என் ஆயுள் நீயே 58
“மைல்ட் லாவண்டர்.”
பக்கம் ஒலித்த உதயனின் குரலில், அஷ்மிதா திரும்பிப் பார்த்திடும் முன் அவளின் அருகில் அமர்ந்திருந்தான் உதயன். இருவரின் தோள்கள் உரசிட.
அஷ்மிதா கண்கள் மின்னலை காட்டிட…
“கரெக்ட் அஷ்மிதா?” என்றான்.
அவனின் விழிகள் கலந்த அவளின் பார்வையை மாற்றாது ஆமெனும் விதமாக மெல்லிய தலையசைப்பு அவளிடம்.
அஷ்மிதா பார்வையை மாற்றாது இருக்க, ஒரு பக்க மீசை நுனியை, மேல் உதட்டோடு சேர்த்து கடித்து விடுத்தவன்…
“என்ன பன்ற அஷ்மிதா?” என்றான்.
“பார்த்திட்டே இருக்கணும் போலிருக்கு உதய்” என்றவள், முடிக்கும் போது தான், தான் சொன்னதன் பொருள் விளங்க ஒற்றை கண்ணை மூடி, நாவின் நுனியை பற்களுக்கு இடையில் வைத்து அழுத்தியவளாக, “போச்சு… போச்சு…” என்றாள்.
அவளின் செயலில் சொக்கி மீண்டவன்,
“பார்க்கலாமா?” என்று வினவினான்.
அதில் வேறொரு பொருளும் பொதிந்திருந்ததுவோ!
அஷ்மிதா விலுக்கென அவனை நோக்க…
“சாரீஸ் பார்க்கலாமா அஷ்மிதா” என்று உதடு மறைத்து கண்களில் சிரிப்பைக் காட்டியிருந்தான்.
“அச்சோ உதய்” என்றவள், பேச்சை மாற்றும் பொருட்டு, “வரமாட்டிங்க சொன்னாங்க?” என்றாள்.
“வரணும் எக்ஸ்பெக்ட் பண்ணியா அஷ்மிதா?” தெரிந்துகொண்டே வினவினான்.
“இல்லையே.” பட்டென சொல்லியிருந்தாள்.
“ஹோ… நானா தான் வந்துட்டேன் போல. வந்ததே வந்துட்டேன்… எனக்கு பிடிச்ச மாதிரி சாரி செலக்ட் பண்ணா உனக்கு ஓகேவா அஷ்மிதா?” என குறுஞ்சிரிப்பை கன்னக் கதுப்பில் தேக்கி வினவினான்.
அவன் உணர்த்தும் மறைமுகப் பொருளில் திண்டாடிப் பார்த்தாள் அவனை.
“என்னையும் திண்டாட வைக்கிற நீ” என்றான். அவளின் கருவிழி உணர்வுகளை உள்வாங்கியவனாக.
“கட்டிக்கப் போறது நான்” என்றாள்.
“ஆமா… கட்டிக்கப்போறது நீதான்.” அவன் இருபொருள்பட கூற,
“நான் புடவையை சொன்னேன்” என்று அழுத்தம் கொடுத்தாள் அஷ்மிதா.
“நானும் அதைத்தான் சொன்னேன். நீ வேறென்ன நினைச்ச?” உதயன் புருவம் உயர்த்த, அவளின் இதயம் மேலெழும்பி எம்பி குதித்தது.
“பிளீஸ் உதய்” என்றவள், இருக்கையில் படிந்திருந்த அவனது கரத்தை, கிளையை பற்றுவது போல் இரு கரங்களால் பற்றிப் பிடிக்க… அவளின் உள்ளங்கை குளுமை, அவனின் வெம்மையில் கலந்து உணர்வுகளை பந்தாட வைத்தது.
சட்டென்று கைகளை எடுத்துக்கொண்ட அஷ்மிதா, அவனின் முகம் பாராது…
“சாரீஸ் பாருங்க” என்றாள்.
“ம்ம் பாரு அஷ்மிதா” என்று உதயன் குரல் ஆழ்ந்து ஒலிக்க, அவள் அவனது முகம் பார்க்க, அவளின் கரத்தோடு தன் கரம் கோர்த்திருந்தான். இருவரின் விரல்களும் பிணைந்திருந்தன.
“குட்” என்ற உதயன், சேல்ஸ் பெண்ணை அழைத்து புடவைகளை காட்டக் கூறினான்.
புடவைகளை ஒவ்வொன்றாக உதயன் பார்த்துக் கொண்டிருக்க… அஷ்மிதா அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன பன்ற அஷ்மிதா நீ?” என்றான். அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“நீங்க வந்ததுமே சொன்னேனே உதய். பார்த்திட்டு இருக்கணும் போல இருக்கு” என்றாள்.
“அடிவாங்குவ நீ… என்னையும் சேர்த்து கண்ட்ரோல் போக வைக்கிற நீ” என்றான்.
“ரைட்ஸ் இருக்கே உதய்…”
தலையை அவள் பக்கம் திருப்பாது கடைக்கண்ணால் அவளை பார்த்தவன்,
“எல்லாரும் வந்துடுவாங்க” என்றான்.
“நீங்க சாரீஸ் பாருங்க. நான் என் வேலையை பாக்குறேன்” என்று அவள் அசராது சொல்லியதில் அவன் தான் அயர்ந்து பார்த்தான் அவளை.
முதலில் விலகிச் சென்றிருந்த சேல்ஸ் பெண்… தற்போது தங்களையே பார்த்திருக்க, இதுபோன்ற சூழல் புதிது என்பதால் உதயன் தான் தடுமாறிப் போனான்.
“அஷ்மிதா…”
“உதய்க்கு தடுமாற வருதே” என்ற அஷ்மிதா, அவனின் அவஸ்தையை அணு அணுவாய் அகம் நிரப்பினாள்.
“அஷ்மிதா ரொம்ப அமைதி சொன்னாங்க?”
“நான் சொல்லலையே!”
“ம்ம்… ம்ம்…” என்ற உதயன் அவளின் பார்வைக்கு பழகியிருந்தான். அடுத்து அவனது கவனம் புடவையில் மட்டுமே!
மேலே சென்றவர்கள் எல்லாம் முடித்து அங்கு வந்திருந்தனர்.
பிரணவ் நனியிதழும் புடவை தேர்வு செய்து முடித்து பேசிக் கொண்டிருந்தனர். உதயன் அஷ்மிதாவை தொந்தரவு செய்யாது பிரணவ் நனியிடம் சென்றார்கள்.
“நிச்சயம் முடிஞ்சா கல்யாணத்துக்கு நாள் சீக்கிரம் ஓடிடுமே. இன்னொரு முறை புடவை எடுக்கன்னு அலையனும். இன்னைக்கே அதுக்கும் முடிச்சிடலாம். நாளும் நல்ல நாள் தான்” என்று பாட்டி சொல்ல, தனுவுக்கும் நனிக்கும் திருமணப் பட்டு எடுக்க, உதயன் அஷ்மிதாவுக்கு நிச்சயத்திற்கு புடவை எடுத்து முடித்திருந்தான்.
இந்த முறை தனு மறைத்து செய்யாது, இன்பாவுடன் வெளிப்படையாக காணொளி அழைப்பில் பேசி புடவை எடுத்திருந்தாள்.
குமரிக்கு தனு இன்பாவிடம் சிரித்து, பேசியென அதீத மகிழ்வோடு எடுத்திட, மகளின் இந்த சந்தோஷம் இன்பாவிடம் மட்டுமே என்று தெளிவாக புரிந்துக்கொண்டார்.
மனம் ஒப்பாது உலகின் சிறந்தது கையில் கிடைத்தாலும், சந்தோஷம் கிட்டாது என்று அக்கணம் உணர்ந்தார்.
“அஷ்மி அண்ணிக்கும் இன்னொரு சாரி எடுக்கணும் சொல்லிட்டு வரேன்” என்று எழில் நகர, அவளை தடுத்த காமாட்சி, “அவங்களுக்கு நாளிருக்கே… நிதானமா எடுத்துக்கலாம்” என்றார்.
“ஓகேவா?” உதயன் கேட்க,
அஷ்மி புடவையை பாராது, அவனது கண்களில் கலந்து, “பிடிச்சிருக்கு” என்றாள்.
“நான் புடவையை கேட்டேன்” என்று உதயன் சொல்ல…
“நானும் அதைத்தான் சொன்னேன். நீங்க வேறென்ன நினைச்சீங்க?” என்று முன்பு அவன் கேட்டதை திருப்பிக் கேட்டவள், புருவம் உயர்த்திட, உதயனிடம் வெட்கப் புன்னகை.
“நாங்களும் புடவைன்னு தான் நினைச்சோம்” என்று நால்வரின் குரல் கேட்க, அஷ்மி பதறி பார்த்தாள். உதயன் நிதானமாக திரும்பினான்.
“பிலசன்ட் ஸ்னாப்” என்று எழில் அலைபேசியை காட்டிட,
“சேட்டை பண்ணாதீங்க” என்றார் லட்சுமி. அவருக்கு மூத்த பேரனின் முகம் வெட்கத்தில் தடுமாறுவதை காண காண தெகிட்டவில்லை.
“எடுத்தாச்சா உதயா?” கங்கா கேட்க,
“உனக்கு பிடிச்சிருக்கா அஷ்மி?” என்றார் காமாட்சி.
“அவங்களுக்கு எப்பவோ பிடிச்சாச்சாம்” என்று மீண்டும் நால்வரும் ஒன்றாகக் கூற, பெரியவர்களிடம் நிறைவான புன்னகை. இம்முறை முற்றிலும் மீள முடியாத நாணத்தில், “பில் பே பண்ணிட்டு வரேன்” என்று உதயன் நகர்ந்திருந்தான்.
வந்த வேலை முடிய உதயன் அஷ்மியிடம் சிறு தலையசைப்பில் விடைபெற்று, வேலையிருக்கு என்று சென்றுவிட்டான்.
வந்தவர்கள் உணவகத்திற்கு செல்ல, கல்லூரி முடிந்து ஆர்யன் அவர்களுடன் இணைந்திருந்தான்.
“டேய் ஆரி” என்று விமலா மகனை அழைக்க…
“என்கிட்ட பேசாதீங்க. சொல்லவே இல்லை” என்று முறுக்கிக் கொண்டான்.
“சொல்லாம இப்போ எப்படி வந்தியாம்?”
“அண்ணா கொஞ்சம் முன்ன தான் கால் பண்ணாங்க” என்று ஆரி, அனைவருக்கும் பொதுவாய் ஹாய் சொல்லி நலம் விசாரித்து, எழில் அருகில் இருக்கை காலியாக இருக்க அதில் சென்று அமர்ந்தான்.
“ஆரி… எழிலும் உங்க காலேஜ் தான்” என்று தனு சொல்ல, “ரெண்டு பேரும் கிளாஸ்மெட் அண்ணி” என்று ஆரியை பார்த்து கண்ணடித்தாள் நனியிதழ்.
“ஹோ… சொல்லவே இல்லை” என்று தனு எழிலை பார்க்க,
“ஷீ இஸ் மை க்ளோஸ் ஃபிரண்ட் தனுக்கா” என்றான் ஆர்யன்.
அவன் தோழி என்றதில், எழில் அவனை முறைக்க…
நனியிதழ் கவனித்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
“அக்கா” என்று எழில் பல்லை கடிக்க… “ஓகே ஓகே” என்று உணவில் குனிந்து கொண்டாள் நனியிதழ்.
“என்னாச்சு?” பிரணவ் நனியிடம் கேட்க,
“ரெண்டும் லவ் பண்ணுதுங்க. மேடம் இன்னும் எஸ் சொல்லல…” என்றாள்.
“உனக்குத் தெரியுமா?”
“செல்வா அண்ணாக்கே தெரியும்” என்றாள் நனியிதழ்.
இருவரின் பேச்சையும் காதில் வாங்கிய தனு,
“அப்போ யாருமே பெரியவங்களுக்கு கஷ்டம் கொடுக்கல சொல்லு” என்றாள்.
“அதே… அதே…” என்ற நனியிதழ்,
ஆர்யன் உணவெதுவும் உண்ணாது அமர்ந்திருக்க…
“சப்பிடலையா?” எனக் கேட்டாள்.
“ஹாஸ்டல் மெஸ்லே லஞ்ச் சாப்பிட்டேன் அண்ணி. அண்ணா கால் பண்ணாங்களேன்னு வந்தேன்” என்றான்.
மாற்றி மாற்றி பேசி சிரித்தபடி உணவு உண்டு வெளியில் வந்தனர்.
மெல்ல ஆர்யன் உடன் இணைந்த எழில்…
“நான் உனக்கு ஃபிரண்டா டா?” என முறைத்துக்கொண்டு கேட்டாள்.
“இல்லையா?” என திருப்பிக் கேட்டான்.
“அப்புறம் எதுக்குடா லவ் பண்றேன்னு சொன்ன?”
“மேடம் எஸ் சொல்லிட்டிங்களா?” நாடியை நீவினான்.
“அதுக்கு வெறும் ஃப்ரெண்ட் சொல்லுவியா நீ” என்ற எழில், “நீ எனக்கு ஃப்ரெண்ட் எல்லாம் இல்லை” என்றாள்.
“வேறென்ன?” என்று இரு புருவத்தையும் நொடியில் ஏற்றி இறக்கினான்.
“அது… அது…”
“ஆங்… சொல்லுங்க மேடம்!”
“அண்ணாகிட்ட பெரிய இவன் மாதிரி பேசின. அதான் அண்ணா வெயிட் பண்ண சொன்னாங்க தானே?” என்றாள்.
“வெயிட் பண்ணனும்… பண்ணவும் வேலிட் ரீசன் வேணுமேம்மா. வெட்டியா வெயிட் பண்ண எல்லாம் எனக்கு நேரமில்லை” என்று சொல்லிவிட்டு நகர்ந்தவனின் சட்டையை பிடித்து இழுத்து நிறுத்தினாள்.
“என்னடி வேணும் இப்போ உனக்கு? எல்லாரும் போயாச்சு. தேடப் போறா…” அவன் முடிப்பதற்கு முன்பு,
“நானும் லவ் பண்றேன். போதுமா?” என முறைத்துக்கொண்டு சீறினாள்.
“இது எதோ வேண்டா வெறுப்பா சொன்ன மாதிரி இருக்கு.”
“படுத்துறடா மெண்டல்” என்ற எழில், “அண்ணா பொறுமையா இருன்னு சொல்லியும். உன்னை லவ் பண்றேன் சொல்லியிருக்கேன். புரிஞ்சிக்க முடியாதாடா?” என்றாள்.
“இன்னொரு முறை சொல்லு… புரிஞ்சிக்கிறேன்.”
தன் குடும்பத்தார் எங்கே என்று பார்த்தாள். எல்லோரும் வாகனத்தில் ஏறிக் கொண்டிருந்தனர்.
“எழில் வா. காலேஜில் பேசிக்கோங்க” என்று காமாட்சி அழைக்க,
“இங்கதான தம்பி இருக்கீங்க. வீட்டுக்கு வாங்க” ஆர்யனை அழைத்தார் கங்கா.
“இன்னொரு நாள் வரேன் அத்தை” என்ற ஆர்யன், அஷ்மியை நோக்கி அடி வைக்க…
“லவ் யூ ஆரி” என்றிருந்தாள் எழில்.
சட்டென்று உறைந்து திரும்பி அவளை பார்த்த ஆர்யன், “மாம்ஸ் பேச்சை மீறி சொல்லமாட்டேன்னு நினைச்சேன்” என்றாள்.
“அண்ணா அளவுக்கு உன்னையும் பிடிக்குதே! என்ன பண்ணட்டும்?” என்ற எழில், “நீதான் சொல்ல வச்சன்னு அண்ணாகிட்ட சொல்லிடுவேன்” என்றாள்.
ஆர்யன் இதழ் விரித்து சிரிக்க…
“சும்மா உன்னை சீண்டத்தான் கேட்டேன். ஆனால் நல்லாயிருக்கு… இந்த ஃபீல்” என்ற ஆர்யன், “லீவ் போடாம காலேஜ்க்கு வாடி. உன்னை பார்க்காம நாளே போக மாட்டேங்குது” என்று உன்னை பார்க்கத்தான் இப்போது வந்தேன் என சொல்லாமல் சொல்லிவிட்டுச் செல்ல, அவன் வார்த்தையில் தெறித்த காதலில் அவள் தான் சிலையாகியிருந்தாள்.
நனி வந்து தொட்டு உலுக்கி அழைத்துச் சென்றாள்.
“லவ் யூ சொல்லிட்டேன் அக்கா.”
தங்கையை பார்த்த நனியிதழ்,
“தப்பில்லை” என்றாள்.
“அண்ணா இப்போ எதுவும் வேண்டாம், ரெண்டு பேரும் ஸ்டடீஸ் பாருங்க சொன்னாங்க.” உதயன் சொல்லியதை மீறிவிட்ட கவலை எழிலிடம்.
“அண்ணாக்கு புரியும்” என்ற நனியிதழ், “சில உணர்வுகளை உள்ளவே வச்சிக்க முடியாது எழில். ரொம்ப கஷ்டம். வெளிய சொல்லிட்ட பின்னாடிதான் நீ நீயாவே இருக்க முடியும். ஃபீல் ஃப்ரீ” என்று தட்டிக் கொடுத்தாள்.
அனைவரும் ஒருவருக்கொருவர் விடைபெற்று கிளம்பிட, ஆர்யன் உதயனுக்கு அழைத்து தனக்கும் எழிலுக்கும் இடையே நடந்த பேச்சினை மறைக்காது கூறிவிட்டான்.
“லவ்வை வச்சிக்கிட்டு, அவளால் என்னை ஃபிரண்டா பார்க்க முடியல மாம்ஸ். சோ, சொல்லிட்டா ஃப்ரீ ஆகிடுவாளே. அதான் சொல்ல வச்சிட்டேன்” என்றான்.
“கொஞ்சம் நிதானமா இருக்கலாம் ஆரி” என்ற உதயன், “எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என்றான்.
“எக்ஸாம் முடிஞ்சிட்டா. பார்க்கிறதே கஷ்டமாச்சே மாம்ஸ்… அதான்” என்று வார்த்தையை முடிக்காது இழுத்தான்.
“ஓவரா உருட்டாதடா. உங்க ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும்” என்ற உதயன் சிரித்துக் கொண்டே வைத்திட, ஆர்யன் மனம் லேசானது.
உறவுகளின் மகிழ்வு வெளிப்படையான பேச்சுக்களின் புரிந்துணர்வில் தான் வேர் பிடித்து விருட்சமாகிறது.
இரண்டு குடும்பத்திலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும் உதயன் என்பவனை கரம் பற்றி ஆழ நிற்க, அவனை மொத்தமாக அசைத்து பார்த்திருந்தாள் வந்தனா.