உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 13

அத்தியாயம் 13

“தங்கம்.”

திருவின் குரல் தழதழுப்பாய் அத்தனை நெகிழ்ந்து வெளிவந்தது.

“ச்சூ… அப்பா” என்ற புவி, “கண்ணுலாம் கலங்குது. உங்க அப்பாவை பார்த்ததும்” என காணொளி அழைப்பில் திருவிடம் கேட்டுக் கொண்டிருந்தான் புவி.

மதுராவிடம் அலைபேசி எண் வாங்கியிருந்தான். மதுரா இன்று கோவில் நிகழ்வில் குடும்பமாக எடுத்துக் கொண்ட படத்தை ஸ்டேட்டஸ் வைத்திருக்க, அதனை புவி திருவிற்கு அனுப்பி வைத்தான்.

பார்த்ததும் மகனுக்கு அழைத்துவிட்டார்.

“எல்லாரும் நல்லாயிருக்காங்களா தங்கம்?” எனக் கேட்டவர், “வாசுக்கு கல்யாணம் ஆனது, குமுதாவுக்கு நடந்தது இப்படி எதுவும் தெரிஞ்சிக்காம இருந்துட்டனே!” என்று வருந்தினார்.

“அப்பா… நீங்க இப்படி ஃபீல் பண்ணுவீங்க தெரிஞ்சிருந்தா அனுப்பியே இருக்கமாட்டேன்” என்றான்.

“நான் ஓகே தான் கண்ணா. பல வருஷம் கழிச்சு பார்த்ததும் எமோஷனல் ஆகிட்டேன்” என்ற திரு, “அப்பா எப்படியிருக்கார்?” எனக் கேட்டார்.

“அவருக்கென்ன, இந்த வயசிலும் அய்யனார் மாதிரி இருக்கார்” என்ற புவி, “சித்தப்பா என்னை ஃபைண்ட் பண்ணிட்டார்” என்று பேசிக்கொண்டே, திரு அழைப்பதற்கு முன்பு தான் வீட்டிற்கு வந்தவன் ஆடை மாற்றி முகம் கழுவி வர, வெளியே அழைப்பு மணி ஓசை.

“வன் மினிட் ப்பா” என்று தூவாளையால் முகம் துடைத்தபடி சென்று கதவை திறக்க, திருவாசகம் நின்றிருந்தார்.

உண்மையில் திருவாசகம் தன்னைத் தேடி வருவாரென புவி எதிர்பார்க்கவில்லை. தந்தைக்கு கட்டுப்பட்ட மனிதர். தான் யாரென்று தெரிந்தாலும் எட்ட நின்று பார்ப்பாரேத் தவிர அருகில் வரமாட்டார் என நினைத்திருந்தான்.

புவி ஆச்சரியமாக பார்த்து நின்றது ஒரு நொடி தான்…

“அப்பு…” திருவாசகம் உடைந்து விளித்திட,

“வாங்க சித்தப்பா” என்று அழுத்தமாக உள்ளே அழைத்திருந்தான் புவி.

தனக்கு கடிதம் வைப்பது, அன்றைய இரவில் பார்வை மொழியில் தன்னை ஈர்த்தது, இரண்டும் முல்லை என கண்டுகொண்ட புவி, அவள் யாரென்று தெரிந்ததே நிறைவு என்று அவளைப்பற்றி எதுவும் தெரிந்துகொள்ளவில்லை.

அவளைப்பற்றி, எதற்கு இந்த விளையாட்டு, எதற்கு இந்த விலகல் எல்லாம் அவளாக சொல்ல வேண்டுமென்ற எண்ணம்.

ஆனால் தேனிக்கு மாற்றல் என்றதும், திருவின் முகத்தில் ஆயிரமாயிரம் வலிகள்.

புவி கவனித்து என்னவென்று கேட்க, இதற்கு மேல் மறைக்க ஒன்றுமில்லை என்று திருமூர்த்தி அனைத்தும் கூறினார்.

திரு, அமிர்தம் திருமணம் குடும்பத்தை எதிர்த்து நடந்த காதல் திருமணம். அதனால் குடும்பத்தினர் திருவை ஒதுக்கி வைத்திட்டனர் என்று தான் புவி அறிவான். விரும்பிய பெண்ணை குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்திடாது, திரு அமிர்தத்தை மணந்து கொண்டதில் புவிக்கு தன் தந்தை குறித்து அத்தனை பெருமை.

அதே அளவுக்கு அவர்களை ஒதுக்கி வைத்த குடும்பத்தாரின் மீது கோபம். உறவுகளை நினைத்து தன் பெற்றோர் வருந்தும் போதெல்லாம் புவிக்கு அவர்கள் மீது அதீத கோபம் எழும். அதற்காகவே அவன் முன்பு இருவரும் வருத்தத்தை மறைத்துக் கொள்வர். அது இன்னமும் அதிக கோபத்தை தன் சொந்தங்களின் மீது உண்டாக்கியது புவிக்கு.

புவி உறவுகளை வெறுத்த நிலை தான். இத்தனை வருடத்தில் யாரேனும் ஒருவர் இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள முயன்று பக்கம் வந்திருந்தாலும் சமாதானம் கொண்டிருப்பானோ எண்ணவோ? அவர்கள் நாங்க வேண்டாமென்று தானே இருக்கின்றனர்? அப்போ நமக்கும் அவர்கள் வேண்டாமென்ற புவியை மீறி திரு தன் குடும்பத்தைப் பற்றி எதுவும் அறிந்துகொள்ள முயலவில்லை.

ஆனால் இன்று யாவும் புவியே தெரிந்துகொள்ளும் வகையில் அமைந்திருந்தது.

திருவுக்கு அமிர்தம் வீரமுத்து பார்த்து திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பெண் தான். ஒரே ஊர். இருந்த போதும், திரு தனக்கு என்று அமிர்தத்தை பேசும் வரை அவரின் முகம் கூட சரியாக பார்த்தது இல்லை.

அமிர்தம் ஒரு வகையில் உறவினர். இருந்த போதும் நிச்சயம் முடிந்த பின்னர் தான் முதல் வார்த்தையே பேசியிருப்பார்.

அமிர்தத்துக்கு தந்தை மட்டும் தான், தாயில்லா பிள்ளை தனக்கு மருமகளாக வரவிருக்க அவளை மகளாக தாங்க வேண்டுமென வர்ணம் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திருமணத்துக்கென அமிர்தத்துக்கு தேர்ந்தெடுத்தார்.

திருமணம் அன்று தாலிகட்ட இருந்த சமயம், நடுத்தர வயதுடைய பெண்மணி இளம் பெண் ஒருவருடன் வந்து, “எனக்கு ஒரு வழி சொல்லிட்டு இந்த கல்யாணத்தை நடத்துங்க” என்றிட கூடியிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

என்னவென்று வீரமுத்து விசாரிக்க, அப்பெண் அமிர்தத்தின் தந்தை மாணிக்கத்தின் ஊர் அறியா மனைவி என்றும், அப்பெண் அவர்களின் மகள் என்றும் தெரிந்தது.

வீரமுத்து உட்பட கூடியிருந்தோர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி. மாணிக்கமா இப்படி என்று.

அதுவும் இருபது வயதில் மகள் இருக்க, இது அமிர்தத்தின் அன்னை உயிருடன் இருக்கும் போதே இருந்திருக்கும் தொடர்பென்று எல்லாருக்கும் புரிந்தது.

“இருக்கிற எல்லாத்தையும் இவளுக்கே கொடுத்து கல்யாணம் செய்தாள் நாளைக்கு எம் மவளுக்கு வாழ என்ன கொடுத்து வச்சிருக்கு?” என்று அவர் கேட்டதில் மாணிக்கம் அவரை அடிக்கச் சென்றார்.

வீரமுத்து தான் தடுத்து, “உனக்கு வேண்டியதை அவன் செய்வான். அதுக்கு நான் பொறுப்பு” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அப்பெண்ணும் பெரியவர் சொன்னால் செய்வார் என்ற நம்பிக்கையில் தன் மகளைக் கூட்டிக்கொண்டு வெளியேற, உறவினர்கள் ஆளுக்கு ஒருவிதம் பேசத் தொடங்கியிருந்தனர்.

“பொண்டாட்டி உயிரோடு இருக்கும் போதே இந்த வேலை பார்த்திருக்கானேப்பா?”

“இவன் பொண்ணுக்கு நம்ம பெரியவர் பையன் கேட்குதா?”

“நாளைக்கு நம்ம ஐயாவை ஊர் மதிக்குமா?” என்று ஆளாளுக்குப் பேச, ‘இன்று இந்த திருமணம் நடப்பது சரியில்லை’ என நினைத்த வீரமுத்து, மனதில் நினைத்ததை வாய் வார்த்தையாக சொல்லாது, “எழுந்திரு திரு” என்று மட்டும் சொல்ல, சட்டென்று அமிர்தத்தின் கண்ணில் வழிந்த நீரில் திரு எழாது அமர்ந்திருந்தார்.

வாழ்விலே முதல் முறை தந்தையின் சொல்லை மறுக்கும் விதமாக திரு நடந்துகொள்ள…

ஊருக்கே முதன்மை பேசும் வீரமுத்துவுக்கு ‘தன் மகனே தன்னுடையப் பேச்சினை கேட்காமல் இருக்கும்போது இனி ஊர் தனது சொல்லுக்கு கட்டுப்படுமா?’ என உள்ளுக்குள் எழுந்த கேள்வி,

“நம்ம திரு, ஐயா பேச்சை மதிக்கலையேப்பா” என ஆளாளுக்கு பேசியதில் கோபமாக மாறியது.

அந்த கோபம் வீரமுத்துவின் இயல்பை தொலைத்திருந்தது.

உண்மையில் இந்த கலக்கத்தோடு மன சஞ்சலத்தோடு இந்த திருமணம் நடக்க வேண்டாமென நினைத்தாரே தவிர, அமிர்தத்தை வேண்டாமென நினைக்கவில்லை. இன்று ஒன்று பேசும் ஊர் நாளை மாற்றி பேசும் என்று நன்கு தெரிந்திருந்த வீரமுத்துவுக்கு நல்ல சூழலில் மகனின் திருமணம் நடக்க வேண்டுமென்ற எண்ணம்.

அதனை தெளிவாக எடுத்துரைக்க அவர் தவறியிருந்தார்.

“திரு எழுந்திரு” என்று மீண்டும் அவர் சொல்ல…

“நீங்களா பார்த்து முடிவு செய்த பிறகு தான் இவளை விரும்பினேன். இப்போ விரும்பிய பொண்ணை எப்படிப்பா விடுறது. அதுவும் மணமேடை வரை வந்து” என்று அப்பனுக்கே பாடம் சொல்லிய மகனாக திரு தன்முன் இருந்த மாங்கல்யத்தை எடுத்து அமிர்தத்தின் கழுத்தில் கட்டியிருந்தார்.

தன் பார்வைக்கு கட்டுப்படும் மகனின் முதல் எதிர்ப்பு… வீரமுத்து உடைந்து நின்றார்.

தன் சொல்லை மகன் கேட்காததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

“நம்ம திரு தம்பியா இப்படி?”

“ஐயா சொல்லை மீறிட்டாரே?”

ஆளாளுக்கு ஒவ்வொன்று பேச, வீரமுத்து கோபமாக மண்டபத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

அவரின் கோபம் அறிந்து மற்றவர்களும் அவர் பின்னால் சென்றிட, வர்ணத்திற்கு மகனை பார்ப்பதா, கணவரை பார்ப்பதா எனும் கவலை. இருப்பினும் கணவர் பின் மகனின் மணக்கோலத்தை திரும்பித்திரும்பி பார்த்தவராக கண்ணீரோடு சென்றார்.

திரு அமிர்தத்தோடு வீட்டிற்கு வர, உள்ளிருந்து யாரும் வெளியில் வரவில்லை.

வீரமுத்துவின் கோபம் அறிந்து, அவர் அமர்ந்திருந்த விதத்திலே… வர்ணம், திருவாசகம், குமுதா, அவரின் கணவர் என அனைவரும் ஒதுங்கி நின்றனர்.

என்ன இருந்தாலும் மகன் உள்ளே வந்துவிடுவான் எனும் எண்ணம் வீரமுத்துவுக்கு. அதனால் வீராப்பாக அழைக்காது இருந்துகொண்டார்.

என்ன சொன்னாலும் பின்னால் ஓடி வர இப்போது திரு அவரின் மகன் மட்டுமில்லையே! முன்பு என்றால் அது சரி. ஆனால் தற்போது, அவரின் மதிப்பில் தானே அமிர்தத்திற்கு அங்கு கிடைக்கும் மரியாதை. அதற்காக அவர்கள் அழைக்காது உள்ளே செல்ல முடியாது தவித்து நின்றார் திருமூர்த்தி.

மாலை முடிந்து இருள் கவிழத் தொடங்க…

“குமுதா” என்று வெளியில் நின்று அழைத்தார் திரு. அண்ணனின் பாசத்தில் முக்குளித்த குமுதாவால் திருவின் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை. கூப்பிட்டதும் ஓடி வந்து திண்ணையின் தூண் பிடித்து நின்றார்.

“என்னோட சர்ட்டிஃபிகேட் மட்டும் கொண்டு வா” என்றார்.

“அண்ணே…”

“கொண்டுவாம்மா” என்று திரு தழுதழுத்ததில் குமுதா ஓடிச்சென்று எடுத்து வந்து கொடுத்தார்.

“சந்தோஷமா இருக்கணும்” என்று தங்கையின் தலையில் கை வைத்த திரு அமிர்தத்தைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அவர் நேராக வந்தது தன் நண்பனான சத்தியவேலுவைத் தேடி தான்.

அவர் அப்போது கட்சியில் சேர்ந்து தனக்கென ஒரு இடம் பிடித்த நாட்கள். கட்சி மாநாட்டிற்காக வெளியூர் சென்றிருக்க எங்கு செல்வதென தெரியாது மனைவியின் கை பிடித்து தேனி பேருந்து நிலையத்தில் கடைசியாக நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறிவிட்டார்.

வீரமுத்து மகன் தன்னை மொத்தமாக விட்டுச் சென்றதில் தோன்றிய வலியை தாங்க முடியாது கோபமாக அனைவரிடமும் காட்டிவிட்டார். அதில் வீரமுத்துவின் எண்ணமும் மனமும் அதில் மகனுக்கான அன்பும், தவிப்பும் யாருக்கும் தெரியாமலே போனது.

அதன் பின்னர் திரு தன் நண்பன் சத்தியாவை கூட தொடர்புகொள்ளவில்லை. தன் தொடர்பு அவர்கள் முன்னால் சென்று நிற்க வைக்குமோ? தந்தையின் மனம் மீண்டும் தன்னால் நோகுமோ? என தன் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரிந்துகொள்ளாமலே இருந்துவிட்டார். புவியின் வளர்ச்சிக்குப் பின்னர் அவனது கோபத்திற்காக முன்பு போலவே இருந்துகொண்டார்.

திரு அனைத்தும் சொல்ல அன்றைய வீரமுத்துவின் மனமும் புவிக்கு புரிந்தது. அதனால் உறவுகள் மீதிருந்த அவனின் கோபமும் நீங்கியது.

அடுத்து தன் தந்தையை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டுமென நினைத்த புவிக்கு,

முதல்முறை முல்லையை அமிர்தம் பார்த்ததும் தன் மாமியாரின் முக அமைப்பு என்று சொல்லியது நினைவில் உதித்ததோடு, முல்லையும் தேனி என்பது அவனுள் ஒரு அனுமானம்.

அடுத்து புவி தன் பணிக்காக தேனி வருவதற்கு முன்பே, சத்தியவேலுவை தொடர்புகொள்ள தற்போது அவர் அமைச்சர் என்று அறிந்து, இப்போதும் தன் தந்தையின் பழைய நண்பராகவே இருப்பாரா என்ற சந்தேகத்தோடு பேசிட,

சத்தியவேல், புவி தன் ஆருயிர் நண்பன் திருவின் மகன் என்றதும் தன் மகனாகவே நினைத்து பேசிட, அவரின் மூலம் வீரமுத்து குடும்பம் பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டவனுக்கு முல்லை தன் அத்தை மகள் என்பது கூடுதல் மகிழ்வானது.

அடுத்து திருவை தன் நண்பருடன் பேச வைத்தான். சத்தியா திருவிடம் தன் கோபத்தை வெளிப்படையாகக் காட்டி, அப்போது போலவே இன்றும் உரிமையாய் தன்னையும் மறந்துவிட்டதாக சண்டையிட திருவுக்கு கண்கள் கலங்கி விட்டது.

நண்பனிடம் பேசி முடித்து மகனை அணைத்துக் கொண்டு சில கணங்கள் அப்படியே நின்றுவிட்டார்.

“எல்லாம் சரியாகிடும் ப்பா.” அந்த நொடி சொல்லியதை இன்றும் கூறினான் புவி.

மலர்ந்து சிரித்தார் திருமூர்த்தி.

அப்போது தான் திருவாசகம் வந்தார்.

“சொல்லியிருக்கலாமே அப்பு” என்றவர், மகனின் கன்னம் தாங்கினார்.

அவரின் குரல் உடைந்திருந்தது.

“உன் அப்பத்தா, அத்தை எல்லாம் சந்தோஷப்படுவாங்க” என்று சொன்னவரை உள்ளழைத்து அமர வைத்தவன், அவரின் கையில் அலைபேசியை கொடுத்திருந்தான்.

திரையில் தெரிந்த தன் உடன்பிறப்பின் முகம் கண்ட திருவாசகம், “அண்ணே” என்று கமறலாய் விளித்திட, “வாசு” என தவிப்பாக அழைத்தார் திரு. அங்கே பாசப்போராட்டம் நிகழ்ந்து சீரானது.

“எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“ஐயா மாதிரி இருக்கியே அப்பு. அது போதாதா?” என்ற வாசகம் மகனிடம் பல கதைகள் பேசிக் கொண்டிருந்தார்.

“சாப்பிடுறீங்களா?” நேரம் இரவு உணவைத் தொட்டிருந்தது. வீரமுத்துவிடமிருந்து அழைப்பும் வந்தது.

“ஐயா கால் பண்றாங்க அப்பு. நான் கிளம்புறேன். காலையில் வரேன்” என்று எழுந்துகொண்ட வாசகம், “பிள்ளைங்களுக்குத் தெரியுமாய்யா?” எனக் கேட்டார்.

“இல்லை” என்ற புவியின் சிரித்த முகத்தை ஆதுரமாக தடவிக் கொடுத்தவர், “அப்புறம் எப்படி உன்கிட்ட வந்து பேசிட்டு நின்னாங்க?” என்றார்.

“அது வேற கதை. அப்புறம் சொல்றேன். இப்போ உங்க ஐயா வெயிட்டிங். நீங்க பார்த்து போங்க. இல்லைன்னா மொக்கு பாப்பா காணோம்னு உங்க ஐயா உங்களை தேடப்போறார்” என்று புவி கேலி செய்ய, மகனின் முகத்தை அழுத்தமாகப் பற்றி கன்னத்தில் முத்தம் வைத்துச் சென்றார்.

வாசு சென்றதும் தந்தைக்கு அழைத்த புவி, “சித்து ச்சோ ஸ்வீட் ப்பா. எல்லாம் வெளிய தான் வெரப்பா இருக்காங்க” என்று பேசிட…

“வாசு கிட்ட முல்லை விஷயத்தை சொல்லியிருக்கலாமே தங்கம்” என்றார் திரு.

“அவள் இன்னும் நான் வேணான்னு தான் இருக்காப்பா. எப்படி சொல்ல?” என்ற புவி, “நானில்லாம அவ இருக்கமாட்டாப்பா. அவளே வருவா” என்று அழைப்பை வைத்திட்டவனுக்கு அந்த நாள் என்று எனத் தெரியாது, தவிப்புகள் நொடிக்கு நொடி கூடி ஏக்கங்கள் அதிகரித்தன.

காதலில் காத்திருப்பின் சுகம், வலியில் முடிவு பெறாது நீளும் கொடும் அவஸ்தை. அதனை முல்லை தெரிந்தே அவனுக்கு அளித்திட, அவளின் மனம் புரிந்து அவனும் சுகமாய் ஏற்றுக்கொள்கிறான்.

கொடுத்தலும் பெறுதலும் வலியாக மட்டுமே இருந்திடாது, இன்பமாக மாறும் தருணமும் அடுத்த இரண்டு நாட்களில் வந்திருந்தது.

திரை தாங்கி வந்த எண்ணை நம்ப முடியாது கண்ணின் ஓரம் சுருங்கிட, இதழ் மலர்ந்து நின்றான் புவியாழன்.

error: Content is protected !!
Scroll to Top