என் ஆயுள் நீயே 5

என் ஆயுள் நீயே 5

வீட்டின் கூடத்தில் உம்மென்று அமர்ந்திருந்தார் விமலா.

“நீ என்ன தான் பெர்ஃபாமென்ஸ் பண்ணாலும், அவனை ஒத்துக்க வைக்க முடியாது. டிராமைவை வேஸ்ட் பண்ணாத” என்றார் ராகவன்.

“இனியும் முடியாது மாமா. எதாவது பண்ணனும். அவன் ஒத்துக்கிட்டே ஆகணும்” என்ற விமலா, “நீங்க என்னங்க சொல்றீங்க?” என்று கணவரிடம் கேட்டார்.

“நான் சொல்ல என்னயிருக்கு விமலா. பிரணவ் ஒத்துகிட்டா சந்தோஷம் தான்” என்றார்.

“பொண்ணு போட்டோவை நீங்களே பாருங்க மாமா. எவ்வளவு லட்சணமா, அமைதியா தெரியுறாள்” என்று தன்னுடைய அலைபேசியை ராகவன் முன்பு காட்டியவர், “அப்படியே பிரணவ் பக்கத்துல நிக்க வச்சுப் பாருங்க. கண்ணே பட்டுடும்” என்றார். அத்தனை சிலாகிப்பு விமலாவின் முகத்தில்.

“பொண்ணு நல்லா தான் இருக்கு. அவன் சரி சொல்லணுமே” என்ற ராகவன், “ஓகே சொல்லிட்டான்னா சொல்லு” என்று எழுந்து சென்றுவிட்டார்.

நேரத்தை பார்த்த விஜயனும், “தூக்கம் வருது விமலா. நீ அவன் வரதுக்குள்ள சாப்பிட்டுடு. அப்புறம் அவன் முன்னாடி சாப்பிட்டு மாட்டிக்காதே” என்று சென்றுவிட்டார்.

தனித்து அமர்ந்திருந்த விமலா, நனியிதழின் புகைப்படத்தை பார்த்தது பார்த்தபடியே இருந்தார்.

‘பாந்தமான அழகு.’ மனதோடு சொல்லிக் கொண்டார்.

பிரணவ்க்கு திருமணம் செய்து பார்க்க வேண்டுமென்று விமலாவுக்கு ஆசை. அவனோ திருமணத்திற்கு இன்னும் வயது இருக்கிறதென்று ஆரம்பகட்ட பேச்சிற்கே மறுத்துவிட்டான். விமலா விடுவாரா, பெண்ணை முடிவு செய்து காட்டினால் பிடித்துப்போகுமென்று தரகர் மூலமாக பெண் பார்க்கத் துவங்கியிருந்தார்.

அவரின் செயல் தெரிந்து,

“நீங்க கல்யாணம் வரை என்னை இழுத்திட்டுப் போனாலும் தாலி கட்டப்போறது நான் தான். சும்மா டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. எனக்கு கல்யாணம் பண்ணிக்கும் ஐடியாவே இல்லை” என்றிருந்தான்.

பிரணவ் பொறுமையாக எடுத்து சொல்லியிருந்தால், அவரும் கொஞ்சநாள் போகட்டும் என்று அமைதியாகியிருப்பாரோ? அவனோ கல்யாணம் செய்துகொள்ளப் போவதே இல்லை எனும் அர்த்தத்தில் சொல்ல, எங்கே தனித்து நின்றிடுவானோ என்று ஆரம்பித்த வேலையை அவனது திருமணத்தில் முடித்தே தீர்வேன் என்று தீவிரமாக பெண் வேட்டை செய்தார்.

அதில் அவருக்கு பார்த்ததும் பிடித்தது தான் நனியிதழின் புகைப்படம்.

“என்ன போட்டோ மம்மி அது?” என்று கேட்டுக்கொண்டே அவரின் அருகில் இடித்துக்கொண்டு அமர்ந்தாள் அஷ்மிதா.

அஷ்மிதா விஜயனின் தம்பி விதுரனின் மகள். விதுரன் தந்தையைப்போல் ராணுவத்தில் சேர்ந்து உயிர் நீத்திருக்க, அவரின் காதல் மனைவி கணவரின் இறப்பு செய்தி கேட்டு நான்கு வயது மகளின் நினைவின்றி, அதிர்வில் உயிரை விட்டிருக்க, அஷ்மிக்கு தன்னுடைய பெரியம்மா, பெரியப்பாவே பெற்றோராகினர்.

அஷ்மிக்கும், பிரணவ்வுக்கும் ஒரு வயது தான் வித்தியாசம். அஷ்மியும் பிரணவ் படித்த கல்லூரியில் தான் பயின்றாள். நனியிதழுக்கு ஜூனியர் அவள்.

“நீ இன்னும் தூங்கல?”

“ஃபாரின் க்ளையன்ட் கூட ஒரு கால் மம்மி. இப்போ தான் முடிஞ்சுது. ஜஸ்ட் ரிலாக்ஸ் பண்ண எழுந்து வந்தேன்” என்ற அஷ்மி, அவரின் கையிலிருந்த அலைபேசியை வாங்கி பார்த்தாள்.

“வாவ்… ஹூ இஸ் திஸ் பியூட்டி?” என்று விழிவிரித்தாள் அஷ்மி.

“நீ கொடுக்கிற இந்த எக்ஸ்பிரஷனை உன் அண்ணன் கொடுத்தால் நல்லாயிருக்கும்” என்ற அன்னையை அர்த்தமாக ஏறிட்ட அஷ்மிதா, “அண்ணியா மம்மி?” எனக் கேட்டாள்.

‘நல்லா நடிக்கிற அஷ்மி நீ.’ மனதிற்குள் தன்னை பாராட்டி சிரித்துக் கொண்டாள்.

“உன் அண்ணன் ஓகே சொல்லிட்டா உனக்கு அண்ணி தான்” என்றவரின் வார்த்தைகளிலேயே, அவருக்கு நனியிதழை எத்தனை பிடித்திருக்கிறது… இந்த சம்மந்தம் கைகூட வேண்டுமென்கிற அவரின் எதிர்பார்ப்பு அஷ்மிதாவுக்கு புரிந்தது.

“உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல?”

“ஆமா… ரொம்பவே பிடிச்சிருக்கு” என்ற விமலா, “எப்படியாவது உன் அண்ணனை ஒத்துக்க வை அஷ்மி” என்றார்.

“அண்ணி அழகா இருக்காங்க. அண்ணாக்கு பக்கா மேட்ச். பட் மம்மி, அவன்கிட்ட அடி வாங்க எனக்குத் தெம்பு இல்லை. நீங்களே டீல் பண்ணிக்கோங்க” என்றவள், கொரிப்பதற்கு பண்டம் எடுத்து வந்து இருக்கையில் சாய்ந்து அமர்ந்து சாப்பிடத் துவங்கினாள்.

“நல்லா சாப்பிடு. இப்போ இதுதான் ரொம்ப முக்கியம்.” இருக்கும் கடுப்பை மகளிடம் காண்பித்தார்.

லட்டுவை வாயில் வைத்து மென்று கொண்டிருந்தவளுக்கு, கல்லூரி காலங்களில் நனி தன்மீது கொண்டிருந்த அன்பு, அக்கறையின் நினைவு. அத்தனை அன்பு கொண்டிருந்தபோதும், நனியிதழ் கல்லூரி முடித்து சென்றதும், முற்றும் முழுதாக தன்னையும் தவிர்த்தது வேதனையாக இருந்தபோதும், அவளின் மனம் அறிந்து அவளின் விலகலை ஏற்கவே செய்தாள்.

அவள் மனதில் நினைவுகளை அலசிக் கொண்டிருக்க,

“நீயென்ன சீக்கிரம் வந்துட்ட. அவனை காணோம்?”, விமலா.

பிரணவ் அலுவலகத்தில் தான் அஷ்மியும் வேலை செய்கிறாள். அண்ணனுக்கு தொழிலில் வலது கை அவள்.

“எனக்கு தெரியாது. எல்லாம் சொல்லிட்டா செய்றான் அவன்.” அஷ்மி உதடு சுளிக்க,

பிரணவ் வீடு வந்து சேர்ந்தான்.

“ஹாய் அண்ணா” என்ற அஷ்மி, அவன் வருகை அறிந்ததும் முகத்தை உம்மென்று மாற்றிக்கொண்ட அன்னையை கண் காட்டினாள்.

பிரணவ் புருவம் உயர்த்தி என்னவென்று வினவ, அவளோ கையால் தாலி கட்டுவதுபோல் சைகை செய்து காண்பித்தாள்.

“போச்சுடா” என்று வாய்விட்டே சொல்லியவன், ‘சமாளிக்கப் போனா நேரம் ஓடும். முதலில் தெம்பா சாப்பிட்டு வருவோம்’ என்று விமலாவை கண்டுகொள்ளாது தன்னுடைய அறைக்குள் நுழைந்து விட்டான்.

“மம்மி களீன் போல்ட்” என்று அஷ்மி சிரித்திட, விமலா பார்த்த முறைப்பில் அவள் அமைதியாக உணவு மேசை நோக்கி ஓடிவிட்டாள்.

அஷ்மி பிரணவ்வுக்கு உணவு எடுத்து வைக்க, தன்னை சுத்தம் செய்துகொண்டு ஆடைமாற்றி வந்து சேர்ந்தான்.

“நீ சாப்பிட்டியா வாலு” என்று தங்கையின் தலையில் கொட்டியவன், “மாம்?” என்று கேள்வியாக பார்த்தான்.

“அடிக்காதடா தடிமாடு” என்று அவனின் புஜத்தில் குத்தியவள், “நிஜமாவே அம்மா சாப்பிடாம இருக்காங்க. அவங்களுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிப்போச்சு” என்றாள்.

உணவில் கை வைத்தவன், தங்கையின் முகம் காண, “எனக்கும்” என்று கண் சிமிட்டினாள் அஷ்மி.

“வாய் மூடிட்டு சாப்பாடு வை” என்ற பிரணவ், தங்கைக்கும் நடுவில் உணவினை ஊட்டிவிட்டிவனாக உண்டு முடித்து எழுந்தான்.

“நீ சாப்பிடும் போது எனக்கு இப்படி கொடுக்காதன்னு எத்தனைவாட்டி சொல்றது மங்கி. உன் சப்பாட்டில் பாதி சாப்பிட்டே நான் வெயிட் போடுறேன்” என்று சிணுங்கினாள் அஷ்மி.

“ஊட்டுற வர அமைதியா இருந்திட்டு, கடைசியில சொல்ற பார்த்தியா. அங்க நிக்கிற நீ. அரிசிமூட்டை” என்ற பிரணவ், “குட்டியா இருக்கும் போது கொழுகொழுன்னு இருப்ப. அந்த அஷ்மி குட்டியை ரொம்பவே மிஸ் பண்றேன். அதான் உன்னை பழைய மாதிரி குண்டு பேபி ஆக்கலான்னு என் சாப்பாட்டில் பாதியை உனக்கு கொடுக்கிறேன்” என்றான்.

அண்ணனும் தங்கையும் நண்பர்கள் போல அத்தனை ஜாலி. இருவரும் ஒன்று சேர்ந்தால் கலகலப்பு தான். ஆனால் எதையும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

இப்படி கேலி, கிண்டல் நிறைந்த பேச்சின் உள்ளே இருவருக்குமான அன்பு மறைந்திருக்கும்.

பிரணவ்வுக்கு தங்கைக்கு ஊட்டாது உணவு உண்ட திருப்தி இருக்காது. அவளுக்கும் அண்ணன் கையில் ஒரு வாய் வாங்காது அந்த நாள் நிறையாது.

“என்ன குண்டா மாத்துறது இருக்கட்டும். இப்போ மம்மியை போய் பாருடா” என்று அவனின் முதுகில் கை வைத்து தள்ளிக்கொண்டு சென்று விமலா முன் நிறுத்தினாள்.

“நீயும் என்னை குழிக்குள்ள தள்ளப் பாக்குற அஷ்மி” என்ற பிரணவ், “மாம் சாப்பிட வாங்க” என்று அழைத்தான்.

“எனக்கு பசிக்கல.” பட்டென்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டார்.

“கிட்டிஷா பிஹேவ் பண்ணாதீங்க மாம்.” அவரின் தோளில் கரம் பதித்து அமர்ந்தான்.

“கையை எடுடா” என்று நகர்ந்து அமர்ந்தவர், “ஓகே சொல்லு நான் சாப்பிடுறேன்” என்றார்.

“மாம்… எனக்கு என் பிஸ்னசில் நிறைய கமிட்மென்ட் இருக்கு. நிறைய அச்சிவ் பண்ணனும். அதோட மேரேஜ் லைஃப் ஃபுல் ஆஃப் பிர்ஷர். எனக்கு செட் ஆகாது” என்றான்.

“ஹோ… இதையே நானோ உன் அப்பாவோ நினைத்திருந்தால்?”

அடுத்து அவர் சொல்லாது விட்டது அவனுக்கு புரிந்தது.

“நிஜமா நீ சரி சொல்லாது நான் சாப்பிடமாட்டேன்” என்றார்.

“என்னவோ பண்ணுங்க” என்று பிரணவ் எழுந்து சென்றுவிட்டான்.

பிரணவ், அன்னை வழக்கமாக எதாவது ஒன்றிற்கு தன்னை ஒத்துக்கொள்ள வைத்திட, தனக்குத் தெரியாது சாப்பிட்டுவிட்டு, பட்னி இருப்பது போல நடிப்பதை இப்போதும் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டான். ஆனால் இம்முறை அவரின் தீவிரம் அவன் உணரவில்லை. எப்படியும் தான் அறைக்குள் சென்றுவிட்டால் அவராக சென்று சாப்பிட்டுவிடுவார் என்று நினைத்தான்.

அவனின் பின்னால் சென்ற அஷ்மி, “வன்ஸ் அண்ணி பிக் பாருடா. செமயா இருக்காங்க. நீ ஓகே சொன்னாலும் சொல்லுவ” என்றாள்.

இடையில் கை வைத்து முறைத்து பார்த்தான்.

“சும்மா முறைக்காதடா. நீ கல்யாணம் பண்ணா தான, எனக்கு நாத்தினார் பதவி கிடைக்கும். நான் கெத்து காட்ட முடியும்” என்றாள்.

“நீ கெத்து காட்ட, நான் ஏன் பக்கி கிணத்துல விழணும்” என்ற பிரணவ், “உனக்கே பிடிச்சிருக்கு அப்படின்னா, நல்ல பொண்ணா தான் பார்த்திருக்காங்க போல. பட் அம் நாட் இன்ட்ரஸ்ட்” என்று தோள் குலுக்கினான்.

“ஆமா ரொம்ப பிடிக்கும்” என்றவள்,

“எனக்கென்னவோ நீ இவங்ககிட்ட தான் மாட்டிக்கிட்டு தொங்கப் போறன்னு தோணுது” என்றாள் அஷ்மி.

“ஹா ஹா…” வாய்விட்டு சிரித்தான் குரு பிரணவ்.

“நானா? நெவர்” என்றவன், “இப்போதைக்கு ஃபோகஸ் ஃபுல்லா என் ஜாபில் தான்” என்றான்.

“இதையே எத்தனை நாளுக்கு சொல்லுவ… இவங்க யாருன்னு தெரிஞ்சால் நீ ஓகே சொல்லிடுவ” என்றாள்.

“எப்படி இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற? பொண்ணு உன் ஃப்ரண்டா?” எனக் கேட்டான்.

“ஆமா… காலேஜில் என்னோட சீனியர்” என்ற அஷ்மி தன்னுடைய அலைபேசி ஒலிக்கவும், “ஆரி தான்” என நகர்ந்து சென்றாள்.

“உன் சீனியரா!” என்ற பிரணவ், “அப்போ எனக்குத் தெரிஞ்சிருக்கணுமே, யாரு?” என்றான். தங்கையின் பின் சென்று.

அவளோ பால்கனி பக்கம் சென்றவள், இவனை திரும்பி பார்த்துவிட்டு, அலைபேசியில் உரையாடத் துவங்கிவிட்டாள்.

அஷ்மி பேசி முடித்து வந்து பதில் சொல்லும் வரை பொறுமை இல்லாத பிரணவ், வேகமாக கீழே வந்தான்.

இன்னமும் விமலா அதே இடத்தில் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,

“பொண்ணு பிக் காட்டுங்க மாம்” என்றான்.

நொடியில் முகம் மலர்ந்த விமலா, தன்னுடைய அலைபேசியின் திரை நீக்கி, படத்தை காண்பித்தார்.

அலைபேசியை கையில் வாங்கிய பிரணவ்வின் அதரம் விரிந்து உச்சரித்தது,

“நனியிதழ்.”

error: Content is protected !!
Scroll to Top