அத்தியாயம் 6
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தங்கள் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம் இடுவது டி மருத்துவமனைகளின் வழக்கம்.
தான் பணியில் அமர்ந்தது முதல்… தான் உயிர் நேசம் கொண்ட இடத்திற்கு மட்டும் செல்லாது தவிர்த்துவிட்டான்.
மகனின் நெஞ்சம் அறிந்து, அவனை வருந்தவிட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அப்பகுதிக்கு செல்லும் குழுவில் அவனது பெயரை இத்தனை வருடங்களில் ஈஷ்வரன் சேர்த்ததில்லை.
சொல்லப்போனால் வருடம் ஒருமுறையென செய்து கொண்டிருந்த வழக்கத்தை மூன்று மாதங்களுக்கு ஒருமுறையென மாற்றி அமைத்ததே தேவ் தான்.
அதுவும் செல்வதற்கு பாதைகளே இல்லாத… மற்றவர்கள் அறிந்திடாத பல பகுதிகளுக்கென்று கொண்டு வந்தான்.
அதற்கு அடித்தளமிட்டது அவனது காதல் தான்.
அதற்கு காரணம் அவனவள்.
என்னதான் அங்கு சென்றிட முடியாதென்றாலும் எத்தனை நாளுக்கு இப்படியே இருக்க முடியும்.
மீண்டும் ஒருமுறை முயன்று பார்த்திடுவோமே! எண்ணம் உதித்த நொடி முதல் அங்கு செல்ல தன் மனதை திடப்படுத்த துவங்கிவிட்டான்.
அப்போதே ஈஷ்வரன் கொடுத்துச்சென்ற கோப்பினை திறந்து இந்த மாதம் செல்ல வேண்டிய ஊர்களை பட்டியலிட்டு, போனமுறை என்னவெல்லாம் அதிகமாக தேவைப்பட்டதென்று என அனைத்து குறிப்புகளையும் எடுத்து முடித்து வீட்டிற்கு வந்தான்.
இவன் பொறுப்பில் தலைமை ஏற்கும் போது கட்டாயம் சென்று தான் ஆகவேண்டும். மறுக்க முடியாது. மறுப்பது சரியாகவும் இருக்காது. முடிவெடுத்துவிட்டான். அனைத்திலுமா என்று தெரியவில்லை.
“டாட் லிஸ்ட் பண்ணிட்டேன். செக் பண்ணிக்கோங்க” என்றவன் கோப்பினை அவரிடம் கொடுத்துவிட்டு தனதறை வந்தான்.
கோப்பினை திறந்தவர் முதலில் தான் பார்க்க வேண்டிய ஊரின் பெயரினைத்தான் பார்த்தார்.
அதற்கு கீழ் குறிப்பிட்டிருக்கும் மருத்துவர்களின் பெயரினில் கண்களை ஓடவிட்டார்.
“தேவதிரன்.” மகனின் பெயரை விரலினால் வருடியவர்…
“எல்லாம் சரியாகணும் இறைவா” என்று வேண்டிக்கொண்டார்.
“அவனை கஷ்டப்படுத்துறீங்க!” உள்ளுக்குள் சோகமிருந்தாலும், வெளியில் அதனை காட்டிக்கொள்ளாது வலம் வருபவனின் முகம் இன்று உணர்வுகளற்று இருக்கவும் கணவரை கடிந்தார் ராதிகா.
“வலிக்குதுன்னே விட்டுட்டால் காயம் ஆறாது ராது. கத்தி வைத்து கிழித்து ரணத்தை வெளியிலெடுத்தால் தான் மருந்திட முடியும். அதியின் மருந்து அந்தப்பொண்ணு தான். முயற்சிப்போம். சரியாக நடந்தால் சந்தோஷம் தானே!” என்று மனைவிக்கு செல்வதைப்போல் தனக்கும் கேட்டுக்கொண்டார்.
தேவ் தன்னை சுத்தம் செய்துகொண்டு சற்று தளர்வாக பால்கனி இருக்கையில் அமர்ந்திருப்பான் அவனது தம்பி அழைத்துவிட்டான்.
நொடியில் உள்ளத்து வேதனைகள் அனைத்தும் ஒதுக்கியவனாக,
“சித்து” என்ற அழைப்பில் அத்தனை பாசத்தையும் காண்பித்திருந்தான்.
“ஹலோ டாக்டர்.” அண்ணனை வம்புக்கு இழுப்பதற்காகவே வேண்டுமென்று அவ்வாறு அழைத்தான்.
“சித்து…”
“நீங்க டாக்டர் தானே?”
“இப்போ என்னடா அதுக்கு?”
“சும்மா…” என்றவன், வேறு கதைகள் பேசிட, பொறுமை இழந்த தேவ்…
“உன் ஹனி எப்படியிருக்கிறாள்?” என்று தானே கேட்டிருந்தான்.
“என் ஹனி” என்று மேலும் சொல்லாது இழுக்க…
“படுத்தாதடா” என்றான் தேவ்.
“யாரு நானா? நீங்க தான் எல்லாரையும் படுத்துறீங்களாம். காலையில் கூட ராதும்மா தேவிக்கு அழைத்து ஒரே புலம்பல்” என்றான் சித்து.
“சித்திகிட்ட பேசுனனே! அப்போ சொல்லவேயில்லையே?” என்ற தேவ்விடம்,
“சொன்னால் மட்டும் என்ன நடந்திடும்? நீங்க உங்க பிடிவாதத்தில் தான் இருக்கப்போறீங்க!” என்றான் சித்து.
தேவ் மௌனமாகிவிட்டான்.
“பேச வேண்டிய நேரம் இப்படி அமைதியாகிடுங்க” என்று சித்து சொல்லிக் கொண்டிருக்கும் போதுதான் வித்யா அவனுக்கு அழைத்திருந்தாள்.
என்றுமில்லாது இன்று அழைக்கிறாளென்று தேவ்வினை ஹோல்டில் போட்டுவிட்டு ஏற்றவன், அவள் தேனுவைப்பற்றி பேசுகிறாளென்றதும், ஹோல்டிலிருந்தவனை மெர்ஜ் செய்து கேட்க வைத்தான்.
தம்பியின் குரலுக்கு பதில் பெண்ணின் ஒலி கேட்கவுமே, தேவ் தன்னை மியூட்டில் போட்டுவிட்டு என்னவென்று கவனிக்க… வித்யா தேனுவைப்பற்றி சொல்லியதில் கலங்கிப்போனான்.
‘நான் வேண்டாம் வந்தால், இவள் எல்லாரையும் வேண்டாமென்று தவிர்த்து தனியாக வந்துவிடுவாளா?’ என்று கோபம் கொண்டான்.
ஆரம்பத்தில் அவள் வேலைக்கு செல்ல சென்னை சென்றுவிட்டாள் என்று வாசு மூலமாக அறிந்த தேவ்வுக்கு அவள் பணியில் அமர்ந்தது தன்னுடைய சித்தப்பாவின் கம்பெனி என்று சித்துவாக அழைத்து சொல்லும்வரை தெரியாது.
தனக்கு விருப்பமான தன்னுடைய ஜூனியர் பெண் தான் தனது அண்ணன் நேசம் கொண்ட பெண்ணென்று சித்துவுக்கு, ஒருமுறை மேனகா அவளை காட்டியே ஆகவேண்டுமென்று செய்த அடத்தில் அலைப்பேசியிலிருந்த படத்தை தேவ் காட்டிய பின்னர் தான் தெரியும்.
அப்போது தேனு என்னுடைய ஜூனியர் என்று சித்து சொல்லியிருந்தான்.
சித்து முதுகலை இரண்டாம் ஆண்டில் இருக்க… தேனு இளங்கலை இரண்டாம் ஆண்டில் இருந்தாள்.
அன்றைய சூழல் மேற்படிப்பு படிக்க தேனுவுக்கு மனமில்லை. இருக்கும் இடம் விட்டு தனித்து செல்ல வேலை அவசியமாக இருந்திட, கேம்பஸில் நடந்த பணித்தேர்வில் கலந்து கொண்டாள். அது அவளை அது சித்துவின் அலுவலகமென்று தெரியாமலே அங்கு சேர்த்துவிட்டது.
சித்துவும் தன்னுடைய காதலுக்காக பணியில் அமர… அங்கு தேனுவை கண்டு ஆச்சர்யம் கொண்டான்.
ஏனென்றால் வேலைக்கு செல்கிறேன் என்று மட்டும் சொல்லி வந்தவள், எங்கு என்ற விபரம் ஏதும் சொல்லாது அவளைச் சார்ந்த அனைவரையும் தேடலில் விட்டிருந்தாள்.
வேண்டாமென்று சொல்லி வந்தவன் அவள் எங்கென்று தெரியாது தவித்துக் கொண்டிருப்பது அறிந்த சித்து உடனடியா தேவ்விற்கு அழைத்து சொல்லிவிட்டான்.
சித்துவும், தேனுவும் படிக்கும் காலங்களில் அத்தனை நெருக்கமில்லை. ஆனால் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கும். கடந்து செல்லும்போது புன்னகைப்பது, அவசியமென்றால் பேசுவது மட்டுமே அவர்களுக்கிடையே இருந்தது.
சித்து இளங்களையும் அதே கல்லூரி என்பதால், தேனு இரண்டாமாண்டு படிப்பதிலிருந்து அவளை அவனுக்கு தெரியும்.
ஒரே துறை என்பதால் நெருக்கமில்லையென்றாலும் பழக்கமிருந்தது.
நான்காம் வருடம் படிக்கும்போது எப்போதும் சோகமாக இருக்கும் தேனுவை… ஏனென்று காரணம் தெரிந்தமையால் தன்னுடைய பார்வையால் அக்கறை காண்பித்து அவளை சகஜமாக வைத்திருந்தான்.
அவள் தான் தன்னுடைய அண்ணனின் உயிரென்று தெரிந்தது முதல், மிகவும் கனிவுடன் பார்க்கத் தொடங்கிவிட்டான்.
தினமும் தேனுவின் செயல்களை தேவ்விற்கு அப்டேட் செய்திடுவான்.
யாருமற்ற நிலையில் வலியோடு இருக்கும்போது காரணம் ஏதும் கேட்டிடாது சித்து காட்டிய அக்கறை தேனுவுக்கும் அவன் மீதிருக்கும் பிடித்தத்தை அதிகரித்திருந்தது.
படிப்பு முடிந்து சென்ற பின்னர் வேலையில் அவள் சேர்வதற்கு இடையேயான காலமான இரண்டு மாதங்கள் இருவருக்கும் தொடர்பென்பதில்லை. அதற்கு அவளின் இருப்பிடமும் ஒரு காரணமாகும்.
தேனு பணியில் சேர்ந்த சமயம் புதிய செயல்திட்டத்திற்காக சித்து வெளிநாடு சென்றிருந்தான். வருவதற்கு மூன்று மாதங்களாயிது.
அந்த மூன்று மாதங்களும் அவளைப்பற்றி ஒன்றும் தெரியாது தேவ் தவித்த தவிப்பு… சொல்லில் வடித்திட முடியாது.
திரும்பி வந்த பின் தான் தேனு தன்னுடைய அலுவலகத்தில் சேர்ந்திருக்கிறாள் என்பது அறிந்து தேவ்விடம் கூறினான்.
அதன் பிறகு தான் தேவ்விற்கு உயிர் வந்ததென்று சொல்லலாம்.
தேவ்வின் மூலம் அவள் வேலை செய்யும் இடமறிந்து தங்கையை காண வாசு நேரில் வந்துவிட…
அவனை முழுதாக தவிர்த்து,
“என்னைத்தேடி வந்தால் காலத்துக்கும் தேட வைத்திடுவேன்” என்று வார்த்தையால் பயம் காட்டி அவன் வருவதையே தடை செய்திருந்தாள்.
அவற்றை நொடியில் மனதில் ஓட்டிபார்த்த தேவ்வுக்கு…
“ஏண்டி… எல்லாம் எனக்காகவா?” என்று மகிழ்ந்திட முடியாது வருந்தவே செய்தது.
தான் மட்டுமே வேண்டுமென அவள் சொல்லிய நொடி…
இவ்வுலகில் அவனைப்போல் மகிழ்வினை யாரும் கொண்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் அவளை துறந்துவர வேண்டிய நிலை. வலித்த வலி… தவித்த தவிப்பு… சொல்லில் அடங்காது.
தனக்காக அவள் எதையும்… எதையும், அது எதுவாக இருப்பினும்… இழக்கக்கூடதென்றே அவன் அவளை இழந்து வந்தது.
ஆனால் அதைத்தான் அவனவள் அவனுக்கு காட்டிக்கொண்டிருக்கிறாள்.
நீயில்லையென்றால் எனக்கு எதுவுமில்லை. சொந்தமில்லை. பந்தமில்லை. ஊர் இல்லை. உற்றார் இல்லை.
‘நீ விட்டுச் சென்ற காரணங்களோடு தான் என் நாட்கள் நகர்கிறது.’ சொல்லவில்லை. நடத்திக் கொண்டிருக்கிறாள்.
‘உனக்காக துறந்தது… துறந்தது தான்.’
தன்னவள் தன்மீது கொண்ட காதலில் பிரமித்து நிற்கிறான்.
‘எங்க குலசாமி அவள். அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி தானே டாக்டர் தம்பி. நாளைக்கு இந்த மக்களுக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாட்டாமை செய்வேன்.’ இரு கரம் ஏந்தி உரைத்தவரின் முகம்… வித்யா தேனுவைப்பற்றி சொல்லியதில் பின்னால் சென்றது.
எப்போது அவனது அருவியின் ஆரப்பரிப்பு கட்டுக்கடங்காது செல்கிறதோ… அப்போது மேற்கண்ட தருணத்தை எண்ணி இறுகி நிற்பவனுக்கு இன்று ஏனோ அப்படி முடியவில்லை.
கொள்ளை காதலை சுமந்து கொண்டிருக்கிறானே! இன்னும் எத்தனை தூரம் தள்ளி சென்றிடுவான்.
ஒருமுறை வார்த்தையாலும், ஒருமுறை பார்வையாலும் சொல்லியிருக்கின்றான்.
‘நீ அழுதால் எனக்கு வலிக்குதுடி!’
அதற்காக… அந்த வார்த்தைக்காக!
தான் கொண்டுள்ள அதே வலி தானே அவளுக்கும். தானே முடியாத பல சமயங்களில் அவளை எண்ணி கண்ணீர் உகுதிருக்கும் நிலையில், நான் வருந்தக்கூடாது என்பதற்காக கண்ணீர் சிந்துவதும் இல்லையா?
அவளின்றி உணர்வுகளற்று இருப்பவன் மரித்தே விட்டான்.
வித்யா வைத்த பின்னரும், சித்து பேசுவதை உணராது தனக்குள் உழன்ற தேவ்… தன்னால் பலருக்கு கஷ்டமென தன்னுடைய தம்பியிடம் மன்னிப்பை கேட்க… அவனோ, அதையெல்லாம் பொருட்படுத்தாது…
“வேண்டான்னு சொல்றதைவிட்டு வேணுன்னு சொல்லுங்களேன்” என்று வைத்துவிட்டான்.
வித்யா அழைத்து தேனுவின் நிலையை சொன்னதால், சித்து கட்டாயம் தேனுவை பார்க்க செல்வானென்று தெரிந்த தேவ் சிறு நிம்மதியோடு தூரத்து இருள் வானை வெறித்தான்.
அந்த கருமை பூசிய வானம் போல் தான் அவனது காதல் வானமும் இருண்டு கிடக்கிறது.
கசந்த சிரிப்பு அவனிடம்.
‘அருவி…’
‘உன்னை அதிக கஷ்டப்படுத்துறேன். அப்புறமும் எனக்காக ஏன் தவமிருக்க?’
நெஞ்சை அடைத்தது அவளது காதலின் தீவிரம்.
அலைப்பேசியை எடுத்தவன், அவளது எண்ணை திறந்து பார்த்தான்.
தொட்டு அழைப்பு விடுத்திட விரல்கள் பரபரத்தன. முடியாது மூச்சு முட்டி தவித்தான்.
நம் எல்லோருடைய அலைப்பேசியிலும் ஓர் எண் நிச்சயம் இருக்கும். அழைக்க நினைக்கும். ஆனால் முடியாது. ஒரு காலத்தில் அவர்கள் தான் நமக்கு எல்லாமுமாக மனம் நினைத்திருக்கும். என்றாவது மீண்டும் பேசிடமாட்டோமா என்ற ஏக்கம் தினம் தினம் கூடிக்கொண்டே போகும். ஆனால் அழைத்து பேசிட முடியாது.
இங்கு தேவ்வுக்கும் அப்படித்தான். ஆனால் ஒரு காலத்தில் மட்டுமல்ல… நிகழ் காலத்திலும், வரும் காலத்திலும் அவனுக்கு எல்லாமும் அவள் தான். ஆனால் உரிமையாய் அழைத்து பேசிட முடியாத நிலையில் அவன்.
தேனுவை போலத்தான் தேவ்வும் அவளை பார்க்கவில்லை. நேரில். என்றாவது சித்து அனுப்பும் புகைப்படத்தில், அலுவலக விழா ஏதேனும் ஒன்றில் எடுக்கப்பட்டதாக இருக்கும்.
கல்லூரி நாட்களில் புலனம் பயன்படுத்தியவள் தான்.
இப்போது பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் தான் சொல்லிய வார்த்தைகள் என்று அறிவான்.
‘இது… நமக்குள் ஒத்துவராது. உன் சொந்தங்களை வருத்தி எனக்கு நீ வேணாம். நான் எப்படி நீ வேணான்னு உறுதியா இருக்கேனோ… நீயும் அப்படி இருக்கணும். என்னை பார்க்கணும் நினைக்கூடாது. என்னைப்பற்றி செவி வழி செய்தியாகக் கூட நீ தெரிந்துகொள்ளக் கூடாது.’
தேவ் சொல்லிய இந்த வார்த்தைகளுக்காகத்தான், பயன்படுத்திய புலனத்தையும் அலைப்பேசியில் நீக்கியிருந்தாள்.
அவனுடைய வார்த்தையை மீறிட காதல் கொண்ட மனதிற்கு முடியவில்லை.
இதெல்லாம் இருந்து, இதன் மூலமாக உன்னைப்பற்றி நிதம் தெரிந்து கொண்டாள் தான் நித்தம் உன் நினைவு எனக்கிருக்குமா? என்ற அவளின் கேள்வி… அவனைப்பற்றி அறிந்துகொள்ளக்கூடாது… அந்நிலையிலும் அவன் நினைவின்றி என் நாட்கள் கடந்திடாது என்பதை புரிய வைத்திடவே… ஒருவரைப்பற்றி எளிதாக அறிந்துகொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களுக்கும் தனக்குத்தானே தடை விதித்துக்கொண்டாள்.
அவனும் அவளின் எண்ணம் அனைத்தும் அறிவானே!
‘என் வார்த்தைக்கு உனக்குள் அத்தனை மதிப்பா?’ தனக்குத்தானே கேட்டுக்கொண்டவன்,
‘இல்லாமல் இருந்திருக்கலாம். என்னைத்தேடி வந்திருக்கலாம். உன்னை தவிர்க்க முடியாத சூழலை உருவாக்கியிருக்கலாம். ஏன் செய்யல… அருவி?’
தேவ்வின் மனமே அவனுக்கு எதிராக நின்றது.
தனக்காக அவளை அதிகம் நோகச் செய்கிறோம் என்று அறிந்தும் ஒன்றும் செய்ய முடியாது இருக்கின்றான்.
இண்டர்காம் ஒலித்திட…
சுயம் பெற்று எழுந்தான்.
“மாம்…”
…..
“இதோ வறேன்…”
இதயத்தில் கொட்டும் மத்தள இடியுடன் கீழே சென்றான்.
ஈஷ்வரனுடன் அமர்ந்திருந்த வாசுவை கண்டதும் துளிர்த்த கண்ணீரை அழகாய் மறைத்து அருகில் சென்றான்.
“அதி…” நண்பனை கண்டதும் தாவி அணைத்துக்கொண்ட வாசுவிடம் இல்லாத இறுக்கம் தேவ்விடம்.
வாசுவிற்கு தேவ்வின் அந்த இறுகிய நிலை போதுமானதாக இருந்தது. இத்தனை வருடம் அவன் பாராமுகம் காட்டிய வருத்தங்கள் யாவும் எங்கோ ஓடியது.
கண்களோடு சேர்ந்து நெஞ்சமும் கலங்கிட… தன் முகத்தை நண்பனின் தோளில் புதைத்துக்கொண்டான் வாசு.
பிரியாது அணைப்பில் கட்டுண்டு இருந்த அவர்களின் நிலை, அவர்களுக்கிடையேயான நட்பின் ஆழத்தை பறைசாற்றியது.
“சாப்டியா வாசு?”
“சாப்பிட்டு தா(ன்)ம்மா பஸ் ஏறினேன்” என்ற வாசு, “லேட் நைட் வந்து சிரமம் கொடுத்துட்டேன்” என்றான். வருந்தும் பாவனையில்.
“நீயிங்கு படிக்கும் காலத்தில் இதைவிட தாமதமாகலாம் இவனோடு சேர்ந்து கொட்டம் அடிச்சிருக்க. இன்னைக்கு என்ன புதுசா?” என்ற ராதிகா, “பால் கொண்டுவரேன் குடிச்சிட்டு படுங்க” என்று நகர்ந்தார்.
“வில்லேஜ் எப்படியிருக்கு வாசு?”
“உங்க புண்ணியத்தில் நல்லாயிருக்குன்னே சொல்லலாம்” என்றான்.
அதுதான் உண்மையும் கூட.
“அப்போ உன் ஃபிரண்டுக்குத்தான் நீ நன்றி சொல்லணும்” என்று எழுந்த ஈஷ்வரன், “பார்த்து பல வருடமாச்சுல? உங்களுக்குள்ள பேசிக்க ஆயிரம் இருக்கும். நான் தூங்கப்போறேன்” எனக்கூறி வாசுவின் தோளில் தட்டிச் சென்றார்.
இருவருக்கும் பால் கொண்டு வந்து கொடுத்த ராதிகா… அவர்கள் குடித்து முடிக்கும் வரை உடன் அமர்ந்திருந்தார்.
மறந்தும் தேனு பற்றி ஒருவார்த்தை அவர் வாசுவிடம் கேட்கவில்லை.
இதில் வாசுவை குற்றம் சொல்ல ஒன்றுமேயில்லை. ராதிகாவால் தன் மகனை நினைத்து நொந்துகொள்ள மட்டுமே முடிந்தது.
“ரொம்ப நேரம் பேசிட்டிருக்காமல் சீக்கிரம் தூங்குங்க” என்று அவரும் சென்றிட…
அதுவரை வாய் திறந்திடாத தேவ்,
“வாடா” என்று தனதறைக்கு அழைத்துச் சென்றான்.
அறிக்குள் நுழைந்ததும்,
“ரெஃபிரஷ் பண்ணிட்டு வந்து படுடா” என்று வாசுவின் கையிலிருந்த பையினை வாங்கி அங்கிருந்த சிறிய மேசையின் மீது வைத்தான்.
இருவருக்குமே பேசிட ஆயிரம் இருந்தன. ஆனால் வார்த்தைகள் தடுமாறின. பழையதை இத்தருணம் பேசிட இருவருக்குமே விருப்பமில்லை. எத்தனை வருடங்களுக்கு பின்னர் நேரில் பார்த்திருக்கின்றனர்.
இந்நொடி கிடைக்கும் நிம்மதியை மற்றவற்றை பேசி கெடுத்துக்கொள்ள எண்ணமின்றி, அனுபவிக்கவே முயன்றனர்.
ஆடை மாற்றி வந்த வாசு, தேவ் எங்கேயென்று பார்க்க… அவனோ பால்கனியில் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு முதுகுக்காட்டி நின்றிருந்தான்.
தேவ்வின் அருகில் சென்றிட அடி வைத்த வாசு உறைந்து நின்றான்.
மெத்தைக்கு நேர் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம். வாசுவின் விழிகளை விரியச் செய்தது.
மெத்தையையும், புகைப்படத்தையும் மாற்றி மாற்றி பார்த்தான்.
படுக்கையிலிருந்து கண் விழித்தாலும், கண் மூடினாலும், அந்த புகைப்படத்தில் தான் பார்வை பதியும். அந்த கோணத்தில் மாட்டப்பட்டிருந்தது.
இப்படியொரு படம் நண்பனிடம் இருக்கிறது என்பதே வாசுவுக்கு இக்கணம் தான் தெரியும். ஆனால் அதிலிருக்கும் நிழல்… யாருடையது என்று யாரும் சொல்லாமலே அவனுக்குத் தெரியுமே!
பாவாடை சற்று மேலேறியிருக்க… கணுக்கால் தெரியும் பாதம். நீரில் முங்கி நனைந்திருக்க… தண்ணீரை தொட்டும் தொடாது படிந்த பாறையின் மீது ஒரு பாதம் அழுந்த பதிந்திருக்க, அதன் மேல் மற்றொரு பாதம் வீற்றிருந்தது. ஒரு கை நீரினை அள்ளித் தெளிக்க உயர பறக்கும் நீர்த்திவலைகள்.
நீர் நனையும் இரு பாதமும். நீரை அள்ளித் தெளிக்கும் ஒரு கையும் மட்டுமே புகைப்படத்தில் நிழலாய்.
முகமின்றி உருவமின்றி காட்சியளித்த வெண் பாதங்களும், செங்காந்தள் விரல்களும் தன் தங்கையினுடையதென்று பார்த்ததும் அந்த பாசமிகு அண்ணனுக்கு நன்கு தெரிந்தது.
தன்னுடைய நண்பனின் ஆழக் காதலும்!
‘என் சகலமும் அவள் காலடியில்.’
வார்த்தைகளால் சொல்லாது, சிறு புகைப்படத்தின் மூலம் உணர்த்திவிட்டான் தேவதிரன்.
இப்படியும் ஒருவனால் காதலிக்க முடியுமா?
ஓடிச்சென்று தேவ்வை பின்னோடு அணைத்துக்கொண்டான் வாசு.
ஒருவனால் இதைவிட வேறெப்படி ஆழமாக காதலை காட்டிட முடியும்!
சிறு சிறு விஷியத்திலும் அவளை கொண்டே என் நாட்கள் நகர்கிறது என்பதை தேவ் சொல்லவில்லை… அவ்வறையை பார்க்கையில் வாசுவால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
நீளும் நாட்கள் யாவும் காதலின் ஆழத்தை அதிகரிக்கவே!
தேவ்வால் வாசுவின் மனதை புரிந்துகொள்ள முடிந்தது. நண்பனின் தோளில் கை போட்டு கழுத்தோடு கட்டிக்கொண்டு தேவ்…
“தூங்கலாம்” என்க, வாசுவுக்கு சப்பென்றானது.
தங்கையை பற்றியோ அல்லது அவனைப்பற்றியோ ஏதும் சொல்வானென்ற அவனின் எதிர்பார்ப்பு ஏமாற்றம் கொண்டது.
இருப்பினும் எங்கோ ஓர் நம்பிக்கை.
இத்தனை காதலை கொண்டிருப்பவன் நிச்சயம் அவனின் அருவியை விட்டுவிடமாட்டான் என்று.
அப்புகைப்படத்தை பார்க்கையில் அந்த நம்பிக்கை இன்னும் அதிகரிப்பதை போலிருக்க… நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பனின் அருகில் நிம்மதியான துயில் கொண்டான் வாசு.