என் ஆயுள் நீயே 21
பிரணவ் அலுவலகம் செல்லத் தயாராகி கீழே வந்தான். வழக்கமான துள்ளல் அவனிடமில்லை. முகம் ஒருவித அழுத்தத்தில் மூழ்கி காட்சியளித்தது.
“அஷ்மி போயாச்சா?” எனக் கேட்டுக்கொண்டே உணவு மேசை இருக்கையில் அமர்ந்தான்.
“அவ இன்னும் ரூம் விட்டே வெளியில் வரல” என்ற விமலா, “எதுவும் மறைக்கறீங்களா பிரணவ்?” எனக் கேட்டார். எல்லாம் தெரிந்தும்.
“எஸ் மாம்” என்ற பிரணவ், “அம் இன் லவ்…” என்று இடைவெளி விட்டு, “யாருன்னு அப்புறம் சொல்றேன்” என்றான்.
என்னதான் அஷ்மி சொல்லியது உண்மையாக இருக்குமெனத் தோன்றினாலும், ‘தான் கேட்டுக் கொண்டதற்காக நனியிதழ் வேண்டாமென்றாளா? இல்லை உண்மையில் வேறு காரணம் உள்ளதா?’ என்று அறிய நினைத்தான். அதற்காகவே தற்போது பெண் யாரென்று சொல்லாது விடுத்தான்.
அத்தோடு, ‘நனியிதழ் காதலிக்கும் பட்சத்தில் தன்னிடம் இதுநாள் வரை வெளிப்படுத்தாதற்கு காரணம்? பெரும் வினா அவனுள். அதுமட்டுமில்லாது அன்று தான் பார்த்தது உண்மை இல்லையா?’ பெரும் குழப்பம் அவனுள்.
உணவினை மென்று கொண்டே ‘முடியலடி!’ மனதில் சொல்லிக் கொண்டான்.
பிரணவ் காதலிக்கின்றேன் என்று சொல்வானென்று விமலா எதிர்பார்க்கவில்லை. அவன் இப்படி நேரடியாக சொல்லியதே, வாழ்வை அவன் நேர்ப்படுத்திவிடுவான் எனும் நம்பிக்கை அளித்தது.
“லவ் பன்றதால தான் முதலில் கல்யாணத்துக்கு மறுத்தியா பிரணவ்?” விஜயன் ஆர்வமிகுதியில் கேட்க, விமலா கணவரை முறைத்தார்.
“இவ்ளோ நாள் என்னோட லவ் வன் சைட் நினைச்சிட்டு இருந்தேன். இப்போ தான் அவளும் என்னை லவ் பன்றாள் தெரிஞ்சுது. இதான் ரீசன்” என்ற பிரணவ், “என் லவ். ஆனால் அடுத்து என்ன செய்யனும் தெரியல டாட்” என்று வெளியேறினான்.
ஒரு கையால் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த பிரணவ், மற்றொரு கையால் அலைபேசியின் திரையை நீக்குவதும் அணைப்பதுமாக இருந்தான்.
உண்மை தெரிந்த கணம் முதல், தன்னவளிடம் பேசிடத் தவிக்கிறான். இயலவில்லை. என்னவென்று பேசுவான்?
“என்னை பிடிக்கல சொல்லு!” தான் இவ்வார்த்தையை சொல்லும்போது எத்தனை வலியை உள்ளுக்குள் விழுங்கியிருப்பாள்? நினைக்கவே பிரணவ்வின் நெஞ்சம் பாரம் சுமந்தது.
“இதழ்.” அவனது அதரங்கள் பிரிந்து மெல்ல உச்சரிக்க, வண்டியை செலுத்த முடியாது, சாலை ஓரமாக நிறுத்தி, இருக்கையில் பின் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். அவனது கரம் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்தது.
‘எந்தப் புள்ளியில் எங்கு என் காதலை தவறவிட்டேன்?’ அவனுள் வினா எழும்பிட, பதில் தான் இல்லை.
ரீமா, அஷ்மி மூலமாக நனியிதழ் அறிமுகம் என்றாலும், அன்று நடனத்திற்காக பார்த்தது முதல் அல்ல.
கல்லூரி படிப்பின் முதல் நாள்… விடுதி வாசம் என்பதால் முந்தைய நாளே கல்லூரி வளாகத்திற்கு வந்துவிட்டான் பிரணவ்.
ஆண்கள் விடுதி பக்கம் தான் வாகனங்கள் தருப்பிக்கும் இடம்.
பார்க்கிங் வழி, முதல் நாள் மாணவர்கள் பொது கூட்டத்திற்கு வேகமாக சென்று கொண்டிருந்த பிரணவ், “அண்ணா” என்ற விளிப்பில் திரும்பிட, பால் கலந்த இளஞ்சிவப்பு நிற உடையில் தேவதையென முன் நின்றிருந்த பெண்ணவளின் சுருங்கிய முகமும், அவள் தன் நெற்றியில் தட்டிக் கொண்ட விதமும் பிரணவ்வின் இதழை மலரச் செய்தது.
அவளுக்கு முன், பிரணவ்விற்கு முதுகுக் காட்டி நின்றிருந்த ஆடவனின் முகம் தெரியவில்லை என்றாலும், அவளின் சிறு சிறு முக அசைவுகளையும் மிட்சமின்றி உள்வாங்கிக் கொண்டிருந்தான் பிரணவ்.
அவளுக்கு முன் நின்றிருந்தவன் அவளின் அண்ணனென அவளின் அழைப்பை வைத்துக் கண்டு கொண்டிருந்த பிரணவ்விற்கு மனதில் மெல்லிய இதம். காரணம் விளங்கா மகிழ்வு.
ஆண் எதோ சொல்லிக் கொண்டிருக்க, சிறுமியென அனைத்திற்கும், சரியெனும் விதமாக இமைகள் படபடக்க தலையசைத்துக் கொண்டிருந்தவளில் மொத்தமாக லயித்துப் போனான் பிரணவ்.
ஏனோ பார்த்த கணம் அவனை தன்னில் விழ வைத்திட்டாள் பெண்ணவள்.
‘எந்த இயர் தெரியல. மனசை அடக்கி வை பிரணவ்.’
நிமிடம் கடக்க, அவள் எப்போது தனித்து வருவாளென்று அங்கேயே நின்றிருந்த பிரணவ்வை ரீமா வந்து இழுத்துச் சென்றாள்.
கல்லூரி கலையரங்கில் தங்களது பணி முடித்து முதல்வர், பேராசிரியர்கள் கிளம்பியதும், மாணவர்களுக்குள் முதல் வருட மாணவர்கள் அறிமுகம் நடைபெற்றது.
துறை அடிப்படையில் வரிசையாக அமர்ந்திருக்க, ரீமாவின் துறை ஆரம்பமாகியது. அதில் ரீமா எழுந்து மேடைக்குச் செல்ல அவளுக்கு அருகில் அமர்ந்திருந்தவளை கண்டுகொண்டான்.
அதரங்கள் குவித்து காற்றினை ஊதியவனின் மனதில் அப்படியொரு ஆசுவாசம்.
‘பார்த்ததும் இப்படி விழுந்துட்டியேடா பிரணவ்.’ இருக்குமிடம் மறந்து சிறு முறுவலோடு ஒற்றை கையால் முகத்தை மூடிக் கொண்டான்.
ரீமாவை அடுத்து அவள் மேடையேற பிரணவ் நிமிர்ந்து அமர்ந்தான்.
கை விரல்களை மற்றைய கை உள்ளங்கையில் மாற்றி மாற்றி வைத்து அழுத்தம் கொடுத்தவளாக முன்னேறிய அவளின் மெல்லிய நடையே அவளது அமைதியான குணத்தை எடுத்துக்காட்ட,
‘ஷீ இஸ் மெல்டிங் மீ’ என்று முணுமுணுத்தான் பிரணவ்.
“நனியிதழ்.”
அவள் பேசிய இரு வரிகளில் அவனுக்கு வேண்டிய அவளது பெயர் மட்டும் அவனின் செவிகளில் சரியாக ஒலித்தது.
“இதழ்.” மென்மையாய் உச்சரித்தவனின் முகமும் புன்னகைத்தது.
அந்த நாள் இன்னும் பசுமையாய் அவனுள் வாசம் வீச,
“ஒருமுறை நீயாவது சொல்லியிருக்கலாமே இதழ்?” என்று அருகில் இல்லாதவளிடம் கேட்டிருந்தான்.
அடுத்த நொடி, “ஐ வான்ட் டூ மீட் யூ” என்று அவனவளுக்கு செய்தி அனுப்பினான்.
*******************
கல்லூரியில் வண்டியை நிறுத்திய நனி, தங்கை போய் வருவதாக சொல்லியதை கவனியாது எதோ சிந்தனையில் நிலைத்திருக்க,
“அக்கா” என்று அவளின் தோள் தொட்டு மீட்டாள் எழில்.
“வந்தனா பேசினதையே நினைச்சிட்டு இருக்கீங்களா?” எனக் கேட்க, இல்லையென தலையசைத்து கண் சிமிட்டிய நனி, “காலேஜ் டேஸ் மெமரிஸ்” என்றாள். வலி நிறைந்த முறுவலோடு.
“அப்போ வாங்க கேன்டீன் போவோம்” என்று எழில் அழைக்க, “கிளாஸ் போகலையா?” என்று ஸ்கூட்டியிலிருந்து இறங்கினாள் நனியிதழ்.
“பாதி ஹவர் முடிஞ்சிப்போச்சு. இப்போ போனாலும் அந்த சமோசா மூக்கன் வெளியில் தான் நிக்க வைக்கப் போறாங்க. அடுத்த ஹவர் போயிக்கலாம்” என்றாள்.
“ம்” என்ற நனியிதழ், “இங்க தான் பர்ஸ்ட் டைம் அவங்களை பார்த்தேன்” என்று வாகனங்கள் தருப்பிக்கும் அவ்விடத்தை ஒருவித ரசனையோடு பார்வையிட்டவள் தன்னைப்போல் கூறியிருந்தாள்.
“யாரை?”
எழில் கேட்டப் பின்னரே தான் உளறியது புரிந்து நாக்கை கடித்து விடுத்த நனியிதழ், “ஃபர்ஸ்ட் டே நான் காலேஜ் வந்த மெமரி” என்று சமாளித்தாள்.
அன்று பிரணவ் மட்டும் நனியிதழை பார்த்து காதலில் விழவில்லை. நனியிதழும் பார்த்ததும், பார்த்த கணம் பிரணவ்விடம் தன் இதயத்தை இடம் பெயர்த்திருந்தாள்.
“ஹோ… சரி வாங்க. கேன்டீனில் சிக்கன் பஃப் செமயா இருக்கும். வாங்கிக் கொடுங்க” என்று தமக்கையின் கையை பிடித்து இழுத்துக்கொண்டுச் சென்றாள் எழில்.
நனி ஒரு மேசையில் சென்று அமர, எழில் தனக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வர, நனியிடம் பேசிக் கொண்டிருந்தான் ஆர்யன்.
எழிலுக்கு மூச்சே நின்றுவிட்டது.
வேகமாக இருவருக்கும் அருகில் வந்த எழில், கையில் உள்ளதை மேசை மீது வைத்து, “அக்கா இவன் சொல்றதை நம்பாதீங்க” எனக்கூறி, “நீயெப்படி இங்க?” என ஆர்யனிடம் கண்களை உருட்டி வினவினாள்.
“என்ன சொல்றதை நம்பக்கூடாது?” நனியிதழ் கேட்க, “என்ன சொன்னாலும்” என்ற எழில், “உதயா அண்ணாகிட்ட சொல்லிட்டேன். கொஞ்சம் வெயிட் பண்ண சொன்னாங்க. அதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்” என்றாள். ஒருவித படபடப்பு… தன்னை அறியாமலே அவனுக்கு வேண்டிய பதிலை வழங்கிவிட்டோம் என்று அறியாது சொல்லியிருந்தாள்.
ஆர்யன் மலர்ந்து சிரித்தான்.
வெயிட் பண்ண சொன்னாங்க என்றால் என்ன அர்த்தம். இவள் அவனை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருப்பதாகத்தானே அர்த்தம். சரியாக விளங்கிக் கொண்டான். மனதில் மத்தாப்பூக்கள் தான்.
“எதுக்குடா சிரிக்கிற?” அவனின் தோளிலே அடித்தாள் எழில்.
“இதை என்கிட்ட முன்னவே சொல்லியிருக்கலாமே! நான் வேற எதெதோ நினைச்சு பயந்து, உன் அண்ணனை வில்லன் ரேஞ்சுக்கு நினைச்சிட்டேன்” என்றான்.
“ஏய்!” என்று விரல் நீட்டிய எழில், “அண்ணா ரொம்ப நல்லவங்க” என்றாள்.
“தெரியுது” என்ற ஆர்யனின் பற்கள் தெரியும் அளவான சிரிப்பு மட்டும் மறையவில்லை.
இருவரின் பேச்சும் புரியாது மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் நனியிதழ்.
“ஆமா நான் என்ன உன்கிட்ட சொல்லியிருக்கலாம்?” என்று அவன் சொல்லியதில் முன் பாதி இப்போதுதான் புரிந்தவளாகக் கேட்டாள்.
“நான் உன்கிட்ட சொன்னனே… அதுக்கு உனக்கும் ஓகேன்னு.” இப்போது முகத்தை வெகு தீவிரமாக வைத்துக் கொண்டான்.
வகுப்பு புலனம் குழுவில் எழில் அட்டெனன்ஸ் போட சொல்லி தகவல் அனுப்பவுமே, வகுப்பிலிருந்த ஆர்யன் ஆசிரியர் வராது இருக்கவே, அவளில்லாத வகுப்பில் என்ன செய்வதென்று கேன்டீன் வந்திருந்தான்.
வந்தவன் எழில் ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்து யாரென்று யோசித்திட, “அக்கா உங்களுக்கு என்ன வேணும்?” என்று எழில் கேட்க, “உன்னை ட்ராப் பண்ணத்தான் வந்தேன். அண்ணா வேற நான் இன்னும் வரலன்னு யோசிப்பாங்க. நீ என்ன வேணுமோ வாங்கிட்டு வா. நான் அண்ணாக்கு மெசேஜ் பண்றேன்” என்று சொல்லவே, ஆர்யனுக்கு அவள் தன்னவளின் தமக்கையென்று தெரிந்தது.
எழில் நகர நனியின் முன் வந்து அமர்ந்தான். எழிலின் நண்பன் ஆர்யன் என்று மட்டுமே அவன் சொல்ல, அடிக்கடி தங்கையின் பேச்சில் ஆரி என்று கேட்டிருப்பதால் இன்முகமாக பேசினாள் நனியிதழ்.
எழில் தான் தவறாக புரிந்துகொண்டு எல்லாம் உளறிவிட்டாள். அப்போதும் ஆர்யன், நனி இருப்பதாலே, தான் காதல் சொல்லியதை மறைமுகமாக அவ்வார்த்தையை தவிர்த்தவனாகக் கூறினான்.
“நீயென்ன சொன்ன? நான் என்ன இப்போ பதில் சொன்னேன்?” புரியாது எழில் வினவ,
“என்ன பேசுறீங்க ரெண்டு பேரும்?” எனக் கேட்டாள் நனியிதழ்.
“ஆர்வக்கோளாறு… இப்படித்தான் எதும் உளறும்” என்ற ஆர்யன், எழிலிடம் நன்கு குத்து வாங்கினான்.
இருவரின் விளையாட்டும் ரசனையான சிரிப்பை கொடுக்க,
“நான் கிளம்புறேன். அடிச்சி முடிச்சு கிளாஸ் போங்க” என்று எழுந்து கொண்டாள் நனியிதழ்.
“அக்கா இருங்க” என்ற எழில், “நீயே சாப்பிடு” என்று வாங்கி வந்ததை அவன் முன் நகர்த்தி வைத்துவிட்டு, நான்கடி சென்றிருந்த நனியை நோக்கி நடந்தவளாக, “இவன் என்கிட்ட பேசமாட்டான். இப்போ என்னவோ புதுசா பேசுறான். இவனை நான் டிவோர்ஸ் பண்ணி ரெண்டு வருஷம் ஆகுதுக்கா. அவன் என்ன சொல்லியிருந்தாலும் நம்பாதீங்க” என்றாள். வேகமாக.
எழிலின் பேச்சில் ஆர்யனுக்கு அப்படியொரு மகிழ்வு. அவன் அவளிடம் ரசிப்பதே இம்மாதிரியான பேச்சுக்கள் தானே! எதையும் எளிதாக கடக்கும் அவளின் பேச்சு, அவனுக்கு எப்போதும் விருப்பமான ஒன்று.
சிரித்தவனின் பார்வை மேசையில் பதிய, நனி விட்டுச் சென்ற அலைபேசி தகவல் வந்ததற்கு அடையாளமாக ஒளிர்ந்தது.
செல்லும் நனியதழை “அண்ணி…” என்றழைத்திருந்தான்குரு ஆர்யன்.