என் ஆயுள் நீயே 11
“சாரி மிஸ்டர் உதயன். எங்களுக்கும் தெரியும் இது பொய் தகவல் அப்படின்னு. இருந்தாலும் எங்க கடமையை நாங்க செய்யணுமில்லையா?” என்று கேட்ட, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி,
அங்கு ஏற்றுமதிக்கு கொண்டு செல்லத் தயாராக இருக்கும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அதிகளவில் வேதியியல் மருந்துகள் பயன்படுத்தவில்லை என்ற அறிக்கையில் கையெழுத்திட்டு உதயனிடம் அளித்தார்.
அமைதியான புன்னகையோடு வந்திருந்த அதிகாரிகளுக்கு விடைகொடுத்தான் உதயச்செல்வன்.
இதற்கு பின்னால் யார் இருக்கின்றாரென்றும் அவனுக்குத் தெரியும். இருந்தும் அவர் போல் பழிவாங்கும் குணம் கொண்டவன் அல்லவே அவன். ஒவ்வொருமுறையும் அவர் செய்யும் சதிகளில் எல்லாம் தங்களை பாதுகாக்கவே முயல்கிறான். அவனின் பொறுமையும் ஒருநாள் கரை உடையும். அன்று அவர் மொத்தமாக வீழ்ந்து போவது உறுதி.
“அடுத்து என்ன சார் பண்ணட்டும்?” மேனேஜர் கேட்க,
“வழக்கம்போலதான். அடுத்து அவர் என்ன பன்றாருன்னு வெயிட் பண்ணுவோம்” என்று அளவாக புன்னகைத்து கிளம்பியிருந்தான்.
கன்னியாகுமரி முக்கிய சாலையிலிருந்து, அகத்தீஸ்வரம் செல்லும் கிளை சாலையில் உதயனின் தார் வண்டி பயணித்திட, யாருமற்ற இடத்தில் சாலையோரம் தனித்து நின்றிருந்த பெண்ணை கண்டதும், உதயனின் நெற்றி சுருங்கி விரிந்தது. அவன் காணாதவன் போல் கடக்க முயல, கை காட்டியிருந்தாள் அவள்.
அதற்கு மேல் யாரோ போன்று செல்ல இருவருக்குமிடையே இருக்கும் உறவுமுறை இடம் கொடுக்கவில்லை.
பெரியவர்களுக்குள் ஆயிரம் இருக்கும். வருங்கால தலைமுறையினர் நமக்கென்ன என்ற எண்ணம் தான் உதயனிடம், அதனால் தான் தொழிலில் பல குடைச்சல்கள் கொடுக்கும் அவளது அப்பாவையே விட்டு வைத்திருக்கிறான்.
இரு குடும்பத்திற்கும் இடையில் முக்கிய உறவாயிற்றே! அதுவுமில்லாது அவர் உதயனின் தாய் மாமா. விட்டுவிடக் கூடிய உறவா அது?
கங்காவின் உடன் பிறந்த அண்ணன் மருதன் அவர். உதயன் பிறப்பதற்கு முன்பே தொழிலில் சிறு பிரச்சினை. என்ன என்று இன்று யாருக்கும், ஏன் அவருக்குமே இதுதான் பிரச்சினைக்குரிய சரியான காரணமென்று சொல்லிட நினைவிலில்லை. இருப்பினும் கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக மருதன் பகையை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஒரே மகள் வந்தனா. இன்பா வயது அவளுக்கு.
சிறு வயது முதல் ஆங்காங்கே பார்த்திருக்கிறான். ஆனால் இதுவரை பேசியதில்லை. இன்று அவளாக வருகிறாள். எதற்கென்று தெரியவில்லை.
யோசனையோடு சாலையோரம் வண்டியை நிறுத்தி கீழிறங்கினான்.
“நான் வந்தனா.” தடுமாறி மொழிந்தாள்.
“எதும் சொல்லணுமா?”
அவளுக்கு தன்னிடம் பேச என்ன இருக்கிறது எனும் எண்ணம் தான் உதயனிடம்.
அதுவும் பகை வீட்டு பிள்ளைகள் இருவர் இப்படி ஊர் எல்லையில் தனித்து நின்று பேசுவதை யாரும் பார்த்தால், தானாக பிரளயம் உருவாக மருதன் ஒருவர் போதும்.
“எனக்கு வீட்டில் பையன் பார்த்து பேசி முடிச்சிட்டாங்க” என்றாள்.
“பையனை பற்றி விசாரிக்கணுமா?”
மூன்று பெண் பிள்ளைகளுடன் வளர்ந்தவனுக்கு, மாமன் மகளான அவளின் வாழ்வும் நன்றாக அமைய வேண்டுமென்ற எண்ணம். அதனாலேயே அவளுக்கு பார்த்திருக்கும் பையன் விடயத்தில் தானேதும் உதவி செய்ய வேண்டுமோ எனக் கேட்டிருந்தான்.
இருப்பினும், இதை ஏன் தன்னிடம் வந்து சொல்ல வேண்டுமென்ற யோசனை அவனிடம். நொடியில் மூளை கிரகித்து விட்டது.
“எனக்கு உங்களை…”
வந்தனா சொல்லுவதற்கு முன்பே கைக்காட்டி தடுத்த உதயன்,
“வீட்டுக்குப்போ. உன் அப்பா, உனக்கு நல்லது தான் செய்வார்” என்று சொல்லி, அடுத்த நொடி கிளம்பிவிட்டான். அவளை முழுதாக சொல்லவே விடவில்லை அவன்.
இதுநாள் வரை அவளை அவன் நேருக்குநேர் பார்த்ததுக்கூட கிடையாது.
‘எப்படி இந்த எண்ணம்? அதுவும் பேசியே இராத தன்மேல்.’ சலிப்பாக தலையை ஆட்டிக்கொண்டான்.
உதயனின் வண்டி மறையும் வரை, கன்னத்தில் நீர் இறங்க பார்த்து நின்றிருந்த வந்தனா, அழுகையோடே வீடு வந்து சேர்ந்தாள்.
________________________
உதயன் வீடு வர, பிரணவ் குடும்பம் சென்றிருந்தனர்.
குமரி நடுவீட்டில் அமர்ந்து நனியிதழை திட்டிக் கொண்டிருந்தார்.
“இருந்து இருந்து இப்போ தான் பையன் பார்த்தாங்க. கல்யாணம் நடக்கும் பார்த்தா, வேணாம் சொல்லிட்டாள். அவள் அண்ண பார்த்த பையனையே வேண்டாம் சொல்லிட்டாளே, இனி வர பையனை எல்லாம் இப்படி எதோ காரணம் சொல்லி தட்டிக் கழிச்சா, அடுத்தடுத்து பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆக வேண்டாமா?” வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு அனைவருக்கும் பிள்ளைகளின் விருப்பம் தான் முக்கியம். அதனால் நனியிதழ் ஒத்துவராது என்றதும், அடுத்து ஒரு வார்த்தை வந்து சென்றவர்கள் குறித்து யாரும் பேசவில்லை. குமரி மட்டும் நனியால் தன் மகளின் வாழ்வு தள்ளிப் போகிறதே என்று புலம்பிக் கொண்டிருந்தார்.
அவரை அடக்க நினைத்து யாரும் பேசினால், அடுத்து தனு, உதயன் திருமணம் பற்றி பஞ்சாயத்தை கூட்டிவிடுவாரென்று யாரும் அவரின் பேச்சு கேட்காததுப்போல் தத்தம் வேலையை செய்து கொண்டிருந்தனர்.
உதயனின் தலை தெரிந்ததும் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார் குமரி.
“எப்போ கிளம்பினாங்க?”
“அரைமணி இருக்குமுங்க.”
உதயன் கேட்டிட ஜெயலட்சுமி பாட்டி பதில் வழங்கினார்.
ஆண்கள் யாரும் கூடத்தில் தென்படவில்லை.
“தாத்தா, அப்பா எங்கே?”
“வந்தவங்க என்ன சொன்னாங்க உங்களுக்குத் தெரியணுமா?” என்ற குமரி, “உங்க தங்கச்சி வந்த பையனை வேணாம் சொல்லிட்டாள்” என்றார்.
“ம்ம்…” என்ற உதயன் உள்ளே செல்ல நகர,
“இப்படி வர மாப்பிள்ளையெல்லாம் வேணாம் சொல்லிட்டு இருந்தால், எப்போ கல்யாணம் ஆகுறது. எழிலே படிப்பை முடிச்சு கல்யாணத்துக்கு வந்து நின்னுடுவா” என்றார்.
உதயன் திரும்பி ஒரு பார்வை பார்த்தானே தவிர எதுவும் பேசவில்லை. சென்றுவிட்டான்.
“அப்படி எத்தனை பையன்டி இந்த வீட்டுக்கு பொண்ணு பார்க்கன்னு வந்திட்டானுவ, உனக்கு எதுக்கு அவசரம்ன்னு தெரியுது. அதுக்காக நனிக்கு பிடிக்காம பண்ணமுடியாது” என்று லட்சுமி பாட்டி குமரியை பேசுவது வீட்டின் அமைதியில் அறைக்குள் முடங்கியிருந்தவர்களுக்கும் நன்கு கேட்டது.
உதயன் தங்கையின் அறையிருக்கும் முதல்தள படிகளில் ஏறிட, அங்கிருக்கும் கூடத்தில் இன்பா அமர்ந்திருந்தான்.
“என்ன இங்க உட்கார்ந்திருக்க?”
உதயன் குரல் கேட்டு விழி திறந்த இன்பா,
“அவளை பார்க்க முடியலண்ணா. எதாவது பண்ணுங்க. அழல… ஆனால் அழுத்தி வைக்கிறது அவளோட முகத்துல தெரியுது” என்று உதயனை கட்டிக்கொண்டான்.
தம்பியின் தோளில் தட்டிய உதயன் என்ன நடந்ததென்று கேட்பதற்கு முன்பே இன்பா நடந்ததைக் கூறினான்.
“அவன் தான் சொல்ல…”
“இன்பா!” முடிக்கும் முன்பு உதயன் அழுத்தமாக தம்பியின் பெயரை உச்சரித்திருந்தான்.
“சாரி…” என்று கடுப்போடு சொல்லிய இன்பா, “தனியா பேசிகிட்டப்போ அவங்க தான் எதோ சொல்லியிருக்காங்க. நனியும் பிடிக்கலன்னு சொல்லிட்டாள்” என்றான்.
தங்கையின் வலி தீரப்போகிறதென்று அதிகம் எதிர்பார்த்து விட்டான் போலும், அவனால் இதனை ஏற்கவே முடியவில்லை.
“பிடிக்கல சொன்னாளா?”
இல்லையென்ற இன்பா, நனியிதழ் ஒத்துவராது என்று சொல்லியதைக் கூறிட,
“பிரணவ் பக்கம் என்னியிருக்கு தெரியாம நாம அவசரப்படக் கூடாது இன்பா” என்றான் உதயன்.
“அவங்க யாரையும் லவ் பண்ணல. எப்படியும் வீட்டில் பார்க்கும் பொண்ணை என்னைக்கா இருந்தாலும் கல்யாணம் செய்யத்தானே போறாங்க? அதுக்கு நம்ம நனியையே கட்டிக்கலாம் தானே” என்றான். இன்பாவால் அமைதியடையவே முடியவில்லை. ஆற்றமாட்டாது மனதில் உள்ள வருத்தத்தையெல்லாம் புலம்பலாக அண்ணனிடம் காட்டினான்.
“கோல்ட் ஸ்டோரேஜ் கணக்கு ஆடிட்டர் கேட்டிருந்தார். கொடுத்திட்டு வா” என்றான். உதயனுக்கு தம்பியை திசை திருப்ப தொழில் ஒன்றே வழியெனத் தெரியும்.
“ம்ம்… அப்படியே லாஸ்ட் மந்த் டாக்ஸ் ரிப்போர்ட் வாங்கிட்டு வா” என்றான்.
சரியென்று இன்பா சென்றிட, உதயன் நனியிதழின் அறைக்குள் நுழைந்தான்.
மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள். அலங்காரத் தோற்றத்தை கலைக்காது அப்படியே தான் இருந்தாள். அவளின் அதகியப்படியான அலங்காரமே நெற்றியில் பொட்டு, இமை இழைகளுக்கு மை பூசுவதே! இன்று அதையும் தாண்டி தனுவின் கை வண்ணத்தில் முகப்பூச்சுக்கள் உதவியால் மிளிர்ந்த முகம், வதங்கி கண்ணீர் தடத்தோடு காண அண்ணனவன் ஆவி துடித்தது.
அழுது அழுது தானாக உறங்கியிருக்கிறாள் என்பது புரிந்தது.
தங்கையின் அருகில் அமர்ந்த உதயன், அவளின் கன்னத்தில் காய்ந்த கண்ணீர் தடத்தில் கை வைத்து கனிவோடு அவளின் முகம் பார்த்தான்.
எத்தனை அழுத்தமிருந்தாலும் அவனது பட்டுவின் முகம் அவனை இதமாக்கிவிடும். அவனது இதயம் இளைப்பாறும் இடம் தங்கை.
இன்று அவள் இதம் தொலைத்து வேதனை சுமக்க, நீக்கும் அவனறிந்த மார்க்கமும் அடைபட்டுப் போனது.
அடுத்து என்னவென்று சிந்தித்தவனிடம் பெருமூச்சு.
“அண்ணா.” உள் வந்தாள் எழில்.
“பிக்கப் பண்ண இன்பா வந்தானா?”
“ஹம். என்னை ட்ராப் பண்ணிட்டு போயிட்டாங்க” என்ற எழில், “அக்காக்கு பையனை பிடிக்கலையா?” எனக் கேட்டாள் அவன் அருகில் அமர்ந்து.
உதயன் எதுவும் சொல்லவில்லை.
“எக்ஸாம் எப்போ?” எனக் கேட்டுக்கொண்டே, “அவள் தூங்கட்டும், வா” என சின்னவளை அழைத்துக்கொண்டு, இரண்டாம் தளத்திலிருக்கும் தன்னுடைய அறைக்கு படியேறினான்.
“என்ன சொல்லணும்?”
எழில் தன் பின்னாலே வரவும் கண்டுகொண்டவனாக அறைக்குள் வந்தததும் வினவினான்.
“பர்ஸ்ட் இயரிலிருந்து நல்ல ஃபிரண்ட். பெஸ்ட் ஃபிரண்ட் கூட சொல்லலாம். சடனா லாஸ்ட் இயர் என்கிட்ட பேசாதன்னு சொல்லிட்டான். உங்களுக்குத் தெரியுமே! அப்போ உங்ககிட்ட சொல்லியிருக்கேன். ரீசன் தெரியலன்னாலும், அவனுக்கு எதோ பிடிக்கல விலகியிருக்க நினைக்கிறான் புரிஞ்சு நான் பேசறதை விட்டேன். பட் அவன் எப்பவும் போல அதே கேர், பாண்ட். பேசறது மட்டும் தான் இல்லை. காலேஜில் எனக்கு ஒன்னுன்னா முதல் ஆளா அவன் அங்க இருப்பான். இன்னைக்கு டக்குன்னு முன்ன வந்து நின்னு…” அதுவரை வேகமாக மூச்சுவிடாது சொல்லிக்கொண்டே வந்தவள் டக்கென்று நிறுத்திக்கொண்டாள்.
“ஓகே” என்ற உதயன், அவள் சொல்லாது விட்டது புரிந்த போதும், எதுவும் கேட்காது குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
“அண்ணா இப்போ நான் என்ன பண்ணனும்?” குளியலறை மூடிய கதவுக்கு முன் நின்று கேட்டாள்.
சட்டையை கழட்டி கம்பியில் மாட்டியவன், நீரை அள்ளி முகத்தில் அடித்தான்.
‘இந்த லவ் வாழ்க்கையில ரொம்ப விளையாடும் போலவே!’ மனதில் சலிப்பாக சொல்லிக்கொண்டான்.
“அண்ணா…” கதவில் சாய்ந்து நின்றாள்.
“டோர்ல சாய்ஞ்சிருந்தின்னா தள்ளி நில்லு” என்ற உதயன் கதவினை திறந்து, தூவாலையால் முகத்தை துடைத்தபடி வெளியில் வந்தான்.
பனியனுடன் இருந்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்சங்கிலி. நனியிதழ் அவனது பிறந்தநாளுக்கு வாங்கிக் கொடுத்தது. செல்வா என்ற பெயர் பதித்து.
அதில் எழிலுக்கு எப்பவும் ஒரு கண். கேட்டால் கொடுப்பானென்று தெரியும். ஆனாலும், நனியிதழ் வாங்கிக் கொடுத்திருக்க, அவனுக்கு அது எத்தனை பிடித்தமாக இருக்குமென்று அறிந்து கேட்காது இருக்கிறாள்.
அன்பால் மட்டுமே பிணைந்த உறவுகள். அதனால் தான் என்னவோ மற்றவரின் வேதனை, பிறருக்கும் வலி கொடுக்கிறது.
“எதாவது சொல்லுங்க மிஸ்டர்.உதய்” என்றாள். சங்கிலியை இழுத்து பிடித்தவளாக.
“நாலு உதை வேணும்னா கொடுக்கலாம்” என்றான்.
தூவாலையை அதற்குரிய இடத்தில் போட்டவன், திரும்பி அங்கிருந்த மேசையில் சாய்ந்து, மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றான்.
“நானும் இதேதான் நினைச்சேன். ஏனோ முடியல” என்று அவன் பக்கத்தில் சென்ற எழில், அவனைப்போலவே அவனது புஜத்தில் சாய்ந்து நின்றாள், கைகளைக் கட்டிக்கொண்டு.
“ஐ திங்க்…” என்று இழுத்து, “நானும் அது பண்றேன் தோணுது” என்றாள்.