என் ஆயுள் நீயே 23
பிரணவ் அலுவலகம் கிளம்பிவிட்டது தெரிந்த பின்னரே, மெதுவாக எழுந்து தயாராகத் துவங்கினாள் அஷ்மிதா.
அவளது மனம் இருவேறு காரணங்களுக்காக வருத்தம் கொண்டிருந்தது.
ஒன்று பிரணவ்விடம் பேசாமல் இருப்பது. மற்றொன்று அவளது காதல். இதுவரை உரியவனிடம் சொல்லியதில்லை. காட்டிக் கொண்டதுமில்லை. ஏற்கனவே தங்கையின் காதலால் துவண்டிருப்பவனிடம் எப்படி காதலை சொல்வதென்கிற தயக்கம் அவளுக்கு. நனியிதழுக்கு திருமணமாகாமல் உதயன் செய்துக்கொள்ளப் போவதில்லை என அறிந்திருந்ததால், நனியின் காதல் முதலில் கை சேரட்டுமென்று உதயனுக்காக, அவனின் மனம் ஒரே நேரத்தில் பலவற்றிலிருந்து அல்லாடுவதை தவிர்ப்பதற்காக தன் காதலை வெளிப்படுத்தாது காத்திருக்கிறாள்.
இன்று தன் காதல் ஒரு முடிவுக்கு வருமென்று தெரியாது, நேற்று இன்பா சொல்லிய செய்தியில் நேசம் கொண்ட நெஞ்சம் உதயனின் முடிவு என்னவாக இருக்குமென்ற தவிப்பு வேறு அவளை படுத்தி வைத்தது.
உதயன் தான் முதன் முதலில் அஷ்மிதாவுக்கு புலனம் வழி தகவல் அனுப்பி பேசியது. தங்கையின் காதலுக்காக. தன் காதலை பிரணவ்விடம் சொல்லாததற்குரிய காரணத்தை நனியிதழ் சொல்லியதும் உதயன் மனதில் எழுந்த திட்டம் ஒன்றே ஒன்று தான்… காதல் திருமணமாக வாய்ப்பில்லை என்ற நிலையில் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக மாற்ற வேண்டுமென்பதே! அதற்கு பிரணவ் பக்கம் தெரிந்த நபர் தொடர்பில் இருக்க வேண்டுமென்று நினைத்தே, நனியிதழ் மூலமாக அஷ்மிதாவை முன்பே தெரிந்திருக்கும் நிலையில் அவளை தொடர்பு கொண்டு, தொடர்பிலிருந்தான்.
ஒரு காதலை இணைக்க ஒன்றிணைந்தவர்கள் தற்போது வாழ்விலும் ஒன்றிணைய இருக்கின்றனர். அதற்கு முழு முதல் காரணம் அஷ்மியின் காதல் மட்டுமே! அவளின் அந்த சொல்லாத காதல் தான் உதயனை அவள்பால் சாய்த்தது.
இன்பா தான் தினமும் நனியிதழை கல்லூரிக்கு அழைத்து வருவான். ஒரே துறை என்பதால், அவர்கள் துறையிருக்கும் கல்லூரியின் பின் கேட்டின் வழி இன்பா வந்து செல்வான். அந்த கேட்டிற்கும், அவர்களது துறை கட்டிடத்திற்கு சில அடிகள் தான் தூரம். அங்கிருக்கும் மரத்தடியில் தான் ரீமா, அஷ்மி அமர்ந்திருப்பர். அஷ்மி தன்னுடைய சீனியரின் அண்ணன் என்கிற முறையில் பேசி பழக, தன்னைவிட பலவருட சிறியவளாக இருந்தபோதும் இன்பாவுக்கு அஷ்மியுடன் நட்பு மலர்ந்தது.
ரீமா, நனியிதழ் கூட இருவருக்குமான நட்பு எப்படி சாத்தியமென்று ஆச்சரியம் கொண்டதுண்டு. அந்த ஆச்சரியம் ரீமாவுக்கு இன்னும் அவர்கள் நட்பு தொடர்வதில் அதிகரித்தது தான் மிட்சம்.
நனியிதழ் தன் காதல் பக்கத்திற்காக அவர்களின் நட்பு முறிவதை ஏற்கவில்லை. அவர்கள் இணைப்பில் இன்றளவில் இருக்கின்றனர் என்று தெரிந்தபோதும் ஒருநாளும் அஷ்மி பற்றிக் கேட்டுக்கொண்டதில்லை.
இன்பாவுடன் இருக்கும் தருணங்களில் அஷ்மி அழைத்தால் கூட அமைதியாக எழுந்து சென்றுவிடுவாள்.
அஷ்மியின் நினைவு பிரணவ்வையும் நினைவுபடுத்துமென தங்கையின் மன அமைதிக்காக இன்பாவும் அஷ்மி குறித்து நனியிதழிடம் எதுவும் பேசிடமாட்டான். அதற்காக இன்பா தன் நட்பை விலக்கி வைக்கவெல்லாம் இல்லை. தினமும் இருவரின் பேச்சும் இருக்கும்.
அஷ்மிதாவுக்கு இன்பாவின் காதல் தெரியும்.
குமரி முதல்முறை உதயன், தனு திருமணம் குறித்து பேசிட, தனு வந்து காதல் சொல்லியதை அஷ்மியிடம் சொல்லி புலம்பி தள்ளியிருந்தான்.
“எப்படி மச்சி? அண்ணாக்குன்னு பேசி வச்சது அவளுக்குத் தெரியும். அப்படியிருந்தும் எம்மேல காதல்ன்னு வந்து நிக்கிறா. அறைஞ்சிடலான்னு தோணுச்சு” என்றான்.
அஷ்மி உதயனுக்கு ஏற்கனவே பேசி வைத்திருக்கின்றனர் என்ற செய்தியில் பாதி உயிராகியிருக்க, இன்பாவிடம் என்ன பதில் பேசுவதென்று தெரியாது அழைப்பை வைத்திருந்தாள்.
தன்னுடைய காதல் சொல்லாமலே முடிவுக்கு வந்து விட்டதென்று அஷ்மிதா ஆழமான வருத்தத்தில் துவண்டிருந்த நாட்கள் அவை. இன்பாவிடம் கூட சரியாக பேசாது இருந்தாள்.
இரு மாதங்களுக்கு பின்னர் அவளுக்கு அழைத்த இன்பா,
“மேடம் இப்போலாம் பேசுறதே இல்லை. நினைவிருக்கேனா நான்?” எனக் கேட்டான்.
“ம்ப்ச்… மச்சி” என்ற அஷ்மி, “மீட் பண்ணலாமா?” எனக் கேட்டாள்.
“பண்ணலாமே! நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.
“நான் வரவா, நீ வரியா?”
“நானே வரேன். நீ தனியா வந்து போகணும்” என்ற இன்பா, அடுத்த நாள் திருச்செந்தூர் கடற்கரையில் அவள் முன் நின்றிருந்தான்.
“என்ன சொல்லனும்?” வந்ததிலிருந்து எதுவும் பேசாது, கடலை வெறித்தவாறு தன்னருகில் அமர்ந்திருக்கும் தோழியின் முகம் பார்த்து வினவினான் இன்பா.
“சீனியர் எப்படியிருக்காங்க?”
“நல்லாயிருக்கான்னு சொல்ல முடியல” என்ற இன்பா, “அண்ணா உன் நெம்பர் கேட்டார். கொடுத்திருக்கேன்” என்றான்.
“ம்ம்” என்ற அஷ்மி, “நேத்து தான் மெசேஜ் பண்ணார். அண்ணாக்கு கல்யாணப் பேச்செடுத்தா சொல்ல சொல்லியிருக்கார்” என்றாள்.
நனியிதழ் படிப்பு முடித்து ஒரு வருடம் வரையிலும், காதல் வலியிலிருந்து மீண்டுவிடுவாளென இருந்த உதயன், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பின்னரே எப்படியும் பிரணவ் உடன் தங்கையை சேர்த்து வைக்க வேண்டுமென்று, அஷ்மி கல்லூரி முடித்த சில மாதங்களில் அவளை தொடர்பு கொண்டிருந்தான்.
அந்த தருணம் தான் அது.
“தனு உன்னை விரும்புறாங்க ரைட்?” என்றாள்.
“ம்ம்…” என்ற இன்பா, “எனக்கும் அவளை பிடிக்கும்” என்றான்.
கண்கள் ஒளிர இன்பாவின் முகம் பார்த்த அஷ்மிதா, “பிடிக்கும் மீன்ஸ்?” என்றாள்.
“அண்ணாக்கு துரோகம் செய்யுற மாதிரி ஆகாதா?” எனக் கேட்டான்.
இன்பா அவ்வாறு கேட்டதிலே அவனின் மனம் புரிந்துவிட்டது.
“உன் அண்ணாவுக்கு தனு மேல…”
“அப்படியெல்லாம் இல்லை. ஆனால் வீட்டுல சொன்னா அக்செப்ட் பண்ணிப்பார்” என அவள் கேட்டு முடிக்கும் முன் வேகமாக பதில் சொல்லியிருந்தான்.
“நீ விரும்புறன்னு தெரிஞ்சாலும் அக்செப்ட் பண்ணிப்பாரா?”
“அதுக்கு முதலில் அவருக்குத் தெரியணுமே” என்ற இன்பா, “கண்டிப்பா அண்ணா எனக்காகத்தான் பார்ப்பாங்க” என்றவன்,
“அம் இன் லவ் வித் உதய்… உதயச்செல்வன்” என்ற அஷ்மியின் வார்த்தையில் விழிகள் விரிய அவளை உறைந்து நோக்கினான்.
“ஒன்றரை வருஷம் மேலாகுது.” தன் கால் நனைத்த அலையை பார்த்துக் கூறினாள்.
“இவ்ளோ நாள் சொல்லவே இல்லை?” புருவம் உயர்த்தி இறக்கினான்.
“சொல்லக்கூடாதுன்னு இல்லை. எப்படி சொல்றது தெரியாம சொல்லல. இப்போ சொல்லியே ஆகணும் தோணுச்சு” என்றாள்.
“அண்ணாகிட்ட சொல்லலையா?”
“எப்படி மச்சி சொல்றது? அவங்க சீனியர் நினைத்து வருத்தத்தில் இருக்காங்க. இப்போ எப்படி சொல்ல முடியும்?” என்ற அஷ்மிதா, “சீனியர் கல்யாணம் முடிஞ்சு, அவங்க கல்யாணப் பேச்சு நடக்கும் போது தான் சொல்லனும். எப்படியும் தனுவை நீ விரும்புறதை சொல்லிடுவ, இப்போதைக்கு என் லவ்வுக்கு வில்லி யாருமில்லை. குறுக்க வந்த தனுவுக்கும் நீயிருக்க, சோ நான் கொஞ்சம் வெயிட் பண்றேன். அவங்க கமிட்மென்ட் எல்லாம் முடிக்கட்டும். அப்புறம் சொல்லிக்கலாம்” என்றாள். இன்பாவிடம் சொல்லியதும் அவளுக்கே ஒரு தெளிவு. அந்த தெளிவில் தான் இத்தனை வருடங்கள் கடத்தியிருந்தாள்.
ஆனால் நேற்று வந்தனா விடயம் இன்பா சொல்லியதிலிருந்து அவளுள் அலைக்கழிப்பு.
‘தனக்காக உயிரை விடத் துணிந்த பெண்ணென்று சம்மதம் சொல்லிடுவாங்களோ?’ வந்தனா உதயனுக்காக விஷம் அருந்தியது வரை மட்டும் இன்பா சொல்லி அறிந்திருந்த அஷ்மிக்கு அவ்வளவு வலி.
இதயத்தில் பொத்தி வைத்திருக்கும் நேசம் துடிப்புகள் பெறாது மரித்து விடுமோ என அஞ்சியவள், உதயன் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்று தைரியமாக காதலை சொல்லிவிட முடிவு செய்த நொடி, அவனே அவளுக்கு அழைத்திருந்தான்.
நம்ப முடியாது தன்னைத்தானே கொட்டி பார்த்தவள், வலி கொடுக்கவே நிகழ் உரைக்க அழைப்பை ஏற்றாள்.
உதயனுக்கு வந்தனா மூலம் அழுத்தம் கூடியிருக்க, நனியின் திருமணத்தை விரைந்து முடிக்க வேறு திட்டம் எதற்கோ தன்னை அழைக்கிறான் என்று நினைத்துதான் “ஹலோ” சொன்னாள்.
ஆனால் அவனோ காதலைத்தாண்டி திருமணமென்று சொல்ல, உயிரில் மின்னல் தாக்க உறைந்து நின்றாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அஷ்மிதா உதயனை மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தான் முதல்முறை நேரில் பார்த்தாள். பார்த்ததும் அவளுள் ரசனையான ஈர்ப்பு. நெஞ்சத்தில் காதலாக வேர்ப்பிடிக்குமென்று அவளே அக்கணம் நினைத்திருக்கவில்லை.
வேர்பிடித்த காதல் இன்று அவளின் மனதில், பூக்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனமாகவே மாறியுள்ள தருணம் அவளே எதிர்பார்க்காத வகையில் அவளவனுடன் அவளின் மனம் இணைந்துள்ளது.
“இப்போவே சொல்லனுமாமே!” அலைபேசியை நெற்றி முட்டி சிரித்துக்கொண்ட அஷ்மிதா, “உதய்” என்று புன்னகைத்தவளாக கைகள் விரித்து சுழன்று மெத்தையில் கவிழ்ந்து விழுந்தாள். எழுந்து அமர்ந்தாள். அலைபேசியை பார்த்து சிரித்தாள்.
அவளின் காதல் அறிந்த ஒரே நபர் இன்பா மட்டுமே! சந்தோஷத்தின் கணம் தாங்காது அவனிடம் பகிர்ந்துகொள்ள செய்தி அனுப்பினாள்.
“மச்சி… கடல் உப்பு காத்து தென்றல் வீசுது…” என்று பல சந்தோஷ எமோஜிகளுடன் அனுப்பி வைக்க, அடுத்த சில நிமிடங்களில் இன்பா அழைக்க, அவளின் மகிழ்வு உதயன் உரிமையாய் அதட்டி பேசியதில் இரட்டிப்பாகியது.
உதயன் பெற்றோரிடம் சொல்லென்று சொல்லிவிட்டான். பெண்ணவள் தான் எப்படி சொல்வதென்று தவித்துவிட்டாள்.
“லவ் பண்றேன் சொல்லவே இல்லை. ஸ்ட்ரெயிட்டா மேரேஜ்க்கு போயாச்சு?” என்று முனகிய அஷ்மிதா, “எப்படி சொல்றது?” என்று சிந்தித்தாள்.
அவளுக்கு பிரணவ் தான் பெற்றோர் இடத்திலிருந்து அனைத்தும் செய்ய வேண்டுமென்கிற ஆசை. நனியிதழுக்கு முன்பு தற்போது உதயனுக்கு திருமணமென்றால் அவளின் ஆசை நிறைவேறாதே என்று அச்சம் எழுந்தது.
உடனடியாக உதயனுக்கு அழைத்து விட்டாள்.
முதல் முறை முழுதாக ஒலி முடிந்தும் அவன் ஏற்கவில்லை.
திரும்ப அழைப்போமா வேண்டாமா என்று அவள் மனதிற்குள் சடுகுடு ஆடிக்கொண்டிருக்க, உதயன் அழைத்திருந்தான்.
“சொல்லியாச்சா?”
“ஹான்…”
எடுத்ததும் உதயன் கேட்டதில் அவள் தான் அதிர்ந்தாள்.
“என்ன?”
முன்பிருந்த மென்மை அவன் குரலிலில்லை என்று தெரிந்தது.
“கோபமா இருக்கீங்களா?”
அவள் அவ்வாறு கேட்டதும், கண்களை இறுக மூடித் திறந்தான்.
உண்மையில் அந்நேரம் உதயன் மிகுந்த கோபத்தில் தான் இருந்தான். ஆனால் அதனை யாரிடமும் காட்டிட முடியாத அழுத்தம், அவனை இறுக்கமாக மாற்றியிருந்தது.
“நான் அப்புறம் பேசட்டுமா?”
“ம்ப்ச்… பேசுடி! ஒரு மாதிரி ஹெவியா இருக்கு” என்றான். நனியிதழிடம் கூட தன்னுடைய உணர்வுகளை காட்டிக்கொள்ளாதவன், தன்னவளிடம் வார்த்தையால் வெளிப்படையாய் காட்டினான்.
உதயனிடம் இத்தனை உரிமையை அவள் எதிர்பார்க்கவில்லை. மனதில் அவளை எண்ணத் தோன்றியதும், அவள் தான் இனி அனைத்துமென்று நினைத்துவிட்டான். அதனை குடும்பத்தாரிடமும் சொல்லிவிட்டான். பிறகு விலகி நிற்க வேண்டிய அவசியமென்ன. வார்த்தையிலும் உரிமையைக் காட்டிட முனைந்துவிட்டான்.
உதயன் அமைதி, அழுத்தமென்று அறிந்திருந்தவளுக்கு, அவனது இந்த அதிரடியை உள்வாங்கிடவே வேகம் போதவில்லை.
“வீட்டுல சொல்லிட்டேன். அத்தை கொஞ்சம் பிரச்சினை பண்ணிட்டாங்க. அந்த பிரஷர்ல உன்கிட்ட ஸ்ட்ரெஸ் பண்ணி பேசிட்டேன்” என்றான்.
“இப்போ ஓகேவா?”
“ஓகே தான் நினைக்கிறேன். நீ பேசு ஓகே ஆகிடும்” என்றவனின் பேச்சில் அவள் தான் திக்குமுக்காடிப் போனாள்.
“என்னால தாங்க முடியல?”
“என்னையா?” உதயனிடம் விஷமப் புன்னகை.
புரியாது திருதிருத்தவள் புரிந்ததும்,
“அச்சோ… அதில்லை. உங்க இந்த ஸ்பீட்” என்றாள். உதயனிடம் ஆர்ப்பாட்டமான சிரிப்பு.
“எது இல்லை…?”
அவளிடம் மௌனம். வெட்கம் கொண்டாளோ?
“இங்க எனக்கு அவ்ளோ பிரஷர் கொடுக்குறாங்க” என்றான்.
“புரியுது” என்ற அஷ்மிதா, “நான் இப்போவே வீட்டில் சொல்லணுமா?” எனக் கேட்டாள்.
உதயனிடம் ஆழ்ந்த அமைதி.