திருமணத்துக்கு முந்தைய இரவு செங்கமலப்பட்டியில் யாருக்கும் சரியாகத் தூக்கம் வரவில்லை.
முத்துவின் வீட்டில் காலையிலேயே திருமணம் என்பதால், முற்றத்தில் போடப்பட்டிருந்த பந்தலில் உறவினர்களின் நடமாட்டம் ஓயாமல் இருந்தது. வாசலில் கட்டப்பட்ட வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. சமையல்காரர் பெரிய அண்டாக்களில் உணவு தயாரித்துக்கொண்டிருக்க, அடுப்பிலிருந்து எழுந்த நெய் மணம் தெரு முழுவதும் பரவியிருந்தது.
அந்தப் பரபரப்புக்கு நடுவில் முத்து மட்டும் ஓய்வில்லாமல் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.
பந்தல் கம்பங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான். பாத்திரங்கள் எண்ணப்பட்டுவிட்டதா என்று விசாரித்தான். வாழை இலைகள் வந்ததும் அவற்றைக் கணக்கிட்டான். மாலை வாங்க வேண்டிய கடையிலிருந்து ஆள் வந்ததும் பணத்தைக் கொடுத்தான்.
அந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று யாரும் கேட்கவில்லை.
ஆனால், அது எங்கிருந்து வந்தது என்பது முத்துவுக்கு நன்றாகவே தெரியும்.
சொட்டுநீர்ப் பாசனத்துக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த பணம் முழுவதும் திருமணச் செலவுக்காகக் கரைந்துவிட்டது. அரவிந்தனுக்குக் கொடுத்த எண்பதாயிரத்துக்காக ஏற்கெனவே பழனிச்சாமியிடம் கடன் வாங்கியிருந்தான். இப்போது திருமணத்துக்காக இன்னொரு கடனையும் வாங்கியிருந்தான்.
கையெழுத்துப் போடும்போது அவனுக்குப் பெரிதாக எந்தத் தயக்கமும் வரவில்லை. வீட்டில் யாருக்காவது தேவை என்றால் பணத்தை ஏற்பாடு செய்வது அவனுக்குப் பழகிப்போன ஒன்றுதான்.
“ஏண்டா முத்து, இன்னும் தூங்கலையா?”
குரல் கேட்டு திரும்பினான். மாணிக்கம் சித்தப்பா அவனருகில் வந்து நின்றிருந்தார்.
“தூக்கம் வரலீங்க சித்தப்பா.”
“வரவும் வராது. நானும் என் கல்யாணத்துக்கு முந்தின நாள் இப்படித்தான் பந்தல் கம்பத்தைப் பிடிச்சுக்கிட்டு அலைஞ்சேன்.”
“அப்புறம் தூங்கினீங்களா?”
“கல்யாணம் முடிஞ்சதுக்குப் பிறகுதான்!” என்று அவர் சிரித்தார்.
முத்துவும் சிரித்தான்.
சிறிது நேரம் அமைதியாக நின்றவர், அவன் தோளில் தட்டிக்கொடுத்தார்.
“நீ எதுக்கும் கவலைப்படாதடா. அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. உன்னைப் புரிஞ்சுப்பா. இத்தனை நாளா எல்லாருக்காகவும் ஓடிக்கிட்டே இருந்த உனக்கு, இனிமேலாவது உன்னைப் புரிஞ்சுக்கிற ஒருத்தி கிடைக்கணும்.”
முத்து எதுவும் பேசவில்லை. ஆனால் சித்தப்பாவின் வார்த்தைகள் அவனுக்குள் ஏதோ ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின.
—
திருமண நாள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்துவிட்டான் முத்து.
வழக்கம்போல முதலில் மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றான். மாடுகளுக்குத் தீவனம் வைத்துவிட்டு, பாலைக் கறந்தான். கடைசியாக காரியின் அருகில் சென்று அதன் கழுத்தைத் தடவினான்.
“இன்னிக்கு எனக்குக் கல்யாணம் கண்ணு. இனிமேல் வீட்டுக்கு இன்னொருத்தி வரப்போறா. நீ எப்படி நடந்துக்கப் போறியோ தெரியலையே!”
அவன் சொன்னது புரிந்ததுபோல காரி வாலை ஆட்டியது.
அதைப் பார்த்து முத்து சிரித்தான்.
இத்தனை வருடங்களாக மற்றவர்களுக்காகவே வாழ்ந்தவனுக்கு, இன்று தனக்கென்று ஒரு புதிய வாழ்க்கை தொடங்கப்போகிறது என்ற எண்ணம் புதிதாக இருந்தது.
சிறிது நேரத்தில் குளித்து, புதிய வேட்டி சட்டையை அணிந்துகொண்டு மணமேடைக்குப் புறப்பட்டான்.
மண்டபத்தில் நாதஸ்வர இசை முழங்கிக்கொண்டிருந்தது. உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து அமர்ந்துகொண்டிருந்தனர்.
வாசலில் நின்றிருந்த வேலுச்சாமி மாமா, வருபவர்களையெல்லாம் வரவேற்றுக்கொண்டிருந்தார்.
“வாங்க, வாங்க! எல்லாம் எங்க ஏற்பாடுதான். என் மருமகனோட கல்யாணம்னா சும்மாவா?” என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவரைப் பாராட்டியவர்களிடம் முத்து எதுவும் பேசவில்லை. அமைதியாகத் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
முதல் நாள் இரவே வந்திருந்த அரவிந்தன், பட்டுவேட்டியில் பளிச்சென்று இருந்தான். அண்ணனைப் பார்த்ததும் அருகில் வந்து கட்டிக்கொண்டான்.
“அண்ணா, இன்னிக்கு நீ ஹீரோ மாதிரி இருக்கே!”
“நீயும் நல்லா இருக்கடா,” என்று முத்து அவன் தோளில் தட்டினான்.
அந்த நிமிடம் அவன் கண்களில் லேசாக ஈரம் படர்ந்தது. தம்பி அருகில் இருப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அப்போது ராமலிங்கம் அவனருகில் வந்தார். முத்துவின் தோளில் மெதுவாகக் கை வைத்தவர்,
“தம்பி, என் மகளை உங்க கையில ஒப்படைக்கிறேன்னு நான் சொல்லமாட்டேன். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கையும், விருப்பங்களும் இருக்கு. அவளே அவளுக்கான முடிவுகளை எடுக்கத் தெரிஞ்சவ. ஆனா, அவ உங்க பக்கத்துல நிக்கிறதுக்கு நீங்க இடம் கொடுத்தா போதும்,” என்றார்.
அந்த வார்த்தைகளைக் கேட்ட முத்து அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“நிச்சயமா மாமா,” என்றான் உறுதியான குரலில்.
அந்த நேரத்தில் கவிதா மணப்பெண்ணின் அறையிலிருந்து ஓடிவந்தாள்.
“அண்ணா! அண்ணி ரொம்ப அழகா இருக்காங்க!”
அண்ணி என்ற வார்த்தை முத்துவின் காதில் விழுந்ததும் அவன் முகத்தில் தானாகவே ஒரு புன்னகை மலர்ந்தது.
அதேநேரம், அறைக்குள் தாரணி அருகில் அமர்ந்திருந்த வள்ளியம்மாள் அவளுடைய கைகளைப் பற்றிக் கொண்டிருந்தார்.
“ராசாத்தி, என் பேரன் கொஞ்சம் வார்த்தை குறைவானவன். ஆனா மனசுக்குள்ள நிறைய வச்சிருப்பான். அவன் சொல்லத் தெரியாததைக்கூட நீ கொஞ்சம் கவனிச்சுப் புரிஞ்சுக்கணும்.”
“நிச்சயமா பாட்டி,” என்றாள் தாரணி.
““முத்து எப்பவுமே அப்படித்தான் மா. வீட்டுல எல்லாருக்கும் என்ன வேணும்னு பார்த்துப் பார்த்துச் செய்வான். எல்லாரும் சாப்பிட்ட பிறகுதான் அவன் சாப்பிடுவான். அவனுக்காக யாரும் எதையும் எதிர்பார்க்காமச் செய்யணும்னு அவன் நினைச்சுப் பார்த்திருக்க மாட்டான். நீ வந்த பிறகாவது அவனுக்கும் கொஞ்சம் அன்பையும் அக்கறையையும் கொடு கண்ணு.”
பாட்டி சிரித்தபடி சொன்னாலும், அந்த வார்த்தைகளில் இருந்த வலியைத் தாரணி உணர்ந்தாள். அவள் அமைதியாகத் தலையாட்டினாள்.
சிறிது நேரத்தில் மணப்பெண் அலங்காரத்துடன் தாரணி மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள்.
மஞ்சள் நிறப் பட்டுப்புடவை, நெற்றியில் சந்தனப் பொட்டு, அளவான நகைகள் என அழகாக இருந்தாள். அவளுடைய முகத்தில் பதற்றமும், அதே நேரத்தில் ஒரு தெளிவும் தெரிந்தது.
முத்துவைப் பார்த்ததும் அவள் லேசாகப் புன்னகைத்தாள்.
அந்தப் புன்னகையைப் பார்த்த முத்துவின் இதயம் ஒரு நொடி வேகமாகத் துடித்தது.
ஐயர் மந்திரங்களைச் சொல்லி முடித்து தாலியை முத்துவிடம் கொடுத்தார்.
அதை வாங்கிய அவனுடைய விரல்கள் லேசாக நடுங்கின. தாலியைக் கட்டும்போது முடிச்சு சரியாக வராமல் தடுமாறினான்.
கூட்டத்தில் சிலர் சிரிக்க, தாரணி அவனைப் பார்த்து மெல்லிய குரலில்,
“மெதுவா… அவசரம் எதுவும் இல்ல,” என்றாள்.
அவளுடைய வார்த்தைகள் அவனுக்குக் கொஞ்சம் தைரியம் கொடுத்தன. ஆழமாக மூச்சை இழுத்து முதல் முடிச்சைப் போட்டான்.
மலர்கள் அவர்கள் மீது தூவப்பட்டன.
அப்போது கூட்டத்தின் பின்னாலிருந்து கார்த்திக்கின் குரல் கேட்டது.
“அத்தான்! மாடு கட்டுறதைவிட இது கொஞ்சம் கஷ்டமா இருக்கா?”
அரங்கமே சிரிப்பில் நிறைந்தது.
தாரணி தலைகுனிந்து சிரிக்க, முத்துவும் அவளைப் பார்த்துச் சிரித்தான். இருவரின் பார்வையும் ஒரு கணம் சந்தித்துக் கொண்டது.
அந்தச் சிறிய சிரிப்பு அவர்களுக்குள் இருந்த தயக்கத்தைச் சற்றே குறைத்தது.
****
திருமணச் சடங்குகள் முடிந்ததும் உறவினர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
பாக்கியம் அத்தை முத்துவின் கன்னத்தைக் கிள்ளியபடி,
“நம்ம குடும்பத்துக்கே பெருமைடா! நல்ல இடம், நல்லா படிச்ச பொண்ணு. சிவகாமி கொடுத்து வெச்சவ!” என்றாள்.
அதைத் தொடர்ந்து வேலுச்சாமி மாமா ஒலிபெருக்கியின் முன் நின்றார்.
“இந்தத் திருமணத்தை இவ்வளவு சிறப்பாக நடத்துறதுக்கு குடும்பத்துல எல்லாரும் அவங்கவங்க பங்குக்கு உழைச்சிருக்கோம். இன்னிக்கு நம்ம குடும்பத்துக்கு ரொம்ப சந்தோஷமான நாள். இந்த ஊரே நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசணும்!” என்று பெருமையாகப் பேசினார்.
கூட்டத்தினர் கைதட்டினர்.
கருப்பையா பெருமையுடன் தலையசைத்தார். சிவகாமியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். அரவிந்தனும் மகிழ்ச்சியுடன் கைதட்டினான்.
ஆனால் முத்து மட்டும் மண்டபத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு விருந்தினர்களுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.
இந்தத் திருமணத்துக்காக அவன் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும். பல நாட்களாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தைச் செலவழித்ததோடு, மீதித் தேவைகளுக்காகக் கடனும் வாங்கியிருந்தான். திருமண ஏற்பாடுகள் எதிலும் குறை இருக்கக்கூடாது என்பதற்காக ஓடியாடி உழைத்திருந்தான்.
ஆனால் இப்போது அந்தத் திருமணத்தைப் பற்றிப் பேசும்போது, அவனுடைய உழைப்பைப் பற்றி யாரும் தனியாகக் குறிப்பிடவில்லை.
அதற்காக அவன் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தன் குடும்பத்தின் மகிழ்ச்சிதான் அவனுக்கு முக்கியம். இருந்தாலும், இத்தனைக்கும் பின்னால் நின்றிருந்த அவனுடைய உழைப்பு மட்டும் யாருடைய கவனத்திலும் படாமல் போனது ஒரு சிறிய நெருடலை ஏற்படுத்தத்தான் செய்தது.
மணப்பெண் இருக்கையில் அமர்ந்திருந்த தாரணி இதையெல்லாம் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
ஒருபுறம் திருமணத்தின் சிறப்பைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த உறவினர்கள்; மறுபுறம் அந்தச் சிறப்புக்காகத் தன்னுடைய சேமிப்பையும் உழைப்பையும் கொடுத்துவிட்டு, எதையும் வெளிக்காட்டாமல் வேலை பார்த்துக்கொண்டிருந்த முத்து.
அவளுடைய பார்வை அவனை விட்டுத் திரும்பவில்லை.
இந்தத் திருமணத்தில் மணமகனாக அமர்ந்து வாழ்த்துகளைப் பெற வேண்டியவன், இன்னமும் எல்லோருடைய வேலையையும் பார்த்துக்கொண்டு நிற்கிறானே!
என்று நினைத்தவளின் மனதில் முத்துவைப் பற்றிய மதிப்பு இன்னும் கொஞ்சம் உயர்ந்தது.
***
இரவு மெல்லத் தன் சிறகுகளை விரித்திருந்தது.
முத்துவின் அறை முழுவதும் மல்லிகைப்பூவின் நறுமணம் நிறைந்திருந்தது. பழைய மரக்கட்டிலில் புதிதாக விரிக்கப்பட்டிருந்த விரிப்பு, ஜன்னல் வழியாக உள்ளே விழுந்த நிலவொளி என அந்த அறையே புதுமணத் தம்பதிகளின் முதல் இரவை அமைதியாக வரவேற்றுக் கொண்டிருந்தது.
தாரணி கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். முத்து மட்டும் கதவருகே நின்றபடி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுடைய தயக்கத்தைப் பார்த்த தாரணி உதட்டுக்குள் சிரித்தாள்.
“என்னங்க… வாசல்ல நின்னுட்டு இருக்கிற மாதிரி அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க? இது உங்க அறைதானே?”
“அது… ஆமாம். ஆனா…” என்று இழுத்தான்.
“ஆனா என்ன?”
“இனிமே இந்த அறையில நான் மட்டும் இல்லையே…” என்றான் மெல்லிய புன்னகையுடன்.
அவன் சொன்ன விதத்தைக் கேட்ட தாரணியின் கன்னங்கள் லேசாகச் சிவந்தன.
“அதுக்காக வெளியே நின்னுட்டே இருக்கப் போறீங்களா? வாங்க, உட்காருங்க!”
அவளுடைய அழைப்புக்குப் பிறகுதான் முத்து மெதுவாக வந்து கட்டிலின் மறுமுனையில் அமர்ந்தான்.
இருவருக்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளி இருந்தது. ஆனால் சொல்லப்படாத பல எண்ணங்கள் அந்த இடைவெளியை நிரப்பியிருந்தன.
“உங்களுக்கு ஒண்ணு கொடுக்கணும்.”
“என்னது?”
அவன் கையில் ஒரு சிறிய மண் தொட்டி இருந்தது. அதில் பச்சைப் பசேலென்று ஒரு மல்லிகைச் செடி வளர்ந்திருந்தது.
அதைப் பார்த்த தாரணியின் முகம் மலர்ந்தது.
“அட! மல்லிகைச் செடியா?”
“ம்… நம்ம வயல்ல இருந்த செடிதான். அதுல இருந்து ஒரு கன்றை எடுத்து தனியா நட்டு வெச்சேன். உங்களுக்குக் கொடுக்கணும்னு.”
“எனக்காகவா?”
“ஆமா..கல்யாணத்துக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு ரொம்ப யோசிச்சேன். கடையில கிடைக்கிற பொருளை வாங்கிக் கொடுக்கிறதைவிட, நம்ம கையால வளர்க்கிற ஒரு பொருளைக் கொடுக்கலாம்னு தோணுச்சு.”
தாரணி அந்தத் தொட்டியை ஆசையோடு வாங்கிக்கொண்டாள்.
“ரொம்ப அழகா இருக்கு… ஆனா இதை எனக்குக் கொடுக்கிறதுக்கு என்ன காரணம்?”
முத்து அந்தச் செடியைப் பார்த்தபடி புன்னகைத்தான்.
“மல்லிகைச் செடி கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தாதான் நல்லா வளரும். தினமும் தண்ணி ஊத்தணும். வெயில், மழையில இருந்து பாதுகாக்கணும். அதேமாதிரிதான் சில உறவுகளும்… அன்பு காட்டி, விட்டுக்கொடுத்து வளர்க்கணும். அதான் இதை உங்களுக்குக் கொடுக்கணும்னு தோணுச்சு.”
அவன் சொன்னதைக் கேட்ட தாரணி சில நொடிகள் அவனையே பார்த்தாள்.
“அப்போ இந்தச் செடியை வளர்க்கிற பொறுப்பு எனக்கா?”
“இல்ல… நமக்கு!”
அந்த ஒற்றை வார்த்தை அவளுக்குள் ஏதோ ஒரு இனிமையை ஏற்படுத்தியது.
அவள் செடியை ஜன்னலோரம் வைத்துவிட்டு அவனருகே வந்து அமர்ந்தாள்.
“சரி… இந்தச் செடி நல்லா வளர்ந்தா என்ன கிடைக்கும்?”
“நிறைய பூ பூக்கும்.”
“அப்போ அந்தப் பூவை யாருக்குக் கொடுப்பீங்க?”
முத்து அவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான்.
“அந்தப் பூவை விட அழகான ஒருத்தி என் பக்கத்துல இருக்கும்போது, வேற யாருக்குக் கொடுக்கப் போறேன்?”
“ஐயோ…!” என்று தாரணி வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
அவளுடைய வெட்கத்தை ரசித்தவன், சிறிது நேரம் கழித்து தயக்கத்துடன் பேசத் தொடங்கினான்.
“தாரணி… உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்.”
“இவ்வளவு நேரம் பேசினதுக்குப் பிறகும் இன்னும் அனுமதி கேட்கணுமா? கேளுங்க!”
“நிஜமாவே என்னைப் பிடிச்சுத்தான் இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சீங்களா?”
அவளுடைய முகத்திலிருந்த புன்னகை மெல்ல மறைந்தது.
“ஏன் இப்படிக் கேட்கிறீங்க?”
“இல்ல… நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. அரசாங்க வேலை பார்க்கிறீங்க. உங்களுக்குப் படிச்ச, நல்ல வேலையில இருக்கிற எவ்வளவோ மாப்பிள்ளைகள் கிடைச்சிருப்பாங்க. ஆனா நான்… பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். விவசாயம்தான் என் வாழ்க்கை. உங்களோட ஒப்பிட்டுப் பார்த்தா என்னால சில விஷயங்கள்ல ஈடுகொடுக்க முடியுமான்னு தெரியல.”
அவன் குரலில் இருந்த தாழ்வு மனப்பான்மை தாரணிக்குப் புரிந்தது.
“முத்து… நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?”
“கேளுங்க.”
“உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா?”
அவன் ஒரு நொடியும் யோசிக்காமல், “ரொம்பப் பிடிச்சிருக்கு!” என்றான்.
“எதுக்குப் பிடிச்சிருக்கு?”
“அது… நீங்க நல்லா படிச்சிருக்கீங்க. நல்ல குணம். பேசுற விதம்… எல்லாமே பிடிச்சிருக்கு.”
அவள் சிரித்தாள்.
“நான் படிச்சிருக்கேன்னு மட்டும் உங்களுக்குப் பிடிக்கலையே? என்னோட குணம், என்னோட பேச்சு, என்னோட மனசு இதையெல்லாம்தானே பார்த்தீங்க?”
“ஆமாம்.”
“அதே மாதிரிதான் நானும் உங்களைப் பார்த்தேன். உங்ககிட்ட எவ்வளவு படிப்பு இருக்குன்னு மட்டும் பார்க்கல. உங்க மனசுல எவ்வளவு நல்ல எண்ணம் இருக்குன்னுதான் பார்த்தேன்.”
“ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோங்க. படிப்பு நமக்கு அறிவைக் கொடுக்கும். வேலை நமக்கு வருமானத்தைக் கொடுக்கும். ஆனா ஒரு பெண்ணுக்கு அவளோட கணவன்கிட்ட இருந்து கிடைக்க வேண்டியது அன்பு, மரியாதை, நம்பிக்கை. அது உங்ககிட்ட இருக்கிறதா எனக்குத் தோணுச்சு.”
அவளுடைய பதிலைக் கேட்ட முத்துவின் கண்களில் ஒரு சிறிய நெகிழ்ச்சி.
“எல்லாரும் என்கிட்ட என்னால என்ன செய்ய முடியும்னுதான் கேட்டிருக்காங்க. ஆனா நீங்க மட்டும் நான் எப்படிப்பட்டவனா இருக்கணும்னு கேட்கிறீங்க…” என்றான்.
தாரணி மெதுவாகச் சிரித்தாள்.
“அதான் இனிமே நான் இருக்கேனே! உங்க மனசுல இருக்கிறதைச் சொல்ல ஒரு ஆள் வேணும்னா, அதுக்கு நான் இருக்கேன்.”
“அப்போ ஒரு விஷயம் சொல்றேன்.”
“சொல்லுங்க.”
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா அதை எப்படி வெளிப்படுத்தணும்னு மட்டும் தெரியல.”
தாரணி சிரிப்பை அடக்கிக்கொண்டு, “அதுக்குத்தான் இவ்வளவு அவசரப்பட வேண்டாம். நிதானமா கத்துக்கலாம்!” என்றாள்.
“அப்போ நீங்க சொல்லிக் கொடுப்பீங்களா?”
“என்ன?”
“உங்களைச் சந்தோஷமா வச்சுக்கிறதுக்கு!”
அந்தக் கேள்வியில் இருந்த குழந்தைத்தனமான அன்பு அவளுக்குப் பிடித்திருந்தது.
“அதுக்கெல்லாம் தனியா யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. நான் எப்போ சந்தோஷமா இருக்கேன்னு கவனிச்சாலே போதும்.”
“அப்போ இப்போ நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”
தாரணி அவனைப் பார்த்தாள்.
“ம்… கொஞ்சம்!”
“கொஞ்சம்தானா?”
“இப்போதான் உங்களைப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள முழுசா சந்தோஷம்னு சொல்லிட முடியுமா?”
முத்து சிரித்தான்.
“அப்போ முழுசா சந்தோஷப்பட வைக்கிற வரைக்கும் நான் முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும் போல!”
“அதுதான் நல்ல கணவனுக்கு அழகு!”
இருவரும் சிரித்தார்கள்.
சிறிது நேரம் கழித்து தாரணி அவனைப் பார்த்து,
“சரி, இன்னொரு விஷயம் கேட்கணும்.”
“என்ன?”
“நீங்க தினமும் எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க?”
“நாலு மணிக்கு.”
“நாலு மணிக்கா?!” என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“ஆமாம். மாடு கறக்கணும். வயலுக்குப் போகணும். வேலை நிறைய இருக்கும்.”
“அப்போ என்னை எத்தனை மணிக்கு எழுப்புவீங்க?”
“உங்களை ஏன் எழுப்பணும்?”
“அட! பொண்டாட்டி தூங்குறப்போ புருஷன் மட்டும் எழுந்து வேலைக்குப் போயிடுவாரா?”
“நீங்க தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.”
“அதெல்லாம் முடியாது. நாளையில இருந்து நானும் சீக்கிரம் எழுந்திருக்கப் போறேன்.”
“வேண்டாம் தாரணி. உங்களுக்குப் பழக்கமில்லாத விஷயம். கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம்.”
அவள் அவனைப் பார்த்து மென்மையாகச் சிரித்தாள்.
“நீங்க இத்தனை நாள் தனியா எல்லா வேலையும் பார்த்திருப்பீங்க. இனிமே எல்லாத்தையும் தனியா செய்ய வேண்டியதில்லை. உங்க வாழ்க்கையில நானும் இருக்கேன்ல?”
அந்த வார்த்தைகளைக் கேட்ட முத்து சில நொடிகள் பேசாமல் இருந்தான்.
பிறகு மெல்லிய குரலில்,
“தாரணி… இவ்வளவு நாள் என் வாழ்க்கையில யாராவது என்னோட இருக்கணும்னு ஆசைப்பட்டதே இல்லை. எல்லாத்தையும் நானே பார்த்துக்கிட்டேன். ஆனா இப்போ நீங்க இப்படிப் பேசுறப்போ… ஏதோ ஒரு உணர்வு வருது.”
தாரணி அவனைப் பார்த்தபடி,
“அது என்ன உணர்வுன்னு தெரியுமா?”
“என்ன?”
“இனிமே நீங்க தனியா இல்லங்கிற உணர்வு!”
அவன் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை மலர்ந்தது.
ஜன்னலோரம் இருந்த மல்லிகைச் செடியைப் பார்த்தவன்,
“இந்தச் செடி மட்டும் நல்லா வளர்ந்தா போதாது. நம்ம வாழ்க்கையும் இதுமாதிரி நல்லா வளரணும்,” என்றான்.
தாரணி அவன் சொன்னதைக் கேட்டு மெல்லச் சிரித்தாள்.
“அப்போ ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாமா?”
“என்ன ஒப்பந்தம்?”
நம்ம வாழ்க்கையில ஏதாவது பிரச்சினை வந்தா, அதை நீங்க தனியா மனசுக்குள்ள வச்சுக்கக் கூடாது. என்கிட்ட சொல்லணும். நானும் எதையும் மறைக்க மாட்டேன்.”
முத்து தன் கையை அவள் பக்கம் நீட்டினான்.
“சம்மதம்!”
தாரணி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டாள்.
அந்த நொடியில்தான் அவர்களுக்கிடையே இருந்த சிறிய இடைவெளி கூட மறைந்துபோனது.
அன்று இரவு அவர்களுக்கிடையே காதல் என்ற பெரிய வார்த்தை அதிகமாகப் பேசப்படவில்லை.
ஆனால் ஒரு சிறிய மல்லிகைச் செடியைப் போல, அவர்களுடைய மனதிலும் ஓர் அழகான உறவு மெல்ல வேர்விடத் தொடங்கியிருந்தது.
தொடரும்…