என் ஆயுள் நீயே 59
இரண்டு குடும்பங்களும் கோவிலுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
தமிழ் கடவுள் முருகன் சந்நிதியில் மூன்று ஜோடிகளுக்கு நிச்சயதார்த்தம்.
இரு குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த நாள்.
துணி எடுக்க சென்ற நாளிலிருந்து இன்று வரையிலான இடைப்பட்ட நாட்கள் அமைதியாக கழிந்தன என்றே சொல்லலாம்.
வந்தனா மூலம் பிரச்சினை வந்துவிடுமோ என அதிகத்துக்கும் பயந்திருந்தது நனியிதழ் தான். உதயனிடம் சொல்வதற்கு முன்பு கஜமுகனிடம் சொல்லிட நினைத்தாள். உதயன் வெளிப்படையாய் தன் மகிழ்வினை காட்டிக் கொண்டதே இல்லை. அஷ்மிதா விஷயத்தில் தான் அதிகத்துக்கும் புன்னகை முகமாக வலம் வருகிறான். அதற்கு தடை போன்று வந்தனாவால் பல நிகழ்வுகள் நடந்திட, இதனை சொல்வதால் பிரச்சினை இன்னும் தீவிரமாகுமோ என அஞ்சி தாத்தாவிடம் கூறினாள். அவரென்றால் பக்குவமாக கையாள்வார் என்று நினைத்தாள்.
அவருக்கோ நனி சொல்லியதும் அதிர்விலிருந்து மீள முடியா நிலை. படபடவென்று வந்து விட்டது.
“தாத்தா… என்னாச்சு?”
தாத்தாவுக்கு சட்டென்று வியர்த்துவிட, நனி பதற்றமாகி விட்டாள்.
“எனக்கு ஒண்ணுமில்லை டா” என்று முகத்தை துடைத்து, தண்ணீர் பருகி ஆசுவாசம் அடைந்தவர்,
“உதயாகிட்ட சொல்லிட்டியாடா?” எனக் கேட்டார்.
“அண்ணாகிட்ட இதை சொல்ல முடியும் தோணல தாத்தா. சொன்னா அண்ணா ரியாக்ஷன்… எனக்கு என்ன பண்றது தெரியாமதான் உங்ககிட்ட சொன்னேன்” என்றாள்.
“வீடு வரை போய் பேசிட்டு வந்தாச்சு. அன்னைக்கே மருதன் முகம் பார்க்க சங்கடமாப் போச்சுடா. இதை சொன்னா தாங்குவானா தெரியல. இதை எப்படி மொத வெளியில சொல்றது?” என்று மருகிப் பார்த்தார் பெரியவர்.
“இதை அப்படியே விடவும் முடியாதே தாத்தா. அவள் சும்மா இருக்க மாதிரியே தெரியல” என்றாள் நனியிதழ்.
“புரியுது… இன்னும் குறுக்க மூணு நாள் தான். நிச்சயம் நல்லபடியா முடியட்டும். பொறுமையாதான் இந்த பிரச்சினையை பார்க்கணும். எடுத்தோம் கவிழ்த்தோம் செய்ய முடியாதே. பொம்பளை பிள்ளை வாழ்க்கை” என்றார்.
“தன்னோட வாழ்க்கை அப்படின்னு அவளே யோசிக்க மாட்டேங்கிறாளே தாத்தா.”
“அதுக்கு நாமளும் அப்படி விட முடியுமாடா. என்ன இருந்தாலும் அவளும் எனக்கு பேத்தி ஆவுதே. மருதன் வீம்புக்கு விலகி நின்னாலும், உன் அம்மாவுக்காக நாம கட்டுப்பட்டு ஆவனுமே” என்றார்.
“இப்போ என்ன பண்றது தாத்தா?” என்று நனியிதழ் கேட்க, “கொஞ்சம் ஆரப்போடுவோம். நிச்சயம் முடியட்டும். நீ யார்கிட்டவும் சொல்லாத. உதயா கூட நிதானமா யோசிப்பாங்க. ஆனால் உன் சின்ன அண்ணன் இருக்கானே… பஞ்சாயத்தை கூட்டி வம்பு பண்ணிடுவான்” என்றார்.
தாத்தா சொல்லியதற்காக நனியிதழ் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் இந்த நிமிஷம் வரை வந்தனா நேரில் வந்து எதும் பிரச்சினை செய்திடுவாளோ என்று ஒருவித அச்சம் அவளுள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
அவளின் மனம் புரிந்த பிரணவ், யாரும் அறியாது அவளின் கரம் பற்றி ஆறுதலாக கண்கள் மூடி திறந்தான்.
அதிக கூட்டமில்லாது… சொந்தங்களின் மிக நெருக்கமானவர்களை மட்டும் அழைத்திருந்தனர்.
திருமணத்தை பெரியதாக செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம்.
நிச்சயம் முடிந்ததும் பிரணவ் வீட்டிற்கு சென்று திரும்புவதாக முடிவு செய்திருந்தனர்.
“கல்யாணம் தான் எனக்கு முன்னாடி பண்ண முடியாது சொல்லிட்டிங்க. நிச்சயம் கண்டிப்பா அண்ணாக்கு தான் பர்ஸ்ட் நடக்கணும்” என்று இன்பா சொல்லிவிட அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
கோவிலிலிருந்து பத்து நிமிட தூரம் தான் பிரணவ்வின் இல்லம்.
எல்லாம் கிளம்பி, நிசயத்துக்கு வேண்டியவற்றை எடுத்து வைத்து கோவிலுக்கு கிளம்பும் நேரம்,
“நீங்க எல்லாரும் போங்க. நான் பின்னாடியே வரேன்” என்ற அஷ்மிதாவை ஆர்யன் எதற்கென்று ஆராய்வாகப் பார்த்தான்.
“ஏன்? ஒண்ணாவே போலாம் அஷ்மி” என்று பிரணவ் சொல்ல…
அஷ்மி முகம் சுருக்கி, “பிளீஸ் டா அண்ணா” என்று சொல்லியதும், “பார்த்து வா” என்றிருந்தான்.
“அப்படியென்ன சர்ப்ரைஸ் மாம்ஸ்க்கு?” சரியாக அவளை கண்டு கொண்டவனாக ஆர்யன் கேட்டிருந்தான்.
“என்ன சர்ப்ரைஸ்?” ஆர்யன் சொல்லியது கேட்டு, விஜயனும் வினவ…
“அச்சோ டாட்…” என்று அவரை கோபமாக முறைப்பது போல் சமாளித்தவளாள் , தம்பியின் குறுகுறு பார்வையில் அவனை தடுமாறி பார்த்தாள்.
“ரொம்ப க்யூரியஸ் கிரியேட் பண்றீங்க” என்ற ஆர்யன், “மாம்ஸ்க்கு சர்ப்ரைஸ் பண்ணதும் என்கிட்ட என்னன்னு சொல்லணும்” என்றான்.
“நான் சொல்ல வேண்டாம். உனக்கே தெரிஞ்சிடும்” என்று அஷ்மி சொல்ல,
“நானாவது உன்னோட வரட்டுமாடா?” எனக் கேட்டிருந்தார் ராகவன்.
“அச்சோ தாத்தா… பத்தே நிமிஷம். பார்லர் போயிட்டு உங்க பின்னாலே வந்துடுவேன்” என்று அஷ்மி அவரை பார்த்து கும்பிட…
“அதான் மேக்கப் பண்ணிட்டியே… கோவிலில் புடவை மாத்த முடியாதுன்னு, நேத்தே உன் மாமா அத்தை வந்து, முறையா வச்சு கொடுத்தாச்சு. சோ, இப்போ நீ கட்டி இருக்கிறதே நிச்சய புடவைதான். அப்புறம் எதுக்கு பார்லர்?” எனக் கேட்டார் விமலா.
“பாயிண்ட்” என்று ஆர்யன் சொல்ல, அஷ்மி தன் அண்ணனை பாவமாக பார்த்தாள். பிரணவ்வுக்கும் அவள் என்ன செய்ய இருக்கிறாள் என்பது பிடிபடவில்லை. ஆனால் என்னை காப்பாற்றேன் எனும் பார்வை புரிந்து,
“அவள் எதோ அவளுக்கு பிடிச்சதை பன்றாள். விடுங்களேன். நாம் போவோம்” என்று சொல்லிட, “பத்திரமா சீக்கிரம் வந்திடு அஷ்மி. யாரையும் காக்க வைக்கக் கூடாது” என்று அழுத்தமாக வலியுறுத்துவிட்டே விமலா வண்டியில் ஏறினார்.
இவர்கள் கோவிலை சென்றடைய, உதயன் குடும்பத்தினரும் வந்து சேர்ந்தனர்.
தனு மற்றும் இன்பா ஒரே வர்ணத்தில் ஆடை உடுத்தியிருக்க, நனியின் புடவை பார்டர் வண்ணத்தில் பிரணவ் சட்டை அணிந்திருந்தான்.
“சொல்லி வச்சு எடுத்த மாதிரி இருக்கு.” ஆர்யன் தன் அண்ணனின் காதில் கிசுகிசுக்க… “போட்டோல மேட்ச் பண்ண வேண்டாமாடா” என்றான் பிரணவ்.
“நாங்களாவது பர்பஸா மேட்ச் பண்ணோம். நீங்க எதுக்கு பண்ணீங்களாம்?” நனியிதழ் கண்ணடித்து எழிலை காண்பித்து வினவ…
“அண்ணி நிஜமா கோ இன்சிடன்ட் இது” என்று அலறினான் ஆர்யன்.
“அப்போ எனக்கு இந்த கலர் ட்ரெஸ் பண்றேன்னு எதுக்கு மெசேஜ் பண்ண நீ?” எழில் சிரிக்காது வினவ,
“அய்யோ பொய்” என்றான்.
உதயன் அவனருகில் வர,
“அச்சோ மாம்ஸ் அவள் கோர்த்து விடுறா” என்றான்.
“எல்லாம் தெரியும் வாடா” என்று உதயன் அவனின் தோளில் கரம் பதிக்க, அதன் பின்னர் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
உதயன் காத்திருங்கள் என்று சொல்லிய பின்பும், எழிலை காதல் சொல்ல வைத்ததில், தான் உதயன் பேச்சை கேட்கவில்லையோ என்று தவறாக நினைத்து விடுவானோ என்ற எண்ணம் தற்போது உதயன் காட்டிய நெருக்கத்தில் ஆரியனுக்கு மறைந்தது.
“அஷ்மியை காணோம்?” கங்கா தான் தன் மருமகளை கவனித்து எங்கென்று கேட்டார்.
“அது எதோ மாமாக்கு சர்ப்ரைஸ் பண்றாங்க போல… பின்னாடி வராங்க” என்று ஆர்யன் சொல்ல, உதயன் புருவம் உயர்ந்தது.
காலையில் பேசும் போது கூட அஷ்மிதா உதயனிடம் எதுவும் சொல்லியிருக்கவில்லை.
வண்டியிலிருந்து இறங்கியதும் உதயன் முதலில் தேடியது தன்னவளைத்தான். அவள் இல்லை என்றதும், உள்ளே கோவில் மண்படத்திற்கு சென்றுவிட்டாளோ என்று தான் நினைத்தான். தற்போது ஆர்யன் சொன்னதும் என்னவென்று யோசித்தான்.
மண்டபத்திற்கு சென்று எல்லாம் தயார் செய்ய… அஷ்மி வந்து சேரவில்லை.
“அப்போவே சொன்னேன். கூட சேர்ந்து வான்னு. இந்தப் பொண்ணு எங்க கேட்டாள். இப்போ பாரு நல்ல நேரம் போகுது” என்று விமலா புலம்பிட, “எப்பவும் போற பார்லர் தான் போயிருப்பாள். நான் போய் பார்த்திட்டு வரேன் ம்மா” என்று ரீமா கிளம்ப, “நானும் வரேன்” என்றான் ஆர்யன்.
“நீங்க போற நேரம் அவள் வந்துட்டா… அடுத்து உங்களுக்காக வெயிட் பண்ணனும். கால் பண்ணி கேளுடா” என்றார் விஜயன்.
“ஏன் நீங்களே பண்ணலாமே” என்று ஆர்யன் கேட்டாலும், அஷ்மிக்கு அழைத்திருந்தான்.
“கிளம்பிட்டேன்” என்று சொல்லி வேகமாக வைத்திட்டாள்.
“என்னவாம்டா?” விமலா கேட்க,
“அச்சோ அண்ணி மெதுவா வரட்டும். எதுக்கு பதட்டப்படுறீங்க” என்று காமாட்சி கேட்கவே விமலா கொஞ்சம் அமைதியாகினார்.
“இன்னும் செய்ய வேலை இருக்கே. வாங்க அதை பார்ப்போம்” என்று கங்காவும் விமலாவை தன்னுடன் வைத்துக் கொண்டு ஐயர் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்தார்.
அப்போதுதான் லட்சுமி பாட்டி உதயன் அங்கு இல்லாததை கவனித்தார்.
“எங்க உதயாவை காணோம்?”
அவரின் கேள்வியில் பிரணவ் திருதிருக்க…
“உங்களுக்குத் தெரியுமா?” எனக் கேட்டாள் நனியிதழ்.
உதயன் அங்கில்லை என்றதும் ஆளாளுக்கு பதற்றம் கொள்ள…
“மாமா அஷ்மியை கூட்டிட்டு வர போயிருக்காங்க” என்று யாரின் முகத்தையும் பாராது கூறினான் பிரணவ்.
அனைவரும் ஆச்சரியம் கொள்ள…
“இப்போ என்ன? யாரும் பண்ணாததா? அவங்க வரதுக்குள்ள ஆக வேண்டியதைப் பாருங்க” என்று கஜமுகன் தன்னுடைய சிம்ம குரலில் கூற, அவரவர் தத்தம் வேலைகளை கவனித்தனர்.
“மாமா டோட்டல் சேன்ச்ட்” என்று தனு சிரிக்க… “லவ் வந்தா எல்லாம் அப்படித்தான்” என்றான் இன்பா.
“அப்போ நீங்க மாறிட்டிங்களா?” தனு இன்பாவிடம் கேட்க, “தாலி கட்டிட்டு என் மாற்றத்தை காட்டுறேன்டி” என்று அவளின் காதில் கிசுகிசுத்தான்.
“அண்ணா உங்ககிட்ட சொல்லிட்டு போனாங்களா?” நனியிதழ் பிரணவ்விடம் கேட்க, “இல்லை” என்றான்.
“அப்புறம்?” அவள் அவன் சொல்லிய பதிலில் அதிர்ந்தாள்.
“மெசேஜ் வந்துச்சு. எடுத்துப் பார்த்தாங்க. யாருக்கும் தெரியாம கிளம்பிட்டாங்க” என்றான்.
“அப்போ நீங்களா அண்ணா அஷ்மியை பிக் பண்ண போயிருக்கிறதா சொல்லியிருக்கீங்க” என்று நனியிதழ் முறைக்க,
“அடியே… நீ வேணும்னா பாரு… ரெண்டு பேரும் ஒண்ணா வருவாங்க” என்று பிரணவ் சொல்லிக் கொண்டிருக்கும் போது, உதயன், அஷ்மிதா அவ்விடம் இணைந்து நடந்து வந்தனர்.
ஆர்யன் பார்வை மொத்தமாக தன் தமக்கையை அளவிட்டது.
“நான் சொல்ல வேண்டாம். பார்த்ததும் தெரிஞ்சிடும்.” அஷ்மிதா சொன்னது நினைவுக்கூர்ந்து அவளை ஆராய்ந்தான். சில நொடிகளில் என்னவென்று கண்டும் கொண்டான்.
“இட்ஸ் நைஸ்…” என்று ஆர்யன் பிரணவ்வின் இடை இடித்து கண் காண்பிக்க… தங்கையை பார்த்த பிரணவ்வின் முகம் புன்னகையில் மலர்ந்தது.
“மாம்ஸ் சொல்லியிருப்பாரா?” ஆர்யன் கேட்க, எழில் குறுக்கிட்டு “என்னது?” என்றாள்.
பிரணவ் பார்வையால் காட்டிட, மற்றவர்களுக்கும் புரிந்தது.
“அண்ணாக்கு பிடிச்சிருந்தாலும் எனக்காக இதை பண்ணுன்னு சொல்லியிருக்க மாட்டாங்க” என்றான் இன்பா.
“எஸ்.” நனியிதழ் மற்றும் எழிலும் அதனை ஆமோதிக்க…
“பொறாமை பட வைக்கிறாங்கப்பா” என்றாள் தனு.
“நீயும் எனக்காக எதுவும் செய்யேன்.” இன்பா சொல்ல,
“இது அஷ்மியோட விருப்பமா கூட இருக்கலாம். நீங்க ஏன் டிஸ்கஸ் பண்றீங்க?” எனக் கேட்டாள் ரீமா.
முன்தினம் தான் இது குறித்து ரீமாவிடம் அத்தனை கேள்வி கேட்டிருந்தாள் அஷ்மிதா. இப்போது அதற்கான பொருள் விளங்கியது.
ஆனால் தங்கையின் மனம் புரிந்த பிரணவ்க்கு மட்டுமல்ல… அவளைப்பற்றி எல்லாம் தெரிந்த விமலாவுக்கும் மகளின் செயலுக்கு பின்னான அவளின் காதல் அதிக மகிழ்வைக் கொடுத்தது.