என் ஆயுள் நீயே 18
உதயன் மருத்துவமனை சென்று வந்த கையோடு மீன் பிடி தளத்திற்கு செல்லத் தயாராகி கீழே வந்தான்.
அனைவரும் கூடத்தில் தான் ஆளுக்கொரு இடமாக அமர்ந்திருந்தனர்.
உதயன் மாடிப்படிகளில் இறங்குவது தெரிந்ததும், தூணில் சாய்ந்து கவலையாக அமர்ந்திருந்த கங்கா எழுந்து கொண்டார்.
“நீங்க உட்காருங்கம்மா. சாப்பாடு தானே எடுத்து வைக்கணும். நான் வைக்கிறேன்” என்று முன் வந்தாள் நனியிதழ்.
“இருக்கட்டும் நனி” என்ற கங்கா, சமையலறைக்குள் நுழைய, அவரின் நடையில் அத்தனை சோர்வு.
மூத்த மருமகளை ஒரு நாளும் இப்படி வாடிப்போய் கண்டிராத லட்சுமி பாட்டி, “இந்த மருதனுக்கு கொஞ்சமும் கூறில்லை. அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி, தான் நினைச்சது தான் சரின்னு வந்து ஆடிட்டுப் போயிட்டான்” என்று புலம்பினார்.
“விடுங்கம்மா… அவனை தான் நல்லா தெரியுமே! எல்லாத்துலயும் அவசரம்” என்றார் இளங்கோவன்.
“என்னவோ அவனுக்கும் நமக்கும் காலத்துக்கும் ஆகாதுன்னு ஆகிப்போச்சு” என்று வருந்திய கஜமுகன், பேரன் அழைக்கும் முன்னர் தானே உணவு மேசை நோக்கிச் சென்றார்.
“வந்தனாவை அடிக்கடி பார்த்திருக்கேன். ஆனாலும் அவளுக்கு எப்படி அண்ணா மேல லவ்வு. பேசிக்கிட்டது கூட இல்லை.” தன்னுடைய அதி முக்கிய சந்தேகத்தை நனியிதழிடம் கேட்ட எழில், அக்காவின் கையால் கொட்டு வாங்கிக் கொண்டாள்.
“நீங்க அடிச்சாலும் எனக்கு சொல்ல இன்னொன்னும் இருக்கு” என்றாள் எழில்.
“என்னது?” எதும் வில்லங்கமாக சொல்லப்போகிறாள் என்று பார்வையில் ஒருவித கூர்மையோடு நனியிதழ், தன் தங்கையைப் பார்த்தாள்.
“இப்போ நமக்கும் அவங்களுக்கு நடுவில் சண்டை இல்லாம இருந்திருந்தா இந்த சூழல் எப்படியிருந்திருக்கும்?”
“எப்படி இருந்திருக்கும்?”, நனியிதழ்.
“குமரி அத்தைக்கும், மருதன் மாமாவுக்கும், பொண்ணு கொடுக்கிறதில் நான் நீன்னு போட்டி இருந்திருக்கும். நமக்கு நல்ல எண்டர்டெயின்மெண்ட்டா இருந்திருக்கும்” என்ற எழில், நனியிதழ் பார்த்த பார்வையிலும், “நீ காலேஜ் கிளம்பல?” எனக் கேட்ட உதயன் குரலிலும் அடித்துப் பிடித்து உணவுக்கூடம் ஓடி வந்து உதயன் பக்கத்தில் அமர்ந்தாள்.
“ஆபிஸ் போகலையா பட்டு?”
“நூன் ஷிப்ட் அண்ணா.” நனியிதழ் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணி புரிகிறாள். படிப்பு முடிந்ததும், காதல் வலியில் உழன்று கொண்டிருந்தவளை திசை திருப்ப, வேலைக்கு செல்ல அனுப்பியிருந்தான் உதயன்.
“ம்ம்… வா சாப்பிடலாம்.”
மனதில் ஆயிரம் சோகம் இருப்பினும், உதயன் என்பவனின் முகத்திற்காக அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்கிறாள் நனியிதழ். அத்தோடு, முன் தினம் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கின்றாள். இந்த காதலே வேண்டாம் என்று அதிலிருந்து மீண்டுவர முயன்றுவிட்டாள். அத்தனை எளிதல்ல என்று தெரியும். இருப்பினும், கடக்க நினைத்தால் தானே அதனின் ஆழம் தெரியும். முடியுமா முடியாதா என்று அறிந்திட முடியும். தன்னையே மீட்டிட துணிந்து விட்டாள்.
உதயன் அழைத்த பின்னர் அமர்ந்திருக்க முடியாதென உணவுண்ண எழுந்து சென்றாள்.
“இன்னைக்கு பத்தாவது வயல் உப்பு வெட்டி எடுக்கணும் இன்பா. எனக்கு இறால் பண்ணைக்கு போக வேண்டிய வேலையிருக்கு. நீ அதை என்னன்னு பாரு. இந்த முறை போட்ட பாத்தி வரிசை எதுவும் சரியா இல்லைன்னு வெங்கையா சொன்னார். காண்ட்ராக்ட்டர் மாத்திடு” என்று தொழில் விஷயம் பேசிக்கொண்டே உதயன் உண்டு முடித்திருந்தான்.
“நீ வா. உன்னை காலேஜில் ட்ராப் பண்றேன்” என்ற உதயன், நனியிதழின் கன்னம் தட்டி, சிறிய தங்கையுடன் புறப்பட குமரி உள்ளே வந்தார். தனுவின் கையை அழுத்தமாக பிடித்திருந்தார்.
“பஞ்சாயத்தைக் கூட்டப் போறாங்க போலண்ணா” என்று உதயனிடம் கிசுகிசுத்த எழில், “நான் மாமாவை கூட்டிட்டு வரேன்” என்று நகர, “அவரு வீட்டிலில்லை” என்றான் உதயன்.
உதயன் மருத்துவமனையிலிருந்து திரும்பி வரும்போது குமரி அங்கு தான் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். உதயன் வந்ததும் அமைதியாகிவர், அவன் மாடிக்குச் சென்றதும் மீண்டும் ஆரம்பித்திருந்தார்.
“அவங்க கிளம்பி வந்து சாப்பிட உட்காரும் நேரம் வரை இப்படி அனத்திக்கிட்டு கிடந்த, நானே உன் வாயை தைச்சிப்புடுவேன் பார்த்துக்க” என்று லட்சுமி பாட்டி அதட்டியிருக்க, தன் வீட்டிற்கு சென்றிருந்தார்.
சரியாக உதயன் கிளம்பும் நேரத்தை அவதானித்து மகளை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்.
“அம்மா கிளம்புறேன்” என்று உதயன் வெளி நோக்கி நகர,
“உங்ககிட்ட தான் பேச வந்திருக்கேன் உதயா” என்றார் குமரி.
எப்படியும் இன்னைக்கு அவர் விடமாட்டரென்று அவனுக்குத் தெரியும். நடந்திருக்கும் சம்பவம் அப்படி. எங்கே, வந்தனா உயிரை கொடுக்குமளவிற்கு சென்றிருக்க உதயன் அவள் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுவானோ என்கிற எண்ணம்.
“சரி பேசலாம். உட்காருங்க” என்று உதயன் சொல்ல, அவன் சொல்லிய விதமே இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடுமென்று நினைத்து அமைதியாக சென்று அமர்ந்தார் குமரி.
குமரி கையை விட்டதும், இவ்வளவு நேரம் அவர் பிடித்ததில் கையில் வலி ஏற்பட்டிருக்க, தேய்த்துக்கொண்டே உணவு மேசை அருகே ஓடிவிட்டாள் தனு. எல்லோரும் அங்கு தான் இருந்தனர்.
உதயன் பேசலாம் என்றதுமே, எழிலை கல்லூரிக்கு அழைத்துச் செல்ல இன்பா முன் வந்தான்.
அந்நேரம் மருதன், தன் மனைவியுடன் வந்திருப்பதாக தோட்டக்காரர் வந்து சொல்ல, ஒற்றை கையை இடையூன்றி, ஒரு கையால் நெற்றியை தேய்த்துக் கொண்டான் உதயன்.
“வரச்சொல்லுங்க” என்று உதயன் முடிக்கும் முன்னர், “உன் அனுமதியெல்லாமல் எனக்கு வேண்டாம் எனும் விதமாக சட்டமாக வீட்டிற்குள் நுழைந்தார் மருதன்.
மருதனை கண்டதும் அனைவரும் கூடத்திற்கு வந்துவிட்டிருந்தனர்.
“பட்டு” என்று அழைத்த உதயன், நனியிதழ் பக்கம் வந்ததும், “எழிலை விட்டுட்டு வா” என்றான்.
“அண்ணா நான் போறேன். இவர் வேற வந்திருக்கார். நான் எதும் பேசிப்புடுவேன். அப்புறம் நீங்க என்னை திட்டுவீங்க” என்றான் இன்பா. உதயனுக்கு மட்டும் கேட்கும் விதமாக.
“அங்க அத்தையும் பேச வந்திருக்கிறது உனக்குத் தெரியலையா?” என்ற உதயன், “உன் விஷயம் பேச நீயிருக்க வேண்டாமா?” என்றான்.
இன்பாவின் விழிகள் அதிர்ந்து விரிந்தன.
‘இன்னைக்கு மொத்த குடும்பமும் உன்னை கட்டம் கட்டப்போவுது இன்பா.’ உள்ளுக்குள் அலறினான்.
“இப்போவே என் பேச்சை பேசணுமா அண்ணா?” எனக் கேட்ட இன்பா, உதயன் பார்த்த பார்வையில், “இன்னும் அவகிட்டவே இதைப்பத்தி நான் பேசல” என்று இழுத்தான்.
“இப்பவும் அமைதியா இருந்தா பிரச்சினை பெருசாகும். பரவாயில்லையா?” உதயன் கேட்டதும் இன்பா கப்சிப்.
“நீங்க கிளம்புங்க” என்று இரு தங்கைகளையும் அனுப்பி வைத்த பின்னரே, “உட்காருங்க” என்று மருதனுக்கு இருக்கையை காண்பித்தான் உதயன்.
எப்படியும் குமரி நனியிதழை இழுத்து பேசுவாரென்று தெரியும். ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவள், இது கொண்டும் வருந்த வேண்டாமென்று காரணமாகத்தான் எழிலோடு அனுப்பி வைத்தான்.
உதயன் பேசிக் கொள்வான். அந்த எண்ணத்தில் யாரும் முன் வரவில்லை. தாங்கள் பேசி பிரச்சினை எதும் என்றால் அதனை சமாளிக்கப்போவது உதயன் தான். ஆதலால், பேச வேண்டிய இடத்தில் பேசிக் கொள்ளலாமென்று அனைவரும் மௌனமாக இருந்து கொண்டனர்.
“நான் உட்கார வரல. ஒரு முடிவு தெரிஞ்சிக்க வந்திருக்கேன். சாதகமா இருந்தா உட்காருரேன்” என்றார் மருதன். அத்தனை வீம்பு அவரிடம்.
“நான் உட்கார்ந்து நீங்க நின்னுட்டு பேசுறதுன்னா எனக்கு ஆட்சேபணை இல்லை” என்று உதயன் சொல்லிட அதன் பொருளில் சட்டென்று அவன் முன்பு காண்பித்த இருக்கையில் அமர்ந்திருந்தார் மருதன்.
“பர்ஸ்ட் பஞ்சிலே நாக் அவுட்.” இன்பா சன்னமாக சிரிக்க, “சும்மா இருடா” என்று கங்கா அவனை அடக்கினார்.
“இன்னைக்கு நேரம் சுவாரஸ்யமா போகும் போலயே?” காமாட்சி கேட்டு தன் மாமியாரிடம் கண்டனப் பார்வையை வாங்கிக் கொண்டார்.
“ம்க்கும்…” என்று முகத்தை வெட்டிய காமாட்சி, “இன்னும் கொஞ்ச நேரத்தில் இவங்க மவள் ஆடுவாள். அப்பவும் இப்படி அதட்டி மிரட்டுறாங்களா பார்க்கிறேன்” முனகினார்.
“காமு நீ வேற ஏன்டி… கேட்டுத் தொலையப்போவுது” என்றார் கங்கா.
“ஆமாம்மா… உன் சம்மந்தி காதுல விழப்போகுது. நாளை பின்ன ரெண்டு பேரும் சேர்ந்து சபையில சமமா நிக்க வேணாமா?” இன்பா துடுக்காய் கேட்டிட, “அக்கா இவன் என்ன சொல்றான்” என்று அதிர்ந்து கேட்டார் காமாட்சி. அவன் சொல்லியதன் அர்த்தம் விளங்கிய கங்காவும் காமுவின் அதிர்விற்கு கொஞ்சமும் கம்மியில்லாது அதிர்ந்து பார்த்தார் மகனை.
இவர்களுக்கு மிக அருகிலேயே, இவர்களின் பேச்சினைக் கேட்டபடி நின்றிருந்த தன்யா, “நிஜமாவா மாமா. உனக்கு ஓகேவா?” என இன்பாவை நெருங்கி நின்றாள்.
“ஒரு தரம் கூடவா என் கண்ணை பார்த்து உன்னால புரிஞ்சிக்க முடியல?” இன்பா கேட்டிட, தனு பெரும் மகிழ்வு கொண்டாள்.
முதன் முதலில் குமரி… தனு, உதயன் திருமணப் பேச்சினை எடுத்த சமயம் தான், தனு தன் மனதை புரிந்து கொண்டாள். அன்றே இன்பாவிடம் சொல்லவும் செய்திட, அவன் அவளை அடிக்கவே கையை ஓங்கிவிட்டான்.
அவள் பார்வையில், அது முதல் அவளை முற்றும் முழுதாக தவிர்த்தும் விட்டான். தனு பார்வையாலே கெஞ்சுவதும், இன்பா முறைப்பதுமாகவே இருந்திட, எப்போதும் இன்பா தன் காதலை ஏற்கப்போவதில்லை என்று தவிப்போடு இருந்தவளுக்கு இன்றைய இன்பாவின் சம்மதம் அத்தனை மகிழ்வை அளித்தது.
“இனி எல்லாம் உதயா மாமா பார்த்துப்பாங்க” என்றாள் முகம் கொள்ளாப் பூரிப்போடு.
“ஆத்தே…” காமாட்சி நெஞ்சிலே கை வைத்துவிட்டார்.
“அக்கா எனக்கு பயந்து வருதுக்கா. குமரி என்ன ஆட்டம் ஆடப்போறாளோ!” என்றார் காமாட்சி.
“எல்லாம் அண்ணா பார்த்துக்கும்.” சாதாரணமாக சொல்லிய இன்பா, இளங்கோவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
“அவங்க ஒருத்தங்க மூத்தவங்களா பிறந்துட்டு உங்ககிட்ட படாதப்பாடு படுறாங்க” என்றதோடு, “ஏய் தனு என்னடி இதெல்லாம்?” என காமாட்சி அவளின் புஜத்திலே இடித்தார்.
“எனக்கு இன்பா மாமாவைத்தான் கட்டிக்கணும்” என்றாள். பட்டென்று அவளின் வாயை கரம் வைத்து மூடிய கங்கா, “இருக்கும் பிரச்சினை போதாதா… உதயா பேசுறவர கொஞ்சம் அமைதியா இருடி” என்றார்.
“உங்களுக்கெல்லாம் வருத்தமில்லையா?” இதுநாள் வரை உதயனுக்கு என்று பார்த்த சூழலில், இன்று இன்பாவுக்கு எனும் நிலையில் வருத்தமோ கோபமோ இல்லையென்ற கேள்வி தான் தனுவிடம்.
“எதுக்கு கோபம்? இன்பாவும் எங்க மகன் தானே! யாரை கட்டுனா என்ன? நீ இந்த வீட்டு மருமகளானா சந்தோஷம் தான்” என்றார் கங்கா.
“இத்தனை நாள் உதயா கல்யாணப் பேச்சை தட்டி வந்த காரணம் நனி மட்டுமில்லைன்னு புரியுது. அவங்களே இது இப்படின்னு ஒரு முடிவில் இருக்கும்போது எங்களுக்கு எதுக்கு வருத்தம்? எது நடக்கனுமோ அதுதான் நடக்கும்” என்ற காமாட்சி, “இன்னும் என்ன ஒன்னும் பேசாம இருக்காங்க” என்றார்.
மருதன் பேச வேண்டுமென்று பிடிக்கவே பிடிக்காது மகளுக்காக படியேறி வீட்டின் கூடம் வரை வந்துவிட்டாலும், வெளிப்படையாய் பேசிட தொண்டை அடைத்துக் கொண்டது.
எண்ணயிருந்தாலும் மனதளவில் இன்றும் மருதனுக்கு அவர்கள் பகையாளிகள் தான்.
“இப்படி மொகத்தை பார்த்துக்கிட்டு வெறுக்குன்னு உட்காரத்தான் வந்தீங்ககளா?” லட்சுமி பாட்டி அமைதியை கலைத்தார்.