என் ஆயுள் நீயே 19

என் ஆயுள் நீயே 19

நனியிதழும் எழிலும் இருசக்கர வாகனத்தில் கல்லூரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தனர்.

“என்ன மேடம் ரொம்ப அமைதியா வரீங்க?” கண்ணாடி வழி தனக்கு பின் அமர்ந்திருக்கும் தங்கையிடம் வினவினாள் நனியிதழ்.

“எனக்கென்னவோ அண்ணிக்கு இன்பா அண்ணா மேலதான் விருப்பம் தோணுது” என்றாள். முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு.

“ஹோ…” என்று நனியும் தீவிர முகபாவம் காட்ட… “பெரியண்ணாவுக்கும் தெரியும் போல” என்றால்.

“ம்ம்…”

“என்ன நீங்க சொல்றதுக்கு பதிலே பேசாம வரீங்க!” நனியின் தோளிலே தட்டினாள் எழில்.

“எதுவாயிருந்தாலும் அண்ணா பார்த்துப்பாங்க. நீ இதையெல்லாம் ரிசர்ச் பண்றேன்னு இல்லாத மூளையை உருட்டாத” என்று சிரியாது கேலி செய்தாள் நனி.

“அக்கா” என்று இழுத்த எழில், “என்னையே கிண்டல் பண்றீங்க” என நனியிதழின் இடையில் குறுகுறுப்பு காட்ட, நனி நெலிந்ததில் வண்டி ஆட்டம் கண்டது. அந்நேரம் சட்டென்று யாரோ குறுக்கே வர, கீழே விழும் முன்னர், சுதாரித்து காலூன்றி நிறுத்தியிருந்தாள்.

“நல்லவேளை ஒன்னுமாகல” என்று எழில் கூற, “அமைதியா வா எழில்” என்று நனி வண்டியை உயிர்ப்பிக்க, எழில் தமக்கையின் தோளை சுரண்டினாள். வந்தனா முன் வந்து நிற்பது தெரிந்தும், நனி கவனிக்காததைப் போன்று சென்றுவிட நினைத்தாள்.

ஆழமான காதலாக இருப்பினும் நேற்று வந்தனா செய்த செயலை நனியால் ஏற்க முடியவில்லை.

“இவங்களை எங்கேயோ பார்த்திருக்கேன்.” எழில் வந்தனாவின் முகத்தை கூர்ந்து பார்க்க,

“வந்தனா” என்று மெல்ல உச்சரித்தாள் நனி.

“ஆமா இவங்க பெட்ல கிடக்காம இங்கென்ன நின்னுட்டு இருக்காங்க?” எழில் கேட்க,

“இப்போ ஓகே தான்” என்று வந்தனா பதில் சொல்லியிருந்தாள்.

“அச்சோ அக்கா இவங்க நம்மகிட்ட பேசுறாங்க. நீங்க வண்டியை எடுங்க” என்றாள் எழில்.

ஏற்கனவே வீட்டிற்கு மருதன் மனைவியோடு வந்திருக்க, இங்கு இவள் தங்களிடம் என்ன பேசப்போகிறாள் எனும் பதட்டம் எழிலிடம். இருக்கும் பிரச்சினை போதாதா என்று தான் தோன்றியது.

“காலேஜ்க்கு டைம் ஆச்சு அக்கா” எழில் சொல்லிட, “சரி நீங்க டிராப் பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பன்றேன். உங்ககிட்ட தான் பேச வந்தேன்” என்று நனியிடம் வந்தனா கூறினாள்.

“நீங்கென்ன எங்ககிட்ட பேசணும்? அதெல்லாம் ஒண்ணும் வேணாம். வழியை விடுங்க” என்றாள் எழில்.

“எழில் சும்மா இரு” என்று தங்கையை அமைதிப்படுத்திய நனியிதழ், “என்னன்னு சொல்லுங்க” என்றாள். வந்தனாவிடம்.

“அக்கா…”

“எழிலு…”

“ஓகே… ஓகே… நீங்க என்ன பேசணும் சட்டுன்னு பேசுங்க” என்ற எழில், “வர லேட்டாகும் போல, அட்டெண்டன்ஸ் போடுங்கப்பா யாராவது” என்று புலனத்தில் தன்னுடைய வகுப்பு குழுவில் குரல் பதிவை அனுப்பினாள்.

“கொஞ்ச நேரம் அமைதியா இரு எழில்” என்று இம்முறை நனியிதழ் தங்கையை அதட்டிட, எழில் வாயில் விரல் வைத்து, “ம்ம்… ம்ம்…” என்று தலையாட்டினாள்.

“நீங்க சொல்லுங்க?”

“நான் யாருன்னு தெரியுமா?” வந்தனா கேட்க, “இதை கேட்கவா வண்டிக்கு குறுக்க வந்து நின்னீங்க” என்று களுக்கி சிரித்தாள் எழில்.

சட்டென்று வந்தனாவின் முகம் மாறி சீரானது. நனியிதழ் கவனித்துவிட்டாள்.

தங்கையின் காலில் கை வைத்து அழுத்திய நனியிதழ், “தெரியும். சொல்லுங்க” என்றாள்.

“உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்” என்ற வந்தனா, “நீங்க சொன்னா உங்க அண்ணா மறுக்கமாட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். எனக்காக அவங்ககிட்ட பேச முடியுமா?” என தன்மையாகக் கேட்டாள்.

“ஆத்தீ… இது ராசதந்திரம்ரா” என்று மெல்ல முணுமுணுத்தாள் எழில். தங்கையின் கால் மீதிருந்த நனியின் கையில் அழுத்தம் கூடியது.

“அண்ணாகிட்ட நீங்களே சொல்லலாமே!” உதயனுக்கு இதில் துளியளவும் விருப்பமில்லையென்று நனிக்கு மட்டுமல்ல அவனது குடும்பத்தாருக்கும் தெரியுமே! அதோடு முந்தைய தினம் அவள் உதயனிடம் பேச விழைந்ததும்…

குடும்பத்தில் சிரியதோ பெரியதோ உதயன் கண்ணசைவின்றி எதுவும் நடக்காது. அப்படியிருக்கையில் உதயன் விருப்பம் பெரிதாக பார்க்கப்பட வேண்டிய விஷயமிது. அவனுக்கு பிடிக்காதென்று தெரிந்த பின்னரும் அவனின் பட்டு, பேச முனைந்திடுவாளா என்ன?

வந்தனாவுக்கு தன்மையாகவே புரிய வைத்திட நினைத்தாள்.

“எனக்கு அவங்களை கட்டிக்கணும். என்னை பேசவே விடல அவங்க. நீங்க சொன்னா மறுக்கமாட்டாங்க” என்றாள். தன் எண்ணம் செயல் கொள்ள வேண்டும். வந்தனாவின் முனைப்பு அவளின் பேச்சிலே தெரிந்தது.

வந்தனா முயன்று தன்னிடம் தன்மையாக பேசுகிறாள் என்பது நனியிதழுக்கு நன்கு தெரிந்தது.

“நான் சொல்ல முடியாதுங்க.” பொறுமையாக பேசினால் வந்தனாவிடம் வேலைக்காகாது என்று புரிந்து பட்டென்று கூறினாள் நனியிதழ்.

வந்தனாவின் அமைதியெல்லாம் எங்கோ சென்றிருந்தது.

“உன் அண்ணனுக்காக சாவோட விளிம்பைத் தொட்டு வந்திருக்கேன்” என்றாள்.

“எங்க அண்ணா உங்களை விஷம் சாப்பிட சொல்லலையே?” நறுக்கென்று கேட்டிருந்தாள் எழில்.

வந்தனா எழிலை முறைக்க,

“அவள் சொல்றது உண்மை தான்” என்றாள் நனியிதழ்.

“எப்படியும் உங்க அண்ணாக்கு கல்யாணம் பண்ணுவீங்க தானே? அது ஏன் நானா இருக்கக் கூடாது?” சட்டமாகக் கேள்வி கேட்டாள் வந்தனா.

“வேணும்னே பேசுறாங்கக்கா. காலேஜுக்கு டைம் ஆச்சு. பிரேக் ஹவரே வந்திடும் போல” என்று எழில் முணுமுணுத்தாள்.

“எனக்கு பதில் சொல்லிட்டுப் போங்க.” நன்றாக வழியை மறித்துக் கொண்டு நின்றிருந்தாள் வந்தனா.

“உங்களுக்கு பிடிச்சிருக்கு அப்படிங்கிறதால, எங்க அண்ணாக்கு பிடிக்காததை எப்படி செய்ய சொல்றீங்க?” முயன்றளவு நனியிதழ் பொறுமையாகவே பேசினாள்.

“இப்போ முடிவா என்ன தான் சொல்ற?” அவ்வளவு எரிச்சல் வந்தனாவிடம். அபப்பட்டமாக முகத்தில் காட்டினாள்.

“அண்ணாவே ஓகே சொன்னாலும் இவங்க வேணாம் நனிக்கா. அவங்க முகத்தை பாரேன்” எழில் நனியின் காதில் கிசுகிசுத்தாள்.

“எங்க அண்ணாக்கு பிடிக்காததை நாங்க மட்டுமில்ல, எங்க தாத்தா கூட செய்யமாட்டார். வழியை விடுறீங்களா?” என்றாள் நனியிதழ்.

“வேண்டாம்…” என்று வந்தனா பற்களைக் கடித்துக் கொண்டு, விரல் நீட்டி எச்சரித்தாள்.

“நாங்களும் அதேதான் சொல்றோம். நீங்க எங்க அண்ணனுக்கு மட்டுமில்ல, எங்க குடும்பத்துக்கே வேண்டாம்.”

“ஆமா.”

நனியிதழ் சொல்லிட, எழில் ஆமோதித்தாள்.

“என்னைத் தவிர வேறொருத்தியை எப்படி உங்க அண்ணா கட்டிக்கிறாங்க பார்க்கிறேன்” என்ற வந்தனா, “உங்களுக்கு அண்ணியா வந்து, என் கச்சேரியை வச்சிக்கிறேன்” என்று சிலுப்பிக் கொண்டு நகர்ந்தாள் வந்தனா.

“பார்க்க பேச்சே வராதுங்கிற மாதிரி, புள்ள பூச்சியாட்டம் இருந்துகிட்டு எவ்ளோ ஆத்திரம் பாருங்க” என்று எழில், செல்லும் வந்தனாவை பார்த்துக்கொண்டு சொல்ல, நனியிதழ் இரு பக்கமும் தலையை ஆட்டிக்கொண்டு வண்டியை முடுக்கினாள்.
__________________________

உயிர் அதிரும் அதிர்வில் உறைந்திருந்தான் பிரணவ்.

“ஷீ இஸ் மேட்லி லவ்ஸ் யூ அண்ணா.”

அஷ்மி சொல்லியது இன்னும் அவனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

பிரணவ்வால் நம்ப முடியவில்லை.

கண்ணில் விரியும் நினைவின் தடங்கள் யாவும், அவனுக்கு எதிராக உருவம் கொடுத்தது.

நம்ப முடியாது, ஏற்க முடியாது திணறினான்.

ஒருவித மரத்த நிலையில் தான் வீடு வந்து சேர்ந்தான்.

அஷ்மியிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் அணிவகுத்து நின்றன. ஆனால் அவள் சொல்லிய ஒற்றை வரியிலேயே ஸ்தம்பித்துப் போனவனுக்கு அடுத்து என்ன என்றே நிகழ் உணரவில்லை.

விமலா வந்து இரவு உணவிற்கு அழைத்தும் வேண்டாமென மறுத்துவிட்டான்.

“என்னாச்சு அவனுக்கு?”

கூடத்தில் அமர்ந்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த மகளிடம் வந்து கேட்டார் விமலா.

“எனக்கென்னத் தெரியும்” என்று அசட்டையாக பதில் கொடுத்து எழுந்து சென்றுவிட்டாள் அஷ்மி. அதிலே இருவருக்குள்ளும் என்னவோ உள்ளதென்று விமலா கண்டுகொண்டார்.

“இந்தப் பசங்க எதையோ மறைக்குதுங்க.” மனைவி சொன்னதை விஜயன் கேட்டுக்கொண்டாரேத் தவிர, எதுவும் சொல்லவில்லை.

“என்ன மாமா உங்க பையன் இப்படியிருக்கார்?” விமலா ராகவனிடம் குறைப்பட்டார்.

“எப்படிம்மா இருக்கான்?”

“எனக்கென்னவோன்னு.”

“அவன் அப்படியே பழகிட்டாம்மா!”

“எதே!”

“ஆமாம்மா.”

தன் தந்தையின் கேலியில் விஜயன் சத்தமின்றி சிரிக்க, ராகவனை

“மாமா” என்று விமலா முறைத்து பார்த்தார்.

“எதுக்கு இப்போ டென்ஸ்ட் ஆகுற. உன் சின்னப் பையனுக்கு கால் பண்ணு. அவன் சொல்லுவான். என்ன ஓடுதுன்னு” என்றார் விஜயன்.

“இதை மறந்துட்டேனே” என்ற விமலா ஆர்யனுக்கு அழைப்பு விடுத்து அவன் எடுக்கக் காத்திருந்தார்.

இறுதி ஒலியில் அவன் அழைப்பை ஏற்க, “என்னடா ஆச்சு? இங்க உன் அண்ணனும், அக்காவும் ஆளுக்கு ஒரு பக்கம் வயலின் வாசிச்சிட்டு இருக்காங்க” எனக் கேட்டார்.

“நீங்கெல்லாம் ஒரு அம்மாவா?”

“என்னடா நக்கலா?”

“பின்ன… மகன் ஹாஸ்டலில் இருக்கானே. போன் எடுத்ததும், என்ன தங்கம் எப்படியிருக்க? சாப்பிட்டியா? எல்லாம் ஓகே தானே? அப்படின்னு கேட்காம, உங்க கூடவே இருக்க ரெண்டும் உம்முண்ணு இருக்கிறதை விசாரிக்கிறது தான் முக்கியமா?” என்றான் ஆர்யன்.

“ரெண்டு மணி நேரத்திலிருக்க ஹாஸ்டல். வாராவாரம் வீட்டுக்கு வந்திடுற. இதுல நடுவுல அது வேணும் இது வேணும்ன்னு கேட்டு பிரணவ்வை அங்க வரவைச்சிடுற. பத்தாதுக்கு அஷ்மி வேற வாரத்துல ரெண்டு முறை வந்து பாக்குறா. இப்போ நீ கேட்டது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல” என்று விமலா கேட்க, “அம்மா” என்று சிணுங்கினான் ஆர்யன்.

“சரிடா கோச்சிக்காத… எப்படியிருக்க?”

“இதுக்கொன்னும் குறைச்சலில்லை” என்ற ஆர்யன், “இன்னுமா அவங்க பஞ்சாயத்து தீரல?” எனக் கேட்டான்.

“என்ன பஞ்சாயத்துடா? நமக்கு நல்ல பொழுதுபோகுமா?” இடையில் புகுந்து விஜயன் கேட்டார்.

“அப்பா… நீங்க இருக்கீங்களே” என்று இழுத்த ஆர்யன், “தாத்தாவும் பக்கத்தில் இருக்காரா? இல்லைன்னா அவரையும் கூப்பிடுங்க. ஒண்ணாவே சொல்லிடுறேன். அப்புறம் ஆளாளுக்கு எனக்கு சொல்லலன்னு சண்டைக்கு வருவீங்க?” என்றான்.

“நான் இங்க தான் இருக்கேன். போன் ஸ்பீக்கரில் இருக்கு. நீ கதையை சொல்லு” என்றார் ராகவன்.

“குடும்பமாய்யா அது. பசங்க ரெண்டு சோகமா இருக்கே, தெரிஞ்சு சரிபண்ணுவோம் இல்லாம, எதோ சினிமா கதை கேட்கிற மாதிரி கேட்கறீங்க. நாள பின்ன உங்களையெல்லாம் நம்பி நான் எப்படி என் லவ்வுக்கு சப்போர்ட் பண்ணக் கூப்பிடுறது” என்று கிடைத்த இடத்தில் தன்னுடைய காதலை பெரியவர்களிடம் சொல்லிவிட்டான்.

“டேய் ஆரி லவ் பன்றியாடா?” விமலா ஆச்சரியமாக வினவினார்.

“ஆமா. இப்போ தான் சொல்லியிருக்கேன். பதில் வரட்டும், அவங்க வீட்டுக்கு போய் பொண்ணு கேளுங்க” என்றான்.

“அடேய்… ரொம்ப தான் ஸ்பீடு. உனக்கு முன்ன அண்ணா, அக்கா இருக்காங்க நினைவு வச்சுக்கோ” என்றார் விமலா.

“ம்க்கும்… அவங்களுக்கு நான் வெயிட் பண்ணா சாமியாரா போக வேண்டியது தான்” என்றான்.

“அதென்னவோ சரிதான்.” விஜயன் சொல்லிட, “என்ன கிண்டலா?” என்று அவரின் தொடையிலே அடித்திருந்தார் விமலா.

“என்னயிருந்தாலும் என் முன்னாடி அடிக்காதம்மா. ரூமுக்குள்ள வச்சு அடி” என்றார் ராகவன்.

“அப்பா… யூ டூ!” விஜயன் அப்பாவியாகக் கேட்க, “விடு மகனே” என்றார் ராகவன்.

“சரி நீங்க மூணு பேரும் நல்லா விளையாடிட்டு தூங்குங்க. நான் வைக்கிறேன்” என்று ஆர்யன் சொல்ல,

“டேய் விஷயத்தை சொல்லிட்டு வைடா” என்றார் விமலா.

“அண்ணா லவ் பண்றாங்க.”

ஆர்யன் சொல்லியதை மூவருமே நம்ப முடியாது, மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்.

எதிர்ப்பக்கம் சத்தமின்றி போகவே,

“இதுக்கே ஷாக்கா?” என்ற ஆர்யன், “அண்ணா லவ் பன்ற பொண்ணு… அண்ணாக்கு பார்க்கப் போனீங்களே அவங்க தான்” என்றான்.

முதலில் ஆச்சர்யம் கொண்டவர்கள், தற்போது சொன்னதில் அதிர்ச்சி அடைந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top