என் ஆயுள் நீயே 3
நேரம் நீண்டது.
இன்னும் சற்று நேரத்தில் பொழுது புலர்ந்திடும். வெள்ளி முளைக்கக் காத்திருந்தது.
இதயம் முழுக்க வலி பரவி வேரூன்றி இருக்க, போக்கும் மார்க்கம் தெரியாது கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை உதயனுக்கு.
அண்ணனுக்காக தன் வலி மறைத்து, தூரப்புள்ளியாய் அலை மிதக்கும் மிதவையை வெறித்திருந்தாள் நனியிதழ்.
“இந்த காதல் எனக்கு வராமலே இருந்திருக்கலாம் அண்ணா. உங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்துறேன்” என்று சொல்லிய தங்கையை தோளோடு சேர்த்து அணைத்த உதயன், “பார்த்துக்கலாம் விடுடா” என்று தேற்றினான்.
ஆனால் அவனுக்கும் அந்த பார்த்துக்கலாம் எனும் வார்த்தையை எப்படி நிறைவேற்றுவதென்று தெரியவில்லை.
காத்திருந்து எடுத்து வைத்த அடியே சறுக்கிவிட்டது. அடுத்து என்ன செய்து தங்கையின் வதை களைவது, சிந்தையில் ஒன்றும் உதிக்காது தடுமாறினான்.
“உங்களை அவமானப்படுத்திட்டேன். வருத்தமா அண்ணா?” தயங்கித்தான் கேட்டாள்.
பின்னே படிப்பு முடிந்து நான்கு வருடங்கள் ஆகியும் திருமணத்திற்கு பிடி கொடுக்காத நனியிதழ், இம்முறை மிகுந்த சந்தோஷத்தோடு தன் விருப்பம் தெரிவித்துவிட்டு, பையன் வீட்டார் முன்பு விருப்பமில்லை என்று சொன்னால், அவளது குடும்பத்தாருக்கு தலைகுனிவு தானே! அவளும் என்ன செய்வாள்?
அவளது நிலை உணர்ந்த உதயனிடம் பதில் எதுவுமில்லை.
வீட்டின் கடைசிவாரிசு எழிலினியாக இருப்பினும், அவளுக்கும் சேர்த்து அதிக செல்லம் நனியிதழ். அதிலும் கஜமுகன் தாத்தாவிற்கு அவள் மீது, உதயனைக் காட்டிலும் அதிக பாசம்.
நனி படிப்பை முடித்துவிட்டாள் என்றதும், அனைவரின் ஒரே ஆசையாக இருந்தது அவளின் திருமணம் தான்.
அவளுக்கு முன்பு வயதில் மூத்தவள் தன்யா இருப்பினும், நனிக்கு முன்பு உதயனுக்கு திருமணம் செய்திட முடியாதே! தன்யாவுக்கும் உதயனுக்கும் தான் திருமணமென்று சிறு வயதிலேயே முடிவு செய்தது. அதில் குமரிக்கு தான் அதீத மகிழ்வு.
தன்னுடைய அண்ணன் மகன். மொத்த ஊருக்கும் மரியாதைக்கு உரியவன். வேறென்ன வேண்டும் அவருக்கு. தன் பிறந்த வீட்டில் தன்னுடைய மகள் ராணியாக வாழ்வது அவரின் பெரும் ஆசை.
தன்யா ருதுவான சமயமே, குடும்பத்து ஆட்களிடம் தன்னுடைய விருப்பத்தையும் சொல்லியிருந்தார் குமரி.
உரிமையானவள் கேட்கும் போது, மற்றவர்களின் விருப்பமும் அதுவாகவே இருந்திட யாருக்கும் மறுக்க காரணமில்லாமல் போனது.
“என்ன நடக்கணும் இருக்கோ அதுதான் நடக்கும். கால நேரம் கூடி வரும்போது அதை பார்ப்போம்” என்று வீட்டின் மூத்த தலைமுறையான ஜெயலட்சுமி சொல்லிட, உதயனின் திருமணப் பேச்சிற்காக குமரி காத்திருக்கிறார்.
அவரின் காத்திருப்பு நனியின் படிப்பு முடிந்ததும் அதிகரித்தது.
மெல்ல தன்னுடைய அன்னை ஜெயலட்சுமியின் மூலமாக நனியின் திருமணப் பேச்சை துவங்கி வைத்தார்.
நனி மறுத்து கூறும் முன்பு,
“படிப்பு படிப்புன்னு இப்போ தான் ஃப்ரீ ஆகியிருக்காள். எனக்கு என் தங்கச்சிக்கூட கொஞ்சநாள் இருக்கணும். இப்போதைக்கு கல்யாணம் செய்து கொடுக்கிற எண்ணம் எனக்கில்லை” என்று அழுத்தமாகக் கூறினான்.
அந்த அழுத்தமே என் பேச்சை மீறி எதுவும் நடக்கக்கூடாது என்று சொல்வதைப்போல இருக்க, அடுத்து யாருக்கும் உதயனின் பேச்சை மீறும் துணிவில்லை.
கஜமுகன் கூட, “இப்போ தானே படிப்பு முடிஞ்சுது. பெண் பிள்ளைங்க பிறந்த வீட்டில் தானே அதிக சந்தோஷத்தோடு இருக்க முடியும். உதயன் சொல்ற மாதிரி கொஞ்சநாள் போகட்டும்” என்றுவிட, குமரிக்கு முகம் சோர்ந்தது.
மூன்று மாதம் பொறுமையாக இருந்த குமரி,
“தனுவுக்கு வயசாவுது. எல்லாரும் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?” என்று ஆரம்பித்தார்.
உதயனின் அன்னை கங்காவிடம் மனக்குறையாக பேசிட, கங்கா தன் கணவர் இளங்கோவனிடம் பேச்சினை எடுத்துச் சென்றார்.
அன்றிரவு இளங்கோவன் உதயனிடம் தனித்துப் பேசினார்.
“நனிக்கு இப்போ செய்ய விருப்பமில்லைன்னா… உன் கல்யாணமாவது நடக்கட்டும் தம்பி. நனியை’விட தனு மூணு வயசு மூத்தவள். இப்போவே இருபத்தி நாலு வயசாவுதே” என்றார்.
அடுத்து உதயன் சொல்லியதில், இளங்கோவன் அமைதியாக சென்றுவிட்டார்.
அடுத்தநாள் உதயன் மறுத்த விடயமறிந்து குமரி நேரடியாகவே உதயனிடம் சென்று நின்றார்.
அப்போதுதான் உதயன் உணவு உண்ண அமர்ந்தான். காமாட்சி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.
குமரியின் முகம் கோபமாக இருக்க, எதுவும் பேசி வைத்து மகன் உணவு உண்ணாது எழுந்துவிடுவானோ என்று நினைத்த காமாட்சி,
“தம்பி சாப்பிடட்டும் அண்ணி. உட்காருங்க. பேசிப்போம்” என்றார்.
காமாட்சி அளவுக்கு கங்கா வாய் திறந்து பேசிடமாட்டார். அவர் கைகளை பிசைந்துகொண்டு நின்றிருந்தார்.
மூவரின் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்த உதயன்,
“சொல்லுங்க அத்தை. என்ன பேசணும்?” எனக் கேட்டிருந்தான். உணவில் வைத்த கையை விலக்கி.
“இப்போ ஒன்னும் பேச வேண்டாம். நீங்க முதலில் சாப்பிடுங்க தம்பி” என்றார் காமாட்சி.
“அதான் என்னன்னு கேட்டாச்சே. நான் பேச வந்ததை பேசிடுறேன்” என்றார் குமரி.
உதயன் எழுந்துவிட்டான்.
“அறிவு மங்கிப்போச்சா குமரி உனக்கு?” என்று கேட்ட ஜெயலட்சுமி, “இந்த வீட்டுக்காக ஓடி ஓடி உழைக்கிற என் தெய்வத்தை ஒரு வாய் சாப்பிட விட முடியாம அப்படியென்ன பேசணும் அவசியம் உனக்கு?” என்று மகளை கடிந்தார்.
அதையெல்லாம் குமரி கண்டுகொள்ளவில்லை.
“எனக்கொரு முடிவு இன்னைக்குத் தெரிஞ்சாகணும்” என்றார்.
“குமரி என்னதிது?” கஜேந்திரன் அதிருப்தியைக் காட்டினார்.
உதயன் அவர்களுக்கு சிறியவனாக இருந்தாலும், யாரும் அவனிடம் குரல் உயர்த்தியோ, சத்தமிட்டோ பேசியதில்லை. அவன் முன் சென்று நேருக்கு நேர் நிற்கவே தயங்குவர். கஜமுகனுக்கே பேரனிடம் அவ்வளவு மரியாதை. அதனால் குமரி கோபமாக பேசுவது அங்கிருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை.
அந்நேரம் ஜெயந்தன் அங்கு வந்தார்.
குமரியின் வீடு அருகில் தான் உள்ளது. அவர் தன் வீட்டில் இருந்ததை விட, பிறந்த வீட்டில் இருந்தது தான் அதிகம். ஒற்றையாக பிறந்து வளர்ந்த ஜெயந்தனுக்கு மனைவியின் பிறந்த வீட்டு ஒட்டுதல் புரிய, அவருக்கு ஏற்றார் போன்று நடந்துகொள்வார். அவ்வீட்டிற்கு ஏற்ற குணமான மருமகன் அவர். அவருக்கும் உதயனிடம் அன்பு கலந்த மரியாதை. அவரும் மீன் ஏற்றுமதி மற்றும் இறால் பண்ணை வைத்திருக்கிறார். தொழிலில் எந்தவொரு முடிவு எடுப்பதற்கு முன்பும் உதயனிடம் கலந்தாலோசித்தே எடுப்பார். அந்தளவிற்கு உதயன் மீது மரியாதை அவருக்கு.
இங்கு குமரி உதயனை சாப்பிட விடாது பேசவுமே, எழிலின்பன் கண்காட்டிட, எழிலினி ஓடிச்சென்று ஜெயந்தனிடம் நடப்பதை சொல்லி அழைத்து வந்திருந்தாள்.
“என்ன குமரி இதெல்லாம். உன் சத்தம் வாசல் வரை கேட்குது” என்றார். குரலில் சத்தமில்லை, ஆனால் கடுமை சுமந்து வந்தது.
“என் பொண்ணு வாழ்க்கைக்கு என்ன பதிலுன்னு கேட்கிறேன்” என்றார் சளைக்காது.
“என்னால் தான் பிரச்சினை” என்று வாய்விட்டு சொல்லிய நனியை, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்த எழிலின்பன், தங்கையின் கையை ஆதரவாக பிடித்துக் கொண்டான்.
“இப்படி நினைக்கிறன்னு தெரிஞ்சாலே, அண்ணா ஃபீல் பண்ணுவாங்க” என்றான்.
“பேசாம நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடவா?”
“உன்னால முடியுமா?” இன்பா கேட்டதும், கண்களில் நீர் நிரம்பிட, உதடுகள் துடிக்க இல்லையென்று தலையசைத்தாள் நனியிதழ்.
“எதுவும் யோசிக்காம அமைதியா இரு. அண்ணா பார்த்துப்பாங்க எல்லாம்” என்ற இன்பா, தன்யா அருகில் வரவும், தங்கையின் கையில் அழுத்தம் கொடுத்து நகர்ந்து சென்றான்.
தான் வந்ததும் விலகிச் செல்லும் இன்பாவை அடிபட்ட பார்வை பார்த்தாள் தன்யா.
“என் மகளுக்கு ஒரு பதில் சொல்லுங்க தம்பி” என்ற குமரியின் குரலில், நனி இடிக்க தன்யா நிகழ் மீண்டு நின்றாள்.
“இப்போதைக்கு பட்டுக்கு கல்யாணம் செய்யும் யோசனை எனக்கு இல்லை” என்று கூர்மையாக மொழிந்த உதயன், “வேற” என்றிட… “அப்போ உங்களுக்கும் தனுவு…” என அவர் முடிக்கும் முன்பு கைகாட்டி தடுத்திருந்தான்.
“எனக்கும் இப்போ கல்யாணம் செய்துக்க விருப்பமில்லை” என்றான்.
அடுத்து வேறென்ன கேட்டிட முடியும் குமரியால். திரும்ப அழுத்தமாகக் கேட்டு அவன், அவசரமென்றால் உன் மகளுக்கு வேறு பையன் பாருங்க என்று சொல்லிவிட்டால் என்ன செய்வார். உதயன் சொல்லக்கூடிய ஆள் தான். அதனால் அமைதியாக நின்றார் குமரி.
“வேற?”
குமரி ஒன்றுமில்லை என்பதைப்போன்று பார்த்தார்.
அங்கு நடக்கும் நிகழ்வு தனக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்று பயத்தில் படபடப்போடு நின்றிருந்த தன்யாவை அழுத்தமாக பார்த்தபடி வெளியேறினான் உதயன்.
“தம்பி… சாமி… சாப்பிடாம போறிங்களே” என்று ஜெயலட்சுமி, பின்னால் செல்ல… உதயன் வாயிலைத் தாண்டும் முன்பு…
“சாப்பிட்டுப் போங்கண்ணா” என்றாள் நனியிதழ்.
தங்கையின் சொல்லுக்கு அடுத்த அடி வெளி வைக்காது, திரும்பி உள்ளே வந்து உணவில் கை வைத்திருந்தான் உதயன்.
அங்கிருந்தால் குமரி வேறெதுவும் பேசி, குடும்பத்தின் அமைதி சூழலை குலைத்திடுவார் என்று கையோடு அழைத்துச் சென்றுவிட்டார் ஜெயந்தன்.
உதயன் அருகில் நனி செல்லவும் பெண்கள் அனைவரும் நகர்ந்து கொண்டனர். அவன் தங்கைக்கு மட்டும் தான் கட்டுப்படுவான் என்று எல்லோருக்கும் தெரியுமே! இருக்கும் சூழலில் அவளில்லாது தாங்கள் அருகிலிருந்தால், தட்டில் வைத்த உணவோடு முடித்துக்கொள்வான் என அறிந்துதான் தள்ளிச் சென்றனர்.
உதயன் எவ்வளவு உட்கொள்வானோ அவ்வளவு உண்ட பின்பே நனியிதழ் அவனை எழ அனுமதித்தாள்.
தந்தை மற்றும் தாத்தாவிடம் போய் வருவதாக தலையசைத்து வெளியேறிய உதயன், கார் அருகில் சென்றதும், தன் பின்னோடு வந்த தங்கையின் தலையில் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“சாரி செல்வா!”
“அப்புறம்” என்ற உதயன், “எதுவும் நினைக்காம இரு. நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
சொன்னது போலவே தங்கையின் மனதின் வலி அடங்கக் காத்திருந்தான். அவளின் மன மாறுதலுக்காக வேலைக்கு செல்ல வீட்டிலிருப்பவரிடம் அனுமதி வாங்கிக் கொடுத்தான்.
தங்கை பழைய இயல்புக்கு வரும்வரை, பொருமையாகக் காத்திருந்தான். அதில் கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஓடியிருந்தன.
குமரியின் பொறுமையும் கரை உடைத்திருந்தது.
உதயனுக்கும் வரவேண்டிய சாதகமான சூழல் வந்திட, அதற்கேற்றவாறு காய்கள் நகர்த்தி, தங்கை விரும்பியவனே அவளை பெண் பார்க்க வர ஏற்பாடு செய்தான்.
“பட்டுவை நாளைக்கு பெண் பார்க்க வர்றாங்க” என்று உதயன் சொல்லிட, அனைவரும் அகம் மகிழ்ந்தனர்.
இப்போதாவது தன்யாவின் வாழ்வுக்கு குறுக்கே தடையாக இருந்த நனியிதழ் திருமணத்திற்கு தீர்வு வந்ததே என்று குமரிக்குத்தான் அதிக சந்தோஷம்.
விடயமறிந்த நனியிதழ் இரவு உதயன் வீட்டிற்கு வருவதற்காகக் காத்திருந்தாள்.
அவளாக வந்து தன்னிடம் பேசுவதற்கு முன்பே, உதயன் தங்கையிடம் பேச அவளின் அறைக்குச் சென்றான்.
“அண்ணா” என்று அதற்குமேல் சொல்ல முடியாது தவித்தவளை தன் அருகில் அமர்த்திய உதயன், “நாளைக்கு வரப்போறது பிரணவ்” என்றான்.
ஒற்றைப் பெயர் அவளின் தேகத்தை சிலிர்க்க வைத்திருந்தது.
“நிஜமாவா?” சடுதியில் முகத்தில் ஒளி கூடி, கண்கள் பிரகாசிக்க அவள் கேட்க, இந்த முகத்திற்காக… இக்கணம் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்வுக்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தான்.
அவனின் வருகைக்கே துள்ளிக் குதித்தவள், சேரவே முடியாதோ என்ற வலியோடு அவனுக்காக தவமிருந்தவள், அனைவரின் முன்பும் தானே அவனை வேண்டாமென்று சொல்லியிருந்தாள்.
அந்த இடத்தில் நனியிதழ், அவளுக்காக பார்த்து பார்த்து செய்த உதயனை அவமானப்படுத்தி விட்டதாகவே தற்போது அதிகம் மருகுகிறாள். அவளுக்கு காதலின் வலி புதிதல்ல. தன்னால் உதயனுக்கு மன வருத்தமென்றே அதிகம் வலி கொள்கிறாள்.
அதனை கேட்கவும் செய்தாள்.
“உங்களை அவமானப்படுத்திட்டேன் தோணுதா அண்ணா?”
தங்கையை தன் உயிராக நினைப்பவன், எப்படி அவளின் செயலை அவமானமாக நினைப்பான்.
தங்கையை தன் தோள் சாய்த்துக் கொண்டான்.
உதயனுக்கு தன் தங்கை இந்த காதல் வலியிலிருந்து மீண்டுவிட்டால் போதுமென்று இருந்தது.
இன்றைய தினம் துவங்கிய நேரம் தங்கையின் முகத்தில் ஒளிர்ந்த மகிழ்வை நினைத்துப் பார்த்தான்.