என் ஆயுள் நீயே 15

என் ஆயுள் நீயே 15

முதல் நாள் இருந்ததற்கு நேர் மாறாக, அத்தனை பொலிவுடன் இருந்தான் பிரணவ்.

நேற்றைய நிகழ்வு தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று காட்டிக்கொள்ள நினைத்தானோ?

அவனது எண்ணங்கள், குழப்பங்கள், கற்பனைகள் யாவும் அவனுள் மட்டுமே.

அன்றும் சரி, இன்றும் சரி, அவன் உண்மையை அறிய முற்படவே இல்லை. அவன் கண்ணால் பார்த்தது நிஜமென்று இன்றளவிலும் ஸ்திரமாக இருக்கின்றான்.

அந்த உறுதியானால் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டான்.

காதலுக்காக காதலியின் விருப்பத்தை நிறைவேற்றும் காதலனாக நடந்துகொண்ட பிரணவ்வுக்கு, அவளின் காதலே அவன் தானென்று தெரியாமல் போனது விதியின் செயலோ அல்லது, காதல் என்றாலே வலி சுமந்து தான் இணைய வேண்டும் என்ற நியதியின் பலனோ!

அவளின் மகிழ்வுக்காக, தான் வலி சுமக்கலாம் என்று நினைத்துவிட்டான். ஆனால் சுமைக்கான பலன் என்னவோ அர்த்தமற்றது. மனதில் நினைக்கும் எண்ணங்களுக்கு வார்த்தை வடிவம் கொடுத்திருந்தால் இங்கு யாவும் சுபமாக முடிந்திருக்கும்.

பிரணவ் கீழே வர, அஷ்மி உணவு உண்டு கொண்டிருந்தாள். அவன் அருகில் வந்து அமர்ந்தும் கூட, அவள் அவனை பார்க்கவில்லை.

“குட் மார்னிங் டா!” சொல்லிய பிரணவ் தட்டினை எடுத்து வைக்க, விமலா உணவினை பரிமாறினார். ஆனால் அஷ்மி அவனுக்கு பதில் கொடுக்கவில்லை.

உண்டு முடித்தவள், பிரணவ் “அஷ்மி” என்றழைத்ததைக் கூட காதில் வாங்காது, “பைய் டாட்” என்று கூடத்தில் அமர்ந்திருந்த விஜயனிடம் சொல்லிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டிருந்தாள்.

“ரெண்டு பேருக்கும் சண்டையா பிரணவ்?” விமலா கேட்க, “இல்லை மாம். எதோ கோபமா இருக்காப்போல” என்று சொல்லியவனுக்கும் காரணம் தெரியவில்லை.

அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்த அஷ்மிக்கு கண்கள் கலங்கியது. வாழ்வில் முதல்முறை தனக்கு தாயுமானவனாக இருப்பவனிடம் பாராமுகம் காட்டியிருக்கிறாள். மனம் கலங்கியதே தவிர தன் செயலில் வருத்தம் கொள்ளவில்லை.

பிரணவ் நிச்சயம் இப்படி செய்வானென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அந்நேரம் ஆர்யனின் அழைப்பு.

ப்ளூடூத் இணைப்புடன் பொருத்தியவள், “சொல்லுடா” என்றாள்.

“அஷ்மி, ஆர் யூ ஓகே?” குரல் வைத்தே அறிந்திருந்தான். அவள் சரியில்லை என்று.

“யா… அம் ஓகே!”

“பொய்…”

“ம்ப்ச்” என்று சலிப்படைந்தவள், “கோபம் கோபமா வருதுடா. இருக்கும் கோபத்துக்கு எதையாவது தூக்கிப்போட்டு உடைக்கணும் தோணுது. கண்ணு முன்னாடி வர எல்லாரையும் திட்டணும் போல வருது” என்றாள்.

“அக்கா…”

“முடியலடா” என்ற அஷ்மி அழுதேவிட்டாள்.

“உருகி உருகி லவ் பண்ணா இந்த ஆம்பளைக்கெல்லாம் புரியாதுல. இதே வேணாம் வேணாம் சொல்லுற பொண்ணுங்க பின்னாடி நா* மாதிரி அலைவாங்க” என்றாள்.

“இப்போ யாரை திட்டுறீங்க?”

அவளுக்கு அதீத அழுத்தம். நேற்றைய நாளுக்காக உதயன் மட்டுமல்ல, அஷ்மியும் நான்கு வருடங்களாகக் காத்திருந்தாள். அந்த காத்திருப்பின் அழுத்தம். எல்லாம் நெருங்கி வந்து சரிசெய்திட முடியாத அழுத்தம் அவளுள்.

யாரிடமாவது சொல்லிவிட்டால் தேவலாம் எனும் நிலை. தன் தம்பியிடம் அனைத்தும் சொல்லிவிட்டாள். ஒரே மூச்சாக.

“அஷ்மி…” என்று அதிர்ச்சி அடைந்த ஆர்யன், “அண்ணா என்ன லூசா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா… அதிலென்ன சந்தேகம்” என்ற அஷ்மியிடம், “அண்ணியும் லூசு தான்” என்றான் ஆர்யன்.

“யாருடா அண்ணி?” இருக்கும் வேதனையில் சட்டென்று அவன் கூறிய உறவுமுறை அவளுக்கு பிடிபடவில்லை.

“ம்க்கும்… அண்ணனை லவ் பண்றாங்களே அவங்க தான்” என்றான்.

“ஆமான்டா… உங்களை மாதிரி லூசுங்களை லவ் பண்ணியே பொண்ணுங்களும் லூசு ஆகிடுறாங்க.” அத்தனை கடுகடுப்பு அவளிடம்.

“சும்மா கத்தாதீங்க” என்ற ஆர்யன், “உருகி உருகி லவ் பண்ணா மட்டும் போதுமா? அதை எப்போவாவது அண்ணாகிட்ட சொல்லியிருக்காங்களா?” என்று அவனும் பதிலுக்கு சத்தமாகக் கேட்டிருந்தான்.

….

“என்ன பதிலே காணும்?” என்ற ஆர்யன், “லவ் பண்ணதும், இவள் நம்மள லவ் பண்றான்னு தானா மேசெஞ்சர் பாஸ் ஆகுமா என்ன?” எனக் கேட்டான்.

“ஆரி…”

“ஆன்ஸர் மீ அஷ்.”

“இப்போ என்னடா சொல்லவர நீ?”

“அவங்களை பர்ஸ்ட் லவ்வை சொல்ல சொல்லுங்க. அட்லீஸ்ட் அண்ணாக்கு உணரவாவது வச்சிருக்காங்களா? சின்ன பார்வை?” என்றவன், “இப்படி எதுவுமே இல்லாம, அவரா புரிஞ்சிக்கணும் நினைக்கிறது பைத்தியக்காரத்தனமில்லையா?” என்றான்.

“அவங்க சொல்லாம இருக்க எதோ வேலிட் ரீசன் இருக்கு ஆரி.”

“இருக்கட்டும் அஷ். அப்போ அண்ணாக்கு விருப்பமில்லைன்னா நோ தானே சொல்ல முடியும்?” எனக் கேட்டான்.

“அண்ணாக்கும் லவ் இருக்குடா!”

“எப்படி சொல்றீங்க?”

“தோணுது” என்ற அஷ்மி, “அப்புறம் எதுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லி பொண்ணு பார்க்கும் வரை போகணும்?” என்றாள். அவளால் கோபத்தை குறைத்துக்கொள்ளவே முடியவில்லை.

அவளுக்கு பிரணவ் மனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி வாழ்நாளில் பார்த்தே விடக்கூடாது என்கிற அவனின் திண்ணமான முடிவு, அவளை புகைப்படத்தில் கண்டதும் காணாமல் போயிருந்தது. ஒரே ஒருமுறை அவளை நேரில் காணும் வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொண்டான். இதனை அவனாக சொல்லாது அறிய வாய்ப்பில்லை தான்.

இருந்து இருந்து இந்த நாளை தானாக ஏற்படுத்தியது போல உருவாக்கியிருக்க… இப்படி ஒன்றுமில்லாது போனதே எனும் ஆதங்கம் அஷ்மியிடம். அதிலும் இப்போது என்ன மாதிரி தவித்துக் கொண்டிருப்பாளென்று நனியின் நிலையை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

“இப்போ வேணாம் சொன்னது அண்ணா இல்லை” என்றான் ஆர்யன்.

“சீனியர் நோ சொல்ல வாய்ப்பே இல்லைடா. அண்ணா தான் நடுவுல பிளே பண்ணியிருக்கான். இவன் வேணாம் சொல்ல சொல்லி கேட்டிருக்கணும். அவங்களும் சரின்னு சொல்லியிருக்கணும்” என்றாள்.

“அப்படியே இருக்கட்டும் அஷ்மி… அண்ணாக்கு விருப்பமில்லை. வேணாம் சொல்லும்போது கட்டாயப்படுத்தவா முடியும்?” என்றான்.

“இப்போ உன் லவ்வை அந்தப்பொண்ணு அக்செப்ட் பண்ணலன்னா அப்படியே விட்ருவியா நீ?” எனக் கேட்டாள். புரிந்து கொள்ளாமல் பேசுகிறானே என்று ஆயாசமாக வந்தது அவளுக்கு.

அலுவலகம் வந்தும் காரிலிருந்து இறங்காது தம்பியிடம் விவாதம் நடத்திக் கொண்டிருந்தாள்.

“விட்டுதான் ஆகணும். இதுக்காக பின்னாடியே சுத்தவா முடியும். அப்படி சுத்தினால் வேற பேர் வச்சி அசிங்கப்படுத்திடமாட்டிங்க?” என்ற ஆர்யன், “விருப்பத்தை சொல்ல உரிமை இருக்க மாதிரி, வேணாம் சொல்ல எதிரில் இருக்கவங்களுக்கும் உரிமை இருக்கே. சொல்ற வரை தான் உன்னோட விருப்பம். சொல்லிட்ட பிறகு, எதிரில் இருக்கவங்க கையில் தான் இருக்கு உன்னோட விருப்பத்தோட லைஃப்” என்றான்.

“ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரி பேசாத ஆரி” என்ற அஷ்மி, “அவங்க பாவம்டா” என்றான்.

“நீங்க எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்றீங்க?” என்றவன், “கிடைத்த சான்ஸ் மிஸ் பண்ணது அவங்க ரெண்டு பேரோட மிஸ்டேக். இதில் நீங்களோ நானோ இனி பண்றதுக்கு ஒண்ணுமில்லை” என்றான்.

……

“அண்ணாக்கு தான் மேரேஜில் இன்ட்ரெஸ்ட் இல்லையே!”

“உனக்கு புரியலடா… அண்ணா இன்னும் கொஞ்ச நாளில் மாம் சொல்றாங்கன்னு வேறொரு பொண்ணு கூட கல்யாணம் பண்ணிப்பான். அவனோட பிடிவாதமெல்லாம் மாம் கண்ணீரை பார்க்கும் வரை தான். அண்ணாக்காக கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் அப்படின்னு இப்போ இருக்க மாம், இன்னும் கொஞ்ச நாள் போனால் இறுக்கிப் பிடிப்பாங்க. அண்ணா முடியாதுன்னு சொன்னாலும் கண்டிப்பா ஒத்துப்பான். அப்போ இவனையே நினைச்சிட்டு இத்தனை வருஷமா காத்திருக்க சீனியர் பாவமில்லையாடா?” அவளது குரலில் அவ்வளவு வேதனை.

“எப்படியும் மாம் அண்ணாவை இப்படியே விட்டுடமாட்டாங்க. அண்ணாவும் ஒத்துக்கும் நாள் வரும் தானே? அதுக்கெதுக்கு இப்போ இவ்ளோ டிராமா நடுவில். சீனியர்க்கே ஓகே சொல்லியிருக்கலாமே” என்றாள்.

“நீங்க எமோஷ்னலி பிளாக் ஆகியிருக்கீங்க” என்ற ஆர்யன், “பர்ஸ்ட் சொல்லனும் அஷ். அவங்க சொல்லவே தயாரா இல்லைங்கிற அப்போ அண்ணாவை நாம் அக்யூஸ் பண்ண முடியாது. அவங்க சொன்னால், அண்ணா எஸ் சொல்ல வாய்ப்பிருக்கு. அட்லீஸ்ட் நம்மள லவ் பன்ற பொண்ணு அப்படின்னு கன்சிடர் பண்ணவாவது தோணும்” என்றான்.

“ம்… பட் இது அவங்க லவ். நான் சொல்றது சரி வருமாடா?”

“நான் உங்களை சொல்ல சொல்லலையே! அண்ணியையே ஒருமுறை சொல்ல சொல்லுங்க” என்றான்.

ஆர்யன் பேசியதில் அவளிடமும் ஒரு தெளிவு.

“பட் அதுக்கு வாய்ப்பில்லைடா.” வருத்தமாகக் கூறினாள்.

“அப்போ நீங்களோ நானோ நடுவில் ஒன்னும் பண்ண முடியாது” என்ற ஆர்யன், “அவங்க லவ் அவங்க தான் எதும் செய்யணும். நாம வேடிக்கை பார்க்கலாம். சப்போர்ட் பண்ணலாம். அவங்களுக்காக பேசிட முடியாது. அது சரியும் வராது. என்னோட காதலை நான் அனுபவித்து உணர்வுப்பூர்வமா சொல்றதுக்கும், பக்கமிருந்து பார்த்திட்டு சும்மா கதை மாதிரி இன்னொருத்தர் சொல்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்றான்.

“டேய் தம்பி… எப்புட்ரா!”

“அனுபவம் தான். வேறென்ன” என்ற ஆர்யன், “அவளோட பதில் நோ’தான்னு தோணுதுக்கா” என்றான்.

“லவ் சொல்லிட்டியாடா?” அதிர்ச்சியாக வினவினாள்.

“ம்ம்… கண்டிப்பா அவள் அண்ணாகிட்ட சொல்லியிருப்பாள்” என்றவன், “எந்த அண்ணன் தங்கச்சியை ஒரு பையன் லவ் பன்றான்னு தெரிஞ்சா அக்செப்ட் பண்ணிப்பான்” என்றான்.

“சீனியரோட அண்ணா இருக்காரே!” சொல்லும் போதே அஷ்மியின் முகத்தில் அப்படியொரு கனிவு. இவ்வளவு நேரம் கோபத்தில் ஜிவுஜிவுத்த முகமா எனும் விதமாக சடுதியில் மாறியிருந்தது.

“அண்ணியோட அண்ணாலாம் நூத்துல ஒருத்தர் அஷ்மி” என்றான்.

“உன் அண்ணன் ஓகே சொல்ல வாய்ப்பே இல்லையாம். இதுல நீ வேற இன்னும் பெயர் கூட தெரியாத சீனியரை வார்த்தைக்கு வார்த்தை அண்ணி அண்ணி சொல்லிட்டு இருக்க” என்றாள்.

“அண்ணா உங்களுக்கு எவ்ளோ முக்கியம் தெரியும். நீங்களே அவங்களுக்காக சப்போர்ட் பண்ணி அண்ணாவை இவ்ளோ பேசும் போது, அண்ணி அண்ணாவை எவ்ளோ நேசிக்கணும். சோ, நான் ஃபிக்ஸ் ஆகிட்டேன். அவங்க தான் எனக்கு அண்ணின்னு” என்றான்.

“ம்ம்” என்ற அஷ்மி, “என்னாலும் வேற யாரையும் அண்ணா பக்கத்தில் நிக்க வச்சு யோசிக்கக்கூட முடியாது ஆரி” என்றாள்.

“பார்ப்போம்… இல்லைன்னா வேறெதுவும் பிளான் பண்ணுவோம்” என்றான்.

“சரிடா!”

“இப்போ நார்மல் ஆகிட்டிங்களா நீங்க?”

“ஓகே தான்.”

கண்ணாடி தட்டும் ஓசையில் காரின் சன்னல் கதவினை இறக்கிய அஷ்மி, பிரணவ் என்றதும், “ஆபிஸ் வந்துட்டேன் ஆரி. அப்புறம் பேசலாம்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு, பிரணவ்வை முறைத்துக் கொண்டு காரிலிருந்து இறங்கினாள்.

“ஆரி’யா கால் பண்ணான்? எனக்கு அவன் கால் செய்து டூ டேஸ் ஆச்சு” என்ற பிரணவ்வை கண்டுகொள்ளாத அஷ்மி அலுவலகத்தின் உள்ளே சென்றாள்.

‘என்னாச்சு இவளுக்கு?’

பிரணவ் யோசித்துக்கொண்டு நிற்க,

“சார் மூவ் பிளீஸ்” என்றாள் ரீமா.

“ஹான்” என்று பிரணவ், திரும்பி விலகி வழிவிட, “தேங்க்ஸ் சார்” என்று அவளும் அவனிடம் ஒன்றும் பேசாது உள்ளே சென்றுவிட்டாள்.

‘இவளுமா?’ என நினைத்த பிரணவ்வுக்கு இருவரும் தன் மீது எதோ கோபத்தில் இருக்கின்றனர் என்று மட்டும் புரிந்தது. காரணம் தான் தெரியவில்லை.

error: Content is protected !!
Scroll to Top