உருகும் நேசம் உடையும் நெஞ்சம் 15

அத்தியாயம் 15

“நல்ல குடும்பம் தானே வாசகம், விசாரிச்சிட்டியா?”

முல்லையை பெண் பார்க்க வருவதாக திருவாசகம் சொல்லிய குடும்பத்தைப் பற்றி பெரியவர் மகனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“விசாரிக்கணும் அவசியம் இல்லைங்க ஐயா. பார்த்ததும் உங்களுக்கேத் தெரியும்” என்றார் திருவாசகம்.

இருவரும் மேற்கொண்டு பேசிக் கொண்டிருக்க… முல்லை அங்கு வந்தாள்.

“என்ன வனம்?” பெரியவர் என்ன எனும் விதமாக பார்க்க, வாசு தான் கேட்டிருந்தார்.

“அவங்க வராங்க மாமா.”

முல்லை சொல்லியதும் பெரியவர் வேகமாக இருக்கையிலிருந்து எழுந்துவிட்டார்.

“ராத்திரி அம்புட்டு சொல்லியும் எம்புட்டு தைரியமா அந்தப் பையன் வரான்னு சொல்லுவ நீயி” என்று குமுதா வேகமாக முல்லையை நோக்கி வர, குறுக்கே வந்து முல்லையை தன் பக்கம் இழுத்து நிறுத்திக் கொண்டார் திருவாசகம்.

“புள்ளை மேல கை வைக்கிற வேலை இதுவே கடைசியா இருக்கட்டு(ம்)க்கா. என்ன பழக்கம் இது புதுசா?” என்று திருவாசகம் குமுதாவை கடிந்துகொண்டார்.

மகனின் வார்த்தை பெரியவருக்கும் குற்றவுணர்வாய் போனது. பிள்ளைகளை கண்டித்திருக்கிறார், அதட்டி திட்டியிருக்கிறார். ஒருபொழுதும் கை நீட்டியதில்லை. இரவு முழுக்க என்னயிருந்தாலும் திருமணத்திற்கு தயாராக வளர்ந்து நிற்கும் பிள்ளையை அடித்துவிட்டோமே என்று வருந்தியிருந்தார்.

“இந்த வார்த்தை எனக்கும் தானே வாசகம்?”

திருவாசகம் ஆமென்பதைப் போன்று அமைதியாக பார்த்திருந்தார்.

“சரி கை வைக்கல. நீ தள்ளு” என்ற குமுதா, “ராவு அம்புட்டு நடந்திருக்கு இங்க… அப்பவும் அவனுக்கு போன் போட்டு வர சொல்லியிருக்காள். எம்புட்டு கொழுப்பு இருக்கணும்” என்று காய்ந்தார்.

“ம்மா பிளீஸ்” என்ற முல்லை, “சத்தியமா நான் படிக்க மட்டும் தான் போனேன். நைட் நீங்க சொன்ன மாதிரி இல்லை” என்று கண்ணீரோடு கூறியவள், “எப்படின்னு தெரியல தாத்தா… ஏன் விரும்பினேன் தெரியல” என இதற்கு மேல் மறைத்து ஒன்றுமில்லையென புவியை முதலில் எப்படி எந்த சூழலில் சந்தித்தால் என்பது தொடங்கி நேற்று இரவு அவனை பார்க்கச் சென்றது வரை ஒரே மூச்சில் எல்லாம் சொல்லிவிட்டாள்.

“பார்த்தியா தம்பி என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கா, இவ” என்று திருவாசகத்தை தள்ளிவிட்டு முல்லையை குமுதா அடிக்க வர…

“குமுதா” என்று கர்ஜித்திருந்தார் வீரமுத்து.

“ஐயா இவ பண்ண காரியத்துக்கு” என்று குமுதா திருவாசகத்தை மீறி முல்லையின் தோளில் அடித்திருந்தார்.

“உனக்கு அவ பண்ண தப்பு மட்டும் தான் தெரியுது. ஆனால் எனக்கு, இது சரிவராதுன்னு மனசுக்கு பிடிச்ச ஒன்னை ஏற்கவும் முடியாம, வேண்டான்னு விடவும் முடியாம அவ பட்ட வேதனை தான் தெரியுது. நமக்காக வேண்டான்னு விலகி நின்னவளால இப்போ ஏன் முடியல? அவ மனசை நீயாவது ஒரு பெத்தவளா புரிஞ்சிக்க குமுதா. நான் திரு விஷயத்தில் பண்ணதை நீயும் பண்ணிடாத. காலத்துக்கும் என்னை மாதிரி வருந்தி நிக்காத” என்ற பெரியவர், “அந்த தம்பி வரட்டும். பேசிப்பார்ப்போம்” என்று நகர்ந்தார்.

வீரமுத்து இறுதியாக சொன்னதில் ஆச்சரியம் கொண்ட வர்ணம் மகனின் அருகில் வந்து,

“உன் அய்யன் மனசில் திருவை பாக்கணும் எண்ணமிருக்கும் போல வாசகம்?” என்றார்.

“ஐயாவுக்கு அண்ணே மேல கோபமில்லை நினைக்கிறேன்” என்றார் வாசுவும்.

“அப்போ திருவை கண்டுபிடிச்சு கூட்டியாவேன். என் கட்டை சாயுறதுக்குள்ள ஒரு வாட்டி பார்த்துப்புடுறேன்” என்றார் வர்ணம்.

“கண்டிப்பாம்மா” என்று நகர்ந்த திருவாசகம் தன்னுடைய அண்ணனுக்கு அழைத்து நடந்ததை தெரிவித்தார். வீரமுத்து பேசிய ஒரு வார்த்தையை மாற்றாது அப்படியே கூறிட திருவின் கண்கள் கலங்கிவிட்டது.

கேட்டுக்கொண்டிருந்த புவி,

“உங்ககிட்ட சொன்னனா இல்லையா? அவ மேல கை வைக்க விடாதீங்கன்னு” என்று கடிந்துகொண்டான்.

“நீ சொன்ன பதிலே தான் அப்பு… எங்க பிள்ளையா இருக்கவரை நாங்க என்னவும் செய்ய உரிமை இருக்கே” என்றார்.

“திஸ் இஸ் நாட் குட் சித்தப்பா” என்ற புவி, “கல்யாணம் முடியட்டும்” என்றான்.

“என்ன பண்ணுவ அப்பு?”

“உங்க யாரு கண்ணுக்கும் அவளை காட்டுறதா இல்லை. எங்கேயாவது கூட்டிட்டுப் போயிடுறேன். மூணு மாசம் கழிச்சு தான் வருவோம்” என்றான்.

“ஹனிமூன் போறதை இப்படியும் சொல்லலாமா?” என்ற திருவாசகத்தின் பேச்சில், திருவும் அமிர்தமும் சிரிக்க புவி அசடு வழிந்தான்.
____________________________

எட்டு மணியளவில் தான் ஆகாஷ் உறக்கம் கலைந்து எழுந்து வந்தான்.

திருவும், அமிர்தமும் வெளியில் செல்லும் விதமாக ஆயத்தமாகி அமர்ந்திருக்க, புவியும் சீருடை தவிர்த்து கிளம்பி வந்தான்.

“எங்கேயாவது போறோமா?” கேட்ட ஆகாஷ், கண்களை கசக்கிக் கொண்டு இருக்கையில் அமர,

“போய் குளிச்சிட்டு கிளம்பி வா சின்னக்குட்டி” என்றார் அமிர்தம்.

“இவ்ளோ காலையில எங்க?” எனக் கேட்டவன் இருக்கையில் கால்களை தூக்கி வைத்து முழுதும் கலையாத உறக்கத்தை தொடர,

தம்பியின் தோளில் தட்டிய புவி…

“உன் டார்லிங் வீட்டுக்கு போலாம். ஓடு… கிளம்பி வா” என்றான்.

“வாவ் புவிண்ணா… நிஜமாவா?” என்று விழி விரித்த ஆகாஷ், “சொல்லவேயில்லை” என புவியின் முகம் பற்றி கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து தன் மகிழ்வை வெளிப்படுத்தினான்.

“சரி, சரி கிளம்பி வாடா” என்று திரு சொல்ல…

“இந்த டார்லிங்கும் என்கிட்ட ஒருவார்த்தை சொல்லல. பார்த்துக்கிறேன்” என்று ஆகாஷ் குளியலறை சென்றான்.

“அப்போ நான் கிளம்புறேன் ப்பா. ஆஷ் ரெடியானதும் நீங்க வாங்க” என்று புவி முன் சென்றான்.

“தங்கம்…”

“ம்மா… பார்க்கத்தான் விறைப்பா தெரியுறார். உண்மையில் அவரும் அப்பாவை தேடுறார் தான்” என்றான் புவி.

அன்று புவியை வீரமுத்து பார்த்த பார்வையில் ஒரு தேடுதல் இருந்தது. சில நோடிகளே ஆயினும் புவி அதனை கண்டு கொண்டிருந்தான்.

“சரிப்பா… கோவப்பட்டுடாத தங்கம்” என்று அனுப்பி வைத்தார் அமிர்தம்.

புவிக்கு அவர்களின் முன் அவ்வீட்டு வாரிசாக சென்று நிற்பதைவிட, முல்லையின் காதலனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளத்தான் நினைத்தான். அதுதான் அவனது காதலுக்கு சரியாகவும் இருக்கும்.

அன்றைய வீரமுத்துவின் மனம் புரிந்த புவிக்கு, நிச்சயம் அவர் திருவை இத்தனை வருட பிரிவின் துயர் போக்க ஏற்றுக்கொள்வார், அந்நிலையில் அவனது காதலுக்கும் சம்மதிக்கவே செய்வார், தன் பேரன் எனும் உறவில் அவர் தங்களின் காதலுக்கு ஒப்புக் கொண்டதாக இருக்கக் கூடாது என்பது புவியின் எண்ணம். அதற்காகவே முதலில் தான் மட்டும் தனித்து முன் செல்கின்றான்.
___________________________

புவி வீட்டின் அருகே வர, அவன் வருகிறானா என்பதை மொட்டை மாடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்த மாதேஷ், வேகமாக கீழே வந்து “அத்தாட்சி அண்ணா வந்தாச்சு” என்றான்.

முல்லை வேகமாக அறையிலிருந்து ஓடிவர, அதற்குள் திருவாசகம் புவியை உள்ளே அழைத்து வந்து அமர வைத்திருந்தார்.

“இது அன்னைக்கு அமைச்சர் நல்லமாறியா சொன்ன போலீஸ் தம்பியில” என்று வர்ணம் சொல்ல, “ஆமா அத்தை. ஆளும் பார்க்க அம்சமாதேன் இருக்காங்க” என்றார் சுசிலா.

“எப்படியிருந்தாலும் ஐயா முடிவு தான் எனக்கும்” என்று முகத்தை வெட்டினார் குமுதா.

“ஐயா வரச்சொல்லு மாதேஷ்” என்று புவியின் அருகில் திருவாசகமும் அமர, மதுரா பிறர் அறியாது புவிக்கு கை அசைத்திருந்தாள்.

அறையிலிருந்து ஓடிவந்த முல்லை தூணிற்கு பின்னால் நின்று தலை சரித்து, கார்குழல் அருவியாய் ஒருபக்கம் அலைந்திட கண்கள் மட்டும் காட்டி அவனை எட்டிப் பார்த்தாள்.

புவியின் மனம் முதலில் கட்டுண்டது அந்த விழிகளின் குத்தும் பார்வையில் தானே. ஆழ்ந்து நோக்கினான்.

தூணை பிடித்திருந்த அவளின் கையை பார்த்தவன், ‘வளையல் எங்கே?’ எனும் விதமாக சைகை செய்தான்.

இரவு உறங்கும் போது உடைந்துவிடும் என்பதால் கழட்டி வைப்பாள். காலை எழுந்ததும் நடந்த நிகழ்வில் அணிவதற்கு மறந்திருந்தாள்.

புவி கேட்டது அவளுக்கு விளங்கவில்லை. கண்கள் இடுங்க அவனைப் பார்த்தாள். புவி இதழ் விரியாது புன்னகைத்துக் கொண்டான்.

“குடிக்க எதும் கொண்டு வா சுசிலா” என்று வாசகம் சொல்ல…

“இருக்கட்டும்… பேசிட்டு குடிக்கிறேன்” என்றான் புவி.

“வீடே உன்னோடது தான். இங்கவே உன் ஃபார்மல் விலகளை காட்டுறியா நீ?” என்றார் வாசகம்.

“மாப்பிள்ளை கெத்து காட்டணும் தானே?” புவியும் மெல்ல கிசுகிசுத்தான்.

இருவரும் பேசிக்கொள்வது கேட்கவில்லை என்றாலும், அவர்களின் நெருக்கம் தெரிந்தது.

“இந்த தம்பியை உன் தம்பிக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும் போலவே மதினி. அவுங்க நல்லா பேசிட்டு இருக்காங்க” என்ற சுசிலா, குமுதா பார்த்த பார்வையில் தன் மாமியார் பின் சென்று நின்று கொண்டார்.

வீரமுத்து தொண்டையை செருமியபடி வந்தார். பக்கம் வந்து தான் புவியை முழுதாக பார்த்தார்.

“நீங்க அன்னைக்கு” என்று இழுத்தவர், புவி எழுந்து வணக்கம் வைத்ததில் “வணக்கம் உட்காருங்க” என்றார்.

அவருக்கு முல்லை சொல்லும்போது புவியாக இருக்குமென்று எண்ணமில்லை. அமைச்சரே அவனை நல்லவிதமாக சொல்லியிருக்க, அன்றே புவியின் மீது நல்ல அபிப்பிராயம் தான் அவருள். அதுவும் அவனது தோற்றம் அவரை மனதால் அவனை நெருங்க வைத்திருந்தது. அதன் காரணம் தான் சட்டென்று பிடிபடவில்லை.

வீரமுத்து ஆரம்பிக்கட்டும் என புவி அமைதியாக இருக்க, பெரியவர் அவனின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

“தம்பிக்கு இதே ஊருங்களா?”

அவருக்கு ஏனோ மனதிற்கு அத்தனை நெருக்கமாய் தெரிந்தான் புவி. அன்று கோவிலிலும், இன்றும்.

“பூர்விகம் இங்க தான். ஆனால் அம்மா, அப்பா சென்னையில் செட்டில்ட். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்க தான். சொல்லப்போனால் முல்லைக்காகவும், வேலைக்காகவும் தான் இங்கு வந்தேன்” என்றான்.

புவியின் வெளிப்படையான பண்பானப் பேச்சு வீரமுத்துவுக்கு பிடிக்கவே செய்தது.

பார்த்த கணம் முதல் புவி யாரென்றே தெரியாவிட்டாலும் அவன் மீது மெல்லிய பிடித்தம் அவருக்கு உண்டாகியிருந்தது. அதனால் தன்மையாகவே பேசினார். இதே புவியிடத்தில் தன் பேத்தி காதலிக்கும் நபரென வேறு யாரும் உட்கார்ந்திருந்தால் அவரின் பேச்சே வேறுமாதிரி இருந்திருக்கும்.

முல்லைக்கு பிடித்திருக்கும் பையன் நல்லவன் தான் எனும் எண்ணம் அவருள்ளும் அக்கணம்.

புவி தன்னைப்பற்றி அனைத்தும் கூறினான். படிப்பு, வேலை, தன்னுடைய குணம், குற்றவாளிகளிடம் தான் நடந்துகொள்ளும் விதம், வீட்டு ஆட்களை தவிர்த்து மற்றவர்களிடம் எட்டிப்பார்க்கும் கோபம் உட்பட அனைத்தும் தெரிவித்தான். ஆனால் பெற்றவர்களின் பெயர்களை மட்டும் சொல்லவில்லை அவன்.

வீரமுத்துவுக்கு மட்டுமில்லை… பெண்களுக்கும் புவியின் மரியாதையானப் பேச்சும், அடக்கமான மிடுக்கும், கம்பீரத் தோற்றமும் பிடிக்கவே செய்தது.

வீரமுத்து தன் பேத்தியை திரும்பி ஒரு பார்வை பார்த்தார்.

“மதுக்கா எனக்கு ஒன்னு தோணுது” என்றான் மாதேஷ்,

“என்னடா?”

“ஐயா பக்கத்துல அண்ணா உட்கார்ந்திருக்கிறாரே! ரெண்டு பேரையும் ஒண்ணா பார்க்கும்போது உனக்கு ஒன்னும் தெரியல?” எனக் கேட்டான்.

மாதேஷ் அவ்வாறு கேட்டபின்பு தான் கூர்ந்து நோக்கிய மதுவுக்கு, இருவரின் தோற்ற ஒற்றுமையில் விழிகள் விரிந்தது.

நடக்கும் பேச்சு வார்த்தையில் கவனம் இருந்ததால் மற்றவர்கள் இதனைக் கருத்தில் கொள்ளவில்லை.

“முல்லையை அதிகமாவே பிடிக்கும். வாழுற வாழக்கை முழுக்க அவளை என்னால் சந்தோஷமா வச்சிக்க முடியும். அதுக்காக ரெண்டு பேருக்கு நடுவில் சண்டையே வராதுன்னு சொல்லமாட்டேன். அப்படி மனக்கசப்பு வந்தால் எந்தவித ஈகோவும் இல்லாம அவகிட்ட என்னால் இறங்கிப்போய் சமாதானம் செய்ய முடியும். குட்டி குட்டி சண்டைக்கு நடுவில் எங்க வாழ்க்கை ரொம்பவே நல்லாயிருக்கும்” என்று தன்னவளின் விழிகள் பார்த்துக்கொண்டே வீரமுத்துவிடம் கூறினான்.

மனைவியிடத்தில் எந்தவித உயரமும் பார்க்காது இறங்கி செல்வேன் என புவி சொல்லியதில் வீரமுத்து உட்பட அனைவரும் அவன் பக்கம் மொத்தமாக சாய்ந்திருந்தனர்.

இத்தனை காலம் மனைவியோடு அன்யோன்யமாக வாழ்ந்த பெரியவராலே அத்தனை எளிதாக அவ்வார்த்தையை சொல்லிட முடியாதே!

“தம்பிக்கு குடிக்க கொண்டுவா குமுதா!” வீரமுத்து சொல்லியதிலே குமுதாவுக்கு தந்தையின் விருப்பம் புரிந்துவிட்டது.

“அடுத்து தான் பெரும் சம்பவம் ஒன்னு இருக்கு. ஐயா ஈசியா சம்மதிப்பாருன்னு நினைக்கல” என்று முணுமுணுத்தார் திருவாசகம்.

உண்மையில் வீரமுத்து காதலுக்கு எதிரி இல்லை. அந்த காலத்திலேயே வர்ணத்தை விரும்பி தான் பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார். இப்போது இருக்கும் மாடர்ன் காதலில் தன் பிள்ளையின் வாழ்வு வீணாகிவிடுமோ எனும் பயம். அந்த பயத்தினாலே தடம்மாறி சென்றிடக் கூடாதென பிள்ளைகளிடம் கண்டிப்பும் கட்டுப்பாடும்.

புவியிடம் பேசியதிலே அவனது குணம் பிடிபட்டுவிட, அத்தோடு முல்லை சொல்லியதில் அவளுக்கு விருப்பமிருந்தும் விலகி நின்ற விலகளுக்கு மதிப்புக் கொடுத்து அவன் எட்ட நின்றது அவருக்கு அவன் மீது மரியாதையை விதைத்தது. கூடுதல் பிடித்தத்தையும்.

குமுதா பனங்கற்கண்டு கலந்து இளநீர் கொண்டு வந்து கொடுக்க, புவி முல்லையை ஏறிட்டான்.

முல்லை விழி மூடித் திறக்க, இதழோர புன்னகையோடு குவளையை கையில் எடுத்தான்.

“உங்க அப்பா, அம்மாவை வந்து பேச சொல்லுங்க” என்று புவியிடம் கூறிய வீரமுத்து, “நீ வர சொன்னவங்களை வேண்டாம் சொல்லிடு வாசகம்” என்றார் மகனிடம்.

“ம்க்கும்” என்று திருவாசகத்துக்கு மட்டும் கேட்கும் வகையில் உச்சிக் கொட்டிய புவி, “ஆமா சித்தப்பா வரவேண்டாம் சொல்லிடுங்க” என்றான். அடக்கப்ட்ட சிரிப்புடன்.

“அப்படி யாரும் இருந்தாதானே வரதுக்கு” என்று புவியின் தொடையை தட்டிய வாசகம், “தம்பி வருதுன்னு காலையில வனம் சொன்னதுமே, அவங்களுக்கு தகவல் கொடுத்துட்டேன் ஐயா” என்றார்.

“என்னோட அப்பா, அம்மாவும் வந்திட்டு இருக்காங்க” என்று புவி சொல்ல, அமைச்சர் சத்தியவேல் வீட்டிற்குள் வந்தார்.

“வாப்பா” என்று பெரியவர் அழைக்க, அவரருகில் சென்று அமர்ந்தார் சத்யா.

“எங்கண்ணே உங்க தொண்டர்களை காணோம்?” வாசகம் அவர் மட்டும் வந்திருப்பதைக் குறித்து கேலி செய்தார்.

“பொதுவிஷயத்துக்கு தான் கட்சி, தொண்டர்கள் எல்லாம். இது குடும்ப விஷயம். அதான் நான் மட்டும் வந்தேன்” என்ற சத்தியா, “சரி சொல்லிட்டிங்களா?” எனக் கேட்டார். புவியின் கையை பிடித்துக்கொண்டு.

“அதெல்லாம் ஐயாவுக்கு சம்மதம் தான்” என்ற வாசகம், “பெத்தவங்க வந்திட்டு இருக்காங்க. வந்ததும் ஆக வேண்டியதை பேச வேண்டியது தான்” என்றார்.

“எனக்கு ஒரு மகன் இருந்து கேட்டால் எப்படி எந்தவொரு தயக்கமும் இல்லாம கொடுத்திருப்பீங்க. இப்பவும் அப்படியே கொடுக்கலாம்” என்றார் சத்யா.

“ஹெவி பெர்ஃபாமன்ஸ்ஸா இருக்கே” என்று புவி அவரின் காதை கடிக்க, “அவர் வாய் திறந்து உன் லவ்வுக்கு சம்மதம் அப்படின்னு சொல்ல வேண்டாமா?” எனக் கேட்டார் சத்யா.

“ஓ… உங்க பங்குக்கு நீங்களும் நாலு டயலாக் பேசுறீங்க… பேசுங்க” என்று புவி கூறியதில் வந்த சிரிப்பை அடக்க வாசகம் படாதப்பாடு பட்டார்.

“நீயே இவ்வளவு தூரம் சொல்லும் போது, அவங்க வரவரைக்கும் காத்திருந்து சொல்லணும் என்னயிருக்கு வேலு… எனக்கு சம்மதம் தான். எம் பேத்தி சந்தோஷமா வாழுவான்னு நல்லாவே தெரியுது” என்று மனதை வெளிப்படையாக உடைத்துக் கூறிவிட்டார் வீரமுத்து.

“ம்ம்… அவ்வளவுதானடா? உன் காதலுக்காக மட்டுமே ஐயா சம்மதம் சொல்லிட்டார். இன்னும் எவ்ளோ நேரம் அவங்களை வெளியில் காருக்குள்ளவே உட்கார வைக்கிறது” என்ற சத்தியா, “வாசு நீ போ… உன் அண்ணன், மதினியை கூட்டியா” என்றார்.

சத்தியா படபடவென சொல்லியதில் மற்றவர்களுக்கு அதன் பொருள் விளங்கவே சில நொடிகள் ஆனது.

அனைவரும் ஒருவித எதிர்பார்ப்போடு வாயிலை நோக்கி பார்த்திருக்க…

“நீங்க உள்ள கூப்பிடாம என் அப்பா வரமாட்டார்” என்று வீரமுத்துவிடம் சொல்லிய புவி எழுந்து வெளியில் சென்றான்.

நொடியில் வீரமுத்துவுக்கு அனைத்தும் விளங்கியது.

சட்டென்று சுருங்கிய கண்களில் நீர் திரண்டுவிட, சத்யாவை பார்த்து ஆமாவா எனும் விதமாகக் கேட்டார்.

“நம்ம திருவோட பையன்” என்று சத்தியா சொல்ல, உடல் தள்ளாட மெல்ல எழுந்தார் வீரமுத்து.

“ஐயா!” என்று சத்தியா அவரை தாங்கிட, கை காட்டி மறுத்தார்.

அதற்குள் அனைவரும் வாயிலுக்கு சென்றிருந்தனர்.

உள்ளிருந்து வந்த யாரையும் தன் பெற்றோருடன் நின்றிருந்த ஆகாஷ்க்கு தெரியவில்லை.

‘யாருடா இவங்க எல்லாம்?’ என்று பார்த்திருக்க, அனைவருக்கும் பின்னால் வந்த முல்லையை கண்டு கை அசைத்தான்.

“உண்மையாவே இவரு எங்களுக்கு அண்ணாவா அத்தாட்சி. இவரு நம்ம பெரியப்பாரா?” மதுவும், மாதுவும் முல்லைக்கு இருபக்கம் வந்து நின்று கேட்க, இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்த முல்லை, “எனக்கும் இப்போ தான் தெரியும்” என்றாள்.

“எய்யா… எஞ்சாமி” என்று ஓடி வந்த வர்ணம், “ஆத்தா நெனப்பே இல்லையாய்யா?” எனக் கேட்டு மகனின் கன்னம் வழித்து, நெற்றி தடவி, முன்னுச்சி கேசம் ஒதுக்கி என தன் ஏக்கத்தை பாசமாய் வெளிப்படுத்தினார்.

“ம்மா” என்ற மகனின் கண்ணில் வழிந்த நீரை, தன் சேலை தலைப்புக் கொண்டு துடைத்துவிட்ட வர்ணத்தின் கண்ணீரை தன் கையால் துடைத்திருந்தார் திருமூர்த்தி.

“அண்ணே” என்று குமுதா வர, வர்ணம் அமிர்தத்தை அணைத்து, “நீங்க ரெண்டேரும் வாழுறதை கண்ணு நிறைஞ்சு பாக்கும் கொடுப்பினை இந்தக் கெழவிக்கு இல்லாமப் போச்சே” என்று வருந்தினார்.

அங்கே பாசத்தின் உணர்வுப் போராட்டம் ஒன்று அரங்கேறியது.

“என்னண்ணா ஓவர் செண்ட்டியா இருக்கு. யாரு இவங்க எல்லாம். உனக்கு டார்லிங்கை பொண்ணு கேட்கத்தானே வந்திருக்கோம்?” என புவியிடம் கேட்டான் ஆகாஷ்.

“உன் டார்லிங் உன்னோட அத்தை பெத்த ரத்தினம். அப்பாகிட்ட பேசிட்டு இருக்காங்க பாரு… அவங்க தான் உன் சொந்த அத்தை” என்றான் புவி.

“ஓ உன் மாமியாரா?” என்ற ஆகாஷை, ஏறயிறங்க பார்த்த புவி, “இது அப்பாவோட ஃபேமிலிடா” என்றான்.

“யூ மீன்… இதுதான் அந்த சொந்தபந்தமா?” எனக் கேட்டான் ஆகாஷ்.

“ஆமா…”

“அப்போ டார்லிங் என் முறைப்பொண்ணா?”

“இல்லை… உனக்கு அண்ணி.” புவி பட்டென்று சொல்லியதில் ஆகாஷிடம் அப்படியொரு சிரிப்பு.

“என்கிட்டே உரிமை உணர்வா புவிண்ணா?” என்ற ஆகாஷ், “என்னயிருந்தாலும் டார்லிங்’க்கு உங்களைவிட என்னை தான் ரொம்ப பிடிக்கும்” என்று சீண்டினான்.

“உங்க ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும்டா, அடங்கு” என்ற புவி, மது மற்றும் மாதுவை அழைத்து ஆகாஷை அறிமுகம் செய்து வைத்தான்.

இருவரும் முன்பே ஏன் சொல்லவில்லை என புவியிடம் சண்டையிட, புவி அவர்களை சமாதானம் செய்ய… அடுத்து இருவரும் ஆகாஷுடன் ஒட்டிக்கொண்டனர்.

எல்லாரும் ஓரளவுக்கு நெகிழ்ந்து கரை சேர்ந்த தருணம், வீரமுத்து வெளியில் வந்தார்.

அவரின் கூர்மையானப் பார்வை, அவரது மூத்த மகனின் மீது நிலைத்து நின்றது.

திரு அன்றுபோல் இன்று தயக்கம் கொள்ளவே இல்லை.

“ஐயா” என்று ஓரெட்டு முன் வைக்க, இரண்டடி முன் வைத்து மகனை இறுக்கமாக அணைத்திருந்தார் வீரமுத்து.

அனைவரும் நம்ப முடியாது பார்த்து நின்றனர் அக்காட்சியை.

மகன் மீதான ஏக்கத்தை ஒருநாளும் வீரமுத்து காட்டியதில்லை. வாய் வார்த்தையாக வர்ணத்திடம் கூட சொல்லியதில்லை. அதனால் வந்த விழி விரிப்பே இது.

“மன்னிச்சிடுங்க ஐயா.” கேட்ட மகனை இன்னும் தனக்குள் அழுத்தமாக இறுக்கிக் கொண்டார் பெரியவர்.

“அன்னைக்கு நான் கொஞ்சம் உன்கிட்ட தெளிவா சொல்லியிருக்கலாம்” என்ற வீரமுத்து, “எனக்கு ஒன்னே ஒன்னு தான் உன்கிட்ட சொல்லனும், “அமிர்தத்தை உனக்கு கட்டி வைக்கக்கூடாதுன்னு உன்னை எழுந்துக்க சொல்லல… அந்த சூழலில் கல்யாணம் வேணான்னு தான் எழ சொன்னேன்” என்றதோடு, “நான் சொல்லி நீ கேட்காம செய்த முதல் விஷயம்… கோபம் வந்திடுச்சு. நீயா வீட்டுக்குள்ள வந்திடுவன்னு வீம்பா நின்னுட்டேன்” என்றவர், “இது உன் வீடுடே… நான் கூப்பிடணுமா?” என்றிட…

“ஐயா” என்று உடைந்து தந்தையின் மார்பில் அழுது தன் வலி போக்கினார் திரு.

அமிர்தத்தை தன் பக்கம் அழைத்த வீரமுத்து, அவரின் தலையில் கை வைத்து கனிவோடு பார்த்தார்.

“பிள்ளையை ரொம்ப நல்லா வளர்த்திருக்க” என்றார்.

எல்லோர் முகத்திலும் ஒருவித நெகிழ்வு படர்ந்திருக்க…

“அதான் எல்லாரும் ஒண்ணு சேர்ந்தாச்சே… இந்த சோக சீனை முடிக்கலாம். ரொம்ப நேரமா வெளியில் படம் ஓட்டிட்டு நிக்கிறோம். உள்ள போவோமா?” என்று ஆகாஷ் கேட்டிட, அவனருகில் நின்றிருந்த மது, மாது “அச்சோ அண்ணா போச்சு. ஐயா திட்டப்போறார்” என்று ஒருசேர அலறினர்.

அவனை பார்த்த வீரமுத்துவிடம்,

“உங்க ரெண்டாவது பேரன்” என்றார் திரு.

அதன் பின்னர் தான் பெரியவர்களுக்கு பிள்ளைகளின் நினைவு வந்தது.

மாற்றி மாற்றி தங்களின் பிள்ளைகளைக் காட்டி, கொஞ்சி மகிழ்ந்தனர்.

“இவங்க உள்ள போகவிடமாட்டாங்க போல… நாம போவோம் வா டார்லிங். தாகமா வேற இருக்கு” என்று ஆகாஷ் சொல்ல… “சாரிடா வா” என்று அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள் முல்லை.

பெரியவர் இருவருக்கும் எப்படி பழக்கம் என்று பார்க்க,

“வனம் சொல்லிய லவ் ஸ்டோரியில் அவளோட ஃபிரண்ட் நம்ம ஆகாஷ் தான்” என்றார் வாசகம்.

அடுத்த தலைமுறையின் அன்பிலும் ஒற்றுமையிலும் தானே குடும்பத்தின் வேர் உள்ளது.

மகன் மற்றும் அவனின் மனைவியை தானே கை பிடித்து நிலைப்படித் தாண்டி உள் அழைத்துச் சென்றார் வீரமுத்து.

புவிக்கு நெஞ்சம் நிறைந்தது.

ஆகாஷ் தன் தம்பி, தங்கைகளுடன் ஐக்கியமாகி விட்டான். தன்னை பெரியவனாக நடத்தும் இருவரையும் அவனுக்கு நிரம்பவே பிடித்தது.

வீட்டிற்குள் சென்று அமர்ந்தவர்களிடம் குடும்பம் ஒன்றாகிய சந்தோஷம் நிரம்பி ததும்பியது.

அதே சந்தோஷத்தோடு புவி, முல்லையின் திருமணத்திற்கான நாள் குறித்தனர்.

error: Content is protected !!
Scroll to Top