என் ஆயுள் நீயே 13
கண்கள் மூடி தனது எண்ண அலைகளில் மூழ்கியிருந்த உதயன், அடுத்து என்ன என்ற பெரும் வினாவில் சுழன்று கொண்டிருக்க, அவனது அலைபேசி இசைத்தது.
இன்பா தான் அழைத்திருந்தான்.
“அண்ணா வந்துட்டிங்களா?” என்ற இன்பா, “நனியை ரூமில் காணோம்” என்றான் பதட்டமாக.
“என்னோடதான் இருக்காள்” என்ற உதயனின் பதிலில் ஆசுவாசம் கொண்ட இன்பா, “பயந்துட்டேன்” என்று மூச்சினை இழுத்துவிட்டான்.
அமைதியான இடத்தில், இன்பாவின் குரல் நனியிதழுக்கும் கேட்டது.
“இதோ வரோம்” என்ற உதயன் அழைப்பை அணைத்து அலைபேசியை சட்டை பையில் போட்டவனாக தங்கையை ஏறிட்டுப் பார்த்தான்.
“போலாம் அண்ணா!” எழுந்து முன் சென்றாள்.
உதயனிடம் சரி செய்யும் மார்க்கம் எதுவுமில்லை. ஆனால் தங்கையின் வாழ்வை நேர் செய்திட வேண்டுமென்ற எண்ணம் மட்டும் தீவிரம் கொண்டது.
“எல்லாருக்கும் என்னால் கஷ்டம் செல்வா!”
தோட்டத்து கதவினை உதயன் மூடிட, அதீத வருத்தத்தில் கூறினாள் நனியிதழ்.
“யாருக்கும் எந்த கஷ்டமும் இல்லை. நீ நார்மலா இருந்தாலே போதும். இனியாவது நினைவிலே வாழாமல் பழசை தூக்கிப்போட்டுட்டு, மூவ் ஆன் பண்ணப்பாரு” என்றான் இன்பா. அவனிடம் கோபமில்லை. கிடைக்காத ஒன்றிற்காக தங்கை மருகுகிறாளே எனும் ஆற்றாமை.
அதிலும் அத்தனை ஆசையாக அன்றைய நாளினை எதிர்பார்த்திருந்த தங்கையின் ஒளிவீசிய முகம், அந்த நாள் முடிவதற்கு முன்பு கலையிழந்ததை கண்டு நெஞ்சம் விம்மினான்.
பிரணவ்வை அழைத்துவர ஊரின் தலை வாசலுக்கு சென்ற இன்பா, நனியிதழின் கரம் பிடித்து அவளின் ஒட்டு மொத்த வருத்தத்தையும் போக்கவிருப்பவன் என்று எத்தனைக்கு எத்தனை மரியாதையாய் பிரணவ்வை பார்த்தானோ… அத்தனைக்கும் ஈடாய் இக்கணம் அவனின் மீது கோபம் கொண்டிருந்தான்.
வருத்தம் போக்க வேண்டியவன், பல மடங்கு அதிகமாக கொடுத்துச் சென்ற கோபம்.
“என்னடா கோபம் உனக்கு?” உதயன் அதட்டல் போல வினவ, “ஏன் உங்களுக்கு இல்லையா?” எனக் கேட்டான் இன்பா.
“என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டு மாப்பிள்ளை அவங்க. நினைப்பிருக்கட்டும்.” அப்படியொரு அழுத்தமாக மொழிந்திருந்தான் உதயன்.
“வேணாம் சொல்ல சொன்னவங்க, வேணும்ன்னு வருவாங்களோ?” என்றான் இன்பா.
நனியிதழ் “அண்ணா” என்று இன்பாவின் அருகில் வர, “நீயிப்படி இருக்காதடா. அதுதான் என்னவோ பண்ணுது” என்றான்.
“நான்தான் வரேன் சொன்னனே. எதுக்கு இங்க நிக்கிற?” உதயன் கேட்டான்.
“ரூமுக்கு போனேன். நனியில்லை. தேடினேன். மொட்டைமாடியில் பார்த்தேன். ஆளில்லை. பயம் வந்திருச்சு. அங்கிருந்தே கால் பண்ணும்போது தான், கீழ உங்க வண்டி நின்னது தெரிஞ்சுது. வந்துட்டீங்கன்னு புரிஞ்சுது. நீங்க உப்பளம் வரப்புல வரது தெரிஞ்சுது. கீழ வந்தேன்” என்றான்.
“ம்ம்” என்ற உதயன், உள்ளே நுழைய.
“எனக்கு குமரி அத்தை என்ன கட்டம் கட்டுவாங்களோன்னு இருக்கு” என்றான் இன்பா.
நடையை நிறுத்தி ஒரு கணம் தன் தம்பியை அழுத்தமாகப் பார்த்த உதயன், “இங்க வாய் திறந்து கேட்காம எதுவும் கிடைக்காது. மனசுல பேசுறது எதிரில் இருப்பவங்களுக்கு கேட்கணும் நினைப்பது முட்டாள் தனம். பார்வையாலே எல்லாம் எல்லாருக்கும் புரிஞ்சிடும் அப்படின்னா, மொழி எதுக்கு? பட்டு விடயத்தில் பிரணவ் செய்றததை வேறு விதமாக நீ செஞ்சிட்டு இருக்க. நீ செய்யுறது மட்டும் சரியா?” என்று அதே அழுத்தத்துடன் கேட்டுவிட்டு சென்றுவிட்டான்.
இதுநாள் வரை தனது விஷயம் அண்ணனுக்குத் தெரியாதென இன்பா நினைத்திருக்க… இக்கணம் உன்னையும் நானறிவேன் எனும் விதமாக அவன் பேசிச் சென்றதில் நிலைகுலைந்துப் போனான் இன்பா.
“அப்போ அண்ணா கல்யாணத்துக்கு நோ சொல்றது எனக்காகவா?”
இன்பா அதிர்ந்து கேட்டிருக்க, அவனருகில் நின்றிருந்த நனியிதழ்,
“உங்களுக்காக எப்படி சொல்றீங்க?” எனக் கேட்டாள். அவளும் இதுநாள் வரை தன் திருமணத்திற்காக என்றல்லவா நினைத்திருக்கிறாள்.
இன்பா காரணம் சொல்ல…
நனியிதழ் அதிர்வில் விழி விரித்தாள்.
“நான் லவ் பண்றது அவ்ளோ ஷாக்கிங்கா உனக்கு?”
இன்பா கேட்டிட இல்லையென தலையசைத்த நனியிதழ், “எனக்கு குமரி அத்தையை நினைச்சு பயம் வருது” என்றாள்.
“இன்னும் நானே தெளிவா ஒரு முடிவெடுக்கல. பார்ப்போம். என்னால குடும்பம் உடையாது. அப்படி ஒரு சூழ்நிலை வந்தா, காதலை தூக்கிப்போடத் தயங்கமாட்டேன்” என்றான்.
இன்பா சாதாரணமாக, தன் எண்ணத்தைக் கூறினான். ஆனால் நனியிதழுக்கு சுருக்கென்றது.
இன்பாவைப்போல் இல்லாமல், அவள் சுயநலமாக அல்லவா இந்த நான்கு வருடங்களும் இருக்கின்றாள். குடும்பம் முக்கியமென்று நினைத்திருந்தால், கிடைக்காத ஒன்றிற்காக காத்திருந்து அனைவரையும் வதைத்திருக்கமாட்டாளே!
“இன்னும் என்ன?”
உதயனின் குரலில் இருவரும் வேகமாக தத்தம் அறைக்குள் நுழைந்திருந்தனர்.
நினைத்ததற்கு ஏற்றதுபோல் விடியல் அத்தனை இதமாக இல்லை. ஆனால் காரணம் இவர்கள் எதிர்பார்த்தது போன்று குமரி அல்ல. இவர்களின் சிந்தையிலே இல்லாத ஒருவரால், விடியல் பெரும் பரபரப்பானது.
______________________
“அவங்களுக்கும் எனக்கும் ஒத்தும் வரும் தோணல. அப்புறம் உங்க விருப்பம்.”
நனியிதழின் குரல் காதில் எதிரொலித்துக் கொண்டிருக்க, பால்கனி கம்பியை பிடித்திருந்த பிரணவ்வின் கைகளில் இறுக்கம் கூடியது.
கடக்க முயல்கிறான். முடியவில்லை. கடந்துவிட்டான் என்று நினைத்திருந்த எண்ணம், அவளை கண்டதும் பொய்யாய் போனது.
“அவ்ளோ வீக்கா நீ?” தன்னிடமே கேட்டுக்கொண்டான்.
தான் அனுப்பிய நன்றியை பார்த்துவிட்டாளா என்று நிமிடத்திற்கு ஒருமுறை அலைபேசியை எடுத்து பார்வையிட்டான்.
விடியல் தொடங்கிவிடும். இன்னும் உறக்கம் வராது இருள் வானை வெறித்துக்கொண்டு நின்றிருக்கிறான்.
“இனி அவங்களே வந்தாலும் இந்தப் பொண்ணு வேணாம் பிரணவ். வேற பார்ப்போம்.”
அன்னை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு திருமண குறித்து பேச்சினைத் துவங்கமாட்டாரென்று பிரணவ் நினைத்ததற்கு மாறாக, பெண் பார்க்க உதயன் வீடு சென்று வந்த சில மணி நேரங்களுக்கு புலம்பித் தள்ளிய விமலா, இரவு உணவு முடித்து பிரணவ் மேலே வந்த சில நிமிடங்களில் அறைக்குள் வந்து இவ்வாறு சொல்லவும், அன்னையை மலைத்துப் பார்த்தான்.
“மாம் பிளீஸ்…” சட்டென்று கத்தியேவிட்டான்.
இவர்கள் இதை விடவே மாட்டார்களா? திருமணம் செய்துகொள்ளாமல் வாழவே முடியாதா? ஆயசாமாக நினைத்தான்.
கொண்ட நேசம் நெஞ்சம் சேர்ந்திருந்தால், இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றியிருக்காதோ? கிடைக்கப்பெறாத ஒன்றின் ஏக்கம் அவனை திருமணத்தையே வெறுக்க வைத்தது.
“பிரணவ் என்னப்பா?”
“மாம் பிளீஸ்… மேரேஜ் மேரேஜ் அப்படிங்கிறதை கொஞ்சநாள் நிறுத்துங்க. முடியல மாம்” என்று நெத்தியை தேய்த்துக் கொண்டான்.
“இன்னும் எத்தனை நாளுக்குப்பா?”
“அம் ஜஸ்ட் டுவென்டி சிக்ஸ் தான் மாம். என்ன அவசரம்?”
“உனக்கில்லைடா. அஷ்மிக்கு” என்றார்.
“அவளுக்கென்ன? எனக்கு முன்ன பன்றதுன்னா பண்ணுங்க” என்றான்.
“அதுக்கு அவள் ஒத்துக்கணுமே! நீதான் அப்பா ஸ்தானத்தில் நிக்கனும் ஆசைப்படுறாள். சம்பிரதாயத்துக்கு தனியா நிக்க முடியாது. நீ உன் பொண்டாட்டியோட நின்னு தான் தாரவார்த்து கொடுக்க முடியும். அதுக்கு முதலில் உனக்கு கல்யாணம் ஆகணும்.”
“மாம் போதும். இதையே எத்தனைவாட்டி சொல்லுவீங்க?” என்ற பிரணவ், “ஒரு பொண்ணை பார்க்கப் போயி, அவள் என்னை வேணாம்னு சொல்லி அந்த நாள் இன்னும் முடியல. அதுக்குள்ள வேற பொண்ணு பார்க்கலாம் சாதாரணமா சொல்றீங்க. எனக்கு அது ஹர்ட் ஆகியிருக்குமா? இருக்காதா? யோசிக்கவே மாட்டிங்களா?” என்றான். முகத்தில் கடுமையை காட்டி.
தான் அவர்களுக்கு புரிய வைக்க மென்மையாக முயற்சித்தால், அவர்கள் பக்கம் தன்னை வளைக்கத்தான் பார்ப்பார்கள் என்று பொய் கோபத்தை முகத்தில் அணிந்து கொண்டான்.
பிரணவ் ஒன்றை நினைத்துப்பேச, விமலா வேறு விதமாக அர்த்தம் கொண்டுவிட்டார்.
அவனுக்கு நனியிதழை அதிகப்படியாக பிடித்துவிட்டதாலே, அவளின் நிராகரிப்பில் கவலை கொண்டு தன்னிடம் கோபமாக வெளிப்படுத்துகிறான் என நினைத்தார்.
அதற்கு அழுத்தமாக வலு சேர்த்தது. அவன் பார்த்ததும் நனியின் படத்தை தனக்கு அனுப்பிக் கொண்டது.
பார்த்ததும் மனதில் ஏற்பட்ட பிடித்தம். வேண்டாம் என்கிற மறுப்பில் கவலை கொள்கிறான். வெளிவர அவகாசம் கொடுப்போம் என நினைத்தார் விமலா.
“சரிப்பா… உன் இஷ்டம். இனி கல்யாணம் பத்தி பேசல. ஆனால் முழுசா இல்லை. கொஞ்ச நாளுக்கு. நீ இதிலிருந்து வெளிவர வரை மட்டும். இதையே காரணமா வச்சு கல்யாணமே பண்ணிக்காம இருந்திடலாம் நினைக்காதே” என்று வெளியேறிவிட்டார்.
பிரணவ் தான் விவரிக்க முடியாத தோற்றத்தில் நின்றிருந்தான். அவன் ஒன்று நினைத்து காய்கள் நகர்த்த, அவனுக்கு அன்னையென்று காட்டிச் சென்றிருந்தார் விமலா.
‘இதை வச்சு சமாளிக்க முடியாது போலிருக்கே.’ தலையை சலிப்பாக ஆட்டிக்கொண்டான்.
‘இதுக்கெல்லாம் ஒரேவழி அஷ்மிக்கு கல்யாணம் செய்யணும். அஷ்மி மேரேஜ் ஸ்டார்ட் பண்ணா, எப்படியும் சிக்ஸ் மந்த்ஸ் ஓடிடும்.’
மெத்தையில் சென்று விழுந்தவனுக்கு, கோபம் முழுக்க நனியிதழ் மீதுதான்.
காரணம் அவன் மனம் மட்டுமே அறிந்தது.
‘நீ கொஞ்சம் ஸ்டெடியா இருந்திருக்கலாம். மொத்தமா கவிழ்ந்து, எழ முடியாம தத்தளிக்கிற.’ தன்னைத்தானே நிந்தித்தான்.
‘வீட்டுல சொல்ல முடியாம எனக்கு ஓகே சொன்னவளுக்கு நான் நல்லது தான் பண்ணியிருக்கேன்.’ நினைத்த பிரணவ் அலைபேசியில் தகவல் வந்ததற்கு அடையாளமாக சத்தம் வர எடுத்துப் பார்த்தான்.
அவன் அனுப்பிய நன்றிக்கு “இட்ஸ் ஓகே” என்று பதில் அனுப்பியிருந்தாள் நனியிதழ்.
“உனக்கு ஓகேவா தான் இருக்கும்.” கோபமாக முணுமுணத்தான். அலைபேசியை வேகமாக தூக்கி எறிந்தான். அதன் நல்ல நேரம் மெத்தையிலே விழுந்தது.
________________________
இன்பா சொல்லிச் சென்றதில், அவனைப்போல் தான் ஏனில்லை என்ற எண்ணத்தில் தவித்த நனியிதழ், உறக்கம் வராது அறைக்குள்ளே நடந்து கொண்டிருந்தாள்.
அவள் இதயம் கொண்டிருக்கும் ரணத்திற்கு, அவளால் நிம்மதியாக உறக்கம் கொள்ளத்தான் முடியுமா?
‘இதிலிருந்து வெளிவர வேண்டும்.’
நான்கு வருடங்களாக எடுக்க நினைக்காத முடிவை இன்று எடுக்கத் துணிந்தாள்.
ஆம்… தன்னுடைய காதலிலிருந்து, பிரணவ் மீதான நினைவிலிருந்து மொத்தமாக வெளிவர நினைத்துவிட்டாள்.
அது அவளுக்கு மட்டுமல்ல பலருக்கு நல்லது என்றெண்ணி முடிவு செய்துவிட்டாள். முடியுமா என்று தான் தெரியவில்லை.
ஒன்றை நாம் ஒதுக்க நினைத்தால் தான், நம் நினைவிலே தங்கிவிடும். நம்மையேச் சுற்றி வரும். இதையும் அவள் அனுபவிக்க வேண்டுமென்று உள்ளதோ!
முகத்தை அழுந்த தேய்த்தாள். பெருமூச்சு ஒன்று வெளிப்பட, இதயத்தை இரும்பு கதவு கொண்டு பூட்டினாள்.
இந்த நொடி முதல் பிரணவ்வின் எண்ணத்தை ஒதுக்கி வைக்க முயன்றுவிட்டாள்.
உறக்கம் வராது மெத்தையில் அமர்ந்தாள். மனதை திசை திருப்ப, அலைபேசியை கையிலெடுத்தாள்.
திரையில் முதலில் எம்பி குதித்தது பிரணவ்வின் தகவல் தான்.
ஏனோ ஓடி ஒளிந்து தன் மனதை மீண்டும் ஏமாற்றிக்கொள்ள நினைக்கவில்லை அவள். நேருக்கு நேர் மோதி பார்த்திட நினைத்துவிட்டாள். வேண்டாம் என்பதற்கு ஒருமுறை எதிர்த்து நின்றுவிட்டால் எளிதாக கடந்துவிடலாம்.
பிரணவ்வின் நினைவை மறக்க, அவன் மீதான காதலை துறக்க, அவனை விட்டு விலகுவதைவிட எதிர்க்கொள்ளத் தயாராகிவிட்டாள்.
அதன் முதல் அடியாக, அவன் அனுப்பிய நன்றிக்கு பதில் அனுப்பியிருந்தாள்.
இனி எப்போதும் தன்னுடைய காதல் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாதென்று உறுதி கொண்டாள்.
அவளின் நேசத்தை அவள் சொல்லாவிட்டால் என்ன? காலம் கடந்தாலும் சேர வேண்டிய இலக்கினை அடைந்து தானே ஆக வேண்டும். அது எதுவாக இருப்பினும்.
இனி வேண்டாமென்று நனியிதழ் முடிவெடுத்து, இனியெப்போதும் தெரிய வேண்டாமென்று நினைத்த அவளின் காதல், விலக்கி வைத்த பின்னர் அவளவன் அறிய நேர்ந்திட்டது.