என் ஆயுள் நீயே 20
பிரணவ் காதல் செய்கிறான் என்பதைவிட, அவனுக்குத் தாங்கள் பார்க்க சென்ற பெண் தான் அவன் நேசிக்கும் பெண் என்பதில் அதிர்வு கொண்டனர்.
“ஆரி… ஆர் யூ சீரியஸ்? இது ஜோக் இல்லை.” விஜயன் தான் அதிர்விலிருந்து மீண்டிருந்தார்.
“நான் ஜோக் பண்ணல டாட். அண்ணா தான் பண்ணிட்டு இருக்காங்க” என்ற ஆர்யன், “ஷீ லவ்ஸ் ஹிம் அண்ட் ஹீ லவ்ஸ் ஹெர். ஆனால் ரெண்டு பேரும் சொல்லிக்காம… வேறெதோ காரணத்தால் விலகி நிக்கிறாங்க” என்றான்.
“அப்புறம் முக்கியமான ஒன்னு…” என்றவன், “அவங்களா அண்ணாவை நோ சொல்லல. அண்ணா கேட்டுக்கிட்டதால, அண்ணி வேணாம் சொல்லியிருக்காங்க” என்று விளக்கமாகக் கூறினான்.
ஆர்யன் சொல்லியதைக் கேட்டதும், விமலாவின் முகம் வாடியது. நனி வேண்டாமென்ற கோபத்தில் என்னவெல்லாம் பேசிவிட்டார். அப்படி, தான் பேசும் போது பிரணவ் அமைதியாக இருந்தது இன்னும் வருத்தமளித்தது.
“இப்போ என்ன பண்றது ஆரி?” ராகவன் கேட்க, “எல்லாம் நானே சொல்ல முடியுமா? பெரியவங்கன்னு எதுக்கு இருக்கீங்க? என்ன செய்யணுமோ செய்ங்க” என்றவன், “இதுக்கு நடுவுல என் லவ்வை மறந்துடாதீங்க” என்று சொல்லி வைத்திட்டான்.
“ஆரி சொல்றதை எந்தளவுக்கு உண்மைன்னு நம்புறது விமலா?” என்ற ஜெயந்தன், “லவ் பண்ணறப்போ ஏன் வேணாம் சொல்லணும்? தானா அமையும் போது மறுக்க என்ன காரணம்?” என்றார்.
“எல்லாம் என்கிட்டே கேளுங்க. நானா லவ் பண்றேன்” என்று இருக்கும் கடுப்பை மொத்தமாக கணவனிடம் காட்டிய விமலா, “ஆரம்பிச்சவனுக்கு இன்னைக்கு தானே உண்மை தெரிஞ்சிருக்கு. அவனே முடிச்சும் வைப்பான். இல்லைன்னா நான் முடிவுக்கு கொண்டு வரேன். அதுவரை வேடிக்கை மட்டும் பார்ப்போம்” என்றார்.
விமலா எதோ திட்டம் போட்டுவிட்டார் என அவரின் பேச்சிலிருந்து புரிந்திட, “எல்லாம் சரி வருமா விமலா?” எனக் கேட்டார் ராகவன்.
“ஆசைப்பட்டதை நிறைவேத்திக்க அவனுக்குத் தெரியும் மாமா. நடுவுல எதையோ போட்டு குழப்பிக்கிட்டான் நினைக்கிறேன். இப்போ அஷ்மி பேசியதில், அவனே ஒரு முடிவுக்கு வந்திருப்பான். நாம கொஞ்சம் பொருத்திருப்போம்” என்றார்.
ஆண்கள் இருவரும் விமலாவின் பேச்சினை ஆமோதித்தனர்.
ஆனால் விமலாவின் திட்டம் வேறாக இருக்க… அவரின் எண்ணத்திற்கு அவர் கூறும் முன்பே செயல் வடிவம் கொடுத்திருந்தான் உதயச்செல்வன்.
**************
“இப்படி மொகத்தை பார்த்துக்கிட்டு வெறுக்குன்னு உட்காரத்தான் வந்தீங்ககளா?” லட்சுமி பாட்டி அமைதியை கலைத்தார்.
அவர் தன் மகள் மற்றும் மருமகன் இருவரையும் பொதுவாக பேசிடத் தூண்டினார்.
ஆனால் உதயன்,
“என்ன பேசணும்?” என்று மருதனிடம் மட்டுமே தன் பேச்சைத் துவங்கினான்.
“அவங்களுக்கு முன்ன நான் தான் வந்தேன்.” குமரிக்கு தன்னை விடுத்து மருதனிடம் முதலில் பேசுகிறானே எனும் பொருமல்.
அத்தோடு அவர் பக்கம் சாய்ந்து விடுவானோ எனும் அச்சம். தன்னிடம் முதலில் பேசாது மருதன் முன்பு தன்னை விட்டுக் கொடுத்துவிட்டான் எனும் எண்ணம்.
“வீட்டுக்கு வராதவங்க வந்திருக்காங்க. அவங்ககிட்ட முதலில் பேசிடுவோமே” என்ற உதயன், மருதன் புறம் திரும்ப,
“அவங்க முதலில் அப்படின்னு உரிமை கொடுக்குறீங்களோ?” என்றார் குமரி.
குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆயாசமாக வந்தது. ஆனால் உதயன் முன்பு, அவனின் அமைதிக்கு முன்பு குமரியை அதட்டி பேசிட முன்வரவில்லை. உதயன் பார்த்துக் கொள்வான் எனும் திடம். அவ்விடத்தில் கஜமுகனே அமைதியாகத்தான் அமர்ந்திருந்தார்.
உதயனின் முகமே அவனொரு முடிவை எடுத்துவிட்டான் என்று அறிவுறுத்திட, இடையில் பேசிட அவருக்கும் விருப்பமில்லை.
“இப்போ இவங்க தங்கச்சி வீடுங்கிற உரிமையான நினைப்பில் இங்க வரல. வெளியாளாத்தான் வந்திருக்காங்க. அப்படி வெளியாளா வந்திருக்கும், அவங்க முன்னாடி நம்ம குடும்ப விஷயம் பேசணுமா?” எனக் கேட்டு, குமரி மற்றும் மருதன் இருவருக்கும் ஒரே நேரத்தில் வார்த்தையால் அடி கொடுத்தான் உதயன்.
குமரி கப்பென்று வாயினை இறுக மூடிக் கொண்டார். இதற்கு மேல் எதுவும் பேசினால், பார்வையாலே அதட்டிடுவான் எனும் புரிதல்.
மருதன் வந்திருக்கும் நினைப்பும் தெரிந்ததால், வார்த்தையாலே அவரை எட்ட நிறுத்தினான் மருதன்.
இதே மருதன் கங்காவின் அண்ணனாக வந்திருந்தால், தாய்மாமன் என்று சகலவித மரியாதை அளித்து உபசரித்திருப்பான். எதிரில் இருப்பவரின் மனம் புரியாது பேச வந்திருப்பவரை இக்கணம் உறவாக ஏற்கும் மனம் அவனுக்கில்லை. சூழலும் சரியானதாக இல்லை.
“வார்த்தையால் எட்ட நிருத்திறீங்களோ?” மருதன் உதயனின் பேச்சின் உட்பொருளை புரிந்து கொண்ட்வராக வினவினார்.
“எங்களுக்கு, உறவா வரவங்களை எட்ட நிறுத்தும் பழக்கமில்லைன்னு சொல்றேன்.” சொல்லிய உதயனின் அதரங்கள் மூறல்களை வெளிக்காட்டிடாது புன்னகைத்தது.
“சரி, நான் நேரடியா விஷயத்துக்கு வரேன்” என்ற மருதன், “என் பொண்ணை கட்டிக்கோங்க” என்றார்.
“என் விருப்பத்தைக் கேட்கிற மாதிரி இல்லையே.” உதயனின் சிறு முறுவலில் மாற்றமில்லை.
“என் பொண்ணு ஆசைப்படுறாள்.”
அவ்வளவு தான் உதயன் இருக்கையிலிருந்து எழுந்து தன்னிரு கரம் குவித்து கண்களால் வாசலை நோக்கினான்.
உதயனின் அச்செயலில் படக்கென்று எழுந்த மருதன், கோபமாக தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறி மீண்டும் தோளில் போட,
“எய்யா உதயா” என்று பதறினார் கங்கா.
“இங்க அவருக்கு பொண்ணோட விருப்பம் மட்டும் தான் முக்கியமாபடுதும்மா. நாம எவ்வளவு தன்மையா பேசினாலும் புரியப்போறதில்லை. அப்புறம் எதுக்கு பேசி நேரத்தை வீணடிக்கணும். அவருக்கும் பல வேலைகள் இருக்குமே” என்றான்.
இன்பா தன் அண்ணனின் ஆளுமை கலந்த தோரணையானத் தோற்றத்தில் ரசித்து நிற்க, “நீயும் இப்படி கெத்தா பேசிப்புடு மாமா” என்றாள் தன்யா.
“அதெல்லாம் அண்ணாவே பேசிடுவாங்க. நான் உன் கழுத்தில் தாலி கட்டுற வேலையை மட்டும் பார்த்துக்கிறேன்” என்று இன்பா குறும்பாக கண்ணடிக்க, “கடல் தண்ணிக்கும் நோகாமா உப்பெடுக்கலாம் பார்க்குற” என்று கேலி செய்தாள் தனு.
“அதே… அதே…” இன்பா சட்டை காலரைத் தூக்கிவிட,
“விளங்கிடும்” என்று ஒரு மாதிரி உதடு சுளித்தாள் தன்யா.
“விளங்கணும் ஆசை. அதான் அமைதியா இருக்கேன்” என்ற இன்பா, “தாத்தாவை பார்த்து பேசிறதெல்லாம் ஆவாது தனு. அண்ணான்னா பதமா பேசிடுவாங்க” என்றான்.
“புரியுது.”
“தட்ஸ் மை கேர்ள்.”
“ரெண்டு பேரும் வாயை மூடுங்க.” காமாட்சி அதட்டிய பின்னரே, நடப்பதை கவனித்தனர்.
“முடிவா என்ன சொல்றீங்க?” பகையெல்லாம் விட்டு தானே இறங்கி வந்ததும், மிதப்பு காட்டுகின்றனர் என்று ஆத்திரம் கொண்டார் மருதன்.
“எதுவும் மாத்தமில்லைன்னு சொல்றேன்” என்றான் உதயன்.
“இப்படித்தான் சின்ன பையனை முடிவெடுக்கவிட்டு ஒதுங்கி நிப்பீங்களா?” குறி பார்த்து கல்லெறிய முயன்றார் மருதன்.
“அவங்க முடிவுக்கு ஒத்த பார்வை மாத்தி பார்க்கமாட்டோம்” என்ற கஜமுகன், “உங்களுக்கு வேணும்னா பெரியவன், சின்னவங்கிறதுக்கு வயசு அடிப்படையா தெரியலாம். ஆனால் எங்களுக்கு குணமும், மனசும் தான் முக்கியம். அது ரெண்டுலையும் எங்க உதயாவை மிஞ்சிட முடியாது. அவங்க முடிவு என்னவோ அதுதான் எங்களுக்கும்” என்றார்.
“உன் பொண்ணோட விருப்பம் முக்கியமுன்னு ஒரு தலைமுறை பகையை மறந்து நீயே வந்திருக்க… நாங்க மட்டும் எப்படி எங்க பையன் விருப்பத்துக்கு மாறா முடிவெடுக்கனும் நினைக்கிற” என்ற இளங்கோவனைத் தொடர்ந்து, “உனக்கு உன் பொண்ணுன்னா… எங்களுக்கு சகலமும் எங்க பையன் தான்” என்றார் கஜேந்திரன்.
“சரி நான் முறையா கேட்கிறேன். உங்க பையனுக்கு என் பொண்ணை கட்டிக்
கொடுக்க எனக்கு விருப்பம்” என்ற மருதன், “இப்போ உங்க சம்மதம் சொல்லுங்க” என்றார்.
“இப்படி தன்மையானப் பேச்சுக்கு பகை வேணும்னா முடிவுக்கு வரலாம்” என்றான் உதயன்.
“நானா இறங்கி வந்ததால் அவமானப் படுத்துறீங்களோ?” மூக்கு விடைக்க நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டார் மருதன்.
“உங்களை அவமானப்படுத்துறது எங்க நோக்கமில்லை. உங்க விருப்பத்துக்கு எங்க பதிலை சொல்றோம் அவ்வளவு தான்” என்ற உதயன், “இதே சூழல் மாத்தி நடக்குதுன்னு வைங்க, உங்க பொண்ணுக்கு விருப்பமில்லாமதானே பார்த்த மாப்பிள்ளை வேணாம் முடிவு செய்து இங்க வந்து நிக்கிறீங்க. இதே எங்களுக்கு விருப்பமிருந்து, அண்ணன் பொண்ணுங்கிற உரிமையில் என் அம்மா வந்து உங்ககிட்ட பொண்ணு கேட்டிருந்தால், முதலில் வீட்டுக்குள் அடி வைக்க விட்டிருப்பீங்களா?” என்றான்.
அமைதியாய் வார்த்தையால் அடி கொடுக்க முடியுமா? உதயன் செய்திருந்தான்.
உதயன் சொல்வது உண்மையே! தங்கையாகவே இருந்தாலும் வாசலோடு அனுப்பியிருப்பார் மருதன். அவருக்கு அவள் மகள் மட்டுமே முக்கியமாகத் தெரிய, உதயனின் மனம் தெரிந்தும், தான் போய் கேட்டால் சம்மதம் சொல்லித்தான் ஆகவெண்டுமென வந்துவிட்டார்.
“என் பொண்ணு உங்களை நினைச்சு உசுர விட இருந்தாள்.”
கடைசியாக இதயத்தை பதம் பார்க்கும் வார்த்தையை உபயோகித்தார்.
“கொஞ்சம் முன்னாடி வரை… பெத்த பொண்ணுக்காக, முப்பது வருட பகை மறந்து எதிராளி வீட்டுக்கு வந்திருக்கிறார் அப்படின்னு உங்க மேல ஒரு மதிப்பு வந்துச்சு. அது இப்போ இல்லை” என்ற உதயன் வார்த்தையில் பெரும் அவமானம் கண்டார் மருதன். சுருக்கென்று தைத்தது.
“என்னோட எண்ணம் தெரிந்தும் நீங்க வந்தது வேண்டுமானால் பொண்ணு மீதான பாசமா இருக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க இங்க பேசிய வார்த்தைகள் எல்லாம், உங்களோட பிடிவாதம். நானே இறங்கி வந்துட்டேன் இவனென்ன வேணாம் சொல்றதுங்கிற அகம்பாவம்” என்றான்.
உதயன் இவ்வாறெல்லாம் பேசி யாரும் பார்த்ததில்லை. மருதன் பேச வைக்கின்றார் என்று புரிந்து அமைதியாக நின்றனர்.
வார்த்தையால் வலிக்க வைக்க வேண்டுமென்ற எண்ணம் உதயனுக்குமே இல்லை. ஆனால் பேசும் நிலையில் நிற்கின்றான் உதயன்.
அவனுக்காக அவன் மீதான நம்பிக்கையில் ஒருத்தி காதலைக்கூட சொல்லாது, அவனது மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து விலகி நின்று காத்திருக்கும் போது, அடாவடி செய்து உயிரை பணயம் வைத்து மிரட்டி பயம் காட்ட நினைக்கும் வந்தனாவின் காதல் உதயனுக்கு வெறுப்பையேக் கொடுக்கிறது.
அதிலும் வந்தனா செய்யும் பிழை அறிந்தும், அவளுக்கு எடுத்துக்கூறி நல்வழிப் படுத்தாது, அவளது செயலுக்கு துணை போவது போன்று இப்படி வந்து தர்க்கம் செய்கிறாரென்று… இதுநாள் வரை எதிர்த்து நின்றபோதெல்லாம் குறையாத மருதனின் மதிப்பு, இக்கணம் பலபடி உதயனின் மனதில் கீழிறங்கியது.
“பொண்ணு தப்பு பண்ணால் எடுத்து சொல்லி திருத்தப் பாருங்க. அந்த தப்புக்கு துணை நிற்கிறேன் அப்படின்னு மேலும் மேலும் தப்பு பண்ண வைக்காதீங்க. உங்ககிட்ட காரியம் ஆவதற்கு இதுதான் சரியான வழின்னு நீங்களே உங்கப்பொண்ணுக்கு பழக்காதீங்க” என்றான்.
அதுவரை தலையை நிமிர்த்திக் கொண்டிருந்த மருதன் பார்வையை தழைத்தார்.
பிள்ளை தவறு செய்தால் கண்டித்து அறிவுரை வழங்காது இதென்ன உடனிருப்பதைபோன்ற செயல் எனும் கொட்டு அவரின் மனதை நன்கு பதம் பார்த்தது.
“புரியுது தம்பி. இவர் இங்க வரண்ணு சொல்லாம கூட்டிட்டு வந்துட்டார். தெரிஞ்சிருந்தா நானே தடுத்திருப்பேன். மன்னிச்சிடுங்க” என்று சகுந்தலா கூறி முடிக்கும் முன்…
“அத்தை நீங்க எதுக்கு என்கிட்ட” என்று அவரின் கரம் பற்றி கீழே தாழ்த்தினான் உதயன்.
அவனின் அத்தை எனும் வார்த்தையில் உதயனை விலுக்கென்று பார்த்த மருதனுக்கு, இத்தனை நேரம் அவன் தன்னை மாமா என்று விளிக்காததற்கும், தற்போது சகுந்தலாவை அத்தை என்று அழைத்தற்கும் பொருள் விளங்கியது. மௌனமாக வெளி நோக்கி நடந்தார்.