என் ஆயுள் நீயே 17
புதிய செயல்முறைத் திட்டத்திற்கான மாதிரியை பிரணவ் விளக்கிக் கொண்டிருந்தான்.
அஷ்மி, ரீமா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, அவர்களின் பார்வை புரொஜக்டர் பலகையில் நிலைத்திருந்தது.
எந்தவொரு திட்டமும் வடிவமைத்து, செயல்படுத்தும் முன் மூவரும் கலந்தாலோசிப்பது வழக்கம். அங்கு அதுதான் நடந்துக் கொண்டிருந்தது. ஆனால், வழக்கமாக பிரணவ் விளக்கம் கொடுக்கும்போது மற்ற இருவரும் அந்நேரம் தோன்றும் புது யுக்திகள், அதிலுள்ள பிழைகள், இந்த குறிப்பு செயல்படுத்தும் போது சரிவருமா? இதற்கு மாற்று என்ன? என்று பலதும் எடுத்து சொல்லி சிறு விவாதமே நடக்கும்.
இன்று, இருவரும் பிரணவ் சொல்வதை ஏற்கும் நிலையில் அமைதியை கடைப்பிடித்தனர்.
வடிவமைக்கும் போது சரியாகக் குறிப்பிட்ட ஒன்றை, தற்போது பிரணவ் வேண்டுமென்றே தவறாக சொல்ல, இருவரும் தெரிந்த போதும் வாய் திறக்கவில்லை.
கையிலிருந்த லேசர் பாயிண்டரை மேசையில் வைத்த பிரணவ், இருக்கையின் பின் நின்று இரு கைகளையும் அதில் ஊன்றி, இருவரையும் ஆழப் பார்த்தான்.
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன கோபம்?” நேரடியாகக் கேட்டுவிட்டான்.
காலையிலிருந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றான். வழமையாக இருக்கும் கலகலப்பு இருவரிடமும் இல்லை. முகத்தை வெளிப்படையாகவே உம்மென்று வைத்திருக்கின்றனர்.
கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்தனர்.
அஷ்மியும், ரீமாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நான் எதும் தப்பு பண்ணிட்டனா?”
“மீட்டிங் முடிஞ்சா கிளம்பலாம்.” அஷ்மி இருக்கையை விட்டு எழுந்துவிட்டாள்.
“இப்போ எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க? என் மேல் எதும் மிஸ்டேக் அப்படின்னா நேரா சொல்லுங்க. அதைவிட்டு…” என்று வார்த்தையை நிறுத்தியவன்,
“பொண்ணு பார்க்கப்போன விஷயத்தில் நானெதும் கோல்மால் பண்ணியிருப்பேன் நினைக்கிறீங்க… ரைட்?” சரியாக யூகித்தவனாக வினவினான்.
இப்போது பெண்கள் இருவரின் பார்வையும் பிரணவ் மீது அழுத்தமாகப் படிந்தது.
“அப்போ அதுதான் இல்லையா?” என்ற பிரணவ், “நான் எதுவும் பண்ணல? அவளாவே தான் செட் ஆகாது சொன்னாள்” என்றான். சிறு தடுமாற்றத்துடன்.
“நிஜமாவா?” ரீமா கூர்மையுடன் வினவினாள்.
பிரணவ் பதில் சொல்லாது முறைத்துப் பார்த்தான்.
“நான் எதுவும் பண்ணல” என்றான்.
“அப்பட்டமா பொய் சொல்றான். நீங்க வாங்க ரீமாக்கா” என்று அஷ்மி ரீமாவின் கையை பிடித்து இழுக்க,
“உனக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்காடா?” எனக் கேட்டிருந்தாள் ரீமா.
“ஹேய் ரீமா… இதழ் நோ சொன்னதுக்கு நானென்ன பண்ண முடியும்?” என்றான்.
“ஹோ…” ரீமா உதடு குவித்து இழுக்க…
“இன்னும் பொய்யை மெயின்டெய்ன் பண்றான் பாருங்க” என்று கடுப்பாக மொழிந்தாள் அஷ்மி.
“அஷ் வேண்டாம்… ரெண்டு பேரும் ரொம்ப ஓவரா போறீங்க” என்று பிரணவ் நீட்டிய சுட்டுவிரலை தட்டிவிட்ட அஷ்மி…
“நீ ஏதோ பிளே பண்ணியிருக்க… பட் மாம் மாதிரி, எல்லாம் தெரிஞ்சும் அதை நான் நம்பமாட்டேன்” என்றான்.
“என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்ட பிரணவ், “உங்களால் புராஜக்ட் டிஸ்கஷன் மூடே போச்சு. நாளைக்கு இதை சப்மிட் பண்ணனும். அந்த நினைவிருக்கா உங்களுக்கு?” என்றான். கோபமாக.
“சரி நீயும் சீனியரும் தனியா பேசப் போனீங்களாமே… என்ன பேசுனீங்க?” மாற்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு புருவத் தூக்கலோடு கேட்டாள் அஷ்மி.
“ஜஸ்ட் காலேஜ் டேஸ் டாக். அவ்ளோதான். வேற எதுவும் பேசல” என்ற பிரணவ், “நான் தான் பையன்னு தெரியாம ஓகே சொல்லியிருப்பா போல, நேரில் பார்த்து தெரிஞ்சதும், காலேஜிலே ஒத்து வராது… இதுல லைஃப் லாங் எப்படின்னு செட் ஆகாது சொல்லிட்டாள்” என்று சாதரணமாக தோள்களை உயர்த்தி இறக்கினான்.
அஷ்மிதா, ரீமா ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“நீங்க ரெண்டு பேரும் இப்படியே நில்லுங்க. நான் வேலையை பார்க்கிறேன்” என்று பிரணவ் இருக்கையில் சென்று அமர்ந்தான்.
“நிஜமாவே சீனியரே செட் ஆகாது சொன்னாங்களா?”
மடிக்கணினியில் தட்டிக் கொண்டிருந்த பிரணவ் ஒரு கணம் நிறுத்தி, கேட்ட தங்கையை ஏறிட்டான்.
“இன்னும் நம்பலன்னா நானென்ன பண்ணட்டும் அஷ்மி” என்ற பிரணவ், “நான் மேரேஜ் பண்ணிக்காம இருக்க எதோ நடுவில் விளையாடியிருக்கேன் நினைக்கிறீங்க?” எனக் கேட்டு, “வேணும்னா இன்னொரு பொண்ணு பாருங்க. ஓகேன்னா மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றான்.
“உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருத்தியை உயிரோடு எத்தனை தடவைதான் கொல்லுவ. அங்க அவளை துடிக்க வச்சிட்டு, இங்க வந்து இன்னொரு பொண்ணு பாருங்க சொல்ற… சத்தியமா உன்மேல அவ்ளோ கோபம் வருது பிரணவ்” என்ற ரீமா, “உண்மை தெரியும் போது ரொம்பவே வருத்தப்படுவ நீ” என்று வெளியேறிவிட்டாள்.
அஷ்மி முறைத்துக் கொண்டு நின்றாள்.
“என்னாச்சு உங்களுக்கு? இதழ் என்னை ரிஜெக்ட் பண்ணதுக்கு நானே ஃபீல் பண்ணல. நீங்க ஏன் இவ்ளோ ரியாக்ட் பண்றீங்க?” ஒருவித நக்கல் குரலில் கேட்டான்.
“போகும்போதே சொன்னனே… ஓகேன்னா மட்டும் போ அப்படின்னு” என்று நிறுத்திய அஷ்மிதா, “சீனியர் உனக்கு நோ சொல்ல வாய்ப்பே இல்லை” என்றாள்.
“ம்ப்ச்” என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்ட பிரணவ், “ஆமா நான் தான் மேரேஜில் விருப்பமில்லை. நீ என்னை பிடிக்கலன்னு சொல்லு சொன்னேன். அதுக்காக இதழ் சைட்(side) நீங்களா இமாஜின் பண்ணிட்டு என்னை அக்யூஸ் பண்ணிட்டு இருக்கீங்க” என்றான்.
விரக்தியாக புன்னகைத்த அஷ்மி, உதட்டை சுளித்து, தலையை சலிப்பாக இருபக்கமும் ஆட்டினாள்.
“இதுல ரீமா நான் எதோ இதழை கொலை பண்ணிட்ட ரேஞ்சுக்கு பேசிட்டுப் போறாள். நான் அப்படி சொல்ல சொல்லி கேட்கலன்னாலும், அவளே அதைதான் சொல்லியிருப்பாள்” என்றான்.
அந்நேரம் அவ்வறையின் கதவினை தட்டிவிட்டு பணியாள் உள்ளே வந்தார்.
“மேம்… கோடிங்கில் சின்ன வெரிஃபை. கொஞ்சம் வர முடியுமா?” என்று அவன் கேட்க, “போங்க வரேன்” என்று நகர்ந்தாள் அஷ்மிதா.
கதவினை திறந்து வெளியில் அடி வைத்தவள், நின்று தலையை மட்டும் திருப்பி,
“ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ’டா அண்ணா” என்று பிரணவ்வை ஒட்டு மொத்தமாக உயிர் வரை அதிர்வடையச் செய்து சென்றிருந்தாள்.
_______________________
கல்லூரி மைதானம்.
அன்றைய வகுப்புகள் முடிந்திருக்க, விடுதிக்கு செல்லாது மரத்தடியில் அமர்ந்திருந்தான் குரு ஆர்யன்.
“என்னடா ஹாஸ்டல் போகல?” கேட்டவாறு அவனது நண்பன் நரேஷ் வந்தமர்ந்தான்.
“போகணும். நீ கிளம்பல?”
“வர்ஷா வரேன் சொன்னா. லைப்ரரி போயிருக்காள்” என்ற நரேஷ், “எழில் ஓகே சொல்லியாச்சா?” எனக் கேட்டான்.
“நான் ப்ரொபோஸ் பண்ணதையே மறந்துட்டான்னு தோணுது” என்றான் ஆர்யன்.
அவனது பாவனையில் நரேஷ் சத்தமிட்டு சிரிக்க, ஆர்யன் முறைத்து வைத்தான்.
“வர்ஷாகிட்ட நான் லவ் சொல்ல தயங்குன அப்போ என்னை என்னலாம் சொல்லி கிண்டல் பண்ண நீ?” என்ற நரேஷ், “உன் ஆளு வராள்” என்று கண் காண்பித்தான்.
எழில்… எழிலினி இவர்களை நோக்கி தான் வந்து கொண்டிருந்தாள்.
எழில் உதயனிடன் தன்னை ஒருவன் காதலிப்பதாக முன் மொழிந்ததாக சொல்லியது ஆர்யனைத்தான். அஷ்மியிடம், தான் காதலை சொல்லிவிட்டதாக சொல்லியது எழிலைத்தான்.
தாங்கள் இருவரும் நட்பு கொள்வதற்கு முன்பே, தங்களின் உடன் பிறந்தவர்கள் ஒருவருக்கொருவர் அதீத பரீட்சயமானவர்கள் என்று இருவரும் தெரிந்திருக்கவில்லை. அஷ்மியும் எழில் உதயனின் மற்றொரு தங்கையாக இருப்பாளென அறிந்திருக்கவில்லை.
“ஹாய் எழில்.” அருகில் வந்துவிட்ட எழிலிடம் கையசைத்தான் நரேஷ்.
“மார்னிங் இருந்து ஒண்ணா ஒரே கிளாசில் தான் இருந்தோம். இப்போ இந்த ஹாய் அவசியமா” என்ற எழில், “இந்தா ஆர்யா” என்று அவனின் முன்பு உணவு வைக்கும் சிறு பாக்ஸ் ஒன்றை நீட்டினாள்.
“என்னது?”
“பிரான் கிரேவி இருக்கு” என்ற எழில், “அம்மா லஞ்சுக்கு செய்தாங்களாம். உனக்காக முன்னாடி செய்ய சொல்லி எடுத்திட்டு வந்திருக்கேன்ல… அந்த நினைவில் அம்மா கொடுத்து அனுப்பியிருக்காங்க. என்னை பிக்கப் பண்ண வந்த அண்ணா கொண்டு வந்தாங்க” என்று விளக்கமாகக் கூறினாள்.
“இது ரொம்ப முக்கியம்” என்று முனகிய ஆர்யன், “நான் சொன்னது என்னாச்சு?” என நேரடியாகவேக் கேட்டான்.
“ஓகே நீங்க பேசுங்க” என்று நரேஷ் நாகரிகமா நகர்ந்து சென்றுவிட்டான்.
“அண்ணா எனக்காக வெயிட்டிங். பிடிடா இதை” என்று பாக்ஸை அவனின் கையில் திணித்தாள்.
“எனக்கு வேணாம். நீ நான் கேட்டதுக்கு ஆன்சர் பண்ணு” என்றான். விடாப்பிடியாக.
“தெரியல.”
“என்ன தெரியல?” ஆர்யன் கோபமாக நெருங்கி வர, எழில் இரண்டடி பின் வைத்திருந்தாள்.
“ம்ப்ச்… சாரி” என்றவன், “உள்ள ரொம்ப படுத்துறடி. புரியுதா இல்லையா உனக்கு? ஸ்டார்டிங்கில் எதோ அட்ராக்ஷன்… தள்ளியிருந்தா சரியாகிடும் நினைச்சு தான் உன்னை என்கிட்ட பேச வேணாம் சொன்னேன். ஆனா என் பார்வையிலேயே உன்னை வச்சிருந்தேன். அதுலே தெரிஞ்சிடுச்சு… நான் டோட்டலா உன்கிட்ட விழுந்துட்டன்னு. லவ்வால ஸ்டடிஸ் அஃபெக்ட் ஆகக் கூடாதுன்னுதான், ரெண்டு வருஷமா சொல்லாம வச்சிருந்தேன். இன்னும் ஃபீவ் மந்த்ஸ்… காலேஜ் முடிஞ்சிடும். பார்க்கணும் நினைச்சாக்கூட அவ்ளோ சீக்கிரம் பார்க்க முடியாது. அதான் சொல்லிட்டேன். சொல்லும் போது கூட உனக்கு ஓகே இல்லைன்னா டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனால்…” என்று ஒரே மூச்சாக தன் உணர்வுகளை சொல்லிக்கொண்டு வந்தவன் இடை நிறுத்தி காற்றினை இதழ் குவித்து ஊதினான்.
“முடியலடி… புரிஞ்சிக்க பிளீஸ்” என்றான்.
இருவரிடமும் ஆழ்ந்த அமைதி.
சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாயிற்று. இனி முடிவு அவள் கையில் எனும் விதமாக தன்னை தன் காதலை மொத்தமாக வார்த்தையால் அவளிடம் ஒப்புவித்து பதில் வேண்டி காத்திருந்தான்.
அவளுக்கும் அவன்மீது கொள்ளை காதல். ஒரே வகுப்பு. கல்லூரி சேர்ந்த சில நாட்களிலேயே இருவரிடையேயும் நெருக்கமான நட்பு. இரண்டாம் வருடம் முடியும் வரை அவர்களின் நட்பில் எவ்வித மாற்றமுமில்லை. அந்த வருட விடுமுறையில் அவளின்றி நாட்கள் கடந்த நிலையில் தான் ஆர்யன் தன் மனதை கண்டுகொண்டான்.
அவளுடனே சுற்றிக்கொண்டு இருந்துவிட்டு, அவள் இல்லாது சின்ன சலனமிது என்று தனக்குத்தானே தேற்றிக்கொண்டு, தன் மனம் தானே அறிய இடைவெளி விட்டு நின்றான். மூன்றாம் வருடம் துவங்கிய முதல் நாள் கல்லூரி வந்ததுமே, அவளிடம் பேசாதே என்று சொல்லிவிட்டான். அவளும் காரணம் கேட்கவில்லை. இவனும் சொல்லவில்லை.
எழில் புரிதலோடு தள்ளி நின்றதே அவனுக்கு அவள் பால் கொண்ட எண்ணத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.
காதலாக விலகி நின்றவன், தற்போது பதில் வேண்டி தவமிருக்கிறான்.
வீசும் காற்றின் ஓசையை தவிர்த்து சிறு சத்தமில்லை.
முன்தினம் காதலை சொல்லும் போது கூட, ஆர்யனிடம் இப்படியொரு உணர்வுகள் ததும்பும் வார்த்தைகள் இல்லை. இதற்கே பெண்ணவள் தவித்துப் பார்த்தாள்.
எழிலுக்கு உதயனின் சம்மதம் வேண்டுமாக இருக்க, “நானும் உன்னை நேசிக்கிறேன்” என்று வாய் வரை வந்துவிட்ட வார்த்தைகளை உதிர்க்காது கடினப்பட்டு நின்றாள்.
“எதாவது சொல்லுடி!”
“நான் போகணும்…”
“ஊஃப்… சரி போ!”
எழில் விட்டால் போதுமென்று வேக அடிகள் வைக்க…
“ஓய்” என்று அவளை நிறுத்தியிருந்தான்.
“கொடுத்திட்டு போடி” என்று அவளது கையிலிருந்த டப்பாவை கண் காண்பித்து, கை நீட்டினான்.
“ஆங்… ச்சூ…” நெற்றியில் தட்டிக் கொண்ட எழில், “சாரி” என்று அவனது கையில் டப்பாவை வைத்து திரும்பி நடந்தாள்.
ஆர்யன் உரிமையாய் டி போட்டு பேசுவது, அவளுக்கு படபடப்பை கொடுத்தது.
“நாளைக்கு தேங்காய் சாதம், அவியல் வேணும். முந்திரி நிறையப்போட்டு” என்றான்.
திரும்பாது தலையை மட்டும் அசைத்தவளின் முகம் புன்னகையில் தோய்ந்திருந்தது.
(தேங்காய் சாதமெல்லாம் பிடிக்குமா என்று யாரும் கேட்கக்கூடாது. தேங்காய் சாதம், அவியல் கன்னியாகுமரி சிறப்பு உணவுகளில் அடக்கம்.)