அத்தியாயம் 16
மூன்று மாதங்களுக்குப் பின்னர்…
வீரமுத்து தன் மூத்த மகனை விட்டு இனி பிரிந்திருக்க முடியாதென தன்னோடே வைத்துக் கொண்டார். அமைச்சர் சத்தியாவின் மூலம் தன்னுடைய அரசு ஆசிரியர் பணியை தேனிக்கு எளிதாக மாற்றிக்கொண்டார் திருமூர்த்தி.
ஆகாஷூம் முல்லையின் அலுவலகத்திலேயே வேலைக்கு அமர்ந்திட்டான்.
புவியும் இங்கிருந்து தான் பணிக்கு செல்கின்றான்.
எங்கோ ஓர் மூலையில் யாருமின்றி தனித்திருந்த நால்வர் தங்கள் கூட்டில் அழகாய் பொருந்தி இருந்தனர். வீரமுத்துவுக்கு இப்போது தான் தன்னுடைய குடும்பம் முழுமையடைந்த திருப்தி.
அன்று தான் புவியாழன், வனமுல்லை திருமணம் அதீத ஆனந்தமாய், பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு நிறைவாய் நடந்து முடிந்திருந்தது.
ஒரே வீட்டில் இருந்த போதும் பெரியவர்கள் முன்னிலையில் காதலின் ஆர்ப்பரிப்பின்றி அமைதியாகத்தான் நடந்து கொண்டனர் புவி மற்றும் முல்லை.
அவர்களின் காதல் எல்லாம் விழிகளோடும், முல்லை அவனுக்குத் தெரியாது அவனது அறையில் வைத்திடும் காகிதத்திலும் தான் தொடர்ந்து கொண்டிருந்தது.
தாலி கட்டியதும் ஒன்றாக இணைந்து பூஜை அறையில் தெய்வத்தை வணங்கிய போது மனைவியை புவி பார்த்தது.
ஆகாஷின் அறையில் தீபிகா உட்பட ஐவரும் கொட்டமடித்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்கும் சிரிப்பின் சத்தம் அவ்வீட்டின் உயிர்ப்பை அதிகரித்துக் கொண்டிருந்தது.
முன்பிருந்த இறுக்கம் தற்போது வீரமுத்துவிடம் இல்லை. பிள்ளைகளிடம் அன்பாக இருப்பவர் தற்போது கனிவோடும் பழகினார்.
மதிய உணவின் போது புதுமணத் தம்பதியரை ஒன்றாக அமர வைத்து விருந்து பரிமாறினர். வெகு நேரத்திற்கு பின் மனைவியை மீண்டும் அப்போது தான் பார்த்தான் புவி.
உணவோடு சேர்த்து தன்னவளையும் பார்வையால் விழுங்கினான். அவளுக்குத்தான் அவனின் அண்மை அவஸ்தையைக் கூட்டியது.
“மாமா பிளீஸ்…”
“என்னவாம்? முல்லைக்கு என்ன பண்ணுதாம்?” என்றவனின் குறும்புப் பேச்சில் வேக வேகமாக உணவை உண்டு முடித்து எழுந்து கொண்டாள்.
அவளின் படபடப்பு அவனில், அவளை அள்ளிப் பருகும் வேட்கையை அதிகரித்தது.
“கொஞ்ச நேரம் தூங்கு தங்கம்” என்று அமிர்தம் மகனை அறைக்குள் அனுப்ப, “ம்மா முல்லைகிட்ட பேசணும்” என்றான்.
“இப்போ அவளை உன் ரூமுக்கு அத்தை விடமாட்டாங்க தங்கம்” என்ற அமிர்தம், சுசிலா கூப்பிட அங்கிருந்து சென்றார்.
சுசிலா, அமிர்தம் சகோதரிகளாக இணைந்து குமுதாவுடன் தோழியாய் பழகினர்.
பெண்களின் ஒற்றுமையில் தானே வீட்டின் அமைதி உள்ளது.
புவி அறைக்குள்ளே குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந்தான். தன்னை தனியாக விட்டுவிட்டு அவர்கள் மட்டும் இணைந்து கதை பேசி நேரத்தைப் போக்குவது வேறு புவிக்கு கடுப்பாக வந்தது.
மாலை நேரம் புவிக்கு அவசர அழைப்பு…
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு விவசாயிகள் தற்கொலை முயற்சிக்கு ஈடுபடுவதாக தகவல் வர புவி அங்கு செல்ல வேண்டிய அவசியம்.
ஒருவர் தீக்குளித்து விட்டார் என்று சொல்ல… புவி காக்கி உடை அணிந்து கீழே வந்தான்.
“என்னப்பு இன்னைக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்தில் சடங்கு இருக்கே சாமி” என்றார் வர்ணம்.
“நீங்க என்ன பண்ணனுமோ முல்லையை வைத்து பண்ணுங்க பாட்டி. நைட் வந்துடுறேன்” என்று புவி சொல்ல, அவனின் சூழல் புரியாது பெண்கள் போகக்கூடாதென தர்க்கம் செய்தனர்.
வீரமுத்து தான் பேரனின் நிலமை உணர்ந்து, அவனின் பாதுகாப்பை வலியுறுத்தி, செல்லுமாறுக் கூறினார்.
“தேங்க்ஸ் தாத்தா” என்ற புவியின் பார்வை ஆகாஷின் அறையில் நிலைத்தது.
“போ அப்பு… சொல்லிட்டு கிளம்பு” என்றார் வர்ணம்.
புவி அறைக்குள் காக்கி உடையில் செல்ல, மற்ற நால்வரும் எவ்வித கேலி செய்யாது வெளியேறினர்.
தாலி கட்டியத் தோற்றத்திலே இன்னும் இருந்தாள் முல்லை. வைத்திருந்த பூக்கள் வாடியிருந்தன. முகத்தில் அப்பட்டமான சோர்வு. முடிக்கற்றை ஆங்காங்கே சிலுப்பிக் கொண்டிருந்தது. அவளின் அத்தோற்றமும் அவனை அள்ளிக்கொள்ளத் தூண்டியது.
“என்னாச்சு மாமா?”
அவளின் முன் நெருங்கி நின்றவன்,
“எமர்ஜென்சி… போகணும். நைட் வர முடியுமா தெரியல” என்று தயங்கித்தான் கூறினான்.
இருவருக்குமே அந்நாளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகம். ஒருவருக்கொருவரின் தேடலை உணர்ந்தே இருந்தனர்.
சட்டென்று முகத்தில் படர்ந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்ட முல்லை…
“நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.
இடையோடு கையிட்டு அணைத்தவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து, “லவ் யூ டி” என்று வேகமாக வெளியேறினான்.
“இங்கு கலவரமாகும் போல தீபி, நாளைக்கு பஸ்லாம் கூட கஷ்டம். நீ உங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிடு” என்ற புவி, “தாத்தா அவ இங்க பாதுகாப்பா இருக்கான்னு அவங்க பேரண்ட்ஸ் கிட்ட நீங்களே பேசிடுங்க” என்று அனைவருக்கும் பொதுவாக தலையசைத்து தன் பணிக்கு விரைந்திருந்தான்.
______________________________
அடுத்த நாள் இரவு ஏழு மணி போல் தான் புவி வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்த பின்னர் தான் அனைவருக்கும் நிம்மதியாயிற்று.
நடந்த விஷயம் அப்படி. தேனி நகரத்தையே ஆட்டி வைத்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
விவசாயிகள் செய்த போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக கலவரமாகியிருக்க அதில் சில உயிரிழப்புகளும். அனைத்தையும் சரி செய்து, மீண்டும் நகரை அமைதி சூழலுக்கு மாற்றி அமர்வதற்குள் புவிக்கு போதும் போதுமென்றானது.
ஓய்ந்து களைந்த தோற்றத்தில் வந்தவன், தனக்காக காத்திருந்த அனைவருக்கும் பளீரென புன்னகைத்து, தன்னவளைத் தேடினான்.
“மதினி உங்க ரூமில்.” மாதேஷ் சத்தமின்றி முணுமுணுத்தான்.
மகனின் தேடல் புரிந்த அமிர்தம், “குளிச்சிட்டு வா தங்கம்” என்று அறைக்கு அனுப்பி வைத்தார்.
புவி அறைக்குள் நுழைய,
“வனம்” என்று முல்லையை வெளியில் அழைத்திருந்தார் வர்ணம்.
அவரின் குரலுக்கு வேகமாக வந்த முல்லை வாயில் அருகே அவன் மார்பு இடித்து நின்றாள்.
“வந்துட்டிங்களா?” என்று முல்லை கேட்டு முடிக்கும் முன்பு மீண்டும் அழைத்திருந்தார்.
“இந்த கெழவியை” என்று புவி பல்லைக் கடிக்க, முல்லை களுக்கென சிரித்தாள்.
“சிரிச்சு படுத்தாதடி. இப்போவே எதும் செய்திடப் போறேன்” என்ற புவி உள்ளே செல்ல முல்லை வெளியில் வந்தாள்.
“இனி ராவுக்கு ரூமுக்குள்ள போயிக்கலாம். நீ உன் ரூமுக்கு போ” என்றார் வர்ணம்.
புவி குளித்து வர, கண்ணாடி முன்பு மடிக்கப்பட்ட வெள்ளை காகிதம்.
சிறு சிரிப்போடு எடுத்துப் பார்த்தான்.
“கிஸ் பண்ணத் தோணுதே எஸ்பி சார்” என கண்ணடிக்கும் இமோஜி சிரித்திட, இரு முல்லை மலர்களுக்கு அருகில் புதிதாய் பூமியின் உருண்டை.
வலது கை இரு விரல்களால் இடதுபக்க மீசை நுனியை திருகியவனின் கன்னம் குவிந்தது.
“அண்ணா…” ஆகாஷ் அழைத்திட வெளியில் வந்தான்.
“அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்துடுங்க” என்றார் குமுதா.
முல்லை கிளம்பி வர இருவரும் கோவிலுக்கு சென்றனர்.
தெய்வத்தை வணங்கிவிட்டு மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அதுவரையிலும் இருவரிடமும் பேச்சென்பது இல்லை. ஊருக்குள்ளிருக்கும் கோவில் என்னபதால் கோவிலுக்குள் அனைத்தும் தெரிந்த முகமாக இருக்க, எல்லாரும் தங்களைப் பார்க்கும் தோற்றம். முல்லையால் இயல்பாய் அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை.
“வீட்டுக்கு போகலாமா?”
“கொஞ்ச நேரம் இங்க… என் பக்கத்தில் இரு முல்லை. வீட்டுக்குப் போனால் திரும்ப கிழவி பிரிச்சு வச்சிடும்” என்றவன், பூசாரி கொடுத்த குங்குமத்தை எடுத்து அவளின் வகிட்டில் அழுத்தமாக வைத்தான்.
சில்லென்ற இதம் உச்சி தொட்டு பாதம் வரை சிலிர்ப்பை உண்டாக்க, அவளின் இமை தானாக மூடியது.
“தோணுச்சுன்னா கொடுத்திடணும் முல்லை” என்றவனின் மூச்சுக்காற்று முகம் மோத, பட்டென கண்கள் திறந்தவள், “அச்சோ மாமா கோவில்” என பதறி எழ, தடுமாறி அவன் மடி விழுந்தாள்.
புவியின் கரம் முல்லையின் வெற்றிடை பதிந்தது.
“விடுங்க மாமா” என்றவள் அவன் மடிமீது நெளிந்திட…
“அநியாயம் பன்ற முல்லை” என்று கண்ணடித்தான்.
“யாரும் பாப்பாங்க… விடுங்க” என்றவள் சுற்றி பார்க்க, “அடியே… உன்னை கொல்லப்போறேன்” என்ற புவியின் குரல் மாற்றத்தில் அவன் முகம் பார்த்த முல்லை, அவன் தன்னை பிடித்திருக்கவில்லை எனத் தெரிந்து வேகமாக எழுந்து விலகி நின்றாள்.
“போலாமா?” எழுந்த புவி கேட்டிட, தலை குனிந்தபடி “ம்ம்” என்ற முல்லை வேகமாக முன் செல்ல…
“புருஷன் வேண்டாமா?” எனக் கேட்டு மூரல்கள் மின்ன அதேயிடம் நின்றிருந்தான்.
திரும்பி புவியின் பக்கம் வந்த முல்லை…
“இன்னைக்கு உங்களுக்கு என்னாச்சு” எனக் கேட்டு அவனின் கைப்பிடித்து நடந்தாள்.
“என்னென்னவோ ஆகணுமே முல்லை” என்றான். புவியின் பார்வையில் அப்படியொரு வசீகரம்.
“சும்மா வாங்க மாமா” என்ற முல்லை அடுத்து அவன் பேசிய பேச்சுக்களில் எல்லாம் அப்பட்டமாக நாணத்தைக் காட்டியிருந்தாள்.
வீடு வந்தும் அவளின் செம்மை குறையவில்லை.
இரவு உணவு முடிந்தும் புவியின் பேச்சின் தாக்கம் முல்லையிடம் குறையவில்லை.
“டார்லிங்…” என்று வந்த ஆகாஷ், அவளின் வெட்க முகம் கண்டு முறுவல் கொண்டவனாக வெளியேறியிருந்தான்.
இளையவர்கள் மூவரையும் விரைந்து உறங்க அனுப்பியிருந்தனர்.
அறைக்குள் செல்வதற்கு முன்பு புவியிடம் வந்த ஆகாஷ், “இனி நானில்லாம கிச்சன் ரொமான்ஸ்” என்று கண்ணடித்துச் சென்றான்.
புவி முகத்தில் தோன்றிய வெட்கத்தை மறைக்க முடியாது திணற,
“நாங்க எதுவும் பார்க்கலப்பா” என்று அவனின் இருபுறமும் வந்து நின்றனர் இரு திருவும்.
“அப்பாஸ்” என்று ஒற்றை உள்ளங்கையால் புவி தன் முகத்தை மறைக்க…
கண்டும் காணாது இருந்த வீரமுத்துவுக்கும் பேரனின் வெட்கத்தில் புன்னகை விரிந்தது.
“விடுங்கடே!” என்று பெரியவர் சிரிப்போடு நகர்ந்திட… “மானம் போச்சு” என்று முனகினான் புவி.
“வா அப்பு எல்லார்கிட்டவும் ஆசி வாங்கிக்கங்க” என்று வர்ணம் அழைக்க, வீரமுத்து வர்ணம், திருமூர்த்தி அமிர்தவள்ளி, திருவாசகம் சுசிலா, குமுதா என அனைவரிடமும் ஜோடியாய் வணங்கி ஆசிபெற்று நிமிர்ந்தனர்.
“நீ ரூமுக்கு போ தங்கம்” என்ற அமிர்தம் மகனின் கன்னம் வழித்து முத்தம் வைத்து அனுப்பிட, “எங்க அட்வைஸ் எதும் வேணுமா மகனே” எனக் கேட்டார் திருவாசகம்.
புவி இருகரம் குவித்து தலைக்கு மேல் கும்பிட,
“பிள்ளையை படுத்தாதிங்கடா” என்று பெரியவரே அடக்கமாட்டது சிரித்துவிட்டார்.
புவியின் அருகில் சென்ற திரு, அவனின் கையில் சாக்லெட்டை கொடுத்து, “தூக்கம் வந்தா வாயில் போட்டுக்கோ” என்று சொல்ல…
“ப்பா” என்று கத்தியே விட்டான் புவி.
“வயசானா அறிவு மங்கிப் போகுமா என்ன? புள்ளைக்கிட்ட என்ன விளையாட்டு? மூனேரும் போய் முடங்குங்க” என்று வர்ணம் அதட்டிட, மூன்று பெண்களிடமும் சிரிப்பு.
வர்ணத்தின் பார்வைக்கு அனைவரும் தெறித்து ஓடியிருந்தனர்.
புவி வர்ணத்துடன் நின்றிருந்த மனைவியை பார்த்தவாறே தன்னுடைய அறைக்குள் செல்ல,
“வாத்தா… வந்து சாமிய கும்பிட்டு கிளம்பு” என்றார்.
முல்லை கண் திறக்க அவளின் நெற்றியில் விபூதி பூசியவர், கையில் பால் சொம்பை கொடுத்து அனுப்பி வைத்தார்.
முல்லை அறை வாயில் செல்லும் வரை பார்த்து நின்ற வர்ணம்,
“என் குடும்பம் இதே ஒத்துமையோடும் அன்போடும் காலத்துக்கும் இருக்கணும் தாயி. என் வம்சம் மெம்மேல தழைக்கணும்” என வேண்டிக்கொண்டு உறங்கச் சென்றார்.
அறைக்குள் வந்த முல்லையை, தான் எங்கென்றெல்லாம் புவி தேட வைக்கவில்லை. அவனே வந்து அவளின் தோளில் கைபோட்டு, அழைத்துச் சென்றான்.
மெத்தையில் அவளை அமர்த்தியவன், தானும் அருகில் அமர்ந்து கையில் கன்னம் தாங்கி அவளையே பார்த்திருந்தான்.
தரையில் பட்டும் படாமல் ஒட்டியிருந்த தங்களின் பாதத்தையே பார்த்திருந்த முல்லை…
“பால்” என்றாள். கையிலிருந்த சொம்பை அவனிடம் நீட்டி.
“அங்க வச்சிடு” என்று தன்னிலையில் மாற்றம் இல்லாது புவி சொல்ல, முல்லை எட்டி மேசையில் வைத்தாள்.
நிமிடங்கள் ஓடியது.
புவியின் பார்வையில் மாற்றமில்லை.
மெல்லிய பதட்டம் அவளிடம். அவளின் உடலில் மென் தள்ளாட்டம்.
“எப்படி கண்டுபிடிச்சிங்க?” அவளுக்கு இருக்கும் மிகப் பெரிய கேள்வி அது.
புவி அவளின் கையுயர்த்தி, அணிந்திருந்த ஃப்ளுயூட் ஓவியங்கள் தீட்டப்பட்ட கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாக தன் விரலால் தள்ளினான்.
“புரியல?” என்று முல்லை சொல்ல…
எழுந்து சென்று வார்ட்ரோப் திறந்த புவி கண்ணாடி குடுவை இரண்டு எடுத்து வந்தான்.
பார்த்ததும் அவளுக்குத் தெரிந்தது. மடிக்கப்பட்ட வெள்ளை காகிதங்கள்.
ஒரு குடுவையின் மேலிருந்து உடைந்த கண்ணாடி வளையளின் துண்டுகளை எடுத்து அவளிடம் காட்டினான்.
“இது தான் உன்னை எனக்குக் காட்டிக் கொடுத்துச்சு” என்றான் புவி.
அன்று வண்டியை ஸ்டார்ட் செய்திட ஆகாஷ்க்கு புவி உதவி செய்து கொண்டிருக்க, அவன் பார்த்துவிடக் கூடாதென்ற பதட்டத்தில் புவியின் காரில் கடிதத்தை முல்லை தூக்கிப் போடும்போது, சன்னலில் பாதி மேலேற்றியிருந்த கண்ணாடியில் அவளின் கை இடித்து, அவள் அணிந்திருந்த வானவில் நிற கண்ணாடி வளையல் உடைந்து, அவன் அமரும் சீட்டில் அவள் போட்ட கடிதத்தின் மீது துண்டுகளாக விழுந்திருந்தது.
இந்த வளையல் முல்லை அணிந்து மட்டும் தான் புவி பார்த்திருக்கிறான். மற்ற பெண்களை அவளளவுக்கு கவனித்து பார்த்ததுமில்லை. ஆதலால் அவனறிந்து அவ்வளையல் அணிந்திருப்பது அவள் மட்டுமே! அதனால் சற்று முன்னர் அவள் பார்த்த பார்வையில் ஒரு அனுமானம். அவளாகத்தான் இருக்குமென்று. அந்த அனுமானம் உண்மையாகியது வீட்டுக்கு வந்ததும்.
‘உண்மையில் இது அவள் தானா? அவள் மட்டும் தான் இந்த வகை வளையல் போடுவாளா என்ன?’ என கூடத்து இருக்கையில் அமர்ந்து புவி யோசனையில் இருக்க, முல்லையை டிரெயின் ஏற்றிவிட்டு ஆகாஷ் வீடு வந்தான்.
புவியின் அருகில் ஆகாஷ் அமர,
“முல்லை டிரெயின் கிளம்பிடுச்சா சின்னக்குட்டி?” என அமிர்தம் கேட்டதில் புவியின் நெற்றி சுருங்கியது.
“முல்லை?” தம்பியை கேள்வியாக நோக்கினான்.
“வனம்… வனமுல்லை. டார்லிங் முழுப் பெயர்” என்று ஆகாஷ் சொல்ல, காகிதத்தில் வரையப்படும் மலருக்கான பெயர்காரணம் தெரிந்தது.
அவனுள் இடியும் மின்னலும் ஒருங்கே அகம் நிறைத்து, இதழில் புன்னகையையும் விழிகளில் கண்ணீரையும் தோற்றுவித்தது.
இருவருக்கும் தன் முகம் காட்டாது அறைக்கு ஓடி வந்தவன், இடையில் கைக்குற்றி வானோக்கி தலை உயர்த்தி ஊப் என்று இதழ் குவித்து காற்றாய் வெளியேற்றியிருந்தான் தனது மொத்த அழுத்தத்தையும்.
புவி அன்றைய நாளை விவரிக்க…
“ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்” என்றாள். முகம் வாடி.
“ரொம்ப…” என்று அவன் இழுத்து சொல்லியதில், “உங்களுக்கு நான் விளக்கம் கொடுக்க தேவையில்லை தானே?” என்றாள்.
புவியின் இதழ் மீசையோடு சேர்ந்து விரிந்தது.
“இதெல்லாம் நான் எழுதினதா?”
“ம்…” என்ற புவி, அவளின் கையில் ஒரு குடுவையைக் கொடுத்தான்.
“இதெல்லாம் உனக்கான பதில். நான் எழுதியது” என்றான் புவி. முல்லையின் விழிகள் விரிந்து கொண்டன.
“மாமா!”
“உனக்கு வேணுன்னா என் பதில் வேணாமா இருக்கலாம். ஆனால் என்னோட தவிப்பை உன்னைத் தவிர வேற யார்கிட்டவும் என்னால் காட்டிட முடியாதே!” என்றான் புவி. அவனிதழில் அன்றைய வலிகளுக்கான தடம்.
“மாமா!” கன்னம் வழிந்த அவளின் நீரை துடைத்தவன், “உனக்கு நான் புரிவேன் தெரியும். ஆனால் எனக்கு என்னை உன்கிட்ட புரிய வச்சிட்டேன் தெரியணுமே… படி முல்லை” என்றான். அத்தனை கரகரப்பாய் அவனது குரல். அதில் ஆழ்ந்து அமிழ்ந்துதான் போனாள் அவன் பக்க வலிகளை உணர்ந்தவளாக.
ஒவ்வொன்றாய் எடுத்து பிரித்துப் படித்தாள். அத்தனையும் புவியின் காதலின் கணங்கள் கனமாய் கூடியதன் பிரதிபலிப்பு.
முல்லையின் நெஞ்சம் அவனின் தனக்கான ஏக்கங்களில் சில்லு சில்லாய் உடைந்து சிதறிக் கொண்டிருந்தது.
புவியின் வலிகளை உள்வாங்கி கண்ணீரை மருந்தாக்கிக் கொண்டிருந்தாள். அவனது ரணங்களுக்கு.
“அச்சோ மாமா முடியல” என்று ஒரு கட்டத்தில் அவன் மார்பில் தன்னை மொத்தமாக புதைத்திருந்தாள். பெரும் கேவலோடு. அவளின் ஈர விழிகள் அவனுள் சூட்டைப் பரப்பியது.
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லை முல்லை” என்ற புவி,
“முல்லையோட வாசம் இந்த புவி முழுக்க வீசணுமே” என்றான்.
“மாமா” என்று சிணுங்கிய முல்லை, தாவி அவனது கழுத்தோடு கட்டிக்கொண்டாள்.
“லவ் யூ… லவ் யூ மாமா. நிறைய நிறைய லவ் யூ. வேறென்ன சொல்லனும் தெரியலையே மாமா” என்று புவியின் முகம் முழுக்க தன் இதழால் போர் நடத்தினாள்.
“எவ்ளோ தேட வச்ச நீ?” என்று அவளின் நெற்றி முட்டியவன் மெல்ல மெல்ல அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டிட, “மாமா” என்று தொய்ந்து அவனோடு மஞ்சம் சரிந்தாள்.
வாசம் முகிழ்க்கும் வண்டாய் முல்லை மலரவளின் தேகம் தீண்டியவன், அவளின் அகத்திலும் தன் தடத்தை அழுத்தமாகப் பதித்திருந்தான்.
கரங்களின் பிணைப்பில் வானவில் துண்டங்களாய் சிதறி வெடித்த வானவில் கண்ணாடி வளையல்கள் இருவரின் ஆலிங்கத்தின் இன்பம் தாங்காது படுக்கையில் மரித்துக் கிடந்தன.
முல்லை வாசத்தை புவி முழுக்க பரவ விட்டே, தன் முல்லையை கொடியென தன் தேகம் சுற்றிக்கொண்டு களைத்து, சுவாசமாய் கலந்து உச்சம் தொட்ட நிலையிலும் விலக்கிடாது இணைந்து உருக்குலைத்தான்.
“மாமா…” காற்றாய் மோதிய தேன் சொல், மீண்டும் ஒரு தேடலுக்கு பாதை அமைத்து, வாழ்நாள் முழுமைக்கும் முடிவிலா தேடலில் அவனை அவளுள் கட்டுண்டது.
“முல்லை வாசம் மயக்குது.”
மார்பில் தலை சாய்த்து படுத்திருந்தவள் அவனது வார்த்தையில் மேலும் ஒண்டினால்.
அழுத்தம் கூடிட, புவியிடம் “ஷ்ஷ்” என்ற சத்தம்.
“என்னாச்சு மாமா?” என்ற முல்லை பதறி எழ, இழுத்து தன் மார்போடு புதைத்துக் கொண்டான்.
“உன்னோட வளையல் எல்லாம் உடைஞ்சிருக்கு முல்லை” என்றான்.
“எல்லாமேவா” என்றவள் தன்னிரு கைகளையும் பார்க்க… மொத்தமும் மிச்சமின்றி உடைத்திருந்தான்.
“என்ன மாமா இப்படி பண்ணிட்டிங்க?” என்றவள் எழுந்து சிணுங்கிட, எட்டி மேசை மீதிருந்த பெட்டியை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
கிட்டதட்ட நூறு வானவில் வளையல்கள். விடிவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் மின்மினியாய் மின்னிட, அவளின் விழிகள் ரசனையாய் விரிந்தது.
“தேன்க்ஸ் மாமா” என்றவள் எட்டி விளக்கைப் போட, இருவரின் நிலை கண்டு…
“அச்சோவ்…” என மின்விளக்கை அணைத்து அவனில் அமிழ்ந்திருந்தாள்.
“இனி மிச்ச சொச்சம் கூட இல்லை முல்லை” என்ற புவியின் சிரிப்பு அவளின் இதழுக்குள் அடங்கியது.
புவியின் புன்னகைப் போன்று முல்லையினுள் அடங்கி கரை சேர அவனது வாழ்வின் பயணம் இனிதே துவங்கியது.
உருகும் நேசத்தின் தடம் யாவும் உடைந்த நெஞ்சமாய் வலி சுமந்தே எல்லையில்லா இன்பம் கொண்டன.
உடைந்த நெஞ்சமாய் ரணங்கள் கடந்து உருகும் நேசமாய் என்றும் உருக்குலையாது உருகிடும் வானவில் துண்டங்களாக புவியாழன் வனமுல்லை காதல் நம்மில் என்றும் முல்லை வாசமாய்,
புவி சுழலும் சுவாசமாய்.
சுபம்.