என் ஆயுள் நீயே 57
பிரணவ் மற்றும் நனியிதழ் அதே பிரிவில் மற்றைய பக்கம் செல்வதை பார்த்த குமரி…
“இன்னும் நிச்சயமே முடியலையே” என்று இழுத்தார்.
“அதுக்கென்னங்க… நாம கூடத்தானே இருக்கோம். அவங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுக்கட்டும்” என்றார் விமலா.
“இப்போ தனு எடுக்கலையா? இன்பா இல்லாம தானே அவ எடுத்தா?” என்று குமரி சொல்ல, பேச்சு எங்கு பெரிதாகி பிரச்சினை ஆரம்பித்து விடுமோ என்று கங்கா காமாட்சியை கவலையாக ஏறிட,
“அதான் அண்ணா இல்லையே அத்தை. வேணும்னா அண்ணாவை வர சொல்லட்டுமா?” என்றாள் எழில்.
முகத்தை வெடுக்கென்று நொடித்தபடி திருப்பிக் கொண்டார் குமரி.
இருவரும் விமலாவை வருத்தமாக பார்க்க…
“என்னால ஓரளவு புரிஞ்சிக்க முடியுது சம்மந்தி. நமக்கு பசங்க சந்தோஷம் தான் முக்கியம்” என்று அவர் அஷ்மியின் கையிலிருந்த புடவையில் பார்வையை பதித்தார்.
“உனக்கு இன்பா கூட இருந்து எடுக்கலன்னு வருத்தமா கண்ணு?” என்று கங்கா தனுவிடம் கேட்க,
“நான் மாமா செலக்ட் பண்ண புடவையைத்தான் எடுத்தேன் அத்தை” என்று அவள் அலைபேசியை தூக்கி காண்பித்து, “நான் புடவை எடுக்குற வரை மாமா வீடியோ காலில் தான் இருந்தாங்க” என்று குமரிக்கு கேட்டுவிடாது மெல்லிய ஒலியில் கூறி கண்ணடித்தாள்.
“ம்ம்… வெவரம் தான். இப்போவே எனக்குத் தெரியாம என் பிள்ளையை திருட்டு வேலை பார்க்க வைக்கிற நீ” என்று காமாட்சி தனுவின் காதை வலிக்காது திருக, “தாலி கட்டுற வரை மாமியார் கெத்து காட்டிக்கோங்க. அதுக்கு அப்புறம் நான் வைக்கிறது தான் உங்க மகன் கிட்ட சட்டம்” என்றாள் தனு.
இப்படி பேச்சும் சிரிப்புமாக அவர்கள் அஷ்மிக்கு புடவை தேர்வில் ஈடுபட, அதுவரை அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த லட்சுமி பாட்டி, குமரியை சற்று தள்ளி அழைத்து வந்தார்.
“நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் குமரி. உன் பேச்சு சரியில்லை. கொஞ்சம் அடக்கு. குடும்பம் கொலைஞ்சு போவும்” என்று அதட்டினார்.
குமரிக்கும் இப்படியெல்லாம் பேச வேண்டுமென்ற எண்ணமில்லை. அதுவும் உதயன் நேற்று பேசிய பின்னர், சிறியவன் அவனிடம் இருக்கும் பக்குவம் உனக்கில்லை என்று ஜெயந்தன் சொல்லிய பின்பு, ஓரளவுக்கு நடப்பதை ஏற்றுக் கொள்ள மனதால் முயன்றார்.
இருப்பினும் இதுபோன்ற பேச்சுக்கள் அவரின் ஆசையின் ஏமாற்றத்தால் தன்னைப்போல் வெளிவந்துவிட, செய்வதறியாது தன் அன்னையை பார்த்தார்.
“உன் பொண்ணு கல்யாணமும் தான் நடக்க இருக்கு. உன் வாயால அவள் சந்தோஷத்தையும் துடைச்சிடாத” என்ற பாட்டி, “நிதர்சனத்தை ஏத்துக்க குமரி. உதயனுக்கு சளைச்சவன் இல்லை இன்பா. ரெண்டு பேரையும் நீ வேற வேறையா ஒப்பிட்டு பார்க்கிறதை நிறுத்தினாலே போதும். அன்னைக்கு இன்பாவும் என் அண்ணன் மகன்தான்னு சொன்னியே. இன்னைக்கு எங்கப் போச்சு. அன்னைக்கு நீ சட்டுன்னு மாறி இன்பாவுக்கு சம்மதம் சொன்னதை வெறும் வாய் வார்த்தைக்குன்னு ரெண்டு நாள்ல காட்டிப்புட்ட… நம்ம பசங்ககிட்ட நாமே வேத்தும பார்க்கிறது ஆவுமா? குணம் மாறாமா பார்த்துக்க. உனக்காக யோசிச்சதனால மட்டும் தான், இப்போ இன்பா தனு கல்யாணம் பெரியவனுக்கு முன்ன நடக்குது. இதுல வீட்டிலிருக்க அத்தனை பேருக்கும் அவ்வளவு வருத்தம். இருந்தும் எல்லாரும் சந்தோஷமா செய்ய காரணம், உன்னை விட்டுக் கொடுக்க முடியாம. தனு கல்யாணமாகி நம்ம வீட்டுக்கு வந்திட்டாலாவது உன் மனசு அமைதியாகுமான்னு தான். ஆனால் நீ மாறுன மாதிரி தெரியல. திரும்பத் திரும்ப உனக்கு அறிவுரை சொல்ல வைக்காதே. நீயே நாலு பேருக்கு எடுத்து சொல்ற வயசுல இருக்க. பார்த்து நடந்துக்க… வீட்டோட மொத்தம் உதயன் தான். அவங்களுக்கு நடக்குற விஷயம் மனசு நிறைஞ்சு நடக்கணும்” என்று ஒரே மூச்சாக அனைத்தும் சொல்லியவராக பழையபடி தான் அமர்ந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
குமரிக்கு தன்னை… தன் பேச்சுக்கள் குறித்தே குற்றவுணர்வாகிப் போனது. எல்லாரும் அவரின் மனம் பார்த்து நடந்துகொள்ள, தான் அப்படி இல்லையே என்று தன்னுடைய அன்னையின் பேச்சில் வருந்தினார்.
அந்த வருத்தமே அவரின் மனதை முழுதாக மாற்றுமென்று நம்புவோம்.
அதன் பின்னர் குமரி எதுவும் பேசாது, இன்முகமாக இல்லையென்றாலும் பழைய சிடுசிடுப்பு இல்லாது அமர்ந்திருந்தார்.
______________________________
தன்னுடைய கேள்விக்கு நனியின் முகம் காட்டிய பாவனை வைத்தே, எதுவோ நடந்துள்ளது என்று யூகித்த பிரணவ், அவளை இருக்கையில் அமர வைத்து என்ன என்று வினவினான்.
“ஆபிஸ் போறதுக்கு முன்ன வந்தனா மீட் பண்ணேன்.”
“திரும்ப பிரச்சினை பண்ணாங்களா?” என்ற பிரணவ் நனியிதழ் சொல்லியதில் ஒரு நொடி ஸ்தம்பித்து சீரானான்.
“எப்படி முடியுது. லவ்வை பிராப்பரா சொல்லாமலே… இவ்வளவு தூரம்” என்ற பிரணவ், தலையை உலுக்கினான்.
“தினம் தினம் புதுசு புதுசா எதும் கிரியேட் பண்ணிட்டே இருக்கா. எனக்கு பயம் தான் வருது” என்ற நனியின் கையை அழுத்தி பிடித்தான் பிரணவ்.
“அண்ணா முகம் இந்த ஒரு வாரமா எப்படியிருக்கு தெரியுமா பிரணவ்? இதுவரைக்கும் அண்ணா முகத்தில் இப்படியொரு ஸ்பார்க் நாங்க பார்த்ததே இல்லை. எப்பவும் சின்ன புன்னகை அவங்க உதட்டுல இருந்துட்டே இருக்கு. அதுவே அண்ணாக்கு அஷ்மியை எவ்ளோ பிடிக்குது காட்டுதே. அதை கெடுக்குற மாதிரி வந்தனா வந்து நிக்கிறா. கடுப்பா வருது. அதே சமயம் பயமும் கூட. இதுவரை அவள் பண்ணதுலாம் கூட எதோ லவ் அப்படின்னு அக்செப்ட் பண்ணாலும், இப்போ அவ பண்ணி வச்சிருக்கிறது” என்று நனியிதழ் பற்களைக் கடிக்க…
“ஹேய் இதழ் காம் டவுன்” என்று அழுத்தம் கொடுத்த கையில் மற்ற கையால் தட்டிக் கொடுத்தான்.
“டயஜிஸ்ட் பண்ணவே முடியல பிரணவ். இப்படியும் ஒருத்தி பண்ணுவாளா? அவ இஷ்டத்துக்கு கொஞ்சமும் யோசிக்காம பண்ணிட்டு, இப்போ இதுக்கு வழி சொல்லுங்க சொல்றா. அப்படியே செவுள்ல ஒன்னு விட்லாமான்னு வந்துச்சு” என்றாள்.
“இது பெரிய விஷயம் தான். ஆனால் நீ இவ்வளவு எமோஷன் ஆகுற அளவுக்கு பெரிய விஷயமில்லை. இப்போ இதுக்கு நிறைய வழி இருக்கே” என்ற பிரணவ், “அவளுக்கு கவுன்சிலிங் பெட்டர் சாய்ஸ்” என்றான்.
“எனக்கு இதெப்படி செல்வாகிட்ட சொல்றதுன்னு தான் யோசனையா இருக்கு” என்றாள்.
“சொல்லணும். சொல்லி ஆகணும். மறைக்க முடியாதே” என்ற பிரணவ், “இப்போ எதுக்கு வந்தமோ அதை பார்ப்போம். வீட்டுக்கு போனதும் இன்பாவை வச்சிக்கிட்டு மாம்ஸ் கிட்ட பொறுமையா சொல்லு” என்றான்.
“இன்பா அண்ணாவா… எதுக்கு? அவங்க தான் அதிகம் குதிப்பாங்க. தாத்தாகிட்ட தான் சொல்லனும்” என்றாள்.
அடுத்து அவர்களின் நேரம் புடவை தேர்வில் ஓடியது.
கங்காவும், காமாட்சியும் நன்றாக உள்ளதென்று அது இதென தன் மீது வைத்து பார்க்கும் எல்லா புடவைகளையும் ஒன்றுவிடாது புகைப்படம் எடுத்து உதயனுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தாள் அஷ்மிதா.
வரிசையாக அறிவிப்பு ஓசை ஒலித்திட, துறைமுகத்தில் சரக்குகள் ஏற்றுவதில் பார்வையாக இருந்த உதயன் எடுத்துப் பார்க்க… முகத்தில் பூத்த பூக்களை கீழ் உதட்டை கவ்வி பிடித்து மறைத்தான்.
எழிலுக்கு அழைத்த உதயன்…
“முடிஞ்சுதா எழில்?” என்றான்.
“தனுக்கு எடுத்தாச்சுண்ணா. இன்பா அண்ணா வீடியோ காலில் செலக்ட் பண்ணாங்க. அக்கா மாமாவோட எடுத்திட்டு இருக்காங்க. அண்ணிக்கு தான் நாங்க பார்த்திட்டு இருக்கோம். பிடிச்சிருக்கு பிடிக்கல எதுவும் சொல்லாம கேட்கிற எல்லாத்துக்கும் தலையை உருட்டிட்டு இருக்காங்க. நீங்க வரணும் எதிர்பார்க்குறாங்க நினைக்கிறேன்” என்றாள்.
“ம்ம்” என்ற உதயன், “உங்களுக்குலாம்?” என்றான்.
“அண்ணிக்கு முடிஞ்சாதான் அண்ணா” என்றவள், “நீங்க வராம அண்ணி எடுக்க மாட்டாங்க நினைக்கிறேன்” என்றாள்.
“நேரத்தை பார்த்த உதயன். சித்தி கிட்ட கொடு” என்றான்.
“ம்மா… உதயா அண்ணா” என்று எழில் கமாட்சியிடம் அலைபேசியை நீட்டிட, நடுவில் அமர்ந்திருந்த அஷ்மிதாவின் விழிகள், திரையிலிருந்த உதயனின் புகைப்படத்தில் அழுத்தமாக படிந்தது.
“சொல்லுங்க தம்பி” என்ற காமாட்சி…
“சரிப்பா” என்று வைத்தார்.
“என்ன சொன்னாங்க?” என பாட்டி கேட்க, “நேரமாகுதாம் நமக்கு வேண்டியதையும் சேர்த்து பார்க்க சொன்னாங்க” என்ற காமாட்சி, “நாங்க எடுக்கிறது எதுவும் உன் ரசனைக்கு இல்லன்னு நினைக்கிறோம். நாங்க அந்தப் பக்கம் எங்களுக்கு பார்த்திட்டு இருக்கோம். நீ உனக்கு பிடிச்ச மாதிரி ஃப்ரீயா பாரு அஷ்மி. பிடிச்சதை எடுத்து வை. அதுக்குள்ள எங்களுக்கு முடிச்சிட்டு வந்திடுறோம்” என்று அஷ்மிதாவிடம் சொல்லிவிட்டு, மற்ற எல்லாரையும் கூட்டிக்கொண்டு வேறொரு தளம் சென்றனர்.
“அச்சோ அத்தை இருங்க. நான் தனியா எப்படி? நானும் உங்களோட வரேன்” என்று அஷ்மிதா எழ, “அங்க தான் உன் அண்ணனும் அண்ணியும் இருக்காங்க. நாங்க இப்போ வந்திடுவோம்” என்று மற்றவர்களை நகர்த்திக் கொண்டு சென்றார் காமாட்சி.
“எழில் எங்க போறீங்க?” அவர்கள் செல்வதை பார்த்துவிட்டு நனியிதழ் கேட்க, “எங்களுக்கு எடுக்க மேல போறோம்” என்றாள் எழில்.
“இங்கவே எடுக்கலாமே” என்று நனியிதழ் சொல்ல…
“இதெல்லாம் கல்யாணப் பட்டு நனி…” என்றார் கங்கா.
“இப்போ எதுக்கு நீ எல்லாரையும் தள்ளிக்கிட்டு போற காமு?” என்றார் கங்கா.
“மாப்பிள்ளை வரார் போல சம்மந்தி” என்று விமலா சிரிக்க, ஆமாவா என்று காமாட்சியை பார்த்தார் கங்கா.
காமாட்சி சிரித்ததுலே அதுதான் விஷயமென்று தெரிந்து கொண்ட லட்சுமி, “அப்புறம் என்ன, அவங்க முடிக்கிறதுக்குள்ள நாம முடிச்சிட்டு வந்திடுவோம்” என்றார் பாட்டி.
அவர்கள் அங்கிருந்து செல்ல…
“வாங்க அஷ்மி தனியா இருக்கா. ஹெல்ப் பண்ணுவோம்” என்றாள் நனியிதழ். பிரணவ்விடம்.
“அப்படியா?” என்ற பிரணவ்,
“அங்க பாரு” என்று அவளின் தலையை அந்த தளத்தின் ஆரம்பத்தைக் காட்டித் திருப்ப, உதயன் வந்து கொண்டிருந்தான்.
“அப்போ சரி. நாம நம்ம வேலையை பார்ப்போம்” என்று திரும்பிக் கொண்டாள் நனியிதழ்.
உதயன் எழிலுக்கு அழைத்த போதே, நேரத்தைப் பார்த்துவிட்டு, மற்ற வேலைகளை மேலாளரிடம் ஒப்படைத்துவிட்டு கிளம்பியிருந்தான்.
அஷ்மிதா புடவை படங்களை வரிசையாக அனுப்பவுமே அவளின் மனதை கண்டு கொண்டாள்.
அவளின் தேடல் அவனது அகம் நிறைக்க… இதோ அவளின் அருகில் அவன்.
அஷ்மிதா வெறுமென சேல்ஸ் பெண் எடுத்துக்காட்டும் புடவைகளை பார்த்துக் கொண்டிருக்க… அப்பெண்ணும் அயர்ந்து போனாள்.
“மேம் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் சொல்லுங்க… எடுத்துக் காட்டுறேன். இல்லை வேற டிசைன் எதும் வேணும்னாலும் சொல்லுங்க இருக்கா பார்ப்போம். இல்லைன்னாலும், ஆர்டர் பண்ணீங்கண்ணா ரெடி செய்து கொடுப்பாங்க” என்று அந்தப் பெண் கூறிட…
“மைல்ட் லாவண்டர்” என்று பக்கம் வந்து அமர்ந்தவனின் குரலில், அண்மையில் அதுவரை கூம்பியிருந்த அஷ்மிதாவின் முகம் கதிரோனின் கரம் தீண்டிய தாமரையாய் மலர்ந்து ஒளிர்ந்தது.