக்கிய முடுக்கில் தானாக ஏறி அமர்ந்துகொண்டாள்.
அவனின் முதுகில் தன்னுடைய நிழல் விழுந்திடாது கூட இடைவெளி விட்டு தள்ளி அவள் அமர்ந்திருக்க, வேண்டுமென்றே அவனிட்ட திடீர் பிரேக்கில் நானியின் முதுகோடு ஒட்டிக்கொண்டாள் சிவா. அதில் லேசான புன்னகை எட்டிப்பார்க்க, நகர்ந்து அமர போனவளின் கரம் பற்றி தன் தோளில் பதித்தவன்…
“வீடு போய் சேரும் வரை இப்படித்தான் இருக்க வேண்டும்.” அவனிட்ட கட்டளையில் சிவாவின் தலை தானாக ஆடியது.
வேண்டுமென்றே மேடு பள்ளங்களில் ஏற்றி இறக்கி வண்டியை அவன் செலுத்த, அவளுக்கு தான் அவஸ்தையாகிப் போனது.
அனைத்து துன்பங்களையும் மறந்து இரண்டு பேருமே ஒருவித மோனநிலையில் இன்பமாக அந்த பைக் பயணத்தை ரசித்தனர். இன்னும் நீளாதா என்ற ஏக்கம் அதிகரிக்க, அவர்களின் இல்லம் வந்திருந்தது.
மாடியில் நின்றிருந்த ஒமியா இருவரும் ஒன்றாக வருவதை கண்டு, மனதில் நெருப்பு கொழுந்து விட்டு எரிய கீழிறங்கி வந்தாள்.
வந்தவள் இருவரும் உள்ளே வருவதை முறைத்துக்கொண்டு நிற்க, அவளை சிறிதும் லட்சியம் செய்யாமல் ஒதுங்கி சென்றனர்.
அச்செயல் அவளின் வெறிக்கு தூபம் போட, பாட்டியென கத்தினாள்.
ஒமியாவின் கத்தலில் பாண்டியம்மாள் பதறியடித்துக்கொண்டு ஓடிவர, அமுதாவும் அவள் கணவனும் மகளிடம் என்ன நடந்ததென்று விசாரித்தனர்.
“எனக்கும் நானி அத்தானுக்கும் எப்போ திருமணம்?”
அவள் கேட்ட கேள்வியில் பாண்டியம்மாள் தனது பேரனை பார்க்க, அவனோ தன் முழு உயரத்திற்கு அய்யனார் போன்று நிமிர்ந்து நின்று ஒமியாவை கண்களாலே எரித்துக் கொண்டிருந்தான்.
“ஏய் நானிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டதென்பது தெரிந்த பிறகும், அவன் மீது ஆசை படுவது உனக்கு தவறா தெரியவில்லை.” கபிலன் தான் தன் தங்கையிடம் தனது கோபத்தை முதல் முறை காண்பித்திருந்தான்.
“நான் அவரை காதலிக்கத் தொடங்கியபோது அவருக்கு திருமணம் ஆகிவிட்டதென்பது எனக்குத் தெரியாதே.” தன் அண்ணனிடம் சிதறி வெடித்தாள்.
“சிவா உனக்கு தங்கை முறை, தங்கையின் கணவனை அடைய எண்ணும் நீயும் ஒரு பெண்ணா, உன்னை என் தங்கையென்று சொல்லி கொள்ளவே எனக்கு அசிங்கமாக உள்ளது.”
கபிலன் சொல்லிய வேகத்திற்கு அவளை பார்க்கவும் பிடிக்காது தன் முகத்தை திருப்பிக்கொண்டான்.
“யாருக்கு யார் தங்கை… என் வாழ்க்கையை தட்டி பறித்தவள் எனக்கு தங்கையா” வெடிச் சிரிப்பு சிரித்தவள், “எனக்கு தங்கையாக இருப்பதற்கு கூட ஒரு தகுதி வேண்டும்.” சிவாவை ஏளனமாக ஒரு பார்வை பார்க்க அதில் சிவா கூனிக் குறுகிப் போய் நின்றாள்.
சிவாவின் நிலையை கண்டு வெகுண்டெழுந்த நானி… இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலேறி சிவாவின் அறைக்குள் நுழைந்தவன், அவள் பொக்கிஷமாக போற்றி பாதுகாத்து வரும் அவனிட்ட, அன்று அவனறுத்த தாலியை எடுத்துக்கொண்டு அதே வேகத்துடன் கீழிறங்கி வந்தான்.
அவனின் செயலை விநோதமாக அங்கிருந்த அனைவரும் பார்த்திருக்க, சிவாவின் கையை பிடித்து பூஜையறைக்கு இழுத்துச் சென்றவன் அவள் என்னவென்று உணரும் முன்பே தன்னவளின் கழுத்தில் தாலியை கட்டியிருந்தான்.
“நானி…” பாண்டியம்மாள் வீடே அதிர வெடித்து சிதற… தன் வாயில் ஒற்றை விரல் வைத்து அவரை அடக்கினான் நானி.
கண்களில் கண்ணீர் இறங்க, நடந்த நிகழ்வினை நம்ப முடியாது சிலையென நின்றிருந்த தன் மனைவியை தோளோடு அணைத்து… இங்கு நடந்து கொண்டிருப்பவற்றை வேடிக்கை பார்த்திருக்கும் தன் தாய் தந்தையிடம் கூட்டி வந்தவன்,
“மீண்டுமொருமுறை எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள்” என்று அவர்களின் காலில் தம்பதி சமேதராக விழுந்தான்.
அழகேசன் தனது தங்கை அரசியை அர்த்தத்துடன் பார்க்க, அவர் கண்களை மூடி திறந்து தனது சம்மதத்தை வழங்க… நடப்பவை புரியாவிட்டாலும் தன் மகனின் காரியங்களுக்கு பின்னால் காரணமிருக்குமென்று காலதாமதமாக புரிந்து கொண்டதன் பயனாக.. தனது மகனையும் மருமகளையும் மன நிறைவுடன் ஆசீர்வதித்தார்.
“நல்லாயிருங்கப்பா… நல்லாயிருங்க.”
தன் கணவனே தங்களது மகனை மன்னித்து ஆசி வழங்கும்போது பத்மாவிற்கும் தன் கோபத்தை பிடித்து வைத்திருக்க வழியில்லை.
ஆனந்தத்தில் துளிர்த்த நீரை சேலை தலைப்பில் ஒற்றிக்கொண்ட பத்மா..
“இம்முறையாவது உங்க மனசுபடி நீங்க சந்தோஷமா வாழணும்ப்பா” என்று நல்வார்த்தைக் கூறினார்.
தனது நண்பனை தோளோடு அணைத்து விடுவித்த கபிலன்… “இனியாவது நீ நிம்மதியா இருக்கணும்” என்று உள்ளார்ந்த அன்புடன் வாழ்த்தினான்.
”இனியும் எங்களுக்கு இங்கென்ன வேலை?” அமுதா தன் தாயுடன் முறைத்துக்கொண்டு தன்னுடைய மகளை இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற முயல,
“அத்தை” என்றழைத்து தடுத்து நிறுத்தினான் நானிலன்.
அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்த அமுதாவிடம் சென்றவன்… “உங்கள் கணவனை இன்னொரு பெண் மணக்க ஆசைப்பட்டால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்” என்றுக் கேட்டிருந்தான்.
தன்னைவிட வயதில் சிறியவன், தன்னை பார்த்துக் கேட்ட ஒற்றை கேள்வி.. யாரோ தன் தலையில் சம்மட்டியால் அடித்ததை போன்று உண்மையை புரிய வைக்க, தான் வயதில் மூத்தவள் என்பதையும் மறந்து நானியிடமும், சிவாவிடமும் மன்னிப்பு வேண்டினார் அமுதா.
“அமுதா…” பாண்டியம்மாள் தான் கத்தியிருந்தார்.
“சும்மா கத்தாதே ம்மா…. இன்னும்மா அவன் கேட்ட கேள்வியின் அர்த்தம் உனக்கு விளங்கவில்லை. சந்தர்ப்பம் அமையும் போதே திருந்துவது தான் மனித இயல்பிற்கு நன்று” என்றவர் மீண்டும் ஒருமுறை அனைவரையும் பார்த்து கையெடுத்து வணங்கி மன்னிப்பு வேண்டினார்.
அரசி ஓடிவந்து தனது சகோதரியை அணைத்துக்கொண்டார்.
“அய்யோ அத்தை நீங்க எங்களை புரிந்து கொண்டதே சந்தோஷம்” என்ற நானி…
அமுதா மற்றும் நரேனிடம் “எனக்கு உங்களிடம் சின்ன அப்ளிகேஷன் ஒன்று உள்ளது” என்றான்.
“என்னப்பா… அமுதா கேட்க, அதற்கு முன் அப்பாவிடம் நான் சம்மதம் வாங்க வேண்டும்” என்று அழகேசனிடம் சென்ற நானி கபிலனை பார்த்தவாறு, “என் நண்பனுக்கு உங்கள் மகளை திருமணம் செய்து வைக்க சம்மதமா ப்பா” எனக் கேட்டிருந்தான்.
ஒரு நிமிடம் அவன் சொல்லியது புரியாது மௌனமாகியவர், புரிந்த நொடி மகிழ்வுடன் சம்மதமென்று வாய் திறந்து கூறினார்.
அமுதாவும் தனது அண்ணனின் கைகளை பற்றிக்கொண்டு தனது மகிழ்வினை வெளிப்படுத்த,
“அப்போ திருமணத்தை வருகின்ற முகூர்தத்திலேயே முடித்துவிட்டு, கையோடு மருமகளையும் அழைத்துக் கொண்டு நாம் செல்லலாம்” நரேன் தெரிவிக்க, அதற்கு மறுப்பாக இடையிட்டான் கபிலன்.
“உன் பிரச்சினைகளுக்கு நடுவிலும் எனக்காக யோசித்ததற்கு நன்றிடா…” நானியிடம் கூறியவன், அழகேசனிடம் “நந்துவிற்கும் இதில் விருப்பம் இருக்கிறதாவென்று கேட்டுக்கொள்ளுங்கள்” என்றான்.
தன் மகளை நோக்கியவாறே… “என் மகளுக்கு விருப்பமில்லாது நான் சரி சொல்லியிருக்க மாட்டேன் மாப்பிள்ளை” என்றார் அழகேசன்.
தன் தந்தையின் பேச்சில் நாணம் எட்டி பார்க்க, வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள் நந்து. அவளின் முகச்சிவப்பே அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட கபிலன் அதன் பின்னர் அமைதியாகினான்.
இருப்பினும் அவளிடம் தனிமையில் பேச முடிவு செய்தான்.
அனைவரும் நந்து மற்றும் கபிலனின் திருமண ஏற்பாட்டை தொடங்க ஆயத்தமாயினர்.
எல்லோரும் சந்தோஷமாக இருக்க இரண்டு ஜீவன்கள் மட்டும் வெறியில் சுற்றின. தன்னை அழ வைத்துவிட்டு அவர்கள் சந்தோஷமாக இருக்கக் கூடாதென்று எண்ணிய ஒமியா பாண்டியம்மாளிடம் தன் திட்டத்தைக் கூற, அவரும் அதற்கு சரியென்றார். அவர்களிருந்த அறை முழுக்க ஒமியாவின் ஆத்திர சிரிப்பு ஒலித்தது.
நந்துவை தேடி கபிலன் வருவதற்குள்… நந்துவே கபிலனை காண, அவனின் அறைக்கு சென்றாள்.
நந்து கதவை தட்டி உள்ளே செல்லும்போது கபிலன் மடிகணினியில் எதையோ பார்த்திருந்தான். அவனின் முகம் தீவிரம் காட்டியது.
யாரோ உள்ளே வந்தும் இன்னும் பேசாதிருக்க நிமிர்ந்தவன், நந்து என்றதும் மடிகணினியை மூடிவிட்டு எழுந்து நின்றான்.
“நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.”
நந்து அவ்வாறு சொல்லியதும், அதனை தவறாக யூகித்த கபிலன்…
“என்ன உங்க அப்பா அண்ணனிடம் சொல்லி என்னுடனான திருமணத்தை நிறுத்த வேண்டுமா” எனக் கேட்டிருந்தான்.
நாணத்தில் தலை கவிழ்ந்து நின்றிருந்தவள், சரேலென்று அதிர்வுடன் அவனை நிமிர்ந்து பார்க்க… அவள் கண்கள் கண்ணீரில் கோர்த்து நின்றன.
நந்துவின் கண்ணீர் சொன்னது அவளின் ஆழமான காதலை.
இருப்பினும் அவள் வாய் வழியாக கேட்க விரும்பியவன் அவளைத் தூண்டும் விதமாக பேசினான்.
“ஆரம்பத்திலிருந்தே உனக்கு என்னை பிடிக்காதென்று தெரிந்தும், உன் மீது ஆசையை வளர்த்துக் கொண்டது என் தவறு தான்… உன் அப்பா விருப்பம் தெரிவிக்கும் போது நீ ஓடிய வேகமே சொல்லியது உனக்கு என்னை பிடிக்கவில்லையென,”
கபிலன் நிறுத்தாது சொல்லிக்கொண்டே போக,
அவனின் கன்னத்தில் பளாரென்று அறைந்த நந்து, அவன் அதிர்ந்து கன்னத்தில் கை வைத்து அமைதியாவிட தான் பேசத் தொடங்கினாள்.
“உன்னை பிடிக்கலன்னு நான் சொன்னனாடா?”
‘என்னது டா வா…’ உள்ளுக்குள் கேட்டுக்கொண்டவன், “வெளியில் பிடிச்சிருக்குன்னு கூட தான் சொல்லவில்லை” என்றான்.
இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள்,
“உன்னை பார்த்த அன்னைக்கே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு, நான் கீழே விழுந்து கிடந்தப்போ.. காரிலிருந்து ஸ்டைலா நீ இறங்கி வந்தியே அப்போவே நீ எனக்குள்ள ஆழமா பதிஞ்சிட்ட.”
கண்கள் மூடி அந்த நாளை ரசித்தவளாய் நந்து கூற, மார்பிற்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு காதலுடன் கேட்டிருந்தான் கபிலன்.
“ஆனால், அன்னைக்கு உன் தங்கச்சி பேசின பேச்சு நீயும் அவளை மாதிரி தான் இருப்பியோன்னு பயந்துட்டேன். அதுக்கு அப்புறம் நீ என்னை பார்க்குற பார்வையெல்லாம் உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னப்போ எவ்வளோ சந்தோஷமா இருந்ததோ அதேயளவு வருத்தமாகவும் இருந்தது. அதற்கு காரணம் நானி அண்ணா சிவா காதலை பக்கத்திலிருந்து பார்த்ததால், எங்கு அவர்கள் மாதிரி நமக்குள்ளும் பிரிவு வந்துவிடுமோயென்கிற பயம் தான், உன் காதலை வெளிப்படுத்தும் போது என்னைத் திமிராக பேச வைத்து உன்னிடமிருந்து விலக வைத்தது. இப்போ நான் ஒன்னு சொல்லட்டுமா?”
தனக்கும் அவன் மீது காதல் வந்த தருணத்தை அழகாகக் கூறியவள் இறுதியாக ஒன்று சொல்லட்டுமா என்றதும் கபிலனும் சொல்லு என்பதைப்போல் பார்த்தான்.
அவனை நெருங்கி வந்தவள், அவனின் நெஞ்சில் ஒற்றை விரல் வைத்து “இங்கு சாய்ந்துகொண்டு சொல்லவா” என்றாள்.
அவளின் முகத்திலிருக்கும் நாணமென்ற சிவப்பு மலர்களை ரசித்தவனாய் சம்மதம் வழங்க, நந்துவும் உரிமையுடன் அவனின் நெஞ்சில் சாய்ந்து அவனோடு ஒட்டி நின்று… “ஐ லவ் யூ கபிலா” என்றாள்.
அவளின் குரலில் வழிந்த காதலில் சுகமாய் கரைந்தவன், தன்னவளை தன்னோடு இறுக்கி அணைத்து.. அவளின் காது மடல் உரசி.. “ஐ லவ் யூ நந்து” என்று மந்திரம் போல் ஜெபித்தான்.
***********
“என்னடா… என்ன நடக்குது?”
காசி தனது சகாக்களிடம் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தான்.
அவர் கத்திய கத்தல், பக்கத்து அறையில் துணி மடித்து கொண்டிருந்த செல்வியின் காதில் பலமாக விழ, என்ன ஆனதோவென்று பதறி காசியிருக்கும் அறைக்கு ஓடியவர் அவர் பேச்சு சத்தம் கேட்டதும் மூடிய கதவருகே நின்று கொண்டார்.
“நேற்றே வெடிக்க வேண்டிய பாம்… இன்றும் முடிய போகிறது ஒரு தகவலுமில்லை… எதுக்குடா இருக்கீங்க நீங்களெல்லாம், உங்களையெல்லாம் அடியாட்களாக வைத்துக்கொண்டு நான் அரசியல் நடத்துறேன் பார், என்னை சொல்ல வேண்டும்.”
காசி பாம் என்றதிலேயே, தனக்காக தன் கணவன் அடியாள் வேலையை விட்டுவிட்டாரென்று நினைத்திருந்த செல்வியின் நம்பிக்கை தரமட்டமாகியது. அரசியலில் வளர்ந்த பிறகும் இன்று வரை அதையும் தொழிலாக செய்து வருகிறார் என்பதில் செல்வியின் காதல் மனம் அடிபட்டு போனது.
“எனக்குத் தெரியாது… அவன் பிழைத்தால் பிழைத்து போகட்டுமென்று நினைத்த என்னால், அவனின் காரை கூட தொட முடியவில்லை என்பது என் வெறியை தூண்டுகிறது. என்னை தோற்கடித்தவன், நான் வீட்டிற்கே சென்றும் என்னை அவமதித்த அவனின் குடும்பத்தார் ஒருவரும் உயிருடன் இருக்கக் கூடாது. நாளை காலை அவர்கள் அனைவரும் உயிரோடு இல்லையென்ற செய்தி என் செவிகளை குளிர்விக்க வேண்டும்” என்ற காசி, அடியாட்களை அறையின் பின்பக்க வழியாக அனுப்பிவிட்டு, முன்பக்க கதவினை திறந்து வீட்டிற்குள் நுழைய… கூடத்தில் கையில் பெட்டியோடு அமர்ந்திருந்தார் செல்வி.
யாருக்கு எமனாக இருப்பினும் செல்விக்கு மட்டும் நல்ல காதல் கணவன் காசி. செல்வியிடத்தில் எப்போதும் அவர் காட்டும் முகம் அன்பு ஒன்றே.
“என்னம்மா… எங்க கிளம்பிட்ட?”
அன்பொழுக கேட்டவரை விரக்தியாக பார்த்த செல்வி,
“உங்களை விட்டு நிரந்தரமாக செல்லத்தான் ஆசை ஆனால், என்னை விட்டு ஒரு நொடி கூட உங்களால் இருக்க முடியாதே அதான் எங்காவது கோயில் குளமென்று சுற்றிவிட்டு சில மாதங்கள் கழித்து வரலாமென்றிருக்கின்றேன்” என்றார்.
அவரின் பதிலே காசிக்கு இதயத்தில் வலியை கொடுத்தது.
“உன்னை விட்டு நான் இருக்க மாட்டேனென்று தெரிந்துமா என்னை விட்டு நீ செல்கிறாய்?”
அவரின் குரலில் நீ செல்லக்கூடாதென்கிற ஏக்கம் அப்பட்டமாக தெரிந்தது.
“நமக்கு ஏன் அந்த ஆண்டவன் குழந்தை பாக்கியத்தை கொடுக்கவில்லையென்று தெரியுமாங்க?”
காசி புரியாது பார்க்க…
“அடுத்தவர்களின் குடியை கெடுத்து வரும் பணத்தில் இன்னொரு உயிர் வளர வேண்டாமென்று தாங்க.”
செல்வி… காசி அடிக்க கையை ஓங்கிவிட்டார்.
“அடிங்க… ஏன் நிறுத்திட்டீங்க… இவ்வளவு நாலும் நீங்க என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்திட்டு இருந்தீங்கன்னு தெரிஞ்ச அந்த நொடியே நான் செத்துட்டேங்க, இப்போ உங்க முன்னாடி நின்னுட்டு பேசிட்டு இருக்கிறது என்னோட பொணம் தாங்க,”
“அய்யோ… செல்வி அப்படி சொல்லாதே.. என்னை உயிரோடு கொல்ற மாதிரியிருக்கு,” காசி தனது பதவி வயது திமிர் அனைத்தும் மறந்து தன்னுடைய உயிரான மனைவியிடம் மன்றாடினார்.
“உனக்கு வேண்டியவங்க உயிரென்றால் உள்ளம் பதறுதல்லவா… அதேபோல் தானே மற்றவர்களுக்கும், நான் இல்லையென்றால் தான் உங்களுக்கு உயிரின் மதிப்பு தெரியும்” என்ற செல்வி காசி கெஞ்சுவதையும் பொருட்படுத்தாது வாயிலைத் தாண்டி அடியெடுத்து வைக்க,
“நீ இப்போ என்னை விட்டு சென்றுவிட்டால் அடுத்த நொடி நான் இறந்திருப்பேன்.” காசி சொல்லி முடித்ததும் தன் காதல் மனம் நடுங்க செல்வி ஓடிவந்து தனது கணவனை அணைத்துக்கொண்டார்.
“சாவதற்காகவாங்க உங்களை இந்த வயதிலும் என் உயிராக நினைத்து வாழ்கிறேன்… உங்களை நாலு பேரு மதிக்கணும் நான் ஆசைப்பட்டேன்.. ஆனால், அந்த மதிப்பு உங்க மேலிருந்த மரியாதையினால் இல்லை, உங்க மேலிருந்த பயத்தினாலென்று தெரிந்த நொடி நான் துடிச்சு போயிட்டேங்க… இந்த அரசியல், அடிதடி, சூழ்ச்சி எதுவும் நமக்கு வேண்டாங்க… கஞ்சி குடிச்சாலும் நிம்மதியா வாழலாம்.” செல்வி கதறி துடித்தார்.
பல பேரின் ரத்தம் பார்த்தவரால், தன் காதல் மனைவியின் கண்ணீரை காண முடியாது நொடிந்து போனார்.
“நீ என்னிடம் மன்றாடாதே செல்வி.. நீ செய்யென்று கட்டளையாக சொல் நான் அதை நிறைவேற்றுகிறேன்” என்றார் காசி.
அழுத தன் விழிகளை அழுந்த துடித்த செல்வி… “அடியாள் சேர்ப்பதை முதலில் நிறுத்துங்கள், உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.. அடுத்து அரசியலிலிருந்து முற்றிலும் விலகிவிடுங்கள்… இந்த பாவப்பட்ட பணம் நமக்கு வேண்டாம், இதையெல்லாம் ஏதேனும் நல்ல காரியங்களுக்கு எழுதி வைத்துவிடுங்கள், நீங்கள் செய்த எல்லா பாவங்களுக்கும் இது பரிகாரமாக அமையட்டும்.”
செல்வி சொல்லியதும் சரியென்றவர், அவரின் தலையில் மடி வைத்து படுக்க.. கணவனின் தலை கோதியவராக, “முதலில் நீங்கள் வைத்த அடியாட்களை எதுவும் செய்ய வேண்டாமென்று கூறுங்கள்.. அப்படியே அந்த தம்பி காரில் வைத்த வெடிகுண்டினையும் எடுக்க சொல்லுங்க” என்ற செல்வி பூஜையறைக்குள் நுழைந்து கொண்டார்.
தன் மனைவி சொல்லிய அனைத்தையும் ஒரு நல்ல கணவனாக செய்து முடித்த காசி, அவர் சொல்லாத ஒன்றையும் செய்து முடித்தார். அச்செயலில் காசி இந்த வயதிலும் தன் மீது வைத்திருக்கும் காதலில் செல்வி அகமகிழ்ந்து போனார்.
*****************
சிவா மீண்டும் தன் கழுத்திலேறிய தாலியை நம்ப முடியாமல் அதனை இறுக பற்றியவாறு மாடியேறி செல்ல, நானி பாண்டியம்மாளை தேடிச் சென்றான்.
அவரின் அறை கதவு திறந்திருக்க அதிரடியாய் உள் நுழைந்தவன், ஒமியாவும் அவருடன் இருப்பாளென்று எதிர்பார்க்கவில்லை. இருவரும் ஒன்றாக இருப்பது நல்லது தானென்று எண்ணியவன்,
“என்ன அப்பத்தா நடப்பதெல்லாம் உன் எண்ணத்திற்கு எதிர்மாறா இருக்கிறதா… இனியும் அப்படித்தான் நடக்கும். இதுவரை நீ செய்த எல்லாம் எனக்குத் தெரியும், இனியும் என்ன செய்வாயென்றும் எனக்குத் தெரியும், நீ உன் வேலையை காட்டுவதற்குள் நான் என் வேலையை காண்பிக்கின்றேன். இந்த ஒரு இரவு மட்டும் நிம்மதியா தூங்கு” என்றவன், ஒமியாவிடம்… “நீ கொஞ்சம் அடக்கி வாசித்தால் நன்றாக இருக்கும்” எனக் கூறிச் சென்றான்.
நடந்த அனைத்தையும் அரசியின் வாயிலாக கேட்டுத் தெரிந்த அழகேசனும் பத்மாவும் தன் மகனை நினைத்து பெருமை கொண்டனர். கட்டிய மனைவியை காக்க தான் கட்டிய தாலியே தடையாய் நிற்கையில் என்ன பாடுபட்டிருப்பானென்று வருந்தினர்.
அழகேசனுக்கு தன் தாயை நினைத்து அருவெறுப்பாக இருந்தது. உலகத்தில் வேறெங்கும் இப்படியொரு தாய் இருக்கமாட்டாளென்று முகம் சுளித்தார்.
தன் மகனிடம் மன்னிப்பு வேண்டியவர், இப்போதே பாண்டியம்மாளை வீட்டை விட்டு வெளியேற்ற போவதாகக் கூற, தந்தையை தடுத்த நானி.. “நாளை காலை வரை மட்டும் அமைதியா இருங்க” என்றான்.