என் ஆயுள் நீயே 1

என் ஆயுள் நீயே 1

காரிருள் விலகிய, பாதியிரவு கடந்த கருமையும் வெண்மையும் கலந்த நேரம்.

ஆந்தையின் அலறளும், இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும் சில்லென்ற காற்றில் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது.

எங்கும் கும்மிருட்டு. அச்சமும் அச்சம் கொள்ளும் இருளான இருள்.

கிராமத்து கடலோர பண்ணைப்பகுதி அது.

தென்னந்தோப்பினை கடந்து, உப்பு வயல்களின் வரப்பின் மீது கால் வைத்த உதயனின் கண்கள், கருமை பூசிய அவ்விடத்தை பார்வையால் அலசியது.

குளிர் காற்று வேறு மேனியை நடுங்கச் செய்திட, தான் தேடும் நபர் எங்கென்று விழிகளை சுழட்டியவனுக்கு, அத்தனை அச்சம். அந்நபர் தன் கண்ணில் பட்டுவிட வேண்டுமென்று. அவனின் உயிராயிற்றே அவர்!

“பட்டு” என்று அவனின் அதரங்கள் பிரிந்து உச்சரித்திட, வேட்டியின் ஒரு முனை நுனியை தூக்கி பிடித்து வரப்பில் நடக்கத் துவங்கினான்.

பரந்த பண்ணை முழுவதும் தேடிவிட்டான், தேடி வந்த ஆள் எங்குமில்லை. பார்க்காது விட்ட ஒரே இடம் கடலோரப் பகுதி. அங்கு தவறான எண்ணத்தில் சென்றிருக்க வாய்ப்பில்லை எனும் அதீத நம்பிக்கை இருந்தபோதும் மனதில் ஒருவித அலைப்புறுதல்.

“தன் எண்ணம் சரியாக இருக்காது” என்று வாய்விட்டே சொல்லிக் கொண்ட உதயனுக்கு, அங்கு செல்லவே கால்கள் தயக்கம் கொண்டன.

சென்று பார்க்கத்தான் வேண்டும். அழுகையோடு பார்த்தது இன்னும் வலியாகிறது அவனுள்.

“டேய் எங்கடாம்மா இருக்க?” என்ற உதயனுக்கு கண்கள் கலங்கியது. எத்தனை இனிமையாய் தொடங்கிய நாள். இப்படியானதற்கு காரணம் தெரியாது, பதில் வழங்க வேண்டிய நபரைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

உப்பளம் கடந்து கடல் மணலில் கால்கள் புதைய அடி வைத்து கடல் நீர் பட்டுத் தெறிக்கும் பாறைகளின் அருகே வரவர அவனின் இதயத் துடிப்பு, அவனுக்கே கேட்டது. இதயம் பதைப்பில் வெளியே எம்பி குதித்திடுமோ எனும் நிலையில் அவன்.

கலங்கிய கண்ணின் திரையில் வரிவடிவம். இமைகளை சிமிட்டி பார்வையைக் கூர்மையாக்கினான்.

பெரிய கரும்பாறை உச்சியில், ஒரு உருவம் கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருப்பது தெரிந்தது.

அதுவரை இழுத்து பிடித்திருந்த மூச்சினை ஆசுவாசமாக வெளியேற்றினான். இடையில் கைகளைக் குற்றி வானோக்கி முகம் உயர்த்தியிருந்தவனின் உதடு குவிந்திருக்க, கண்ணின் ஓரம் நீர் கசிந்தது.

“பட்டு” என்று இதழ் பிரித்த உதயன் வேக எட்டுக்கள் வைத்து அருகில் சென்றான்.

அலைகள் உயர்ந்து பாறை மோதி விளையாடிட, உடல் நனைவதை கூட உணராது கால்களைக் கட்டிக்கொண்டு, மடியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தாள் நனியிதழ்.

அருகில் சென்ற உதயன், அவளின் தோளில் கை வைத்த அடுத்த கணம், அவனின் இடையில் கையைச் சுற்றி, வயிற்றில் முகம் அழுந்த, அவனிடம் ஆறுதலாய் ஒண்டினாள்.

“பட்டு…”

“அண்ணா பிளீஸ்… முடியல!”

தங்கையின் நிழல் மீது எறும்பு ஊர்ந்தாலும் துடித்து விடும் உதயனுக்கு, தங்கையின் வலி நிறைந்த வார்த்தைகள் உயிரை உறைய வைத்தது.

ஒரு கரத்தை நனியிதழின் தோள் சுற்றி அரவணைத்த உதயன், மற்றொரு கரத்தை அவளின் தலையில் வைத்து அழுத்தம் கொடுத்தான்.

“நான் என்னடா பண்ணனும்?”

மெல்ல அவனிலிருந்து பிரிந்து, முகம் பார்த்தாள்.

சொல்ல முடியா வலி அவளின் முகத்தில். உதடு துடிக்க, வார்த்தைகளற்று சகோதரனின் முகம் பார்த்தவள்,

“கஷ்டப்படுத்துறனா செல்வா?” எனக் கேட்டாள்.

தங்கையின் தலும்பிய குரலில் முற்றிலும் உடைந்து உள்ளுக்குள் கதறினான் உதயச்செல்வன்.

மனதில் சகோதரியின் நிலை குறித்து அத்தனை வலிகள் நிரம்பியிருந்த போதும், அவளின் கேள்விக்கு இல்லையென்று இடவலமாக தலையசைத்திருந்தான்.

“பொய் சொல்றீங்க” என்ற தங்கையின் கன்னங்கள் இரண்டையும் தன்னிரு உள்ளங்கையில் தாங்கி, நெற்றி முட்டிய உதயன், “நிஜமா இல்லைடா பட்டு” என்றான்.

பொய் என்று அவளுக்கும் தெரியும். அவனுக்கும், தான் இல்லையென்றதை உண்மையென அவள் நம்பவில்லையென்று தெரியும். இருந்தாலும் அவளால் கேட்காது இருக்க முடியவில்லை. அவனால் உண்மையை சொல்ல முடியவில்லை.

“நான் பேசட்டுமா பட்டு?”

“வேண்டா அண்ணா.” பட்டென்று மொழிந்திருந்தாள்.

“வேறென்ன செய்யப்போற?”

“தெரியல.”

“ம்ம்” என்ற உதயன், அவளருகில் அமர்ந்தான். வாகாய் அண்ணனின் தோளில் தலை சாய்த்துக் கொண்டாள்.

“என்ன சொன்னான்?” அத்தனை கடுப்போடு வெளிவந்தது உதயனின் கேள்வி.

“முதல் முறையவிட, இது ரொம்பவே வலிக்குது செல்வா” என்ற நனியிதழின் முகம் பார்த்த உதயன், அவளின் வலி போக்கும் வழியறியாது தவித்தான்.

எப்போதும் அண்ணா அண்ணா என்று அத்தனை அன்போடு அழைக்கும் நனியிதழ், தான் நெகிழும் நொடிகளில், தன்னால் முடியாத நிலையில், வருத்தம் கொள்ளும் வேளையில், உடைந்து நிற்கும் தருணங்களில் மட்டுமே வலி நிறைந்து செல்வா என்று அழைத்திடுவாள்.

தங்கையின் செல்வா என்றழைப்பு எத்தனைக்கு எத்தனை பிடிக்குமோ, அதே அளவிற்கு அவள் அவ்வாறு கூப்பிட்டுவிடக் கூடாதென இறைவனிடம் தினமும் வேண்டிக்கொள்வான்.

உதயச்செல்வனின் உயிர் நனியிதழ். அவனின் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அவனது தங்கைக்காகவே நகர்கிறது. பெரும் சொந்தம் உள்ளபோதும், அவனின் உலகம் உடன்பிறந்தவள். அவளுக்கு அடுத்து தான், பெற்றோரும்.

முதல்முறை அவள் செல்வா என்று அழைத்த கலங்கிய ஒலி, இந்த நொடியும் அவனது செவிகளில் எதிரொலித்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு,

நனியிதழின் கல்லூரிப் படிப்பின் இறுதிநாள்.

அன்றும் இப்படித்தான் கலங்கி துடித்தாள்.

அன்றும், இன்றும் அவளின் வலிக்கு ஒரே காரணம் காதல். முதல் வலியிலிருந்து மீண்டு வந்துவிட்டாள் என்று நினைத்திருக்க, நீ இன்னும் அவனிலிருந்து மீளவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை வலிக்க உணர்த்தியது இன்று அரங்கேறிய நிகழ்வு.

அதில் பெண்ணவள் மொத்தமாக துவண்டு உருக்குலைந்துப் போக, அண்ணனவன் ஒன்றும் செய்திட முடியாது, தங்கையின் கண்ணீரில் தன் ஜீவன் வற்ற வருந்துகிறான்.

பெரும் உயரத்தில், அதீத செல்வ செழிப்போடு இருந்து என்ன பயன்? உடன் பிறந்தவளின் கண்ணீர் போக்க முடியவில்லை. வேறெதுவும் என்றால் பணம் கொடுத்து வாங்கி கொடுத்துவிடலாம்.

இது காதலாயிற்றே!

அன்பை விலை கொடுத்து பெற முடியுமா? தானாக துளிர்க்க வேண்டிய நேசத்தை, பிடுங்கிக் கொள்ளத்தான் முடியுமா?

தங்கையின் மனம் விரும்பும் முன்னே, அவளின் எண்ணத்திற்கு உயிர் கொடுப்பவன். அவள் உயிராகக் கேட்கும் ஒன்றை கரம் சேர்த்திட முடியாது வதை கொள்கிறான்.

உதயச்செல்வன்… கன்னியாகுமரிக்கு அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள அகத்தீஸ்வரம் ஊர். பெரிய குடும்பம். உறுப்பினர்களில் மட்டுமல்ல, அங்கு கஜமுகன் என்கிற பெயர் அத்தனை பிரபலம். உதயனின் தாத்தா. ஆளுமையான, மிகவும் பிரபலமான நபர். அவர் வழி தொட்டு மகன் இளங்கோவன். தற்போது அவர்களின் வாரிசு உதயன்.

உப்பளம், கடல் உணவு உயிரினங்கள் ஏற்றுமதி, இறால் வளர்ப்பு பண்ணைகள், தேங்காய் மண்டி, வீட்டு அலங்காரத்திற்காக கடல் பொருட்களான கிளிஞ்சல்கள், சங்குகள் கொண்டு தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஆகியவை இவர்களின் குடும்பத் தொழில். சொந்தமாக, நாடுகள் பல சுற்றும் இரண்டு சரக்கு கப்பல்கள் உள்ளன.

தற்போது இவை யாவும் உதயச்செல்வனின் பொறுப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்கு உதவியாக, இளங்கோவனின் தம்பி ஜெயந்தனின் மகன் எழிலின்பன்.

இளங்கோவனும், ஜெயந்தனும் தங்கள் பணியை தேங்காய் மண்டி மற்றும் தென்னையை மூலமாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் தயாரிக்கும் ஆலையோடு நிறுத்திக் கொண்டனர். இளையவர்களின் வளர்ச்சிக்கு வழிவிட்டு விரும்பியே விலகி நின்றனர்.

உதயன் தன்னுடைய தாத்தா மற்றும் அப்பாக்களின் பெயரை முந்திவிட்டான் என்று சொல்வது மிகையாகாது.

அழுத்தமானவன். அவனின் மென்மை பக்கம் அறிந்தவர்கள், அவனது தங்கைகள். உடன் பிறந்த நனியிதழ். சித்தப்பாவின் மகள் எழிலினி. எழிலின்பனின் உடன் பிறந்தவள்.

இன்பனிடம் கூட உதயன் அழுத்தம் தான். குடும்பத்தின் தலைமை பொறுப்பில் இருப்பதாலோ என்னவோ அளந்து தான் பேசுவான்.

இயல்பிலேயே அதிகம் பேசிடாதவன் உதயன். யாராக இருப்பினும் கேட்டதற்கு பதில். அதுவும் தான் நினைத்தால் மட்டுமே வழங்குவான். பார்வையாலே தன் பேச்சினை புரிய வைத்திடுவான்.

உதயன் தன் குடும்பத் தொழிலுக்கு ஏற்ப கால்நடை மேலாண்மையில் பட்டம் பயின்றான். இறுதி வருடப் படிப்பின் போது, எதிராளியால் தொழிலில் பெரும் அடி ஏற்பட, மேலெழும்ப முடியாத நிலை. உதயன் தான் களமிறங்கி ஆறு மாதத்தில் சரிவில் விழ இருந்த தங்களின் தொழிலை தூக்கி நிறுத்தினான். அன்று முதல் அவனது கைகளில் தொழிலின் பாதை வளர்ச்சி தான்.

அத்தனை இளம் வயதில், அனுபவம் வாய்ந்த தாங்களே திணறிய நிலையில் பிரச்சினையின் மூலத்தை அறிந்து தீர்த்து வைத்திட்ட உதயச்செல்வனின் மீது வீட்டின் மூத்த ஆண்கள் மூவருக்கும் தானாக மரியாதை வந்துவிட்டிருந்தது.

தொழிலில் முதல் அனுபவமே பாடமாக அமைந்திட, அத்தனை எளிதாக யாரையும் நம்பிடமாட்டான். தொழிலில் அவன் நம்பி பொறுப்புகளை கொடுக்கும் ஒரு நபர், அவனது தம்பி எழிலின்பன் மட்டுமே. அவனிடமும் அளவுக்கு அதிகமாக பேசிடமாட்டான்.

தொழிலில் முனைப்பாக இருந்தவனிடம் இயல்பாகவே இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அது எதிராளிக்கு அவனை நெருங்க அச்சத்தைக் கொடுக்க, இதுதான் சரியென தானாக தக்கவைத்துக் கொண்டான்.

வீட்டிலிருப்போரும் அவனின் ஆளுமையில் தன்னைப்போல் மரியாதை கொடுக்க ஆரம்பித்திட, அவனுடைய நெகிழ்வு, பேச்சு யாவும் குறைந்துவிட்டது.

தங்கையிடம் மட்டும் அதிகமாக பேசுவான். சத்தமின்றி நீண்டு சிரித்திடுவான். அவையும் கடந்த மூன்று வருடங்களாக தங்கையின் சோகம் கண்டு அவனிடம் மறைந்து போனது.

எது நடந்தாலும் சரிசெய்து தனக்கு துணை நிற்கும் அண்ணன் உடனிருப்பதால், மனதின் வருத்தத்தை ஒதுக்கி வைத்து, பொங்கி வரும் அழுகையை கட்டுக்குள் வைத்தபடி பேச்சின்றி அமைதியாக கண்மூடி இருந்தாள் நனியிதழ்.

“இன்னும் நீ, நான் கேட்டதுக்கு பதில் சொல்லல.” சில நிமிடங்களுக்குப் பின்னர் உதயனின் குரல் ஒலித்தது.

மெல்ல அவனின் தோள் சாய்த்திருந்த தலையை நிமிர்த்தியவள், இருளின் தூரப் புள்ளியாய் ஒளிரும் கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை வெறித்தாள்.

“அவங்களுக்கு கல்யாணம் செய்துக்கிறதுல விருப்பம் இல்லையாம். மேரேஜ் லைப்லாம் ரொம்ப போர் அண்ட் கமிட்மென்ட் பிரஷராம். இப்போ மைண்ட் முழுக்க பிஸ்னஸில் தான் இருக்காம். அவங்க அம்மா எமோஷனலா பிளாக் பன்றாங்களாம்” என்று நிறுத்தினாள்.

“சோ?” என்று கேள்வியாக தங்கையை நோக்கிய உதயன், நனியிதழ் முகம் கவிழ்த்த…

“உனக்கு விருப்பமில்லன்னு சொல்ல சொன்னாங்களாக்கும்” என்றான்.

நனியிதழின் தலை மெல்ல ஆமென்று ஆடியது. பாறை மோதும் அலை நீருக்குப் போட்டியாய், அவளின் கண்கள் சுரக்கும் உப்பு நீரும் கன்னம் வழிந்தது.

தங்கையின் கண்ணீரை பார்க்க பார்க்க உதயனுக்கு ஆவி துடித்தது.

‘காதலை மறந்து…’ என நினைத்த மனதை ஒரு கணம் நிறுத்தி, ‘காதலை விலக்கி’ என மாற்றி, ‘தன் பாதையில் தெளிவாக சென்று கொண்டிருந்தவளை மீண்டும் காதலின் வலிக்கு உட்படுத்திவிட்டோமே! அவளின் அழுகைக்கு தானே காரணமாகிவிட்டோமே!’ என்று உள்ளம் மருகினான் உதயச்செல்வன்.

தங்கையின் காதல் ஒருதலை நேசமாக மடிந்திடக் கூடாதென நினைத்து, காதலாக சேர்ந்திடாவிட்டால் என்ன? திருமணத்தில் இணைத்து வைப்போம் என்று எண்ணியே காய்கள் நகர்த்தினான். அது ஆட்டம் ஆடப்படாமலே கலைக்கப்படுமென்று உதயனும் எதிர்பார்க்கவில்லை.

தங்கை விரும்பும் பையனின் குணம், பின்புலம் என எல்லாம் ஆராய்ந்து பார்த்தவன், அவனின் மனதையும் தெரிந்துகொண்டு அடி வைத்திருக்க வேண்டுமோ?

*ரத்தமானவளின் துயர் போக்கிட
ஜீவனானவன் செய்திட்ட செயல்
வலிக்கு நிவாரணியாகது
மேலும் வலிக்கூட்டும் ரணமாகியது
யார் செய்த பிழையோ?*

error: Content is protected !!
Scroll to Top