அத்தியாயம் 03
அந்தத் தொலைக்காட்சிப் பெட்டி அதன் சத்தத்தால் அந்த முன்னறையை அதிர வைத்துக் கொண்டிருந்தது.
“சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மர்மக் கொலையில் திடீர் திருப்பம்!
கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், தற்போது உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த தகவலைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர் தமிழக அமைச்சர் தணீஸ்வரனின் மகன் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, உயிரிழந்தவரின் நெற்றியில் ‘குற்றம் 9’ என்ற வார்த்தை நெருப்பினால் பொறிக்கப்பட்டிருந்ததும் காவல்துறையினரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
‘இந்தக் கொலையின் பின்னணி என்ன? அமைச்சர் மகன் குறிவைக்கப்பட்டதற்கான காரணம் என்ன? கொலையாளி யார்? இந்தக் கொலை மீண்டும் தொடருமா? அந்த அடையாளம் இடப்பட்டதன் நோக்கம் என்ன?’ எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் சதாசிவத்திடம் விசாரணை நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதற்கிடையில், கொலையாளியைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்குத் தலைமை தாங்க ஹைதராபாதில் பணிபுரியும் ஏசிபி ஆதவ் மதிமாறனை விசேட பணிமாற்றம் செய்யவிருப்பதுடன், முக்கியத் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குகிறோம்” என்றதுடன் அந்தச் செய்தி முடிவடைந்திருக்க, அடுத்து பாடல் ஓடத் தொடங்கியது.
‘நான்தான்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்குக்கு
நான்தான்டா லீடு
பில்லா என் வரலாறு
பாத்தவன் நான் பல பேரு
உன்னோட பேட்டைக்கு
நான்தான்டா லார்டு
ரகளை உட்டாக்கா ராக்குனக்குக்குறும் எல்லாமே
ஜினுக்கா வந்தாக்கா ஜீக்குனுக்குறுமே
நிறுத்த பாத்தாக்கா
நினிக்குனுக்குறும் தொடாதே
அடிச்சா என்னாவ டண்டனக்கனே!
நெருப்பு பேரோடு
நீ குடுத்த ஸ்டாரோடு
இன்னிக்கும் ராஜா நான்
கேட்டுபாரு’ என்று பாடல் ஓடிக்கொண்டிருக்க, அதற்கு இணையாய்,
“சும்மா கிழி” என்று பாடலைத் தொடர்ந்தபடியே சட்டையை அணிந்து உள்ளறையில் இருந்து வெளியே வந்தான் ஆதவ் மதிமாறன்…
அவனோ வெறித்தனமான தலைவர் ரசிகன். அதுவும் தலைவர் காவல் உடையில் கலக்கிய அந்த தர்பார் திரைப்படம் எப்போதும் அவனுக்குப் பிடிக்கும்…
காவல் அதிகாரியான அவனுக்கு அந்தப் படம் பிடிக்காமல் போனால் தான் அதிசயம்…
வெளியில் விரைப்பாய் சுற்றும் அவனுக்குள் இருக்கும் இந்த மறுமுகம் அவனுக்கு மட்டுமே ரகசியமானது.
அதனை அறிய இன்னும் அவன் வட்டத்தினுள் யாரும் நுழையவுமில்லை, அவன் நுழைய விட்டதுமில்லை!
தினம் தினம் அவன் சந்திக்கும் வழக்குகளின் தாக்கங்களுக்கு மத்தியில் அவன் இளைப்பாற அவனுக்கான நிமிடங்கள் அவை…
பாடியபடியே தயாராகி முடித்தவன், முதல் நாள் வேலையில் அவனது ஆட்டத்தை ஆடத் தயாராய் இருந்தான்.
அவன் இருந்தது அவனது சொந்த வீடு. அங்கிருந்தே முதலில் ஐஜி அலுவலகம் சென்றவன், அவரது அனுமதியுடன் உள்ளேயும் நுழைந்தான்.
“குட் மார்னிங் சார்” என்றவன் அவருக்கு சல்யூட் வைக்க, அவரும் புன்னகை முகமாக அதனை ஏற்றுக் கொண்டவர் அவனை அமருமாறு பணித்தார்.
“என்ன மிஸ்டர் ஆதவ், எங்க மேல ரொம்ப கோபத்துல இருக்கீங்க போல இருக்கு?” என்று அவர் இலகுவாகவே ஆரம்பிக்க,
“உரிமையான கோபம் எல்லாம் பர்சனல் விஷயம் சார்… டிபார்ட்மென்ட் விஷயத்துல நான் பர்சனல் விஷயத்தைக் கொண்டு வர முடியாதில்லையா? ஜஸ்ட் என்னோட தேவை இங்க ஏன்னு கேள்வி தான் கேட்டேன். தட்ஸ் ஆல்” என்றவனைப் புருவம் உயர்த்தித்தான் பார்த்தார் ஐஜி ராகவேந்திரன்.
“இன்டரெஸ்ட்டிங்” என்றவர் ஒரு கோப்பினை அவன் புறம் நீட்டி, “இது அந்த மெர்டர் தொடர்பான இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட். இப்போ இருந்து நீங்க டேக்கோவர் பண்ணிக்கலாம். உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் தயங்காம என்னைக் கேளுங்க” என்றார்.
“எஸ் சார், கண்டிப்பா. அன்ட் வன் ஸ்மோல் டவுட், இது மினிஸ்டர் மகன் எங்குறதால உள்ள சலுகையா இல்ல எல்லாருக்கும் இப்படித்தானா?” என்று கேட்டவனின் குரலில் நிச்சயம் கேலி இருந்தது.
ராகவேந்திரனுக்கு அவன் கேட்க வருவதும், அதில் தெரிந்த அவனது விரும்பத்தகாத பார்வையும் நன்கு புரியவே செய்தது.
“ஐ நோ மிஸ்டர் ஆதவ், இந்தக் கேள்வி உங்களுக்கு வர்றத தப்புன்னு சொல்ல முடியாது. அன்ட் இதுதான் சாமானிய மக்களுக்கும் நடக்குமான்னா என் பதில் நோ தான். பட் முடிஞ்சளவு எங்க டிபார்ட்மென்ட் இதுக்காகப் போராடும். குற்றவாளியையும் நிச்சயம் கண்டுபிடிக்கும். ஆனா மினிஸ்டர் தணீஸ்வரன் உங்க ஐஜி பார்த்திபனோட க்ளோஸ் ரிலேடிவ். சோ அதனால தான் இப்போ இங்க நீங்க வந்திருக்கீங்க. பட், எங்க டிபார்ட்மென்ட்ல திறமையான அதிகாரிகளுக்குப் பஞ்சமில்லை. சில நேரங்கள்ல அவங்களோட திறமையை வெளிக்கொண்டு வர்றதுக்கான வாய்ப்புதான் கிடைக்கிறதில்லை” என்றார் ஒரு ஆதங்கத்துடன்…
அவரது அந்த வெளிப்படையான பேச்சு அவனுக்குப் பிடித்திருக்க வேண்டும், அவன் இதழ்களிலோ அவருக்கான சிறிய சினேகப் புன்னகை…
கூடவே, “நான் நினைச்சதால மட்டும் தான் சார் நான் இங்க இருக்கேன். இதைச் சொல்றதுக்கு எனக்கு எந்தப் பயமும் இல்ல. பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் பண்றது இல்ல. பார்த்திபன் சார் கேட்டப்போ கூட இதைத்தான் சொல்லவும் செஞ்சேன். ஆனா அந்தக் கொலை நடந்த விதமும் அந்த மார்க்கும் இந்தக் கொலை மறுபடியும் தொடர வாய்ப்பு இருக்குனு என் உள்ளுணர்வு சொல்லுச்சு. சோ இந்தக் கேஸை சீக்கிரம் முடிச்சே ஆகணும் எங்குற எண்ணம் தான் இப்போ நான் உங்க முன்னாடி இருக்கக் காரணம்” என்றான்.
அவன் குரலில் இருந்த தீர்க்கமும், அவன் பார்வையில் இருந்த நேர்மையும் ராகவேந்திரனுக்கு அவனைப் பிடித்துப் போகப் போதுமானதாய் இருந்தது.
நேர்மையான மனிதர் அவர். இப்போதெல்லாம் காவல் துறையில் நேர்மையானவர்களைக் காண்பது கடினமல்லவா???
அவனைப் பார்த்துப் புன்னகைத்தவர், “ஐ அம் இம்ப்ரெஸ்ட் மிஸ்டர் ஆதவ்… இந்த மிஸ்டர் இனிமேல் வேணாம், ஆதவ்னு கூப்பிடலாம் ல?” என்று சற்று உரிமையாய் அவர் கேட்க, அவனோ புன்னகையுடன், “தாராளமா கூப்பிடலாம் சார்” என்றிருந்தான்.
“உங்களைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் ஆதவ். குறிப்பா அந்த போதை கடத்தல் கேஸை நீங்க ஹேண்டில் பண்ண விதம். ஒரு இளம் அதிகாரியா இவ்வளவு தைரியமா முடிவெடுக்கிறது பாராட்ட வேண்டிய விஷயம்” என்று அவனை மனதாரப் பாராட்டினார்.
அவனைப் பற்றியும் அவன் திறமை பற்றியும் தமிழ்நாடே அறிந்து கொண்ட வழக்கல்லவா அது…
“தேங்க் யூ சார். பட் என்னைப் பொறுத்தவரைக்கும் அது என்னோட டியூட்டி. அதுக்காகப் பாராட்டு கிடைக்குதோ இல்லையோ, செய்ய வேண்டிய வேலையைச் சரியா செய்யணும், அவ்வளவு தான்” என்க,
ராகவேந்திரனோ, “குட்! இந்த எண்ணம் தான் உங்கள வெற்றிக்கு காரணம். ஆனா ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கிறேன். இந்தக் கேஸ் நீங்க நினைக்கிற அளவுக்கு ஈஸியா இருக்கப் போறதில்ல. ஏற்கனவே மீடியா இதைப் பெருசாக்கியிருக்கு. அதுவும் இப்போ அரசியல் தலையீடுகளும் அதிகமாகியிருக்கு. சந்தேகம் எதிர்க்கட்சி மேல போயிருக்குறதால விஷயம் கிரிட்டிகல் தான்” என்றார் நிலைமையை அவனுக்கு விளக்கும் பொருட்டு…
அவனோ, “அதெல்லாம் பார்த்துக்கலாம் சார். நமக்கு எது தான் ஈஸியா இருந்திருக்கு… அப்படி கஷ்டமில்லாம வேலை பார்க்கணும்னா இந்த டிபார்ட்மென்ட்டுக்கே வந்திருக்க மாட்டேனே!” என்றான்.
அவனுடைய பதிலில் இருந்த உறுதியைக் கவனித்த ராகவேந்திரன் மெல்லத் தலையசைத்தார்.
“ஆல் தி பெஸ்ட், ஆதவ். எப்போ வேணும்னாலும் என்னைக் கூப்பிடலாம். இந்தக் கேஸ்ல உங்களுக்கு என்னோட முழு சப்போர்ட்டும் இருக்கும். அன்ட் இன்ஸ்பெக்டர் பரத் இந்தக் கேஸ்ல உங்க கூட ட்ராவெல் பண்ணுவாரு” என்க,
“தேங்க் யூ சார்” என்று கோப்பினை எடுத்துக்கொண்டு எழுந்த ஆதவ், அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு வெளியேறினான்.
அவன் வெளியேறியதும் சில நொடிகள் அந்தக் கதவையே பார்த்துக் கொண்டிருந்த ராகவேந்திரன், தனது இருக்கையில் சாய்ந்து,
‘பார்த்திபனோட ரெகமண்டேஷன் தப்பா போகல!’
என்று மனதிற்குள் எண்ணியவர், மேசையிலிருந்த மற்றொரு கோப்பைத் திறந்து அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.
___________________
அங்கே தணீஸ்வரன் வீடு மொத்தமாய் இடிந்து தான் போயிருந்தது.
மகனைக் காணவில்லை என்று தேடித் தவித்தவருக்கு, அவன் இறந்த உடலாய்க் கிடைத்தபோது கவலை, இயலாமை, கோபம் எல்லாம் சேர்ந்து அவரை உறைய வைத்திருந்தது.
அன்றிலிருந்து அவர் மிருகமாகித்தான் போயிருந்தார்.
மகனைக் கொன்றவனைத் தன் கரத்தால் அணுஅணுவாய்க் கொல்ல வேண்டும் என்ற மூர்க்கம் உள்ளே தீயாய்க் கொதித்துக் கொண்டிருந்தது.
அவரது மகனின் பூவுடல் மிகவும் சிதைந்திருந்தது. அதிலும் பிரேதப் பரிசோதனை வேறு செய்யப்பட்டிருக்க, மேற்கொண்டு வைத்திருக்க முடியாமல் கண்டெடுக்கப்பட்ட அன்றே மிக விரைவாக அடக்கமும் செய்யப்பட்டிருந்தது.
மனைவி விமலா அழுது சிறிதேனும் தனது சோகத்தை வெளியேற்றியிருக்க, அவரால் அதுவும் முடியவில்லை…
ஒற்றை மகன், அவர் வம்சத்தின் பெருமை அவன். இதோ அடுத்த வருடம் அவரது அரசியல் வாரிசாகவும் வரவிருந்தவன். எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தவருக்கு, மகனது உடலைக்கூட ஒரு நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருக்க முடியாத நிலை…
அவரால் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை…
எத்தனையோ பேரின் வாழ்க்கையைத் தன் அதிகாரத்தைக் கொண்டு புரட்டிப் போட்டவர். தன்னை எதிர்த்தவர்களைத் தயக்கமின்றி அழித்தவர். ஆனால் இன்றோ தன் மகனின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்ற எண்ணமே அவரை உயிரோடு கொன்றுகொண்டிருந்தது.
அப்படியே அந்த முன்னறையில் உறைந்து அமர்ந்திருந்தவரது எண்ணம் முழுவதும் அவரது மகனின் ஆட்சியே!!!
தன் மகனைக் கொன்றவன் யாராக இருந்தாலும் சரி… அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி… அவனைச் சாகடிப்பதோடு மட்டும் நிறுத்திவிடும் எண்ணம் அவருக்கு இல்லை.
தன் மகனுக்கு அவன் கொடுத்த வலியை, உயிர் போகும் நொடி வரையிலும் அவனும் உணர வேண்டும் என அவருக்குள் ஒரு மிருகம் உந்திக்கொண்டிருந்தது.
மகனை இழந்த தந்தையின் துக்கம் ஒருபுறம்… அந்தத் துக்கத்தையே கொடூரமான பழிவாங்கலாக மாற்றத் தயாராகும் ஒரு மனிதனின் வெறி மறுபுறம்! என உள்ளே கொதித்தபடி அமர்ந்திருந்தவரைக் கலைத்தது அந்த அலைபேசி ஒலி…
அவரது காரியதரிசியோ அவரிடம் அலைபேசியைக் கொடுத்ததும் சுயநினைவுக்கு வந்தவர், அதில் மின்னிய பெயரைப் பார்த்ததும் அழைப்பை ஏற்றுக் காதில் வைத்திருந்தார்.
“சொல்லுங்க சித்தப்பா, அவன் இங்க வந்துட்டானா?” என்று தான் தணீஸ்வரனின் முதல் கேள்வி இருந்தது.
“ஈஸ்வரா, இத்தனை கோபம் நல்லதுக்கில்லடா. கொஞ்சம் பொறுமையா இரு. அந்த சதாசிவத்தோட மகனை என்ன பண்ணத் திட்டம் போட்டிருக்க நீ?” என்று அந்தப்பக்கம் கேட்க,
“ஓஓஓஓ… இப்போ நீங்க என் சித்தப்பாவா பேசல, ஹைதராபாத் ஐஜி பார்த்தீபனா தான் என்கிட்ட பேசுறீங்க, அப்படித்தானே? என் பையனைக் காணாம மூணு நாள் நான் தவிச்சேனே, அப்போ இப்படி நீங்க கண்டுபிடிக்கலையே!” என்றவரின் குரல் இறுதியில் ஆதங்கமாய்த்தான் வந்தது.
ஒரு தந்தையாய் தணீஸ்வரனின் நிலை பார்த்தீபனுக்குப் புரியாமல் இல்லை. ஆனால், நிதானத்தில் இல்லாத தன் அண்ணன் மகனைத் தவறு இழைத்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறதல்லவா?
“கொஞ்சம் யோசிச்சுப் பாரு ஈஸ்வரா, இப்போ அவன் மகனைத் தூக்குனா கண்டிப்பா உன்மேல தான் எல்லாருக்கும் டவுட் வரும். நான் விசாரிச்ச வரை இந்தக் கொலைக்கும் அந்த சதாசிவத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை… சீக்கிரமே குற்றவாளியைக் கண்டுபிடிச்சு உன்கிட்ட ஒப்படைக்க வேண்டியது என் பொறுப்பு” என்க,
தணீஸ்வரனிடம் பதிலில்லை…
அதில் அவர் சற்று யோசிக்கிறார் என்பது புரிய, “ஆதவ் அங்க வந்துட்டான் ஈஸ்வரா. சீக்கிரமே கொலையாளி யாருனு தெரிஞ்சிடும்… அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்க வேண்டாம். நம்ம பிரியா தேர்ட் இயர் மெடிசின் அங்க பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டா. அவளுக்கு இப்போ உங்க கூடவே இருக்கணுமாம். நாளைக்கே அனுப்பி வைக்கிறேன் சரியா?” என்றவர் மேலும் சிலது பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
ஆனால், தணீஸ்வரன் மனது மட்டும் அடங்க மாட்டேன் என்றே துள்ளியது…
அந்த சதாசிவத்தை விடவும் மனதில்லை…
‘அரசியலில் தன் மகனுக்கு எதிராய் அவன் மகனை இறக்க அனைத்து வேலையையும் பார்த்தவன், இதையும் செய்திருப்பானோ?’ என்ற கேள்வி உள்ளே வண்டாய் அவரைக் குடைந்துகொண்டேதான் இருந்தது…
தான் உயிரோடு இருக்க, மகனுக்குத் தன் கையால் கொல்லி வைத்த கொடுமையை அனுபவித்தவரது மனது எப்படி நிம்மதியடையும்???
அந்த அழைப்பைத் துண்டித்த தணீஸ்வரன், மீண்டும் பழையபடி சிந்தனையில் மூழ்கியிருக்க, அவரது காரியதரிசி விக்டர் அவரது சிந்தனையைக் கலைத்தான்.
“ஐயா, நாம கேட்டிருந்த அந்த நர்ஸ் பொண்ணு வந்திருக்காங்க” என்க,
சிந்தனை கலைந்தவரோ சம்மதமாய்த் தலையசைக்க, அவன் அந்தப் பெண்ணை அழைத்து வந்திருந்தான்.
சாதாரணமான சுடிதார், தோளில் ஒரு கைப்பை, முகத்தில் எவ்விதப் பதற்றத்தையும் காட்டிக்கொள்ளாத பாவனை என அங்கே நின்றிருந்தவள் வேறு யாருமல்ல, அனலியே தான்.
துணை ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) மாலாவுக்குக்கூட தெரியாமல், தனியாகவே ஒரு காரியத்தில் இறங்கியிருந்தாள்.
இந்தச் சில தினங்களாகப் பெரிதாய்ப் பேசப்படும் வழக்கு அல்லவா இது! அதில் தன் பங்கு ஏதாவது இருக்க வேண்டும் எனக் கிளம்பி வந்துவிட்டாள்.
இதற்காகவே மூன்று நாளாய் காவல்துறை சார்ந்த திரைப்படங்களைப் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
தணீஸ்வரன் வீட்டில் ஏதாவது முக்கியமான தடயம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்க்க வேண்டும் என்பதே அவளது திட்டம்.
அதற்காகவே காவல்துறை சீருடையைத் தவிர்த்து, மாறுவேடத்தில் அங்கே வந்திருந்தாள்.
மகனை இழந்த துக்கத்தில் தணீஸ்வரனின் மனைவி விமலா மிகவும் உடல்நலம் குன்றியிருப்பதால், அவருக்குத் துணையாக இருந்து கவனித்துக்கொள்ள ஒரு செவிலியரை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த விஷயம் கேள்விப்பட்டு விளைவு எதனையும் யோசிக்காமல் உடனே வந்துவிட்டாள்.
ஆனால், உள்ளே சந்தேகம் வராமல் எப்படி செல்வது என்று நின்றிருக்க, அவளது நல்ல நேரமோ கெட்ட நேரமோ தெரியவில்லை, வாயில் காவலர், “யாரும்மா நீங்க?” என்று கேட்க,
அவளும் தயக்கமின்றி, “நான் மேடத்தைக் கவனிச்சிக்க வந்திருக்க நர்ஸ்” என்று பதிலளிக்க,
காவலாளியும் ஒருமுறை அவளைப் பார்த்தவன் “ஓ… நர்ஸா? சரி, உள்ள போங்கம்மா. உள்ள இருக்க விக்டர் சார் என்ன பண்ணனும்னு உங்களுக்கு சொல்லுவாங்க” என்று கூற,
அவனது அனுமதி கிடைத்ததும், உள்ளுக்குள் எழுந்த சிறு பதற்றத்தை முகத்தில் காட்டாமல் வீட்டிற்குள் நுழைந்தாள் அனலி.
வீட்டின் பிரம்மாண்டத்தைப் பார்த்தவளுக்கு, ஒரு நொடி வியப்பாக இருந்தாலும் உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டாள்.
அவளது பார்வை வீட்டின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்தது.
‘அனலி, எதையாச்சும் கண்டுபிடிச்சிடுடி. நாளைக்கு நீதான் ஹாட் டாபிக்!’ என மனதிற்குள் திட்டமிட்டவள், தன் முன்னே அமர்ந்திருந்த தணீஸ்வரனையே பார்த்திருந்தாள்.
அவரோ இருந்த மனநிலையில் அவளை ஆராயத் தோன்றாமல், மனைவியின் அறைக்கு அனுப்புமாறு விக்டரிடம் சொல்ல, அவனும் அழைத்துச் செல்ல, படியில் அவன் பின்னே கால் வைத்த நொடி, அவளை அந்தக் கண்டத்தில் மாட்டவிடாமல் மாலாவின் அழைப்பு தடுத்திருந்தது.
__________________
ஆதவ் மதிமாறனின் கார் அந்தக் காவல் நிலையத்தில் தனது முதல் அச்சை ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் அழுத்தமாய்ப் பதித்திருந்தது.
இந்த வழக்கில் அவன் பதிக்கப்போகும் கால்தடங்களின் முதல் அச்சாரம் அது…
அவனுக்கேயான காவல் சீருடையில் கம்பீரமாய் இறங்கியவனை வரவேற்க இன்ஸ்பெக்டர் பரத்தும், மற்ற ஊழியர்களும் நின்றிருந்தனர்.
என்னதான் அவன் இங்கே வருவது பிடிக்கவில்லை என்றாலும், ஒரு சக காவல் அதிகாரியாய் அவனுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுப்பது அவனது கடமை…
தங்களை நம்பாமல் எங்கிருந்தோ ஒருவனை அழைத்து வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்? அது அவன் திறமையைச் சந்தேகிப்பது போல் அல்லவா?
அர்ஜுனுக்குக்கூட இதில் கோபம்தானே! அவன் அன்றே இந்த வழக்கிலிருந்து விலகியும் இருந்தான்.
ராகவேந்திரன்கூட அவனது முடிவை ஆமோதித்தே இருந்தார்.
“வெல்கம் சார்” என்ற பரத் அவனுக்கு மலர்க்கொத்தினை நீட்ட, புன்னகை முகமாக வாங்கியவனோ, “தேங்க்ஸ்” என்றான் சிநேக பாவத்துடன்…
அப்படியே உள்ளே நுழைந்தவன், அங்கு நின்றிருந்த அதிகாரிகளைப் பார்த்து, “இனிமேல் சேர்ந்து தானே வொர்க் பண்ணப்போறோம். சோ, பொறுமையா என்னை நீங்களும், உங்களை நானும் சொல் மூலமா இல்லாம செயல் மூலமா ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்சிக்கலாம்” என்று அவனுக்கென அங்கே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தான்.
கூடவே பரத்தும் உள்ளே செல்ல,
“டேக் யுவர் சீட் பரத்” என்றவன், அவன் அமர்ந்ததும்,
“இன்வெஸ்டிகேஷன் எந்த அளவுல முடிஞ்சிருக்கீங்கன்னு தெரியல பரத். நான் இன்னும் கேஸ் ரிப்போர்ட் ஸ்டடி பண்ணல. பிகாஸ், உங்க வேலையைச் சரி தப்புனு சொல்ல நான் இங்க வரல. ஒரு வேலையைப் பாதிவரை முடிச்சிட்டு கம்ப்ளீட் பண்ண முடியாம போனா எப்படி இருக்கும்னு எனக்குப் புரியுது. பட் யூ நோ, அரசியல் தலையீட்டத் தாண்டி, ஒரு பெரிய தொடர் கொலையா மாறக்கூடிய கேஸ் இது. சோ, நாம இந்த கேஸைச் சேர்ந்து ஹேண்டில் பண்ணுவோம்” என்று அவன் சொல்ல, பரத் மனதில் இருந்த அந்தச் சிறு வருத்தமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.
“கண்டிப்பா சார், நமக்குத் தேவை கொலைகாரனும், கொலை செய்யப்பட்ட நோக்கமும். சீக்கிரமே கண்டுபிடிப்போம்” என்றான்.
அடுத்து அவர்கள் அந்தக் கொலை வழக்கு பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க, வெளியே பெரிதாய்ச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது.
“என்ன சத்தம் அது?” என்ற ஆதவ், பேச்சை நிறுத்திவிட்டு கதவைப் பார்த்தான்.
“வெளியே ஏதோ பிரச்சனை போல இருக்கு சார்” என்றான் பரத்.
“என்னன்னு பாருங்க” என்ற ஆதவ் சொல்ல, அதற்குள் வெளியே கேட்ட குரல் அவர்களது அறை வரைக்கும் தெளிவாகக் கேட்டது.
“மேடம்! நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னை இப்படி இழுத்துட்டு வர்றீங்க? யாரா இருந்தாலும் எல்லா கோணத்திலயும் சந்தேகப்படுறது நம்ம கடமை தான? என்னைப் பார்த்தா உங்களுக்கு போலீஸ் மாதிரி தெரியலயா? என் திறமை மேல என்ன சந்தேகம்?” என்று பேசியது வேறு யாருமல்ல, அனலியே தான்.
அவள் குரலில் அத்தனை ஆவேசம். நியாயம் கேட்கிறேன் பேர்வழியென உள்ளே இருப்பவனிடம் மாட்டப்போகிறோம் என்று தெரியாமலேயே தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
“ஏய் அனலி! கொஞ்சம் வாயை மூடிட்டு நில்லு! ஏற்கனவே அங்க இருந்து உன்னைக் கூட்டிட்டு வர்றதுக்கே ஒரு வழியாகிட்டேன். இன்னும் பேசியே கொல்லாத தாயி” என்று மாலா கெஞ்சவே செய்துவிட்டார்.
அவருக்கும் ஆதவ் வந்திருப்பது தெரியவில்லை…
இத்தனையும் அங்கே இருந்த சாப்பாட்டு அறையில்தான் நடந்தது. அது ஆதவ் இருக்கும் அறைக்கு அருகில் என்பதால் இருவருக்கும் நன்கு கேட்டது.
“மேடம், நீங்க வேற! நான் வாயை மூடிட்டு நின்னதாலதானே என்னை நம்பி உள்ள விட்டாங்க. நீங்கதான் எல்லாத்தையும் கெடுத்துட்டீங்க” என்று முறையிட்டுக் கொண்டிருக்க,
“உனக்கு அங்கே என்ன வேலை? உன்னை யார் இதுல தலையிடச் சொன்னது? நான் சொன்ன வேலையைப் பண்ணாம தேவையில்லாம பிரச்சனையில போய் மாட்டிக்கப் பார்க்காத அனலி” என்றார் அவள் மீது அக்கறை உள்ளவராக…
“அது எப்படி மேடம், பிரச்சனைனு பார்த்தா பெஸ்ட் போலீஸ் ஆக முடியுமா? நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தீங்கன்னா அந்த மினிஸ்டர் தணீஸ்வரனோட மொத்த டீடெயில்ஸும் கொண்டு வந்திருப்பேன்” என்று கெத்தாய்ச் சொல்லிக்கொண்டிருக்க, அறைக்குள் இருந்த ஆதவின் புருவங்கள் சற்றே சுருங்கின.
“யாரு அது?” என்றான்.
“அனலி சார். நம்ம கான்ஸ்டபிள்” என்ற பரத்துக்கு, அவள் பேசியதைக் கேட்ட அதிர்ச்சிதான்.
“கான்ஸ்டபிளா?” என்ற ஆதவ் எழுந்து முன்னால் செல்ல, பரத்தும் அவனைப் பின்தொடர்ந்தான்.
அங்கே சென்ற ஆதவின் பார்வையில் முதலில் பட்டது, இன்ஸ்பெக்டர் மாலாவுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த அந்தப் பெண்ணைத்தான்.
கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு, அங்கே பேசுவது வெளியே கேட்கும் என்ற நிதானம் சிறிதும் இல்லாமல் பேசிக்கொண்டிருந்தாள் அவள்.
‘இவ கான்ஸ்டபிளா? ஒரு விஷயத்தை எப்படி பேசணும்னுகூடத் தெரியாம இப்படி கத்துறாளே, இடியட்’ என்று மனதிற்குள் நினைத்தவனுக்கு, அவளது பேச்சைக் கேட்கக் கேட்கத் தலைவலியே வந்துவிடும் போலிருந்தது.
அவள் பேசியதில் ‘தணீஸ்வரன்’ என்ற பெயர் ஏதோ தவறு செய்திருக்கிறாள் என்பதை மட்டும் அப்போது அவனுக்கு உணர்த்தியது…
அதனைத் தெரிந்துகொள்ள எண்ணி அவளருகே சென்றான்.
அவனைக் கண்டதும் மாலா சட்டென எழ, அனலி மட்டும் இன்னமும் தனது வாதத்தை நிறுத்தியிருக்கவில்லை. அவள் மாலாவைப் பார்த்தபடி நின்றிருக்க,
“இப்ப நீங்க சொல்லுங்க மேடம். நான் செஞ்சது தப்பா? நான் கண்டுபிடிச்சிருந்தா பாராட்டித்தானே இருப்பாங்க எல்லாரும். எனக்குத் தெரிஞ்சி அந்த சாய் சாகும்போது ஏதாச்சும் டைரியில எழுதி வச்சிருக்கலாம். இல்லனா அவன் ரூம்ல வேற க்ளூ கிடைக்கும். நான் பார்த்த படத்துல அப்படி சீன்ஸ்தான் மேடம் வந்துச்சு” என்றவள் திரும்பிப் பார்த்தபோதுதான் அங்கே புதிதாக நின்றிருந்த ஆதவைக் கவனித்தாள்.
அவனை மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்தவள்,
“யாரு இவர்?” என்றாள் மாலாவிடம் குசுகுசுக்க, ஆதவின் புருவம் இன்னும் உயர்ந்தது.
‘சுத்தம், இன்னைக்கு என்ன பண்ணப்போறாளோ?’ என்று பரத்தும் மாலாவும் மனதிற்குள் புலம்பிக் கொண்டிருக்க,
அடுத்து ஆதவிடம் அவள் கேட்ட கேள்வியில் அங்கிருந்தவர்கள் அதிர்ந்துதான் போயினர்.
_______________________
அந்த இருண்ட காட்டின் நடுவேயிருந்த குகைக்குள் ஒருவனின் அழுகுரல் முனகலாய் கேட்டுக்கொண்டிருக்க, சற்று முன்னர்தான் அவனது வலது கைப் பெருவிரல் வெட்டி வீசப்பட்டிருந்தது.
வலியின் வேதனை தாங்க முடியாமல் துடித்தவனது கரங்கள் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. அவனது வாயிலிருந்து வெளிவந்த முனகல்களைக்கூடப் பொருட்படுத்தாமல், எதிரே தனது கையில் இருந்த கத்தியை ஒரு துணியால் நிதானமாகத் துடைத்துக் கொண்டிருந்தது ஒரு உருவம்…
வலி தாங்காமல், “ப்ளீஸ்… என்னை விட்டுடு. நான் எதுவும் பண்ணல…” என்று திக்கித் திணறியவனின் குரல் அந்தக் குகைக்குள் எதிரொலித்தது.
அந்த உருவம் எந்தப் பதிலும் சொல்லவில்லை.
மாறாக, அருகிலிருந்த சிறிய மேசையின் மீது கத்தியை வைத்துவிட்டு, அங்கே எரிந்துகொண்டிருந்த மங்கலான விளக்கின் ஒளியை வெறித்துக் கொண்டிருந்தது.
அடுத்து, கத்தியின் கூர்மையைப் போல, “நீ எதுவும் பண்ணலையா?” என்ற கேள்வி வந்து விழுந்தது.
அந்தக் குரலில் அத்தனை நிதானம். ஆனால் அந்த நிதானமே எதிரில் இருந்தவனுக்கு மரண பயத்தைக் கொடுத்தது.
“நான்… நான் சொல்றதை நம்புங்க. எனக்கும் அந்த விஷயத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றவனால் அசையவே முடியவில்லை. இடுப்புக்குக் கீழே உடல் விறைத்திருந்தது.
“என்கிட்டயே பொய்யா?” என்று ஏளனமாகச் சிரித்த அந்த உருவம், “வர்ற செவ்வாய் நரகத்துக்குப் போக ரெடியா இரு” என்றது.
பின்னர் அந்த அறையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து வெளியே வர, வெளியே வாகனம் தயாராய் இருந்தது.
தன் எதிரில் நின்றிருந்தவனைப் பார்த்த அந்த உருவமோ, “என்ன அஜ்ஜு, கோபமா இருக்க போல இருக்கு?” என்று கேட்டபடி காரில் ஏற,
“ஏன்னு உனக்குத் தெரியாதா என்ன?” என்ற கேள்வியுடன் அவன் காரை எடுக்க,
“அதான் நல்லாவே தெரியுதே!” என்றது அந்த உருவம்.
அத்தனை நேரம் இருந்த கொடிய முகம் மாறி, அந்த முகத்தில் சிறு இலகுத்தன்மை தோன்றியிருந்தது.
அவர்களது வாகனம் அங்கிருந்து சென்றதும், குகைக்கு வெளியே காற்றின் வேகம் அதிகரித்திருந்தது.
மரங்களின் கிளைகள் ஒன்றோடொன்று உரசும் சத்தம் அந்த இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது.
ஆனால், அந்தக் குகைக்குள் அடுத்து வெளிவரப்போகும் உண்மை, இன்னும் எத்தனை உயிர்களின் விதியை மாற்றப்போகிறதோ…!
குற்றம் தொடரும்…
Discuss this episode with other readers in the community forum, or see all novels on the Start here page.

