என் ஆயுள் நீயே 56
இன்னும் அரை மணியில் கன்னியாகுமரியில் உள்ள புகழ் பெற்ற துணி கடைக்கு வந்து விடுவோமென்று பிரணவ் அழைத்து உதயனுக்கு சொல்லியிருக்க, வீட்டு பெண்கள் மட்டும் செல்வதாக முடிவானது.
“மொத்த பேரும் குடும்பமா போய் நிக்க வேண்டாம் கங்கா. புடவை தானே எடுக்கப் போறோம். நாம பொம்பளைங்க மட்டும் போவோம். மூணு நிச்சயம். கண்ணுப்படும். கல்லடியை கூட சமாளிச்சிடலாம் சும்மாவா சொன்னாங்க” என்று லட்சுமி பாட்டி சொல்ல, அனைவரும் சம்மதிக்கவே செய்தனர்.
பிரணவ் வீட்டிலிருந்தும், பிரணவ், அஷ்மிதா, விமலா மூன்று பேர் தான் வருகின்றனர்.
“அவங்க பக்கம் வந்துட்டாங்க பாட்டி. இன்பா உங்களை கடையில் விட்டுட்டு மீன்பிடி இடத்துக்கு போயிடுவான். அங்க அவனுக்கு வேலை இருக்கு. எல்லாம் முடிச்சிட்டு கால் பண்ணுங்க, பிக்கப் பண்ண வருவான்” என்ற உதயன், “அத்தை வந்தாச்சா?” எனக் கேட்டான்.
“நைட்டு நானும் உங்க அப்பாவும் முறைக்கு கூப்பிட்டு வந்தாச்சு உதயா… செத்த முன்னக்கூட எழிலை அனுப்பி கூட்டியார சொன்னேன். இன்னும் வரல” என்று கங்கா சொல்லிக் கொண்டிருக்க, தனு வீட்டிற்குள் வந்தாள்.
“அத்தை வரலையா?”
நனியிதழ் தான் கேட்டாள்.
“அதெப்படி நானில்லாம” என்று உள்ளே வந்தார் குமரி.
“இப்போதான் வீடு நிறையுது அண்ணி” என்று காமாட்சி சொல்ல,
“முகத்துக்கு நேரே ஐஸ் வைக்காத கங்கா…” என்று குமரி இயல்பாய் பேசியதே அனைவருக்கும் போதுமானதாக இருந்தது.
“சரிசரி பேசிட்டு நின்னா ஆவுமா. கிளம்புங்க” என்று கஜேந்திரன் சொல்ல, இளங்கோ கங்காவிடம் வங்கி அட்டையை கொடுத்தார்.
கங்கா அதனை காமாட்சியிடம் கொடுக்க, அண்ணன் தம்பி இருவரும் அர்த்தமாகப் பார்த்துக் கொண்டனர்.
பெண்கள் இருவரின் ஒற்றுமையில் தானே, ஆண்கள் இருவரின் அமைதியும் நிம்மதியும் உள்ளது.
“நீங்க வரலையா தம்பி?” காமாட்சி கேட்க, “முடியுமா தெரியல. பார்க்கிறேன் சித்தி” என்றான் உதயன்.
உதயன் வேலைப்பளு தெரிந்தவர்கள், அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை.
“எனக்கு ஆபீஸில் முக்கியமான வேலை ஒன்னு இருக்கும்மா. முடிச்சிட்டு ஒரு மணி நேரத்தில் வந்துடுறேன்” என்று நனியிதழ் சொல்ல, மற்ற பெண்களை அழைத்துக் கொண்டு இன்பா கிளம்பினான்.
“அஷ்மி உங்களை எக்ஸ்பெக்ட் பண்ணுவா?” நனியிதழ் உதயனிடம் சொல்ல…
“அப்படியா?” என்ற உதயன், “உண்மையாவே வேலையிருக்கு பட்டு” என்றான்.
“சொல்லியாச்சா?”
“என்னது?”
“நீங்க வரலைன்னு!”
“நீ ஆபிஸ் போயிட்டு ஷாப் போகணும்ல. இன்னும் நின்னுட்டு இருக்க… ஓடு… ஓடு…” என்று உள்ளே சென்ற உதயனுக்கு இரவு அஷ்மிதாவுடன் பேசிய நினைவு மேலெழும்பி முகம் சிவக்க வைத்தது.
“ஓகே… ஓகே…” என்று அவனின் முதுகுக்கு பின்னால் சொல்லிய நனியிதழ் தன்னுடைய வண்டியை உயிர்ப்பித்தாள்.
இரவு பிரணவ்விடம் பேசிக்கொண்டிருந்த அஷ்மிதா, உதயன் தன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான் என்று தெரிந்ததும், அவனுக்கு அழைத்தாள்.
முதல் ஒலியிலே உதயன் எடுத்திருந்தான்.
அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. இருவரின் அமைதியும், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்தது.
“சாரி…”
அஷ்மிதா அவனுக்கு பதில் அனுப்பாததற்காகக் கேட்டாள்.
“இருக்கட்டும்…” என்ற உதயன், “அப்புறம்” என்றான்.
“அச்சோ உதய்… சாரி!”
“புரியுது அஷ்மிதா” என்றான் உதயன்.
அதில் தான் அவள் ஆசுவாசம் கொண்டாள்.
“ஹப்பாடா… கோபப்படுவீங்க நினைச்சேன்” என்றாள்.
“எதுக்கு?” என்ற உதயன், “நீ எனக்காக யோசிச்சன்னு புரிஞ்சிக்க முடியாத அளவுக்கு தூரம் இருக்கோமா அஷ்மிதா?” எனக் கேட்டான்.
“அச்சோவ் உதய்” என்று சிணுங்கியவள், “நான் பண்ணது தப்பில்லையா?” என வந்தனாவை அடித்தது குறித்து வினவினாள்.
“அப்போ அஷ்மிதாக்கு உதய் முக்கியமில்லையா?” என உதயன் கேட்க, அவனின் கோணம் புரிந்து, “இன்னும் ரெண்டு கொடுத்திருக்கணும்” என்றாள் அஷ்மி.
சத்தமாக சிரித்த உதயன், சிரிப்பினூடே… “தட்ஸ் மை கேர்ள்” என்றிருந்தான்.
அவனின் அந்த வார்த்தையில் சட்டென்று சிவந்து குளிர்ந்து போனாள்.
“நான் வைக்கிறேன்” என்று அவளின் குரல் குழைந்து வர,
“வைக்கலாமே” என்றான் உதயன்.
“இப்படி சொன்னா எப்படி வைக்கிறது?” என்று அஷ்மிதா ஹஸ்கி குரலில் சொல்ல, “இப்படித்தான்” என்று மென் முறுவலோடு அழைப்பை வைத்திருந்தான் உதயன்.
அலைபேசியை பிடித்திருந்த கையால் நெற்றியில் முட்டிக்கொண்ட அஷ்மிதா…
“பேச்சிலே மெல்ட் பண்றீங்க உதய். பக்கத்துல வரணுமே” என்று அறைக்குள் கைகள் விரித்து சுற்றியவளாக மெத்தையில் கிடந்த தலையணையை எடுத்து மார்போடு கட்டிக்கொண்டு படுத்தாள்.
அருகில் மேசை மீதிருந்த உதயனின் புகைப்படத்தை எட்டி எடுத்தவள்,
“உதய்க்கு லவ் பண்ண வருதே” என்றாள்.
சட்டென்று நினைவு வந்தவளாக,
“நாளைக்கு வரீங்களா?” எனக் கேட்டு தகவல் அனுப்பினாள்.
“வரணுமா?” அடுத்த நொடி உதயன் அனுப்பியிருக்க, என்ன சொல்வாள் அவள். நாணம் மீதுற, “குட் நைட்” என்று அனுப்பி வைத்தாள்.
எப்படியும் உதயன் வருவான் எனும் அவளின் ஆர்வம் கடையில் மற்றவர்களை பார்த்ததும் பட்டென்று வடிந்தது.
“என்ன மேடம் முகம் சுருங்கிடுச்சு.” இன்பா அவளின் தலையில் தட்டி வினவ,
“அப்படியெல்லாம் இல்லையே” என்று சமாளித்தாள்.
“அது மாம்ஸ் வராததால இருக்கும் மச்சான்” என்று பிரணவ் சொல்ல, “என்னை டேமேஜ் பண்ண நீ மட்டும் போதும்” என்று பிரணவ்வின் வயிற்றில் குத்திய அஷ்மிதா, எழில், தனுவுடன் இணைந்து கொண்டாள்.
பிரணவ் நனியிதழை தேட வேண்டிய அவசியமே இல்லையெனும் விதமாக அவள் முன்பே அவனிடம் சற்று தாமதமாக வருவதாக சொல்லியிருந்தாள்.
“உங்க ஆளு இன்பார்ம் பண்ணிட்டாங்களாக்கும்?” இன்பா கேட்க, பிரணவ் ஆமெனும் விதமாக புன்னகைத்தான்.
அனைவரும் பட்டு பிரிவிற்கு சென்றனர்.
இன்பா சில நிமிடங்களில் சென்றிட, பெண்கள் புடவை தேர்வில் மூழ்கினர். யாரும் ஒன்றும் எடுப்பது போன்று தெரியவில்லை.
நேரம் செல்ல… புடவை குவியல்களுக்கு மத்தியில் அவர்கள்.
தனு இன்பாவுக்கு பிடித்த வர்ணமென்று, பாஸ்டல் பச்சையில் வெங்காய சருகு நிற பார்டர் வைத்து, புடவை முழுக்க வெள்ளி இழையோடிய புடவையை ஒன்றரை மணி நேரத்திற்குப் பின் தேர்வு செய்து முடிக்க…
பிரணவ் அதற்கே அயர்ந்து போனான்.
“ஒரு புடவைக்கே இவ்ளோ நேரமா?” என்று அவன் வாய்விட்டு கேட்டுவிட,
“பிடிச்சதா எடுக்க வேண்டாமா அண்ணா?” என்றாள் தனு.
“கரெக்ட் தான்ம்மா…” என்ற பிரணவ், “நீயெப்படி அஷ்…” என்க, அவள் முகம் கண்டே தங்கையின் மனம் புரிந்து, நனியிதழ் வரும் போது பார்த்துக் கொள்ளலாமென்று ஒதுங்கிவிட்டான்.
நகர்ந்து சென்ற பிரணவ், உதயனுக்கு அழைத்து, “உங்க ஆளுக்கு நீங்க செலக்ட் பண்ணனுமா!” என்றான்.
“நான் வேலையா இருக்கேன்டா.”
“நான் உங்களை வர சொல்லலையே. ஜஸ்ட் இன்பர்மேஷன் பாஸ் பண்ணேன்” என்று வைத்துவிட்டு, நடப்பதை கவனிக்கலானான்.
தனு எடுத்த புடவை அழகாக இருந்தாலும், வேறு நிறத்தில் பார்க்க சொல்லி குமரி வற்புறுத்த,
“மாமாக்கு பிடிச்ச கலர் ம்மா” என்று அவள் சொல்லியதில், “கட்டிக்கப் போறது அவ தானே. பிடிச்ச மாதிரி இருக்கட்டும். விடுங்க. நீங்க வாங்க மத்த ரெண்டு பேருக்கு பார்ப்போம்” என்று விமலா குமரியை திசை திருப்பிட, “தேங்க்ஸ் பெரியம்மா” என்றிருந்தாள் தனு. விமலா அவளின் கையை பற்றி விடுத்தார்.
“இதே நாம சொல்லியிருந்தா கேட்டிருக்க மாட்டாங்க” என்று காமாட்சி சொல்ல, கங்கா அதட்டினார்.
“கேட்டுட போகுது காமு. இறங்கின மாரியாத்தா எப்போ ஏறுமோண்ணு இருக்கு” என்றார் கங்கா.
“எனக்கும் அந்த பயம் இருந்துட்டே இருக்குக்கா” என்று காமாட்சி சொல்ல, “புடவையை பாருங்க” என்று அவர்களை குமரி கவனிப்பதை காமாட்சியின் இடை இடித்து திருப்பினார் விமலா.
என்ன தான் உதயன் பேசியதில் குமரி மனம் மாறியிருந்தாலும், அவரால் அஷ்மியை தங்களுடன் ஒன்றிணைத்து பார்க்க முடியவில்லை. இருப்பினும் முன்புபோல் அதனை முகத்தில் காண்பிக்காது, உதயன் சொல்லியது போன்று அவனை முன்னிறுத்தி அஷ்மியை ஏற்க முயன்றார். அதன் பலனாக அஷ்மியிடம் ஓரிரு வார்த்தைகள் பேசவும் செய்தார். அதுவே கங்கா மற்றும் காமாட்சிக்கு போதுமாக இருக்க, நடுவில் அவர் மூலமாக மீண்டும் எவ்வித பிரச்சினையும் வரக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர். அதே நேரம் அவரை நினைத்து சிறு பயம் இருக்கத்தான் செய்தது.
தோன்றுவது எதுவாக இருந்தாலும் பட்டென்று பேசி விடுவாரே. அந்த பயம் தான்.
“நனி இப்போ வந்திடுவாள். அதுக்குள்ள நாம அஷ்மிக்கு பார்க்கலாம்” என்று கங்கா சொல்ல, “உனக்கு என்ன கலர் பிடிக்கும் அஷ்மி?” எனக் கேட்டார் காமாட்சி.
“உங்களுக்கு பிடிச்சதை பாருங்க அத்தை” என்று அஷ்மிதா சொல்லிட, “சொல்லிட்டல… இப்போ பாரு என் மருமகளுக்கு நான் எப்படிப்பட்ட நிறத்துல புடவை எடுக்கிறேன்னு” என்று காமாட்சி பரபரப்பாகினர்.
“தனுவும் உங்க மருமக தான் அண்ணி” என்று மருமகளில் அழுத்தம் கொடுத்து குமரி சொல்ல,
கங்கா பதறி விமலாவை பார்த்தாலும்,
“யாரு இல்லைன்னா அண்ணி… தனுவுக்கு தான் எடுத்தாச்சே. வேணும்னா என் ரெண்டாவது மருமகளுக்கு இன்னொரு புடவை நானே எடுக்கிறேன். அதுக்கென்ன இப்போ” என்றார் காமாட்சி.
குமரி பதில் பேசாது, முகத்தை திருப்பிக்கொள்ள…
“என்ன தனு எடுத்திடுவோமா?” என்றார் அவளிடம்.
“அத்தை” என்று தனு பற்களை கடிக்க… “எடுக்கிறேன். மாமியார் நான் உனக்கு எடுக்கிறதைதான் நீ கட்டுற” என்று குமரியை பார்த்துக்கொண்டே சொல்ல, “எனக்கு இதுவே போதும் அத்தை” என்று சத்தமாகக் கூறினாள் தனு.
“அண்ணி பார்த்துக்கோங்க… நான் என் மருமகளுக்கு எடுக்க ரெடி தான். ஆனா பாருங்க அவளுக்கு தான் அதில் விருப்பமில்லை” என காமாட்சி குமரியிடம் சொல்ல, காமாட்சியின் அலும்பில் மற்ற பெண்கள் யாவரும் சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டனர்.
“வாய் பேசாம… வேலையை பாருங்க” என்று குமரியே சொல்லிட, நனியிதழும் வந்து சேர்ந்தாள்.
“அக்கா வந்தாச்சு” என்று எழில் சொல்ல, பிரணவ் வேகமாக திரும்பி பார்த்தான்.
பிரணவ்வை பார்த்ததும் மலர்ந்து புன்னகைத்த நனியிதழை, அள்ளி அணைக்க எழுந்த பேராவலை இருக்கும் இடம் உணர்ந்து அடக்கினான்.
“ம்க்கும்…” பிரணவ் அவளையே பார்த்திருக்க, அவனின் அருகில் வந்துவிட்ட நனியிதழ் தொண்டையை செருமி அவனை நிகழ் மீட்டாள்.
“சைட் அடிச்சது போதும் பாஸ்…” என்று நனியிதழ் கண்ணடிக்க, “யாரு நானா? இல்லையே” என்றான்.
“நம்பிட்டேன்…”
“நம்புடி” என்றவனின் சிரிப்பு அவளை மொத்தமாக கொள்ளையிட்டு இருந்தது.
“வாம்மா” என்று நனியிதழின் கன்னம் வழித்த விமலா, “அந்த பக்கம் நிறைய கலெக்ஷன்ஸ் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் பாருங்க” என்று அனுப்பி வைத்தார்.
நனியிதழ் தன் அன்னையரை பார்க்க, அவர்களும் சம்மதம் வழங்கினர்.
“இந்த மாதிரி நேரமெல்லாம் கோல்டன் டைம்ஸ் அக்கா. என்ஜாய்” என்ற எழில் கேலியில், நனியிதழ் மற்றும் பிரணவ் வெட்கத்தோடு நகர்ந்து சென்றனர்.
“என்னாச்சு?” தனியாக வந்ததும் புடவையை பார்க்காது, பிரணவ் நனியின் முகம் வைத்து அவளின் கண்களுக்குள் தென்பட்ட வாட்டத்தை கண்டு கொண்டவனாகக் கேட்டிருந்தான்.
வந்தனா தன்னிடம் காட்டியதை நினைவுக்கூர்ந்த நனியிதழுக்கு அதனை சொல்லவே நடுக்கமாக இருந்தது.