என் ஆயுள் நீயே 16
வண்டியை செலுத்திய வேகத்தில் உதயனின் கோபம் கஜேந்திரனுக்குத் தெரிந்தது.
“என்னாச்சுப்பா? எதுக்கு இவ்ளோ கோபம், வேகம்?”
உதயனுக்கு தன் குடும்பத்தாரிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லை.
கஜேந்திரனிடம் சொல்லிவிட்டான்.
நேற்று முதல் முறையாக வந்தனா தன்னை சந்தித்ததையும், சொல்ல நினைத்ததையும், அவள் கூறுவதற்குள் தடுத்து, தான் வந்துவிட்டதையும்.
“ஆனால் இப்படியொரு காரியம் பண்ணுவாள் எதிர்பார்க்கல சித்தப்பா” என்றான். வேதனையாக.
என்னயிருந்தாலும் அவனுக்காக அல்லவா அவள் இப்படியொரு செயலை செய்து வைத்திருக்கிறாள்.
மகனின் கோபம் புரிகிறது. ஆனால் இந்த வேகம். அவனது முகத்தில் தெரியும் தவிப்பு. காரணம் விளங்காது மனதில் தோன்றியதை யோசிக்காது கேட்டுவிட்டார்.
“உங்களுக்காக இப்படியொரு காரியம் பண்ணிட்டா அப்படின்னதும் மனசு தடுமாறுதுங்களா?”
“சித்தப்பா” என்ற அதிர்வோடு வண்டியை நிறுத்திவிட்டான்.
“ஒரு உயிர்… மனிதாபிமானம். அவ்வளவுதான்.” ஸ்டியரிங்கை அழுந்த பற்றியவனாக தாடை இறுகக் கூறினான்.
“மன்னிச்சிடுங்க.” உடனே எவ்வித தயக்கமின்றி மன்னிப்பைக் கேட்டிருந்தார்.
அங்கு அவர்களுக்கு வயது முக்கியமில்லை. உதயன் என்பவன் மட்டுமே முக்கியம். அவருக்கு மட்டுமில்லை, இவ்விடத்தில் கஜமுகன் இருந்திருந்தாலும் தயக்கமில்லாது மன்னிப்பைக் கேட்டிருப்பார்.
மருத்துவமனை வந்ததும் வரவேற்பில் விசாரித்து, வந்தனாவிற்கு சிகிச்சை அளிக்கும் இடம் வந்தான்.
படுக்கையில் அமர்ந்திருந்த வந்தனாவிடம், சிகிச்சை அளிக்க ஒத்துழுப்பைக் கொடுக்க மருத்துவர் மற்றும் செவிலியர் வேண்டிக் கொண்டிருந்தனர்.
யாரின் பேச்சினையும் காதில் வாங்கிக்கொள்ளாது, வந்தனா முகத்தை தாழ்த்தி இறுகி அமர்ந்திருந்தாள்.
உதயன் மற்றும் கஜேந்திரன் உள்ளே செல்ல,
“வாங்க மிஸ்டர்.உதயன்” என்ற மருத்துவரின் குரலில் வந்தனா முகம் உயர்த்தி பார்த்தாள்.
மருத்துவர் உதயன் குடும்பத்திற்கு நன்கு பழக்கமானவர் என்பதால், “ஃபர்ஸ்ட் எய்டு பண்ணியாச்சு. அடுத்தக்கட்ட ட்ரீட்மென்ட்க்கு கோ ஆப்பரேட் பண்ணமாட்ராங்க” என்றார்.
உதயன் மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கால்களை சற்று அகட்டி நிமிர்ந்து நின்று வந்தனாவை கூர்மையாய் நோக்கினான்.
உதயனின் அப்பார்வை அவளின் முதுகை சில்லிட வைத்தது.
“இப்போ ட்ரீட் பண்ணுங்க டாக்டர்” என்ற உதயன், “பிளாக் மெயில் பண்ணி காதலை வரவழைக்க முடியாது” என்று ஒருவித வெறுப்பான முகபாவம் காட்டி அறையைவிட்டு வெளியில் வந்து நின்று கொண்டான்.
உண்மையில் இதுவும் கட்டாயப்படுத்தும் நோக்கம் தான்.
மருதனுக்கு மகள் என்றாள் அதீத பாசம். அந்த பாசத்தின் அளவை, தன்னுடைய பரம எதிரியாக நினைக்கும், உதயன் வீட்டு படியேறிச் சென்று அவர் நின்றதிலே தெரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக ஏற்பாடு செய்திருக்கும் மாப்பிள்ளை மீது பிடித்தமில்லை, தனக்கு உதயனை பிடித்திருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் மருதன் ஒப்புக் கொள்ளமாட்டரென்று வந்தனாவுக்கு நன்கு தெரியும்.
அதைவிட தந்தை பணிந்து செல்லுமிடம் தன்மீதான அன்பு என்று தெரியும். அதை வைத்து மருதன் மட்டுமல்லாது உதயனையும் வளைக்க நினைத்துவிட்டாள்.
நேற்று உதயன் அவள் சொல்ல வருவதைக்கூட கேட்காது சென்றது அவளுக்கு வலி கொடுத்தது நிஜம். ஊருக்குள் கெத்தாக கம்பீரமாக வலம் வரும் உதயன் மீது தானாக ஒரு பிடித்தம். அது காதலா என்றால் அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அதனை அவனிடம் சொல்லிட பயம். மருதனுக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். அதனால் அமைதியாக இருந்தாள். சாதாரண விருப்பத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத வயதில்லை. ஈர்ப்பின் அளவு கூடிப்போக காதலாக உருவகம் கொண்டுவிட்டாள். காதல் என்ற ஒன்று நீ நினைக்கும் முன்பு உன் மனம் உணரும் என்பது ஏனோ தெரியவில்லை.
வந்தனா உதயன் மீது விருப்பம்கொள்ள முக்கிய பங்கு அவளது தோழிகளுக்கும் உண்டு.
தோழிகளுடன் வரும்போது போகும்போது உதயன் தென்பட்டால், “உரிமை இருந்தும் எட்ட நிக்கிற. எங்களுக்கு வெறும் சைட் மட்டும் தான் கொடுத்து வச்சிருக்கு. இப்படியொரு பையன்னா… பகையாவது, சண்டையாவதுன்னு நானெல்லாம் எப்பாவோ என்னத்தையும் செய்து இந்நேரம் கையால் தாலி வாங்கியிருப்பேன்” என்று வந்தனாவை, அவளின் விருப்பம் தெரிந்து வெறுப்பேற்ற, அவளின் மனதில் தோழிகளிடம் மூக்குடைபடக் கூடாதென்று நினைத்தவளுக்கு உதயனை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் தான்.
விளையாட்டாய் பேசும் பேச்சுக்களுக்கு அர்த்தம் கொண்டு ஒவ்வொன்றும் செய்ய நினைத்தால் வேதனை நமக்குத்தான். அவளுக்கு அது புரியவில்லை.
விளையாட்டு வினையாகுமென்று அவளது தோழிகளும் அறியவில்லை. சிறு சிறு விளையாட்டுப் பேச்சுக்கள் தான், பெரும் அனர்த்தங்களுக்கு காரணமாக அமைந்திருக்கிறது.
திடீரென மருதன் திருமணமென்று சொல்லியதோடு, மாப்பிள்ளை பார்த்துவிட்டதாகவும், நாளை வருகின்றனர் என்றதும் வந்தானாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதுநாள் வரை தற்செயலாகக் கடக்க நேர்கையில் கூட தன் முகம் பார்த்திராத உதயனிடம் காதலை சொல்ல வந்தவளுக்கு, அவன் தன்னை கண்டுகொண்டு பேசவே விடாது சென்றுவிட்டது மனத்தாங்கல் தான்.
அந்த மனத்தாங்கல் எப்படியும் உதயனை மணம் முடிக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஆழ விதைக்க, எதைப்பற்றியும் யோசியாது விடியலில் தென்னைமரத்தில் கூண்டு கட்டும் கரு வண்டிற்காக மருதன் வாங்கி வைத்திருந்த மருந்தினை எடுத்துக் குடித்துவிட்டாள். அதுவும் காப்பாற்றக் கூடிய அளவினை கணக்கிட்டு குடித்திருக்க, மருத்துவமனைக்கு அழைத்து வந்து முதலுதவி அளிக்கும்வரை அமைதியாக இருந்தவள் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை.
சகுந்தலா அழுது கரைய, மருதன் நெஞ்சில் அடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஒற்றை மகள். அதீத பாசம் அவருக்கு. அவளின் செயலில் கடிந்துகொள்ளவும் வரவில்லை அவருக்கு.
“ஏன்டி இப்படியொரு காரியம் பண்ண. அந்த மனுஷன் என்னடி பாவம் பண்ணார். உன்மேல உசுரே வச்சிருக்கார். எப்படி நிலைக்குலைஞ்சி உட்கார்ந்திருக்கிறார் பாருடி” என்று சகுந்துலா அழ,
“எனக்கு உதயன் மாமாவை தான் கட்டிக்கணும்” என்றாள். விறைத்துக் கொண்டு.
“அவனுக்காகவா சாகத் துணிஞ்ச?” மருதன் கேட்க, “ஆமா. கட்டினா அவரைத்தான் கட்டுவேன்” என்றாள் அடமாக.
“அவன் வாசலை நான் மிதிக்கணுமா?” மருதனிடம் அவ்வளவு கோபம்.
“ஒருநாளும் இது நடக்காது.”
“அப்போ நானும் வைத்தியம் பார்க்க சம்மதிக்கமாட்டேன். செத்துப்போறேன்” என்றாள்.
“உன்னை இப்படி வாரிக்கொடுக்கவா அந்த மனுஷன் அம்புட்டு பாசம் காட்டி வளர்த்தாரு?” சகுந்தலா அழ, “எனக்கு பிடிச்சதை செய்து வச்சு பாசத்தைக் காட்டுங்க” என்றாள் வெடுக்கென்று.
“உன் முடிவு இதுதானா?”, மருதன்.
“ஆமா. அவரை கட்டிவச்சா வாழுறேன். இல்லை இப்போ இங்கவே சாவுறேன்” என்றாள். சற்றும் அசரவில்லை அவள்.
அவளுக்குத் தெரியும், மருதன் எத்தனைக்கு எத்தனை கோபக்காரரோ, அவ்வளவுக்கு அவள் மீது பாசம் கொண்டவர். அந்த தைரியத்தில் தான் அவரை இழுத்துப் பிடிக்கிறாள்.
“நேரமாகுது. விஷம் இரத்தத்தில் பரவினால் ஆபத்து” என்று மருத்துவர் சொல்ல, அடுத்து மருதன் எதுவும் யோசிக்கவில்லை கஜமுகன் வீட்டை நோக்கிப் புறப்பட்டிருந்தார்.
தன் மகள் இவ்வளவு அழுத்தமாக தன்னை எதிர்த்து நிற்கிறாள் என்றால், உதயனுக்கும் விருப்பமென்று அவராக நினைத்து சலம்பல் செய்திருந்தார்.
உதயன் பின்னாலே மருத்துவமனை வந்து சேர்ந்த மருதன், உதயன் மகளிடம் சொல்லியதைக் கேட்டு அதிர்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
உதயன் சொல்லிய ஒற்றை வரியில், முழுதாய் அனைத்தையும் கண்டுகொண்டார்.
உதயன் மறுத்த பின்னர் தன் மகள் செய்து வைத்திருக்கும் செயல், அவருக்கு தலையிறக்கமாக இருந்தது.
உதயனின் வீட்டில் அத்தனை ஆட்டம் ஆடியவர், உண்மை தெரிந்த பின்னர், தனக்கு முன்னால் சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டிருப்பவனின் முகம் பார்க்க முடியாது சிறுத்து தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.
உதயன் சிறியவனாக இருந்தாலும், ஊரிலும் தொழில் செய்யும் இடத்திலும் அவனின் மதிப்பும் மரியாதையும் அறிந்திருப்பவருக்கு, அவனை பேசிய வார்த்தைகள் நினைத்து தற்போது குன்றலாக இருந்தது.
தான் அவ்வளவு பேசியும், தன்மீது தவறில்லை என்ற நிலையிலும், உதயன் இங்கு வந்து நிற்பதற்கான காரணம், அவரின் மகள் உயிர் பிழைக்க வேண்டுமென்ற காரணம் மட்டுமே அல்லவா.
எப்போதும் அவர்களைத் தொழிலில் அடிக்க, மருதன் பலவற்றை செய்வார். அவற்றையெல்லாம் சேதாரமின்றி உதயன் முறியடிப்பானேத் தவிர்த்து, ஒருபோதும் அவர் செய்ததை அவன் திருப்பி செய்ததில்லை. ஏன் செய்ய நினைத்துமில்லை. அதில் மருதனுக்கு எதிரி என்பதை தாண்டி உதயன் மீது உயர்வு. இன்று அவரின் பார்வையில் அவன் இன்னும் உயர்ந்து தெரிந்தான்.
மகளின் நாடகம் புரிந்து மனதில் வருத்தம் கொண்டார்.
சிகிச்சை முடிந்து வெளியில் வந்த மருத்துவர், “இனி பயப்பட ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்ல,
“போகலாம் சித்தப்பா” என்று உதயன் முன் நடந்தான்.
உதயன் இங்கு வந்தது, தன்னை காரணமாக வைத்து ஒரு உயிர் துடித்திடக் கூடாது என்பதற்காக மட்டுமே! வந்த காரியம் நடந்தேற கிளம்பிவிட்டான்.
உதயனே ஒன்றும் பேசாது கிளம்பிட, மகனைப் பின்பற்றி கஜேந்திரனும் சென்றுவிட்டார்.
இருவரில் ஒருவர் எதும் கோபமாக பேசியிருந்தால் கூட மருதனின் மனம் ஆறுதல் கொண்டிருக்குமோ? இப்போது இன்னும் நொந்துபோனார்.
“இப்போ உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க” என்று செவிலி வந்து சொல்லியும், மருதன் மகளைக் காண செல்லாது அசையாது அமர்ந்திருந்தார்.
கணவரின் நிலை புரிந்த சகுந்தலா மட்டும் வந்தனாவை காண அறைக்குள் சென்றார்.
உதயன் வீட்டிற்கு வர, விஷயமறிந்து குமரி அங்கு கத்திக் கொண்டிருந்தார். உதயன் எப்படி செல்லலாமென்று.
ஜெயந்தன் அடக்கியும் குமரி வாயினை மூடவில்லை.
என்னதான் குமரிக்கு மருதன் சொல்லியது போல உதயனுக்கு வந்தனா மீது விருப்பமெல்லாம் இருக்காது என்று மற்றவர்கள் போன்று நம்பிக்கை இருந்தாலும், புள்ளி அளவு உண்மையாக இருந்துவிட்டால் தன் மகளின் வாழ்வு என்ற பயம்.
அதிலும் உதயன் அங்கு சென்றது அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வந்தனா மீது அப்படியொரு எண்ணம் இல்லையெனும் போது எதற்காக உதயன் செல்ல வேண்டும் எனும் கேள்வி அவரிடம்.
“எவ்ளோ திமிரு கண்டு என்னத்தையும் செய்து வச்சா நம்ம புள்ளை எதுக்கு அங்க போகணும்?”
“இவள் தம்பி வராம வாய் மூடமாட்டாள்.” காமாட்சி கங்காவிடம் முணுமுணுத்தார்.
“இப்படி பறந்து கட்டி ஓடினா. ஊர் கண்டதும் பேசுமே. அதுக்கு நாமே வழி வைக்கணுமா? எதுக்கு போகணும்? ஊர் பேசணும்?” குமரி கையை ஆட்டி, வார்த்தையை இழுத்துப் பேச, உதயன் வண்டி சத்தம் கேட்டு மற்றவர்கள் வேலையாக இருப்பதைப்போல காட்டிக்கொண்டனர்.
“போகாம?” குமரி பேசியதைக் கேட்டுக்கொண்டே உள் வந்தான் உதயன்.
“அது வந்து தம்பி…” குமரி உதயன் ஒற்றை வார்த்தைக்கு தடுமாறினார்.
“பகையா இருந்தாலும் உரிமைப்பட்ட உறவாச்சே. விட முடியுமா?” கேட்ட உதயன் மேலேறிச் சென்றுவிட்டான்.
குமரி நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார்.
உதயன் சொல்லிய உரிமைப்பட்ட உறவு என்பதில் அவரின் மனம் ஆட்டம் கண்டதென்றால், கங்காவிற்கு நெஞ்சம் குளிர்ந்தது. அவருக்கு இருக்கும் ஒரே பிறந்த வீட்டு உறவாயிற்றே! தன் இறுதிநாள் வரை பகையோடு போய்விடுமோ என்று கங்கா வருந்தாத நாளில்லை. உதயன் சொல்லியது, எப்படியும் வெட்டி நிற்கும் உறவை இணைத்து விடுவான் என்று அகமகிழ்ந்தார்.
“ஆஸ்பத்திரியில என்னாச்சு? உங்க மகன் சொல்லிட்டுப் போறத பார்த்தா என் மகளை நட்டாத்தில் விட்டுடுவீங்க போல. புதுசா தாய் மாமா உறவு கொண்டாடிட்டு போறாங்க” என்றார் குமரி.
ஜெயலட்சுமி தலையில் அடித்துக் கொண்டார். மகளின் வாயை மூட முடியாதென்று அறிந்து அவர் வாய் திறக்கவே இல்லை.
“நீயா எதையும் நினைச்சு பேசக்கூடாது குமரி” என்று ஆரம்பித்த கஜேந்திரன், இளங்கோவனின் செருமலில் அனைத்தும் கூறினார்.
அப்போது தான் குமரியின் மனம் தெளிந்தது. ஆனால் அவர் கொண்டிருக்கும் முடிவை செயல்படுத்த தீவிரமாகினார்.