என் ஆயுள் நீயே 33

என் ஆயுள் நீயே 33

நனியிதழ் வர சொல்லிய இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே பிரணவ் உதயனின் வீட்டிற்கு முன்பு தன்னுடைய வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

அவனை எதிர்பார்த்து காத்திருந்த நனியிதழ், வெளியில் வண்டி நிற்கும் சத்தம் கேட்டதும் வேகமாக வாயில் கடந்து வந்தவள், பிரணவ் இறங்கும் முன்பு வண்டியில் ஏறி அமர்ந்திருந்தாள்.

“ஹேய் இதழ்.” அவளின் செயலை பிரணவ் எதிர்பார்க்கவில்லை.

“சீக்கிரம் வண்டியை எடுங்க… எடுங்க பிரணவ்” என்று வீட்டை பார்த்துக்கொண்டே அவனை துரிதப்படுத்தினாள்.

“வீட்ல பேச வேண்டாமா?”

“பேசணும்… ஆனால் இப்போ இல்லை. நீங்க முதலில் வண்டியை எடுங்க” என்றாள்.

“வெயிட்… வெயிட்…” என்ற பிரணவ், “இப்படியே வரியா நீ?” எனக் கேட்டான்.

“ஏன் என்ன?” என்று தன்னை குனிந்து பார்த்தவள், காலில் கை முட்டி ஊன்றி நெற்றியில் தட்டிக் கொண்டாள்.

வீட்டில் தனக்கு வசதியாக இருக்குமென்று அணியும் வகையிலான கணுக்காலுக்கு மேலான மிடி, கையில்லா பருத்தி சட்டை அணிந்து குழலை உச்சியில் முடிந்திருந்தாள். நெற்றியில் காதின் ஓரமெல்லம் கேசம் கலைந்து கிடந்தது.

“நீங்கதானே இருக்கீங்க… நாட் ஆன் இஷு… பர்ஸ்ட் இங்கிருந்து கிளம்புங்க” என்றவள் பக்கத்து வீட்டு மாடியில் குமரி நிற்பது தெரியவும், “அச்சோ அத்தை” என்று சட்டென்று அவன் பக்கம் சரிந்து குனிந்து கொண்டாள்.

அவளின் கை இரண்டும், ஹேன்ட் பிரேக்கில் படிந்திருந்த அவனது கையை இறுகப் பற்றியிருந்தது.

இருவரின் கையையும் மாற்றி மாற்றி பார்த்த பிரணவ் அடி மனதில் இதம் சேர்த்தான்.

“போ’ன்னா எங்கடி போறது?” ஹஸ்கியாய் ஒலித்தது அவனது குரல்.

“அச்சோ பக்கத்திலே எங்காவது போங்க” என்றவள், “டேய்… போடா” என்றாள். விட்டால் அழுதுவிடும் நிலை.

பிரணவ் வண்டியை இயக்கி அங்கிருந்து நகர, உதயனின் தார் அங்கு வந்து நின்றது.

தனக்கு முன் சென்ற வாகனத்தை சில நொடிகள் கூர்ந்து கவனித்த உதயன், சிறு சிரிப்போடு உள்ளே சென்றுவிட்டான்.

“வீட்டுல வந்து பேசுங்க சொன்ன… அழுதியேன்னு இவ்வளவு தூரம் வந்தா இப்போ பேச வேண்டாம் சொல்ற. இப்போ நான் என்ன பண்ணனும் இதழ்?”

ஊருக்கு தள்ளி கடற்கரை பகுதியில் காருக்குள் அமர்ந்திருந்தனர்.

“எனக்கும் என்ன பண்ணணும் தெரியல பிரணவ்” என்றவளின் பார்வை காரின் கண்ணாடியை தாண்டி தூரத்தில் ஒற்றையாய் தனித்து நின்றிருந்த தென்னை மரத்தில் படிந்திருந்தது.

“தெரியலன்னா?”

“எனக்கு உங்களை விட்டுகொடுக்க முடியாது” என்று அவன் பக்கம் திரும்பி கூறியவள், “செல்வா… அண்ணாவையும் விட்டுக் கொடுக்க முடியாது” என்றாள் கலங்கிய விழிகளுடன்.

“ம்ப்ச்…” என்று வேகமாக அவளின் கண்ணீரை துடைத்த பிரணவ், “அழமா பேசு” என்று அதட்டினான்.

“எதுக்கு இப்போ அதட்டுறீங்க… நானா வரவும் திரும்ப உங்க கெத்து காட்டுறீங்களா?” என்று எகுறினாள்.

“ஆமா நாங்க கெத்து காட்டி நீங்க மயங்கிட்டாலும்” என்ற பிரணவ், “நீ அழறது கஷ்டமா இருக்குடி” என்று தன் தலை கோதினான்.

அவனையே விழி அகலாது பார்த்த நனியிதழ், “மதியம் உங்களை டென்ஸ் பண்ணத்தான் வேண்டாம் சொன்னேன். சும்மா டீஸ் பண்ண ட்ரை பண்ணேன். அவ்ளோதான். இப்போ உண்மையிலேயே உங்க இடத்தில் இன்னொருத்தரா அப்படின்னு நினைக்கும் போது அதிகமா வலியாகுது” என்றாள்.

“அவ்ளோ பிடிக்குமா இதழ்?” அவளின் வார்த்தையில் அவன் உணர்வதெல்லாம் அப்பட்டமான காதல். அவள் சரியாக சொன்னாளோ இல்லையோ… அவன் அகம் கரைந்தான். மெய் சிலிர்த்தான். அவளின் காதலில்.

“நிறைய பிடிக்கும்” என்று அவனின் கண் பார்த்து சொல்லிய நனியிதழ், “அண்ணா பாவம்” என்றாள்.

“ஏன்?”

“எனக்குத் தெரிஞ்சு அண்ணா இது வேணும் அப்படின்னு கூட ஒன்னை ஆசைப்பட்டு கேட்டது இல்லை. முதல் முறையா கேட்ட விஷயம் அவரோட லவ்” என்று நிறுத்தி, “அண்ணாக்கு பொண்ணெடுத்து பொண்ணை கொடுக்கிற விஷயம் தெரியுமா தெரியல. தெரிஞ்சா கண்டிப்பா எனக்காக அவரோட லவ்வையும் தூக்கிப் போடுவார். ஆனால் இப்போ நான் என்ன பண்ணியிருக்கேன். கொஞ்சமும் யோசிக்காம, என் லவ் அப்படின்னு மட்டும் பார்த்து உங்களை இங்கவரை வர வச்சிட்டேன். செல்ஃபிஷ்ஷா திங்க் பண்ணிட்டேன்ல?” என்று முகம் சுருங்கக் கேட்டாள்.

“சோ?”

“நீங்க வேண்டாம் சொல்ல மாட்டேன். உங்களுக்காக என்னோட காத்திருப்பு அதிகம். நான் வேண்டாம் சொல்லி உங்களை இழக்க என்னால் முடியாது” என்று முகம் மூடி அழுதாள்.

உதயனுக்காக தன்னை வேண்டாமென்கப் போகிறாளென்று தான் பிரணவ் நினைத்தான். அதனால் என கேள்வியாக இழுத்து நிறுத்தினான். ஆனால் அவள் தன்னையும் விட முடியாதென மருகுவது பிரணவ்வுக்கு அவளின் காதலின் ஆழம் உணர்வதாய்.

உதயனை அவளுக்கு எத்தனை பிடிக்குமென்று அறிவான். அவனுக்காகக் கூட தன்னை விட்டுக்கொடுக்க முடியவில்லை என்றால்… அவளின் காதல் பேரன்பின் உச்சமல்லவா!

“உன்னை கட்டிக்கணும் தோணுதுடி.”

அழுது கொண்டே கண்களை துடைத்துக் கொண்டிருந்த நனியிதழ் அவனின் வார்த்தையில் பட்டென்று இருக்கையின் பின் சாய்ந்து காரின் கதவோடு ஒண்டினாள்.

“பதறாத… ரிலாக்ஸ்” என்ற பிரணவ், தன்னுடைய இரு உள்ளங்கையையும் பின் கழுத்தில் கோர்த்து தலையை உயர்த்தி கண்கள் மூடி அவளருகில் பொங்கும் தன்னுடைய நேச உணர்வுகளை அடக்கினான்.

சில நொடிகளில் தன்னை மீட்டு அவள் புறம் நன்கு திரும்பி அமர்ந்த பிரணவ்,

“உனக்கு பிடிக்காத எதையும் உன் அண்ணா செய்யமாட்டாங்க” என்றான்.

“எனக்கேத் தெரியும்.” சடுதியில் சொல்லியிருந்தாள்.

“அப்புறம் ஏன் வருத்தப்பட்டுட்டு இருக்க?”

“நான் சொல்ற நோ… அண்ணா லவ்வுக்கு எண்ட் ஆகிடுமே” என்றாள்.

“வேறென்ன டிசைட் பண்ணியிருக்க?”

“நாளைக்கு அந்தப் பையன் கிட்ட நேரா பேசிடுறேன். நம்ம லவ் பத்தி சொல்றேன். அதுக்கு அப்புறம் என்னன்னு பார்ப்போம்” என்ற நனியிதழ், “நம்ம லவ்வுக்காக அதிகம் யோசிச்சது அண்ணா தான். நமக்காக அண்ணா லவ் தோத்துப்போகக் கூடாது” என்றாள்.

‘நான்தான் அந்தப் பையன்.’ தொண்டை வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கினான்.

நாளை தெரியப்போகும் விஷயம், நடுவில் எதற்காக நனியிதழை இத்தனைக் குழப்ப வேண்டுமென்று நினைத்த பிரணவ்வுக்கு இக்கணம் உதயனின் எண்ணம் புரிந்தது.

விலகி இருப்பவர்களை பேச வைப்பதற்காக அவன் அடித்த பந்து இந்த குழப்பமென்று நன்கு புரிந்தது.

நேரில் பார்த்து சிறிது நேரம் மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சினைகளுக்கும் எளிதாக தீர்வு கிடைத்துவிடும்.

இங்கு இருவரும் தங்களின் காதலை நேரடியாகப் பகிர்ந்துக் கொள்ளவில்லைதான். ஆனால் அவள் அழைத்ததும் அவளுக்காக அவன் வந்து நின்ற வேகம், அவனின் காதலையும், தன் உறவுக்காக என்றாலும் அவனை விடமுடியாது அவனுக்காக அவள் சிந்தும் கண்ணீரில் அவன் மீதான அவளின் காதலை அவனும் நன்கு உணர்ந்து கொண்டனர்.

இருவரும் இதனை உணரத்தான் உதயன் இப்படியொரு ஆட்டமே ஆடினானோ?

‘உங்களை பார்க்கணும் தோணுதே மிஸ்டர்.உதயன்.’ மனதில் நினைத்த பிரணவ், நனியிதழின் விசும்பலில் தான் கவனம் பெற்றான்.

அவளின் கண்ணீர் நிற்காமல் வழிய, உண்மையை சொல்லிவிடலாமா என நினைத்த பிரணவ் நொடியில் வேண்டாமென்று முடிவெடுத்தான்.

‘சர்ப்ரைஸ்.’ மானசீகமாக கண்ணடித்துக் கொண்டான்.

“எப்படியும் நாளைக்கு அந்தப் பையன்கிட்ட பேசறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறமும் ஏன் அழற?” என்ற பிரணவ், “நமக்கு ஃபேவரா எதும் நாளைக்கு நடக்கலனா. அப்புறம் பார்த்துக்கலாம். அதுமட்டுமில்ல… இப்போ உன் அண்ணாக்கு தெரிஞ்சாலே பொண்ணு கொடுக்க சம்மதிக்கமாட்டாங்க. ஃப்ரீயா விடு” என்றான்.

“ம்ம்…” என்ற நனியிதழ், “யோசிக்கத் தெரியாம யோசிச்சு… உங்களை இவ்வளவு தூரம் வர வச்சிட்டேன். சாரி” என்றாள்.

தற்போது அவள் முகத்தில் ஒரு தெளிவு.

“இவ்வளவு தூரம் வந்ததால்தானே மேடம் எவ்ளோ லவ் பண்றீங்க தெரிஞ்சுது. நமக்குள்ள இருந்த தூரத்தைவிட இப்போ வந்த தூரம் கொஞ்சம் தான்” என்றான். அவனின் பொருளிலும், பார்வையிலும் அவளுள் தடுமாற்றம்.

“போலாம்.” திக்கித் திணறிக் கூறினாள்.

“டூ மினிட்ஸ்” என்ற பிரணவ், “நமக்குள்ள இன்னும் பேசிக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்குல்ல. ஆனாலும் நம்ம லவ் ஃபீல் பண்ண முடியுது. லவ் யூ இதழ்” என்றான்.

“பிர…ண…வ்…”

“எஸ் இதழோட பிரணவ்” என்று வண்டியைக் கிளப்பினான்.

அவன் சொல்லியதில் நெஞ்சம் படபடக்க, கீழ் உதட்டை அழுந்த கடித்து விடுத்தாள்.

தன்னருகில் அவள் தன்னுடைய சுயமிழக்கிறாள். அவனுக்கு எப்படி இருக்கிறதாம்?

“ஓ காட்” என்று ஒற்றை கையால் பிடரியை வருடினான்.

இதுவரை அவனருகில் உணராத அவஸ்தை அவளிடம். அவனை பார்த்தும் பார்க்காது, விழிகளில் சடுகுடு ஆடிக் கொண்டிருந்தாள்.

‘பித்து பிடிக்க வைக்கிறாள்.’ மனதில் புலம்பிய பிரணவ், வண்டியை நிறுத்தியிருந்தான்.

வண்டி நின்றதில் சுற்றம் உணர்ந்த நனியிதழ், “அச்சோ… என்ன வீட்டு வாசலிலே நிறுத்திட்டிங்க” என்று பதறினாள்.

“பதறாம இறங்கி போ” என்ற பிரணவ், அவள் கதவில் கை வைக்கவும், “ஒருமுறை சொல்லிட்டு போடி” என்றான். பல வருட ஏக்கங்கள் சுமந்து.

தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பி சில கணங்கள் விழியோடு விழிகள் கலக்க விட்டவள்,

“ஐ லவ் யூ” என்று உயிர் உருக மொழிந்தாள். அத்தனை காதலையும் விழி வழி அவனுள் கடத்தியிருந்தாள்.

மனதில் தேனாய் அவளின் வார்த்தைகள் இறங்கிட, பல நாள் ஏக்கங்கள் விலகிட, “காட்” என்று இருக்கையில் பின் சாய்ந்து ஆசுவாசமாக கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் அத்தோற்றம் அவனது பல வருட வலியை அவளுக்கு பிரதிபலித்தது. அவன் முகம் காட்டிய காதல் வலியில் அவனின் நேசம் தனக்கு சற்றும் குறைந்ததல்ல என்பதை உணர்ந்தவள்,

“லவ் யூ பிரணவ்” என்று தன்னைப்போல் மீண்டும் மொழிந்திருந்தாள்.

“இறங்குடி. இல்லைன்னா இப்படியே கூட்டிட்டு போயிடுவேன்” என்றான். விழிகளைத் திறக்காது.

அவள் நேரடியாக சொல்லிய நேசத்தின் சுவடுகள் பதிந்த வார்த்தையில் அவனிடம் எத்தனை பெரும் ஆசுவாசம் குடி கொண்டதென்று அவளறிய வாய்ப்பில்லையே. இத்தனை நாள் தவிப்புகளுக்கு அவளை தன்னுடனே நிறுத்திக்கொள்ள அவனின் அகமும், புறமும் பரபரத்தது.

பிரணவ் சொல்லியதில் விழி விரித்த நனியிதழ்,

பிரணவ், “கிஸ் பண்ணனும் தோணுது” என்றதில் மின்னலாய் இறங்கி வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.

அவள் சென்றுவிட்டாள் என்றதும் இமைகள் திறந்த பிரணவ், அவள் சென்ற திசை பார்த்து சன்னமாக முறுவலித்தான்.

தனது அறை பால்கனியிலிருந்து பிரணவ்வின் வண்டி வந்து நின்றது, நனியிதழ் அதிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தது என எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த உதயன், சத்தம் கேட்டு தன்னுடைய அலைபேசியை எடுத்துப் பார்த்தான்.

“தேங்க்ஸ் மாமா.” பிரணவ் அனுப்பியிருந்தான்.

error: Content is protected !!
Scroll to Top