என் ஆயுள் நீயே 14

என் ஆயுள் நீயே 14

கிட்டத்தட்ட விடியும் வேளையில் தான் கண் அயர்ந்தான் உதயன்.

இதுநாள் வரை தங்கையின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக, தன் திருமணம் குறித்து, குமரி பலமுறை வீட்டில் பிரச்சினைகளை எழுப்பினாலும், நனியிதழின் திருமணத்தின் பின்னரே தன் திருமணமென்று அமைதியாகக் கடந்து வந்தான்.

ஆனால் இனியும் குமரி அமைதியாக இருக்கமாட்டாரென்று தெரியும். பெண் பார்க்கும் படலத்தின் போது தானில்லாததால் அவர் மேற்கொண்டு எதுவும் பேசாது விட்டாரென்று, வீடு நுழைந்ததும் செவி நுழைந்த அவரின் குரல் வைத்தே கண்டு கொண்டிருந்தான்.

வீடு அமைதியாக அவர் தற்போது மௌனித்து இருக்கிறார். நாளையே கூட என் மகளுக்கு வழி சொல்லென்று வந்து நின்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்படியாவது அனைத்தும் நேர் செய்திட வேண்டும் என்ற எண்ணம். நனியிதழுக்காக பார்க்கும் அதே மனம் தான் இன்பாவின் விடயத்திலும்.

இன்பா தனக்காக பார்க்கின்றான் என்று தெரியும். இருப்பினும் இளையவர்களின் விருப்பமே உதயனுக்கு முக்கியம். குமரிக்கு இவ்விடயம் தெரிந்தால் அவ்வளவுதான். ஏற்கனவே தன் மகளின் திருமணத்திற்கு நனியிதழ் குறுக்கே இடைஞ்சலாக இருப்பதாக அவரது எண்ணம். இதில் அவரது மகளின் விருப்பமும் ஆசையும் தெரிந்தால் அவ்வளவுதான்.

உதயனுக்கு தனு மீது மட்டுமல்ல, வேறெந்த பெண்ணின் மீதும் விருப்பமென்பதில்லை. வீட்டில் பார்த்து யாரென்று கை காட்டினாலும் சம்மதம் தான். அப்படித்தான் தனுவும்.

இதுவரை யாரும் தனு குறித்து அவனிடம் நேரடியாக பேசியதில்லை. குமரி மட்டும் உனக்கு என் மகள் தான். உனக்காகத்தான் அவள் காத்திருக்கிறாள் என்று உதயன் படிப்பை முடித்ததிலிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சொல்லிடுவார்.

அதையெல்லாம் உதயன் கண்டு கொண்டதே இல்லை. நனியிதழ், எழில் உடனே தன்யாவும் இருப்பதால், வேறு விதமாக உதயன் தன்யாவை பார்த்ததுமில்லை. தனு மீது அப்படியொரு விருப்பமில்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களின் தேர்வு எனும் நிலையில் ஏற்கும் விதமாக அமைதியாக இருந்தவனுக்கு, தனுவின் மனம் தெரிந்திட, சம்மந்தப்பட்டவர்கள் சொல்வதற்காக, குமரி திருமணப் பேச்சினை எடுக்கும் போதெல்லாம் மௌனமாக இருந்துவிடுகிறான்.

இப்போது குமரியை சமாளிப்பதை விட, அமிழ்ந்து போயிருந்த தங்கையின் ரணத்தை தானே கீறிவிட்டதைப் போலாகியதை எப்படி சரி செய்வதென்கிற எண்ணம் தான்.

குடும்பத்தில் சச்சரவு எழாது அனைத்தையும் எப்படி சரி செய்வதென்று உறக்கத்திலும் உதயனின் மண்டைக்குள் பலதும் ஓடியது. அதனால் ஆழ்ந்த உறக்கமில்லை.

மூன்று மாடி கொண்ட பெரிய வீடு அது. தரை தளத்தில் நின்று எத்தனை சத்தமாக பேசினாலும், உதயனின் அறை இருக்கும் இரண்டாம் மேல் தளத்தில் அத்தனை எளிதாகக் கேட்டிடாது. அப்படியிருக்கும் அமைப்பில், யாரோ கத்தி கூச்சலிட்டு கலாட்டா செய்யும் சத்தம் செவி நுழைய மெல்ல இமைகள் பிரித்த உதயன், எழுந்து வந்து என்னவென்று மேலிருந்து எட்டிப் பார்த்தான்.

வீட்டின் மையமான முற்றத்தில் நின்று மருதன் அதீத ஆக்ரோஷமாக இளங்கோவனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

‘நேற்று வந்தனா தன்னிடம் வந்து பேசியது தெரிந்துவிட்டது போல்.’ வந்தனா செய்து வைத்த காரியம் அறியாது, உதயன் இவ்வாறு தான் நினைத்தான்.

கங்கா கைகளை பிசைந்துகொண்டு பதற்றமாக நின்றிருந்தார். இத்தனை வயதாகியும் யாருக்கு பார்ப்பதென்று தெரியாது தவித்தார்.

கஜமுகன் மருதனை அடக்கும் வழி தெரியாது அமைதியாக நின்றிருக்க, கஜேந்திரன் வேட்டியை மடித்துக்கட்டி, அவருக்கு சரிக்கு சரி அதட்டிக் கொண்டிருந்தார். இருவருக்கும் நடுவில் இளங்கோவன் தடுமாறினார்.

முதல் தளத்தில் இன்பா நிற்பது தெரிய, “என்னன்னு பாரு இன்பா” என்று குரல் கொடுத்தான் உதயன்.

சத்தம் கேட்டு அப்போது தான் கண்களை தேய்த்தபடி தூக்கம் முழுதாய் விலகாது கொட்டாவி விட்டபடி வந்து நின்ற இன்பா, உதயன் குரலுக்கு மொத்த உறக்கத்தையும் விரட்டியவனாக, கீழே விரைந்தான்.

இன்பா வந்து தன் தந்தையர் இருவரையும் விலக்கிவிட்டு மருதனின் முன் நின்று, “முதலில் விஷயம் என்னன்னு சொல்லிட்டு கத்துங்க” என்றான். அமைதியாகத்தான் கூறினான்.

ஆனால் மருதனுக்கோ ஆத்திரம். மகள் செய்து வைத்திருக்கும் வேலையில் அதீத சினம். மகளிடம் காட்டிட முடியாது இங்கு வந்து குதித்துக் கொண்டிருக்கிறார்.

சாலையில் கடக்கும் போது கூட இவ்வீட்டின் வாசலில் கூட தன்னுடைய நிழல் பட்டுவிடக் கூடாதென அந்தப்பக்கம் தள்ளி ஒதுங்கி செல்லும் ஆள். இன்று நடு கூடத்தில் சலம்பிக் கொண்டிருந்தார்.

“என்னடா பெரியவங்கிற மரியாதை இல்லாம துள்ளுற?” எகிறினார். அவருக்கு யாரிடம் எப்படி தன் இயலாமையால் உண்டான கோபத்தை காண்பிக்க வேண்டுமென்று தெரியவில்லை.

“யாரு துள்ளுறது? வீடேறி வந்து குதிச்சிட்டு இருக்கிறது நீங்கதான்” என்று முறைத்து வைத்தான் இன்பா.

“இன்பா நீ செத்த அமைதியா இருய்யா” என்று பேரனை அடக்கிய கஜமுகன், “என்ன பிரச்சினைன்னு சொன்னாதானே தெரியும் மருதா” என்றார்.

“இவன் கிட்ட என்னப்பா தன்மையா பேசிக்கிட்டு… மொத இவனை வீட்டைவிட்டு வெளியில் போகச் சொல்லுங்க” என்றார் கஜேந்திரன்.

“நீ வேற ஏன்டா… அமைதியா இருடா” என்று தன் தம்பியை பிடித்து நிறுத்திய இளங்கோவன், “சத்தம் போட வேணாம் மருதா… நேரா விஷயத்தை சொல்லு” என்றார்.

ஆள் மாற்றி ஆள் கேட்டும் மருதன் அய்யனார் கணக்காக விறைத்து நின்றார். கையில் அரிவாள் மட்டும் தான் இல்லை.

“என்னன்னு சொன்னாதானே தெரியும்ண்ணா.” கங்கா பரிதவிப்பாய் வினவினார்.

அவர் பிறந்த வீடென்று சென்று முப்பது வருடங்கள் ஆகிறது. அண்ணன் உறவென்ற பாசம் இருந்த போதும், உரிமையாய் உறவாட வழியின்றி போனது. பார்த்தாலும், மருதன் முறுக்கிக்கொண்டு கடந்துவிடுவார். கங்கா அண்ணன் என்கிற உறவை மட்டுமே பார்க்க, மருதனோ இளங்கோவனின் மனைவியென்று தங்கையையும் ஒதுக்கி வைத்தார்.

அவ்வவ்போது பொதுயிடங்களில் பார்த்துக்கொள்வது தான்.

பல வருடங்களுக்குப் பின்னர், தன் வீடேறி வந்திருக்கும் உடன் பிறப்பின் வருகை இனிமையானதாக இல்லையென்ற வருத்தம் காங்காவிடம்.

மருதன் அளவிற்கு கஜமுகன் வீட்டு ஆட்களிடம் கோபமில்லை என்றாலும், மருதனை மனதால் தள்ளித்தான் வைத்திருக்கின்றனர். அதற்கு என்றோ நடந்து இத்தனை வருடங்களில் மறந்து போன சிறு பிரச்சினையை பிடித்துக் கொண்டு, இன்றும் மருதன் தொழிலில் குடைச்சல் கொடுப்பது தான் காரணம்.

“இந்த அண்ணாங்கிற உறவு கொண்டாட நான் வரல. எங்க உன் மவன். அவன் வந்தா நாக்கை பிடுங்கிற மாதிரி நாலு…” மருதன் முடிக்கும் முன்பு, அவ்வீட்டு ஆண்கள் நால்வரும் மருதனை அடிக்கப் பாய்வதைப் போல முன் வந்து சுற்றி நின்றனர்.

“யாரை மரியாதை இல்லாம பேசுறீங்க” என்று வேட்டியை மடித்துக் கட்டிய இன்பா, “எங்க தாத்தாவே நிமிர்ந்து பாக்குற ஆளு என் அண்ணன். நீங்க மரியாதை இல்லாம பேசுவீங்களா? நீங்க கொடுக்க நினைக்காத மரியாதை உங்களுக்கு திருப்பி கிடைக்கவும் கிடைக்காதுங்கிற அறிவில்லையோ?” என்று காட்டமாக உருத்து விழித்தான்.

“அவன் பெரிய கொம்புன்னா… அது உங்க வீட்டோட. எனக்கில்லை” என்று மருதன் கூற, இன்பா அவரின் சட்டையை பிடித்துவிட்டான்.

“இன்பா.”

உதயன் படிகளில் இறங்கிக் கொண்டிருக்க, தம்பியின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அழுத்தமாக விளித்தான்.

இன்பா அவரின் சட்டையை விடுத்து தள்ளி நிற்க, அப்போதுதான் மருதனுக்கு பின்னால் அவரின் மனைவி சகுந்தலா கண்ணீரோடு நின்றிருப்பது தெரிந்தது.

கங்கா தவிர்த்து வீட்டுப் பெண்கள், என்ன செய்வதென்று தெரியாது நின்றிருந்தனர்.

“என்ன விஷயம் சொல்லுங்க.” நேருக்கு நேர் நின்று மருதனின் முகம் பார்த்து வினவினான்.

உதயனின் நேர்கொண்ட பார்வை மருதனை தடுமாறச் செய்தது.

“எப்போ என் பொண்ணு கழுத்துல தாலி கட்டப்போற?” மருதன் அவ்வாறு கேட்டதும், அனைவரும் அதிர்ந்தனர்.

“நீங்க வீடு மாறி வந்து கேட்கிறீங்க.”

உதயன் சாதாரணமாகத்தான் கூறினான். அவருக்கு கேலி செய்வது போலிருந்ததுவோ.

“என்னடா நடிக்கிறியா?”

“வார்த்தையை பார்த்து பேசு மருதா.” கஜேந்திரன் கத்தினார்.

“உன் மவன் ஆசைகாட்டாமதான் கட்டுனா இவனைத்தான் கட்டுவேன்னு என் மகள் விஷம் குடிச்சி ஆஸ்பத்திரியில படுத்திருக்காளா?” மருதன் ஆத்திரத்தில் வெடிக்க, அனைவரும் ஸ்தம்பித்தனர்.

உதயனுமே இதனை எதிர்பார்க்கவில்லை. நொடியில் அதிர்விலிருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.

அவனால் நொடியில் தனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லிட முடியும். ஆனால் அங்கு ஒருத்தி உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, இங்கு இவரிடம் மல்லுக்கட்ட முடியாதென்று உணர்ந்து, சகுந்தலாவிடம் திரும்பினான்.

“என்னாச்சு?”

மருதன் ஒரு பக்கம் வரம்பற்ற வார்த்தைகள் உபயோகித்துக் கத்திக் கொண்டிருக்க, அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாது மகன் அமைதியாக இருக்கிறானே என்று அனைவரும் நினைத்தாலும், இதில் தங்கள் பிள்ளையின் தவறு இருக்காது என்று முழுதாய் உதயனை நம்பினர். இருக்குமோ எனும் புள்ளி அளவில் கூட, அந்த நினைப்பே அவர்களுக்குள் இல்லை.

இப்போது அவன் விசாரிப்பது கூட மனிதாபிமான அடிப்படையில் அக்கறை என்று தான் நினைத்தனர்.

“உங்க பையனை நீங்க வேணா நம்புங்க. எதுவுமே இல்லாமத்தான் இவ்வளவுக்கு பதறுறானா?” என்ற மருதன், “என் மகளுக்கு மட்டும் எதும் ஆகட்டும். குடும்பத்தையே கொளுத்திடுவேன்” என்று முடிக்கும் முன்பு, “சும்மா இருங்க” என்று உறுமியிருந்தான் உதயன்.

அவனின் அதட்டல் பார்வையில் மருதன் வாய் கப்பென்று மூடிக் கொண்டது. முகத்திற்கு மிக அருகில் வேங்கையின் உறுமலில் நடுங்கிப்போனார்.

“பெரியவங்க… உண்மை தெரியாம கத்திக்கிட்டு இருக்கீங்கன்னு அமைதியா இருக்கேன்” என்ற உதயன், “அவருக்கு தண்ணி கொண்டு வந்து கொடு எழில்” என்றுவிட்டு சகுந்தலாவிடம் மீண்டும் என்னவானதென்று வினவினான்.

“தண்ணி கொடுத்து உறவை புதுப்பிக்கிறீங்களோ?” மருதனிடம் படு நக்கல்.

“தண்ணி வேண்டாமா… விடு எழில்” என்ற உதயன், சகுந்தலாவிடம் “நீங்க சொல்லுங்க” என்றான்.

அழுதுகொண்டே கணவரை பார்த்த சகுந்தலா, “இன்னைக்கு பொண்ணு பார்க்க வரதா இருந்துச்சு. அப்படியே பரிசம் போடுற மாதிரி ஏற்பாடு. பாவி மக, தென்னை மரத்து வண்டுக்கு வாங்கி வச்சிருந்த மருந்தை குடிச்சிப்புட்டாள்” என்று புடவை தலைப்பில் வாய் மூடி விம்மினார்.

“அதுகெதுக்கு நீங்க இங்க வந்து நின்னுட்டு இருக்கீங்க?”

உதயன் இப்படி கேட்டதும் மருதன் மீண்டும் கத்த ஆரம்பித்துவிட்டார்.

“தெரிஞ்சிகிட்டே கேட்டா என்னான்னு சொல்றது. நீ வந்து தாலி கட்டினா தான், வைத்தியம் பண்ண விடுவேன்னு தர்க்கம் பண்ணிகிட்டு இருக்கா. இவ்வளவு உறுதியாக பெத்தவங்களை எதிர்க்கிறான்னா, நீ சப்போர்ட் இல்லாமையா?” என்றார்.

“இவர்கிட்ட பேசுறது வேஸ்ட்” என்று வெளிப்படையாகவேக் கூறிய உதயன்,

“எந்த ஹாஸ்பிடல்?” என்று சகுந்தலாவிடம் கேட்டுக்கொண்டே, “வாங்க சித்தப்பா” என்று கஜேந்திரனை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு சென்றான்.

“உங்க வீட்டுல சம்மந்தம் வச்சிக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. ஒத்த புள்ளையா போயிட்டாள்… சாவுடின்னு விட மனசில்லை. கூட பிறந்தவளை ஒதுக்கி வச்சமாறி பெத்ததையும் ஒதுக்கி வச்சிடுறேன்” என்று துண்டினை உதறி தோளில் போட்டவராக மருதன் வெளியேற, உதயன் வண்டி கிளம்பியிருந்தது.

error: Content is protected !!
Scroll to Top