என் ஆயுள் நீயே 10

என் ஆயுள் நீயே 10

உப்புக் காற்று முகம் மோத, தென்னை மரத்தின் நிழலில், மொட்டை மாடிச் சுவற்றில் சாய்ந்து, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கால் மேல் காலிட்டு நின்றிருந்த பிரணவ், நனியிதழை பார்த்தது பார்த்தபடி நின்றிருந்தான்.

காற்றின் வேகத்திற்கு அலைபாய்ந்த புடவை தலைப்பை முன் இழுத்து இறுகப்பற்றி நின்றிருந்தவளின், கன்னம் தீண்டி உறவாடியது அவளின் கேசம்.

செவி மடலில் அசைந்தாடிய குட்டி ஜிமிக்கியில் அவனது இருதயம் தாளம் தப்பி துடித்தது. சடுதியில் தன் எண்ணத்திற்கு முன்னுரிமை அளித்து சீரானான்.

நிமிடங்கள் நீண்டிட,

பிரணவ்வின் மார்பில் பதிந்திருந்த நனியிதழின் பார்வை தானாக மெல்ல உயர்ந்து அவனது முகத்தில் நிலைத்து நின்றது.

அவள் தன் முகம் பார்ப்பதற்காகவே காத்திருந்தவன் போன்று பேச ஆரம்பித்தான் பிரணவ்.

“நாம காலேஜ்மெட்ஸ் அப்படின்னு வீட்ல யாரிடமும் சொல்லலையா?”

“இல்லை. நேத்து தான் நீங்க வரீங்க சொன்னாங்க. எனக்கு சொல்ல சான்ஸ் கிடைக்கல” என்றாள்.

“ஹம்ம்” என்ற பிரணவ்,”லாஸ்ட் டே சொல்லாம கிளம்பிட்ட?” என்றான். பதில் வேண்டும் என்பதாக.

அன்று அவளிருந்த நிலை என்ன? நினைக்கவே ரணம் மேலெழும்பியது. சொல்ல வந்தவளை தான் தன்னை அறியாது மரிக்கச் செய்து அனுப்பியிருந்தானே!

“அண்ணா வந்துட்டாங்க. சோ, உங்களை மீட் பண்ண முடியாமப் போச்சு” என்று நனியிதழ் தடுமாறி சொல்லிட, பிரணவ்விடம் கசந்த முறுவல்.

‘அது மட்டுமா காரணம். அன்னைக்கு மேடமிருந்த நிலைக்கு நானெல்லாம் நினைவு வந்திருந்தால் அதிசயம்.’ விரக்தியாக நினைத்துக் கொண்டான். கண்களை இறுக மூடி திறந்தான்.

“கால், மெசேஜ் எதுவுமில்லை!”

“யாரோடவும் கான்டாக்ட் வச்சிக்கல.” உண்மையைத்தான் கூறினாள். ஆனால் காரணம் சொல்லவில்லை. அவளுக்கு பழக்கமான கல்லூரி நட்புக்கள் யாவும், அவனுக்கும் பழக்கமாயிற்றே! யாரிடம் பேசினாலும், அவனைப்பற்றிய பேச்சுக்கள் வருமே! அது மேலும் வலியாகுமே! அதற்காகவே அவனிலிருந்து அனைவரிலிருந்தும் தள்ளியிருந்தாள். அவனுக்கும் அதே காரணம் தான். ரீமாவிடம் மட்டுமே அவனது நட்பு தொடர்கிறது. அவள் அவனது முதல் நட்பாயிற்றே தவிர்க்க முடியவில்லை. அவளிடமும் நனியிதழ் பேசுவதில்லை என்ற பின்னரே, ரீமாவுடன் பழையது மாதிரி சகஜமாகியிருந்தான்.

“அஷ்மிகிட்ட கூட பேசுறது இல்லைப்போல?”

“எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டுச்சு.”

‘எதுக்காம்?’ அத்தனை கோபமாக வெளிவரத் துடித்த கேள்வியை தொண்டைக்குள் புதைத்தான்.

“வீட்டுக்கு ரொம்ப பயப்படுவியோ?” எனக் கேட்டான்.

இந்தக் கேள்வி ஏன் கேட்கிறானென்று தெரியவில்லை. நெற்றிச் சுருங்க பார்த்தாள்.

“வீட்டிலும் ரொம்ப சைலன்ட்டா இருக்கியே” என்றான்.

“தட்ஸ் மை நேச்சர்” என்ற நனியிதழ், “என் மேல ரொம்பவே பாசம். சோ, அவங்க அன்புக்கு அடிக்ட். அதை பயம்ன்னு சொல்ல முடியாது” என்றாள்.

இதனை அவள் சொல்லாது இருந்திருக்கலாம். அவன் தான் நினைத்திருப்பது சரியென்று உறுதி செய்து கொண்டிருக்கமாட்டான்.

“ம்ம்” என்ற பிரணவ், சில நொடி அமைதிக்குப் பின்னர், “நீ எனக்கொரு ஹெல்ப் பண்ணனுமே” என்றான்.

“சொல்லுங்க.” நனியிதழ் முடியாதென்று சொல்லியிருக்க வேண்டுமோ?

“உனக்கு என்னை பிடிக்கலன்னு சொல்லணும்” என்றான்.

‘நான் சொல்லுன்னு சொல்லலைன்னாலும், நீயும் இதைத்தானே சொல்லப்போற. அதுக்குத்தானே உன் அண்ணனே என்கிட்ட தனியா பேச சான்ஸ் வாங்கிக் கொடுத்தான்.’ இல்லாத ஒன்றை இருக்கு என்று நினைக்கும் மனதின் செயல்கள் பொல்லாதது. அதனை இருவரும் உணரும் நாள் என்றோ?

‘நீ சொல்றதுக்கு முன்னாடி நான் முந்திக்கிறேன்.’ சிறுபிள்ளையாக போட்டி போட்டான். திருப்தி பட்டுக் கொண்டான். இதற்கெல்லாம் சேர்த்து வலி சுமக்கப்போவதும் அவனே!

விலுக்கென அவனின் கருவிழிகளோடு முட்டி மோதி நின்ற அவளின் விழியில் வலியின் தடம்.

அவனோ நிர்மலமான தோற்றத்தில் பார்த்திருந்தான்.

உள்ளுக்குள் பெரும் அதிர்வு. ஆழிக்குள் பொங்கும் பேரலையின் சுழல். சமுத்திரத்தின் அடி ஆழம் பிளவுபடும் ரணம். அவளின் இதயத்தை பாறை மோதி சிதறும் நீர்த் திவலைகளாக சிதற வைத்தது.

எத்தனை மகிழ்வோடு, பெருங்காதலோடு தொடங்கிய நாள். அவனின் இந்தப் பேச்சினைக் கேட்பதற்குத்தானா?

கரு மணிகள் பந்தாடியது. அவளின் மனதின் தவிப்புக்கு இணையாக.

அவள் ஏனென்று கேட்பாளென்று காத்திருந்தான். எப்படி கேட்பாள். அவள் தான் அவனின் வார்த்தைகளில் மரித்து நின்றிருந்தாளே.

நெஞ்சுக்கூடு வற்றிட, பிளவு பட்ட வறண்ட நிலத்தில் கருகி நிற்கும் கொடியாய் அவள்.

அவனே பேசினான்.

இருவரில் ஒருவர் தெளிவாக பேசியிருந்தாலும் வலி பரவிய இடம் முழுக்க காதல் பூக்கள் பூத்து நேசம் விரவியிருக்கும்.

அவனோ தன் எண்ணத்தில் நிலையாக நின்றிட, அவள் பேசிடவும் வாய்ப்பின்றி போனது.

“லுக் இதழ்…” நான்கு வருடங்களுக்குப் பின்னர் அவனின் அழைப்பு. இதம் சேர்க்கும் தருணமாக இருந்திடவில்லை.

“எனக்கு மேரேஜ், லவ் இந்த கான்செப்டில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஒரு வட்டத்துக்குள்ள வாழுற கமிட்மென்ட் எனக்கு வேண்டாம். இதைத்தாண்டி நான் சுதந்திரமா இருக்கணும். இப்போ இந்தியா முழுக்கத் தெரியற என் கம்பெனி, உலக நாடுகள் வரை பேசப்படனும். லைட்டா பேராசைன்னு தெரியும். பட் இது என்னால முடியும். கோல் பெருசா இருந்தா தானே ஓட முடியும். என்னோட இந்த ஓட்டம் குடும்பம் அப்படிங்கிற கடமைக்குள்ள சிக்கிக்கக் கூடாது நினைக்கிறேன். இதை சொல்லி என்னோட மாம் கன்வைன்ஸ் பண்ண முடியல. கொஞ்ச நாளுக்கு முன்ன தான் அட்டாக் வந்து, அவங்க ரெக்கவர் ஆகவே வன் மந்த் ஆச்சு. சோ, என்னால ரொம்ப பிரஷர் பண்ணி சொல்ல முடியல. திரும்ப என்னால, என்னோட முடிவால அவங்களுக்கு எதும் அகிடுமோ அப்படிங்கிற பயம். இப்போ நீ என்னை வேண்டாம் சொல்லிட்டன்னா… இதை வச்சு, சோகமா இருக்க மாதிரி பில்டப் கொடுத்து கொஞ்சநாள் ஓட்டிடுவேன். அதுக்குள்ள என்னோட எண்ணத்தை அவங்களுக்கு புரிய வச்சிடுவேன்” என்று நீண்டு பேசினான்.

உண்மையில் அவளுக்கு என்ன சொல்ல வேண்டுமென்று தெரியவில்லை.

இன்று அவனை பார்த்ததும் இல்லையென்றாலும், எல்லாம் பேசி முடித்து சென்ற பின்னராவது, அவனுக்கு அழைத்து தன் காதலை சொல்லிட வேண்டுமென்று நினைத்திருந்தாள்.

இந்த காதலை இதுநாள் வரை பொத்தி வைத்திருந்தது போதுமென்று எண்ணியிருந்தாள்.

முன்பு என்ன வேண்டுமென்றாலும் நடந்திருக்கட்டும். தான் காதலை சொல்லாமல் விட்டதற்கு காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இன்று இவள் தான் உன்னவள் என்று முடிவாகியப் பின்னர் காதலை சொன்னால் கட்டாயம் அவனிடம் மறுப்பு இருக்காது. தானாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமென அவள் நினைத்திருக்க, அவனோ அவளின் ஆசைக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்திருந்தான்.

இந்த காதல் ஒன்றை சுமந்து அவள் படும் வேதனையை நினைக்கையில், அவளுக்கே அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

அவனுக்கு பிடிக்காது என்பதற்காக காதலையே சொல்லாமல் விட்டவள், அவனாக தன் பிடித்தம் இதுதானென்று சொல்லிக் கேட்கும்போது, அதனை செய்யாமல் விட்டிடுவாளா என்ன!

மனதை கல்லாக்கிக்கொண்டு,

“நான் என்ன பண்ணனும்?” எனக் கேட்டாள்.

அதுவரை அவளின் முகத்திலிருந்த எதோவொன்று அக்கணம் குறைந்ததுப்போல் உணர்ந்தான். அவனின் மனதிற்கு பிடிபடவில்லை.

அவளின் மனம் வழியாகப் பார்க்கத் தவறிவிட்டான். எங்கனம் அவளின் வலியின் சாயல் அவனுக்கு பிடிபடும்.

“என்னை பிடிக்கலன்னு சொல்லணும்.”

“சரி” என்றவள், அடுத்து ஒரு நொடியும் அவன் முன் நிற்கவில்லை. கீழே செல்ல நகர்ந்திட்டாள்.

பிரணவ்வினுள் ஏனென்று தெரியா ஏமாற்றம். அவள் சரியென்று ஒப்புக்கொள்வாள் எனும் நம்பிக்கை இருந்த போதும், அவள் சரியென்றதில் அவன் மனம் சுணங்கியது.

‘தெரிந்தது தானே! நீ வேணாம் சொல்லலைன்னாலும் அவளே சொல்லியிருப்பாள். இப்போ நீயே கேட்கவும் ஏன், எதுக்கு கேட்காம இதுதான் சான்ஸ் அப்படின்னு அவளே சரி சொல்லிட்டாள். ஆக்ச்சுவலி, இப்போ அவள் உனக்கு மனசுக்குள்ள தேங்க்ஸ் கூட சொல்லிட்டு இருக்கலாம்.’ தன்னுடைய ஏமாற்றத்திலிருந்து தன்னைத்தானே தேற்றுவதாக நினைத்து தேவையில்லாத காரணங்களை உருவாக்கிக் கொண்டிருந்தான்.

நனியிதழ் கீழே செல்வதை உணர்ந்ததும், வேகமாக அவள் பின்னால் சென்று இணைந்து கொண்டான்.

எப்படியும் இருவரும் பேசி முடித்து வந்து, தங்களின் சம்மதம் சொல்லப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் பெரியவர்கள் அடுத்தக்கட்ட பேச்சில் ஆர்வமாக மூழ்கியிருந்தனர்.

இருவரும் ஒன்றாக வந்து நிற்க,

“பேசிட்டிங்களா பிரணவ்? எல்லாம் ஓகே தானே?” விமலாவின் முகத்தில் அத்தனை எதிர்பார்ப்பு.

“அவங்க சொல்லட்டும் மாம்” என்ற பிரணவ், எதுவும் சொல்லாது அமைதியாக விஜயனின் அருகில் அமர்ந்து கொண்டான்.

தங்கையின் முகம் வைத்தே எதோ சரியில்லையென கண்டுகொண்ட இன்பா, மெல்ல அவளருகில் சென்று நின்றான்.

“எதுவாயிருந்தாலும் அண்ணா வரட்டும் நனிம்மா” என்றான்.

இன்பாவை நோக்கி உயிர்ப்பற்ற புன்னகை சிந்திய நனியிதழ், “இப்போவே சொல்றது தான் நல்லது அண்ணா” என்றாள்.

“டேய்…” இன்பா எதோ சொல்லவர,

“என்னடா சொல்றா உன் தங்கச்சி. அவள் சம்மதத்தை எல்லாருக்கும் கேட்கிற மாதிரி சொல்ல சொல்லுடா” என்றார் ஜெயலட்சுமி.

அடுத்து நனியிதழ் தயங்கவோ, தடுமாறவோ இல்லை.

பிரணவ்வின் முகத்தை பார்த்துக்கொண்டே,

“அவங்களுக்கும் எனக்கும் ஒத்துவரும் தோணல பாட்டி. அதற்கு மேல் உங்க விருப்பம்” என்று சொல்லிவிட்டு, அங்கு நிற்காது வேகமாக தனதறைக்குள் புகுந்திருந்தாள்.

அப்போதும் அவன் சொல்ல சொல்லிய அவனை பிடிக்கவில்லை என்று அவள் சொல்லவில்லை. அவன் மீதான பிடித்தத்தின் அளவை தன் உயிராகக் கொண்டிருக்கும்போது, அவனை பிடிக்கவில்லை என்றுதான் அவளால் சொல்ல முடியுமா?

அவன் சொல்ல சொல்லி கேட்கும்போது தெரியாத ஒன்று அவள் சொல்லிச் சென்றதில் உணர்ந்தான் பிரணவ்.

நனியிதழ் சென்ற திசையையே பிரணவ் பார்த்திருக்க, இன்பா அவனை அழுத்தமாக முறைத்து வைத்தான்.

தங்கையாக இதனை சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பது தான் இன்பாவுக்குத் தெரியுமே! உதயனுக்கு அடுத்து நனியிதழின் காதலை அறிந்தது அவன் மட்டுமே!

அங்கு ஆழ்ந்த அமைதி. யாருக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை.

சில மணி நேரங்களில் இரு குடும்பமும் ஒரு குடும்பமாக இணையப் போவதை எண்ணி அத்தனை பேசியிருந்தனர்.

கஜமுகன், ராகவனின் முகத்தை சங்கடமாக ஏறிட, ராகவனோ விரைவாக கிடைத்த நட்பின் கரத்தை ஆதரவாக பிடித்து விடுத்தார்.

விஜயனுக்கும் இளங்கோவனின் முகம் பார்ப்பதைத் தவிர என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை.

ஒருவர் முகத்தை ஒருவர் சங்கடமாக பார்த்திருக்க…

“நைட்டு சரின்னு தானே சொன்னா. இப்போ என்னவாம் அவளுக்கு. அவளை வெளிய கூப்பிடு இன்பா. என்னன்னு கேட்போம்” என்றார் குமரி. இப்படி நனியிதழின் திருமணம் ஆரம்ப நிலையிலேயே தடைபட்டால், தன்னுடைய மகளின் திருமணம் தாமதமாகுமே எனும் கவலை அவரிடம்.

“வேண்டாங்க இருக்கட்டும். எதுவும் கேட்க வேண்டாம்” என்ற ராகவன், “ரெண்டு பேரும் பேசி பார்த்ததில் மனசு ஒப்பல. மனசு ஒப்பாம அவங்களை ஏன் கஷ்டப்படத்தனும். ஆண்டவன் சித்தம் என்னவோ அதுதான் நடக்கும். அப்போ நாங்க வரோமுங்க” என்று இருக்கையை விட்டு எழுந்துவிட்டார்.

அதற்குமேல் அங்கிருக்க முடியாது விமலாவும் வலிய புன்னகைத்து, தன் ஆட்களுடன் வெளியேறியிருந்தார்.

வண்டியை கிளப்புவதற்கு முன் தாங்கள் இருவரும் ஒன்றாக நின்றிருந்த மொட்டை மாடியை பார்த்து கண்மூடி திறந்தான் குரு பிரணவ்.

மனதில் அவளுக்கு நல்லது செய்துவிட்டோம் எனும் நிம்மதியுடன், பெரும் பாராம் ஒன்றும் அவனுள் குடிகொண்டது.

அந்த பாரத்தின் பெயர் காதல் என்று அவன் மட்டுமே அறிவான்.

error: Content is protected !!
Scroll to Top