என் ஆயுள் நீயே 4

என் ஆயுள் நீயே 4

உதயன் அறைக்குள் வர சுருண்டு படுத்திருந்த நனியிதழ் எழுந்து அமர்ந்தாள்.

ஏழு வருடங்களுக்கு மேலான காதல்.

எப்படி மறந்து வேறு வாழ்வில் அடி வைத்திடுவாள். முடியவில்லை.

நான்கு வருடங்களாக பொத்தி வைத்த காதலை, சொல்ல நினைத்து அருகில் சென்ற நொடியே, பிரணவ் நண்பனிடம் பேசியதை தற்செயலாகக் கேட்க நேரிட, அவனிடம் காதலை சொல்லி வலி அனுபவிக்கும் திடமில்லாது திரும்பி வந்திருந்தாள்.

அன்று அவள் கதறிய கதறல். இன்று நினைக்கவும் உதயனின் உள்ளம் பதறும். உடல் நடுங்கிடும்.

உதயன் அன்று பேசியதற்காக, மூன்று வருடங்கள் அமைதியாக இருந்த குமரி மீண்டும், தன்யாவின் வயதை காரணமாக வைத்து அவளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று பேச்சினை கிளப்பிட, ஜெயலட்சுமியிடம் பேசிக் கொண்டிருக்க, அதனை காமாட்சி உதயனிடம் சொல்லிவிட்டார்.

அன்றே உதயனுக்கு ஏற்ற, அவன் காத்திருந்த தகவல் வந்திட, என்ன செய்ய வேண்டுமோ அதனை சரியாக செய்து முடித்து, அடுத்த மூன்றாம் நாள்,

“நாளை பட்டுவை பெண் பார்க்க வருகிறார்கள்” என்று சொல்லி தன் பணிக்கான சென்றுவிட்டான்.

அன்று இரவு பணி முடித்து விடியலில் தான் வீடு வந்த நனியிதழ் உறங்கி எழுந்து மதியம் போலத்தான் அறையிலிருந்து வெளியில் வந்தாள்.

அன்னை கங்காவின் மூலம் விடயம் அறிந்ததும் அண்ணனுக்கு அழைத்துவிட்டாள்.

ஏற்றுமதி விடயமாக துறைமுகத்தில் நின்றிருந்த உதயன், அழைப்பினை கவனித்த போதும் எடுக்கவில்லை.

கப்பல் சரக்குகளை ஏற்றி நகர்ந்ததும்,

“எப்போ எந்த நாட்டில் இருக்குன்னு கவனிச்சிட்டே இரு இன்பா” என்று தம்பிக்கு உத்தரவிட்ட உதயன், அங்கிருந்து இறால் பண்ணைக்கு வந்தான்.

சந்தைக்குப் போக வேண்டிய இறால்கள் முகடென குவிந்திருக்க, ஏற்றுமதிக்கு அனுப்ப வேண்டியவை பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

“நைட் வந்து பேசுறேன் பட்டு” என்று தங்கைக்கு தகவல் அனுப்பியவன், அடுத்தடுத்து தன் பணிகளில் மூழ்கிப்போனான்.

இரவு நேரமாகியும் வீட்டிற்கு செல்லாது, தங்களது கோல்ட் ஸ்டோரோஜ் பிரிவில் நின்றிருந்தான் உதயன்.

அருகில் வந்த இன்பா,

“மதியமே நீங்க சாப்பாட்டுக்கு வரலைன்னு, அம்மாக்கள் ரெண்டு பேரும் எனக்கு போன் போட்டு படுத்துறாங்க அண்ணா. இங்க எல்லாம் பேக்கிங் முடியும் வரை நானிருக்கேன். நீங்க கிளம்புங்க” என்றான்.

அப்போதும் செய்து கொண்டிருக்கும் வேலையை சரிபார்த்துக் கொண்டிருந்தான் உதயன்.

“நனி நாலு தரம் எனக்கு கால் பண்ணிட்டாள். பையன் யாருன்னு இன்னுமே நீங்க யாருக்கும் சொல்லல. பட் எனக்கொரு கெஸ் இருக்கு… நான் நினைக்கிறது சரிதானா?” எனக் கேட்டான் இன்பா.

நிமிர்ந்து தம்பியின் முகம் பார்த்த உதயன், மென் முறுவல் ஒன்றை உதிர்த்து… “பார்த்துக்கோ” என அவனின் தோளில் தட்டிச் சென்றான்.

அதிலேயே தன்னுடைய கணிப்பு சரியென்று இன்பாவுக்கு புரிந்திட, உள்ளம் மகிழ்ந்தான்.

எழிலின்பனுக்கும் தெரியுமே காதல் வலி. அவனும் காதல் துளிர்த்த கணம் முதல், விலகி ஓடுகிறான். வேண்டாமென்று தடைகள் போட்டும் மனம் காதலில் நிலையாக நின்றிட, சொல்லவும் முடியாது, தள்ளி வைக்கவும் முடியாது, அவனுள்ளும் காதல் ரணம். அந்த ரணம் தன் தங்கைக்கு நீங்கவிருக்கிறது எனும் மகிழ்வு அவனிடம்.

“அண்ணா கிளம்பிட்டாங்க.” நனிக்கு தகவல் அனுப்பிவிட்டு தன் வேலையை பார்க்க நகர்ந்தான்.

உதயன் வீட்டிற்கு வர, அன்னையர் இருவரும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

“என்ன தம்பி மதியம் சாப்பிட வரலையே?” காமாட்சி கேட்டிட, “எல்லாரும் சாப்பிட்டாச்சா?” எனக் கேட்டான்.

“ஆச்சுப்பா.”

“பட்டு?” கேள்வியாக நிறுத்தினான்.

“வரல. ரூமுக்கு கொண்டுப் போனேன், வேண்டாம் சொல்லிட்டாள்” என்றார் கங்கா.

“எடுத்து வைங்கம்மா. வரேன்.”

நேராக தங்கையின் அறைக்குத்தான் சென்றான்.

“தம்பி வந்ததும் பையன் குடும்பத்தைப் பற்றி கேட்கணும், வந்து எழுப்புன்னு சொன்னாரு காமாட்சி. நான் போய் கூட்டியாரேன்” என்று கங்கா தன் கணவரை எழுப்பச் சென்றிட, “உதயன் வந்தாச்சா?” எனக் கேட்டபடி வந்தார் கஜமுகன். உடன் ஜெயலட்சுமி.

“வந்தாச்சு மாமா. ரூமுக்கு போயிருக்காங்க” என்ற காமாட்சி, “பையன் யாருன்னு விசாரிக்கணுமா?” எனக் கேட்டார்.

“ம்ம்… காலையிலும் ஒன்னும் சொல்லாம போயிட்டாங்க. நாளைக்கு அவங்க வர நேரமா கேட்க முடியும்?” என்ற ஜெயலட்சுமி, “எல்லாருக்கும் டி போடுத்தா” என்றார்.

உதயன் வண்டி சத்தம் கேட்டு, குமரி கூட ஜெயந்தனை கூட்டிக்கொண்டு அந்நேரத்தில் வந்துவிட்டார்.

“எவ்வளவு ஆவலாதி பாரு இவளுக்கு” என்ற லட்சுமி, “நனிக்கு அமைஞ்சிட்டா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணாவே கூட வச்சிடலாம்” என்றார்.

“முதலில் அவங்க நாளைக்கு வரட்டும். அப்புறம் பேசுவோம் அம்மா” என்று வந்தார் இளங்கோவன்.

கூடத்தில் பேச்சு சத்தம் கேட்டு, மற்றவர்களும் வந்துவிட்டிருந்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்புக்குரியவன் மட்டும் வரவில்லை. அந்நேரம் தங்கையின் முகத்தில் வெகு நாட்களுக்குப் பின்னர் தோன்றியிருக்கும் மனம் நிறைந்த புன்னகையை தாயுமானவனாக ரசித்திருந்தான்.

கதவினை தட்டிவிட்டு உதயன் அறைக்குள் வர, மெத்தையில் சுருண்டு படுத்திருந்த நனியிதழ் எழுந்து அமர்ந்தாள்.

அவளுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். தனக்காக தன் மனம் அமைதி கொள்வதற்காக, அவனுடைய திருமணத்தையும் தள்ளி வைத்து மூன்று வருடங்களுக்கு மேலாகக் காத்திருக்கிறான்.

அவனிடம் இனியும் வேண்டாமென்று சொல்லவும் முடியாது, அவன் சொல்லி மறுக்கவும் முடியாது என்று அண்ணனின் முகம் காணாது தலை கவிழ்ந்திருந்தாள்.

“பட்டு…”

ஒவ்வொரு முறையும் அந்த விளிப்பில் அன்பு மீதுறும். உயிர் நிறைந்த அழைப்பு நெஞ்சத்தை ஊடுருவும் தருணம், உதயனின் ஒட்டுமொத்த அன்பும் அந்த ஒற்றை வார்த்தையில் உணரப்படும்.

மெல்ல முகம் உயர்த்தி உதயன் முகம் பார்த்தாள்.

“எதாவது சொல்லணுமா?” தங்கையின் கரம் பற்றி தன்னருகில் அமர்த்திக் கொண்டான்.

“நீங்க என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்.” உதடுகள் நடுங்க அவள் சொல்லிட, கண்ணிலிருந்து சரேலென கண்ணீர் வழிந்தது.

“நிஜமாவா?” கேட்ட உதயன், “அப்போ பட்டுக்கு மேரேஜ் ஓகே” என்றான்.

“அண்ணா…” தவிப்பாய் வெளிவந்தது அவளது குரல்.

“என்ன சொல்லணும் நீ? ஓபன் அப் யுவர் மைண்ட்” என்றான்.

“அவங்க இருந்த இடத்துல வேற யாரும் எனக்கும் வேணாண்ணா.” எப்படிப்பட்ட வார்த்தைகள். வருடங்கள் பல கடந்த பின்பும் அவள் அதிலிருந்து மீண்டு வரவில்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா என்ன?

“சோ?”

“உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தவும் விருப்பமில்லை” என்றாள்.

“அப்போ என்ன பண்ணப்போறீங்க?”

“அதான், நீங்க என்ன முடிவெடுத்தாலும்…”

சட்டென்று உதயன் பார்வை காட்டிய கூர்மையில் சொல்ல வந்ததை நிறுத்திக்கொண்டாள்.

“நீங்க வாழ்கை முழுக்க கஷ்டப்படலாம் டிசைட் பண்ணிட்டீங்க… ரைட்?” என்றான். ஒரு பக்க மீசை நுனியை திருகியவனாக.

“அண்ணா…” என்ற நனியிதழ், “நீங்க என்னை கஷ்டப்பட விடமாட்டிங்க தெரியும்” என்றாள்.

“அப்புறம் ஏன் நீ கஷ்டப்பட்டாலும் என் முடிவு ஓகேன்னு சொன்ன?”

அவனின் இந்த கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்லிடுவாள். அவளுக்காக வானத்தையும் கட்டி இழுத்து வருவானென்று அவளுக்குத் தெரியுமே!

“செல்வா…” மொத்தமாக உடைந்துப் போனாள்.

“நாளைக்கு வரப்போற பையன் பேரு பிரணவ்… குரு பிரணவ்” என்றான்.

சட்டென்று கண்களில் நீர் கோர்க்க…

தாவி அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.

“நிஜமாவா?”

“ம்ம்” என்ற உதயன், “பட்டு சிரிக்கணுமே” என்று அவளின் தலையை பரிவாய் வருடினான்.

சடுதியில் முகத்தில் ஒளி கூடி, கண்கள் பிரகாசிக்க, மூறல்கள் பளிச்சிட நீண்டு இதழ் விரித்த தங்கையின் இந்த முகத்திற்காக… இக்கணம் முகத்தில் மின்னும் இந்த மகிழ்வுக்காக எதுவும் செய்யலாம் என்று நினைத்தான்.

“லவ் யூ செல்வா” என்றவளின் முகத்தில் சந்தோஷ ஆர்ப்பரிப்பு. கரை கடந்த பளிச்சிடல்.

“அவங்க ஓகே சொல்லிட்டாங்களா?”

துள்ளி குதித்து வினவினாள்.

“ஓகே சொல்லாமலா அவங்க வீட்டிலிருந்து வரேன்னு சொல்லியிருப்பாங்க?” என்ற உதயனுக்கு தங்கையின் சந்தோஷ முகம் காண காணத் தெவிட்டவில்லை.

“இப்போ இருக்க சந்தோஷம் உன் முகத்துல எப்பவும் இருக்கணும் டா.” அவளின் உச்சியில் கை வைத்து ஆசீர்வாதம் போல் மொழிந்தான்.

“நீங்க இருக்கும்போது என் சந்தோஷம் என்கிட்டதான் இருக்கும்” என்றவள், “சரி சரி உங்களுக்காக மொத்த குடும்பமும் வெயிட்டிங். வாங்க போகலாம். பசிக்குது” என்று எழுந்து நின்று உதயன் கையை பிடித்து இழுத்தாள்.

“இவ்வளவு நேரம் பசி தெரியலையா?” எனக் கேட்டு, அவளின் அசட்டு புன்னகை பார்த்து தானும் சிரித்த உதயன், “ஃபைவ் மினிட்ஸ்” என்று தனதறை நுழைந்து, தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு மாற்றுடை உடுத்தி வந்தான்.

இருவரும் இப்படி சிரித்த முகமாக ஒன்றாக வருவதைப் பார்த்த குடும்பத்தினருக்கு, இவர்களை இப்படிப் பார்த்து எத்தனை நாளாயிற்று என்று தான் தோன்றியது.

“நானு… நானு…” என்று இருவருக்கும் நடுவில் ஓடி நின்ற எழிலினி, “என்னை விட்டுட்டு அக்காக்கு மட்டும் சாக்கி வாங்கிக் கொடுத்தீங்களா?” என்று உதயனிடம் கேட்டாள்.

“ஆமா… பத்து சாக்லேட்” என்ற நனியிதழ், “உனக்கில்லை” என்றாள்.

“நினைச்சேன். உங்க முகம் லைட் ஹவுஸ்க்கு இணையா இப்படி ஒளிவீசும் போதே நினைச்சேன். அண்ணா எனக்கு” என்று உதயனிடம் கை நீட்டினாள் எழில்.

“ஹேய் எழில் நான் சும்மா சொன்னேன்.” அவள் கை நீட்டி, உதயன் இல்லையென்று சொல்லிவிட்டாள் ஏமாந்துவிடுவாள் என்று பட்டென்று உண்மையை சொல்லியிருந்தாள் நனியிதழ்.

“அப்போ இல்லையா?” என்று எழில் முகம் சுருக்க… “எங்காவது காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரியா நடந்துக்கிற?” என்றாள் நனி.

“உங்ககிட்ட நான் நானா இருக்கேன். இதுக்கு காலேஜ் படிச்சா என்ன? கெழவி ஆனாதான் என்ன?” என்று கேட்டவளின் முகம் பார்த்து சிரித்த உதயன், அணிந்திருந்த ட்ராக் பாண்டிலிருந்து பெரிய சாக்லேட் ஒன்றை எடுத்து நீட்டினான்.

“வாவ்… தேங்க்ஸ் அண்ணா” என்றவள் உதயன் கையை பிடித்துக் கொண்டு குதிக்க, தங்கையை ஆதுரமாகப் பார்த்து நின்றான் உதயன்.

மூவரும் மாடிப்படிகளின் இறுதியில் நின்று பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகளின் சிரித்த முகம் குமரியைத் தவிர்த்து மற்றவர்களுக்கு காண கண் போதவில்லை.

‘தங்கச்சிங்கன்னு ரொம்பதான் பாசம் உருகி ஓடுது’ என நினைத்த குமரிக்கும் கூட தனது குடும்பம் மற்றும் குடும்பத்தினர் மீது அலாதி பாசம் தான். யாவும் மகள் என்று வரும்போது அடிபட்டுப் போகிறது.

அப்போதே கங்கா அடுப்படிக்கு சென்று, கை நிறைய கல் உப்பு அள்ளி வர, இன்பாவும் வீட்டிற்குள் நுழைந்தான்.

“வாய்யா… வந்து இப்படி அண்ணன், தங்கச்சிங்க பக்கத்துல நில்லு” என்றார்.

“சரிங்க பெரியம்மா” என்று உதயன் அருகில் வந்து நின்ற இன்பா, “என்னவாம்… நீங்க சிரிச்சிங்களாக்கும்?” என்று உதயன் காதில் கிசுகிசுத்தான்.

“அதே… அதே…” என்று எழில் கூற, “பேசாம நில்லு எழிலு” என்றவர், “தனுவும் இருந்திருக்கலாம்” என நால்வருக்கும் திருஷ்டி சுற்றி, உப்பை நிறை குடத்தில் போட்டு வந்தார்.

“மறக்காம காலையில அந்த குடத்து தண்ணியை செடிகளுக்கு ஊத்திடனும். நினைவூட்டு காமாட்சி” என்றார்.

அதற்குள் உதயன் மற்றும் இன்பா உணவு உண்ண அமர, காமாட்சி எடுத்து வைத்தார்.

குமரி கண்காட்டிட, “கொஞ்சம் பொறு” என்று அடக்கினார் லட்சுமி.

சாப்பிட்டு வந்து கஜமுகன் அருகில் அமர்ந்த உதயன்,

“பையன் பேரு குரு பிரணவ். திருச்செந்தூர். பிரணவ் குரூப் ஆஃப் கம்பெனிஸ் கேள்வி பட்டிருப்பீங்களே அவங்க குடும்பம் தான்” என்றான்.

“அவர் விஜயன் தானே” என்ற இளங்கோ, “அவரைத் தெரியுமே, நம்ம தேங்காய் பேக்டரி டிசைன் செய்து கட்டி கொடுத்தது அவர் தானே! என்ன இருபது வருஷத்துக்கு மேல ஆகிப்போச்சு. நல்ல நேர்மையான மனிதர். அதான் இவ்வளவு உயரம் வந்திருக்கிறார்” என்று பெருமையாகவே பேசினார்.

“பையன் என்ன பண்றாங்க?” கஜேந்திரன் வினவினார்.

“தனியா சாப்ட்வேர் கம்பெனி ரன் பண்றாங்க. சக்சஸ் குரௌத். அவர் ஃபீல்டில் நல்ல பெயர். விசாரிச்சிட்டேன்” என்றான் உதயன்.

இளங்கோவே நல்ல குடும்பம் என்று சொல்லியதோடு, உதயனும் பிரணவ் நல்ல மாதிரி என்றிட, அனைவரும் இந்த இடம் தகைய வேண்டுமென்று மனமார நினைத்தனர்.

“பிரணவ் போட்டோ” என்று உதயன் தன் அலைபேசியை கஜமுகனிடம் காட்டிட, ஒரு சுற்று வந்து மீண்டும் அலைபேசி உதயன் கை வந்தது.

அங்கு விமலா அலைபேசியில் காண்பித்த நனியிதழின் படமும் பிரணவ் கை சேர்ந்திருந்தது.

error: Content is protected !!
Scroll to Top