செவ்வாய்க்கிழமை காலை, செங்கமலப்பட்டியின் வயல்வெளியில் வெள்ளை நிற இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கிய தாரணி, வண்டியின் கண்ணாடியில் முகத்தை ஒருமுறை பார்த்துச் சரிசெய்துகொண்டாள்.
சாம்பல் நிறப் பருத்திச் சேலை, காலில் வலுவான காலணி, தலையில் வெயிலுக்காக ஒரு துண்டு என அவளுடைய தோற்றமே அவள் வேலைக்காக வந்திருப்பதைச் சொல்லியது. ஒரு கையில் மண் பரிசோதனைப் பெட்டி, மறுகையில் குறிப்பேடு.
அவள் பார்வை வயலைச் சுற்றி ஓடியது.
காலை வெயில் இன்னும் முழுமையாக ஏறியிருக்கவில்லை. நெற்பயிர்கள் காற்றில் மெதுவாக அசைந்தன. தொலைவில் மோட்டார் ஓடும் சத்தம் கேட்டது.
அந்தச் சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள் தாரணி.
கிணற்றடியில் குனிந்தபடி மோட்டாரைச் சரிபார்த்துக்கொண்டிருந்த முத்து, காலடி ஓசை கேட்டுத் தலை நிமிர்ந்தான்.
அங்கே தாரணி நின்றிருந்தாள்.
ஒரு நொடி அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கையில் வைத்திருந்த சாவி நழுவிக் கீழே விழுந்தது.
இவங்க இங்கே எப்படி?
அவசரமாகக் குனிந்து சாவியை எடுத்தவன், வேட்டியில் இருந்த சேற்றைத் தட்டிவிட்டான். பிறகு சட்டையின் கையை மடித்துக்கொண்டே அவளை நோக்கி வந்தான்.
“வணக்கம்,” என்றாள் தாரணி.
“வணக்கம்… நீங்க… இங்கே?”
அவன் கேட்ட விதத்தைப் பார்த்துத் தாரணி சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.
“நான் இந்த வட்டாரத்துல கள ஆய்வுக்கு வந்தேன். உங்க வயல் இந்தப் பக்கம்னு தெரிஞ்சது. அதான் வந்தேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் கொஞ்சம் வயலைப் பார்த்துட்டுப் போகலாமா?”
“அதுக்கென்னங்க! தாராளமா பாருங்க.”
சொன்னவன், அவளை அழைத்துச் செல்லத் திரும்பினான். இரண்டு அடி நடந்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவனாக நின்றான்.
“ஆனா… நான் வயல்ல இருந்து வரேன். கொஞ்சம் சேறா இருக்கேன்.”
அவன் தன் உடையைப் பார்த்துக்கொண்டு சொன்னதைக் கேட்ட தாரணி சிரித்துவிட்டாள்.
““முத்து, நீங்க வயல்ல வேலை பார்க்கிறவர். சேறு படாம எப்படி இருப்பீங்க? இதுக்கெல்லாமா தயங்குவீங்க?” என்று அவள் சின்ன சிரிப்புடன் கேட்டாள்.
அவள் அவ்வளவு இயல்பாகத் தன் பெயரைச் சொல்லி அழைத்தது முத்துவுக்கு ஒருவித ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“சரி, வாங்க. உங்க வயலைப் பார்க்கலாம்.”
அவள் முன்னால் நடக்கத் தொடங்கினாள்.
முத்து அவளுக்குப் பின்னால் நடந்தான்.
—
வரப்பில் இறங்கியதும் தாரணி தன்னுடைய வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினாள். நெற்பயிர்களின் இலைகளைப் பார்த்தாள். சில இடங்களில் குனிந்து மண்ணைக் கவனித்தாள். நீர் செல்லும் பாதையையும் வடிகாலையும் பார்வையிட்டாள்.
முத்து அவள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தான்.
“இது சம்பா பயிர்தானே?”
“ஆமாங்க. நாற்பத்தைஞ்சு நாள் ஆகுது.”
“பயிர் நல்லாத்தான் இருக்கு. ஆனா அந்த மூலையில மட்டும் இலை கொஞ்சம் மஞ்சளா தெரியுது. அங்கே ஏதாவது பிரச்சினையா?”
முத்து அவள் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான்.
“அந்த இடம் கொஞ்சம் தாழ்வானது. மழை பெய்ஞ்சா தண்ணி தேங்கிடும். அதனால வடிகால் வெட்டி வெச்சிருக்கேன். போன வாரம் நண்டு ஓட்டை போட்டுடுச்சு. அதை அடைச்சேன். ஆனா தண்ணி முழுசா வடியல போல.”
தாரணி அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவன் சொன்னதில் எந்தத் தயக்கமும் இல்லை. தன்னுடைய நிலத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவனின் பதில் அது.
அவள் மண் பரிசோதனைப் பெட்டியைத் திறந்து, அந்த இடத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்தாள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நிறமாற்ற அட்டையுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
“இந்த மண்ணுல அமிலத்தன்மை கொஞ்சம் அதிகமா இருக்கு,” என்றாள்.
முத்து அருகில் வந்து அந்த மண்ணைப் பார்த்தான்.
“நான் ஒண்ணு சொல்லட்டுமா?”
“சொல்லுங்க.”
அவன் குனிந்து மண்ணைக் கையில் எடுத்தான். விரல்களால் நசுக்கிப் பார்த்துவிட்டு, அதன் தன்மையைக் கவனித்தான்.
“இந்தப் பக்கம் மூணு வருஷமா யூரியா கொஞ்சம் அதிகமாப் போட்டுட்டோம். அதனாலதான் இருக்கும்னு நினைக்கிறேன். இந்த முறை சுண்ணாம்பும் மாட்டுச்சாணமும் போட்டு மண்ணைச் சரிப்படுத்தலாம்னு இருந்தேன்.”
தாரணி கையில் இருந்த பரிசோதனை அட்டையை மீண்டும் பார்த்தாள்.
அவன் சொன்னதோடு அது ஒத்துப்போனது.
“நீங்க இதையெல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறீங்க?” என்று கேட்டாள்.
முத்து அவளைப் பார்த்தான்.
“என்னங்க?”
“மண்ணைப் பார்த்ததும் அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு சொல்றீங்களே. எப்படிக் கத்துக்கிட்டீங்க?”
அவன் கையிலிருந்த மண்ணைத் தட்டிவிட்டான்.
“அப்படியெல்லாம் தனியா யாரும் சொல்லிக் கொடுக்கலீங்க. இந்த வயல்லதான் இருக்கேன். எந்த இடத்துல என்ன போட்டா எப்படி வரும்னு கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சுக்கிட்டேன்.”
“அப்படின்னா அனுபவம்தான் உங்களுக்குக் கத்துக்கொடுத்திருக்கு.”
“அப்படித்தான் சொல்லணும்.”
அவன் சிரித்தான்.
“இந்த மண்ணு நம்மகிட்ட நிறைய சொல்லும். நாமதான் கவனிக்கணும்.”
தாரணி அவனைச் சில நொடிகள் பார்த்தாள்.
வீட்டில் சந்தித்தபோது அதிகம் பேசாமல் இருந்தவன், இங்கே எவ்வளவு இயல்பாகப் பேசுகிறான்!
அவனுக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றிப் பேசும்போது அவனுடைய முகத்தில் தெரியும் நம்பிக்கையும் தெளிவும் அவளுக்குப் பிடித்திருந்தன.
அவன் படிப்பை நிறுத்தியதை நினைத்தாள்.
பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவன் என்பதற்காக அவனுக்குத் தெரியாத விஷயங்கள் நிறைய இருக்கும் என்று நினைத்தது அவளுடைய தவறு என்பதை இப்போது உணர்ந்தாள்.
அறிவு என்பது ஒரே இடத்தில் மட்டும் கிடைப்பதில்லை என்பதை அவள் அறிந்திருந்தாலும், அதை இவ்வளவு அருகில் பார்க்கும்போது வேறுவிதமாக இருந்தது.
“சரி, அடுத்து எங்கே பார்க்கலாம்?” என்று கேட்டாள்.
“வாங்க. வாழைத் தோட்டத்தையும் உளுந்து வயலையும் காட்டுறேன்.”
அவன் முன்னால் நடந்தான்.
இப்போது அவனுடைய பேச்சில் இருந்த தயக்கம் பெரும்பாலும் மறைந்திருந்தது.
****
வாழைத் தோட்டத்தின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த காரிப் பசு, யாரோ வருவதைக் கவனித்துத் தலையை நீட்டியது.
தாரணி அருகில் வந்ததும் அது அவளை மோப்பம் பிடிக்க முயன்றது.
“ஐயோ!”
அவள் சட்டென்று ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.
அவளைப் பார்த்த முத்துவுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“என்னங்க, பயந்துட்டீங்களா?”
“பயப்படாம என்ன பண்ண? திடீர்னு முகத்துக்குப் பக்கத்துல வந்துடுச்சு!”
“அதுக்கு நீங்க புதுசு. அதான் யாருன்னு பார்க்குது.”
முத்து பசுவின் அருகில் சென்று அதன் கழுத்தைத் தடவினான்.
“சும்மா இரு காரி. இவங்க நம்ம ஆளுதான்.”
அவன் சொன்னதைக் கேட்டுத் தாரணி அவனைப் பார்த்தாள்.
“நம்ம ஆளா?”
“அதாவது… நம்ம ஊர்க்காரங்க மாதிரி…”
அவன் தடுமாற, தாரணி சிரித்துவிட்டாள்.
“நான் உங்க ஊர்க்காரங்க இல்லையே!”
“அதான்… இப்போ வந்திருக்கீங்களே!”
தன்னுடைய பதிலுக்குத் தானே சிரித்துக்கொண்டான் முத்து.
தாரணி அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
“இந்தப் பசுவுக்கு எவ்வளவு வயசு?”
“ஆறு வயசு இருக்கும். குட்டியா இருந்தப்போ வாங்கினது. எங்க வீட்டுல இதுக்கு ஒரு தனி இடம் இருக்கு.”
“உங்க வீட்டுல எல்லாரும் இதைப் பார்த்துக்குவாங்களா?”
“நான்தான் அதிகம் பார்த்துக்குவேன். காலையில தீவனம் வைக்கிறது, தண்ணி காட்டுறது எல்லாம் நான்தான். நான் கொஞ்சம் நேரம் வரலைன்னாலும் கத்த ஆரம்பிச்சிடும்.”
அவன் சொன்னதைப் புரிந்துகொண்டதுபோல காரி அவன் கையை நக்கியது.
முத்து அதன் நெற்றியைத் தடவினான்.
அந்தக் காட்சியைப் பார்த்த தாரணியின் முகத்தில் மென்மையான புன்னகை தோன்றியது.
“உங்களுக்கு மாடுங்க மேல ரொம்பப் பாசம் போல.”
“அப்படித்தான் சொல்லணும். நம்மள மாதிரியே அதுங்களுக்கும் பசி, தாகம் எல்லாம் இருக்கும். நாம சரியா கவனிச்சுக்கணும்.”
அவன் அதைச் சாதாரணமாகச் சொன்னான்.
ஆனால் தாரணி அந்த வார்த்தைகளைக் கவனித்தாள்.
தன்னுடைய தேவைகளைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் மனிதன், ஒரு மாட்டின் பசி, தாகத்தைக்கூட மறக்காமல் கவனித்துக்கொள்கிறான்.
அவன் மனதில் எவ்வளவு அக்கறை இருக்கிறது!
“நானும் கொஞ்சம் தொட்டுப் பார்க்கலாமா?” என்று கேட்டாள்.
“தாராளமா. மெதுவா நெற்றியில தடவுங்க.”
தாரணி தயக்கத்துடன் கையை நீட்டினாள். காரி அமைதியாக நின்றது.
“அட, இது நல்ல பிள்ளையா இருக்கே!”
“எப்பவும் நல்ல பிள்ளைதான். ஆனா சாப்பாடு தாமதமானா மட்டும் கொஞ்சம் கோபப்படும்.”
“உங்களை மாதிரியா?”
அவள் கேட்டுவிட்டு அவனைப் பார்த்தாள்.
முத்து ஒரு நொடி திகைத்தான்.
பிறகு அவள் கிண்டல் செய்வதைப் புரிந்துகொண்டு சிரித்தான்.
“நான் எப்போ கோபப்பட்டேன்?”
“இன்னும் பார்க்கல. அதான் கேட்டேன்!”
அவள் சிரித்தபடி முன்னால் நடந்தாள்.
முத்து அவளைப் பார்த்துக்கொண்டே சில நொடிகள் நின்றான். பிறகு அவசரமாக அவளுக்குப் பின்னால் சென்றான்.
அவளுடன் பேசுவது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை.
****
வாழைத் தோட்டத்தின் அருகே இருந்த பாதையில் கொஞ்சம் சேறு தேங்கியிருந்தது.
“இந்தப் பக்கம் கொஞ்சம் வழுக்கும். பார்த்து வாங்க,” என்றான் முத்து.
“சரிங்க,” என்றவள், சற்று ஜாக்கிரதையாகத்தான் முதல் அடியை எடுத்து வைத்தாள். ஆனால், இரண்டாவது அடியில் அவளது காலணி சேற்றில் சத்தமின்றிப் பிடியிழந்தது.
“அய்யோ!” என்று அவள் நிலைதடுமாறிச் சாயும்முன், முத்து மின்னல் வேகத்தில் அவளது கையைப் பற்றித் தன் பக்கம் இழுத்தான்.
அவள் நேராக அவனது மார்போடு வந்து நின்றாள். எதிர்பாராத அந்த நெருக்கம் இருவரையும் உறைந்துபோகச் செய்தது. அவன் கை இன்னும் அவளது கையை இறுகப் பற்றியிருந்தது; மூச்சுக்காற்று படும் தூரத்தில் அவளது முகம் அவனுக்கு மிக அருகில் இருந்தது. வார்த்தைகள் இல்லாத அந்த மௌனத்தில், இருதயத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.
முதலில் சுதாரித்துக்கொண்ட தாரணி, தன் இதயத் துடிப்பை மறைத்துக்கொண்டு சிரித்தபடியே தன்னைச் சரிசெய்து கொண்டாள்.
“நல்லவேளை நீங்க பிடிச்சுக்கிட்டீங்க. இல்லன்னா இந்தச் சேறு என்னை ஒரு வழி பண்ணியிருக்கும்!” என்றாள்.
“அதுக்குத்தான் பார்த்து வரச் சொன்னேன்,” என்றான் முத்து, கண்களில் குறும்பு மின்ன.
அவன் இப்படி மனம் விட்டுச் சிரிப்பதைத் தாரணி பார்த்ததே இல்லை. அந்தப் புன்னகை அவளுக்குள் ஒரு புது வெட்கத்தை ஏற்படுத்தியது.
“இனிமேல் நீங்க சொல்றதை அப்படியே கேட்டுக்க வேண்டியதுதான் போல!” என்றவள், அவன் முகத்தையே ஒரு நொடி கூடுதலாகப் பார்த்தபடி அங்கிருந்து நடக்கத் தொடங்கினாள். அவளது ஸ்பரிசத்தின் அரவணைப்பை உணர்ந்தவாறு புன்னகையுடன் பின்தொடர்ந்தான் முத்து.
அந்தச் சிரிப்பில் எந்தத் தயக்கமும் இல்லை. மற்றவர்களை மகிழ்விப்பதற்காகச் சிரிக்கும் ஒருவனுடைய சிரிப்பும் இல்லை.
அவன் உண்மையாகவே சிரித்துக்கொண்டிருந்தான்.
அந்தச் சிரிப்பைப் பார்த்த தாரணிக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“சரி, சரி! சிரிச்சது போதும். கையை விடுங்க!”
முத்து சட்டென்று அவளுடைய கையை விட்டான்.
“சாரிங்க.”
“எதுக்கு?”
“இல்ல… கைய பிடிச்சிட்டேனே.”
தாரணி அவனைப் பார்த்தாள்.
“நான் விழுந்திருக்க மாட்டேன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? பிடிச்சது நல்லதுதானே!”
அவன் அவளைப் பார்த்தான்.
அவள் சொன்னது சாதாரணமான வார்த்தைகள்தான். ஆனால் அவனுடைய மனதில் ஏதோ ஒன்று மெதுவாக அசைந்தது.
“வாங்க. இன்னும் பார்க்க வேண்டிய இடம் இருக்கு,” என்று அவள் பேச்சை மாற்றினாள்.
இருவரும் தொடர்ந்து நடந்தார்கள்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களுக்கு, முத்துவால் தன் உள்ளங்கையில் இருந்த வெப்பத்தை மறக்க முடியவில்லை.
****
கிணற்றடிக்கு வந்ததும் முத்து ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“குடிங்க. வெயில் ஏற ஆரம்பிச்சிடுச்சு.”
“நன்றி.”
தண்ணீர் குடித்துவிட்டு கைகளைக் கழுவிய தாரணி, தன்னுடைய குறிப்பேட்டைத் திறந்தாள்.
“முத்து, உங்க சொட்டுநீர்ப் பாசன மானியம் சம்பந்தமா எங்க அலுவலகத்துல ஒரு பதிவு இருக்கு.”
அவன் முகம் மாறியது.
“அதைப் பத்தி விசாரிச்சிருந்தீங்களே?”
“ஆமாங்க. போன வருஷம் விசாரிச்சேன். ஆனா அதுக்கு முதல்ல நம்மளும் கொஞ்சம் பணம் போடணும். குழாய், வடிகட்டி, மற்ற செலவுகள்னு எல்லாம் சேரும்போது பெரிய தொகையா வந்துச்சு. அப்போ முடியல.”
“எவ்வளவு தேவைப்படும்?”
முத்து தொகையைச் சொன்னான்.
தாரணி அதைத் தன்னுடைய குறிப்பேட்டில் எழுதிக்கொண்டாள்.
“உங்க நிலத்துக்கு இது நல்ல பலன் தரும். குறிப்பாகக் கிணத்துத் தண்ணீர் குறையும்போது, தண்ணீரைச் சிக்கனமாப் பயன்படுத்த முடியும். மானியத்துக்கான வாய்ப்பும் இருக்கு.”
“தெரியுங்க. அதனாலதான் போன வருஷம் முயற்சி பண்ணேன்.”
“அப்புறம் ஏன் தொடரல?”
முத்து ஒரு நொடி அமைதியாக இருந்தான்.
“வீட்டுல சில செலவுகள் வந்துடுச்சு. அதை விட்டுட்டு இதைப் பார்க்க முடியல.”
அவன் அதைச் சாதாரணமாகச் சொன்னாலும், தாரணிக்கு அதன் பின்னால் இருந்த சுமை புரிந்தது.
“முத்து, வீட்டுச் செலவுகள் எப்பவும் இருக்கும். அதை நானும் புரிஞ்சுக்கிறேன். ஆனா, அதுக்காக உங்களுக்குன்னு இருக்கிற எல்லா விஷயத்தையும் விட்டுக்கொடுக்கணும்னு இல்லையே!”
அவன் அவளைப் பார்த்தான்.
அவள் அறிவுரை சொல்வதுபோல் பேசவில்லை. அவன் செய்யும் தியாகத்தைப் பாராட்டுவதற்காகவும் பேசவில்லை.
அவன் தனக்காகவும் கொஞ்சம் யோசிக்க வேண்டும் என்று உண்மையாகவே நினைப்பவளாகத் தெரிந்தாள்.
“பார்க்கலாம்,” என்றான் முத்து.
“எல்லாத்துக்கும் இதே பதில்தானா?”
“வேற என்ன சொல்லணும்?”
“முடியுமா, முடியாதா? அதையாவது சொல்லலாமே!”
“முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்.”
“அதுவே பரவாயில்லை.”
தாரணி குறிப்பேட்டை மூடினாள்.
அப்போது முத்து ஏதோ நினைத்தவனாக அவளை அழைத்தான்.
“தாரணி…”
அவள் திரும்பிப் பார்த்தாள்.
அவளைப் பெயர் சொல்லி அழைத்தது அவனுக்கே புதிதாக இருந்தது. வழக்கமாகப் பேசுவதுபோல “நீங்க” என்று தொடங்கியிருந்தால் அவனுக்குச் சுலபமாக இருந்திருக்கும்.
ஆனால் இப்போது அவன் சொல்ல வேண்டிய விஷயம் அதைவிட முக்கியமாக இருந்தது.
“அன்னிக்கு நீங்க ஒண்ணு கேட்டீங்களே…”
“என்ன கேட்டேன்?”
“எனக்கு என்ன பிடிக்கும்னு.”
தாரணி அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“ம்… கேட்டேன்.”
முத்து தன் விரல்களை ஒன்றோடு ஒன்று தேய்த்துக்கொண்டான்.
“அதைப் பத்தி நான் யோசிச்சேன்.”
தாரணியின் முகத்தில் ஆர்வம் தெரிந்தது.
“அப்படியா? சொல்லுங்க.”
அவன் உடனே பதில் சொல்லவில்லை. அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதற்கே அவனுக்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டிருந்தன.
“உண்மையா சொல்லணும்னா, எனக்கு என்ன பிடிக்கும்னு இதுவரைக்கும் யாரும் கேட்டதில்ல. அதனாலதான் அன்னிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல.”
தாரணி எதுவும் பேசாமல் அவனைக் கவனித்தாள்.
“இப்போ யோசிச்சுப் பார்த்தப்போ, ஒரு விஷயம் தோணுச்சு. காலையில எல்லாரும் எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி மாடுகளுக்குத் தீவனம் வெச்சுட்டு வயலுக்கு வருவேன். அந்த நேரத்துல வயல்ல நானும் இந்த மண்ணும் மட்டும்தான் இருப்போம்.”
அவன் பார்வை நெற்பயிர்களின் மீது படிந்தது.
“சூரியன் மெதுவா மேல வரும்போது, முதல் வெயில் பயிர் மேல விழும். காத்து வீசும். அந்த நேரத்துல எதையும் நினைக்க வேண்டியிருக்காது. யாருக்காகவும் ஓட வேண்டியிருக்காது. கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்கலாம்.”
அவன் மெதுவாகப் புன்னகைத்தான்.
“அந்த நேரம் எனக்குப் பிடிக்கும்.”
தாரணி அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவனுடைய பதில் பெரிய கனவைப் பற்றியதல்ல. பணம், புகழ், வசதி என்று எதுவும் இல்லை.
யாரும் எதுவும் கேட்காத, யாருக்காகவும் எதையும் செய்ய வேண்டியிராத ஒரு சிறிய நேரம்.
அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கென்று மிஞ்சியிருந்த ஒரே நேரம் அதுதானோ?
அந்த எண்ணம் அவளுடைய மனதை ஏதோ செய்தது.
“நல்ல பதில், முத்து,” என்றாள் மெதுவாக.
அவன் அவளைப் பார்த்தான்.
“உண்மையாவா?”
“ஆமாம். ஆனா இது முதல் பதில்தான்.”
அவள் புன்னகையுடன் சொன்னாள்.
“மத்த விஷயங்களையும் யோசிச்சு வைங்க. அடுத்த தடவை கேட்கிறேன்.”
முத்துவின் முகத்தில் சிறிய புன்னகை மலர்ந்தது.
“சரி.”
அந்தச் சின்னச் சந்திப்பில் அவனுக்குள் ஏதோ மாறியிருந்தது.
தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி ஒருவரிடம் இவ்வளவு இயல்பாகப் பேசியதே இல்லை. அதிலும், தன்னுடைய ஆசையைப் பற்றிப் பேசும்போது அவள் அதைச் சிறிய விஷயமாக நினைக்கவில்லை.
அவன் சொன்னதைக் கவனமாகக் கேட்டாள்.
அது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது.
—
தாரணி தன்னுடைய வாகனத்தை நோக்கி நடந்தாள். முத்து அவளை வழியனுப்பப் பின்னால் வந்தான்.
வண்டியில் ஏறுவதற்கு முன் அவள் திரும்பினாள்.
“முத்து, உங்க வயல் நல்லா இருக்கு.”
“நன்றி.”
“அதுவும், நீங்க ஒவ்வொரு விஷயத்தையும் கவனிக்கிற விதம் நல்லா இருக்கு. உங்க வயலைப் பார்த்ததும் உங்க உழைப்பு புரியுது.”
முத்து என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.
அவன் உழைப்பைப் பற்றி வீட்டில் பேசுவார்கள். ஆனால் அந்த உழைப்பை யாராவது இப்படிக் கவனித்துப் பாராட்டுவது அவனுக்குப் புதிதாக இருந்தது.
“நான் ஒண்ணும் பெருசா செய்யலீங்க. என்ன செய்யணுமோ அதைத்தான் செய்றேன்.”
“அதுதான் முக்கியம்.”
தாரணி புன்னகைத்தாள்.
“சரி, நான் கிளம்புறேன். மறுபடியும் சந்திப்போம்.”
அவள் வாகனத்தை இயக்கிப் புறப்பட்டாள்.
முத்து அங்கேயே நின்று, வாகனம் சாலையில் திரும்பி மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.
பிறகு தன்னுடைய உள்ளங்கையைப் பார்த்தான்.
அவள் கையைப் பிடித்தபோது ஏற்பட்ட அந்தச் சிறிய பதற்றம் இன்னும் மனதில் இருந்தது.
என்னடா முத்து, சும்மா நின்னுட்டு இருக்க? வேலை இல்லையா?
தன்னைத்தானே கேட்டுக்கொண்டு வயலை நோக்கித் திரும்பினான்.
ஆனால் முகத்தில் இருந்த புன்னகையை மட்டும் அவனால் மறைக்க முடியவில்லை.
வரப்பின் மறுபுறத்திலிருந்து வந்த மாணிக்கம் சித்தப்பா அவனைப் பார்த்தார்.
“என்னடா முத்து, இன்னைக்கு முகமே பிரகாசமா இருக்கு!”
முத்து உடனே முகத்தைச் சீராக்கிக்கொண்டான்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சித்தப்பா.”
“அப்படியா? சரி, சரி.”
மாணிக்கம் அவனைக் கடந்து சென்றார். இரண்டு அடி நடந்ததும் திரும்பிப் பார்த்தார்.
“அந்த அதிகாரி யாரு?”
“வேளாண்மைத் துறையிலிருந்து வந்திருந்தாங்க.”
“ஓஹோ!”
மாணிக்கத்தின் முகத்தில் குறும்புப் புன்னகை மலர்ந்தது.
“வேளாண்மைத் துறைதான். வேற எதுவும் இல்ல!”
முத்து பதற்றமாகச் சொன்னான்.
மாணிக்கம் சிரித்துவிட்டார்.
“நான் என்ன கேட்டேன்? நீ ஏன் இவ்வளவு விளக்கம் சொல்ற?”
“சித்தப்பா!”
“சரி, சரி. நான் எதுவும் கேட்கல!”
அவர் சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.
முத்து தலையைத் தேய்த்துக்கொண்டு மீண்டும் வேலையில் இறங்கினான்.
அன்று மட்டும் அடிக்கடி அவன் பார்வை அந்தக் கிணற்றடிக்குச் சென்றது.
—
அடுத்த இரண்டு நாட்களும் வழக்கம்போலக் கடந்தன.
காலையில் மாடுகள், வயல் வேலை, வீட்டுச் செலவுகள் என்று முத்துவுக்கு ஓய்வெடுக்க நேரமில்லை.
ஆனாலும் வேலைக்கு நடுவே, தாரணி கேட்ட கேள்வியும் அவள் சிரித்த முகமும் நினைவுக்கு வந்துவிடும்.
அடுத்த தடவை கேட்கிறேன்.
அவள் மீண்டும் வருவாளா?
அல்லது அவளுடைய வேலை முடிந்துவிட்டதால் இனிமேல் சந்திக்க வாய்ப்பிருக்காதா?
அவன் தன்னுடைய மனதைத் தானே கண்டித்துக்கொண்டான்.
எதுக்கு இப்பவே இவ்வளவு யோசிக்கிற? முதல்ல வேலையைப் பாரு!
மூன்றாம் நாள் காலை, முத்து மாட்டுத் தொழுவத்தில் வைக்கோலை எடுத்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் வாசலில் சுப்பையா தரகரின் குரல் கேட்டது.
“கருப்பையா அண்ணே! நல்ல சேதி! பூவளூர்ல இருந்து செய்தி வந்திருக்கு!”
அந்தக் குரலில் இருந்த உற்சாகத்தைக் கேட்டதும் வீட்டிலிருந்தவர்கள் வெளியே வந்தார்கள்.
“என்ன சுப்பையா?” என்று கேட்டார் கருப்பையா.
“பொண்ணுக்குச் சம்மதம்னு சொல்லிட்டாங்க அண்ணே!”
சிவகாமியின் கையிலிருந்த கரண்டி கீழே விழுந்தது.
“என்ன சொல்றீங்க?”
“ஆமாம்மா! தாரணி வீட்டுல எல்லாருக்கும் சம்மதம். பொண்ணுக்கும் முத்துவைப் பிடிச்சிருக்காம்!”
கவிதா சந்தோஷத்தில் துள்ளினாள்.
“அண்ணா! அண்ணா! உனக்குக் கல்யாணம் நடக்கப் போகுது!”
கருப்பையா கைகூப்பி வானத்தைப் பார்த்தார்.
“எல்லாம் அந்தக் கடவுள் செயல்!”
சிவகாமியின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீர் வழிந்தது.
அந்தச் சத்தத்தைக் கேட்ட முத்து தொழுவத்தின் வாசலில் அப்படியே நின்றுவிட்டான்.
அவன் கையிலிருந்த வைக்கோல் கீழே நழுவியது.
தாரணிக்குச் சம்மதமா?
அவள் தன்னை ஏற்றுக்கொள்வாளா என்று அவன் வெளிப்படையாக யோசித்ததே இல்லை. யோசிக்கத் துணியவில்லை என்பதுதான் உண்மை.
தன்னுடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டுமென்று ஆசைப்படுவதற்கே அவன் பழக்கப்படவில்லை.
ஆனால் இப்போது…
அவள் சம்மதம் சொல்லியிருக்கிறாள்.
அந்தச் செய்தியை நம்ப முடியாமல் அவன் அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.
“முத்து!”
சிவகாமியின் குரல் கேட்டதும் அவன் திரும்பினான்.
“என்னடா அங்கேயே நிக்கிற? இங்கே வா!”
“அம்மா… நிஜமாவே அவங்க சம்மதம் சொல்லிட்டாங்களா?”
சிவகாமி அவன் கன்னத்தைத் தடவினாள்.
“ஆமாடா! உன்னைப் பிடிச்சிருக்காம்!”
முத்து எதுவும் பேசவில்லை.
அவன் பார்வை தன்னுடைய உள்ளங்கைக்குச் சென்றது. இன்னும் சில நாட்களுக்கு முன்பு, தன் வாழ்க்கையில் தனக்குப் பிடித்தது என்னவென்றே தெரியாமல் நின்றவன் அவன்.
இன்று, தன்னுடைய வாழ்க்கையில் இன்னொருவர் வருவதற்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார்.
அந்த எண்ணம் அவனுக்குள் மெதுவாக மகிழ்ச்சியைப் பரப்பியது.
அவன் முகத்தில் மலர்ந்த புன்னகையைப் பார்த்த மாணிக்கம் சித்தப்பா தூரத்திலிருந்து தலையசைத்தார்.
முத்துவின் வாழ்க்கையில் எல்லாமே ஒரே நாளில் மாறிவிடவில்லை.
குடும்பத்தின் பொறுப்புகள் இன்னும் அவன் தோளில்தான் இருந்தன. அவன் கனவுகளும் இன்னும் நிறைவேறாமல் காத்திருந்தன.
ஆனால் அவனுடைய வாழ்க்கையில் முதன்முறையாக, அவன் மட்டும் விரும்புவதற்காக அல்லாமல், அவனை விரும்பி ஒருத்தி அவனுடைய வாழ்க்கைக்குள் வரச் சம்மதித்திருந்தாள்.
அந்தச் செய்தியே அவனுக்கு அந்த நாளின் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருந்தது.
தொடரும்…