Skip to content
அத்தியாயம் 14
வலிகள் யாவும் வலிகளாகவே தேங்கி விடுவதில்லை, உடையும் நெஞ்சத்தில் உருகும் நேசமாய் நிறைந்திட்ட காதலில்.
_____________________________
கோவிலில் எதிர்பாராத விதமாக புவியின் மார்பில் ஒட்டி நின்ற நிலை முல்லையின் காதல் மனதை அதிகம் தடுமாற வைத்தது.
வேண்டாமென்று சொல்லிவிட்டு பார்வை வழி காதலை கொட்டிக் கொடுத்திட்டாள். எப்படி அவனிலிருந்து மீள்வாள்.
படுக்கையில் விழுந்து கிடந்தவளுக்கு கடந்த இரு தினங்களாக கண்களை மூடினால் புவியுடன் நெருக்கமாக நின்ற காட்சியும், அவனது வார்த்தைகளும் தான் நினைவில் எழுந்து நெஞ்சம் நிறைத்தன.
உள்ளங்கையில் இறுக மூடி பொத்தி வைத்திருந்ததை விரல்கள் பிரித்து திறந்து பார்த்தாள்.
“திரு.தி.புவியாழன் IPS” என எழுதப்பட்டிருந்த அவனது நேம் பேட்ஜ்.
கோவிலில் அவனின் மார்பில் கை வைத்து ஒண்டியபோது அவளின் கையோடு வந்திருந்தது.
மெல்ல அவனது பெயரில் தன் பூவிதழை ஒட்டி எடுத்தவளின் கண்ணோரம் கசிந்தது.
“உங்களை ரொம்பவே கஷ்டப்படுதுறேன் தெரியுது. ஆனாலும் என்னால் ஒண்ணும் செய்ய முடியாதே! என்ன பண்ணனும் யாழன்?”
தன் முன் இல்லதாவனிடம் கேள்விக் கேட்டிருந்தாள்.
“நான் மட்டும் வேணும் சொல்லுடி.” புவியின் குரல் அவன் சொல்வதாய் அவளின் செவி நிறைத்தது.
“வேணாம்… இது வேணாம். நான் உங்களை நினைக்கமாட்டேன்” என அரற்றியவளின் கையிலிருந்த பெயர் அட்டையை இறுக்கிப் பிடித்தாள்.
“அத்தாட்சி ஐயா கூப்பிடுறாங்க” என்று கதவினை தட்டிவிட்டு உள்ளே வந்தான் மாதேஷ்.
வேகமாக விழிகளைத் துடைத்துக் கொண்டு எழுந்த முல்லை…
“எதுக்கு?” எனக் கேட்டாள்.
“தெரியல அத்தாட்சி. ஐயாவும் அப்பாவும் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தாங்க” என்றான்.
இருவரும் அறையை விட்டு வெளியில் வர முற்றத்திற்கு முன்னிருக்கும் கூடத்தில் வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு பக்கவாட்டில் சற்று இடைவெளியில் தள்ளி அமர்ந்திருந்த மதுரா அலைபேசியில் எதோ செய்து கொண்டிருந்தாள்.
முல்லை வீரமுத்துவிடம் செல்ல, மாதேஷ் மதுராவின் அருகில் வந்தமர்ந்தான்.
“படிக்கலையாடா? லாஸ்ட் எக்சாம் தானே நாளனன்னைக்கு?” என்ற மதுராவுக்கு தலையசைத்த மாதேஷ், “மொபைல் கொடுக்கா. அண்ணா என்ன பண்றாங்க கேட்போம்” என்றான்.
இளையவர்கள் இருவரும், இப்போது புவியிடம் அடிக்கடி பேசிக்கொண்டனர்.
“அண்ணா டியூட்டி முடிஞ்சிருக்காதுடா” என்று மதுரா சொல்லும்போதே, “அண்ணா வீட்டுக்கு வந்துட்டிங்களா?” எனக்கேட்டு தகவல் அனுப்பியிருந்தான்.
அடுத்த நொடி, “ஜஸ்ட் நௌவ்” என புவியிடமிருந்து பதில் வந்தது.
“உங்க ஆளு வசமா மாட்டிக்கிட்டாங்க. ஐயா முன்னாடி எதோ பஞ்சாயத்து. பாக்குறீங்களா?”
“பார்க்கலாமே!” உடன் கண்ணடிக்கும் இமோஜி ஒன்றை அனுப்பியிருந்தான்.
“வேண்டாம் மாது…” என்ற மதுராவுக்கு அதீத கலக்கம். யாரும் பார்த்துவிட்டால் அவ்ளோ தான் எனும் பயம்.
மது சொல்லியதை மாதேஷ் பொருட்படுத்தாது புவிக்கு காணொளி அழைப்பு விடுத்திருந்தான்.
புவியும் ஏற்றிட, மதுவுக்கு வெளிப்படையாகவே நடுக்கம் கண்டது.
“அச்சோ மது நீயே காட்டிக் கொடுத்திடுவ போல” என்ற மாதேஷ், புவிக்கு சத்தமின்றி ஹாய் சொல்லி, “உங்க ஆளை காட்டுறேன் இருங்க” என்று பின் காமிரா வைத்திட, அனைவருக்கும் நடுநாயகமாக நின்றிருந்தாள் முல்லை.
முல்லையின் முகம் காணும் வகையில் தான் மாதேஷ் திரை காண்பித்து அமர்ந்திருந்தான்.
கணுக்கால் வரையிலான கருநிற பாப்கார்ன் பாவாடை மற்றும் இளஞ்சிவப்பு டி-ஷர்ட் அணிந்து, கருங்குழலை மொத்தமாக அள்ளி ஒற்றை பேண்டில் கட்டியிருந்தாள்.
ஓய்ந்த தோற்றம். அதற்கே பார்வையில் அவனின் காதல் மொத்தமும் கசிந்தது.
‘பித்துப் பிடிக்க வைக்கிறாள்.’ உள்ளுக்குள் அவஸ்தையாய் முணகினான்.
புவியின் விழிகள் அவள் அணிந்திருந்த அவளது வானவில் நிற கண்ணாடி வளையலில் லயித்தது.
‘கடையே வாங்கித் தரணும் போல.’ மனதில் இன்பமாய் சலித்துக் கொண்டான்.
“ரொம்ப பயப்படுவாள் போல.” முல்லை நின்றிருந்த விதமே அவள் வீரமுத்துக்கு எவ்வளவு பயப்படுவாள் என அவனுக்கு எடுத்துக்காட்டியது.
“சாப்பிட்டியா வனம்?”, வீரமுத்து.
“ஆச்சுங்க ஐயா.” அதீத சத்தமின்றி ஒலித்தது. புவிக்கு முல்லை ஆகாஷுடன் வம்பு செய்திடும் போது ஒலிக்கும் அவளின் குரல் நினைவுக்கு வந்து இதழில் குறுநகை தோற்றுவித்தது.
“நாளைக்கு ஆபிஸில் எதும் முக்கிய மீட்டிங் இருக்கா?”
“இல்லைங்க ஐயா.”
“லீவ் போடணும்” என்றார்.
எதுக்கு என்று கேட்காது சரியென அவளின் தலை அசைந்தது.
“உன்னை பெண் பார்க்க வராங்க!”
“சரிங்க ஐயா” என்றவள் பொருள் புரிந்ததும், “ஐயா” என்று அதிர்ந்து விளிக்க…
“உன்கிட்ட ஏற்கனவே சொன்னது தானே வனம். உன் மாமா நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு சொல்றான். பார்ப்போம். பேசி புடிச்சிப்போச்சுன்னா மேற்கொண்டு செய்வோம்” என்றார்.
அங்கு நடக்கும் பேச்சில் புவி அதிரவெல்லாம் இல்லை. தன்னவள் என்ன சொல்லப் போகிறாள் என்பதில் தான் புவியின் மனம் அடித்துக் கொண்டது.
“சரி நீ போ. நேரத்துல உறங்கு” என்று வீரமுத்து சொல்ல, கண்ணீர் நிறைந்த கண்களோடு திரும்பி இரண்டடி முல்லை வைத்திருக்க, அங்கே புவியின் நெஞ்சம் மொத்தமாய் உடைந்து நொறுங்கியது.
மது, மாது கூட முல்லை புவியைப் பற்றி சொல்லாததில் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
வாசு மட்டும் முல்லையை அறிந்தவராக, அவள் பேசப் போகும் பேச்சிற்காக ஆர்வமாகக் காத்திருந்தார்.
இரண்டு கைகளாலும் பாவாடையை இறுக்கி பிடித்து மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்த முல்லை, நடையை நிறுத்தி கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பி நின்றாள்.
புவி அவளின் கண்ணீர், தவிப்பு, தடுமாற்றம் என அனைத்தையும் அலைபேசி வழியாக உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
“என்ன வனம்?” வீரமுத்து அவள் நின்ற நிலை கண்டு வினவினார்.
“உங்ககிட்ட ஒன்னு சொல்லணும் ஐயா” என்ற முல்லை, அவர் தன் அருகில் எழுந்து வந்து நிற்கவும் பயத்தில் பேச்சற்றுப் போனாள்.
“என்ன சொல்லனும்?”
“ஐயா…” என இழுத்தவள், “எனக்கு கல்யாணம் வேணாமே” என்றாள். இரைஞ்சுதலாக.
“ஏன்?” பெரியவரின் அந்தப் பார்வை அவளது திடத்தை மொத்தமாக ஆட்டம் காணச் செய்தது.
“கல்யாணம் வேணான்னா என்ன அர்த்தம் வனம்? இப்போ வேண்டாமா இல்லை எப்பவும் வேண்டாமா?” எனக் கேட்டார்.
“எப்பவும்.” பட்டென்று சொல்லியிருந்தாள்.
“புரியல?”, அவரின் முகத்தில் அத்தனை கடுமை.
என்ன என்று கேட்டு பக்கம் வந்த மூன்று பெண்களையும் தடுத்துவிட்டார்.
“எனக்கு காரணம் சொல்லு வனம்?” சிங்மென கர்ஜித்தார்.
அவரின் குரலில் அரண்டவள், கண்களை மூடிக்கொண்டு,
“நான் ஒருத்தரை விரும்புறேன்” என்று சொல்லி முடிக்கும் முன்பு, வீரமுத்துவின் கரம் இடியென முல்லையின் கன்னத்தில் இறங்கியது.
முல்லை இரண்டடி தள்ளி விழுந்திருக்க,
அமர்ந்திருந்த மதுவும், மாதுவும் அரண்டு எழுந்து நின்றிருந்தனர்.
மாதேஷ் எழுந்ததில் அலைபேசி அவனது கை இறங்கியதில் தரை மட்டுமே புவிக்கு தெரிந்தது. ஆனால் அங்கு ஒலித்தவை எல்லாம் தெளிவாகக் கேட்டது.
“உன்னை அம்புட்டு தூரம் படிக்க வைக்க அனுப்புனப்போவே சொல்லி அனுப்பினேனா இல்லையா? இந்த மாதிரி எதும் இருக்கக் கூடாதுன்னு” என்று உருமிய வீரமுத்து, “நாளைக்கு அவங்களை தட்டு மாத்துற மாதிரி வர சொல்லு வாசகம்” என்று நகர்ந்தவரின் கால்கள் முல்லை பேசியதில் அசையாது நின்றது.
“உங்க சம்மதம் இல்லாம, எனக்கு அவங்க வேணாம் தாத்தா. ஆனால் அவங்களைத் தவிர வேற யாரையும் என் பக்கம் நிக்க வச்சு யோசிக்கக் கூட முடியாது” என்று எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள்.
மது, மாதேஷ் வேகமாக முல்லையின் பின்னால் சென்றனர். இருந்த பதட்டத்தில் மாதேஷ் புவி அழைப்பில் இருப்பதை மறந்தவனாக அலைபேசியை சட்டை பையில் வைத்திருந்தான்.
“அக்கா…” மது மெத்தையில் சுருண்டிருந்த முல்லையின் அருகில் சென்று அவள் மேல் கை வைத்திட, மதுராவை தாவி அணைத்துக் கொண்டு வெடித்துக் கதறினாள் முல்லை.
தன்னுடைய முல்லையின் அந்நிலையில் புவி துடித்து தவித்தான்.
“அக்கா பிளீஸ்… அதான் சொல்லிட்டிங்களே! பார்த்துக்கலாம் விடுங்க. நாளைக்கு அண்ணா கிட்ட பேசுங்க. அண்ணா அவரோட ஃபேமிலியா வந்து பேசினால்…” என்று அதற்கு மேல் சொல்ல முடியாது மதுவின் வார்த்தைகள் நின்றுபோனது.
வருகிறவர்களை வீரமுத்து நிச்சயம் வார்த்தையால் வதைத்திடுவார் என்பது தெரியுமே! பெயருக்குக்கூட பெரியவர் ஒப்புக்கொள்வார் என்று அவளால் சொல்ல முடியவில்லை.
“அழாத… எனக்கும் வருது” என்று மாதேஷ் அழுதிட, கண்களை துடைத்துக் கொண்டு வேகமாக மதுவிடமிருந்து விலகிய முல்லை கண்களை துடைத்துக்கொண்டாள்.
“ஒன்னுமில்லை” என்று முல்லை சொல்லிக் கொண்டிருக்க, குமுதா உள்ளே வந்தார்.
“கம்பீரமா இருந்த மனுஷனை மொத்தமா நிலைகுலைய வச்சிட்டியே… இதுக்குதான் படிக்கப் போனியா?” என்று கேட்டு குமுதா முல்லையை அடித்தார்.
“ஒழுங்கா நாளைக்கு வர பையனுக்கு சரின்னு சொல்ற… இல்லை உனக்கு அம்மான்னு ஒருத்தி இருக்கிறதையே மறந்திடு” என்று சொல்லிச் சென்றுவிட்டார்.
அனைத்தையும் பார்த்துக்கொண்டும், கேட்டுக்கொண்டும் இருந்த புவியால் தனக்காக அவள் வாங்கும் பேச்சும், அடியையும் சகித்துக்கொள்ள முடியவில்லை.
இதுநாள் வரை அவள் தன்னை தவிக்க வைக்கிறாள் என்பதற்கான காரணம் கண் முன்னே பார்த்திட, அவள் விலகிச் சென்றதால் உண்டான கோபம் அனைத்தும் புவியிடமிருந்து மாயமாகியிருந்தது.
இனி அவள் செய்ய ஒன்றுமில்லை. தான் தான் எதும் செய்ய வேண்டுமென எண்ணிய புவி, காணொளி அழைப்பைத் துண்டித்து திருவாசகத்துக்கு அழைத்துவிட்டான்.
“சொல்லு அப்பு?”
“என்ன சொல்லனும் சித்தப்பா?” அத்தனை சீற்றம் அவனது குரலில்.
“உன் நேசத்தை சொல்லு அப்பு.”
“சித்தப்பா?”
“அண்ணே எல்லாம் சொல்லுச்சு புவி. ரெண்டு பேருல யாரோ ஒருத்தர் இறங்கி வந்தா தான் ஒண்ணு சேர முடியும். அதான் கொளுத்திப் போட்டேன்” என்ற திருவாசகம், “அண்ணேவும் மதினியும் வந்திட்டு இருக்காங்க” என்றார்.
“சொல்லவே இல்லை!”
“சொன்னா, அவளா வரட்டும் சொல்லுவ. அதுவரைக்கும் எங்களுக்கு பொறுமை இல்லை. உங்க மூலமா நான் குடும்பத்தை ஒண்ணு சேர்க்க பார்க்கேன்” என்றார்.
“அதுக்கு அவளை இவ்ளோ கஷ்டப்படுத்தனுமா? ஆளாளுக்கு அடிக்கிறாங்க” என்று பொரிந்து தள்ளிவிட்டான் புவியாழன்.
“உங்க அக்கா இனியொரு முறை கை நீட்டினா அவ்ளோ தான். உள்ள தூக்கி வச்சிடுவேன்” என்று வெடித்தவன், “நான் இப்போ அங்க வரட்டுமா சித்தப்பா. பார்க்கணும் போல இருக்கே” என்றான் தவிப்பாய்.
“இப்போ எப்படி அப்பு?” என்ற திருவாசகம், “நாளைக்கு வந்து உரிமையா பாரு” என்றார்.
“ம்ம்…” என்ற புவி, “யாரும் எதும் சொல்லாம பார்த்துக்கோங்க சித்தப்பா… இன்னைக்கு ஒரு நைட் மட்டும்” என்றான்.
“அப்புறம்?”
“அவளை நான் கூட்டிட்டு வந்துடுவேன். என் மனைவியான பிறகு யாரும் எதும் சொல்லிடுவாங்களா?” என்றான்.
திருவாசகத்திடம் அப்படியொரு சிரிப்பு. புவியின் உரிமைப் பேச்சில்.
“உங்க ரெண்டு பேரால குடும்பம் ஒண்ணு சேரணும் இருக்கு. ஆனால் ஐயாவ நெனச்சா தான் பயந்து வருது. எல்லாம் நல்லதா நடக்கும் நம்புவோம்” என்று அழைப்பை வைத்தார்.
அடுத்து புவி திருவுக்கு அழைத்து எங்கு வருகிறார்கள், ஏன் முன்பே என்னிடம் சொல்லவில்லை? என எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு கொஞ்சம் தளர்வாய் இருக்கையில் சரிந்தான்.
அமிர்தத்துக்கு திரு விஷயத்தை முழுதாக சொல்லிடவும் அத்தனை மகிழ்வு. தன்னால் தான் திரு அவரின் குடும்பத்தை பிரிந்துவிட்டார் என்ற பல வருட குற்றவுணர்வு தன் மகனால் போகவிருக்கிறது என்பதில் அத்தனை நிறைவு.
திருவின் முகத்தில் தெரியும் நிறைவான புன்னகைக் கண்டு அவரும் அகம் மகிழ்ந்தார்.
புவியை பார்த்து வருவோமென்று ஆகாஷிடம் எதையும் சொல்லாது, அவனை ஓட்டுனராக்கி தேனி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
“அவங்களைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்ற முல்லையின் குரலின் அழுகையும், தவிப்பான முகமும் புவியை வெகுவாக இம்சித்தது.
தன்னைப்போல் அவளுக்கு தன்மீது தவிப்புகள், ஏக்கங்கள் இல்லையோ என்று இத்தனை நாட்கள் புவி நினைத்திருந்த நினைப்பை ஒரு நாளில் மொத்தமாகப் போக்கியிருந்தாள் புவியின் முல்லை.
“என்ன பண்ணிட்டு இருக்க முல்லை?” தனக்குத்தானே கேட்டுக்கொண்ட புவி, “என்ன பண்ணிட்டு இருக்காள்?” என்று மதுவுக்கு தகவல் அனுப்பினான்.
சில நிமிடங்களில் “தூங்கிட்டாங்க” என்று பதில் வர, புவியும் நாளை நடக்கவிருக்கும் சம்பவங்கள் குறித்து யோசித்தவனாக உறங்கிப் போனான்.
நள்ளிரவு கடந்து புவியின் அலைபேசி இசைத்தது.
இந்நேரத்தில் யாரென்று கண்களை கசக்கி எழுந்தமர்ந்து, அலைபேசியை கையிலெடுத்து, திரை தாங்கி வந்த எண்ணை நம்ப முடியாது கண்ணின் ஓரம் சுருங்கிட, இதழ் மலர்ந்து மெத்தையிலிருந்து இறங்கி நின்றான் புவியாழன்.
“மனசு வந்துச்சுப் போல” என்று சொல்லிக் கொண்டவனின் மீசை நெளிந்தது அவனது கன்னம் விரிந்த முறுவலில்.
“முல்லை.” திரையில் மிளிர்ந்த பெயரை மென்மையாய் உச்சரித்தான்.
இந்த அழைப்பிற்காக புவி ஏங்கிய நாட்களின் நீளம் அதிகம்.
இருவருமே ஆகாஷின் அலைபேசியிலிருந்து தன் இணையின் எண்ணை எடுத்திருந்தனர்.
தன்னுடைய முல்லை தன் எதிர்பார்ப்பு கடந்து தன்னை அழைக்கிறாள் எனும் மகிழ்வை ஆழ்ந்து அனுபவித்தவனாக ஒலி அடங்கும் இறுதியில் அழைப்பை ஏற்றிருந்தான்.
“ஹலோ.”
சில நொடி அதீத நிசப்தம். எதிர்பக்கம்.
“யாரு?” வேண்டுமென்றே கேட்டான். துடித்து வந்த சிரிப்பின் ஓசையை தொண்டைக்குள் ஒளித்தவனாக.
“நான் முல்லை.” அழுது ஓய்ந்த குரல். அவனுக்கு அதுவும் லயமாக இதயத்தில் ஸ்ருதி சேர்த்து இசை மீட்டியது.
“வெளிய நிக்கிறேன்.” முல்லை சொல்லிய கணம் வேகமாக பாய்ந்து வந்து கதவினை திறந்திருந்தான்.
காணொளி அழைப்பில் அவன் பார்த்த அதே தோற்றத்தில், அழுததினால் கண்கள் வீங்கி, அடி வாங்கிய கன்னம் சிவந்து நின்றிருந்தாள்.
“முல்லை.”
புவியின் விளிப்பிற்கு, அவனது மார்புச் சட்டையை இரு கைகளாலும் இறுக்கிப் பிடித்து தன் நெற்றி அவன் நெஞ்சம் முட்டி அவனில் ஒண்டி நின்றாள்.
“நாளைக்கு யாரோ வராங்களாம். நீங்க வாங்க. பேசுங்க. ஒத்துக்கிட்டா ஓகே! இல்லைன்னா அவங்க முன்னவே என் கைப்பிடிச்சு கூட்டிட்டு வந்தாலும் ஓகே” என்றாள்.
அவளா இப்படி சொல்வது புவியால் நம்ப முடியவில்லை.
“நம்ப முடியலையா?” புவியின் மனம் புரிந்ததோ, முகம் உயர்த்தி அவனின் விழிகளை சந்தித்தவள்…
“மொத்தமா உங்களை தொலைச்சிடுவேன் நிலை வரும்போது தான், நீங்க இல்லாம நானே இல்லைன்னு புரியுது. உங்களுக்காக என்னவும் பண்ணனும் தோணுது” என்றாள்.
முல்லை மூன்று வார்த்தையில் சொல்லிடாத மொத்த காதலையும் அவளின் அவ்வார்த்தைகளில் முழுவதுமாய் தெரிந்து கொண்டான்.
வாயிலின் படியில் இருவரும் நின்றிருந்தனர். அத்தனை நெருக்கமாய். இத்தனைக்கும் அவள் தான் அவனில் புதைந்து நின்றாள்.
மின் விளக்கு வெளிச்சத்தில் அப்பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும், தாங்கள் நிற்பது தெரியும் என்பது வெகு தாமதமாகத்தான் புவிக்கு அறிவில் உரைத்தது.
“எப்படி வந்த நீ?” எனக் கேட்டு விலகி நின்றான்.
“ஸ்கூட்டி வெளியில் நிக்குது” என கேட்டினைத் தாண்டி கை காண்பித்தவள், “கிளம்புறேன்” என்று படியிறங்கிட அவளின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான்.
“நில்லு முல்லை” என்ற புவி, “உள்ள வா” என்று உள் சென்றான்.
அவள் அப்படியே சுற்றுப்புறத்தை பார்த்தவாறு நின்றிருக்க, உள்ளிருந்து திரும்பிப் பார்த்த புவி…
“கட்டிட்டு நிக்கும் போது பயம் இல்லையா?” எனக் கேட்டான்.
வேகமாக உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்திருந்தாள்.
மூரல்கள் மின்ன சத்தமின்றி சிரித்திருந்தான்.
சமயலறை உள்ளே சென்ற புவி, ஃபிரிஜ்ஜிலிருந்து ஐஸ் பேக்கை எடுத்து வந்தான்.
“பயமா இருக்கு.”
“எதுக்கு?” எனக் கேட்ட புவி, அவளுக்கு முன்னிருந்த இருக்கையை இன்னும் அவள் முன் நகர்த்தி அமர்ந்தான்.
“ஐயாவை சம்மதிக்க வச்சிடுவீங்க தானே?”
“எதுக்கு?” மீண்டும் அதே வார்த்தை அவனிடம்.
ஐஸ் பேக்கை அவளின் சிவந்து வீங்கியிருந்த கன்னத்தில் மெல்ல வைத்து எடுத்தான்.
வலியில், “ஷ்ஷ்…” என்றவள், “உங்களுக்குத் தெரியும். நீங்க வேணுன்னே கேட்கிறீங்க” என்றாள்.
“அப்படியா?” என்ற புவி, “முல்லை எப்பவாவது புவிகிட்ட சொல்லியிருக்கீங்களா?” எனக் கேட்ட போதும் அவளின் கன்னத்தில் அழுத்தம் கொடுக்காது மெல்ல வைத்து வைத்து எடுத்துக் கொண்டிருந்தான்.
அவனின் கருமணி அசைவுக்கு ஏற்ப தன் விழிகளை நகர்த்தியவள்,
“ஐ லவ் யூ யாழன் டூ த கோர்” என சிறு இடைவெளிவிட்டு, “மூன் அண்ட் பேக்…” என்றாள்.
புவியின் அகமெல்லாம் நிறைந்துவிட்டது. முல்லை வாசம் அவனின் நெஞ்சமெங்கும் வாசம் பரப்பியது.
ஐஸ் வைத்திருந்த அவளின் கன்னத்தில் தன் உள்ளங்கையை அழுத்தமாக வைத்த புவி…
“இதை சொல்ல இவ்ளோ ஏங்க வைக்கணுமா முல்லை?” என அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டி… அக்கணத்தை அமைதியாய் அகம் சேர்த்தான். முல்லையின் விழிகளில் நெஞ்சம் உறைந்த காதலை அவனிடம் காட்டிவிட்ட ஆசுவாசத்தின் ஆர்ப்பரிப்பு.
முல்லையின் அலைபேசி ஒலித்து இருவரின் நிலை களைத்தது.
மதுராவின் எண்.
“அச்சோ டைம் ஆச்சு” என்று எழுந்தவள், தன் முன் எழுந்து நின்றவனில் மோதி தடுமாற முதுகில் கையிட்டு நிலையாக நிற்க வைத்தான்.
“நீ சொல்லிட்ட… நான் சொல்ல வேண்டாமா?”
வேண்டாமென இடவலமாக தலை அசைத்த முல்லை,
“உங்களை எனக்கு புரியும்” என்றாள்.
“ஆஹான்…” என்ற புவி, தன்னிரு கையை பரந்து விரித்தான். அவனின் அழைப்பு புரிந்து பாந்தமாய் அவனில் பொருந்தி நின்றாள்.
நிமிடங்கள் நீடிக்க…
“போகட்டுமா?” எனக் கேட்டாள் முல்லை.
“ரொம்ப நாள் தவிப்புடி. கொஞ்ச நேர அணைப்புக்கு எல்லாம் அடங்காது” என்ற புவி, “மொத்தமா என்கிட்ட வந்த பிறகு வட்டியும் முதலுமா காட்டுறேன்” என அவளை பிரித்து நிறுத்தினான்.
வீடுவரை அவளுடன் இணைந்து தன் இருசக்கர வாகனத்தில் வந்தான்.
“உன் ஹாஸ்டல் சுவரை விட பெருசா இருக்கும் போல?” புவி வீட்டின் மதில் சுவற்றை சுட்டிக் கேட்டான்.
“அதெல்லாம் ஏறிடுவேன்” என்ற முல்லை, புவி அறியும் முன் மரத்தின் மீது ஏறி சுவற்றில் தாவி நின்றிருந்தாள்.
“முல்லை பார்த்து” என்று புவி சொல்லும் முன், சுவற்றுக்கு அந்தப் பக்கம் குதித்து கேட் அருகே வந்து அவனுக்கு தலை அசைத்தாள்.
இரு காதல் நெஞ்சம் நாளை கை கோர்க்கும் தருணத்தை எதிர்நோக்கி.
Post Views: 0
error: Content is protected !!